• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எ... எ... என்னாச்சு...? ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (30)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

சந்திரசூடன் பெரிய திகைப்புக்கு உட்பட்டு தாட்சாயணியம்மாவை விழிகள் விரியப் பார்த்தார்.

" பேர் என்ன சொன்னீங்க..... லட்சணாவா .....? "

" ஆமா...... பத்திரிக்கை நிருபராய் வேலை பார்க்கிற பொண்ணு "

" அந்தப் பொண்ணை உங்களுக்கு எப்படித் தெரியும் .....? "

" போன மாசத்துல ஒரு நாள் மத்தியான நேரம் என்னை வந்து பார்த்தா "

" என்ன விஷயமாய் .....? "

" என்கிட்ட பேட்டி எடுக்கணும்ன்னு சொன்னா "

" பேட்டியா ...........உங்ககிட்ட எதுக்காக பேட்டி எடுக்கணும்.....? "

" நான் வாரத்துல செவ்வாய்கிழமையும், வெள்ளிக்கிழமையும் குறி பார்த்து, அருள்வாக்கு சொல்றது வழக்கம். பலவிதமான பிரச்சினைகளோடு பெண்கள் வருவாங்க. அந்த பிரச்சினைகளையெல்லாம் நான் கேட்டுட்டு அருள்வாக்கு சொல்வேன். அப்படி நான் அருள்வாக்கு சொன்னதெல்லாம் பலிச்சிருக்கா இல்லை இதுல ஏதாவது ஏமாற்று வேலை இருக்கான்னு தெரிஞ்சிக்கிறதுக்காக லட்சணா என்கிற அந்தப் பத்திரிக்கைக்காரப் பெண்ணு வந்தா "

Flat number 144 adhira apartment episode 30

" நீங்க பேட்டி கொடுத்தீங்களா.....? "

" ம்..... கொடுத்தேன்..... அந்தப் பெண் கேலியாகவும், கிண்டலாகவும் சில கேள்விகளைக் கேட்டா.... அதுல ஒரு கேள்வி இந்த அருள்வாக்கு, குறி சொல்றதெல்லாம் பித்தலாட்டம்தானே.... அப்பாவி பெண்களை ஏமாத்தறது சரியான்னு கேட்டா. நான் கோபப்படாமே லட்சணா கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னேன் "

" நீங்க லட்சணாவுக்கு என்ன பதில் சொன்னீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா..? "

தாட்சாயணி அம்மாள் புன்னகையோடு பேச ஆரம்பித்தாள்.

" தாராளமாய்..... அருள்வாக்கு, குறி சொல்றது இது எல்லாமே கடவுளோடு சம்பந்தப்பட்டது இல்லை.... மனிதர்களின் மனதோடு சம்பந்தப்பட்டது. நான் பகவதியம்மனோட பக்தை. கேரளாவில் இருக்கிற எல்லா பகவதியம்மன் கோயில்களுக்கும் போய் விரதமிருந்து வழிபட்டு வந்திருக்கேன். நான் சொன்ன சில விஷயங்கள் பலிச்சிருக்கு...... அதுக்குக் காரணம் பகவதியம்மனோட கருணையே தவிர நான் கிடையாது.... மனசுக்குள்ளே நிறைய பிரச்சினைகளோடு வர்ற பெண்களுக்கு வெறுமனே ஆறுதல் சொன்னா அது அவங்களுக்கு சந்தோஷத்தைத் தராது. அதையே அருள்வாக்கு மாதிரியோ, குறி சொல்ற மாதிரியோ சொன்னா தங்களோட பிரச்சினைகளெல்லாம் தீர்ந்துடும்ங்கிற நம்பிக்கையோடு அவங்க வீட்டுக்குப் போவாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் இது ஒரு வகையான கவுன்சிலிங்ன்னு சொன்னேன். நான் இப்படி வெளிப்படையாய் பேசினது அந்தப் பெண் லட்சணாவுக்கு ரொம்பவும் பிடிச்சிருந்தது "

தாட்சாயணி அம்மாள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே கோபிகா தன் இடுப்பின் மறைவிலிருந்த செல்போனை எடுத்தபடி சந்திரசூடனை நெருங்கினாள். தயக்கத்தோடு கூப்பிட்டாள்.

" ஸ....ஸார் "

" என்னம்மா.....? "

" என் கணவர்கிட்டயிருந்து போன் வருது. எதுக்கு போன் பண்றார்ன்னு தெரியலை.... நான் வெளியே போய் பேசிட்டு வந்துடறேன். நீங்க அம்மாவை விசாரிங்க " சொன்ன கோபிகா செல்போனை தன்னுடைய இடது காதுக்கு ஒற்றியபடி வெளியேற சந்திரசூடன் ஆதிகேசவனைப் பார்த்தார்.

அவர் பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு சொன்னார்.

" இப்படித்தான் ஸார்.... நேரம் காலம் பார்க்காமே புருஷன்கிட்டயிருந்து போன் வருதுன்னு சொல்லிட்டு தனியா போய் பேச ஆரம்பிச்சுடுவா....ஒரு கால் மணி நேரமாவது பேசிட்டுதான் வருவா.... இதெல்லாம் எனக்கு பார்த்து பார்த்து பழகிப் போன ஒரு சம்பவமா மாறிடுச்சு ஸார்..... "

தாட்சாயணி அம்மாவும் பெருமூச்செறிந்தாள்.

" கோபிகா.....ரொம்பவும் நல்ல பெண். அவளுக்கு இப்படியொரு மனோவியாதி வந்திருக்க வேண்டாம். இந்த பிரச்சினையிலிருந்து அவ சீக்கிரமே குணமடையணும்ன்னு சோட்டானிக்கரா பகவதியம்மன் கிட்டே பிரார்த்தனை பண்ணியிருக்கேன். அந்த அம்பாள் கண்டிப்பா என்னோட பிரார்த்தனையை நிறைவேத்தி வைப்பா............. "

சந்திரசூடன் சில விநாடிகள் மெளனமாயிருந்துவிட்டு தாட்சாயணி அம்மாவை ஏறிட்டார். சன்னமான குரலில் சொன்னார்.

" கோபிகா இப்போ வெளியே போனதும் ஒரு வகையில் நல்லதுதான்... "

" எப்படி நல்லதுன்னு சொல்றீங்க.....? "

" லட்சணா இப்போ உயிரோடு இல்லைங்கிற விஷயம் அவளுக்கு முன்னாடி எப்படி சொல்றதுன்னு ஒரு சின்ன தடுமாற்றத்தோடு இருந்தேன். ஏன்னா அந்த லட்சணா சில மாதங்களுக்கு முன்னாடி கோபிகாவை மனச்சிதைவு நோயிலிருந்து மீட்டெடுக்க கவுன்சிலிங் கொடுத்திருக்கா "

தாட்சாயணி அம்மா அதிர்ந்து போனவளாய் நிலைகுத்திய விழிகளோடு சந்திரசூடனை ஏறிட்டாள்.

" என்ன சொன்னீங்க..... லட்சணா இப்போ உயிரோடு இல்லையா .....? "

" இல்லை "

" எ....எ....என்னாச்சு .....? "

சந்திரசூடன் அடுத்த இரண்டு நிமிட நேரத்தில் லட்சணா சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் சுருக்கமாய் சொல்லி முடிக்க, அந்த அம்மாவின் உடம்பு உச்சபட்ச அதிர்ச்சிக்கு போயிற்று. குரல் உடையப் பேசினாள்.

" லட்சணா இந்த அதிரா அப்பார்ட்மெண்ட்டுக்குள்ளதான் கொலை செய்யப்பட்டு கறுப்பு பெயிண்ட் பூசப்பட்டு உங்க ஃப்ரண்ட் கங்காதரனோட கார் டிக்கியில் அடைக்கப்பட்டிருக்கணும்ன்னு நினைக்கிறீங்களா .....? "

" ஆமா.... "

" அதுக்கான ஆதாரம் ஏதாவது இருக்கா.....? "

" இப்போ.... கிடைச்சிருக்கிற ஒரே ஒரு ஆதாரம் லட்சணா தங்கியிருந்த ஹாஸ்டல் ரூமை செக் பண்ணினபோது பாலியல் பலாத்காரங்கள் சம்பந்தப்பட்ட பேப்பர் கட்டிங்குகளை ஒட்டின போர்டில் செக்ஸ் டூரிஸம், பீடோ ஃபைலிக், செய்திக்கு கீழே ஸ்கெட்ச் பேனாவால் எழுதப்பட்ட அந்த XYZBAA என்கிற எழுத்துக்கள்தான். அந்த எழுத்துக்களுக்கான அர்த்தம் என்னான்னு லட்சணா அவளோட தோழி ஜமுனாகிட்ட சொல்லியிருக்கா. AA என்கிற எழுத்துக்களுக்கான விரிவாக்கம் அதிரா அப்பார்ட்மெண்ட். B என்கிற எழுத்து ப்ளாக்கையும், XYZ எழுத்துக்கள் அப்பார்ட்மெண்ட்டுக்கான குறியீடுகள்.

இந்த ஆதாரத்துக்கு வலு சேர்க்கிற மாதிரி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஆதிகேசவன் சொன்ன ஒரு விஷயம். அதாவது பத்து நாளைக்கு முன் லட்சணா அவர்க்கு போன் பண்ணி அவரோட ஃப்ளாட்ல ரெண்டு நாள் வந்து தங்க பர்மிஷன் கேட்டிருக்கா. ஆதிகேசவனும் அதுக்கு சம்மதிச்சார். 'எவ்வளவு நாள் வேணும்ன்னாலும் வந்து தங்கலாம் வாம்மா' ன்னு சொல்லியிருக்கார். ஆனா லட்சணா ஏனோ வரலை.... என்னோட கெஸ்வொர்க்படி பத்து நாளைக்கு முன்னாடி லட்சணா இந்த அப்பார்ட்மெண்ட்டுக்கு வந்து யாரையோ சந்திச்சு பேசியிருக்கணும். அந்தக் குறிப்பிட்ட நபரால அவளோட உயிர்க்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கணும்..... கொலைச் சம்பவத்துக்குப் பிறகு லட்சணாவை யாரும் அடையாளம் கண்டுபிடிச்சுடக்கூடாதுங்கிறதுக்காக அவ உடம்புக்கு கருப்பு பெயிண்ட்டை பூசி அந்த ராத்திரி வேளையில் பார்க்கிங்கில் நின்னுட்டிருந்த கங்காதரன் காரோட டிக்கியை ஏதோ ஒரு டெக்னிக்கை யூஸ் பண்ணி திறந்து உள்ளே போட்டு அடைச்சிருக்காங்க...... "

சந்திரசூடன் சொல்லச்சொல்ல தாட்சாயணி அம்மாவின் கண்களில் நீர கோர்த்துக்கொண்டு அண்ணாந்து பார்த்தபடி அரற்றினாள். அழுகையில் உடல் குலுங்கியது.

" அம்மே நாராயணா..... தேவி நாராயணா..... பத்ரே நாராயணா..... லட்சுமி நாராயணா..... ஒரு நல்ல பெண்ணை இவ்வளவு கொடூரமா நாசம் பண்ணியிருக்காங்க.... இதையெல்லாம் எப்படீம்மா உன்னால பார்த்துட்டு இருக்க முடியுது.....? "

சந்திரசூடன் அந்த அம்மாவைப் பார்த்து ஏதோ பேச முயன்ற விநாடி கோபிகா வேகவேகமாய் உள்ளே வந்தாள். ஆதிகேசவனிடம் செல்போனை நீட்டினாள்.

" அப்பா....... உங்க மாப்பிள்ளை லைன்ல இருக்கார்..... உங்ககிட்ட ஏதோ பேசணுமாம் "

ஆதிகேசவன் எரிச்சலானார். " என்ன பேசணுமாம் .....? "

" அவர்கிட்ட நீங்களே கேளுங்க.........."

" நான் எதுக்கம்மா பேசணும்..... விஷயம் என்னான்னு நீயே சொல்லிடு... "

" நீங்க எப்பவுமே இப்படித்தான்பா.... போன்ல பேசறதுக்கு மாப்பிள்ளைகிட்ட அப்படி என்னதான் பயமோ.....? சரி விஷயம் என்னான்னு நானே சொல்லிடறேன். நாம இப்போ இருக்கிற ஃப்ளாட்டை வித்துட்டு காஞ்சிபுரத்துக்கு பக்கத்தில் இருக்கிற ஒரு அப்பார்ட்மெண்ட்டுக்கு போயிடலாம்ன்னு முடிவு பண்ணி வெச்சிருந்தோம் இல்லையாப்பா......? "

" ஆமா...... "

" நம்ம ஃப்ளாட்டை வாங்கப் போற ஒரு மார்வாடி பார்ட்டி இன்னும் கொஞ்சம் நேரத்துல ஃப்ளாட்டைப் பார்க்கவும் விலை பேசவும் வர்றாங்களாம். ரேட் அம்பது லட்சம் சொல்லியிருக்காராம். வெளியே எங்கேயும் போயிடாமே உங்களையும் என்னையும் ஃப்ளாட்லயே இருக்கச் சொன்னார் "

ஆதிகேசவன் கோபிகாவைப் பார்த்து பொறுமை இழந்தவராய் ஏதோ பேச முயல சந்திரசூடன் கையமர்த்தினார்.

" எனக்கு நிலைமை புரியுது ஆதிகேசவன்..... நீங்களும் கோபிகாவும் ஃப்ளாட்டுக்குப் போங்க.... நான் விசாரணையை கண்டினியூ பண்ணிக்கறேன்..... "

கோபிகா " ஸாரி ஸார் " என்றாள்.

" இதுல ஸாரி சொல்ல என்னம்மா இருக்கு.....நீ அப்பாவை கூட்டிகிட்டு போம்மா.... நான் இங்கே பார்த்துக்கறேன் "
ஆதிகேசவனும், கோபிகாவும் அங்கிருந்து வெளியேறும் வரை மெளனம் காத்த சந்திரசூடன் தாட்சாயணி அம்மாவை ஏறிட்டார். விசாரணையை மறுபடியும் ஆரம்பித்தார்.

" ஒரு முக்கியமான கேள்விக்கு நீங்க இன்னும் பதிலே சொல்லலை"

" என்ன கேள்வி .....? "

" இந்த அதிரா அபார்ட்மெண்ட் ஒரு மயான பூமியின் மேல் கட்டப்பட்டு இருக்கிற விஷயத்தை லட்சணா உங்ககிட்ட சொன்னதாய் நீங்க சொன்னீங்க. அதை லட்சணா உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியம் என்ன .....? "

"லட்சணா பேட்டியை முடிச்சுட்டு கிளம்பற நேரத்துல இந்த அதிரா அபார்ட்மெண்ட் இன்னும் ரெண்டு வருஷ காலத்துக்குள்ளே இடித்து தரைமட்டமாக்கக்கூடிய வாய்ப்பு இருக்குன்னு சொன்னா. நான் காரணம் கேட்டப்ப ஐம்பது வருஷத்துக்கு முந்தி பொது மயானமாய் இருந்த 15 ஏக்கர் நிலத்தை அன்றைக்கு இருந்த அரசியல்வாதிகள் சிலர் அபகரிச்சு வேலி போட்டு சமாதிகளையெல்லாம் இடிச்சுத் தள்ளி போலி பத்திரம் தயாரிச்சு தங்களுக்கு சொந்தமாக்கிட்டாங்க. கடந்த 50 வருஷ காலத்துல இந்த சொத்து பல கை மாறி இன்னிக்கு இந்த இடத்துல அதிரா அபார்ட்மெண்ட் கட்டப்பட்டிருக்கு.... இது சம்பந்தமான பொதுநல வழக்கு ஒண்ணு ஹைகோர்ட்ல குட்டித்தூக்கம் போட்டுகிட்டிருக்கு. அந்தத் தூக்கம் எப்போது வேண்டுமானாலும் கலையலாம். அபார்ட்மெண்ட்டை இடித்து தள்ளுகிற தீர்ப்பு வரலாம்ன்னு சொன்னா..... "

தாட்சாயணி அம்மா பேசப்பேச சந்திரசூடன் மையமாய் தலையசைத்தார்.

" எஸ்..... கோபிகாவும் என்னை முதல்தடவை இந்த அபார்ட்மெண்டில் பார்த்த அன்னிக்கு ஒரு வீடியோ பதிவை அவளோட வாட்ஸ் அப்பில் காட்டி இந்த அபார்ட்மெண்ட் ஒரு மயான பூமியின் மேல் கட்டப்பட்டிருப்பதாக சொன்னா.... அன்னிக்கு நான் அந்த விஷயத்தை பெரிசா எடுத்துக்கலை. ஆனா லட்சணாவும் பத்துநாளைக்கு முன்னாடி அதைப்பத்தி உங்ககிட்ட பேசியிருக்கிறதால இப்போ இங்கே நடக்கிற, இதுக்கு முன்னாடி நடந்த சம்பவங்களுக்கும், அந்த மயான பூமி விஷயத்துக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கலாம்ன்னு என்னோட மனசுக்குப்படுது "

சந்திரசூடன் பேசிக்கொண்டிருக்கும்போதே ராவ்டே பிந்தரின் சட்டைப் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெளிச்சத்தைக் காட்டி டயல்டோனை வெளியிட்டது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தார்.
மறுமுனையில் ஆதிகேசவன் அழைத்துக்கொண்டிருந்தார். செல்போனை காதுக்கு ஒற்றினார் ராவ்டே பிந்தர்.

" ஹலோ "

" என்ன ராவ்டே..... விசாரணை இன்னமும் போயிட்டிருக்கா .....? "

" ஆமா..... "

மறுமுனையில் ஆதிகேசவனின் குரல் கிசுகிசுப்பாய் மாறியது.

"ஃப்ளாட்டை விட்டு வெளியே வந்து கொஞ்சம் பேச முடியுமா .....? "

**********
( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29 ]

English summary
Flat number 144 Adhira apartment (Episode 30) is a new crime thriller serial written by writer R Rajeshkumar. பிரபல நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதும் ' ஃப்ளாட் நெம்பர் 144 அதிரா அப்பார்ட்மெண்ட்' கிரைம் நாவலின் முதல் எபிசோடை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X