India
  • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"“ ரா..ரா...ராவ்டே நீங்களா இப்படி.. ?“ ப்ளாட் நெம்பர் - 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (62)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

காரின் ஸ்டியரிங்கைப் பிடித்திருந்த திருமூர்த்தியின் கைவிரல்கள் மெலிதாய் நடுங்கின. சிரமத்தோடு எச்சிலை விழுங்கிக் கொண்டே ராவ்டேபிந்தரைப் பார்த்தார்.

" ரா..ரா...ராவ்டே நீங்களா இப்படி.. ? "

" நானேதான்... என்ன ஆச்சர்யமாயிருக்கா திருமூர்த்தி...? எவ்வளவு நாளைக்குத்தான் முகமூடியைக் கழட்டாமே மாட்டிகிட்டு இருக்க முடியும்...? இன்னிக்கு நான் யார்ங்கிறதை வெளிப்படுத்திக்க வேண்டிய நாள்... வெளிப்படுத்திகிட்டேன். உன்னோட முன்னாள் தொழில் பார்ட்னர் அருளானந்தம் உத்திரமேரூர் கோயில் வாசல்ல அஞ்சு லட்ச ரூபாய் பணத்துக்காக காத்துகிட்டு இருக்கட்டும். நாம் மதுராந்தகம் போவோம் "

" அ..அ..அங்கே எதுக்கு.. ? "

" காரணத்தை கேட்டுகிட்டு இருக்காமே காரை ஸ்டார்ட் பண்ணு. மதுராந்தகம் போய்ச் சேர்கிற வரைக்கும் நீ ஒரு வார்த்தை பேசக்கூடாது. காரை ஒழுங்கா ஒட்டணும்... என்னை ஏமாத்தவோ, தாக்கவோ முயற்சி பண்ணினா உன்னை சுட்டுத்தள்ள எனக்கு ஒரு மைக்ரோ செகண்ட் போதும்... நான் ராணுவத்துல பல வருஷமாய் வேலை பார்த்து ரிடையரானவன் என்கிற விஷயம் உன்னோட மனசுக்குள்ளே இருக்கட்டும் "

கண்களில் பீதி வழிய திருமூர்த்தியின் உதடுகளிலிருந்து பயத்தோடு வார்த்தைகள் சிதறின.

Flat number 144 adhira apartment episode 62

" எ...எ....என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்க ராவ்டே. நீங்க சொல்ற மாதிரி நடந்துக்கிறேன்.... "

" முதல்ல உன்னோட செல்போனைக் குடு"

திருமூர்த்தி விரல்கள் உதற தன்னுடைய செல்போனை எடுத்துக் கொடுத்தார். ராவ்டேபிந்தர் அந்த போனை வாங்கி ஸ்விட்ச் ஆஃப் செய்து அதை தன் சட்டைப் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டார்.

" ம்... காரை எடு.... மதுராந்தகம் போய்ச் சேர்கிற வரைக்கும் நான் ஏதாவது கேள்வி கேட்டா மட்டுமே வாயைத் திறக்கணும். காரோட வேகம் அறுபது கிலோமீட்டர்க்கு மேல் போகக்கூடாது... பார்த்து ஒட்டணும் "

திருமூர்த்தி வேர்த்து வழிந்தபடி காரை மெதுவாய் நகர்த்தி, வேகம் எடுக்க ராவ்டேபிந்தரின் கையில் இருந்த ரிவால்வர் படம் எடுத்து ஆடும் பாம்பைப் போல் மெல்ல அசைந்தபடி திருமூர்த்தியின் இடது பக்க நெற்றிப் பொட்டையே குறி பார்த்துக் கொண்டிருந்தது.

********
சீரான வேகத்தில் கார் விரைந்து, ஐந்து கிலோமீட்டர் தூரத்தை விழுங்கியிருந்தபோது ராவ்டேபிந்தரின் செல்போன் முணுமுணுப்பாய் கூப்பிட்டது.

பார்வையை திருமூர்த்தியின் முகத்திலிருந்து சிறிதும் நகர்த்தாமல் தன்னுடைய செல்போனை எடுத்து அழைப்பது யார் என்று ஒரப் பார்வையில் பார்த்தார்.

சந்திரசூடனின் பெயர் டிஸ்ப்ளேயில் மெதுவாய் ஊர்ந்து கொண்டிருந்தது. போனை உடனடியாய் எடுத்துப் பேசாமல், திருமூர்த்தியின் தோள்பட்டையை ரிவால்வரால் மெல்லத் தட்டினார் ராவ்டேபிந்தர்.

" அஸிஸ்டெண்ட் கமிஷனர் சந்திரசூடன் லைன்ல வர்றார். நான் இப்போ அவரோடு பேசப் போறேன். நான் போன்ல பேசிட்டிருக்கும்போது நீ நடுவுல என்னைக் காட்டிக் கொடுக்கிற மாதிரி சத்தம் போட்டாலோ, இல்லேன்னா என்னைத் தாக்க முயற்சி பண்ணினாலோ, அந்த நொடியே உன்னோட உடம்பில் உயிர் இருக்காது "

" நா...நான் எதுவும் பேசமாட்டேன் ராவ்டே. நீங்க சொன்னபடி நடந்துக்கிறேன்..."

" இந்த பயம் மதுராந்தகம் போய் சேர்கிறவரை கொஞ்சம் கூட குறையாமே இருக்கணும் " சொன்ன ராவ்டேபிந்தர் செல்போனை ஆன் செய்துவிட்டு ஹேண்ட் செட்டை எடுத்து காதில் வைத்து பவ்யமான குரலில் "ஸார்" என்றார்.

" ராவ்டே..... செங்கல்பட்டு போயிட்டீங்களா.. ? "

" பக்கத்துல வந்துட்டோம் ஸார்... இனி ஒரு அஞ்சாறு கிலோமீட்டர்தான் இருக்கும்... செங்கல்பட்டிலிருந்து உத்திரமேரூர் 25 கிலோமீட்டர்தான். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளே உத்திரமேரூரில் இருப்போம் ஸார் "

" அருளானந்தம் மறுபடியும் திருமூர்த்திக்கு போன் பண்ணிப் பேசினாரா.. ? "

" ம்.. பேசினார்"

" புதுசா ஏதாவது சொன்னாரா.. ? "

" ஒண்ணும் சொல்லலை.. அவர்க்கு அவசர பணத்தேவை போலிருக்கு. பணம் கண்டிப்பா கிடைக்குமான்னு ரெண்டு மூணு தடவை கேட்டுட்டார் "

" ராவ்டே... அந்த அஞ்சு லட்ச ரூபாயை திருமூர்த்தி அருளானந்தத்துகிட்ட கோயில் வாசல்ல கொடுத்ததும் அவர் பணத்தை வாங்கிட்டு, அந்த இடத்திலிருந்து உடனடியாய் தப்பிச்சுப்போக முயற்சி பண்ணுவார். நீங்க அதுக்கு இடம் கொடுக்காமே அவரை மடக்கணும் "

ராவ்டேபிந்தர் செயற்கையாய் சிரித்தார்.

" ஸார்... அதைப்பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம். அருளானந்தம் என்கிற எலி எப்படியும் நாம வெச்சிருக்கிற பொறியில் மாட்டிக்கத்தான் போகுது. உத்திரமேரூர் போய்ச் சேர்ந்ததும் அந்த எலியையே உங்க கூட பேச வைக்கிறேன். போதுமா.. ? "

" ஒரு வேலையை செஞ்சு முடிக்கிறதுக்கு முந்தி இப்படிப்பட்ட பாசிட்டீவ் நாட்ஸ் ரொம்பவும் முக்கியம். உங்க போன்காலுக்காக வெயிட் பண்ணிட்டிருப்பேன். பை..த...பை நான் திருமூர்த்திகிட்ட கொஞ்சம் பேசணும். போனை ஸ்பீக்கர்ல போட்டுட்டு அவரைப் பேசச் சொல்லுங்க "

" அ..அ...அது வந்து.... ஸார் "

" என்ன.. ? "

" அவர் காரை ஒட்டிகிட்டு இருக்கார் "

" செல்போனின் ஸ்பீக்கர் ஆன்ல இருக்கும்போது பேசிகிட்டே காரை ஒட்டலாமே.. ? "

ராவ்டேபிந்தர் செல்போனின் வாயை இடதுகையால் இறுகப் பொத்திக்கொண்டு திருமூர்த்தியிடம் குரலைத் தாழ்த்தினார்.

" ஏ.ஸி. சந்திரசூடன் உன்கூட ஏதோ பேச விரும்பறார். அவர் கேட்கிற கேள்விகளுக்கு மட்டும் நீ பதில் சொல்லணும். மறுபடியும் சொல்றேன். என்னைக் காட்டிக் கொடுக்கிற மாதிரி ஒரு வார்த்தை பேசினாலும் சரி, அந்த விநாடியே உன்னோட நெற்றிப்பொட்டில் தோட்டா பாய்ஞ்சுடும்... ம்... பேசு ..... "

திருமூர்த்தி பயத்தோடு தலையாட்டிவிட்டு பேச ஆரம்பித்தார்.

" ஸ..ஸ..ஸார் "

சந்திரசூடனின் குரல் மறுமுனையிலிருந்து கேட்டது.

" திருமூர்த்தி.... இன்னிக்கு காலையில் மெஸ்ஸில் உங்ககிட்ட சொன்ன அதே விஷயத்தைத்தான் மறுபடியும் உங்ககிட்ட சொல்றோன். அருளானந்தம் கேட்ட அந்த அஞ்சு லட்ச ரூபாய் பணத்தை போன உடனே குடுத்துட வேண்டாம். ஒரு பத்து நிமிஷமாவது அவர்கிட்ட நீங்க பேசிட்டு இருக்கணும். மத்ததையெல்லாம் ராவ்டே பிந்தர் பார்த்துக்குவார்"

" ச...ச...சரி ஸார்.... "

" இப்ப பேசிட்டிருக்கிற உங்க குரலில் ஒரு டென்ஷன் தெரியுது. எதுக்காக இந்த டென்ஷன்.. ? "

" டென்ஷன் எல்லாம் இல்லை ஸார்... கொஞ்சம் பயம்மாயிருக்கு அவ்வளவுதான்.... "

" ராவ்டே பிந்தர் இருக்கும்போது என்ன பயம் தைரியமாயிருங்க.... "

சந்திரசூடன் மறுமுனையில் பேசிவிட்டு செல்போனை அணைத்துவிட, ராவ்டே பிந்தரும், செல்போனின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, ரிவால்வரால் திருமூர்த்தியின் நெற்றிப்பொட்டை அழுத்தியபடி அடிக்குரலில் சொன்னார்.

" இப்ப நீ காட்டின இந்த பயம் கடைசிவரைக்கும் அப்படியே இருக்கணும்" திருமூர்த்தி தலையசைத்துவிட்டு ஆக்ஸிலேட்டரை அழுத்தினார்.

சாலையோரத்தில் நட்டு வைத்திருந்த மஞ்சள்நிற மைல்கல் மதுராந்தகம் 14 கி.மீ. என்று காட்ட கார் சற்றே வேகம் எடுத்தது.

*******
செல்போனில் திருமூர்த்தியிடம் பேசிவிட்டு சந்திரசூடன் நாற்காலியினின்றும் எழ முயன்ற விநாடி, அவருடைய உதவியாளர் கதவைத் தட்டிவிட்டு தயக்கத்தோடு உள்ளே வந்தார். சல்யூட் ஒன்றை வைத்துவிட்டு மெல்ல பேச்சை ஆரம்பித்தார்.

" ஸ...ஸார் "

" என்ன ராஜமாணிக்கம்.. ? "

" அதிரா அப்பார்ட்மெண்ட் 144 நெம்பர் ஃப்ளாட்டோட உட்புற சுவர்களை இன்னிக்கு இடிக்கிறதா நாம பிளான் பண்ணியிருந்தோம் ஸார் "

" ஆமா.... "

" அது இன்னிக்கு முடியாது போலிருக்கு ஸார் "

சந்திரசூடனின் நெற்றி வியப்பு வரிகளுக்கு உட்பட்டது.

" இன்னிக்கு முடியாதா ஏன் .. ? "

" சென்னை கார்ப்பரேஷனிலிருந்து ஒரு ஃபேக்ஸ் நியூஸ் வந்திருக்கு ஸார் "

" என்ன சொல்லியிருக்காங்க .. ? "

" ஒரு அப்பார்ட்மெண்ட்டோட எந்த பகுதியை டெமாலிஷன் பண்றதாக இருந்தாலும், சென்னை கார்ப்பரேஷனிலிருந்து என்.ஒ.ஸி. வாங்கணும்ன்னு மென்ஷன் பண்ணியிருக்காங்க "

" நாம ரகசியமாய் நடத்த இருந்த இந்த டெமாலிஷன் தகவல் எப்படி கார்ப்பரேஷன் பீப்பிள்களுக்கு தெரிஞ்சுது.. ? "
" யாரோ இன்ஃபார்ம் பண்ணியிருக்கணும் ஸார் "

" இட்ஸ் ஒ.கே. கார்ப்பரேஷனோட ரூல்ஸ் என்ன .. ? "

" சென்னை கார்ப்பரேஷனைச் சேர்ந்த எக்ஸிக்யூட்டிவ் என்ஜினியர்ஸ் நாலுபேர் 144 நெம்பர் ஃப்ளாட்டுக்கு வந்து ஸ்பாட் விசிட் செய்யறது ஒரு ஃபார்மாலிடியாம். ஃப்ளாட்டோட உட்புற சுவர்களை இடிக்கும்போது மேல இருக்கிற ஃப்ளாட்டுகளுக்கும், பக்கவாட்டில் இருக்கிற ஃப்ளாட்டுகளுக்கும் எதுமாதிரியான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்குன்னு தெரிஞ்சுக்க ஆய்வுகளை நடத்தி அந்த ஆய்வுகளின் அடிப்படையில் முடிவுகள் சாதகமாய் இருந்தால்தான் சுவர்களை டெமாலிஷன் பண்றதுக்கான என்.ஒ.ஸி. ஆர்டரைத் தர்றது வழக்கம்ன்னு ஃபேக்ஸ்ல மென்ஷன் பண்ணியிருக்காங்க "

" அந்த எக்ஸிக்யூட்டிவ் என்ஜினியர்ஸ் என்னிக்கு ஸ்பாட் விசிட் பண்ணப்போறதா சொல்லியிருக்காங்க .. ? "

" வர்ற புதன்கிழமை "

" மைகுட்னஸ்... புதன்கிழமைக்கு இன்னும் நாலுநாள் இருக்கே. கார்ப்பரேஷன் கமிஷனர்க்கு போன் போட்டு குடுங்க. நான் பேசறேன்"

"நான் ஏற்கனவே பேசிட்டேன் ஸார் "

" என்ன சொன்னார்.. ? "

" என்.ஒ.ஸி. வாங்கிட்டு டெமாலிஷன் பண்றதுதான் சட்டரீதியான அனுமதி. நாளைக்கு ஏதாவது ஒரு பிரச்சினைன்னா கோர்ட் வாசற்படி ஏற வேண்டியதில்லைன்னு சொன்னார். அவர் சொல்றதுதான் சரின்னு என்னோட மனசுக்கும் படுது ஸார். ஆனா நீங்க நேரிடையா கமிஷனர்கிட்ட பேசறதாயிருந்தா சொல்லுங்க ஸார்... போன் போட்டுத் தர்றேன் "

" வேண்டாம். இனி பேசினா அது பிரச்சினையிடும். ஃப்ளாட்டோட உட்புற சுவர்களை யார்க்கும் தெரியாமே டெமாலிஷன் பண்ணனும்ன்னு நினைச்சுட்டிருந்தேன். ஆனா எப்படியோ விஷயம் யார் மூலமாகவோ கசிஞ்சு கார்ப்பரேஷன் கமிஷனர் காதுவரைக்குமே போயிருக்கு... சட்டப்படி என்ன நடக்கணுமோ அது நடக்கட்டும்.. வி... வில்... வெயிட் "

" ஒ.கே. ஸார் " சொல்லிவிட்டு அறையினின்றும் வெளியேற முயன்ற உதவியாளர் நின்றார்.

" ஸார்.. ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் "

" என்ன .. ? "

" அதிரா அப்பார்ட்மெண்ட்டில் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்த பெண்ணோட பேரு கோபிகாதானே.. ? "

" ஆமா.... "

" அந்தப் பெண்ணோட அப்பா ஆதிகேசவன் உங்களைப் பார்க்கிறதுக்காக வந்து வெயிட் பண்ணிட்டிருக்கார். உள்ளே அனுப்பட்டுமா ஸார்.. ? "

" என்ன விஷயம்ன்னு கேட்டீங்களா.. ? "

" கேட்டேன் ஸார். உங்ககிட்ட மட்டும்தான் சொல்லணும்ன்னு அவர் சொன்னதால நான் ஃபோர்ஸ் பண்ணலை... " சந்திரசூடனின் நெற்றியில் வியப்பு வரிகள் ஒடின.

" அவரை உள்ளே அனுப்புங்க... "

**********

( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48,49, 50, 51, 52 ,53, 54 , 55 , 56 , 57 , 58 , 59 , 60 , 61 ]

English summary
Flat number 144 adhira apartment episode 62 by Rajesh Kumar Novelist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X