For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் முகம் பார்த்த கண்ணாடிகள் 22: நான் பார்த்த மினி இந்தியா

By Shankar
Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

இன்றைய தினம் செய்கிற கொலைகளுக்குக் கூட ஒரு பெயர் வைக்க ஆரம்பித்துவிட்டாரா்கள்.

அதில் ஒன்று கௌரவக் கொலை.

சில மாதங்களுக்கு முன்பு வரை கௌரவத்தோடு இருந்த கொலை இப்போது சமூக நோக்கர்களின் பார்வையில் ஆணவக் கொலையாக மாற்றப்பட்டுவிட்டது.

காதல் என்பது பசி, தாகம் போன்றதொரு உணர்வு. இந்தக் காதல் உணர்வு எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். ஏன், தாவரங்களுக்குக் கூடப் பொருந்தும். தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை எனப்படும் காதல் உணர்வு மட்டும் இல்லாமல் இருந்தால் நமக்கு சாப்பிட உணவு கிடைக்காது.

Naan Mugam Paartha Kannadigal - 22

எல்லா உயிரினங்களின் காதல்களும் ஒருவித கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். ஏற்கெனவே நிர்ணயம் செய்யப்பட்ட ஒழுங்கு முறைக்குக் கட்டுப்பட்டு இருக்கும். ஆனால் மனிதர்களின் காதல் மற்ற உயிரினங்களினின்றும் மாறுபட்டது. ஒரு ஆனோ, பெண்ணோ பருவ வயதைத் தொட்டு விட்டால் அவர்களுக்குள் எந்த ஒரு நொடியிலும் உடம்பில் சுரக்கும் ஹார்மோன்களின் விளைவாக காதல் என்கிற உணர்வு ஒரு பூனைக் குட்டியைப் போல் எட்டிப் பார்க்கும். அது மாதிரியான சமயங்களில் சுமாரான ஒரு அழகோடு இருக்கும் ஒரு பெண் ஒரு ஆணுக்கு பேரழகியாக காட்சியளிப்பதும், பைக்கில் வேகமாய் செல்லும் ஒரு இளைஞன் ஒரு பெண்ணுக்கு வீரனாகத் தோன்றுவதும் காதலின் வெளிப்பாடே.

காதலுக்குக் கண்ணில்லை என்பது ஒரு சத்தியமான வாக்கியம். காதலுக்குள் நுழைந்துவிட்ட அந்த இரண்டு பேருக்கும் ஜாதி, மதம், கௌரவம், அந்தஸ்து என்கிற அத்தனை வார்த்தைகளும் மறந்து போய்விடும். காதல் என்கிற உணர்வு கனிந்து கல்யாணம் என்கிற எல்லைக் கோட்டைத் தொடும்போதுதான் ஜாதி என்கிற குறுக்குச் சுவர் இடையில் இருப்பது தெரிய வருகிறது.

பிறகு என்ன... போராட்டம்தான்!

பொதுவாக இதுமாதிரியான போராட்டங்களில் 50 சதவீதம் பெற்றோர் காதலுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டு கல்யாணத்தைச் செய்து வைத்து விடுவார்கள். இருபத்தி ஐந்து சதவீத பெற்றோர் காதலுக்கு சம்மதம் கொடுக்காமல் அடம்பிடிப்பார்கள். பொறுத்துப் பொறுத்துப் பார்க்கும் காதலர்கள் பெற்றோர் சம்மதம் இனி கிடைக்காது என்கிற நிலைமை உருவாகும்போது ஒரு ராத்திரி நேரத்தில் வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்வார்கள். பிறகு இரண்டு வருஷம் கழித்து பெற்றோர்கள் மனம் மாறி பேரக் குழந்தையோடு ஏற்றுக் கொள்வார்கள். இதில் ஒரு பதினைந்து சதவீதம் பெற்றோர் கடைசி வரை பையனையோ பெண்ணையோ வீட்டில் சேர்க்க மாட்டார்கள்.

ஆனால் அந்த கடைசி பத்து சதவீத பெற்றோர் மட்டும் ஜாதி, மதம், கௌரவம், அந்தஸ்து என்ற இந்த வார்த்தைகளை தங்களின் உயிர்மூச்சாக நினைத்துக் கொண்டு அந்தக் காதலை வாழ விடாமல் செய்து விடுகிறார்கள்.

அப்படி காதலை வெட்டிச் சாய்ப்பதன் மூலம் அந்த பெற்றோர்க்கு கிடைக்கும் மகிழ்ச்சி எவ்வளவு நாளைக்கு நீடிக்கும்?

மீறிப் போனால் மூன்று நாளைக்கு நீடிக்கும்.

அதற்குப் பிறகு போலீஸ், கோர்ட்டு, வக்கீல், வாதம் என்று நாட்கள் நரகமாகிவிடும். சிறைச்சாலையின் ராத்திரி நேரங்கள் ரணமாக மாறிவிடும். உண்ணும் உணவு தொண்டையில் இறங்காது.

மனச்சாட்சி நேரம் கிடைக்கும் போதெல்லாம் குத்திக் காட்டும்.

'இது உனக்குத் தேவையா?'

'அவர்கள் ஏதோ ஆசைப்பட்டார்கள். கல்யாணம் செய்துக் கொண்டார்கள். இந்த உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் சந்தோஷமாய் இருந்துவிட்டுப் போகட்டுமே. பெற்று வளர்த்து ஆளாக்கி அழகு பார்த்த நீ கையில் அரிவாளை எடுத்தது எந்த வகையில் நியாயம்?"

மனச்சாட்சி கேட்கும் இப்படிப்பட்ட கேள்விகளுக்கு அந்தப் பெற்றோர்களால் பதில் சொல்ல முடியாது. அவர்கள் வடிக்கும் கண்ணீர்தான் அதற்பகு பதிலாக இருக்கும்.

அது கௌரவக் கொலையோ, ஆணவக் கொலையோ போன உயிர் போனதுதான். அண்மையில் நடைபெற்ற இதுபோன்றதொரு சம்பவத்தைப் படித்த போதும், தொலைக்காட்சியில் பார்த்தபோதும் இரண்டு வருஷங்களுக்கு முன்னால் நான் பார்க்க நேர்ந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

************

அன்று காலை ஆறரை மணி. குளிரான வேளை.

மருதமலை ரோட்டில் பாரதியார் பல்கலைக் கழகம் அருகே மார்னிங் வாக்கிங் போய்க் கொண்டிருந்தேன். போக்குவரத்து அறவே இல்லாத சாலை. என்னைப் போலவே சிலரும் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார்கள்.

திடீரென்று எனக்குப் பின்னால் பைக் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தேன்.

ஒரு இளைஞன் பைக்கில் தெரிந்தார். பைக்கின் பின் இருக்கையில் ஒரு இளம் பெண்ணும் அவள் மடியில் இரண்டு வயது குழந்தையும் பார்வைக்குக் கிடைத்தார்கள்.

அந்த இளைஞர் சிரிப்போடு சொன்னார்.

"குட் மார்னிங் ராஜேஷ்குமார் ஸார்"

"குட் மார்னிங்...' நீங்க?"

"ஸார்! நான் உங்க வாசகன். என்னோட ஸ்கூல் டேஸிலேருந்து பட்டிச்சுட்டு வர்றேன். உங்களை என்னிக்காவது ஒரு நாள் பார்த்துப் பேசணும்னு நினைச்சிட்டிருந்தேன். இன்னிக்கு உங்களைப் பார்த்துட்டேன். ரொம்பவும் சந்தோஷமா இருக்கு ஸார்!"

"எனக்கும் உங்களைப் பார்த்தது சந்தோஷம். உங்க பேரு?"

"நூருல்லா சார்"

"என்ன பண்றீங்க..?"

"காந்திபுரத்துல சின்னதா ரெடிமேட் ட்ரஸ் கடை ஒண்ணை வச்சிருக்கேன் சார்.." சொன்ன நூருல்லா, அந்தப் பெண்ணை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். "ஸார்.. ஷி ஈஸ் மை ஒய்ஃப். பேரு மேரி புஷ்பம். ஒரு நர்சரி ஸ்கூல்ல டீச்சர் வேலை. இவளும் உங்க ஃபேன்தான்."

"ஒரு நிமிஷம் நூருல்லா... உங்க மனைவியோட பேரு என்னான்னு சொன்னீங்க...?"

"மேரி புஷ்பம்...!"

"அப்படீன்னா... இவங்க க்றிஸ்டியன்?"

"ஆமா... ஸார்... இது காதல் கல்யாணம். நாங்க மதத்தால் வேறுபட்டு இருந்தாலும் மனதால் ஒன்றுபட்டவங்க!"

நான் கேட்டேன் "உங்க காதலுக்கு எதிர்ப்பு வரலையா?"

"நல்ல கேள்வி கேட்டீங்க ஸார்! பயங்கர எதிர்ப்பு. ரெண்டு வீட்டிலேயும் ஒத்துக்கலை... மேரி புஷ்பத்தை 'கோவா'வுக்கு கூட்டிப் போய் அவங்க சொந்தத்துல யார்க்கோ கல்யாணம் பண்ணி வைக்கப் பாத்தாங்க... ஆனா நாங்க அதைத் தெரிஞ்சிக்கிட்டு ராத்திரியோட ராத்திரியாய் தலைமறைவாகிட்டோம். வாரம் பத்துநாள் அஞ்ஞாதவாசம். அதுக்கப்புறம் நாங்களே ஒரு சர்ச்சுக்குப் போய் ஃபாதரோட உதவி இல்லாம மேரி மாதாவுக்கு முன்னாடி மோதிரம் மாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ரெண்டு வீட்லேயும் எங்களைத் தேடித் தேடி களைச்சுப் போயிட்டாங்க. ஒரு மாசம் கழிச்சி வீட்டுக்குப் போன் பண்ணி நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டதைப் பத்திச் சொன்னோம்..."

"என்ன ரியாக்ஷன்?"

"எக்கேடோ கெட்டுப் போங்கன்னு ஆசீர்வாதம் பண்ணாங்க!"

"எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்?"

"ஆனா நாங்க ஒண்ணும் கெட்டுப் போயிடலை ஸார்... நல்லாவேயிருக்கோம்!"

நான் மேரி புஷ்பத்தின் மடியில் உட்கார்ந்திருந்த குழந்தையின் கன்னத்தை மெல்லத் தட்டி "உன்னோட பேர் என்ன?" என்று கேட்டேன்.

"குழந்தைக்கு இன்னும் சரியா பேச்சு வரலை சார். அவன் பேர் சுப்பிரமணி"

நான் அதிர்ச்சியோடு நூருல்லாவைப் பார்த்தேன்.

"என்ன பேர் சொன்னீங்க சுப்பிரமணியா?"

"ஆமா ஸார்... சுப்பிரமணிங்கிறது என்னோட ஃப்ரண்டோட பேர். திருப்பூர்ல இருக்கான். நாங்க வீட்டு எதிர்ப்புக்கு பயந்து தலைமறைவாய் இருந்தபோது அடைக்கலம் கொடுத்து ஆதரவாய் இருந்தவன் அவன்தான். நான் தொழில் தொடங்க பணம் கொடுத்ததும் அவன்தான். அவன் மட்டும் இல்லேன்னா நாங்க இன்னிக்கு இல்ல... அதனால்தான் எங்க குழந்தைக்கு அவனோட பேரை வெச்சிருக்கோம்...!"

நான் திகைப்பிலிருந்து மீண்டு, "சரி... இவ்வளவு காலைல எங்கே போயிட்டு இருக்கீங்க இந்தப் பக்கம்?"

"ஸார்! இன்னிக்கு கிருத்திகை. அதனால மருதமலைக்குப் புறப்பட்டோம். ரெண்டு வருஷமா தவறாம வர்றோம். என்ன ஸார் அப்படிப் பார்க்கறீங்க...? எங்களுக்கு இப்போ ஜாதி மதம் எதுவும் கிடையாது ஸார். எல்லா மதமும் எல்லா கடவுள்களும் எங்களுக்கு ஒண்ணுதான் ஸார். ஒவ்வொரு கிருத்திகைக்கும் மருதமலை வருவோம். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அந்தோணியார் கோயிலுக்குப் போவோம். வெள்ளிக்கிழமையன்னிக்கு தர்கா போவோம்.

"க்ரேட்!" என்றேன்.

"நாங்க புறப்படறோம் ஸார்... உங்களோட வாக்கிங் நேரத்தை 'ஸ்பாய்ல்' பண்ணிட்டிருக்கோம். உங்க வீட்டு அட்ரஸ் எனக்குத் தெரியும் ஸார். ஒரு நாளைக்கு நாங்க மூணு பேரும் உங்க வீட்டுக்கு வருவோம். வரலாமா ஸார்?"

"தாராளமாய்... மோஸ்ட் வெல்கம் நூருல்லா"

நூருல்லா பைக்கை உதைத்தார். புறப்பட்டார். பைக் சீறிப் பாய்ந்தது. நான் பார்த்துக் கொண்டு நின்றேன்.

ஒரே பைக்கில் நூருல்லா, மேரி புஷ்பம், சுப்ரமணி மூன்று பேரும் ஒரு மினி இந்தியாவாய் மாறி பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

- தொடரும்

English summary
Here is the 22nd episode of Writer Rajeshkumar's Naan Mugam Paartha Kannadigal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X