For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் முகம் பார்த்த கண்ணாடிகள்- 23: இருக்கு ஆனா இல்ல!

By Shankar
Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

இப்போது பேய் சீஸன்... தமிழ்த் திரைப்படங்களில் கிட்டத்தட்ட எல்லா முன்னணி நடிகர்களும் நடிகைகளும் பேய்களாக மாறி வெள்ளை வெளேரென்ற விழிகளையும், கறுப்படைந்த பல் வரிசையையும் காட்டி ரசிகர்களைப் பயமுறுத்தி கோடிக்கணக்கில் சம்பளம் பார்த்துவிட்டார்கள்.

படங்களில் பெண் பேய்கள் அழகாக இருப்பதால் ரசிகர்களும் பயப்படாமல் பார்க்கிறார்கள். அதிலும் பேய்கள் லட்சுமி ராய் போல இருந்துவிட்டால், அந்தப் படத்துக்கு நிச்சயம் ரிபீட் ஆடியன்ஸ் உண்டு.

1980ல் குமுதத்தில் நான் சிறுகதைகளை எழுதிக் கொண்டிருந்தபோது எழுத்தாளர் ரா கி ரங்கராஜன் அவர்கள் ஒரு முறை என்னிடம் பேயை வைத்து சிறுகதை ஒன்றை எழுதித் தரும்படி சொன்னார்.

நான் "ஸாரி ஸார்" என்றேன்.

"எதுக்கு ஸாரி"

"எனக்கு இந்த பேய், பிசாசு, ஆவி இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது ஸார்... எனக்கே நம்பிக்கை இல்லாத போது பேய் இருக்குன்னு சொல்லி வாசகர்களை நம்ப வைக்கத் தயாரில்லை."

Naan Mugam Paartha Kannadigal 23

அவர் மெல்லச் சிரித்துவிட்டுச் சொன்னார்.

"நானும் ஒரு காலத்துல இப்படித்தான் இருந்தேன் ராஜேஷ்குமார்... ஆனா உண்மையிலேயே பேய்ன்னு ஒரு விஷயம் இருக்கு... நான் அதை வெச்சு நிறைய சிறுகதைகளை எழுதியிருக்கேன்... நீங்களும் அதைப் பற்றிய புத்தகங்களைப் படிச்சா உங்க க்ரியேட்டிவிட்டி இம்ப்ரூவ் ஆகும்... நான் ரெண்டு புக்ஸை ரெஃபர் பண்றேன். நேரம் இருக்கும்போது படிச்சுப் பாருங்க...," என்றார்.

நான் அவர் திருப்திக்காக தலையாட்டி வைத்தேன்.

***********

மேற்கண்ட சம்பவம் நடந்த வாரமே, நான் பார்த்து வந்த ஹேண்ட்லூம் ஸாரீஸ் பிஸினெஸ் விஷயமாய் புனே செல்ல வேண்டியிருந்தது.

வழக்கமாய் புனே செல்லும் போதெல்லாம் நான் தங்குவது ரவிவார்பேட்டையில் உள்ள ஹெச்எம்சி கெஸ்ட் ஹவுஸ் என்ற ஹோட்டலில்தான். ஹெச்எம்சி என்றால் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என்று பொருள். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து வரும் பிஸினஸ் சம்பந்தப்பட்ட நபர்கள் அந்த லாட்ஜில்தான் நாட்கணக்கில், வாரக் கணக்கில் தங்குவது வழக்கம்.

ஹோட்டலின் மேனேஜரும் தமிழர் என்பதால் அந்த லாட்ஜுக்குள் நுழைந்துவிட்டாலே ஏதோ தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டதைப் போன்ற உணர்வு ஏற்படும். அந்த லாட்ஜின் மிகப் பெரிய குறைபாடு என்னவென்றால், அங்கே சிங்கிள் ரூம் கிடையாது. ஒரு அறையில் நான்கு பேர் தங்கிக் கொள்ள வேண்டும். மூலைக்கொரு கட்டில், சுவரில் ஒரு கப்போர்டு. அங்கே தங்குபவர்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்காரர்கள் என்பதால் ஒருவருக்கொருவர் அட்ஜஸ்ட் செய்து கொண்டு போய்விடுவார்கள்.

அன்றைய தினம் நான் புனே சென்று அந்த ஹோட்டலில் தங்கியபோது எனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் 50 வயது பெரியவர் ஒருவரும் இருந்தார். என்னைப் பார்த்ததும் வெகு நாள் பழகியவர் போல பேச ஆரம்பித்துவிட்டார்.

"தம்பிக்கு எந்த ஊரு...?"

"கோயம்புத்தூர்..."

"கைத்தறி சேலை வியாபாரமா?... என் பேரு சென்னியப்பன்... சொந்த ஊர் ஈரோடு... மஞ்சள் வியாபாரம்... வருஷத்துல ரெண்டு தடவை இங்கே வருவேன்... ஒரு வாரம் தங்கி வேலைகளைப் பார்த்துவிட்டுக் கிளம்பிவிடுவேன்... நீங்க எப்படி?"

"நான் வருஷத்துக்கு நாலஞ்சி தடவை வர வேண்டியிருக்கும். சில சமயம் வசூல் ஆகும்... ஆர்டர் கிடைக்காது. சில சமயம் வசூல் ஆகாது... ஆர்டர் கிடைக்கும்..."

"நம்ம பொழைப்பும் அதேதான்...!" என்று பேச ஆரம்பித்தவர், இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றியும், அரசியல்வாதிகள் பற்றியும் ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகளோடு திட்டித் தீர்த்தார். நானும் வேறு வழியில்லாமல் அவர் சொன்னதுக்கெல்லாம் தலையை ஆட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

ராத்திரி எட்டு மணியானதும், பக்கத்திலிருந்து ஜோஷி ரெஸ்டாரெண்டுக்குப் போய் டிஃபன் சாப்பிட்டுவிட்டு, ரோட்டோர பாதாம் பால் கடையில் பால் குடித்துவிட்டு, இருவரும் ஹோட்டலுக்குத் திரும்பினோம். பயணக் களைப்பு காரணமாக நான் தூக்கம் வருவதாகச் சொல்லிவிட்டுப் படுத்துக் கொள்ள, அவரும் வேறு வழியில்லாமல், "சரி தம்பி.. நீங்க தூங்குங்க.. நாளைக்குப் பேசிக்கலாம்," என்று சொல்லிப் படுத்துவிட்டார்.

அறை ஜீரோ வாட்ஸ் பல்ப் வெளிச்சத்தில் அரையிருட்டோடு தெரிய, தூக்கம் என் இமைகளை அழுத்தியது.

***********

எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. ஏதோ சத்தம் கேட்டு சட்டென்று விழித்துக் கொண்டேன். ஹோட்டல் மொத்தமும் அசாத்தியமான நிசப்தத்தில் இருந்தது. தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்தேன்.

'ஏதோ சத்தம் கேட்டதே... என்ன அது..?' பெரியவர் படுத்திருந்த கட்டிலைப் பார்த்தேன். அவர் மல்லாந்த நிலையில் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தார். எனக்குக் குழப்பமாக இருந்தது.

'சத்தம் கேட்டது உண்மையா இல்லை ஏதாவது கனவு கண்டேனா?...' யோசனையோடு சில விநாடிகள் அப்படியே உட்கார்ந்து இருந்துவிட்டு மறுபடியும் படுத்துக் கொண்டேன். தள்ளிப்போய் நின்றிருந்த தூக்கம் மறுபடியும் என்னை நெருங்கி கண்களைத் தழுவ முயன்றபோது திரும்பவும் அந்தச் சத்தம் கேட்டது.

ஒரு பெண்ணின் சிரிப்புச் சத்தம். நான் சர்வாங்கமும் அதிர்ந்து போனவனாய் எழுந்து உட்கார்ந்தேன். நிச்சயமாய் நான் கேட்டது ஒரு பெண்ணின் சிரிப்புத்தான். 'இந்தச் சத்தம் எங்கிருந்து வந்தது?'

நான் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மெதுவாய் கட்டிலில் இருந்து இறங்கினேன். லாட்ஜைச் சுற்றிலும் குடியிருப்பு வீடுகள் இருப்பதால் அந்த வீடுகள் ஏதாவது ஒன்றிலிருந்து யாராவது சிரித்து இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்கும்போது, மீண்டும் அந்த சிரிப்புச் சத்தம் கேட்டது.

இப்போது கேட்டது அறைக்குள். எனக்கு முதுகுத் தண்டில் உறைந்து போனது போன்ற ஒரு உணர்ச்சி. அறைக்குள் எப்படி இந்த சிரிப்புச் சத்தம்? நானும் அந்தப் பெரியவரும் மட்டும் இந்த அறைக்குள் இருக்கும்போது, ஒரு பெண்ணின் சிரிப்புச் சத்தம் எப்படிச் சாத்தியம்?

'பெரியவரை எழுப்பி விஷயத்தைச் சொல்லலாமா?' என்று யோசித்து, அந்த யோசிப்பைச் செயல்படுத்த ஜீரோ வாட்ஸ் வெளிச்சத்தில் மெல்ல நடந்து அவரை நோக்கிப் போனேன்.

அவரை நெருங்கி எழுப்ப முயன்ற விநாடி - மீண்டும் பெண்ணின் சிரிப்புச் சத்தம் கேட்டது. அப்படிச் சிரித்தது வேறு யாருமில்லை. அந்தப் பெரியவரேதான். மல்லாந்து படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அவர், தன்னுடைய நரை மீசைக்குக் கீழே, மெல்ல வாய்ப் பிளந்து ஒரு சாக்பீஸ் கோடு மாதிரி பல் வரிசைத் தெரிய சிரித்துக் கொண்டிருந்தார்.

என் விழிகள் வியப்பிலும் பயத்திலும் அப்படியே நிலைகுத்தி நின்றுவிட்டன. முரட்டுத்தனமான குரலைக் கொண்ட பெரியவர், பெண்ணைப் போல சிரிப்பது எப்படி?

'ஏதாவது கனவு காண்கிறாரா? அப்படியே கனவு கண்டாலும் ஒரு பெண் சிரிப்பது போல் சிரிப்பது சாத்தியம் இல்லையே?' நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர் மறுபடியும் சிரித்தார். இந்தத் தடவை உடம்பு குலுங்க கெக்கலிட்டுச் சிரித்தார்.

நான் பயந்து போனவனாய் மெல்லப் பின் வாங்கி, அறைக் கதவைத் திறந்து ஹோட்டலின் மேனேஜரைத் தேடிப் போனேன். ரிசப்ஷன் கவுன்ட்டர் அருகே தூங்கிக் கொண்டிருந்தவரைத் தொட்டு எழுப்ப முயன்றேன். மூச்சுக் காற்றில் பயங்கர சாராய நெடி. எழுப்பக் கூடிய நிலையில் அவர் இல்லை என்பதைப் புரிந்து கொண்ட நான், மறுபடியும் அறைக்குள் எட்டிப் பார்த்தேன்.

பெரியவர் இன்னமும் பெண் குரலில் சிரித்துக் கொண்டிருந்தார். பயத்தில் எனக்கு வியர்த்துக் கொட்டியது. மறுபடியும் அறைக்குள் செல்லத் தைரியம் இல்லாததால் வரவேற்பறையின் ஓரத்தில் போடப்பட்டிருந்த பெஞ்சில் படுத்துத் தூங்க முயற்சித்தேன்.

*******

யாரோ என்னைத் தட்டி எழுப்பியதை உணர்ந்து கண் விழித்தேன்.

காலை நேரத்துப் பளீரென்ற வெளிச்சம். விடிந்து வெகு நேரம் ஆகியிருக்கும் போல் தோன்றியது. கண்களில் மிளகாய் வைத்துத் தேய்த்தது போல் ஒரு எரிச்சல். சிரமப்பட்டு இமைகளைப் பிரித்து எழுப்பியது யார் என்று பார்த்தேன்.

அந்தப் பெரியவர்தான் குளித்துவிட்டு நெற்றி நிறைய திருநீறு பூச்சோடு தெரிந்தார். எல்லாப் பற்களையும் காட்டிப் பெரிதாய்ச் சிரித்தார்.

"என்ன தம்பி... இங்க வந்து படுத்திட்டீங்க?"

"அது... வந்து..." இவரிடம் உண்மையைச் சொல்வதா இல்லை வேறு ஏதாவது காரணம் சொல்லலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, அவர் புன்னகையோடு கேட்டார்.

"என்னோட குறட்டைச் சத்தம் பெரியதாய் இருந்துச்சோ?"

"குறட்டைச் சத்தமா இருந்தா கூடப் பரவாயில்லை..."

"பின்னே..."

"தூக்கத்துல சிரிச்சீங்க... அதுவும் ஒரு பெண் சிரிக்கிற மாதிரி"

"ஓ... நேத்து பௌர்ணமி ராத்திரி... அதான்...!"

"பௌர்ணமி ராத்திரிக்கும் நீங்க பெண் குரல்ல சிரிச்சதுக்கும் என்ன சம்பந்தம்?"

"அது ஒண்ணுமில்ல தம்பி... ஒவ்வொரு பௌர்ணமி ராத்திரிக்கும் மோகினி என்கூட விளைாயாட வந்துடுவா... அவ சிரிச்ச சத்தம்தான் அது!"

என் இதயத் துடிப்பு எகிறியது... "மோகினியா?"

"ஆமா தம்பி. அது வந்து ஒரு யட்சினி... கிராமத்துப் பக்கம் மோகினிப் பிசாசுன்னு சொல்லுவாங்க. நேத்து ராத்திரி அதுதான் வந்து என்கூட விளையாடி இருக்கும்... அது உங்களை ஒண்ணும் பண்ணாது..."

எனக்கு லேசாய்க் கோபம் வந்தது. "இந்தக் காலத்துல பேயாவது பிசாசாவது. உங்களுக்கு வேற என்னமோ பிரச்சினை. முதல்ல ஒரு நல்ல டாக்டரைப் போய்ப் பாருங்க"

"உங்க மாதிரி இருக்கிறவங்க நான் சொன்னா நம்ப மாட்டீங்க... ஒரு பொண்ணு என் உடம்புக்குள்ள புகுந்தாத்தான் நான் பொண்ணு மாதிரி சிரிக்க முடியும். எனக்கு இப்போ 51 வயசாகுது. என்னோட 26வது வயசுல ஒரு நாள் செகண்ட் ஷோ சினிமா பாத்துட்டு வரும்போது, புளிய மரத்துக் கிளையிலிருந்து யாரோ என் மேல குதிச்ச மாதிரி இருந்தது..."

மேற்கொண்டு அவர் சொன்ன விவரங்கள் என்னை திகிலின் உச்சிக்கே கொண்டு போய் நிறுத்தின.

"நீங்க குளிச்சிட்டு வாங்க தம்பி... நாம ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டுகிட்டே பேசுவோம்..."

பெரியவர் சொல்ல, நானும் அவர் என்ன சொல்லப் போகிறார் என்ற ஆவலில் பரபரவென்று குளித்து அவரோடு ஹோட்டலுக்குச் சென்றேன். அவர் சாப்பிட்டுக் கொண்டே பேச ஆரம்பித்தார்.

"தம்பி... உங்களுக்கு இந்தப் பேய், பிசாசு இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கா?"

"இல்லை...," என்றேன்.

"மோகினிப் பிசாசு?"

"சுத்தமாய் இல்லை"

"உங்க நினைப்பு ரொம்பத் தப்பு தம்பி... நீங்க இதை நம்பணும். ஏன்னா நான் ஒரு மோகினிப் பிசாசோட மானசீகமா குடும்பம் நடத்திட்டு வர்றேன்..."

"என்னது குடும்பம் நடத்திட்டு வரீங்களா?"

"ஆமா தம்பி. எனக்கு இப்போ வயசு 50-க்கு மேல ஆகுது. என்னோட 25வது வயசுல ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஒரு வருஷம்தான் அவளோட குடும்பம் நடத்தியிருப்போம். அதுக்கப்புறம் அந்த வாழ்க்கை இல்லேன்னு ஆயிடுச்சு..."

"ஏன் என்னாச்சு?"

"நான் ஒரு நாள் என் மனைவி ஊர்ல இல்லாத நேரத்துல செகண்ட் ஷோ சினிமாவுக்குப் போயிட்டு ராத்திரி ஒரு மணிக்கு மேல் சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பிட்டிருந்தேன்... வர்ற வழியில புளியந்தோப்புன்னு ஒரு இடம். அந்த வழியா வரும்போது வேகமா காத்தடிச்சு மழை வர்ற மாதிரி இருந்தது. சைக்கிளோட வேகத்தைக் குறைச்சி ஒரு புளிய மரத்தடியில நின்னேன்.

ஒரு ரெண்டு நிமிஷ நேரம் நின்னிருப்பேன். புளிய மரத்துல வெள்ளையா தெரிஞ்சது. அது என்னான்னு பாக்குறதுக்குள்ள அது என் மேல குதிச்சது. அந்த நிமிஷத்திலிருந்து என்னோட உடம்புக்குள்ள ஒரு கனம்... நான் பயந்து போய் அந்த இடத்தைவிட்டு உடனே கிளம்பிட்டேன்... வீட்டுக்கு வந்து படுத்ததுதான் தெரியும். மறுநாள் காலை கண்விழிக்கும்போது ஒன்பது மணி. எந்திருச்சி பாத்ரூம் நோக்கி நடக்கும்போது என் மேல யாரோ சாஞ்சிட்டு வர்ற மாதிரி இருந்தது..."

"அ...அ... அப்புறம்..?"

"நான் மொதல்ல என்னோட உடம்புக்குத்தான் ஏதோ முடியலன்னு நினைச்சேன். உடனே என்னோட ஃபேமிலி டாக்டரைப் போய்ப் பார்த்தேன்... அவரும் என்னை தரோவா செக் பண்ணிப் பார்த்துட்டு என்னோட உடம்புக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லேன்னு சொல்லிட்டார். இருந்தாலும் சில மாத்திரைகளை பிரஸ்க்ரைம் பண்ணினார். நானும் தொடர்ந்து சாப்பிட்டேன். ஒரு பிரயோஜனமும் இல்ல...

கொஞ்ச நாள் கழிச்சி என்னோட மனைவி ஊரிலிருந்து வந்தா... ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்கன்னு கேட்டா... விஷயத்தைச் சொன்னா அவ பயந்து போயிடுவான்னு நினைச்சி நான் எதையும் சொல்லாம மறைச்சிட்டேன். ஆனா அன்னிக்கு ராத்திரி ஒரு சம்பவம் நடந்தது... அதைப் பார்த்துட்டு நான் மிரண்டு போயிட்டேன்...", என்றார்.

நான் என்ன என்பது போலப் பார்த்தேன். அவர் தொடர்ந்தார்... "அன்னிக்கு ராத்திரி நான் என்னோட மனைவிக்குப் பக்கத்துல படுத்திருந்தேன். எனக்கு உடம்பு அசதியா இருக்கவே கால்களைப் பிடித்து விடச் சொன்னேன். அவளும் என்னோட கால்களைப் பிடிச்சா... அடுத்த விநாடி என்னைக் கட்டிலிலிருந்து யாரோ உருட்டி விட்ட மாதிரி இருந்தது...

என்னோட மனைவியும் பதறிப் போய், 'என்னங்க இப்படி விழறீங்க... உங்க உடம்புக்கு என்னன்னு' கேட்டா. ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டு என் மனைவியின் தோளைத் தொட்டுப் பேச நினைச்சேன். மறுபடியும் என்னை யாரோ வலுக்கட்டாயமா தள்ளிவிட்ட மாதிரி இருந்துச்சு... எனக்கு ஒண்ணும் புரியல. அதுக்குப் பிறகு என்னுடைய மனைவியை நான் தொட நெனைக்கும் போதெல்லாம் என்னைப் பிடித்து யாரோ தள்ளிவிட, அது எந்த இடமாக இருந்தாலும் போய் கீழே விழுந்தேன்.

பயந்து போன என் மனைவி அன்னிக்கு என்னைவிட்டுப் பிரிந்து போனவதான்... அதுக்குப் பிறகு வரவே இல்லை. இன்னமும் அவங்க அம்மா வீட்டுலதான் இருக்கா... எங்க அப்பாவும் அம்மாவும் அந்தக் கிராமத்தில இருந்த மாந்திரீகம் தெரிஞ்ச பெரியவர்கிட்ட கூட்டிட்டுப் போனாங்க... அவரு என் உடம்புக்குள்ள மோகினிப் பிசாசு குடிபுகுந்துவிட்டதாகவும், முன் வினைப்படி அந்த மோகினிப் பிசாசோடதான் மீதி வாழ்நாளைக் கழிக்கணும்னும் தீர்மானமா சொல்லிட்டார்...

அதை விரட்ட முடியுமான்னு கேட்டோம்... கேரளா மாந்திரீகவாதிங்ககிட்ட போய் முயற்சி பண்ணிப் பாருங்கன்னு சொல்லிட்டார்... எங்க அப்பாவும் அம்மாவும் என்னைக் கேரளாவுக்குக் கூட்டிப் போய் எவ்வளவோ செஞ்சுப் பாத்தாங்க... ஒரு பிரயோஜனமும் இல்லை..."

பேச்சை சில விநாடிகள் நிறுத்தியவர், " எனக்கு இப்படி இருக்கேங்கிற கவலையில அம்மாவும் அப்பாவும் இறந்திட்டாங்க. அதுக்கப்புறம் எனக்கும் இந்த உடம்புக்குள்ள இருக்கிற மோகினியோட வாழ்ந்து பழக்கமாயிடுச்சி. தினசரி ராத்திரி நான் படுத்துத் தூங்கின கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அது எங்கூட வந்து விளையாடும்... சிரிக்கும்.. எல்லாமே சந்தோஷமாய் இருக்கும்... அந்த மோகினியால ஒரு கஷ்டமும் எனக்கு வந்தது இல்லை.."

நான் அவரையே சில விநாடிகள் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுச் சொன்னேன். "தப்பாய் நினைச்சுக்க வேணாம்... நீங்க ஒரு நல்ல சைக்கியாட்ரிஸ்டைப் பார்த்தா என்ன?"

"மன்னிக்கணும் தம்பி... அவங்களுக்கு இது மாதிரி விஷயங்களல்லாம் புரியாது... எனக்கு அந்த மோகினிப் பேயோட வாழற வாழ்க்கைப் பிடிச்சிருக்கு... இப்ப நான் சொன்னதையெல்லாம் நீங்க நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம்..." சொல்லிவிட்டு அவர் ஒன்றும் பேசாமல் மௌனமாய்ச் சாப்பிட ஆரம்பித்தார்.

அதற்குப் பிறகு நான் கோவைக்குத் திரும்பியதும் எனக்குத் தெரிந்த சைக்கியாட்ரிஸ்ட் டாக்டர் ஒருவரிடம் இதுபற்றிப் பேசினேன். அந்தப் பெரியவர் என்னிடம் சொன்னதையெல்லாம் சொன்னேன்.

அந்த டாக்டர் அனைத்துப் பற்களும் தெரியச் சிரித்துவிட்டுச் சொன்னார். "மோகினியாவது... பிசாசாவது... இது ஒருவித மெண்டல் டிஸ்ஆர்டர்... இந்த உலகம் தோன்றியதிலிருந்து எத்தனையோ பேர் கோடிக்கணக்கான எண்ணிக்கையில் பிறந்து இறந்துட்டாங்க. அந்த உயிர்கள் எல்லாம் பேய்களாக மாறினால் என்னாகும்?

எல்லா உயிர்களுக்கும் மரணம் என்பது இயற்கையானது. ஒரு மனித மூளையில் ஹைபோதலைம்ஸ் மாதிரியான உணர்ச்சி செல்கள் இருக்கு... துன்பம், இன்பம், பயம், பாசம், விரக்தின்னு உணர்ச்சிகளின் அடித்தளமா அந்த செல்கள் இருக்கு. ஒரு மனிதன் படுத்துத் தூங்கும்போது, இந்த செல்களின் தூண்டுதல் ஏற்பட்டதும், எப்போதோ பார்த்த சம்பவங்கள், கேள்விப்பட்ட விநோதமான கதைகள், பேய் இருக்குன்னு நம்பும் மனோபாவம் - இந்த எல்லாமே ஒண்ணு சேர்ந்து மூளையில் உள்ள பிட்யூட்ரி சுரப்பியைத் தட்டி எழுப்ப, அது அட்ரினலின் சுரப்பியைத் துணைக்குச் சேர்த்துக்கிட்டு உடம்பைத் தாறு மாறா இயக்கும்.

அப்போ உடம்பில் கனம் ஏறுவது போன்ற உணர்ச்சி... தன் மீது யாரோ சாய்ந்துகிட்டு நடக்கிற மாதிரி உணர்வு தோணும். அந்தச் சமயத்தில் குரல் நாண்களும் மாறுறதுதானல ஆணின் சிரிப்பு ஒரு பெண்ணின் சிரிப்பைப் போல இருக்கும்".

"அப்படின்னா மோகினி, பிசாசு, பேய்...?"

"பொய்யோ பொய். இந்த மனச்சிதைவுக்குப் பேர் டிஸ்ரப்டிவ் இம்ப்பல்ஸ் - கன்ட்ரோல் அன்ட் கண்டக்ட் டிஸ்ஆர்டர்ஸ் (DISRUPTIVE IMPULSE - CONTROL AND CONDUCT DISORDERS) என்று சொல்லி முடித்தார் டாக்டர்.

-தொடரும்

English summary
The 23rd chapter of writer Rajeshkumar's Naan Mugam Paartha Kannadigal series.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X