For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்ன இந்த நேரத்துல.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (14)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

சில்பா செல்போனை கைப்பையில் போட்டு பத்திரப்படுத்திக்கொண்டு வேறு உடைக்கு மாற தயாரான போது பக்கத்து அறையில் உட்கார்ந்து டி.வி.

பார்த்துக்கொண்டிருந்த அவளுடைய தோழி நர்மதா வேகவேகமாய் எழுந்து வந்தாள்.

" என்ன சில்பா...... ஏதோ போன் வந்தது போலிருக்கு....... ? "

" ஆமா "

" யார்கிட்டயிருந்து ....... ? "

" சி.பி.ஐ. ஆபீஸர் வைத்யா..... "

" என்ன இந்த நேரத்துல.... எனிதிங்க் இம்பார்ட்டண்ட் ....... ? "

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 14

" இம்பார்ட்டண்ட்ஸ் இல்லாமலா இந்நேரத்துக்கு கோயமுத்தூர் வந்து சர்க்யூட் ஹவுஸ்ல தங்கியிருப்பார் ....... ? "

நர்மதா முகம் நிறைய ஆச்சர்யப்பட்டாள்.

" என்னது....... கோயமுத்தூர் வந்திருக்காரா ....... ? "

" ஆமா "

" எதுக்கு ....... ? "

" போனாத்தான் தெரியும் "

" இப்ப நீ அவரைப் பார்க்கத்தான் கிளம்பிட்டு இருக்கியா ....... ? "

" ஆமா..... ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை ஷேர் பண்ணிக்கணுமாம்.... இங்கேயே நம்ம வீட்டுக்கே வர்றேன்னு சொன்னார். நான்தான் வேண்டாம்ன்னு மறுத்து நானே சர்க்யூட் ஹவுஸூக்கு புறப்பட்டு வர்றதா சொல்லிட்டேன். உன்னோட கார் சாவியை குடு...... ஒரு மணி நேரத்துக்குள்ளே வந்துடறேன் "

" சில்பா...... நான் ஒரு விஷயம் சொன்னா..... நீ தப்பாய் நினைச்சுக்க மாட்டியே ....... ? "

" நோ.... நோ..... தாராளமாய் கேளு "

" இந்த ராத்திரி நேரத்துல நீ தனியா புறப்பட்டுப் போறது சரியில்லை..... "

" மணி பத்துதானே ஆகுது.......? "

" இருந்தாலும்....... "

சில்பா வேறு உடைக்கு மாறி கைப்பையை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு சிரித்தாள்.

" நான் நடுராத்திரியிலேயே நடுக்காட்டுக்குப் போய் ஒரு டெரரிஸ்டை கைது பண்ணினவள். நீ பேசாமே படுத்துத் தூங்கு. தூக்கம் வரலைன்னா டி.வியில் ஏதாவது ஒரு பாடாவதி படத்தைப் பார்த்துட்டிரு...... ஆபீஸரைப் போய் பார்த்துட்டு வந்துடறேன் "

சில்பா சொல்லிக்கொண்டே நர்மதா எடுத்துக்கொடுத்த கார் சாவியை வாங்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து போர்டிகோவில் நின்றிருந்த காரை நோக்கிப் போனாள். பின்னாலேயே வந்த நர்மதா தவிப்போடு "சில்பா" என்றாள்.

" என்ன....... ? "

" எனக்கு என்னமோ தெரியலை. மனசுக்குள்ளே திக்திக்ன்னு இருக்கு. நானும் உன்கூட வரட்டுமா ....... ? "

சில்பா திரும்பிப் பார்த்து நர்மதாவை முறைத்தாள். "ஏய்...... நான் என்ன கோயிலுக்கா போறேன்..... துணைக்கு வரட்டுமான்னு கேட்கிறே..... ? இது என்னோட அஃபிஷியல் மேட்டர். என்கிட்டே ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை சொல்றதுக்காகத்தான் அவர் டெல்லியில் இருந்து புறப்பட்டு வந்திருக்கார். போன்ல அந்த விஷயத்தை சொல்லக்கூடியதாய் இருந்தா அவர் டெல்லியில் இருந்தே சொல்லியிருப்பார். மெனக்கெட்டு கோயமுத்தூர் வரமாட்டார். இதெல்லாம் எங்க டிபார்ட்மெண்ட்டோட ஸீக்ரஸி மேட்டர்ஸ்.... "

நர்மதா முணுமுணுப்பான குரலில் சொன்னாள்.

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 14

" சில்பா ! நீ சொல்றதெல்லாம் எனக்குப்புரியுது. இருந்தாலும் என் வீட்ல நீ தங்கியிருக்கும்போது உனக்கு எந்தவிதமான ஒரு அசம்பாவிதமும் நடந்துடக்கூடாதேன்னு நினைக்கிறேன் "

" உனக்கு ஒரு விஷயம் தெரியுமா நர்மதா ? நான் கோயமுத்தூர்ல இருக்கிற விஷயம் டிபார்ட்மெண்ட் பீப்பிள் யார்க்கும் தெரியக்கூடாதுன்னு சொல்லி என்னை உன்னோட வீட்ல தங்கச் சொன்னதே அந்த சி.பி.ஐ. ஆபீஸர் வைத்யாதான். நான் இப்போ இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு இருக்கிறது ஒரு விபரீதமான இன்னும் சொல்லப் போனா ஒரு வில்லங்கத்தனமான விவகாரம்தான். அதுக்காக பயந்து போய் பிரச்சினைகளை ஃபேஸ் பண்ணாமே இருக்க முடியுமா என்ன ? "

ஒரு சின்ன சிரிப்போடு சில்பா சொல்லிக்கொண்டே கார்க்குள் ஏறி உட்கார்ந்தாள். நர்மதா கேட்டைத்திறந்து வைக்க, கார் வெளியேறி சாலையின் இருட்டுக்குள் கலந்து ஹெட்லைட் வெளிச்சத்தின் உதவியோடு வேகம் பிடித்தது. அந்த இரவு பத்து மணி வேளையிலும் கோவை நகரத் தெருக்கள் போக்குவரத்து நிரம்பி காணப்பட்டது. ரோட்டோர டிபன் கடைகளில் கூட்டம் தெரிந்தது. மேம்பால வேலைகள் நடந்து கொண்டிருந்த காந்திபுரம் நூறடி சாலையில் கார் நிதான வேகத்தில் சென்று கொண்டிருந்த போது அவளுடைய செல்போன் கைப்பைக்குள் இருந்து கூப்பிட்டது.

எடுத்துப் பார்த்தாள்.

சி.பி.ஐ. ஆபீஸர் வைத்யாதான் கூப்பிட்டுக்கொண்டிருந்தார். சில்பா காரை ரோட்டோரமாய் ஒதுக்கி நிறுத்திக்கொண்டு தன்னுடைய செல்போனை எடுத்து காதில் வைத்தாள்.

" சொல்லுங்க ஸார் "

" என்னம்மா சில்பா புறப்பட்டியா ? "

" வந்துட்டிருக்கேன் ஸார்..... ஆன் த வே...... "

" இப்போ எந்த இடத்துல இருக்கேம்மா ? "

" காந்திபுரம் நூறடி ரோட்ல "

" சில்பா..... நம்ம மீட்டிங் பாயிண்ட் இப்போ சர்க்யூட் ஹவுஸ் இல்லை. ஆர்.எஸ்.புரம் பிரகாசம் ரோட்ல பழைய ஜட்ஜ் பங்களா ஒண்ணு இருக்கு..... அந்த இடத்துக்கு வந்துடு "

" என்ன ஸார் திடீர்ன்னு சேஞ்ச் ஆப் ப்ளேஸ் ? "

" அது ஒண்ணும் இல்லேம்மா. இன்னிக்கு ராத்திரி பதினோரு மணிக்கு மேல் சர்க்யூட் ஹவுஸூக்கு ஒரு மந்திரி வர்றார்ன்னு தகவல் வந்தது. அதைத் தொடர்ந்து கட்சித்தொண்டர்களோட கூட்டம் இப்பவே சர்க்யூட் ஹவுஸூக்கு முன்னாடி மாலைகளோடும் பொன்னாடைகளோடும் காத்திட்டிருக்கு. இந்த நிலைமையில் நீ அங்கே வந்து என்னப் பார்க்கறது சரியாய் இருக்காதுன்னு எம் மனசுக்குப்பட்டது. நம்ம சீஃப் டைரக்டர்க்கு தகவல் கொடுத்தேன். அவர் உடனே ஒரு அஞ்சு நிமிஷத்துக்குள்ளே பேச வேண்டியவங்க கிட்டே பேசி பிரகாசம் ரோட்ல இருக்கிற பழைய ஜட்ஜ் பங்களாவை ஏற்பாடு பண்ணிக் குடுத்துட்டார். நீ நேரா அங்கே வந்துடும்மா "

" பிரகாசம் ரோட்ல எந்த இடம் ஸார்..... லேண்ட் மார்க் ஏதாவது சொல்லுங்க..... "

" ஆல் க்யூர் மல்ட்டி ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடல்ன்னு ஒரு பெரிய மெடிக்கல் காம்ப்ளக்ஸ் கட்டிடம் ஒண்ணு இருக்கு. அது உனக்குத் தெரியுமா ? "

" தெரியும் ஸார்......பார்த்திருக்கேன் "

" அந்த கட்டிடத்துக்கு பக்கத்து ரோடு. மூணாவது கட்டிடம். ஒரு காலத்துல ஜட்ஜ்கள் மட்டும் தங்கியிருந்த பங்களா. இப்போ ரொம்பவும் பழசாயிட்டதாலே யாரும் தங்கறதில்லை..... மாசத்துல ஒரு நாள் ரெண்டு நாள் வேற மாநில அரசு அதிகாரிகள் வரும்போது மட்டும் அந்த பங்களாவை தங்கறதுக்காக அலாட் பண்ணுவாங்க. சர்க்யூட் ஹவுஸூக்கு மந்திரி வர்றதால எனக்கு இங்கே இடம் கிடைச்சிருக்கு.... நானும் இப்பத்தான் ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடி தான் வந்து சேர்ந்தேன். உடனே உனக்கு தகவல் கொடுத்துடலாம்ன்னு போன் பண்ணினேன்...... "

" இட்ஸ் ஓகே ஸார்....... இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ளே அங்கே இருப்பேன் "

" சில்பா, இன்னொரு முக்கியமான விஷயம் "

" சொல்லுங்க ஸார் "

" நீ இப்போ உன் ஃப்ரண்ட்டோட கார்லதானே வந்துட்டிருக்கே ? "

" ஆமா ஸார் "

" உன்னை யாராவது ஃபாலோ பண்றாங்களான்னு ஒரு பார்வை பார்த்துக்கோம்மா "

சில்பா சிரித்தாள்.

" எனக்குப் பின்னாடியும் ரெண்டு கண்கள் இருக்கு ஸார்..... என்னை யாரும் ஃபாலோ பண்ணலைன்னு நிச்சயமாய் என்னால சொல்ல முடியும் "

" உனக்குப் பின்னாடி இரண்டு கண்கள் இருக்கலாம். ஆனால் இரவுக்கு ஆயிரம் கண்கள் என்கிற வாசகத்தை மறந்துடாதே "

" நோ பிராப்ளம் ஸார்..... ஐ..... வில் டேக் கேர் "

" அயாம் வெயிட்டிங் " மறுமுனையில் வைத்யாவின் செல்போன் வாயை மூடிக்கொள்ள சில்பாவும் செல்போனை அணைத்துவிட்டு காரைக் கிளம்பினாள். யூ டர்ன் எடுத்து வடகோவை மேம்பாலத்தை தொட்டவள் கெளலிபிரவுன் சாலையின் எல்லைக்குள் நுழைந்தாள். போக்குவரத்தற்ற நிசப்தமான சாலைகள் எதிர்பட அவைகளில் நுழைந்து பிரகாசம் சாலையைத் தொட்டபோது நேரம் சரியாய் பதினோரு மணி.

வைத்யா சொன்ன லேண்ட் மார்க்கை கண்டுபிடித்து பழைய ஜட்ஜ் பங்களாவின் காம்பெளண்ட் கேட்டுக்கு முன்பாய் காரை நிறுத்த உள்ளேயிருந்து டார்ச் வெளிச்சத்தோடு நீலநிற யூனிஃபார்ம் அணிந்த செக்யூர்ட்டி ஒருவர் ஒடி வந்தார்.

கேட்டை அகலமாய் திறந்து வைத்து விட்டு சல்யூட் அடித்து அவர் அட்டென்ஷனில் நிற்க காரை உள்ளே செலுத்தினாள் சில்பா. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அந்த பங்களா பழைமையாக தெரிந்தாலும் அந்த இருட்டிலும் ஒரு கோட்டை மாதிரி கம்பீரம் காட்டியது. பங்களாவின் போர்டிகோவில் ஏற்கனவே ஒரு கார் நின்றிருக்க அதன் பின்னால் சீரான இடைவெளி விட்டு காரை மெளனமாக்கினாள் சில்பா.

காரை விட்டு இறங்கும்போதே சீருடை அணிந்த இன்னொரு செக்யூர்ட்டி நபர் பவ்யமாய் எதிர்பட்டு சல்யூட் வைத்தபடி சொன்னார்.

" மேடம்...... உள்ளே ஸார் காத்திட்டிருக்கார். ஹாலை ஒட்டியிருக்கிற மாடிப்படியில் ஏறினா முதல் மாடி ரெண்டாவது ரூம் "

" தேங்க்யூ........! "

சில்பா பங்களாவின் போர்டிகோ படிகளில் ஏறி பங்களாவின் ஹாலுக்குள் நுழைந்தாள். மிகவும் பெரிதான அந்த ஹால் ஒரே ஒரு ட்யூப்லைட் கொடுத்த வெளிச்சத்தில் ஒரு பழைய புகைப்படத்தைப் பார்ப்பது போல் இருந்தது. ஹாலின் இரண்டு பக்க மேற்புறச் சுவர்களில் பதவி வகித்த பழைய ஜட்ஜ்க்களின் புகைப்படங்கள் பெரிய மரச்சட்டங்களோடு தொங்கிக் கொண்டிருந்தன.

சில்பா ஹாலின் பாதி தூரத்தைக் கடந்திருந்த போது வவ்வால் ஒன்று கறுப்பு காகிதம் போல் அவளை நோக்கி வேகமாய் பறந்து வந்து விருட்டென்று விலகி இருட்டில் காணாமல் போயிற்று.

ஒரு விநாடி நேரத்திற்குள் முகம் வியர்த்துப் போன சில்பா சுற்றும் முற்றும் பார்த்தாள்.

ஒரு பனிக்கட்டியைப்போல் நிசப்தம் உறைந்து போயிருந்தது. பார்வையில் யாரும்படவில்லை.

மாடிப்படிகளின் அருகே போய் நின்று கொண்டு அண்ணாந்து பார்த்தாள். மாடியின் வராந்தா கெட்டியான இருட்டில் இருந்தது. துணிச்சலை வரவழைத்துக் கொண்டு முதல் மாடிப்படியில் காலை வைத்தாள். அதே விநாடி -

அவளுடைய செல்போன் குரல் கொடுத்தது.

(தொடரும்)

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 ]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X