For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலீஸூக்கு இந்தவிஷயம் தெரியுமா .. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (8)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

வளர்மதி சுற்றும் முற்றும் பார்த்தபடி கட்டிடத்தின் உட்பகுதியில் நுழைந்து லிப்ட்டை நோக்கி நடைபோட எதிரில் உயரமாய் திடகாத்ரமான செக்யூரிட்டி நபர் ஒருவர் எதிர்பட்டார். கையை மறித்தாற்போல் வைத்துக் கொண்டு கேட்டார்.

" எக்ஸ்கியூஸ் மீ.....யாரைப் பார்க்கணும் ? "

" மிஸ்டர் மனோஜ்..... "

" டாக்ஸிகாலஜி டிபார்ட்மெண்ட் ? "

" எஸ் "

" அப்பாயிண்மெண்ட் ? "

" வாங்கிட்டேன்.... சரியா ஆறுமணிக்கு வரச் சொன்னார் "

" உங்க நேம் ? "

" வளர்மதி "

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 8

" ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க " என்று சொன்னவர் தன் கையில் வைத்து இருந்த வாக்கி டாக்கி மாதிரியான கருவியில் ஒரு எண்ணை அழுத்திவிட்டு மெல்லிய குரலில் பேசிவிட்டு வளர்மதியிடம் திரும்பினார். வாக்கி டாக்கியை அணைத்துக் கொண்டே கேட்டார்.

" இதுக்கு முன்னாடி இங்கே வந்து இருக்கீங்களா ? "

" ஒரு தடவை வந்திருக்கேன்.... ஆனா அந்த சமயத்துல நான் வந்தது. ஃபாரன்ஸிக்கில் இருக்கிற வேற ஒரு ஆபீஸரைப் பார்க்க ...... "

" இப்ப நீங்க மிஸ்டர் மனோஜைப் பார்க்க வந்தது. எதுக்காக....? பர்ப்பஸ் ஆஃப் விசிட் ? "

வளர்மதி மென்மையாய் புன்னகை பூத்தாள். மனோஜ் ஈஸ் மை காலேஜ்மேட்....திஸ் ஈஸ் ஏ ஃப்ரண்ட்லி விசிட் அவ்வளவுதான்... "

" இட்ஸ் ஒ.கே.....அதோ அங்கே இருக்கிற லெட்ஜர்ல உங்க பேரையும் போன் நெம்பரையும் எழுதி வெச்சுட்டு போங்க. மூணாவது மாடிதான் டாக்ஸிகாலஜி டிபார்ட்மெண்ட். மிஸ்டர் மனோஜ் அங்கேதான் இருப்பார் "

வளர்மதி அவர்க்கு ஒரு தேங்க்யூவை உதிர்த்துவிட்டு சற்று தள்ளி மேஜையின் மேல் விரித்த நிலையில் வைக்கப்பட்டிருந்த அந்தக் கனமான லெட்ஜரில் தன்னுடைய பெயரையும், போன் நெம்பரையும் குறித்து வைத்துவிட்டு லிஃப்ட்டை நோக்கிப் போனாள்.

மூன்றாவது மாடியை நோக்கி உயர்ந்தவள் லிஃப்டினின்றும் வெளிப்பட்டதுமே "TOXICOLOGY" என்ற பெயர்ப்பலகையுடன் பாதி திறந்திருந்த அறைக்கதவு பார்வைக்குத் தட்டுப்பட்டது. வளர்மதி கதவை நெருங்கி அதை மெல்லத் தள்ள உள்ளே ஒரு பெரிய அறை நீளமான மேஜைகளோடு தெரிய கண்ணாடி ஷெல்ஃப்களில் நிறம் நிறமாய் சிறியதும் பெரியதுமான குப்பிகள்.

அறையின் மூலையில் போடப்பட்டு இருந்த கண்ணாடி மேஜைக்குப் பின்னால் இளநீல வண்ண யூனிஃபார்ம் மாதிரியான உடை அணிந்து இருந்த அந்த அழகான இளைஞன் வளர்மதியைப் பார்த்ததும் அங்கிருந்தபடியே கையை உயர்த்தினான்.

" அயாம் ஹியர்.....வா வளர்மதி "

வளர்மதி சிரிப்போடு அவனை நோக்கிப்போனாள்.

" ஹலோ மனோஜ் "

" உனக்காகத்தான் வீட்டுக்குப் போகாமே வெயிட் பண்ணிட்டிருக்கேன் "

" ஸாரி மனோஜ்...."

" நோ ப்ராப்ளம்... முதல்ல உட்கார் "

வளர்மதி அவனுக்கு எதிரில் இருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்தாள். மனோஜ் கேட்டான்.

" ஆபீஸ் முடிஞ்சு நேரா வர்றியா ? "

" ஆமா "

" ஒரு காப்பி சாப்பிடலாமா ? "

" அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். எனக்கு ஒரு அரைமணி நேரம் உன்கிட்டே பேசணும்..... முடியுமா ? "

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 8

ஒரு மணி நேரமே பேசலாம்...... என்ன விஷயம்ன்னு சொல்லு ... ! "

வளர்மதி சில விநாடிகள் மெளனமாய் இருந்து விட்டு மெல்லப் பேச்சை ஆரம்பித்தாள்.

" மனோஜ் காலேஜ்டேஸ்ல நீயும் நானும் தான் படிப்பு உட்பட எல்லா ஆக்டிவிட்டிஸிலும் டாப்பர்ஸாய் இருந்தோம்... காலேஜ் எதுமாதிரியான கல்ச்சுரல் ப்ரோக்ராம் நடந்தாலும் நீயும் நானும் அதுல பங்கெடுத்துக்குவோம். காலேஜூக்குப் பின்னாடி பொட்டல்காடாய் இருந்த ஒரு ஏக்கர் நிலத்தை பண்படுத்தி நாம நட்ட மரக்கன்றுகள் இன்னிக்கு பெரிய பெரிய மரங்களாய் வளர்ந்து அந்த இடமே இன்னிக்கு ஒரு பசுமை பூங்காவாய் மாறியிருக்கு.... அப்புறம் ஆதரவற்ற முதியோர் இல்லங்களுக்கு போய் அவங்களோட தேவைகளைப் பூர்த்தி பண்ணியிருக்கோம். அது எல்லாமே உனக்கு ஞாபகம் இருக்கும்ன்னு நினைக்கிறேன் "

மனோஜ் சிரித்தான்.

" நல்லாவே ஞாபகம் இருக்கு.... இப்ப எதுக்காக அந்த ஃப்ளாஷ்பேக் எல்லாம் ?"

" காலேஜ் படிப்பை முடிச்ச பின்னாடியும் என்னால அதுமாதிரியான சேவைகளை எல்லாம் என்னால நிறுத்த முடியலை. பேப்பர்ல சமூக நலன் சார்ந்த செய்திகள் வரும்போது அதுல நானாகவே போய் பங்கெடுத்துக்கறதும் உண்டு "

" வளர்மதி ...! நீ இப்படி பேசறதை கேட்கும்போது எனகு சந்தோஷமாய் இருக்கு. ஆனா என்னால அப்படி தொடர்ந்து சோசியல் ஆக்டீவிடீஸில் ஈடுபட முடியலை. காரணம் என்னோட குடும்பச் சூழ்நிலை. என்னோட பெரியப்பா ஃபாரன்ஸிக் டிபார்ட்மெண்ட்ல இருந்ததால மேற்கொண்டு ஃபாரன்ஸிக் சயின்ஸ் கோர்ஸ் படிச்சு இந்த வேலைக்கும் வந்துட்டேன். இந்த வேலையில் சேர்ந்த பிறகு ஒரு கல்யாணத்தையும் பண்ணிகிட்டு குடும்பஸ்தனாகவும் மாறிட்டேன். ஆனா நீ கல்யாணமான பின்னாடியும் சோசியல் ஆக்டீவிடீஸை கண்டின்யூ பண்றது எனக்கு சந்தோஷமாய் இருக்கு..... ! சொல்லு... என்கிட்டே இருந்து உனக்கு எது மாதிரியான உதவி வேணும் ?"

" எனக்கு உன்னோட டிபார்ட்மெண்ட்டிலிருந்து ஆஃப் த ரெக்கார்டாய் ஒரு தகவல் வேணும் ?"

" எது சம்பந்தமாய் ?"

" ரிசின் என்கிற பேர்ல விஷம் ஏதாவது இருக்கா ?"

" ம்.... இருக்கு "

" அது எதுமாதிரியான விஷம் ?"

" ஒரு மோசமான விஷம்.... உயிரைப் பறிக்கக்கூடியது. எதுக்காக இப்ப அந்த விஷத்தைப்பற்றி கேட்கிறே ? "

" மனோஜ் ...! நீ கேட்ட கேள்விக்கான பதிலை நான் கடைசியில் சொல்றேன். இப்ப எனக்கு அந்த " ரிசின் " என்கிற பாய்ஸனைப் பற்றின விபரங்கள் வேணும் "

மனோஜ் பக்கத்தில் இருந்த ஒரு அலமாரிக்குச் சென்று ஃபைல் ஒன்றை எடுத்து வந்து அதன் சில பக்கங்களைப் புரட்டிவிட்டு ஒரு பக்கத்தை வளர்மதிக்குக் காட்டினான். " இந்தப் பக்கத்தைப்படி.... அந்த " ரிசின் எப்படிப்பட்ட விஷம் என்கிற விஷயம் உனக்குப் புரியும் "

வளர்மதி ஃபைலை வாங்கி அதில் பார்வையைப் பதித்தாள். ஆங்கில வாசகங்களைப்படிக்கபடிக்க மனதுக்குள் தமிழாக்கம் ஒடியது.

ஆமணக்கு கொட்டைக்குள் இருக்கும் ரிசின் "RICIN" என்கிற மூலக்கூறு அபாயகரமான விஷங்களில் ஒன்று என்பது அதிகாரப்பூர்வமானது.

எதிர்காலத்தில் உயிரியல் போர் நடந்தால் இந்த ரிசின் விஷம் அந்தப் போரில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்று டல்லாஸிஸ் இருக்கும் டெக்சாஸ் சவுத் வெஸ்டரன் மருத்துவ மையத்தில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிபடச் சொல்கிறார்கள். ரிசினில் ஒரு அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் இது மிகவும் சுலபமான முறையில் தயாரிக்கப்படகூடியது மேலும் இதை சுலபமான முறையில் சேமித்தும் வைக்கலாம் என்பதுதான். இதை தயாரிக்க பெரிய மருத்துவ நிபுண திறன் வேண்டியதில்லை. ஆமணக்கு விதைகளை சரியான முறையில் காய வைத்தும், அரைத்தும் எண்ணெய் எடுத்த பின்பு அதைப் பாதுகாப்பான முறையில் சேமித்து வைத்தால் போதும். இந்த விஷத்தை உணவிலோ நீரிலோ கலந்து உட்கொண்டால் மரணம்தான். இந்த விஷம் ரத்தத்தில் கலந்ததும் அதன் மூலப்பொருள்கள் உடனே உடைந்து மரணத்தை உண்டாக்கும். இது சயனைடு விஷத்தை விட வீரியமானது"

வளர்மதி படிப்பதை நிறுத்திவிட்டு வியர்வை மின்னும் முகத்தோடு மனோஜை ஏறிட்டாள்.

" என்ன மனோஜ்...... ஆமணக்கு விதைக்குள்ளே இப்படியொரு விபரீத விஷம் ? "

" எஸ்..... இயற்கையே தயாரிச்சு வெச்சிருக்கிற விஷம் அது..... ! "

" அப்படீன்னா .....கடைகளில் விற்கக்கூடிய விளக்கெண்ணெயில் அந்த விஷம் இருக்காதா ? "

" ரிசின் பிரிக்கப்பட்ட விளக்கெண்ணை அது. அதனால எந்த ஆபத்தும் இல்லை " என்று சொல்லிச் சிரித்த மனோஜ் கேட்டான்.

" சரி..... எதுக்காக தேடல்......யாராவது ரிசின் விஷத்தை மிஸ் யூஸ் பண்றாங்களா ? "

" எஸ் "

" யாரது ? "

" ஸாரி மனோஜ் .... பர்சன் யார்ன்னு நான் இப்போதைக்கு சொல்ல முடியாது. ஆனா இந்த விஷத்தால எதுமாதிரியான உயிரிழப்புகள் நேரிட்டது என்கிற விஷயத்தை மட்டும் உன்கிட்டே ஷேர் பண்ணிக்கிறேன் "

" இட்ஸ் ஒ.கே. சொல்லு "

" கடந்த நாலு வருஷத்துக்கு முந்தி ஈரோட்டில் ஒரு பெரிய கல்யாண மண்டபத்தில் 18 ஜோடிகளுக்கு இலவசமாய் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கல்யாணம் நடந்த ரெண்டு வருஷத்துக்குள்ளே அதுல மூணு ஜோடிகள் தற்கொலை பண்ணிகிட்டு இறந்து போயிருக்காங்க. மேலும் அதே மாதிரி ரெண்டு வருஷத்துக்கு முந்தி நடந்த இலவச திருமணங்களில் ரெண்டு ஜோடி போன மாசம் பத்தாம் தேதி தற்கொலை பண்ணியிருக்காங்க "

மனோஜ் அதிர்ச்சியுடன் நிமிர்ந்தான்.

" அதாவது மொத்தம் பத்து பேர் செத்துப்போயிருக்காங்க "

" எஸ்.....இந்த மரணங்களில் உறைந்து போயிருக்கிற ஒரு உண்மை என்னான்னா தற்கொலை பண்ணிகிட்ட பத்து பேருமே ரிசின் விஷத்தை சாப்பிட்டு தங்களோட முடிவைத் தேடிக்கிட்டதுதான்..... இதுல ஒரு பெண் அரவணைப்பு ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்தவள். அவ பேரு பூங்கோதை "

மனோஜ் பெருமூச்சுவிட்டான்.

" ஹைலி பேதடிக்.... போலீஸூக்கு இந்த ரிசின் விஷயம் தெரியுமா ? "

" தெரியும்...... ஆனா போலீஸாலே செயல்படாத நிலைமை.... "

" புரியுது...... பணம், அரசியல் "

" அதே தான் "

" சரி...! இந்த விஷயத்துல நான் உனக்கு எந்த வகையில் உதவணும்ன்னு சொல்லு..... ரெண்டு பேரும் பார்ட்னராயிருவோம். பணம், அரசியல் எதுவாக இருந்தாலும் சரி, உடைப்போம்... நாளைக்கு வா.... பேசலாம் "

"மனோஜ்.... ! இப்போதைக்கு கொஞ்சம் பதுங்குவோம்... நான் இன்னும் கொஞ்சம் கூடுதல் விபரங்களோடு அடுத்த வாரத்துல ஒரு நாள் உன்னை வந்து சந்திக்கிறேன் "

" அதுவும் சரிதான் "

"அப்புறம்... ஒரு முக்கியமான விஷயம் மனோஜ். நான் இப்படிப்பட்ட ஆக்டீவிடீஸில் ஈடுபட்டு இருக்கிற விஷயம் என் ஹஸ்பெண்ட்டுக்கோ, மாமனார், மாமியார்க்கோ, என்னோட பேரண்ட்ஸ்க்கோ தெரியாது. நீ எனக்கு போன் பண்ணிடாதே. நானே உனக்கு போன் பண்றேன். பேசறேன்" பேசியவாறே வளர்மதி எழுந்து கொண்டாள்.

...............................

டி.வியில் நியூஸ் போய்க் கொண்டிருந்தது.

காஷ்மீர் விவகாரத்தில் இனி பேச்சு வார்த்தையே கிடையாது. இந்தியா திட்டவட்டம். வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை. தங்கம் விலை உயர்ந்தால் கவலையில்லை. அரிசி விலை உயர்ந்தால்தான் கவலைப்பட வேண்டும் அமைச்சர் பேச்சு. இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியா தீவுகளை வீழ்த்தி இந்தியா அபாரம்.

செய்தி வாசிப்பை உன்னிப்பாய் கேட்டுக்கொண்டிருந்த அபுபக்கர் தன் செல்போனின் டயல்டோனைக் கேட்டதும் எடுத்து அழைப்பது யார் என்று பார்த்துவிட்டு காதுக்கு ஒற்றி குரல் கொடுத்தார்.

"சொல்லு மனோஜ் "

(தொடரும்)

[ பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4, பகுதி 5, பகுதி 6, பகுதி 7]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X