• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ம....ம.....மனோஜ் இவர் சொல்றது?.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (16)

|

- ராஜேஷ்குமார்

மனோஜைப் பார்த்ததும் சில்பா தன் உடம்பின் சகல அவயங்களிலும் அதிர்ந்து போனவளாய், தன்னையும் அறியாமல் எழுந்து நின்றாள். முகம் எண்ணெய் பூசிய தினுசில் வியர்த்து கொண்டிருக்க மனோஜ் நீங்களா ? என்ற கேள்வி அவளுடைய உதடுகளிடனின்றும் உதிர்ந்தது.

மனோஜ் ஒரு சின்ன சிரிப்போடு சில்பாவை நெருங்கினான்.

" வணக்கம் மேடம்..... என்னை இந்த நேரத்துல இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலையில் என்னை எதிர்பார்த்து இருக்கமாட்டீங்க... ஆனா என்ன செய்யறது ? சில விஷயங்களை இப்படிப்பட்ட நேரங்களில்தான் வெளிப்படுத்த வேண்டியிருக்கு...... "

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 16

சில்பாவின் நிலைத்துப்போன கண்களில் கலவரம் நிரம்பியிருக்க, வைத்யாவை காட்டியபடி கேட்டாள்.

" ம....ம.....மனோஜ் இவர் சொல்றது ? "

" எல்லாம் உண்மை. உன்னோட பாஸ் பொய் சொல்வாரா என்ன ? அந்த கட்டுச்சோற்று எலி நான்தான். அந்த போலீஸ் இன்ஃபார்மர் வளர்மதியும், போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரியும் என்னை எந்த அளவுக்கு நம்பினாங்களோ அதே சதவீத அளவுக்கு நீங்களும் என்னை நம்பினதுதான் என்னோட மிகப்பெரிய அதிர்ஷ்டம் ? "

சில்பா பதட்டத்தோடு சுற்றும் முற்றும் பார்க்க வைத்யா சிரித்தபடி அவளை நெருங்கி நின்றார். சுவாசத்தில் விஸ்கி வாசம்.

" என்னம்மா சில்பா...... இப்படி பார்க்கிறே......நான் ஏற்கனவே சொன்ன மாதிரி உனக்கு இனிமேல்தான் அதிர்ச்சிகரமான விஷயங்கள் ஒவ்வொண்ணா காத்திட்டிருக்கு...... அதையெல்லாம் நீ எப்படி ஜீர்ணம் பண்ணிக்கப் போறேன்னு தெரியலை..... ! "

சில்பாவின் முகம் பீதியில் ரத்தமில்லாமல் வெளிறிப்போயிருக்க சிரமமாய் எச்சிலை விழுங்கிவிட்டு பேசினாள்.

" ஸ....ஸ.....ஸார்..... நீங்க எப்படி இப்படி......... ? "

" தலைகீழாய் மாறினேன்னு தெரியாதுன்னு சொல்ல வர்றியா...... ? என்னம்மா செய்யறது ...... போன வாரம் வரைக்கும் நானும் நம்ம சி.பி.ஐ. டிபார்ட்மெண்ட்டுக்கு வாலை ஆட்டாத குறையாய் நன்றியோடுதான் இருந்தேன். ஆனா எனக்கு மேலே இருக்கிறவங்களும் அப்படியில்லையே...... ஒவ்வொருத்தரும் 500 கோடி 1000 கோடி ரூபாய் சம்பாதிக்கணும்ன்னு டார்கெட் வெச்சு செயல்படும் போது அவங்களுகு குறுக்கே நின்னு நீதி போதனை பாடம் நடத்த முடியாதே. அப்படியும் பாடம் நடத்த முயற்சி பண்ணினேன். அந்த முயற்சிக்கு எனக்கு எதுமாதிரியான ரிப்ளை கிடைச்சுது தெரியுமா ...... ? "

என்ன என்பது போல் பயமும் குழப்பமும் மண்டிய முகத்தோடு வைத்யாவைப் பார்த்தாள் அவள். அவர் தன் சட்டைப் பாக்கெட்டில் மடித்து வைத்து இருந்த ஒரு பழுப்பு நிறத்தாளை எடுத்து நீட்டினார்.

" டேக் ஏ வ்யூ திஸ் ரிப்போர்ட்" சில்பா நடுங்கும் விரல்களோடு அந்தத் தாளை வாங்கினாள். தாளின் மேல்பக்கம் "அடாப்ஸி ரிப்போர்ட் டெக்ஸ்ட்" என்ற ஆங்கில வார்த்தைகள் தெரிய அதற்குக்கீழே பிரேதப் பரிசோதனை அறிக்கை என்ற தமிழ் வாசகம் சிறிய எழுத்துகளில் போனால் போகிறது என்று அச்சாகியிருந்தது.

வியர்வையின் சதவீதம் முகத்தில் அதிகமாயிருக்க சில்பா உறைந்த பார்வையோடு அதில் அச்சாகியிருந்த விபரங்களை படிக்க ஆரம்பித்தாள்.

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 16

சில்பா போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை படிப்பதை நிறுத்திவிட்டு காய்ந்து போன உதடுகளோடு கேட்டாள்.

" யா .....யார் ஸார் பிருந்தா ? "

" என்னோட டாட்டர். நாலு வருஷத்துக்கு முன்னாடிதான் கல்யாணமாச்சு. ரெண்டரை வயசுல ஒரு பேத்தி இருக்கா. மருமகன் விஜயகுமார் ஒரு ஐ.டி.கம்பெனியில் சீஃப் ப்ரோம்ராமர். அழகான அன்பான குடும்பம் "

" இந்த விபத்து சம்பவம் எப்ப ஸார் நடந்தது ? "

" சம்பவம் இன்னும் நடக்கலை "

சில்பா திடுக்கிட்டுப் போனவளாய் வைத்யாவைப் பார்த்தாள்.

" அ.....அ.....அப்புறம் எப்படி ஸார் இப்படி ஒரு போஸ்ட்மார்ட்டம்? "

" விபத்து நடந்த தேதிக்கு நேரா என்ன எழுதியிருக்கு ? "

சில்பா பார்த்துவிட்டு சொன்னாள் " தேதியே போடலையே? "

" தேதி எதுவும் போடாமே இப்படியொரு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை யாரோ தயார் பண்ணி எனக்கு போஸ்ட்ல அனுப்பி வெச்சுட்டு உடனே ஒரு நபர் போன் பண்ணிப் பேசினான். இப்படியொரு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை உண்மையிலேயே உங்க வாழ்க்கையில் நீங்க பார்க்காமே இருக்கணும்ன்னா உங்க சி.பி.ஐ.யில் வேலை செய்யற ஸ்க்ரூட்னைஸிங் ஆபீஸர் சில்பா எனக்கு உயிரோடு வேணும்.. அதுக்கான ஏற்பாட்டை உங்களால்தான் பண்ண முடியும்ன்னு சொன்னான். அவன் அப்படி சொன்னதும் எனக்கு முதல்ல கோபம் வந்தது. இது மாதிரியான மிரட்டலுக்கெல்லாம் சி.பி.ஐ. பயப்படாதுன்னு சொல்லி ரிஸீவரை வெச்சுட்டேன். அன்னிக்கு சாயந்தரம் நாலு மணி சுமார்க்கு என்னோட டாட்டர் பிருந்தா எனக்கு போன் பண்ணி அவளோட காரை யாரோ ஒருத்தன் பைக்ல ஃபாலோ பண்றதாய் சொன்னாள். ஹெல்மெட் போட்டு இருந்ததால அந்த நபரோட முகத்தைப் பார்க்க முடியலைன்னும் ஆனா பைக்கோட ரெஜிஸ்ட்ரேஷன் நெம்பரைப் பார்த்து நோட் பண்ணிகிட்டதாகவும் சொல்லி அந்த நெம்பரையும் எனக்கு "வாட்ஸ் அப்" ல அனுப்பி வெச்சா. நான் அந்த நெம்பரை "ஆர்.டி.ஓ.ஆப்" மூலமாய் சர்ச் பண்ணிப் பார்த்த போது அப்படியொரு நெம்பரே ரெஜிஸ்ட்ரேஷன் பதிவில் இல்லை என்கிற உறுதி செய்யப்பட்ட பதில் எனக்கு வந்தது "

வைத்யா சில விநாடிகள் பேச்சை நிறுத்திவிட்டு மினரல் வாட்டர் பாட்டிலை எடுத்து ஒரு வாய் தண்ணீர் அருந்திவிட்டு சோபாவுக்கு போய் சாய்ந்தபடி மறுபடியும் பேச்சைத் தொடர்ந்தார்.

" அதுக்கப்புறமாய்த்தான் என்னோட மனசுக்குள்ளே ஒரு பயம் வந்தது. இந்த விஷயத்தை மீடியாக்களுக்கு கொண்டு போனால் அதனோட விளைவுகள் நிச்சயமாய் மோசமாய் இருக்கும்ன்னு என்னோட உள்ளுணர்வு வார்ன் பண்ணினதால ரெண்டு நாள் மெளனமாய் இருந்தேன். மூணாவது நாள் அந்த சம்பவம் நடந்தது. என்னோட பொண்ணும் மாப்பிள்ளையும் ரீகல் சர்க்கிளில் ஷாப்பிங் பண்றதுக்காக கிளம்பி போனவங்க காரை பார்க் பண்ண சரியான இடம் கிடைக்காத காரணத்தால ரெண்டு தெரு தள்ளி ஆள் நடமாட்டம் இல்லாத தெருவுல காரை நிறுத்திவிட்டு போயிருக்காங்க. ஷாப்பிங் முடிச்சுட்டு ஒரு மணி நேரம் கழிச்சு கார்க்குப் பக்கத்துல வந்ததும் அதிர்ந்து போயிட்டாங்க. காரணம் காரோட கண்ணாடி ஜன்னல்கள் எல்லாம் தாறுமாறாய் உடைஞ்சு இருந்ததுதான். அந்த விபரத்தை என் பொண்ணு பிருந்தா போன் பண்ணி எனக்கு சொன்னா. நான் உடனே நிலைமையைப் புரிஞ்சுகிட்டேன். ஆனா எனக்கு வந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் மிரட்டல் பற்றி எதுவுமே நான் என் பொண்ணுகிட்டயோ மாப்பிள்ளைகிட்டயோ சொல்லலை. ஒரு போலீஸ் கம்ப்ளையண்ட் மட்டும் கொடுக்கச் சொன்னேன்"

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 16

சில்பா விக்கித்துப் போய் நின்றிருக்க மனோஜ் இப்போது குறுக்கிட்டு பேசினான்.

" மீதியை நீங்க சொல்றீங்களா...... இல்லை நான் சொல்லட்டுமா ஸார் "

" நீயே சொல்லு மனோஜ். அதுக்குள்ளே நான் ஒரு பெக் போட்டுக்கறேன்" என்று சொன்ன வைத்யா பக்கத்தில் இருந்த சுவர் அலமாரிக்குப் போய் அதன் கதவைத் திறந்து விஸ்கி பாட்டிலை எடுத்துக் கொண்டார்.

மனோஜ் சில்பாவைப் பார்த்து சிரித்தான்.

" என்ன மேடம்...... வைத்யா ஸார் சொன்னதை எல்லாம் கேட்கும் போது சினிமாவில் பார்க்கிற சம்பவங்கள் மாதிரி இருக்கா.... ? நான் உங்களுக்கு ஒரு உண்மை சொல்லட்டுமா ,,,,,,, சினிமாவில் வர்ற சம்பவங்களை விட நிஜ வாழ்க்கையில் வர்ற சம்பவங்கள்தான் எதிர்பாரதவிதமாய் இருக்கும். உங்களுக்கு பாஸாய் இருக்கிற வைத்யா அவர்க்கு பாஸாய் இருக்கிற சி.பி.ஐ. டைரக்டர் ஹரிகோவிந்த்கிட்டே போய் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் மிரட்டலைக் காட்டி விபரத்தைச் சொன்னதும் அவர் சிரிச்சுகிட்டே சிங்கம் புலி மாதிரியான மிருகங்கள் உயிரோடு இருக்கணும்ன்னா சில புள்ளிமான்கள் வேட்டையாடப்-படுவதில் தப்பே இல்லைன்னு சொல்லி உங்க உயிருக்கு ஈஸ்வர்

50 கோடி ரூபாய் விலையையும் நிர்ணயம் பண்ணிட்டார். இப்ப நாங்க எல்லாரும் ஒரு கூட்டணி. இன்னும் கொஞ்ச நேரத்துல ஈஸ்வரே இங்கே வந்து உங்களுக்கு ஒரு ஹலோ சொல்லப் போறார். நீங்க இன்னும் எத்தனை மணி நேரம் உயிரோடு இருக்கணும்ங்கிறதையும் அவரதான் முடிவு பண்ணுவார் ! "

மனோஜ் கேலியும் கிண்டலுமாய் பேசிக்கொண்டிருக்கும் போதே சில்பா புயல் வேகத்தில் குனிந்து அந்த டீபாயைத்தள்ளிவிட்டு, அதே வேகத்தில் சோபாவின் மேல் ஏறி மறுபக்கம் முதுகைக் காட்டியபடி நின்றிருந்த வைத்யாவின் பிடரியில் பலங்கொண்ட மட்டும் ஒங்கி அடித்தாள். "ர்ர்ர்ரப்ப்ப்"

ஷீவாஸ் ரீகல் விஸ்கியின் கண்ணாடிக்குடுவையை கையில் வைத்துக்கொண்டு புனல்வடிவ ஸ்மோக்கி கிளாஸ் கண்ணாடி டம்ளரில் விஸ்கி ஊற்றிக்கொண்டு இருந்த வைத்யா சில்பா அடித்த அடியில் பொறி கலங்கிப்போனவராய் அப்படியே பின்னுக்கு சாய்ந்து மல்லாந்தார்.

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 16

கையில் வைத்து இருந்த விஸ்கி நிரம்பிய கண்ணாடிக்குடுவை தெறித்து தரையில் தன் மண்டையை உடைத்துக்கொள்ள விஸ்கி எல்லாப்பக்கமும் தெளித்தபடி சில்லுச்சில்லாய் சிதறியது.

மனோஜ் நிலைமையை உணர்ந்து சில்பாவின் மேல் பாய்வதற்குள் அவள் சுவரோரமாய் விழுந்து கிடந்த உடைந்த விஸ்கி பாட்டலின் நீளமான ஒரு அடி நீள கண்ணாடி சில்லை கையில் எடுத்துக்கொண்டு மனோஜை நோக்கி நீட்டினாள்.

மனோஜ் பத்தடி தூர வித்தியாசத்தில் அப்படியே நின்றான். கீழே விழுந்து கிடந்த வைத்யா தட்டுத்தடுமாறி எழுந்து சில்பாவை நோக்கி வர முயல அவரை நோக்கியும் அந்தக்கூர்மையான கத்தி போன்ற நீண்ட கண்ணாடி சில்லை அவரை நோக்கித் திருப்பினாள்.

" ரெண்டு பேர்ல யார் பக்கத்துல வந்தாலும் சரி இந்த கண்ணாடி சில் அவங்க வயித்துல இறங்கிவிடும். உங்க ரெண்டு பேர் மனசிலும் எந்த அளவுக்கு இரக்கம் இல்லையோ அதே அளவுக்கு என்கிட்டேயும் இல்லை.... ரெண்டு பேரும் அதே இடத்தில் அசையாமல் நிற்கணும் " சில்பா சொல்லிக்கொண்டே சற்றே பின்வாங்கி சுவர்க்கு சாய்ந்து கொண்டாள். வலது கையில் அந்த கண்ணாடி சில்லை வைத்துக்கொண்டே இடது கையை தன் இடுப்பின் மறைவுக்குக் கொண்டு போய் செல்போனை எடுத்தாள்.

வலது கையில் கண்ணாடி சில்லை உயர்த்திப் பிடித்துக்கொண்டு வைத்யாவையும், மனோஜையும் ஒரு ஜாக்கிரதை பார்வை பார்த்துக் கொண்டே போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரியின் செல்போனை தொடர்பு கொண்டாள்.

உடனே ரெக்கார்ட்ட வாய்ஸ் கேட்டது. " நீங்கள் டயல் செய்த எண்ணை தற்போது தொடர்பு கொள்ள முடியாது"

ஒரு விநாடி திடுக்கிட்ட சில்பா அடுத்த விநாடியே வளர்மதியின் செல்போன் எண்ணை பதட்டத்தோடு தொடர்பு கொண்டாள். அதிலும் ரெக்கார்ட்ட வாய்ஸ் கேட்டது.

"நீங்கள் அழைக்கும் நபரின் எண்ணானது தற்போது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது"

(தொடரும்)

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 ]

 
 
 
English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X