For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விபரீதங்கள் இங்கே விற்கப்படும் .. (2)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

வளர்மதியின் கையில் முளைத்த பிஸ்டலைப் பார்த்ததும் முகம் வெளிறி உடம்பு நடுங்கிப் போனவராய் மெல்ல எழுந்து நின்றார் ஈஸ்வர். தொண்டைக்குழி அவஸ்தையில் துடித்து, வார்த்தைகளை சிரமப்பட்டு வெளியேற்றியது.

"நீ....நீ...... யாரு.....எதுக்காக என்னை? " அவர் திணறலோடு பேச வளர்மதி சிரித்தாள்.

" என்ன ஸார் பயந்துட்டீங்களா.... ? இது நிஜமாவே துப்பாக்கி கிடையாது. ஃபெஸ்டீவ் கன் ......இப்ப பாருங்க என்ன நடக்குதுன்னு" சொன்ன வளர்மதி தன் கையிலிருந்த அந்த துப்பாக்கியை உயர்த்தி மேல் நோக்கி சுட்டாள்.

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 2

"டொப்" என்று ஒரு சத்தம்.

அந்த சத்தத்தைத் தொடர்ந்து தங்கமயமான காதிதத் துணுக்குகள் ஒரு சின்ன மழை போல் பொழிந்து ஈஸ்வர் உடம்பை சில விநாடிகள் மொய்த்து விட்டு உதிர்ந்தது.

" ஹேப்பி பர்த்டே ஸார்..... "

ஈஸ்வர் திகைப்பிலிருந்து மீண்டார். சற்றே கோபம் மேலிட கேட்டார்.

" என்னம்மா...... இதெல்லாம் ? "

"ஸாரி ஸார்...... எந்த ஒரு விஷயத்தையும் ஸ்பெஷலாய் பண்றதுதான் என்னோட பாணி. இது ஒரு வகையில் பார்த்தா தப்புத்தான். ஆனா வாழ்க்கையில் ஒரு "த்ரில்" இருந்தால்தான் ஒரு ரசனையோடு வாழ முடியும்...!"

" இதோ பார் ..... நீ யார்ன்னு எனக்குத் தெரியாது. இன்னிக்குத்தான் உன்னை முதல் தடவையாய் பார்க்கிறேன். என்னோட பிறந்தநாள் உனக்கு எப்படி தெரிஞ்சுது. நீ எதுக்காக எனக்கு வாழ்த்துச் சொல்லணும்....... ? "

" உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல காரணம் இருக்கு ஸார்"

" என்ன காரணம் .... ? "

வளர்மதி தன் கையோடு கொண்டு போயிருந்த கைப்பையைப் பிரித்து ஒரு நாளிதழை எடுத்து அதன் இரண்டாவது பக்கத்தில் வெளியாகியிருந்த செய்தியைக் காட்டினாள்.

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 2

" ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்த இந்த நியூஸைப் படிங்க ஸார் "

ஈஸ்வர் தன் ரிம்லஸ் கண்ணாடியை சரிப்படுத்திக் கொண்டு படித்தார்.

20 லட்ச ரூபாய் செலவில்

9 ஏழைப்பெண்களுக்கு திருமணம் செய்து வைத்த

தொழில் அதிபர் ஈஸ்வர்

செய்தியைப்படித்து முடித்த ஈஸ்வர் உதட்டில் அரும்பிய ஒரு புன்னகையுடன் வளர்மதியை ஏறிட்டார்.

" ஓ...... இதுதான் காரணமா ? "

" என்ன ஸார். இவ்வளவு அலட்சியமா சொல்றீங்க ? இருபது லட்ச ரூபாய் செலவு பண்ணி ஒன்பது ஏழைப்பெண்களுக்கு கல்யாணத்தைப் பண்ணி வெச்சிருக்கீங்க. அவனவன் ஒரு பத்து ரூபாய் நோட்டை கோயில் உண்டியலில் போட்டுவிட்டு சுற்றும் முற்றும் பெருமையோடு பார்க்கிற காலம் இது "

" இதுல பெருமை பட என்னம்மா இருக்கு ? நான் பண்ணிட்டிருக்கிற பிசினஸில் எதிர்பாராதவிதமாய் ஒரு 20 லட்ச ரூபாய் அதிகப்படியாய் லாபம் வந்தது. அந்தப்பணத்தை உபயோககரமான முறையில் செலவு பண்ணனும்ன்னு நினைச்சேன். ஒரு ஜோஸியர்கிட்டே கேட்டேன். 9 கன்னிக் கடன்களை தீர்த்து வைன்னு சொன்னார். பெத்த பெண்களுக்கு கல்யாணத்தை பண்ணி வைக்க முடியாமல் தவிக்கிற குடும்பங்களைக் கண்டுபிடிச்சு அந்தப் பெண்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சேன். இதைப் பத்திரிக்கைகாரங்க பெரிய விஷயமா நினைச்சு ஒரு நியூஸாய் போட்டுட்டாங்க...... "

வளர்மதி சிரித்தாள்.

"ஸார்.... உங்களை மாதிரியே எல்லாப் பணக்காரர்களும் இருந்துட்டா எந்தப் பெண்ணுமே முதிர்கன்னியாய் இருக்கமாட்டா"

" நீ சொல்றது உண்மைதாம்மா..... ஆனா எல்லாப் பணக்காரர்களுக்கும் அந்த மனப்பக்குவம் வந்துடாது. போன வருஷம் கூட இந்த பணம் மேல ஒரு பற்று இருந்தது. எனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. ரெண்டு பேருமே அமெரிக்காவில் செட்டில் ஆயிட்டாங்க... என்னோட ஒய்ஃப் பொண்ணு வீட்ல இருக்கா. வருஷத்துல ரெண்டு மாசம் இந்தியாவுக்கு வந்துட்டு போவா... இவ்வளவு பெரிய வீட்ல நான் ஒருத்தன் மட்டும்தான். ஏழெட்டு பிசினஸை பார்க்க வேண்டியிருக்கு. இல்லேன்னா நானும் வெளிநாடு போயிருப்பேன் "

"ஸார்.... கையில் அளவுக்கு மீறி பணம் இருந்தாலும் ஒருத்தர்க்கு நூறு ரூபாய் கடன் கொடுக்க கூட மனசு இல்லாத உலகம் இது. உங்களுக்கு மட்டும் உதவணும்ன்னு என்கிற மனப்பக்குவம் வர என்ன காரணம் ? "

" இந்த புக் தாம்மா காரணம்" சொன்ன ஈஸ்வர் தன்னுடைய மேஜையின் ஒரத்தில் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்துக் கொடுத்தார். வளர்மதி புத்தகத்தை வாங்கி அதன் தலைப்பை வாய்விட்டு வாசித்தாள்.

"கசந்த தேன்துளிகள் " முதல் பக்கத்தைப் பிரித்தாள். கொட்டை எழுத்தில் வரிகள் ஒடியிருந்தது.

இது புத்தகம் அல்ல. ஒரு போதி மரம். இந்த உலகத்தில் வாழ்ந்து மறைந்துபோன மிகப்பெரிய பணக்காரர்களின் கடைசி நாட்களின் வாழ்க்கை எப்படியிருந்தது என்று புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் சொல்லப் போகிறது.

அடுத்த பக்கத்தைப் புரட்டினாள்.

"புளித்துப்போன ஆப்பிள்" என்ற தலைப்பில் முதல் கட்டுரை பார்வைக்குக் கிடைத்தது. வளர்மதி படிக்க ஆரம்பித்தாள்.

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ் டிஜிடலின் புகலிடமான ஆப்பிள் நிறுவனத்தின் உரிமையாளர். தொழிலில் உச்சம் தொட்ட இவரின் தலையில் டாலர் மழை நாள்தோறும் பொழிந்தது. மற்றவர்கள் இவரைப் பார்த்த பார்வையில் பொறாமை தீ கொழுந்துவிட்டு எரிந்தது. யார் போட்டிக்கு வந்தால் என்ன ? எல்லோரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு ரேஸில் முதல் நபராய் ஒடிக்கொண்டு இருந்தார். பணம் ஒரு பக்கமும், புகழ் ஒரு பக்கமும் இவரை நெருக்கித்தள்ள வெற்றியின் படிக்கட்டுகளில் ஏறி உச்சத்தில் நின்றார். இது எல்லாமே அவருடைய 55 வயது வரை மட்டுமே. சில வேண்டாத தேவையற்ற பழக்கங்களின் காரணமாய் அவருடைய ஆரோக்கியம் கெட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதுதான் அவர்க்கு வாழ்க்கை என்பது என்ன என்று புரிந்தது. ஆரம்பத்தில் வந்து ஆர்வமாய் நலம் விசாரித்தவர்கள் சிறிது சிறிதாய் காணாமல் போனார்கள். நெருங்கிய உறவுகள் அவருடைய மரணத்திற்காக காத்திருந்தார்கள்.

மருத்துவமனையில் ஸ்டீவ் ஜாப்ஸின் பகல் நேரங்கள் கொடுமையாய் கழிந்தன. இரவு நேரங்கள் தூக்கமின்றி விடிந்தன.

அவர் மரணமடைவதற்கு இரண்டு நாட்கள் முன்பு டயரியில் சில வரிகளை எழுதினார்.

இப்போது நான் இந்த உலக வாழ்க்கை என்ன என்பதைப் புரிந்து கொண்டேன்.பணம் ஒரு மதிப்புமிக்க காகிதம் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒருவனின் ஆரோக்கியம் கெட்டபிறகு அந்தப் பணம் அவனைப் பொறுத்த வரையில் வெறும் காகிதமே.

உங்கள் காரை ஒட்ட ஒரு டிரைவரை நியமித்துக் கொள்ளலாம். உங்களுடைய வியாபாரத்தை செழிப்பாக்கிக் கொள்ள எத்தனை பேர்களை வேண்டுமானாலும் ஊழியர்களாய் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் உங்கள் நோயையும் அதனால் உண்டாகும் வலிகளையும் ஏற்றுக்கொள்ள யாரையும் நியமிக்க முடியாது.

எந்த பொருள் தொலைந்தாலும் சரி, அதைப்போன்ற ஒரு பொருளை உலகத்தின் எந்த மூலையில் இருந்தாவது என்ன விலை கொடுத்தாவது வாங்கிவிட முடியும். ஆனால் உடம்பின் ஆரோக்கியம் தொலைந்து போனால் அதைத் தேடி கண்டுபிடிப்பதற்குள் நம் ஆயுள் முடிந்துவிடும். வாழ்க்கை என்னும் நாடக மேடையில் இப்போது நீங்கள் எந்த காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாலும் சரி, அந்தக் காட்சி முடிவதற்குள்ளாகவே நடுவிலேயே எப்போது வேண்டுமானாலும் திரை விழலாம். நமக்கு வயதாகும்போது தான் சில விஷயங்கள் புரிய ஆரம்பிக்கும்.

செலவழிக்க வாய்ப்பு இல்லாதபோது உங்கள் மணிபர்ஸில் ஒரு டாலர் இருந்தாலும் சரி, வங்கிக் கணக்கில் ஒரு கோடி டாலர் இருந்தாலும் சரி, இரண்டுமே ஒன்றுதான். உங்களைவிட்டு உறவுகள் பிரிந்த பிறகு எட்டுக்கு எட்டு என்ற அளவில் இருக்கக்கூடிய அறையும் ஒன்றுதான்.

ஏழடுக்கு மாளிகையும் ஒன்றுதான். பணத்தை நேசிக்காதீர்கள். மனிதர்களை நேசியுங்கள். முடிந்தவரை மற்றவர்களை வார்த்தைகளால் சந்தோஷப்படுத்துங்கள்.

வளர்மதி புத்தகத்தை மூடினாள். ஈஸ்வர் ஒரு சிரிப்போடு கேட்டார்.

" என்னம்மா படிச்சியா ? "

" படிச்சேன் ஸார் "

" நான் இருபது லட்ச ரூபாயை செலவு பண்ணி ஏன் ஒன்பது ஏழைப்பெண்களுக்கு திருமணம் செய்து வெச்சேன்னு உனக்குப்புரிஞ்சு இருக்குமே ? "

" புரியுது ஸார் "

அடுத்த கட்டுரையையும் படிச்சு பாரும்மா.... உலகத்தோட டாப் - 10 டாக்டர்களில் ஒருத்தர் ராபர்ட் ஸ்டீபன் தன்னோட வாழ்நாளின் கடைசி நாட்களைப்பற்றி என்ன எழுதியிருக்கார்ன்னு உனக்குப் புரியும் " ஈஸ்வர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே மேஜையின் மேல் இருந்த அவருடைய செல்போன் வைபரேஷன் மோடில் வெளிச்சமாய் ஒளிர்ந்தது. செல்போனை எடுத்து யார் என்று பார்த்துவிட்டு காதுக்கு கொடுத்தார்.

" ஹலோ "

மறுமுனையில் ஒரு ஆண் குரல் கேட்டது.

" நான் அபுபக்கர் பேசறேன் ஈஸ்வர்"

" தெரியுது சொல்லு....... "

" ஈஸ்வர், நான் இப்போ பேசறதை மட்டும் கேளு. பதில் பேசாதே .... ! "

" சரி "

" இப்ப உனக்கு முன்னாடி ஒரு பெண் உட்கார்ந்துட்டு இருக்காளா ? "

" ஆமா "

" நீ இப்ப என்ன பண்றே.... செல்போன்ல வாய்ஸ் ப்ரேக் ஆகுதுன்னு சொல்லி அடுத்த அறைக்கோ இல்லேன்னா கொஞ்சம் ஒதுக்கிப்புறமாகவோ போய் நின்னுகிட்டு பேசு "

ஈஸ்வர் தனக்கு முன்பாய் உட்கார்ந்திருந்த வளர்மதியை பார்த்தார். அவள் "கசந்த தேன்துளிகள் " புத்தகத்தில் ஆழ்ந்திருந்தாள்.

" நீ புத்தகத்தை பார்த்துட்டிரும்மா... செல்போன்ல வாய்ஸ் ப்ரேக் ஆகுது.... முன்னாடி இருக்கிற சிட்அவுட்ல போய் நின்னாத்தான் டவர் எடுக்கும்"

" நீங்க போய் பேசிட்டு வாங்க ஸார் "

ஈஸ்வர் செல்போனோடு அறையின் அடுத்த பக்கத்தில் இருந்த சிட்அவுட்டை நோக்கிப்போய் மறைவில் நின்று கொண்டு பேசினார்.

சொல்லு அபுபக்கர்...... எனக்கு முன்னாடி ஒரு பெண் உட்கார்ந்திருக்கிற விஷயம் உனக்கு எப்படி தெரியும்? "

" சொல்றேன்.... அவ பேரு வளர்மதிதானே ? "

" ஆமா "

" அவ எதுக்காக உன்னைப் பார்க்க வந்திருக்கா ? "

" நான் 20 லட்ச ரூபாய் செலவு பண்ணி ஒன்பது பெண்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சதை பாராட்டவும், எனக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லவும் தான் "

" அப்படீன்னு நீ நினைச்சுட்டு இருக்கே "

" பின்னே ? "

" உன்னே வேவு பார்க்க வந்து இருக்கா "

" அ...அ....அபுபக்கர்....... நீ என்ன சொல்றே ? "

" அவ ஒரு போலீஸ் இன்ஃபார்மர்....... "

(தொடரும்)

[ பகுதி 1]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X