For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சில்பாவை உங்களுக்கு எப்படி தெரியும் ?.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (21)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

வளர்மதி தன்னுடைய ஸ்கூட்டரை மிதமான வேகத்தில் விரட்டியபடி பாஷ்யகார்லு ரோட்டில் உள்ள நர்மதாவின் வீட்டை நெருங்கிய போது மத்தியானம் பனிரெண்டு மணி.

சூரியன் நடுவானில் இருந்தாலும் இதமான வெப்பத்தோடு கோவைக்கு உரித்தான குளிர்காற்று வளர்மதியின் முகத்தில் மோதியது. ஸ்கூட்டரை காம்பெளண்ட் கேட்டுக்கு வெளியே நிறுத்தி விட்டு கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே போனாள்.

rajesh-kumar-new-series-vibareethangal-inge-virkappadum-part-21

கரும்பச்சை நிற கான்வாஸ் போர்வையை போர்த்துக்கொண்டு கார் ஒன்று ஷெட்டில் நின்றிருந்தது.

யாரோ வீட்டுக்குள் இருப்பதற்கு அடையாளமாய் டி.வியின் விளம்பர அறிவிப்பு ஒன்று ஜன்னல் வழியாக தப்பித்து வளர்மதியின் காதுமடல்களை உரசியது. வாசற்படி ஏறி அழைப்பு மணியை ஒலிக்க வைத்த பத்தாவது விநாடி கதவு தயக்கத்தோடு பின்வாங்கி ஒரு பெண்ணின் முகத்தைக் காட்டியது.

வளர்மதி தயக்கமான குரலில் கேட்டாள்.

" நர்மதாங்கிறது ? "

" நான்தான்.... நீங்க ? "

" என் பேரு வளர்மதி. மிஸ் சில்பாவுக்கு என்னைத் தெரியும். அவங்களைப் பார்க்க வந்தேன் "

நர்மதா மனசுக்குள் அதிர்ந்து போனாலும் முகத்தில் அந்த அதிர்ச்சியின் ஒரு சதவீதத்தைக்கூட காட்டிக் கொள்ளாமல் புன்னகைத்தாள்.

rajesh-kumar-new-series-vibareethangal-inge-virkappadum-part-21

" ஒ..... சில்பாவைப் பார்க்க வந்தீங்களா ? சில்பா இப்ப வீட்ல இல்லையே...... ? "

" வெளியே எங்கேயாவது போயிக்காங்களா ? "

" திடீர்ன்னு சில்பா நேத்து சாயந்தரமே ஊட்டி புறப்பட்டுப் போயிட்டாளே ? "

" எ...எ....என்னது ஊட்டியா ? "

" ஆமா..... அப்படித்தான் என்கிட்டே சொன்னா ? "

" ஊட்டியில் யாரைப் பார்க்கிறதுக்காக போனாங்கன்னு தெரியுமா ? "

ஸாரி..... தெரியாது... நான் சில்பாகிட்டே யாரைப் பார்க்கிறதுக்காக ஊட்டி போறேன்னு கேட்டேன். அவ அதுக்கு இது என்னோட டிபார்ட்மெண்ட் சம்பந்தப்பட்ட விஷயம். உன்கிட்டே சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டா. சில்பா அப்படி சொன்ன பிறகு நான் அவளை கம்பெல் பண்ண விரும்பலை"

என்று இயல்பாய் சொன்ன நர்மதா வலுக்கட்டாயமாய் தன்னுடைய உதட்டுக்கு ஒரு பெரிய புன்னகையைக் கொடுத்தாள்.

" உள்ளே வாங்களேன்.... வெளியேவே நின்னு பேசிட்டு இருக்கீங்க ? "

வளர்மதி தயக்கமாய் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தாள். வீடு சிறியதாக இருந்தாலும் நேர்த்தியாய் இருந்தது. நர்மதா ரிமோட் கண்ட்ரோலை எடுத்து டி.வி.திரையை இருட்டாக்கிவிட்டு வளர்மதிக்கு சோபாவைக் காட்டினாள்.

" ப்ளீஸ் உட்கார்ங்க "

வளர்மதி உட்கார்ந்ததும் நர்மதா கேட்டாள்.

" நீங்க யார்ன்னு தெரிஞ்சுக்கலாமா ? "

" நான் இதே ஊர்தான்.... ஒரு கன்ஸல்டிங் ஏஜென்ஸியில் வொர்க் பண்றேன்... ப்ரீலான்ஸரா ஜர்னலிஸ்டிட்டாவும் ஒர்க் பண்றேன். போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரிகிட்டே சமீபத்துல நடந்த பாலியல் பலாத்கார சம்பவங்களைப்பற்றி ஒரு பேட்டி எடுக்கப் போனேன். போலீஸ் கமிஷனர் பிஸியாய் இருந்தாங்க... ரெண்டு மணி நேரம் கழிச்சு வரச் சொன்னதால சில்பாவை பார்த்துட்டு போலாம்ன்னு வந்தேன் "

" சில்பாவை உங்களுக்கு எப்படி தெரியும் ? "

" கமிஷனர் திரிபுரசுந்தரியின் ஆபீஸில் நாலைஞ்சு தடவை பார்த்திருக்கேன். பேசியிருக்கேன். அப்படி ஏற்பட்டதுதான் பழக்கம். நேத்துஅவங்ககிட்டே பேசிட்டு இருக்கும்போதுதான் உங்க வீட்ல ஸ்டே பண்ணியிருக்கிறதாய் சொன்னாங்க. அதான் பார்த்து பேசிட்டு போலாம்ன்னு வந்தேன் "

" நீங்க சில்பாவுக்கு போன் பண்ணியிருக்கலாம். அப்படி போன் பண்ணி பேசியிருந்தா உங்களுக்கு விபரம் தெரிஞ்சு இருக்கலாம்..... "

" போன் பண்ணினேன்.... எந்த ஒரு ரெஸ்பான்ஸூம் இல்லை.... "

" ஒரு வேளை டவர் கிடைக்காமல் போயிருந்து இருக்கலாம் .... "

" அப்படி ஏதாவது டவர் பிராப்ளம் இருந்திருந்தா ரெக்கார்டட் வாய்ஸாவது வந்து இருக்கும். அதுவும் வரலையே ? "

" நான் என்னோட போனிலிருந்து ட்ரை பண்ணிப் பார்க்கட்டுமா ? "

" சரி " என்ற பாவனையில் வளர்மதி தலையசைக்க, நர்மதா இயல்பாய் உடம்பின் எந்த ஒரு அவயத்திலும் பதட்டத்தை வெளிப்படுத்தாமல் தன்னுடைய செல்போனை எடுத்து சில்பாவின் எண்ணை தொடர்பு கொண்டு விட்டு ஒரு சின்னப் புன்னகையோடு அழகாய் உதட்டைப் பிதுக்கினாள்.

rajesh-kumar-new-series-vibareethangal-inge-virkappadum-part-21

" சில நேரங்களில் சில்பா இப்படித்தான். அவளும் ஊமையாயிடுவா.... அவளோட செல்போனும் ஊமையாயிடும். வாரம் பத்து நாள் கழிச்சு திடீர்ன்னு போன் பண்ணிப் பேசுவா... இந்த விஷயத்துல அவளையும் குற்றம் சொல்ல முடியாது. காரணம் அவ சி.பி.ஐ. டிபார்ட்மெண்ட் சில விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு மெளனம் காக்க வேண்டிய கட்டாயம். ஒரு வேளை சில்பா எனக்கு போன் பண்ணினாலும் பண்ணுவா... அப்ப நீங்க வந்துட்டு போனதை சொல்றேன். ஏதாவது முக்கியமான விஷயம் இருந்தா சொல்லுங்க நான் சில்பாவுக்கு கன்வே பண்ணிடறேன் " என்று சொன்னவள் கேட்டாள்.

" ஹேவ் சம் காப்பி.... ஆர் டீ ! "

" பரவாயில்லை.... நான் கிளம்பறேன் " வளர்மதி வாசலை நோக்கி நகர்ந்தாள். வாசலில் நின்றிருந்த ஸ்கூட்டியில் ஏறி அவள் புறப்பட்டு போகும்வரை காத்திருந்த நர்மதா பிறகு தன் செல்போனை எடுத்து காண்டாக்ட் ஆப்ஷனுக்குப் போய் ஒரு எண்ணைத் தேய்த்துவிட்டு பேசினாள்.

" ஸார்..... நான் நர்மதா "

மறுமுனையில் ஈஸ்வர் பேசினார்.

" என்ன நர்மதா.... குரல்ல டென்ஷன் தெரியுது. என்ன ஏதாவது பிரச்சினையா ? "

" ஆ....ஆமா ஸார் "

" என்ன ? "

" அந்த போலீஸ் இன்ஃபார்மர் வளர்மதி சில்பாவை தேடிகிட்டு என்னோட வீட்டுக்கே வந்துட்டா "

" அப்படியா... ஆச்சர்யமாயிருக்கே சில்பா உன்னோட வீட்லதான் தங்கியிருந்தான்னு வளர்மதிக்கு எப்படி தெரியும் ? "

" சில்பா சொல்லியிருக்கணும் ஸார் "

" சரி.... வளர்மதி சில்பாவைப் பார்க்க எதுக்காக வந்தான்னு நீ கேட்கலையா ? "

" கேட்டேன் ஸார்.... பெண்கள் பாலியல் பலாத்காரத்தைப் பத்தி சில்பாகிட்டே பேட்டி எடுக்க வந்தாளாம் "

" பொய் சொல்றா "

" பொய்தான்.... நல்லாவே தெரியுது... என்ன காரணத்துக்காக சில்பாவைப் பார்க்க வந்தான்னு தெரியலை. எனக்கு கொஞ்சம் பயமாயிருக்கு ஸார் "

" எதுக்கு பயம் ? "

நேத்து ராத்திரி பழைய ஜட்ஜ் பங்களாவில் நடந்த சம்பவம் போலீஸீக்கு தெரிஞ்சு இருக்குமோ? "

" அப்படி தெரிய வாய்ப்பில்லை நர்மதா "

" ஸார்.... சில்பா இப்போ..... ? "

" எங்க இருக்கணுமோ அங்கே இருக்கா..... அவளை இனிமே நீ மறந்துடு.... அவளைப்பத்தி உன்கிட்டே யார் வந்து கேட்டாலும் நேத்து சாயந்தரமே அவ ஊட்டி புறப்பட்டுப் போயிட்டான்னு சொல்லு..... "

" வளர்மதிகிட்டேயும் அப்படித்தான் சொல்லியிருக்கேன் "

" அதை அப்படியே கண்டினியூ பண்ணு "

" ஸார்.... எனக்கு எந்த பிரச்சனையும் வந்துடாதே ? "

" இதோ பார் நர்மதா.... உனக்கொரு பிரச்சனை வந்தா அந்தப் பிரச்சனை எனக்கு வந்த மாதிரிதான். அப்படியே பிரச்சனைன்னு ஏதாவது வந்துட்டா அதை எப்படி சால்வ் பண்றதுன்னும் எனக்குத் தெரியும். நீ எதுக்கும் கவலைப்படாதே.... "

" ஸ....ஸார்.... "

" என்ன குரல் நடுங்குது ? "

" அந்த போலீஸ் இன்ஃபார்மர் வளர்மதியை இன்னிக்குத்தான் நான் முதல் தடவையாய் பார்க்கிறேன். அவகிட்டே ஒரு கெட்டிக்காரத்தனம் தெரியுது. பார்க்கிற பார்வையிலும் கேட்கிற கேள்வியிலும் கூர்மை இருக்கு.... சில்பா மாதிரி அவளையும் ..... "

" பொறு.... பொறு நர்மதா... போலீஸோட நடவடிக்கைகள் நமக்கு எதிராய் எப்படி எடுக்கப்படுதுன்னு தெரிஞ்சுக்க நமக்கு இருக்கிற ஒரு சானல் வளர்மதிதான். நம்ம ஆள் மனோஜூம் அவளோடு சேர்ந்து இன்வெஸ்டிகேட் பண்ணும் போது போலீஸ் எடுத்து வைக்கிற ஒவ்வொரு ஸ்டெப்பும் நமக்கு சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகிற காட்சிகள் மாதிரி தெரியும்... போலீஸ் எந்த திசையில் மூவ் பண்றாங்கன்னு தெரிஞ்சாத்தான் நாம அவங்க பார்வையில் படாமே தப்பிக்க முடியும்..... நான் சொல்றது உனக்குப் புரியுதா நர்மதா ? "

" புரியுது ஸார் "

" லஞ்ச் சாப்பிட்டியா ? "

" இனிமேல்தான் ஸார் "

" போய் சாப்பிடு..... அடிக்கடி போன் பண்ணாதே. விஷயம் முக்கியமானதாய் இருந்தா மட்டும் போன் பண்ணு "

" சரி.... ஸார்" என்று சொல்லி தன்னுடைய செல்போனை நர்மதா அணைத்த விநாடி வாசலில் ஏதோ ஒரு வாகனம் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
நர்மதா ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள்.

போலீஸ் ஜீப் ஒன்று வாசலில் நின்றிருக்க போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரி ஜீப்பினின்றும் இறங்கிக் கொண்டிருந்தாள். உடம்பில் பதட்டம் பரவிக் கொள்ள, இருதயத்துடிப்பு உச்சத்துக்குப்போயிற்று. ஜன்னலின் க்ரில் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு பிரமை பிடித்தவள் போல் நின்றாள்.

ஜீப்பினின்றும் இறங்கிய திரிபுரசுந்தரி தனக்கு பின்னால் நின்றிருந்த அஸிஸ்டெண்ட் கமிஷனர் சடகோபனைப் பார்த்தாள்.

" இதுதான் சில்பாவோட ஃப்ரண்ட் நர்மதா வீடுன்னு நினைக்கிறேன் "

" நீங்க சொன்ன லேண்ட் மார்க் படி பார்த்தா இதுவாகத்தான் இருக்கணும் மேடம்..... நான் போய் மொதல்ல விசாரிக்கிறேன் " சொன்ன சடகோபன் வீட்டின் சிறிய காம்பெளண்ட் கேட்டைத்திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார். " எதுக்காக வருகிறார்கள் ? " நர்மதா வியர்த்து வழிந்து யோசித்துக்கொண்டிருக்கும் போதே சடகோபன் படியேறி வந்து அழைப்பு மணியின் பொத்தானை அழுத்தினார்.

நர்மதா சேலைத்தலைப்பால் வியர்த்த முகத்தை ஒற்றிக்கொண்டே போய் கதவைத்திறந்தாள். போலீஸ் யூனிஃபார்மில் இருந்த சடகோபனை எந்த அதிர்ச்சியும் இல்லாமல் பார்த்து மெலிதாய் புன்னகைத்தாள்.

" எஸ் "

" இங்கே நர்மதா? "

" நான்தான் "

" மேடம் சில்பா இங்கேதானே ஸ்டே பண்ணியிருந்தாங்க ? "

" ஆமா ...."

" இப்ப அவங்க எங்கே ? "

" ஊட்டிக்கு போயிருக்காங்க"

" ஊட்டிக்கா ? "

" ம் "

" எப்ப போனாங்க ? "

" நேத்து சாயந்தரம் "

" அவங்க ஊட்டிக்கு போக வாய்ப்பு இல்லையே ? "

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X