For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்ன சார் சொல்றீங்க.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (22)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

நர்மதாவின் இதய மையத்தில் ஒரு சிறிய பூகம்பம் உருவானாலும் அதை தன் முகத்தில் சிறிதும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் சடகோபனை ஏறிட்டாள்.

" என்ன ஸார் சொல்றீங்க. என்னோட ஃப்ரண்ட் சில்பா ஊட்டிக்கு போக வாய்ப்பு இல்லையா ? "

" எஸ் "

" சில்பா ஊட்டிக்கு போகலைன்னு உங்களுக்கு எப்படி ஸார் தெரியும் ? என்கிட்டே அவ அப்படித்தானே சொல்லிட்டுப்போனா "

rajesh-kumar-new-series-vibareethangal-inge-virkappadum-part-22

" உங்ககிட்டே அப்படி சொல்லியிருக்கலாம். ஆனா அவங்க ஊட்டிக்கு போன மாதிரி தெரியலை. அப்படி ஒரு வேளை அவங்க ஊட்டிக்கு போறதாய் இருந்திருந்தா கமிஷனர் மேடத்துக்கு போன் பண்ணி சொல்லியிருப்பாங்க. அப்படி ஏதும் சொல்லலையே ? "

நர்மதா இப்போது அப்பாவித்தனமாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள். " இட்ஸ்... ஒ.கே.... இப்ப என்ன ஸார் பிரச்சினை.... ? எதுக்காக இந்த என்கொய்ரி ? "

கமிஷனர் திரிபுரசுந்தரி இரண்டடி முன்னால் வந்தாள். தன்னுடைய கையில் வைத்து இருந்த ஒரு மோதிரத்தைக் காட்டினாள்.

" இது யாரோட மோதிரம்ன்னு உனக்குத் தெரியுதா நர்மதா ? "
நர்மதாவுக்கு அந்த மோதிரத்தை பார்த்த அடுத்த விநாடியே அது சில்பாவின் மோதிரம்தான் என்று உடனே அடையாளம் பிடிபட்டது. அவளுடைய இதயத்துடிப்பு சற்றே அதிகரித்து முகம் வியர்வையின் மினுமினுப்புக்கு உட்பட்டது. செயற்கையாக ஒரு பதட்டத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டாள்.

" மேடம்.... சில்பாவுக்கு என்னாச்சு.... அவளோட மோதிரம் மட்டும் உங்க கைக்கு எப்படி கிடைச்சுது ? "

" மொதல்ல மோதிரத்தை நல்லா பாரு.... இது சில்பாவோட மோதிரம்தானே?"

" ஆமா மேடம்.... எஸ் என்கிற எழுத்தும் லைட் பிங்க நிற கல்லும் பதித்த இந்த நெளி மோதிரம் சில்பாவோட கைக்கு ரொம்பவும் அழகாயிருக்கும். நேத்து காலையில் கூட அவ என்கிட்டே இந்த மோதிரம் கொஞ்சம் லூசா இருக்கு..

எங்கேயாவது விழுந்துடுமோன்னு பயமாயிருக்கு. கழட்டி வெச்சுடணும்ன்னு சொல்லிட்டிருந்தா.... "

" சில்பா பயப்பட்ட மாதிரியே இந்த மோதிரம் அவ கையிலிருந்து கழண்டு விழுந்திருக்கு "

" எங்கே மேடம் ? "

" ஆர்.எஸ்.புரம் பிரகாசம் ரோட்ல "பழைய ஜட்ஜ் பங்களா" ன்கிற பேர்ல ஒரு கட்டிடம் இருக்கு. உனக்குத் தெரியுமா ? "

" தெரியாது மேடம் "

" உனக்கு இதே ஊர்தானே ? "

" இல்ல மேடம்..... எனக்கு சொந்த ஊர் திருச்சி. இந்த ஊருக்கு குடிவந்து அஞ்சு வருஷமாச்சு. குறிப்பா சில இடங்கள் மட்டும்தான் தெரியும். நீங்க சொல்ற அந்த பழைய ஜட்ஜ் பங்களாவைப்பத்தி இன்னிக்குத்தான் கேள்விப்படறேன் "

" இந்த மோதிரம் அந்த பங்களாவில்தான் கிடைச்சுது.... "

" அப்படீன்னா சில்பா எங்கே மேடம் ? "

" இப்ப நீ கேட்ட இந்த கேள்விக்கான பதிலைத் தேடிகிட்டுதான் இங்கே வந்திருக்கிறோம். சில்பா என்னோட ஆபீஸீக்கு முதல் நாள் வந்தபோதே சில்பாவோட விரலில் இருந்த மோதிரத்தைப் பார்த்துட்டு மோதிர டிசைன் நல்லாயிருக்கே. நாமும் இது மாதிரி ஒரு மோதிரத்தைப் பண்ணிக்கணும்ன்னு நினைச்சேன். மோதிரத்தையும் கழட்டி கொடுக்கச் சொல்லிப் பார்த்தேன். நான் அப்படி பார்த்தால்தான் என்னவோ அந்த பங்களாவோட ஒரு அறையின் மூலையில் கிடந்த இந்த மோதிரத்தை அஸிஸ்டெண்ட் கமிஷனர் சடகோபன் எடுத்து காட்டின உடனேயே இது சில்பாவோட மோதிரமாய்தான் இருக்கணும்ன்னு நினைச்சேன். அதை உறுதிப்படுத்திக்கத்தான் பங்களாவிலிருந்து நேரா புறப்பட்டு உன் வீட்டுக்கு வந்தோம் "

நர்மதா செயற்கையான திகைப்போடு கேட்டாள். " மேடம் ! சில்பா என்கிட்டே ஊட்டிக்குப் போறேன்னு சொல்லிட்டு எதுக்காக அந்த பழைய ஜட்ஜ் பங்களாவுக்கு போகணும் ? "

" அதுதான் புரியலை. சில்பா தன்னிச்சையாய் அந்த பங்களாவுக்கு போக வாய்ப்பு இல்லை. யாரோ போன் பண்ணி வரச்சொல்லியிருக்கணும்..... நேத்து ராத்திரி அந்த பங்களாவுக்குள்ளே ஆட்கள் நடமாட்டம் இருந்திருக்கு. ஆனா அண்மைக்காலமாய் அந்த பங்களாவில் யாருக்கும் தங்க அனுமதியில்லை. காவலுக்கு இருந்த ரெண்டு செக்யூரிட்டி ஆட்களையும் மயக்க நிலைக்கு கொண்டு போன பின்னாடி உள்ளே நுழைஞ்சிருக்காங்க. அந்த ஆட்கள் லிக்கரை கன்ஸ்யூம் பண்ணியிருக்காங்க. அந்த அறைக்குள்ளே நாங்க நுழைஞ்சதுமே ஸ்மெல் அடிச்சுது "

" மேடம்.... பங்களாவுக்குள்ளே ஆட்கள் இருந்த விஷயத்தை உங்களுக்கு சொன்னது யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா ? "

" நான் பிரஸ் ரிப்போர்ட்டர். அவர் பேரு புகழேந்தி "

" ஜென்யூன் பர்ஸன். அவர் பொய் சொல்லியிருக்க வாய்ப்பு இல்லை. நேத்து ராத்திரி அந்த பங்களாவுக்குள்ளே வேண்டாத ஒரு சம்பவம் நடந்து இருக்கணும். ஏன்னா இந்த மோதிரத்தைத் தவிர ஒரு கண்ணாடி சில்லும் எங்க பார்வைக்கு தட்டுப்பட்டது" கமிஷனர் திரிபுரசுந்தரி சொன்னதைக் கேட்டு நர்மதா உள்ளுக்குள் நிலை குலைந்து போனாலும் அதற்கான அடையாளத்தை உடம்பின் எந்த பகுதியிலும் காட்டாமல் மிதமான அதிர்ச்சியை மட்டும் கண்களில் காட்டி போலியான அழுகைக் குரலில் கேட்டாள்.

" மேடம்..... எனக்கு பயமாயிருக்கு.சில்பாவுக்கு ஏதும் ஆயிருக்காதே ? "

" எதுவும் ஆகியிருக்ககூடாதேங்கிறதுதான் என்னோட கவலையும். இப்ப என்னோட மனசுக்குள்ளே இருக்கிற ஒரே ஒரு கேள்வி இதுதான். ஒரு சி.பி.ஐ. ஆபீஸரான சில்பா எதுக்காக ராத்திரி நேரத்துல அந்த பங்களாவுக்குப் போகணும் ? "

நர்மதா தயக்கமான குரலில் குறுக்கிட்டாள்.

" மேடம்..... இந்த நேரத்துல நான் உங்ககிட்டே ஒரு விஷயத்தை ஷேர் பண்ணிக்கலாமா ? "

" என்ன.... ? "

" சில்பா கோயமுத்தூர்க்கு எப்ப வந்தாலும் என்னோட வீட்லதான் ஸ்டே பண்ணுவா. அவளுக்கு உத்யோகரீதியாய் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் அதையெல்லாம் மறந்துட்டு ரொம்பவும் ஜாலியான மூடில் இருப்பா. ரெண்டு பேரும் சினிமாவுக்கு போவோம். ப்ரூக் ஃமாலுக்குப் போய் ஐஸ்க்ரீம் சாப்பிடுவோம். ஆனா இந்த தடவை சில்பா என்கூட இருக்கும்போது அவகிட்டே எனக்கு நிறைய வித்தியாசம் தெரிஞ்சுது..... "
திரிபுரசுந்தரியின் புருவங்கள் உயர்ந்தன.

" வித்தியாசமா...... என்ன வித்தியாசம்...... ? "

" பொதுவாய் சில்பா இங்கே இருக்கும்போது அவளுடைய இம்மீடியட் ஹெட் அடிக்கடி போன் பண்ணி பேசுவார். இந்த தடவை யாரும் அப்படி போன் பண்ணிப் பேசலை. அவர்க்கு பதிலாய் வேற யாரோ ஒரு நபர் நாலைஞ்சு தடவை போன் பண்ணிப் பேசினார். அந்த நபரோட போன் கால் வரும்போதெல்லாம் சில்பா டென்ஷனாயிடுவா. நான் அந்த செல்போன் கான்வர்சேஷனை கேட்டுடக்கூடாதேன்னு கால் வந்ததுமே மெள்ள நடந்து வெளியே போயிடுவா. பேசி முடிச்ச பின்னாடிதான் உள்ளே வருவா. அந்த சமயத்துல அவளோட முகம் இருளடைஞ்சு போயிருக்கும். நான் அவளோட முகத்தைப் பார்த்துட்டு ஏதாவது பிரச்சினையான்னு கேட்பேன். அதுக்கு அவ ஒண்ணுமில்லை. என்னோட உத்யோகத்தைப்பத்தித்தான் உனக்குத் தெரியுமேன்னு சொல்லி சிரிச்சுட்டே போயிடுவா... நேத்திக்கு சாயந்தரம் ஊட்டிக்கு போறேன்னு சில்பா சொன்ன போதும்கூட அவ முகம் சரியில்லை மேடம் "

சடகோபன் இப்போது குறுக்கிட்டு கேட்டார்.

" நேத்து சில்பா ஊட்டிக்கு புறப்பட்டு போகப் போறதாய் சொன்ன போது மணி எவ்வளவு இருக்கும் ...... ? "

" சாயந்தரம் ஆறு மணி "

" எதுல புறப்பட்டு போனாங்க ? "

ஒரு மைக்ரோ விநாடி அதிர்ந்து போன நர்மதா எளிதாக அந்தப் பொய்யையும் சொல்லி வைத்தாள்.

" ஏதோ ஒரு கால் டாக்ஸி சென்டர்க்கு போன் பண்ணி ஊட்டியில் அவளை ட்ராப் பண்ண என்ன சார்ஜாகும்ன்னு கேட்டுகிட்டு இருந்தா "

" அது என்ன கால் டாக்ஸி ? பேர் தெரியுமா ? "

" நான் சரியா கவனிக்கலை ஸார். டாக்ஸி வாசல்ல வந்து நின்னதும் ஒரு பை சொல்லிட்டு சில்பா பாட்டுக்கு கிளம்பிப் போயிட்டா " நர்மதா பேசப் பேச பொய் அவளுக்கு சரளமாய் வந்தது.

" சில்பா இந்த வீட்ல எந்த ரூம்ல ஸ்டே பண்ணியிருந்தாங்கன்னு சொல்ல முடியுமா ? "

" அதோ அந்த ரூம்தான் ஸார்...... ஊட்டிக்கு போயிட்டு ஒரு நாள்ல திரும்பிடுவேன்னு சொல்லி ஒரு செட் மாற்றுத்துணி மட்டும் எடுத்துட்டுப் போனா... மத்தபடி அவ கொண்டு வந்த திங்க்ஸ் எல்லாம் அப்படியே இருக்கு .........."
" அந்த ரூமைப் பார்க்கலாமா ? "

" வாங்க ஸார் " சொல்லிவிட்டு நர்மதா முன்னால் நடக்க, சடகோபனும் திரிபுரசுந்தரியும் அவளைப் பின் தொடர்ந்து போனார்கள்.

*****
திரிபுரசுந்தரி தன்னுடைய அலுவலக அறைக்குத் திரும்பியபோது
மாலை நான்கு மணி. அறைக்குள் ஒரு நாளிதழைப் புரட்டியபடி உட்கார்ந்திருந்த வளர்மதியைப் பார்த்துவிட்டு விழிகள் நிறைய வியப்பு காட்டினாள்.

" வளர்..... நீ எப்ப வந்தே ? "
வளர்மதி நாளிதழை மடித்து மேஜையின் மீது வைத்துக்கொண்டே சொன்னாள்.

" நான் வந்து அரைமணி நேரமாச்சு மேடம். உங்க போனுக்கு ட்ரை பண்ணினேன். நாட் ரீச்சபிள்ன்னு ரெக்கார்டட் வாய்ஸ் வந்தது. தொடர்பு கொள்ள முடியாத இடத்துல இருக்கீங்கன்னு நினைச்சு, எப்படியும் சாயந்தரம் நாலு மணிக்குள்ளே இங்கே வந்துடுவீங்கன்னு நினைச்சு வெயிட் பண்ணிட்டிருக்கேன் "

திரிபுரசுந்தரி பெருமூச்சொன்றை வெளியேற்றியபடி தன்னுடைய இருக்கைக்கு சாய்ந்தாள்.

" நானே உனக்கு போன் பண்ணி வரச் சொல்லாம்ன்னு இருந்தேன் "

" என்ன மேடம்.... ரொம்ப டல்லாயிருக்கீங்க ? "

" நர்மதா வீட்டுக்குப் போய் நீ சில்பாவைப் பார்த்தியா வளர் ? "

" இல்ல மேடம்... நான் நர்மதா வீட்டுக்குப் போனபோது சில்பா அங்கே இல்லை. அவங்க ஊட்டிக்கு போயிருக்கிறதாய் நர்மதா சொன்னாங்க "

" நானும் அஸிஸ்டெண்ட் கமிஷனர் சடகோபனும் இப்ப நர்மதா வீட்டிலிருந்துதான் வர்றோம். எங்களுக்கும் அதே பதில்தான் கிடைச்சுது "

" நீங்க எதுக்காக நர்மதா வீட்டுக்குப் போனீங்க மேடம் ? "

" நீ இன்னிக்கு காலையில் என்னை வந்து பார்த்துட்டு போன பிறகு ஷோடோ பத்திரிக்கை ரிப்போர்ட்டர் புகழேந்தி எனக்கு போன் பண்ணி நேத்து ராத்திரி ஆர்.எஸ்.புரம் பிரகாசம் ரோட்டில் இருக்கிற பழைய ஜட்ஜ் பங்களாவில் ஆள் நடமாட்டம் இருந்ததாக சொன்னார். அந்த பங்களாவில் யாரும் தங்கக்கூடாதுன்னு தடை செய்யப்பட்டு இருக்கும்போது தடையை மீறி அங்கே தங்கியிருந்தது யார்ன்னு தெரிஞ்சுக்கறதுக்காக நானும் சடகோபனும் புறப்பட்டு போனோம். அங்கே போய் செக்யூரிட்டி ஆட்கள் ரெண்டு பேரை விசாரிச்ச போது சில அதிர்ச்சிகரமான சம்பவங்கள் வெளியே வெளியே வந்தது "

" என்ன சம்பவங்கள் மேடம் ? "

திரிபுரசுந்தரி ஒரு ஐந்து நிமிட நேரத்தை செலவழித்து எல்லா விபரங்களையும் சொல்லி முடிக்க வளர்மதியின் முகம் அதிர்ச்சிக்குப் போயிற்று.

" என்ன மேடம் சொல்றீங்க... பழைய ஜட்ஜ் பங்களாவில் சில்பாவோட மோதிரம் கிடைச்சுதா ? "

" ஆமா.... அதுமட்டுமல்லை. அந்த பங்களாவுக்குள்ளே ஒரு கைகலப்பும் நடந்திருக்கு "

" சில்பா அந்த பங்களாவுக்கு ஏன் போகணும் ? "

" தெரியலை.... அதுவும் நர்மதாகிட்டே ஊட்டிக்குப் போறேன்னு பொய் சொல்லிட்டு ........ "

வளர்மதியின் உதடுகளில் ஒரு புன்னகை ஸ்லோமோஷனில் பரவியது.

" பொய் சொன்னது சில்பா இல்லை மேடம்...நர்மதா "

" என்னது நர்மதாவா ? "

" ஆமா மேடம் "

" நர்மதாகிட்டே ரெண்டு மணி நேரம் விசாரணை பண்ணினோம். சில்பா ஸ்டே பண்ணியிருந்து அறையையும் சோதனை பண்ணிப் பார்த்தோம். நர்மதாவை சந்தேகப்பட எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. அவ எதுக்காக பொய் சொல்லணும் ? "

வளர்மதியின் புன்னகை பெரிதாகியது.
" நீங்களும் சரி, ஏ.சி.பி.சடகோபன் ஸாரும் சரி, நர்மதாவை சரியா அப்ஸர்வ் பண்ணலைன்னு நினைக்கிறேன் "

" வளர் நீ என்ன சொல்றே ? "

" நர்மதா ஒரு தப்பான பெண் "

" எதை வெச்சு சொல்றே ? "

" மேடம்.... நர்மதா மாதிரியான ஒரு குடும்பப் பெண்கிட்டே சாதாரண செல்போன் இருக்கலாம். ஆனா இரிடியம் செல்போன் இருக்கலாமா ? "
" என்னது இரிடியம் செல்போனா.... அவ தீவிரவாதி மாதிரியான ஆட்கள் கிட்டேதானே இருக்கும் ? "

" அந்த இரிடியம் செல்போன் நர்மதாகிட்டே இருந்தது மேடம் "

*****

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X