For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வளர்.... நீ என்ன சொல்றே.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (23)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

திரிபுரசுந்தரி நிலைத்துப்போன விழிகளோடு வளர்மதியையேப் பார்த்தாள். அவளுடைய உதடுகள் தன்னிச்சையாய் அசைந்தது.

” வளர்.... நீ என்ன சொல்றே...... சில்பாவோட ஃப்ரண்ட் நர்மதாகிட்டே இரிடியம் செல்போன் இருந்ததை நீ பார்த்தியா ? ”

வளர்மதியின் முகம் சின்னப் புன்னகையில் விரிந்தது.

” பார்க்காமே நான் எப்படி சொல்வேன்...... மேடம் ? ”

” சரி, நீ பார்க்கும்போது அவளோட கையில் அந்த போன் இருந்ததா? ”

” என்ன மேடம்..... அவ அதை கையில் வெச்சிருப்பாளா என்ன .... ? ”

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 23

” அப்புறம் .... ? ”

” புஸ்தக ஷெல்ப்க்குப் பின்னாடி அது இருந்தது”

” அது எப்படி உன்னோட கண்ணுல பட்டது .... ? ”

” ஒரு சாதாரண செல்போனுக்கும் இரிடியம் செல்போனுக்கும் புறத்தோற்றத்தில் தெரிகிற முதல் வித்தியாசம் என்ன மேடம் .... ? ”

” ஹாக்கி பக் வகை ஆன்டெனாவும் டேட்டா மோடமும் வெளியே தெரியற மாதிரி இருக்கும் ”

” அந்த ரெண்டும் என்னோட பார்வைக்குப்பட்டது மேடம் ”

” அதுதான் எப்படின்னு கேட்கிறேன் ”

வளர்மதி குரலைத் தாழ்த்தினாள். ” சொல்றேன் மேடம். அதுக்கு முன்னாடி இன்னொரு விஷயத்தை உங்ககிட்ட சொல்லணும். அந்த ரூமுக்குள்ளே ஒரு ”மைக்ரோ ரிஸீவர் பக்” கை பிக்ஸ் பண்றதுக்காக ஒரு தோதான இடத்தையும் தேடிகிட்டு இருந்தேன் ”

திரிபுரசுந்தரியின் விழிகள் அகலமாயிற்று.

” வளர்.... நீ என்ன சொல்றே...... நர்மதாவோட வீட்டுக்குள்ளே ”மைக்ரோ ரிஸீவர் பக்” கை பொருத்தணும் என்கிற எண்ணம் உனக்கு ஏன் வந்தது என்ன காரணம் .... ? ”

” மேடம்.... நான் போலீஸ் டிபார்ட்மெண்ட்ல ஒரு போஸ்ட்ல இல்லாமே போனாலும் அந்த துறைக்கே உரித்தான அத்துணை விஷயங்களும் எனக்கு அத்துப்படி. சில்பாவைப் பார்த்து பேசறதுக்காக நான் நர்மதா வீட்டுக்குப் போய் ஒரு நிமிஷம்தான் அவகிட்டே பேசியிருப்பேன். அந்த ஒரு நிமிஷத்துக்குள்ளே அவகிட்டே இருக்கிற ஒரு வேண்டாத பதட்டத்தை அப்ஸர்வ் பண்ணிட்டேன். அவளோட பார்வை பத்து விநாடிக்கு ஒரு தடவை புக் ஷெல்ப் பக்கமாய் போய்ட்டு வர்றதையும் கவனிச்சுட்டேன். அவ என்னை வீட்டுக்குள்ளே கூப்பிட்டு சோபாவில் உட்காரச் சொன்னபோது அந்த புக் ஷெல்ப்பை என்னோட பார்வையால் ஸ்கேன் பண்ணினேன். ஒரு கனமான காலிகோ பைண்டிங் செய்யப்பட்ட புத்தகத்துக்குப்பின்னாடி அந்த இரிடியம் போனோட ஹாக்கி பக் ஆன்டெனாவும் டேட்டா மோடமும் இலை மறைவு காய் மறைவாய் தெரிஞ்சுது. நான் நர்மதா வீட்டு காலிங் பெல்லை அழுத்தும்போது அந்த போன்ல அவ யார்கூடவோ பேசிட்டு இருந்து இருக்கலாம். காலிங் பெல் சத்தம் கேட்ட உடனே கையில் இருந்த இரிடியம் போனை அவசர அவசரமாய் புக் ஷெல்ப்பில் இருந்த அந்த புஸ்தகத்துக்குப் பின்னாடி ஒளிச்சு வெச்சிருக்கலாம்ன்னு நினைக்கிறேன் மேடம் ”

திரிபுரசுந்தரி லேசாய் முகம் மலர்ந்தாள்.

” குட் அப்ஸர்வேஷன் வளர் ”

” தேங்க்யூ மேடம் ..... அந்த இரிடியம் செல்போனைப் பார்த்த பின்னாடிதான் நர்மதாகிட்டே ஏதோ தப்பு இருக்கணும்ன்னு என்னோட மனசுக்குப்பட்டது. அதனால்தான் எப்பவும் என்னோட கைப்பையில் இருக்கிற மைக்ரோ ரிஸீவர் பக்கை அந்த அறைக்குள்ளே எங்கேயாவது ஃபிக்ஸ் பண்ணிடனும்ன்கிற முடிவுக்கு வந்தேன் ”

” ஃபிக்ஸ் பண்ணியா இல்லையா ? ”

” பண்ணிட்டேன் ”

” எங்கே ? ”

” நான் உட்கார்ந்திருந்த சோபாவுக்கு கீழே குறுக்கே ஒரு இரும்பு ராடு இருந்தது. அதுல ஸ்டிக் பண்ணிட்டேன். நான் அந்த வீட்டிலிருந்து வெளியேறின பிறகு நர்மதா வீட்டுக்கு வந்து அவகூட யார் பேசியிருந்தாலும் சரி, இல்லேன்னா அவ யார்க்காவது போன் பண்ணியிருந்தாலும் சரி அந்த மைக்ரோ ரிஸீவர் எல்லாவற்றையும் துல்லியமாய் பதிவு பண்ணியிருக்கும் மேடம் ”

திரிபுரசுந்தரி வளர்மதிக்கு கை கொடுத்தாள்.

” ரியலி யூ ஹேவ் டன் ஏ க்ரேட் ஜாப் வளர்..... ஆனா எனக்கும் சரி, ஏசிபி சடகோபனுக்கும் சரி, நர்மதா மேல துளி கூட சந்தேகம் வரலை. சில்பா தங்கியிருந்த அந்த அறையை மட்டும் சோதனை போட்டோமே தவிர ஒட்டு மொத்த வீட்டையும் சோதனை போடலை..... ”

” இப்ப உடனே போய் போட்டுடுவோம் மேடம் .... ”

” ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணு. ஏசிபி சடகோபனுக்கு இன்ஃபார்ம் பண்ணி அவரையும் வரச் சொல்லிடறேன்” சொன்ன திரிபுரசுந்தரி தன்னுடைய செல்போனை எடுத்து தகவல் கொடுக்க, அவர் அடுத்த கால்மணி நேரத்திற்குள் அறைக்குள் இருந்தார். வளர்மதிக்கு கை கொடுத்து பாராட்டினார்.

” எக்ஸலண்ட் ஜாப். உடனே புறப்பட்டுடலாம். நர்மதா யூஸ் பண்ணிட்டு இருக்கிறது இரிடியம் செல்போனாய் இருக்கிற பட்சத்தில் இது ஒரு மிகப்பெரிய விபரீதமான விவகாரமாய்த்தான் இருக்கணும்...... ”

திரிபுரசுந்தரி குரலைத் தாழ்த்தினாள்.

” சடகோபன் ”

” மேடம்...... ”

” சைபர் க்ரைம் விங்கில் இருந்து ரெண்டு பேரை கூட்டிகிட்டு போயிடலாம். இது ஒரு ஹைஃபை மேட்டர். நாம எஸ்.ஒ.ஸி. பார்க்கிறதைக் காட்டிலும் அவங்க எஸ்.ஒ.ஸி. பார்த்தா கொஞ்சம் கூடுதல் தடயங்கள் கிடைக்கலாம் ”

” யூ.......மே.பி கரெக்ட் மேடம்... விஜயபூபதியும், சாரங்கனும் இந்த எஸ்.ஒ.ஸி. பார்க்கிறதுல எக்ஸ்பெர்ட்ஸ். இப்பத்தான் ஆபீஸ் காண்டீன்ல பார்த்தேன். அவங்களையே கூட்டிகிட்டு போயிடலாம் ”

" குட்...... ஒரு டவேரா காரை ஏற்பாடு பண்ணுங்க. உடனே புறப்பட்டுடலாம் "

திரிபுரசுந்தரி நாற்காலியினின்றும் தன்னை உருவிக்கொண்டு எழுந்தாள். சடகோபன் அறையினின்றும் வெளியேறினார். வளர்மதியும் எழுந்த விநாடி அவளுடைய செல்போன் ரிங்டோனை வெளியிட்டது.

கைப்பைக்குள் இருந்த செல்போனை எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தாள்.

மறுமுனையில் மனோஜ் அழைத்துக்கொண்டு இருந்தான்.

” மேடம்..... போன்ல மனோஜ் ”

” என்னான்னு கேளு வளர் ”

வளர்மதி செல்போனின் ஹேண்ட் செட்டை இடது காதுக்கு ஒற்றினாள். மெல்ல குரல் கொடுத்தாள்.

” சொல்லு மனோஜ் ”

” இப்ப நீ எங்கே இருக்கே ? ”

” கமிஷனர் மேடத்தோட ரூம்ல ”

” நானும் இப்ப மேடத்தைப் பார்க்கத்தான் வந்துட்டிருக்கேன். ரயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கத்துல வந்துட்டேன். இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்துல அங்கே இருப்பேன் ”

” நல்ல நேரத்துலதான் வந்துட்டிருக்கே....மனோஜ் சீக்கிரம் வந்து சேரு”

” ஏதாவது முக்கியமான விஷயமா ? ”

” ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் ”

” என்ன சொல்லு ”

” போன்ல எதுவும் வேண்டாம்.... நீதான் நேர்ல வர்றியே.... வா..... ”

வளர்மதி செல்போனை அணைத்துவிட்டு திரிபுரசுந்தரியை ஏறிட்டாள்.

” மேடம்..... மனோஜூம் வர்றார் ”

” வரட்டும்.... அவரும் நீயும்தானே இந்த கேஸை இன்வெஸ்டிகேட் பண்ணப் போறீங்க.....? நர்மதாவோட விவகாரத்தை அவரும் தெரிஞ்சுக்கிறது பெட்டர். இப்ப வந்துடுவாரா ? ”

” ஒரு அஞ்சு நிமிஷத்துக்குள்ளே இங்கே இருப்பேன்னு சொன்னார் ”

” தட்ஸ் குட்.... வா..... வளர்...... நாம கீழே போய் வெயிட் பண்ணுவோம்”

இருவரும் அறையை விட்டு வெளியே வந்தார்கள். மாடிப்படிகளை முடித்துக்கொண்டு கீழே போர்டிகோவுக்கு வந்து நின்ற விநாடி மனோஜூம் பைக்கில் வந்து சேர்ந்து இருந்தான். பைக்கை பார்க்கிங்கில் நிறுத்தி ஹெல்மெட்டை அதனோடு இணைத்து பூட்டிவிட்டு வியர்த்த முகமாய் பக்கத்தில் வந்தான். திரிபுரசுந்தரிக்கு உத்யோகபூர்வமான ஒரு சல்யூட்டை வைத்துவிட்டு இயல்பான குரலில் கேட்டான்.

” எங்கே மேடம் கிளம்பிட்டீங்க ? ”

” நீங்களும் வளர்மதியும் இப்ப இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு இருக்கிற தொழிலதிபர் ஈஸ்வர் சம்பந்தப்பட்ட கேஸில் புதுசா ஒரு விஷயம் கிடைச்சிருக்கு ”

” ஈஸ் இட் ? ”

” எஸ்...”என்று புன்னகைத்த திரிபுரசுந்தரி வளர்மதியிடம் திரும்பினாள்.

” உன்னோட பார்ட்னர்க்கு நீயே சொல்லு ....... ”

வளர்மதி அக்கம் பக்கம் பார்த்துவிட்டு மனோஜிடம் குரலைத் தாழ்த்தி ஒரு இரண்டு நிமிட நேரத்தை செலவழித்து நர்மதா பற்றியும் பழைய ஜட்ஜ் பங்களாவில் நடந்து சம்பவங்களைப்பற்றியும் சொல்லி முடிக்க மனோஜின் அடிவயிற்றில் ஒரு கலவரம் பரவியது.

” கண்டு பிடித்துவிட்டார்கள் ”

” என்ன செய்யலாம் ? நர்மதாவுக்கோ அல்லது ஈஸ்வருக்கோ இந்த விஷயத்தை உடனடியாய் தெரியப்படுத்தியாக வேண்டும் ”

வளர்மதி மனோஜின் தோளை ஒரு சின்ன சிரிப்போடு மெல்ல தட்டினாள்.

” என்ன மனோஜ்,...... ஸ்டன் ஆயிட்டே ? ”

சட்டென்று உணர்வுக்கு வந்து வரவழைத்துக்கொண்ட சிரிப்போடு பேசினான் மனோஜ்.

” ஸ்டன் ஆகாமே என்ன பண்றது....... ? உனக்கு இருக்கிற கீன் அப்ஸர்வேஷன் எனக்கு இல்லையே ?”

” நான் ஏதேச்சையாய்தான் அந்த இரிடியம் செல்போனைப் பார்த்தேன்”

” அதுகூட பெரிய விஷயமில்லை வளர்..... சோபாவுக்கு அடியில் ஒரு மைக்ரோ ரிஸீவர் பக்கை ஃபிக்ஸ் பண்ணிட்டு வந்திருக்கியே அதுதான் ஹைலைட்......... ”

திரிபுரசுந்தரி புன்னகையோடு குறுக்கிட்டாள்.

” எஸ்.. மனோஜ்... ஒரு வேலையோட வெற்றியே அந்த டைமிங்தான்..... அந்த வகையில் பார்த்தா ஷி ஹேஸ் டன் ஏ வொண்டர்ஃபுல் ஜாப். இப்ப நேரா நாம அந்த நர்மதா வீட்டுக்கு போறோம். அந்த இரிடியம் செல்போனையும், மைக்ரோ ரிஸீவர் பக்கையும் நர்மதா வீட்ல இருந்து எடுக்கிறோம். அது வெரி பவர்ஃபுல் மைக்ரோசிப். அந்த வீட்டுக்குள்ளே இருந்துகிட்டு நர்மதா யார்கிட்டே என்ன பேசியிருந்தாலும் ஒரு வார்த்தை கூட மிஸ் ஆகாமே அதுல பதிவாகியிருக்கும். அவ என்ன பேசினான்னு தெரிஞ்சாலே போதும். அவளுக்கும் பின்னாடி இருக்கிற எல்லா விஷயங்களும் வெளியே வந்துடும்...... அதுல யார் யார் சம்பந்தப்பட்டு இருக்காங்கிற பட்டியலும் நமக்குக் கிடைச்சிடும் ....... ”

திரிபுரசுந்தரி பேசப் பேச மனோஜின் இருதயத் துடிப்பு சம்மட்டி அடிகளாய் மாறி இதயச்சுவர்களில் விழுந்து கொண்டிருந்தது.

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X