For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்ன சொல்றீங்க அனிஷ்?.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (28)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

திரிபுரசுந்தரி அந்த இளைஞன் அனிஷை வியப்பான பார்வையால் நனைத்தாள். நடுக்கமான குரலில் கேட்டாள்.

” நீ....நீ....நீங்க கொலையாளிகளைப் பார்த்தீங்களா ? ”

” ஆமா மேடம்...... மொத்தம் மூணு பேர். அவங்க மூணு பேருமே ஈ.பி.டிபார்மெண்ட்டைச் சேர்ந்தவங்க ”

” என்ன சொல்றீங்க அனிஷ்..... ? ஈ.பி. ஆட்கள் எப்படி உள்ளே வந்தாங்க..... அவங்களை நீங்க எங்கேயிருந்து எப்படி பார்த்தீங்க ? ”

” மேடம்..... இன்னிக்குக் காலையிலிருந்தே நான் என்னோட வீட்டு மொட்டைமாடியில்தான்.... இருந்தேன். மாடியில் நான் ஒரு தோட்டம் போட்டிருக்கேன். காய்கறிச் செடிகளுக்கு இயற்கை உரம் போட்டு வேலையை செஞ்சுட்டு இருக்கும்போதுதான் என்னோட வீட்டுக்கு எதிரில் மின்துறை பராமரிப்பு என்கிற முகப்புப் பெயர் பலகையோடு க்ரே நிற டெம்போ வேன் ஒண்ணு வந்து நின்னது. அந்த வேனுக்குள்ளே ஒரு ஃபோல்டபிள் மல்டிபர்ப்பஸ் அலுமினிய ஏணி ஒண்ணும் இருந்தது. எலக்ட்ரிக் போஸ்டில் பொருத்தப்பட்டு இருக்கிற எல்.இ.டி.பல்புகளை மாத்தறதுக்காக ஈ.பி.ஆட்கள் வந்து இருக்கலாம்ன்னு நினைச்சு அதுல இண்ட்ரஸ்ட் காட்டாமே நான் தோட்ட வேலையைப் பார்த்துட்டிருந்தேன். அடுத்த சில நிமிஷங்கள்ல என்னோட வேலையை முடிச்சுட்டு கை கழுவறதுக்காக மாடியின் ஒரமாய் இருக்கிற பைப் கிட்டே போனேன். அந்த சமயத்துல ஈ.பி. வேன் ஸ்டீபன்ராஜ் வீட்டையொட்டி இருந்த மின்கம்பத்துக்கு கீழே நின்னுட்டிருந்தது. வேனோடு பொருத்தப்பட்டு இருந்த அலுமினிய ஏணி சுமார் இருபதடி உயரம் மேல் எழும்பி ஸ்டீபன்ராஜ் வீட்டு ரெண்டாவது மாடியின் சன் ஷேடோடு ஒட்டிகிட்டு இருந்தது ”

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 28

திரிபுரசுந்தரி பதட்டக் குரலில் கேட்டாள்.

” ஏணி சன் ஷேடோடு ஒட்டிகிட்டு இருந்ததா ? ”

” ஆமா ”...... ”

” நல்லாப் பார்த்தீங்களா ? ”

” பார்த்தேன் மேடம்..... ஏணியை உயர்த்தும்போது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு ஸ்டீபன்ராஜ் வீட்டு மேல சாய்ஞ்சு இருக்கலாம்ன்னு நினைச்சு அதை சந்தேகத்துக்குரிய ஒரு நிகழ்வாய் நான் எடுத்துக்கலை. அந்த ஏணிக்கு கீழே மூணு பேர் நின்னுட்டிருந்தாங்க ”

” அவங்க உங்களைப் பார்த்தாங்களா ? ”

” இல்லை மேடம் ”

” சரி...... அந்த மூணுபேரும் எப்படி இருந்தாங்க ? ”

” நான் அவங்க முகத்தைப் பார்க்கலை மேடம். ஆனா அந்த மூணுபேர்க்குமே என்னோட வயசுதான் இருக்கும். காக்கி பேண்ட்டும் வெள்ளைச் சட்டையும் போட்டிருந்தாங்க ”

” நீங்க அந்த மூணுபேரைப் பார்க்கும்போது அவங்க என்ன பண்ணிட்டிருந்தாங்க ? ”

” ஏணியை சரி பார்த்துட்டு இருந்தாங்க. ஒருத்தன் கையில் டூல் பாக்ஸ் மாதிரி ஒரு பெட்டி தெரிஞ்சுது ”

” சரி...... ஸ்டீபன்ராஜை அந்த மூணுபேர்தான் கொலை பண்ணியிருக்கணும் என்கிற எண்ணம் உங்களுக்கு வர என்ன காரணம் ? ”

” ஸ்டீபன்ராஜ் தற்கொலை பண்ணிகிட்டார்ன்னு அரைமணி நேரத்துக்கு முன் என்னோட அப்பாதான் என்கிட்டே வந்து சொன்னார். டி.வியில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துட்டிருந்த நான் ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டேன். ஏன்னா ஸ்டீபன்ராஜ் எப்பவுமே ஹேப்பியா சந்தோஷமான மூடில்தான் இருப்பார். அவர் ஏன் தற்கொலை பண்ணிக்கனும்ன்னு யோசிச்சேன். அப்படி யோசிக்கும்போதுதான் எனக்கு அந்த ஈ.பி.டிபார்மெண்ட் ஆட்கள் மேல சந்தேகம் வந்தது. உடனடியாய் இந்த ஏரியா ஈ.பி. ஆபீஸூக்கு போன் பண்ணி ஏ.ஈ. கிட்டே பேசினேன். என்னோட தெரு பேரைச் சொல்லி இங்கே எலக்ட்ரிக் போஸ்ட்ல பராமரிப்பு வேலைகளை செய்ய ஆட்கள் யாரையாவது கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அனுப்பி வெச்சீங்களான்னு கேட்டேன். அவர் இல்லையேன்னு சொன்னார். நான் திரும்பவும் அவர்கிட்டே கன்ஃபார்ம் பண்ணி சொல்லுங்க ஸார்ன்னு கேட்டேன். அவரும் தீர்மானமான குரலில் நீங்க சொல்றமாதிரியான பராமரிப்பு வேன் எல்லாம் இந்த ஈ.பி. டிவிஷனில் கிடையாதுன்னு அவர் சொன்னார். அவர் அப்படி சொன்ன பிறகுதான் எனக்கு ஸ்டீபன்ராஜோட மரணத்தில் சந்தேகம் வந்தது. ஃபோல்டர் அலுமினியம் ஏணி அவர் வீட்டு மாடி சன்ஷேடில் வைக்கப்பட்டிருந்த காட்சியும் ஞாபகத்துக்கு வந்தது. ஸ்டீபன்ராஜ்க்கு வேண்டாத யாரோ மூணு பேர் ஈ.பி.டிபார்மெண்ட்டைச் சேர்ந்த ஆட்கள் மாதிரி வந்து ஏணி வழியா மாடிக்குப் போய் ஸ்டீபன்ராஜோட உயிரை எடுத்து இருக்காங்க

” வந்த அந்த மூணுபேர்ல ஒருத்தனைக் கூடவா நீங்க பார்க்கலை ? ”

” பார்க்கலை மேடம்...... அந்த அளவுக்கு அவங்க மூணுபேரும் எனக்கு சந்தேகம் வராத மாதிரி நடந்துகிட்டாங்க. தே ஹேவ் ப்ளாண்ட் வெரி வெல்.... ”

” அந்த வேனோட ரெஜிஸ்ட்ரேஷன் நெம்பரையாவது பார்த்தீங்களா ? ”

ஸாரி மேடம்.....நான் அவங்களை கொஞ்சமாவது சந்தேகப்பட்டு இருந்தா எல்லா விஷயங்களையும் அப்ஸர்வ் பண்ணியிருப்பேன்

” இந்த தெருவுல் சிசிடிவி காமிரா இருக்கா ? ”

” மூணு மாசத்துக்க்கு முன்னாடி வரை இருந்தது மேடம், அது சரியா வொர்க் பண்ணாததாலே அதை எடுத்துட்டு வேற ஒரு புது மாடலை ஃபிக்ஸ் பண்ண காலனி அஸ்ஸோசியேஷன் முடிவு பண்ணியிருந்தாங்க. அதுக்குள்ளே அஸ்ஸோசியேஷன்ல ஒரு ஈகோ பிரச்சினை வந்து அந்த பிளான் ட்ராப் ஆயிடுச்சு.... ”

அனிஷ் சொல்லிக்கொண்டிருக்கும்போதே எஸ்.ஒ.ஸி.பார்த்துக்கொண்டிருந்த ஃபாரன்ஸிக் ஆபீஸர்ஸ் தயக்கத்தோடு பக்கத்தில் வந்து நின்றார்கள்.

திரிபுரசுந்தரி அவர்களை ஏறிட்டாள்.

” டிட் யூ ஃபைண்ட் எனிதிங்க ? ”

” எஸ் மேடம் .... ”

” என்ன ? ”

” மேடம்.... கேன் யூ கம் அலோன் ஃபார் ஏ மினிட் ”

திரிபுரசுந்தரி தலையசைத்து அவர்களோடு நடந்து அடுத்த அறைக்குள் நுழைந்தாள்.

” ம்,,,, சொல்லுங்க ”

” மேடம் வி ஹேவ் கலெக்டட் சம் ஃபிங்கர் பிரிண்ட்ஸ் ”

லேசாய் முகம் மலர்ந்தாள் திரிபுரசுந்தரி.

” குட் ஸ்டார்ட்”

” ஸாரி மேடம் ”

” ஸாரி ஃபார் வாட் ? ”

” மேடம்...... ஸ்டீபன்ராஜோட அறையில் கலெக்ட் பண்ணின ஃபிங்கர் பிரிண்ட்ஸ் எல்லாமே ஆர்ட்டிஃபிஷியல் ஃபிங்கர் பிரிண்ட்ஸ் ”

” வாட் டூ யூ ஸே...... ஆர்ட்டிஃபிஷியல் ஃபிங்கர் பிரிண்ட்ஸ் என்கிற வார்த்தையை நான் இன்னிக்குத்தான் கேள்விப்படறேன் ”

” இட் ஈஸ் நியூ ஃபார் ஃபாரன்ஸிக் மேடம். ரெண்டு வருஷத்துக்கு முந்தி ஸ்காட்லாண்ட் யார்டு போலீஸ்தான் லண்டனில் ஒரு குற்றம் நடந்த இடத்தில் இதுமாதிரியான ஆர்ட்டிஃபிஷியல் ஃபிங்கர் பிரிண்ட்ஸை கண்டுபிடிச்சு அதை இண்டர்போல் போலீஸூக்கும், இன்டர்நேஷனல் ஃபாரன்ஸிக் அஸ்ஸோசியேஷனுக்கும் தெரியப்படுத்தியிருந்தாங்க...... அந்த ஃபிங்கர் பிரிண்ட்ஸ் இன்னிக்கு ஸ்டீபன்ராஜ் அறைக்குள்ளே கிடைச்சிருக்கு ”

திரிபுரசுந்தரி கலவரமானாள்.

” இந்த ஆர்ட்டிஃபிஷியல் ஃபிங்கர் பிரிண்ட்ஸ் கிடைச்ச விவகாரத்தில் ஏதாவது அப்நார்மல்லா இருக்கும்ன்னு நினைக்கறீங்களா ? ”

” எஸ் மேடம் ”

” என்ன ? ”

” இந்த மாதிரியான ஆர்ட்டிஃபிஷியல் கைரேகைப் பதிவுகளை உருவாக்க சிலிக்கான் ரப்பர் பேப்பர் ஜெல் தேவைப்படும் மேடம். அது இந்தியாவில் கிடைக்க வாய்ப்பில்லை. ஏதாவது ஒரு வெளிநாட்டிலிருந்துதான் கொண்டு வரப்பட்டிருக்கணும். ஸோ...... வந்த நபர்கள் சாதாரண நபர்களாய் இருக்க முடியாது ”

” தென் ? ”

” விபரமான படித்த நபர்களாய் இருக்கணும் மேடம். தங்களோட கைரேகைகள் தப்பித்தவறி கூட ஃபாரன்ஸிக் பார்வைக்கு பட்டுடக்கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வோடு சிலிக்கான் ரப்பர் பேப்பர் ஜெல்லின் உதவியோடு ஆர்ட்டிஃபிஷியல் கைரேகைகளை ஸ்டீபன்ராஜின் அறைக்குள் பதிச்சுட்டு போயிருக்காங்க ”

” அது ஆர்ட்டிஃபிஷியல் ஃபிங்கர் பிரிண்ட்ஸ்தான் என்கிற முடிவுக்கு எப்படி வந்தீங்க ? ”

” ஆரம்பத்துல கண்டுபிடிக்க கஷ்டமாய் இருந்தது மேடம். சில ஃபிங்கர் பிரிண்ட்ஸ் கிடைச்சபோது மனசுக்கு சந்தோஷமாய் இருந்தது. அதனோட ரெசல்யூஷன் தெளிவாய் இருந்தது. தொடர்ந்த ஃபிங்கர் பிரிண்ட்ஸை சேகரம் பண்ணிட்டிருக்கும்போதுதான் எங்களுக்கு ஒரு சந்தேகம் வந்தது ”

” என்ன ? ”

” பொதுவா கைரேகைகள் தெளிவில்லாமல் துண்டுதுண்டாய்தான் கிடைக்கும். அதை ஃபாரன்ஸிக் லேப்புக்கு கொண்டு போய் ஒரு பிராஸஸ்க்கு உட்படுத்திப் பார்த்த பின்னாடிதான் ரெசல்யூஷன் கிடைக்கும். ஆனா இங்கே பெளடரை ஸ்பிரே பண்ணி பிரிண்ட்ஸை கலெக்ட் பண்ணினதுமே ரெசல்யூஷன் வந்துடுது..... இயற்கையாய் கிடைக்கும் கைரேகைப் பதிவுகளில் இவ்வளவு துல்லியம் கிடைக்க வாய்ப்பில்லை. உடனே இந்த விபரத்தை எங்க சீஃப் ஃபாரன்ஸிக் ஆபீஸர்க்கு தெரியப்படுத்தி சில கைரேகைப் பதிவுகளை அவரோட வாட்ஸ்அப்புக்கு அனுப்பி வெச்சோம். அடுத்த ரெண்டு நிமிஷத்துக்குள்ளே அவர்கிட்டேயிருந்து இது ஆர்ட்டிஃபிஷியல் ஃபிங்கர் பிரிண்ட்ஸ் என்கிற பதில் வந்தது ”

சில விநாடிகளை செலவழித்து அதிர்ச்சியை ஜீரணித்துக் கொண்ட திரிபுரசுந்தரி ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு ஃபாரன்ஸிக் அதிகாரிகளை ஏறிட்டாள்.

” எஸ்.ஒ.ஸியில் வேற ஏதாவது கண்டுபிடிக்க முடிஞ்சுதா ? ”

” இல்லை மேடம்..... ஸ்டீபன்ராஜோட பாடியை போஸ்ட்மார்ட்டத்துக்கு உட்படுத்தி ரிப்போர்ட் வந்த பிறகு அதில் இருக்கிற அப்நார்மல் ரிமார்க்ஸை வெச்சுத்தான் சம்பவம் எதுமாதிரி நடந்து இருக்கும் என்கிற முடிவுக்கு வர முடியும் ”

” இங்கே உங்கள் ஃபார்மலீடீஸ் முடிஞ்சுதா ? ”

” முடிஞ்சுது மேடம்...... பாடியை மார்ச்சுவரிக்கு கொண்டு போயிடலாம். இன்ஸ்பெக்டர் பரசுராமுக்கு இன்ஸ்ட்ரக்சன் கொடுத்துட்டோம் ”

திரிபுரசுந்தரி மெளனமாய் தலையசைத்துக் கொண்டிருக்கும்போதே அவளுடைய செல்போன் குறைவான டெஸிபிலில் ரிங்டோனை வெளியிட்டது.

எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தாள். வளர்மதி செல்போனின் மறுமுனையில் கூப்பிட்டுக்கொண்டு இருந்தாள். வியப்போடு ஹேண்ட்செட்டை காதுக்கு ஒற்றினாள்.

” என்ன வளர்.... நீ இப்ப இந்த வீட்டுக்குள்ளேதானே இருக்கே..... எதுக்காக போன் பண்றே ? ”

” மேடம்..... இப்ப உங்க பக்கத்துல யாராவது இருந்தா கொஞ்சம் தள்ளி வந்து பேச முடியுமா ? ”

” ஒரு நிமிஷம் ” திரிபுரசுந்தரி சொல்லிக்கொண்டே அந்த அறையினின்றும் வெளியேறி வராந்தா ஒரமாய் போய் நின்று குரலைத் தாழ்த்தினாள்.

” சொல்லு வளர் ”

” மேடம்.... நான் இப்ப ஸ்டீபன்ராஜ் வீட்டுக்கு வெளியே இருக்கிற ஆம்புலன்ஸ் வேனுக்குப்பின்னாடி நின்னு பேசிட்டிருக்கேன். உங்களால என்னைப் பார்க்க முடியாது. ஆனா நான் உங்களைப் பார்த்துட்டிருக்கேன் ”

” என்ன வளர்... ஏதாவது பிரச்சினையா ? ”

” ஆமா மேடம் ”

” என்ன சொல்லு ? ”

” மேடம்.... ஸ்டீபன்ராஜ் வீட்டிலிருந்து ரெண்டு வீடு தள்ளி ஒரு காலி மனை இருக்கு. காலிமனைக்கு எதிரில் மரத்துக்கு கீழே மொபைல் லாண்டரி வண்டி ஒண்ணு இருக்கு. அப்படியே வராந்தாவில் மெல்ல நடந்து வந்து சந்தேகம் வராதபடி எட்டிப் பாருங்க ”

திரிபுரசுந்தரி இயல்பாய் நடைபோட்டபடி வராந்தாவில் நடந்து அதன் எல்லையைத் தொட்டு மெல்ல தெருபக்கம் எட்டிப் பார்த்தாள்.

வளர்மதி சொன்னது போலவே இரண்டு வீடுகள் தள்ளி ஒரு காலிமனையும், அந்த மனைக்கு எதிரே ஒரு மரத்துக்கு கீழே இருந்த மொபைல் லாண்டரி வண்டியும் பார்வைக்கு கிடைத்தது.

” என்ன மேடம் பார்த்துட்டீங்களா ? ”

” ம்.... பார்த்துட்டேன். லுங்கி கட்டின ஆள் ஒருத்தன் துணியை அயர்ன் பண்ணிட்டிருக்கான் ”

” அவன் துணியை மட்டும் அயர்ன் பண்ணலை மேடம். செல்போனும் பேசிட்டிருக்கான். இந்த விநாடியும் பேசிட்டிருக்கான் ”

” அவன் கையில் செல்போன் இல்லையே ? ”

” செல்போனை கீழே வெச்சிருக்கான் மேடம். அவனோட காதைப் பாருங்க ”

” ஆமா... ஏதோ கருப்பு பட்டன் மாதிரி தெரியுது ”

” அது பட்டன் இல்லை மேடம்.... ப்ளூடூத் வயர்லஸ் இயர் பட்ஸ். அவன் செல்போனை ஆன்ல வெச்சுட்டு துணியை அயர்ன் பண்ற மாதிரி யார் கூடவோ பேசிட்டு இருக்கான். அரை நிமிஷத்துக்கு ஒரு தடவை ஸ்டீபன்ராஜ் வீட்டைப் பார்ப்பான். உதடு அசையறது தெரியாமே பேசிட்டிருக்கான். கொஞ்சம் உன்னிப்பாய் கவனிச்சுப் பார்த்தாத்தான் தெரியும் ”

திரிபுரசுந்தரி தன் பார்வையை கூர்மையான ஆயுதமாக்கி அந்த மொபைல் லாண்டரி நபரைப் பார்த்தாள். பார்த்த விநாடியே அவளுடைய இதயம் ஒரு உதறலுக்கு உட்பட்டது

- (தொடரும்)

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X