For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீ இப்ப எங்கே இருக்கே ? .. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (29)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

திரிபுரசுந்தரி தன் உடம்பெங்கும் வியாபித்த அதிர்வலைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு அந்த மொபைல் லாண்டரி இளைஞனையே உற்றுப் பார்த்தாள். மறுமுனையில் வளர்மதி தவிப்போடு கேட்டாள்.

" என்ன மேடம்....... அயர்ன் பண்ணுகிற ஆளைப் பார்த்தீங்களா ? "

" பார்த்துகிட்டுதான் இருக்கேன் "

" அவன்கிட்டே ஏதோ தப்பு இருக்குன்னு தெரியுதா மேடம் ? "

" இங்கிருந்து பார்த்தா நார்மலா இருக்கிற மாதிரி தெரியுது "

" என்ன மேடம் சொல்றீங்க..... அந்த ஆளோட பார்வையை கவனிங்க.... ஆள் சரியில்லை "

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 29

" நீ இப்ப எங்கே இருக்கே ? "

" ஸ்டீபன்ராஜ் வீட்டுக்கு வெளியே இருக்கிற ஆம்புலன்ஸ் வேனுக்குப் பின்னாடி நின்னு பேசிட்டிருக்கேன்"

" நீ அங்கேயே நில்லு. நான் உன்கிட்டே வர்றேன் " செல்போனை அணைத்த திரிபுரசுந்தரி இன்ஸ்பெக்டர் பரசுராமுக்கும், ஃபாரன்ஸிக் ஆபீஸர்ஸீக்கும் ஃபார்மலிடியான இன்ஸ்ட்ரக்சனைக் கொடுத்துவிட்டு மாடிப்படிகளில் இறங்கி வீட்டை விட்டு வெளியே வர வேனுக்குப் பின்னால் நின்றிருந்த வளர்மதி மெள்ள வெளிப்பட்டு திரிபுரசுந்தரி அருகே வந்தாள்.

" மேடம்...... அந்த மொபைல் லாண்டரி ஆளை மடக்கி ஸ்டேஷனுக்கு கொண்டு போயிட்டா ஸ்டீபன்ராஜோட மரணத்துக்கு காரணமான நபர்கள் யார்ங்கிறதை கண்டுபிடிச்சுடலாம் "

" சரி...... வா.......அந்த ஆளைப் பார்த்துடலாம்

" மே.....மே......மேடம் "

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 29

" என்ன ? "

" அந்த ஆளை நீங்களும் நானும் மட்டும் போய் மடக்க நினைக்கிறது சரியில்லை மேடம்..... இன்ஸ்பெக்டரும் காப்ஸீம் உள்ளே இருக்காங்க..... அவங்ககிட்டே விஷயத்தைச் சொல்லி..... "

" வே.....வேண்டாம் "

" ஏன் மேடம்..... வேண்டாம்ன்னு சொல்றீங்க அவன் நம்மை அட்டாக் பண்ண நினைக்கலாம். ஜெண்ட்ஸ் இருந்தாத்தான் அவனை சமாளிக்க முடியும் "

" பேசாமே வா எம் பின்னாடி... அந்த ஆளை சமாளிக்க நீயும் நானுமே போதும் "

திரிபுரசுந்தரி மொபைல் லாண்டரியை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட வளர்மதி அவளைக் குழப்பமாய்த் தொடர்ந்தாள்.

அரை நிமிட நடை.

மொபைல் லாண்டரியை இருவரும் நெருங்கினார்கள். ஒரு துணியை அயர்ன் செய்து கொண்டிருந்த அந்த இளைஞன் திரிபுரசுந்தரியை பார்த்ததும் கண்களில் சின்னதாய் அதிர்ந்தவன் அயர்ன் செய்வதை நிறுத்திவிட்டு உயர்த்திக் கட்டியிருந்த லுங்கியை இறக்கி விட்டுக் கொண்டான்.

திரிபுரசுந்தரி அவனை உற்றுப் பார்த்தாள். சற்றுமுன் பார்த்த வயர்லஸ் இயர்பட்ஸ் இப்போது அவன் காதுகளில் இல்லை. லாண்டரி வண்டிக்குள் செல்போன் இருப்பதற்கான அறிகுறியும் தெரியவில்லை.

" உம் பேர் என்ன ? " திரிபுரசுந்தரி இயல்பான குரலில் பேச்சை ஆரம்பித்தாள்.

அவன் கைகளைக் கட்டிக்கொள்ளாத குறையாக பவ்யமாய் " பழனிசாமி " என்றான்.

" இந்த ஏரியாவில் எத்தனை நாளா வேலை பார்க்கிறே ? "

" கடந்த ஒரு மாசமா "

" வீடு ? "

" அதோ அந்த வீடுதாம்மா " பின்புறம் திரும்பி அங்கேயிருந்த ஒரு சிறிய வீட்டைக் காட்டினான்.

" அந்த வீட்ல வேற யாராவது இருக்காங்களா ? "

" இல்லீங்கம்மா..... நான் மட்டுந்தான் "

திரிபுரசுந்தரி ஸ்டீபன்ராஜின் வீட்டைச் சுட்டிக்காட்டியபடி கேட்டாள்.

" அந்த வீட்ல ஒருத்தர் செத்துப் போயிருக்கார். அவர் யார்ன்னு உனக்குத் தெரியுமா ? "

" தெரியுங்கம்மா..... ஸ்டீபன்ராஜ் ஸார். அயர்ன் பண்ண என்கிட்டே பேண்ட் சர்ட் கொடுப்பார். ரொம்பவும் பிரியமா பேசுவார் "

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 29

" அவர் எப்படி செத்தார்ன்னு தெரியுமா ? "

" தற்கொலை பண்ணிகிட்டார்ன்னு பேசிக்கறாங்கம்மா....... "

" நீ என்ன நினைக்கிறே ? "

" எனக்கு தெரியல்லீங்கம்மா.... விஷயம் கேள்விப்பட்டப்ப மனசுக்கு ரொம்ப கஷ்டமாய் இருந்துச்சு. ரொம்பவும் நல்ல மனுஷன் கார்ல போகும்போது என்னைப் பார்த்துட்டா கையை ஆட்டிட்டு போவார் "

திரிபுரசுந்தரி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு குரலைத் தாழ்த்தினாள்.

" இதுவரைக்கும் பேசின பொய் போதும் ஹம்ஸன். இனிமேலாவது உண்மையைப் பேசுவோமா ? "

அந்த இளைஞனின் முகம் சட்டென்று ஒரு பெரிய மாறுதலுக்கு உட்பட்டது.

" ஹம்ஸனா.... என்னம்மா சொல்றீங்க என்னோட பேரு பழனிசாமி...... "

" அது இந்த ஏரியாவில் இருக்கிறவங்களுக்கு ஆனா எனக்கு ஹம்சன்தான் " என்று சொன்ன திரிபுரசுந்தரி தன்னுடைய செல்போனை எடுத்து வாட்ஸ்அப்புக்கு உயிர் கொடுத்து ஒரு போட்டோவை செல்போனின் ஸ்கீரின் முழுவதும் நிரப்பினாள். பக்கத்தில் நின்றிருந்த வளர்மதியைக் கூப்பிட்டாள்.

" வளர் "

" மேடம் "

" இந்த போட்டோவைப் பார்த்துட்டு நமக்கு எதிரில் நிக்கிற அந்த பழனிசாமியையும் பாரு. ரெண்டு பேரும் ஒரே நபரா இல்ல வெவ்வேறு ஆளான்னு நீயே சொல்லு "

வளர்மதி வாட்ஸ்அப்பில் இருந்த அந்தப் புகைப்படத்தைப் பார்த்தாள்.

சந்தன நிற கோட்டும், அடர் சிவப்பு நிற டையுமாய் தன்னுடைய அழகான பல்வரிசையைக் காட்டி சிரித்து இருந்தான் அந்த இளைஞன்.

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 29

போட்டோவை சில விநாடிகள் பார்த்துவிட்டு எதிரில் நின்றிருந்த பழனிசாமியைப் பார்த்தாள் வளர்மதி. பிறகு உறுதியான குரலில் சொன்னாள்.

" நோ டவுட் மேடம்....... ரெண்டு பேரும் ஒருத்தர்தான். சினிமாவில் வர்ற மாதிரி வெவ்வேறு கெட்டப். அவ்வளவுதான். யார் மேடம் இந்த ஆளு ? "

திரிபுரசுந்தரி மெலிதாய் புன்னகைத்தாள். " வளர்..... நீ பாட்டுக்கு அந்தாளு, இந்தாளுன்னு ஏக வசனத்தில் பேசிட்டிருக்காதே.... இவர் மிஸ்டர் ஹம்ஸவர்த்தன். அம்மா, அப்பா வெச்ச அந்தப் பேரை சுருக்கி இவர் ஹம்ஸன்னு வெச்சுகிட்டார். போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கிற ஷேடோ ஸ்க்வாட் விங்கில் இவர் ஃபர்ஸ்ட் கிரேடு ஆபீஸர். ரெண்டு வருஷத்துக்கு முந்திதான் இவர்க்கு கல்யாணம் நடந்தது. பொண்ணு யார் தெரியுமா.... ? ரிடையர்டு சீஃப் ஜட்ஜ் தீனதயாளன் ஸாரோட பொண்ணு ஷர்மிலி "

வளர்மதியின் அகன்ற விழிகளில் ஆச்சர்ய அலைகள் பரவியது.

" என்ன மேடம் சொல்றீங்க..... இவர் போலீஸ் டிபார்ட்மெண்டா ? "

" ஆமா..... இவர் ஷேடோ ஸ்க்வாட் விங்கில் போலீஸ் ஆபீஸராய் இருக்கிற விஷயம் எனக்கும் ரெண்டு வருஷத்துக்கு முந்திதான் தெரியும். ரிடையர்டு சீஃப் ஜட்ஜ் தீனதயாளன் என்னோட வாட்ஸ்அப்புக்கு ரெண்டு வருஷத்துக்கு முந்தி இந்த போட்டோவை அனுப்பி வெச்சு எனக்கு ஒரு மெஸேஜ் கொடுத்து இருந்தார். அந்த மெஸேஜில் என்னோட டாட்டர் ஷர்மிலிக்கு பார்த்து இருக்கிற மாப்பிள்ளை இவர்தான். பேரு ஹம்ஸவர்த்தன் என்கிற ஹம்ஸன்.

டிபார்ட்மெண்ட்டில் இவரைப் பத்தின குட்புக் எனக்கு வேணும். விசாரிச்சு சொல்ல முடியுமான்னு கேட்டிருந்தார். நானும் ஹம்ஸனுக்குத் தெரியாமே அவரைப்பத்தின குட்புக் விபரங்களை கலெக்ட் பண்ணி அனுப்பி வெச்சேன். கல்யாணம் நிச்சயமானதும் எனக்குத்தான் முதன்முதல்ல ஜட்ஜ் ஸார் போன் பண்ணி விஷயத்தைச் சொன்னார். கல்யாணம் நடந்த நேரத்துல நான் டெல்லியில் ஒரு ட்ரெயினிங்கில் இருந்ததால என்னால கல்யாணத்தை அட்டெண்ட் பண்ண முடியலை. ஜட்ஜ் ஸார் கிட்டே ஒரு தடவை போன்ல பேசின போது அவர் வெளிநாட்ல இருந்தார் "

திரிபுரசுந்தரி பேசிக்கொண்டிருக்கும்போதே ஹம்ஸன் ஒரு மெல்லிய சிரிப்போடு அவளை ஏறிட்டார்.

" ஸாரி மேடம்...... நீங்க என்னோட கல்யாணத்துக்கு வராத காரணத்தால என்னைப்பத்தி உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைன்னு நினைச்சேன். ஆனா என்னோட மாமனார் உங்க்கிட்டே என்னைப்பற்றி குட்புக் விபரங்களை கேட்டு வாங்கியிருக்கார் என்கிற விபரம் இப்பத்தான் எனக்குத் தெரியும் "

" பொதுவா போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கிறவங்களுக்கு ரெண்டு மூளை, நாலு கண்கள்ன்னு சொல்வாங்க.... என்னைப் பொறுத்தவரைக்கும் அது ஒரு உண்மையான ஸ்டேட்மெண்ட்தான். எனக்கு உங்க முகமும் சரி, உங்க பெயரும் சரி மனசுக்குள்ளே அழுத்தமாய் பதிஞ்சதுக்குக் காரணம் ஜட்ஜ் ஸார் எனக்குக் கொடுத்த அசைன்மெண்ட்தான். என்னோட வாட்ஸ்அப்புக்கு போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட போட்டோக்கள் எது வந்தாலும் அதை டெலிட் பண்ணாமே வெச்சிக்கிறது என்னோட பழக்கம் "

ஹம்ஸனின் புன்னகை பெரிதாயிற்று.

" உங்களுக்கு கீன் அப்ஸர்வேஷன் மேடம்........ "

" இந்த பாராட்டு எனக்கு சரியாய் பொருந்தாது ஹம்சன்... உங்களையும் உங்களோட நடவடிக்கையையும் ஸ்கேன் பண்ணினது இந்த வளர்மதிதான்" என்று சொன்ன திரிபுரசுந்தரி ஹம்சனுக்கு வளர்மதியை அறிமுகப்படுத்தினாள்.

" ஷி ஈஸ் வளர்மதி. ஹவுஸ் ஒய்ஃப். சமுதாய நலன் சார்ந்த அக்கறை அதிகம். போலீஸ் வேலையில் சேர ஆசைப்பட்டு முடியாமே போன காரணத்தால வீட்டுக்கும் வெளியுலகத்துக்கும் தெரியாமே எனக்கு உதவியாய் போலீஸ் இன்ஃபார்மர் வேலையைப் பார்த்துட்டிருக்காங்க ......... "

" க்ரேட் " என்று சொன்ன ஹம்ஸன் இரண்டு பேரையும் பார்த்தபடி தயக்கமான குரலில் பேச ஆரம்பித்தான்.

" போன மாசம் ஏழாம் தேதியில் இருந்து டெல்லி சி.பி.ஐ. மூலமா எனக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட்தான். இந்த மொபைல் லாண்டரி வேலை. நான் கண்காணிக்க வேண்டிய நபர் ஸ்டீபன்ராஜ் . அவர் எங்கே போகிறார்... யார் யாரையெல்லாம் பார்க்கிறார். அவரைத்தேடி வர்றவங்க யார் இது மாதிரியான விபரங்களை உடனுக்குடன் டெல்லி சி.பி.ஐ.க்கு அனுப்பி வைக்கிற வேலையைத்தான் இத்தனை நாளும் பார்த்துகிட்டு இருந்தேன் "

இப்போது வளர்மதி குறுக்கிட்டு கேட்டாள். " ஸ்டீபன்ராஜ் இப்போ உயிரோடு இல்லை. நான் அவரைப் பார்த்து பேச வீட்ல உட்கார்ந்துட்டிருக்கும்போதே அவர் தற்கொலை பண்ணிகிட்ட மாதிரி கொலை செய்யப்பட்டிருக்கார். ஈ.பி.டிபார்ட்மெண்ட் பணியாட்கள் மாதிரி கொலையாளிகள் செயல்பட்டு இருக்காங்க. இப்படிப்பட்ட ஒரு மரணத்தை நீங்க எதிர்பார்த்தீங்களா ? "

" இல்லை ..... எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவமும் எனக்கு அதிர்ச்சிதான். ஸ்டீபன்ராஜ் தொழில் ரீதியாய் அவர் ஒரு ஜெனிக்டீசியன். அவரை கண்காணிக்க சி.பி.ஐ.க்கு என்ன அவசியம் என்கிற இந்த கேள்விக்கும் எனக்கு விடை தெரியாது"

" இட்ஸ் ஓகே..... உங்க கோணத்தில் ஸ்டீபன்ராஜ் எப்படி.... ? அவர்கிட்டே ஏதோ தப்பு இருக்குன்னு நினைக்கிறீங்களா ? "

" அவர்கிட்டே தப்பு ஏதும் இருக்கிற மாதிரி எனக்குத் தெரியலை. ஏன்னா அவரைப் பார்க்க வர்றவங்களும் சரி, இவர் பார்க்கப் போகிற நபர்களும் சரி. பிரபல டாக்டர்களாகவோ, இல்லேன்னா பார்மசூடிகல் கம்பெனியைச் சேர்ந்தவங்களாத்தான் இருக்காங்க. ஆனா நேத்து ராத்திரி எட்டு மணி சுமார்க்கு ஸ்டீபன்ராஜைப் பார்க்க வந்த ஒரு நபர் என்னோட மனசுக்கு கொஞ்சம் நெருடலாய்ப்பட்டார் "

" யாரவர் ? "

" காரை அவர்தான் ஒட்டிட்டு வந்தார். அதோ அந்த மரத்துக்கு கீழே காரை நிறுத்திட்டு ஸ்டீபன்ராஜைப் பார்க்க நடந்து போனார். ஸ்டீபன்ராஜ் வீட்டுக்குள்ளே போறதுக்கு முன்னாடி ஒரு தடவை சுற்றும் பார்த்துகிட்டார். அவர்க்கு வயசு அறுபது இருக்கலாம். பார்க்க டீஸண்டாய் இருந்தார். அவர் வந்த காரோட ரெஜிஸ்ட்ரேஷன் நெம்பரை வெச்சு அவரோட பேரையும், விலாசத்தையும் தெரிஞ்சுகிட்டேன். அவரோட பேரு அபுபக்கர். அட்ரஸ் நெம்பர் 779, தென்றல் நகர் குறிச்சி "

திரிபுரசுந்தரி ஹம்ஸன் சொன்ன பெயரையும் முகவரியையும் தன் செல்போனின் நோட் பக்கத்தில் பதிவு செய்துக் கொண்டிருக்கும்போதே வளர்மதியின் செல்போன் ஒலிக்க ஆரம்பித்தது.

எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தாள். மறுமுனையில் மனோஜ் அழைத்துக் கொண்டிருந்தான்.

" சொல்லு மனோஜ், பொள்ளாச்சியிலிருந்து எப்ப வந்தே? "

" பத்து நிமிஷமாச்சு..... வளர்.... நீ இப்போ எங்கே இருக்கே ? ஸ்டீபன்ராஜ் வீட்டுக்குப் போனியா ? "

" போனேன் "

" பேசினியா ? "

" பேச முடியலை "

" ஏன் ? "

" நீ நேர்ல வா..... எல்லாத்தையும் சொல்றேன் "

" குரல் ஒரு மாதிரியாய் இருக்கு.... அங்கே ஏதாவது பிரச்சினையா ? "

" ஆமா "

" என்னான்னு சொல்லு "

வளர்மதி சற்றே தள்ளிப் போய் நின்று கொண்டு மனோஜிடம் எல்லாவற்றையும் சொல்ல ஆரம்பித்தாள்

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X