For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போன்ல யாரு வளர்?... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (30)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

வளர்மதி ஒரு இரண்டு நிமிஷ நேரத்தை செலவழித்து நடந்த சம்பவங்களையெல்லாம் கோர்வையாய் சொல்லி முடிக்க செல்போனின் மறுமுனையில் இருந்த மனோஜ் எல்லாவற்றையும் உன்னிப்பாய் உள்வாங்கிக் கொண்டு செயற்கையான பதட்டத்தோடு கேட்டான்.

” நீ ஸ்டீபன்ராஜை பார்க்கிறதுக்காக அவரோட வீட்ல வெயிட் பண்ணிட்டு இருக்கும்போதே வேலைக்காரிக்கும் தெரியாமே உனக்கும் தெரியாமே கொலையாளிகள் ஈ.பி.ஆட்கள் மாதிரி வந்து ஸ்டீபன்ராஜை தீர்த்துக்கட்டி தூக்கு போட்டுகிட்ட மாதிரி தொங்கவிட்டுப் போயிருக்காங்க.... இல்லையா ? ”

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 30

” ஆமா...... ”

” ஸ்டீபன்ராஜ் வீட்டை கண்காணிக்கிறதுக்காக மொபைல் லாண்டரி நபர் மாதிரி நடிச்சுகிட்டு இருந்த அந்த ஷேடோ ஸ்க்வாட் விங் ஆபீஸர் பேர் என்னான்னு சொன்னே வளர் ? ”

” ஹம்ஸன். முழுப்பேர் ஹம்ஸவர்த்தன். டெல்லி சி.பி.ஐ. மூலமா அவர்க்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட்படி ஸ்டீபன்ராஜை அவர் வேவு பார்த்து இருக்கார்”

” ஸ்டீபன்ராஜ் மேலே சி.பி.ஐ.க்கு என்ன சந்தேகம் ? ”

” தெரியலை.... அவரைப் பார்க்க யார் யார் வர்றாங்கன்னு நோட் பண்ணி அவங்களைப்பத்தின டீடெய்ல்ஸை கொடுக்கச் சொல்லியிருக்காங்க... ஹம்ஸனும் நோட் பண்ணி கொடுத்திருக்கார். நேத்து ராத்திரி எட்டு மணி சுமார்க்கு ஸ்டீபன்ராஜ் வீட்டுக்கு கார்ல வந்த ஒரு நபர் ஹம்ஸனோட மனசுக்கு ஒரு நெருடலை உண்டாக்கியிருக்கார். காரோட ரெஜிஸ்ட்ரேஷன் நெம்பரை வெச்சு காரோட ஒனர் யார்ங்கிறதை ட்ரேஸ் பண்ணிப் பார்த்த போது அபுபக்கர் என்கிற ஒரு நபரோட பேரும் அவரோட அட்ரஸீம் கிடைச்சிருக்கு...... அவரைப் போய்ப் பார்த்து ஒரு முறையான என்கொயரியை மேற்கொண்டால் ஸ்டீபன்ராஜ் கொலை செய்யப்பட்ட விஷயத்தில் ஏதாவது ஒரு புதுத் தகவல் கிடைக்க வாய்ப்பிருக்கு ”

” இட்ஸ் ஒகே.... நீ சொல்றதும் சரிதான். நானும் உடனே புறப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்து உங்க கூட ஜாய்ண் பண்ணிக்கிறேன். அந்த அபுபக்கர் யார்ங்கிறதை நானும் பார்க்கணும்..... ”

” மனோஜ்....... நீ இங்கே வந்து சேர எவ்வளவு நேரமாகும் ? ”

” அரை மணி நேரத்துக்குள்ளே வந்துடறேன்..... ”

” லேட் பண்ணிடாதே வா.... இந்த கேஸ்ல நாம நிறைய வேலை பார்க்க வேண்டியிருக்கு ”

” ம்... வந்துடறேன்...... ஸ்டீபன்ராஜ் ஒரு திறமையான ஜெனிக்டீசியன்,,,, உயிரியல் சம்பந்தமான பல விஷயங்களை ரொம்பவும் நுட்பமாய் விரல் நுனியில் வெச்சிருப்பார். பயோ டெக்னாலஜி சம்பந்தமாய் எந்த ஒரு கேள்வியைக் கேட்டாலும் தெளிவாய் பதில் சொல்லுவார். அவரோட உயிரைப் பறிச்ச கொலையாளிகள் யாராக இருந்தாலும் சரி, உடனடியாய் கண்டுபிடிச்சேயாகணும் ”

” எனக்கும் கமிஷனர் மேடத்துக்கும் அதே இன்டென்ஷன்தான்... நீ உடனடியாய் வந்து சேரு....... ”

வளர்மதி செல்போனின் இணைப்பைத் துண்டித்துவிட்டு கமிஷனர் திரிபுரசுந்தரியிடம் வர அவள் கேட்டாள்.

” போன்ல யாரு வளர் மனோஜா? ”

” ஆமா மேடம்.......அரை மணி நேரத்துக்குள்ளே ஸ்பாட்டுக்கு வந்துடறேன்னு சொன்னார் ”

” நோ வளர்..... மனோஜ்க்காக நாம காத்துட்டிருக்க முடியாது. உடனடியாய் நாம மூணு பேரும் அபுபக்கர் வீட்டுக்குப் போனாத்தான் இந்த கேஸை அடுத்த லெவலுக்கு கொண்டுட்டு போக முடியும். மனோஜ் இங்கே வந்து ஃபாரன்ஸிக் ஃபார்மாலீடீஸைப் பார்க்கட்டும். நீ போன் பண்ணிச் சொல்லிடு ”

” எஸ் மேடம்..... ” என்று சொன்னவள் செல்போனில் மனோஜை தொடர்பு கொள்ள முயன்றாள். மறுமுனை பிஸியாய் இருக்கவே மூன்று தடவை முயற்சி செய்து பார்த்துவிட்டு கமிஷனரிடம் திரும்பினாள்.

” லைன் என்கேஜ்ட் மேடம் ”

” சரி...... மனோஜோட போனுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்க வேண்டாம். அவர்க்கு ஒரு எஸ்.எம்.எஸ். குடுத்துடு. நாம கிளம்பிட்டே இருப்போம்” என்று சொன்ன திரிபுரசுந்தரி ஹம்ஸனை ஏறிட்டாள்.

” அபுபக்கரை மறுபடியும் பார்த்தா உங்களுக்கு அடையாளம் தெரியுமா ? ”

” தெரியும் மேடம் ”

” வாங்க சூட்டோடு சூட்டா போய் என்கொயர் பண்ணிடலாம். இந்த கேஸ்ல நாம தாமதிக்கிற ஒவ்வொரு விநாடியும் நமக்கு ஒரு மைனஸ் பாயிண்ட் ”

” நான் ரெடி மேடம்..... ஒரே ஒரு நிமிஷம். உள்ளே போய் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடறேன் ”

*****

குறிச்சி பகுதியில் நிசப்தமாய் இருந்த தென்றல் நகர்க்குள் ஜீப் நுழைந்து 779 எண்ணிட்ட வீட்டை சிரமம் இல்லாமல் கண்டு பிடித்து தன்னுடைய இயக்கத்தை நிறுத்திக்கொண்டு விட, திரிபுரசுந்தரி, வளர்மதி, ஹம்ஸன் மூன்று பேரும் இறங்கினார்கள். சாலையோரமாயிருந்த ஒரு பெரிய சரக்கொன்றை மரம் வெயிலை வடிகட்டி நிழலைப் பரப்பி வைத்திருக்க, அந்த நிழலில் நடந்து வீட்டின் காம்பெளண்ட் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே போனார்கள். லட்சக்கணக்கில் பணத்தை விழுங்கிவிட்டு மூன்று கார்கள் மூன்று நிறங்களில் பளபளத்தன. ஒரு டூவீலர் தூசி மண்டிப் போய் தெரிந்தது.

ஹம்ஸன் முன்னால் போய் வாசற்படியேறி அழைப்பு மணிக்கு வேலை கொடுக்க, சில விநாடிகளுக்குப்பிறகு மெல்ல கதவு திறந்தது. ஐம்பது வயதில் அந்த பெண் தெரிந்தாள். முகத்திலும் உடுத்தியிருந்த சேலையிலும் ஒரு பணிப்பெண்ணுக்குரிய லட்சணம்.

” மூன்று பேர்களையும் ஒரு சேரப் பார்த்ததும் அவள் லேசாய் மிரண்டாள். வந்து இருப்பவர்கள் போலீஸ் என்று தெரிந்ததும் வாய் உலர்ந்தாள். யா....யார்..... வேணும் ? ”

” அபுபக்கரைப் பார்க்கணும் ”

” அ...அ....அவர் வீட்ல இல்லையே ? ”

” எங்கே போயிருக்கார் ? ”

” எ....எ....எனக்குத் தெரியாது.....நான் இங்கே வேலைக்கு இருக்கேன் ”

” உம் பேர் என்ன ? ”

” வஹிதா..... ”

” வீட்ல வேற யார் இருக்காங்க ? ”

” யாருமில்லை....அவர்க்கு ஃபேமிலி கிடையாது. எதுக்காக அவரைப் பார்க்கணும் ? ”

” நீ மொதல்ல தள்ளி நில்லு ” ஹம்ஸன் சொல்லிக்கொண்டே உள்ளே போக அவள் விலகி நின்றாள். திரிபுரசுந்தரியும், வளர்மதியும் பின்தொடர்ந்து உள்ளே போனார்கள்.

வீட்டின் உள்ளே ஹால் விஸ்தாரமாய் தெரிய திரிபுரசுந்தரி கேட்டாள்.

” இவ்வளவு பெரிய வீட்ல அபுபக்கர் மட்டும்தான் இருக்காரா ? ”

” ஆமா ” வஹிதா தலையாட்டினாள்.

” அவரோட போட்டோ ஏதாவது இருக்கா ? ”

வஹிதா சுவர் அலமாரிக்குப் போய் அங்கே இருந்த ஒரு சிறிய ஆல்பத்தை எடுத்து வந்தாள்.

” இது போன வருஷம் அவர் மெக்காவுக்கு போறதுக்கு முன்னாடி எடுத்த போட்டோ ”

திரிபுரசுந்தரி அந்த போட்டோ ஆல்பத்தை வாங்கிப் பிரித்தாள்.

ஆல்பத்தின் முதல் பக்கத்திலேயே தோளில் போட்ட பச்சைத்துண்டோடும், தலையில் வலைக் குல்லாவுமாய் தெரிந்த நபரைக்காட்டி ஹம்ஸனிடம் கேட்டாள். ” நேத்து ராத்திரி நீங்க பார்த்த ஆள் இவர்தானா ? ”

ஹம்ஸன் பார்த்துவிட்டு தலையாட்டினார்.

” இவரேதான் மேடம் ”

திரிபுரசுந்தரி போட்டோ ஆல்பத்தைப் புரட்டி ஒவ்வொரு போட்டோவாய்ப் பார்த்தாள். எல்லா போட்டோக்களிலும் அபுபக்கர் மசூதி வாசல்களில் விதவிதமாய் போஸ் கொடுத்திருந்தார். முழு ஆல்பத்தையும் புரட்டிப் பார்த்துவிட்டு வஹிதாவை ஏறிட்டாள்.

” அபுபக்கர் எத்தனை மணிக்கு வீட்டை விட்டு போனார் ? ”

” காலையில பத்து மணிக்கெல்லாம் கிளம்பிப் போயிட்டார் ”

” அவரோட செல்போன் நெம்பர் தெரியுமா ? ”

” தெரியாது ”

” அவர் வீட்ல இல்லாத நேரத்துல ஏதாவது ஒரு முக்கியமான விஷயத்தை அவர்க்குத் தெரியப்படுத்தணும்ன்னா நீ என்ன பண்ணுவே ? ”

” அவர் வர்ற வரைக்கும் காத்துட்டிருப்பேன் ”

ஹம்ஸன் மாடியை அண்ணாந்து பார்த்துவிட்டு கேட்டார்.

” மாடியில் எத்தனை ரூம் ? ”

” நாலு ”

” வந்து காட்டு ”

வஹிதா தயக்கத்தோடு மாடிபடிகளில் ஏற முன்று பேரும் அவளைப் பின் தொடர்ந்தார்கள்.

*****

கோவையின் புறநகர்ப்பகுதியான சிறுவாணி நெடுஞ்சாலையில் காரை வேகமாய் விரட்டிக் கொண்டிருந்தார் அபுபக்கர்.

பக்கத்தில் பர்தா அணிந்திருந்த நர்மதா கலவரக்குரலில் கேட்டாள்.

” ஸார்.... இதுவரைக்கும் நான் நாலைஞ்சு தடவை கேட்டுட்டேன். நீங்க பதில் சொல்லாமே டென்ஷனோடு காரை ஒட்டிகிட்டு இருக்கீங்க ? ”

அபுபக்கர் அவள் பக்கம் திரும்பாமல் சாலையில் கவனமாய் இருந்தபடி கேட்டார். ” உனக்கு இப்ப என்ன தெரியணும் ? ”

” நாம இப்ப எங்கே போறோம்.... ஏன் இவ்வளவு டென்ஷனாய் இருக்கீங்க ? ”

” செம்மேடு போறோம் ”

” அங்கே யார் இருக்காங்க ? ”

” அங்கே யார் இருந்தா உனக்கென்ன.... பேசாமே வா ” அபுபக்கர் அவள் மீது எரிந்து விழுந்து கொண்டிருக்கும் போதே அவருடைய செல்போன் வைபரேஷனில் மெலிதாய் கர்ஜித்தது. செல்போனை ஆன் செய்துவிட்டு காதுக்கு மைக்ரோ ரிஸீவரைக் கொடுத்தார்.

” சொல்லு மனோஜ் ”

” ஸார்.... செம்மேடு போய் சேர்ந்துட்டீங்களா ? ”

” இல்லை..... ஆலாந்துறையை க்ராஸ் பண்ணிட்டேன். இன்னும் ஒரு பதினைஞ்சு நிமிஷத்துக்குள்ளே போயிடுவேன். அங்கே நிலைமை எப்படி ? ”

” நான் இப்போ ஸ்டீபன்ராஜ் வீட்ல ஃபாரன்ஸிக் ஆட்களோடு அவங்களுக்கு உதவி பண்றமாதிரி பாவ்லா பண்ணிட்டு இருக்கேன். ஸ்டீபன்ராஜோட பாடி அடாப்ஸி க்காக ஜி.ஹெச்சுக்கு புறப்பட்டு போயாச்சு. ... கமிஷனர் திரிபுரசுந்தரி, ஷேடோ ஸ்க்வாட் ஆபீஸர் ஹம்ஸன், வளர்மதி இந்த மூணு பேரும் உங்க வீட்டுக்குப் போய் கிளறிகிட்டு இருக்காங்க ”

” வஹிதா உனக்கு போன் பண்ணிப் பேசினாளா ? ”

” இப்பத்தான் ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடி பேசினா ”

” மனோஜ்......நீ சரியான நேரத்துல தகவல் கொடுத்ததாலதான் நான் என்னை சுதாரிக்க முடிஞ்சுது. வீட்டை விட்டு உடனடியாய் வெளியேறவும் முடிஞ்சுது ”

” நர்மதா எப்படியிருக்கா ? ”

”அரண்டு போயிருக்கா. செம்மேடு போனதும் புரிய வைக்கணும் ”

” ஸார்... இனிமே நாம எச்சரிக்கையோடு ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கணும் ”

” புரியுது.... தமிழ்நாடு போலீஸ் மட்டும் இதுல இன்வால்வ் ஆகியிருந்தா பிரச்சினையில்லை. டெல்லி சி.பி.ஐ.யும் ஷேடோ ஸ்க்வாட் போலீஸீம் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் எடுத்துகிட்டு நம்மை கார்னர் பண்ணப் பார்க்கிறாங்க... ”

” ஈஸ்வர்க்கு இந்த விஷயத்தை கன்வே பண்ணிட்டீங்களா ? ”

” பண்ணிட்டேன் ”

” என்ன சொன்னார் ? ”

” சிரிச்சார்..... செம்மேட்ல இருக்கிற என்னோட கெஸ்ட் ஹவுஸீக்கு போய் ரெண்டு நாள் ரெஸ்ட் எடு. அதுக்குள்ளே எல்லாப் பிரச்சினையும் காணாமல் போயிடும்ன்னு சொன்னார் ”

” ஈஸ்வர் சிரிச்சார்ன்னா அது நமக்கு ஒரு பிரச்சினையே இல்லைன்னு அர்த்தம். நான் மறுபடியும் ஒரு மணி நேரம் கழிச்சு போன் பண்றேன் ஸார் ”

”மனோஜ்..... நீயும் கொஞ்சம் எச்சரிக்கையோடு இரு. கமிஷனர் திரிபுரசுந்தரியோ, வளர்மதியோ நீ எங்களுக்காக வேலை பார்க்கிற விஷயத்துல கொஞ்சம் கூட உன் மேல அவங்களுக்கு சந்தேகம் வரக்கூடாது ”

” வராது ஸார்.... கமிஷனர் திரிபுரசுந்தரிக்கு நான் ரொம்பவும் நம்பிக்கையான ஃபாரன்ஸிக் பர்ஸன். அதேமாதிரி வளர்மதிக்கு ஆத்மார்த்தமான காலேஜ்மேட். ரெண்டு பேர்க்கும் என் மேல ஊசிமுனை அளவுக்குக்கூட சந்தேகம் வர வாய்ப்பில்லை. அப்படி சந்தேகம் வர்ற மாதிரி நடத்துக்கவும் மாட்டேன். எந்த நேரத்துல எதைப் பேசணும், எப்படி பேசணும்ன்னு எனக்குத் தெரியும் ஸார்”

”குட்.. நான் செம்மேடு போய்ச் சேர்ந்ததும் உனக்கு போன் பண்றேன் சொல்லிவிட்டு செல்போனை அணைத்தார் அபுபக்கர்.

அதே விநாடி - நர்மதா நடுக்கத்தோடு குரல் கொடுத்தாள்.

” ஸ....ஸ....ஸார்”

” என்ன ? ”

” போ....போ.....போலீஸ் ”

அபுபக்கர் எகிறும் இதயத்தோடு முன்பக்கம் பார்த்தார். ஐம்பது மீட்டர் தொலைவில் போலீஸ் ஜீப் ஒன்று தெரிய ஒரு சிறு போலீஸ் படை அந்த வழியாக போகும் வாகனங்களை நிறுத்தி சோதனை போட்டுக்கொண்டிருந்தது.

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X