For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எ.....எ....எதுக்காக சோதனை போடறாங்க.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (31)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

அபுபக்கர் காரின் வேகத்தை சட்டென்று குறைத்தார்.

போலீஸ் சற்றுத் தொலைவில் வாகனங்களை நிறுத்தி சோதனை போட்டுக்கொண்டு இருப்பதைப் பார்த்ததும் நெற்றி வியர்த்தவராய் நர்மதாவை பார்த்தார்.

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 31

" எ.....எ....எதுக்காக சோதனை போடறாங்கன்னு தெரியலையே ஒருவேளை என்னோட வீட்டை சோதனை போட்டுகிட்டு இருக்கிற திரிபுரசுந்தரியோட கைக்கு என்னோட போட்டோ கிடைச்சு அதை சிட்டியோட பவுண்டரி செக் போஸ்ட்களுக்கு அனுப்பியிருப்பாளோ ? "

" அப்படியிருக்க வாய்ப்பில்லை ஸார். இது ஏதோ ஒரு வழக்கமான வாகன பரிசோதனைதான்னு நினைக்கிறேன் "

" எதுக்கு ரிஸ்க்....... ? காரை ரிவர்ஸ் எடுத்து போயிடலாம் "

நர்மதா திரும்பிப் பார்த்துவிட்டு சொன்னாள். "ஸார்..... நம்ம காரை இப்ப ரிவர்ஸ் எடுக்க முடியாது. கார்க்குப் பின்னாடி ஒரு வேனும், அதுக்குப் பின்னாடி ஒரு காரும் நின்னுட்டிருக்கு "

நர்மதா சொல்லிக்கொண்டிருக்கும்போது இன்ஸ்பெக்டர் ஒருவர் வேகவேகமாய் அபுபக்கரிடம் வந்தார்.

"என்ன ஸார்..... பார்க்கிறதுக்கு டீஸண்டா படிச்சவங்க மாதிரி இருக்கீங்க... காரை ஸ்டார்ட் பண்ணும்போதே சீட் பெல்ட் போட்டுக்கணும்ன்னு உங்களுக்குத் தோணாதா ? "

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 31

அபுபக்கரின் உடம்பு வியர்ப்பதை நிறுத்தியது. அவரையும் அறியாமல் நிம்மதி பெருமூச்சொன்று வெளிப்பட உதடுகளில் புன்னகை அரும்பியது.

" ஸாரி..... இன்ஸ்பெக்டர்... ஒரு அவசர வேலையாய் புறப்பட்டேன். எப்பவுமே பெல்ட் போட்டுக்குவேன். இன்னிக்குன்னு பார்த்து எப்படியோ மறந்துட்டேன் "

"எல்லாரும் இதையேத்தான் சொல்றீங்க. டிராஃபிக் ரூல்ஸையே ஃபாலோ பண்ணாதவங்க வேற எதைத்தான் ஃபாலோ பண்ணி வாழ்க்கையில் முன்னுக்கு வருவீங்க ? "

" வெரி வெரி ஸாரி இன்ஸ்பெக்டர்"

" வெறும் ஸாரி மட்டும் சொன்னா போதாது ஸார். ஃபைன் ஆயிரம் ரூபாய் கட்டுங்க.... " என்று சொன்ன இன்ஸ்பெக்டர் திரும்பிப் பார்த்து குரல் கொடுத்தார்.

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 31

" குமரேஷ் "

" ஸார் " கான்ஸ்டபிள் ஒருவர் ஒடி வந்தார்.

" ஸார் சீட் பெல்ட் போடலை. ஃபைனை கலெக்ட் பண்ணிட்டு அனுப்பிடு "

" எஸ் ஸார் " என்று சொன்ன அந்த கான்ஸ்டபிள் கையில் வைத்து இருந்த ஸ்வைப்பிங் டிவைஸோடு கார்க்குள் இருந்த அபுபக்கரிடம் குனிந்தார்.

" என்ன ஸார்.... வயசு பசங்களே கார் ஒட்டும்போது சீட் பெல்ட் போட்டுக்கறாங்க. நீங்க பெல்ட் போடாமே கார் ஒட்டலாமா ? "

" எப்படியோ மறந்துட்டேன் "

" சரி.... சரி.... பேர் சொல்லுங்க "

அபுபக்கர் தயங்கினார். " அது.... அது.... வந்து என் பேரு ? "

" என்ன ஸார்... பேரைக்கூட மறந்துட்டீங்களா ? "

கொஞ்சம் டென்ஷன் அதான்.... என் பேர் அபுபக்கர் "

" ஆர்.ஸி.புக்கை எடுங்க "

அபுபக்கர் நர்மதாவை பார்க்க அவள் காரின் டேஷ்போர்ட்டைத் திறந்து ஆர்.ஸி.புக்கை எடுத்து கான்ஸ்டபிளிடம் கொடுத்தாள். அவர் ஒரு பார்வை பார்த்துவிட்டு ஸ்வைப்பிங் டிவைஸில் தகவல்களை பதித்துக்கொண்டு அபுபக்கரிடம் நீட்டினார். அவர் வாங்கி பாஸ்வேர்ட்டை எண்களின் மேல் வைத்து ஒற்றி எடுக்க ஸ்வைப்பிங் டிவைஸ் ஒரு ரசீதை வெளியே தள்ளியது. அதை உருவி கொடுத்தபடியே அபுபக்கரிடம் கான்ஸ்டபிள் சொன்னார்.

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 31

" இனிமேல் கார்ல ஏறி உட்கார்ந்ததுமே உங்களுக்கு சீட் பெல்ட்டை போடணும்ங்கிற ஞாபகம் வந்துடும் ஸார். அப்படியும் ஞாபகம் வரலைன்னா இந்த ரசீதை கார் கண்ணாடியோட மேல் ஸைடில் ஒட்டிக்குங்க. முறைக்காதீங்க ஸார்... எல்லாமே உங்களோட ஸேஃப்டிக்காகத்தான் சொல்றோம். ம்....காரை எடுங்க "

அபுபக்கர் சீட் பெல்ட்டை அணிந்துகொண்டு காரை நகர்த்தினார்.

*****

கார் செம்மேடு கிராமத்தின் நெரிசலான பகுதிகளை முடித்துக்கொண்டு ஒரு தென்னந்தோப்பின் நடுவில் கோணல் மாணலாய் தெரிந்த மண்பாதையில் குதித்து குதித்து ஒடி அரை கிலோமீட்டர் தூரம் பயணித்ததும் அந்த பங்களா நர்மதாவின் பார்வைக்கு புலப்பட்டது.

கார் மேலும் ஒரு நூறு மீட்டர் தூரம் ஒடி அந்த காம்பெளண்ட் கேட்டுக்கு முன்பாய் போய் நின்றது. ஹார்னை அவர் அடிக்க அடிக்கவே நர்மதா நடுக்கமான குரலில் கேட்டாள்.

" ஸ....ஸார்.... இந்த பங்களா ? "

" ஈஸ்வரோடது....... "

" இந்த ஏரியாவை பார்த்தாலே பயமாய் இருக்கு ஸார் "

" முதல்தடவையாய் பார்க்கிறவங்களுக்கு அப்படித்தான் இருக்கும். ஒரு ரெண்டு நாள் தங்கினா பழகிடும் "

இப்போது காம்பெளண்ட் கேட் சத்தம் இல்லாமல் பின்வாங்க அபுபக்கர் காரை உள்ளே நுழைத்தார். கேட்டின் அருகே ஆறடி உயரத்தில் திடகாத்ரமாய் நின்றிருந்த அந்த செக்யூரிட்டி நபர் கார் அருகே குனிந்து சல்யூட் வைத்தான்.

" என்ன...... ஜோன்ஸ் எப்படியிருக்கே ? "

" நல்லாயிருக்கேன் ஸார் "

" தொப்பை போட்டிருக்கே. உடம்பை கவனி..... அடுத்த தடவை உன்னைப் பார்க்கும்போது தொப்பை இருக்கக்கூடாது..... "

" இருக்காது ஸார் " அவன் மறுபடியும் சல்யூட் வைக்க கார் உள்ளே போயிற்று. நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. அபுபக்கர் காரை ஒரு பெரிய ஷெல்டர்க்குள் நிறுத்திவிட்டு நர்மதாவிடம் திரும்பினார்.

" நாய்கள் குரைக்கிற சத்தம் கேட்குதா ? "

" கேட்குது ஸார் "

" மொத்தம் எட்டு நாய்கள்.... எல்லாமே கோம்பை. எட்டு நாய்களையும் பகல்ல கட்டிப்போட்டுட்டு ராத்திரியில் அவிழ்த்து விட்டுடுவாங்க. பழக்கமில்லாத ஆட்கள் யாரும் உள்ளே நுழைய முடியாது. மீறி நுழைஞ்சா உடம்புல ஒரு கிலோ சதை கூட மிஞ்சாது"

நர்மதாவின் அடி வயிற்றில் பயம் ஒரு கல்லைப் போல் அடைத்துக் கொண்டது. அபுபக்கர் காரினின்றும் இறங்கினார்.

" என் பின்னாடியே வா...... " சொல்லிவிட்டு அவர் வேகமாய் நடக்க ஆரம்பித்துவிட நர்மதா சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே நடந்தாள். நாய்கள் இன்னமும் குரைத்துக் கொண்டிருந்தது. க்ரானைட் கற்களால் ஆன போர்டிகோவையொட்டி இருந்த பெரிய படிகளில் தாவி ஏறிய அபுபக்கர் எதிர்பட்ட பெரிய ஹாலுக்குள் நுழைந்து இடது பக்க மூலையில் இருந்த அந்த அறையை நோக்கிப் போனார். நர்மதா மிரண்ட பார்வையோடு தொடர்ந்தாள். முகம் வியர்த்து வழிந்தது. அறைக்கு முன்பாய் வந்து நின்ற அபுபக்கர் வெறுமனே சாத்தப்பட்டு இருந்த கதவைத் திறந்து உள்ளே எட்டிப் பார்க்க, ஈஸ்வர் ஒரு சோபாவுக்கு சாய்ந்து உட்கார்ந்தபடி எதிரில் இருந்த டி.வியில் டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தார். அபுபக்கரைப் பார்த்ததும் மலர்ந்தார்.

" வா..... அபு....... " என்றவர் பின்னால் வந்து கொண்டிருந்த நர்மதாவைப் பார்த்ததும் மெலிதாய் புன்னகை செய்தார்.

" என்னம்மா...... இப்படி வேர்த்து வழிஞ்சுட்டு வர்றே ? "

" எனக்கு பயமாயிருக்கு ஸார் "

" எதுக்குப் பயம்....? போலீஸ் அபுபக்கரோட வீட்டுக்கு நுழைஞ்சுட்டாங்களேன்னு நினைச்சு பயப்படறியா ? அது எல்லாமே அடுத்த இருபத்து நாலு மணி நேரத்துக்குள்ளே சரியாயிடும். நான் பேச வேண்டியவங்ககிட்டே பேசி செய்ய வேண்டியது எல்லாம் செஞ்சுட்டேன். ஒரு துளி பயம் கூட உனக்கு வேண்டாம். தைரியமாய் இரு "

" ஸ....ஸார்..... நான் என்ன சொல்ல வர்றேன்னா ? "

" நீ ஒண்ணையும் சொல்லாதேம்மா...... மொதல்ல மூஞ்சியைத் தொடைச்சுகிட்டு உட்கார்..... அபு நீயும் உட்கார் "

அபுபக்கரும், நர்மதாவும் ஈஸ்வர்க்கு எதிரேயிருந்த சோபாவில் உட்கார்ந்தார்கள். அவர் டி.வி.திரையை இருட்டாக்கிவிட்டு அருகில் இருந்த இண்டர்காம் ரிஸீவரை எடுத்து பங்களாவின் கிச்சன் செக்சனுக்கு பேசினார்.

" மாதவன்...... மூணு க்ரீன் டீ கொண்டு வந்துடு. அப்படியே ஸ்நாக்ஸ் சிக்கன் பக்கோடா ஒரு ப்ளேட். காரம் அதிகம் வேண்டாம் "

ரிஸீவரை வைத்துவிட்டு நர்மதாவை ஒரு புன்னகையால் நனைத்தார்.

" நர்மதா.... நீ உன்னோட தோழி சில்பாவோட விவகாரத்துல எங்களுக்கு பண்ணின உதவியை நாங்க என்னிக்குமே மறக்கமாட்டோம். நானும் அபுபக்கரும் இருக்கிறவரைக்கும் நீ யார்க்காகவும், எதுக்காகவும் பயப்பட வேண்டியதில்லை. முக்கியமா நீ போலீஸீக்கு பயப்பட வேண்டியதே இல்லை. அந்த போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரியையும், வளர்மதியையும் அவங்க போகிற போக்கில் போகவிட்டு ஒரு சரியான சந்தர்ப்பத்தைப் பார்த்துதான் அந்த ரெண்டு பேரையும் கார்னர் பண்ணனும். அதுவரைக்கும் அவங்களோட நடவடிக்கைகளை பொறுமையாய் கண்காணிச்சுட்டு வரணும். அவங்க எதுமாதிரியான நடவடிக்கை எடுத்தாலும் சரி, அடுத்த நிமிஷமே அது நம்ம காதுக்கு வந்துடும். காரணம் ஃபாரன்ஸிக்கில் வேலை பார்க்கிற மனோஜ் அவங்க கூடவே இருக்கிறதுதான் "

"நல்லா சொல்லு ஈஸ்வர்.... நானும் எத்தனையோ வாட்டி சொல்லிட்டேன். நர்மதா பயத்திலிருந்து வெளியே வர்ற மாதிரி தெரியலை "

அபுபக்கர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கையில் ஒரு பெரிய ட்ரேயுடன் அந்த அறைக்குள் நுழைந்தான் ஒரு இளைஞன். காற்றில் பக்கோடா வாசனை.
அபுபக்கர் அந்த இளைஞனைப் பார்த்து கேட்டார்.

" என்ன மாதவன் எப்படியிருக்கே ?"

டிரேயை டீபாயில் வைத்தபடி "நல்லாயிருக்கேன் ஸார் " என்றான் மாதவன்.

" போன மாசம் நான் இங்கே வந்தப்ப நீ இல்லை. ஊருக்குப் போயிருந்ததாய் சொன்னாங்க "

" ஆமா ஸார்.... ஊர்ல அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. போய் நாலைஞ்சு நாள் இருந்துட்டு வந்தேன் "

" எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போறே ?"

வீட்ல பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க ஸார். அநேகமாய் இந்த வருஷத்துக்குள்ளே கல்யாணம் முடிஞ்சுடும் " என்று அபுபக்கரைப் பார்த்து சிரிப்போடு சொன்னவன் ஈஸ்வரிடம் திரும்பினான்.

" வேற ஏதாவது வேணுமா ஸார் ?"

" தேவைப்பட்டா போன் பண்றேன்..... நீ..... போ"

மாதவன் தலையாட்டிவிட்டு நகர்ந்துவிட, ஈஸ்வர் டீபாயின் மேல் இருந்த க்ரீன்டீ கோப்பையை எடுத்துக்கொண்டார். அபுபக்கரும் நர்மதாவும் கோப்பைகளை எடுத்துக்கொள்ள ஈஸ்வர் சொன்னார்.

"சிக்கன்பக்கோடா எடுத்துக்கோம்மா. மாதவனோட ஸ்பெஷல் அயிட்டம் இது"

" ஸாரி ஸார்.... நான் ப்யூர்லி வெஜ். என்னிக்குமே நான்வெஜ் சாப்பிட்டதில்லை "

" அதனாலதான் உனக்கு தைரியமில்லை" சொன்னவர் ஒரு சிக்கன் பீஸை எடுத்து வாயில் போட்டுக்கொண்ட விநாடி அவருடைய இரிடியம் செல்போன் வித்தியாசமான டோனில் அழைத்தது. எடுத்துப்பார்த்தார். மறுமுனையில் மனோஜ்.

ஒரு வாய் க்ரீன் டீயை விழுங்கிவிட்டு கேட்டார். " என்ன மனோஜ் ஏதாவது புது செய்தி உண்டா? "

"அபுபக்கர் வீட்டிலிருந்து கமிஷனர் திரிபுரசுந்தரியும், வளர்மதியும் அந்த ஷேடோ ஸ்க்வாட் ஆபீஸர் ஹம்ஸனும் திரும்பிட்டாங்க ஸார். எந்த ஒரு தடயமும் கிடைக்கலைன்னு பேசிகிட்டாங்க "

" தடயம் எப்படி கிடைக்கும்..... இருந்தாத்தானே கிடைக்கும் ? "

" ஸார்.... உங்ககிட்டே ஒரு விஷயத்தை ஷேர் பண்ணிக்க விரும்பறேன் "

" என்ன ? "

" போலீஸ் டிபார்ட்மெண்டைக்காட்டிலும் வளர்மதிதான் நம்ம விஷயத்துல ரொம்பவும் தீவிரமாய் இருக்கா. அவ கண்டுபிடிக்கிற ஒவ்வொரு புது விஷயமும் இன்வெஸ்டிகேஷன் பண்ற போலீஸ் ஆபீஸர்ஸீக்கு உதவிகரமாய் இருக்கு.....அவளோட வேகத்தைக் குறைக்கணும் "

" என்ன பண்ணலாம் சொல்லு "

" அவளை முடிச்சுடலாம் ஸார்.... "

" பாவம் குடும்ப பெண்ணாச்சேன்னு பார்த்தேன் "

" பாவத்தைப் பார்த்தா நாளைக்கு நாம மாட்டிக்குவோம் ஸார்.... போலீஸ் டிபார்ட்மெண்ட்ல உங்களுக்கு எவ்வளவு பெரிய செல்வாக்கு இருந்தாலும் ஏதாவது ஒரு நாள் அது செல்லாத ரூபாய் நோட்டாய் மாறிடும் "

" இப்ப நீ என்ன சொல்ல வர்றே ? "

" வளர்மதி உயிரோடு இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் அது நமக்கு சமாதி கட்டறதுக்கான ஒவ்வொரு செங்கல்லுக்கு சமம் "

" அப்படீன்னா ஒண்ணு செய் "

" என்ன ஸார் ? "

" அந்த வேலையை நீயே பண்ணிடு.... "

" நா...நானா ? "

" நீயேதான் "

" நான் எப்படி ஸார் பண்ண முடியும் ? "

" நாளைக்கு ஒரு நாள் ஆபீஸீக்க்கு லீவு போட்டுட்டு செம்மேடு பங்களாவுக்கு வா. சொல்றேன் "

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30,], 31, 32]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X