For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அபு என்னாச்சு?.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (32)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

” நான் எத்தனை மணிக்கு ஸார் வரட்டும்?” மனோஜ் கேட்க ஈஸ்வர் சிரித்தார்.

” நாளைக்கு காலையில் பதினோரு மணிக்கு சரியா வந்துடு. லேட் பண்ணிடாதே ”

” வந்துடறேன் ஸார் ” என்று சொன்ன மனோஜ் செல்போனில் மெல்ல குரலை இழுத்தான்.

” அ.....அ......அப்புறம் ஒரு விஷயம் ஸார் ”

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 32

என்ன சொல்லு? ”

” கடந்த ரெண்டு மாசமா எனக்கு வர வேண்டிய அமெளண்ட் வரலை ஸார் ”

” அபுபக்கர்கிட்டே சொல்லியிருந்தா அவர் ஏற்பாடு பண்ணியிருப்பாரே ? ”

” அமெளண்ட் வேணும்ன்னு வாயைத் திறந்து கேட்கிறதுக்கு ஒரு மாதிரி இருந்தது ஸார் அதான்....... ”

” சரி..... நீ நாளைக்கு வரும்போது அந்தப் பணத்தை வாங்கிக்கலாம். கூடவே வளர்மதியை தீர்த்துக் கட்டறதுக்கு தனியா ஒரு அமெளண்ட்டை ஃபிக்ஸ் பண்ணிக்கலாம் ”

ஈஸ்வர் பேசிவிட்டு செல்போனை அணைத்தபடி தனக்கு முன்பாய் உட்கார்ந்திருந்த அபுபக்கரை ஏறிட்டார்.

” மனோஜீக்குப் போய் சேர வேண்டிய பணம் போய்ச் சேரலையாமே...

அபு என்னாச்சு ? ”

” மறந்துட்டேன். கமிஷனர் திரிபுரசுந்தரி. சி.பி.ஐ. சில்பா, வளர்மதி இவங்க மூணு பேரும் கடந்த ஒரு வார காலமாய் நம்ம நார்மலான வாழ்க்கையையே ஸ்பாயில் பண்ணிட்டாங்க ஈஸ்வர். அதனால சில விஷயங்களை சரியா கவனிக்க முடியலை. அப்படி கவனிக்காமே போன விஷயங்களில் இந்த மனோஜீக்கு நாம அனுப்ப வேண்டிய பண விஷயமும் ஒண்ணு ” தயக்க குரலில் அபுபக்கர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஈஸ்வர் மெல்ல சிரித்தார்.

அபுபக்கர் திகைத்தார்.

” ஈஸ்வர் எதுக்காக இந்த சிரிப்பு ? ”

” உனக்குப் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிற நர்மதா இப்போ எதுமாதிரியான நிலைமையில் இருக்கான்னு ஒரு செக்கண்ட் பாரு”

குழப்பத்தோடு அபுபக்கர் திரும்பிப் பார்த்தார். சற்று முன்பு வரை சோபாவில் நிமிர்ந்து உட்கார்ந்திருந்த நர்மதா இப்போது சரிந்து ஒரு பக்கமாய் தலையைச் சாய்த்து கண்களை மூடியிருந்தாள்.

திடுக்கிட்டுப் போனவராய் ஈஸ்வரைப் பார்த்தார் அபுபக்கர்.

” ஈஸ்வர்...... நர்மதாவுக்கு என்னாச்சு? ”

” அவ இப்போ மயக்கத்துக்குப் போயிட்டா ”

” எப்படி ? ”

” சாப்பிட்ட க்ரீன் டீயில் ஒரு நைட்ரோஜன் மாத்திரை போட்டதோட பலன்தான். நீயும் நானும் சாப்பிட்ட க்ரீன் டீயில் அந்த மாத்திரை இல்லை. மாதவனோட கைங்கர்யம் இது ”

” ஈஸ்வர்...... நர்மதாவை எதுக்காக இப்படி ? ”

” அபு.... நாம இப்போ சில விஷயங்களை மனம்விட்டு பேசி தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கோம். போலீஸோட ஆசீர்வாதம் நமக்கு என்னிக்குமே கிடைச்சுட்டிருக்கும்ன்னு நம்பிகிட்டு கண்ணை மூடிகிட்டு இருக்கிறது தப்பு. சட்டத்துக்கு விரோதமாய் நாம ஏதோ பண்ணிட்டு இருக்கிறோம்ன்னு நர்மதாவுக்கு தெரியுமே தவிர என்ன பண்ணிகிட்டிருக்கோம்ன்னு அவளுக்கு தெரியாது. தெரியவும் கூடாது. தெரிஞ்சா அவ்வளவுதான்” என்று சொல்லிக் கொண்டே போன ஈஸ்வர் இண்டர்காம் போனின் ரிஸீவரை எடுத்து ஒரு எண்ணை அழுத்திவிட்டு பேசினார்.

” மாதவன்..... நர்மதாவுக்கு நீ போட்டு கொடுத்த க்ரீன் டீ தன்னோட வேலையை பண்ணி முடிச்சுடுச்சு. அவளைத் தூக்கிட்டு போய் அவுட் ஹவுஸ் ரூம்ல படுக்க வை. என்னோட கணக்குப்படி அவளுக்கு இன்னிக்கு ராத்திரி எட்டுமணிக்கு மேல்தான் சுய உணர்வு திரும்பும். அவளுக்கு சுய உணர்வு திரும்பறதுக்குள்ளே நாம சில முக்கியமான வேலைகளை பார்க்க வேண்டியிருக்கு. நீ உடனடியா புறப்பட்டு வா ”

ஈஸ்வர் பேசிவிட்டு ரிஸீவரை வைக்க வைக்கவே அபுபக்கர் பதட்டம் தணியாத குரலில் கேட்டார்.

” ஈஸ்வர்...... ஏதோ முக்கியமான வேலைகள்ன்னு சொன்னியே அது என்ன? ”

ஈஸ்வர் சிரித்தார். ” உனக்குத் தெரியாமலா அதைப் பண்ணப் போறேன். நீயும் நானும் இந்த ப்ராஜக்ட்ல இறங்கி மும்முரமாய் வேலை பார்த்துட்டு இருக்கோம். நீ திரைமறைவில் இருந்து எனக்கு உதவி பண்ணிட்டிருக்கே. நான் இந்த சமூகத்துக்கு நல்லது பண்றமாதிரி வசதியில்லாத ஏழைப்பெண்களுக்கு இலவச திருமணங்களை நடத்தி அந்தப் பெண்களை சமயம் பார்த்து நம்ம ப்ராஜக்ட்டுக்கு பயன்படுத்திட்டு வர்றேன். இதுநாள் வரைக்கும் ஊமை கனவு கண்ட மாதிரி போயிட்டிருந்த நம்ம விஷயங்கள் இப்போ வெளியே தெரிய ஆரம்பிச்சிருச்சு. சி.பி.ஐ.யிலிருந்து நம்மை உளவு பார்க்க வந்த சில்பாவை நர்மதாவோட உதவியோடு கடத்தினோம். சில்பாவை கடத்தறதுக்கு சரியான இடம்ன்னு நீ ஆர்.எஸ்.புரத்துல இருக்கிற ஜட்ஜ் பங்களாவைச் சொன்னே. நான் அது வேண்டாம் யாராவது பார்த்துட்டா விஷயம் போலீஸீக்கு போயிடும்ன்னு சொன்னேன். நீ கேட்கலை...... கடைசியில் என்னாச்சுன்னு உனக்கே தெரியும். நர்மதா போலீஸ் வளையத்துக்குள்ளே வந்துட்டா. நல்லவேளையா மனோஜ் நமக்கு விசுவாசமாய் இருக்கிறதால போலீஸ் எடுத்து வைக்கிற ஒவ்வொரு ஸ்டெப்பும் நமக்குத் தெரியுது, போலீஸ் பிடியிலிருந்து நர்மதாவை காப்பாத்தவும் முடியுது ” ஈஸ்வர் பேச பேச அபுபக்கர் கையமர்த்தினார். ”

"ஸாரி ஈஸ்வர்..... அந்தப் பழைய ஜட்ஜ் பங்களா பக்கம் யாரும் போக மாட்டாங்கன்னு நினைச்சேன். எவனோ ஒரு ப்ரஸ் ரிப்போர்ட்டர் பார்த்திட்டான் ”

” சரி... அது முதல் தப்பு.... தெரியாமே கெஸ் பண்ணிட்டே. ஆனா ரெண்டாவது தப்பை பண்ணும் போதாவது ஒரு ரெண்டு நிமிஷம் யோசனை பண்ணியிருக்கலாம் ”

” ஜெனிக்டிஸ்ட் ஸ்டீபன்ராஜைப் போய்ப் பார்த்ததை சொல்றியா ? ”

” ஆமா ”

” ஸ்டீபன்ராஜைப் போய் நான் பார்த்ததுல என்ன தப்பு ? ”

” போய் பார்த்தது தப்பில்லை..... அவரை வீட்ல போய் பார்த்தது தான் தப்பு ”

” விஷயம் புரியாமே பேசாதே ஈஸ்வர். அந்த ஸ்டீபன்ராஜை என் வீட்டுக்கு வரச் சொல்லி நாலைஞ்சு தடவை போன் பண்ணியும் அந்த ஆள்கிட்டயிருந்து எந்த ரெஸ்பான்ஸீம் இல்லை. நீ வேற போன் பண்ணி ஸ்டீபன்ராஜைப் பார்த்து டீலிங்க்ஸை முடின்னு சொல்லிட்டு இருந்தே.... சரி நமக்கு காரியம்தான் முக்கியம்ன்னு நினைச்சு நானே ஸ்டீபன்ராஜ் வீட்டுக்கு போனேன். நான் அப்படி போனதை வெளியேயிருந்து யாரும் பார்த்து இருக்கமாட்டாங்கன்னு நினைச்சேன். ஆனா சி.பி.ஐ. ஷேடோ ஸ்க்வாட் ஆபீஸர் ஹம்ஸனை மொபைல் லாண்டரி ஆள் மாதிரி ஸ்டீபன்ராஜ் வீட்டுக்கு முன்னாடி நிறுத்தி வெச்சிருப்பாங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்கலை ”

” நினைச்சுப் பார்த்து இருக்கணும் அபு”

” என்ன ஈஸ்வர்..... இப்படியெல்லாம் பேசறே..... எப்படியோ தப்பு நடந்து போச்சு.... அந்தத் தப்பை எப்படி சரி பண்றதுன்னுதான் நாம யோசிக்கணும் ”

” அந்தத் தப்பை இனிமே சரி பண்ண முடியாது அபு. ஏன்னா ஸ்டீபன்ராஜை நீ பார்க்கப் போனது போலீஸீக்கு தெரிஞ்சு போலீஸீம் உன்னோட வீட்டுக்குப் போயிட்டாங்க.... இன்னிக்கு நீ தப்பிச்சு வந்துட்டே... ஆனா மறுபடியும் நீ வீட்டுக்குப் போனா போலீஸ் உன்னை விசாரிக்க வருவாங்க..... ”

” போலீஸ் வரட்டும்... என்னை விசாரிக்கட்டும். அவங்க கேட்கிற கேள்விகளுக்கு எதுமாதிரியான பொய்களை உண்மை மாதிரி சொல்லி சமாளிக்கிறதுன்னு எனக்குத் தெரியும் ”

” நீ சொல்ற பொய்களை ஒருவேளை போலீஸ் நம்பலைன்னா.........? ”

” நீ அதைப்பத்தி கவலைப்படாதே ஈஸ்வர். போலீஸை நான் ஹேண்டில் பண்ணிக்கிறேன் ”

” ஸாரி அபு..... இந்த விவகாரத்துல போலீஸ் மட்டும் இல்லை. சி.பி.ஐ.யும் ஷேடோ விங் ஸ்க்வாடும் இன்வால்வ் ஆகியிருக்கு. உன்னால அவங்களை சமாளிக்க முடியாது அவங்க கேட்கிற கேள்விகளுக்கு உன்னால பொய் சொல்ல முடியாது. உண்மைகளை சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும் ”

அபுபக்கர் மெல்லச் சிரித்தார்.

” என்னோட உயிரே போனாலும் நான் எந்த ஒரு உண்மையும் சொல்ல மாட்டேன் ஈஸ்வர் ”

” அவங்க முன்னாடி நீ விடப் போகிற உயிரை இங்கேயே இப்பவே விட்டுட்டா என்ன அபு ? ”

அபுபக்கர் அதிர்ந்து போனவராய் விழிகள் விரிய எழுந்து நின்றார்.

” ஈஸ்வர் நீ என்ன சொல்றே ? ”

ஈஸ்வரின் உதடுகளில் ஒரு கேலிப்புன்னகை அரும்பி நின்றது. ” நான் இவ்வளவு தெளிவாய் சொல்லியும் இன்னுமா உனக்குப் புரியலை அபு..... நீ இனியும் உயிரோடு இருந்தா..... உன்னை வெச்சே எல்லா உண்மைகளையும் கண்டு பிடிச்சுடுவாங்க.... என்னதான் போலீஸ் நமக்கு சப்போர்ட்டாய் இருந்தாலும் சரியான நேரம் பார்த்து தன்னோட காக்கி யூனிஃபார்மோட புத்தியை காட்டிடுவாங்க ”

அபுபக்கர் பதறுகிற உடம்போடு சுற்றும் முற்றும் பார்த்தார்.

” என்ன அபு..... எப்படி தப்பிக்கலாம்ன்னு யோசனை பண்றியா.... ? நான் ஒரு விஷயத்தை முடிவு செஞ்சுட்டா அதனோட முடிவு எப்படியிருக்கும்ன்னு உனக்குத் தெரியாதா ? ”

ஈஸ்வர் சொல்லிக்கொண்டே தான் அணிந்திருந்த பைஜாமா போன்ற உடையின் இடுப்புப்பகுதிக்கு கையைக்கொண்டு போய் கைக்கு அடக்கமாய் இருந்த மெட்டாலிக் பிஸ்டலை எடுத்தார். அபுபக்கரை நிதானமாய் குறி பார்த்தார்.

அவர் வியர்த்து வழிந்தவராய் இரு கைகளையும் வேகமாய் ஆட்டியபடி பதறினார்.

” வே.....வே......வேண்டாம் ஈஸ்வர்... நான் உனக்கு எவ்வளவோ உதவி பண்ணியிருக்கேன். இலவச திருமணங்களை பண்ணி வைக்க தேவையான ஆண்களையும் பெண்களையும் ஊர் ஊரா தேடிப் போய் கண்டுபிடிச்சு உனக்கு முன்னாடி கொண்டு வந்து நிறுத்தியிருக்கேன்.... அதையெல்லாம் ஒரு நிமிஷம் நினைச்சுப் பாரு ”

” பழசையெல்லாம் நினைச்சுப் பார்க்கிறதுக்கு இது நேரமில்லை அபு. போலீஸீக்கு உன்மேல சந்தேகம் வந்த பிறகு நீ உயிரோடு இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் உனக்கு நரகமாயிருக்கும். உன்னால ஒரு வாய் ஒழுங்கா சாப்பிட முடியாது. நிம்மதியாய் ஒரு மணி நேரம் தூங்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழறதுக்கு பதிலாய் ஒரு அஞ்சு நிமிஷம் செலவு பண்ணி செத்து போயிடலாமே ”

ஈஸ்வரின் கையிலிருந்த துப்பாக்கி மெல்ல உயர்ந்தது. அபுபக்கர் நின்ற இடத்திலேயே அப்படியே மண்டியிட்டு உட்கார்ந்து கைகளைக் கூப்பினார். கண்களில் நீர் சிதறியது.

” ப்ளீஸ்..... ஈஸ்வர்.... என்னை சுட்டுடாதே..... நான் போலீஸ் கையில் சிக்கினாத்தானே பிரச்சினை.... நான் வெளியே போகலை. இதே பங்களாவில் ஏதாவது ஒரு ரூம்ல தங்கிட்டு ஒரு வேலைக்காரன் மாதிரி வாழ்ந்துட்டு போயிடறேன் ”

அபுபக்கர் கதறி அழுது கொண்டிருக்கும்போதே ஈஸ்வரின் செல்போன் முணுமுணுப்பாய் கூப்பிட்டது.

துப்பாக்கியால் அபுபக்கரை குறி பார்த்துக் கொண்டே செல்போனை எடுத்தார்.

மறுமுனையில் அவருடைய மகன் தீபக் அமெரிக்காவில் மின்னிசோட்டா நகரிலிருந்து கூப்பிட்டுக்கொண்டு இருந்தான். செல்போனை இடது காதுக்கு ஒற்றி மெல்லிய குரலில் ” சொல்லு தீபக்” என்றார்

"அப்பா, அங்கிள் அபுவை முடிச்சிட்டீங்களா ?"

” இனிமேல்தான் ”

” என்ன நல்ல நேரம் பார்த்துட்டு இருக்கீங்களா...... போட்டு முடிச்சிருப்பீங்கன்னு நினைச்சேன் ”

ஈஸ்வர் சிரித்தார் " தீபக் நீ சரியான நேரம் பார்த்துத்தான் போன் பண்ணியிருக்கே. இப்ப நீ ஒரே நேரத்துல அபுவோட கடைசி சத்தத்தையும் துப்பாக்கி கனைக்கிற சத்தத்தையும் லைவா கேட்கலாம் " சொல்லிக்கொண்டே பார்வையை உயர்த்தினார்.

அடுத்த விநாடி ... திகைத்தார்

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X