For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யார்ரா நீ.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (39)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

செல்போனின் மறுமுனையில் ஒலித்த குரலைக் கேட்டு ஹரி ஒரு சில விநாடிகள் எதுவும் பேசாமல் மெளனிக்க அந்தக் குரல் சிரித்தது.

" என்ன ஹரி..... உங்களுக்கு கேள்வி புரியலை போலிருக்கு..... அதுதான் பதில் சொல்ல முடியலைன்னு நினைக்கிறேன். கேள்வியை மறுபடியும் கேட்கிறேன். உங்களைப் பெத்த அப்பா, இல்லேன்னா உங்களைக் கட்டிகிட்ட ஒய்ஃப் இந்த ரெண்டு பேர்ல யார் உங்களுக்கு உயிரோடு வேணும் ? "

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 39

ஹரி மேலும் சில விநாடிகள் மெளனமாய் இருந்துவிட்டு நிறுத்தி நிதானமான குரலில் கேட்டான்.

" யார்ரா நீ..... ? "

" என்ன ஹரி..... நான் எவ்வளவு மரியாதை கொடுத்து உங்ககிட்ட பேசிட்டிருக்கேன். மரியாதைக்கு மரியாதை கொடுக்க வேண்டாமா ..... ? "

" நீ யார்ன்னு கேட்டதுக்கு இன்னும் பதில் வரலை உன்கிட்டயிருந்து.... "

நான்தான் ஜோதிடர் காலகண்டர்ன்னு சொன்னேனே ..........? "

"எந்த மரத்தடியில் உட்கார்ந்துகிட்டு ஜோஸியம் சொல்லிட்டிருக்கே..? "

" ஹரி..... இந்த விளையாட்டு பேச்செல்லாம் என்கிட்டே வேண்டாம். நீ கட்டின மனைவியோடும், உன்னைப் பெத்தவங்களோடவும் சந்தோஷமா இருக்கணும்ன்னு நான் நினைக்கிறேன். உன்னோட குடும்பத்துக்கு வரப் போகிற ஆபத்தைப் பத்தி முன்கூட்டியே சொல்றதுக்காகத்தான் நான் உனக்கு போன் பண்ணினேன் "

" அப்படிப்பட்ட எண்ணம் உனக்கு இருந்திருந்தா எடுத்த எடுப்பிலேயே என்னைப் பெத்த அப்பா, நான் கட்டிகிட்ட ஒய்ஃப் ரெண்டு பேர்ல யார் உயிரோடு வேணும்ன்னு கேட்டிருக்க மாட்டியே..... ? "

" உன்னைப் பயப்படுத்தறதுக்காக கேட்ட கேள்வி அது. ஆனா நீ பயப்படலை. இப்படிப் பயப்படாதவங்க கிட்டே பேசறதுக்காக வேற ஒரு டீலிங் இருக்கு...... "

" உனக்கு இப்ப என்னடா வேணும் ..... ? "

ஹரி கேட்டுக்கொண்டிருக்கும்போதே ஹாஸ்பிடலின் அறையிலிருந்து வெளிப்பட்ட வளர்மதி கணவன் ஹரியை நோக்கிப் போனாள்.

" என்னங்க...... போன்ல யாரு....? யாருகிட்டே இவ்வளவு கோபமாய் பேசிட்டு இருக்கீங்க ..... ? "

ஹரி வளர்மதியிடம் குரலைத் தாழ்த்தினான்.

" போன்ல எவனோ ஒருத்தன் மிரட்டறான்.... "

" என்னது....... மிரட்டறானா..... ஸ்பீக்கரை ஆன் பண்ணுங்க "

ஹரி செல்போனின் ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு பேசினான்.

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 39

" வேற ஒரு டீலிங் இருக்குன்னு சொன்னியே என்ன அது ..... ? "

" இதோ பாருங்க ஹரி ... உங்ககிட்ட நேரிடையாகவே ஒரு விஷயத்தை பேசிடறேன். என்னோட பேரு அபுபக்கர். உங்க ஒய்ஃப்பை நீங்க கொஞ்சம் வார்ன் பண்ணி வைக்கணும்..... "

" வார்ன் பண்ணனுமா எதுக்கு ..... ? "

" அவங்க வேண்டாத ஒரு வேலையைப் பார்த்துட்டு இருக்காங்க.... "

" வேண்டாத வேலையா ..... ? "

" ஆமா உங்க ஒய்ஃப் போலீஸ் இன்ஃபார்மராய் இருக்கிறது உங்களுக்குத் தெரியாதுன்னு நினைக்கிறேன் ..... ? "

" என்னோட ஒய்ஃப் அந்த வேலையைப் பார்க்கிற விஷயம் எனக்கு நல்லாவே தெரியும். இந்த சமூகத்தில் இருக்கிற குற்றவாளிகளை அடையாளம் கண்டு போலீஸீக்கு இன்ஃபார்ம் பண்ற வேலை ஒண்ணும் தப்பான வேலை கிடையாது "

" ஹரி..... உங்க ஒய்ஃப் வளர்மதி இந்த அபுபக்கர் விவகாரத்துல மூக்கை நுழைச்சா நீங்க உங்க ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழக்க வேண்டியிருக்கும்"
ஹரியின் கையில் இருந்த செல்போனை கோபமாய் பறித்து தன் காதுக்கு ஒற்றினாள் வளர்மதி.

" அபுபக்கர்........ நீ இப்போ எங்கே இருந்தாலும் அடுத்த பனிரெண்டு மணி நேரத்துக்குள்ளே நானும் மனோஜும் உன்னை நெருங்கிடுவோம் "

" வணக்கம் மேடம்..... நீங்களே லைனுக்கு வந்துட்டீங்களா..... ரொம்பவும் வசதியாய் போச்சு. இந்த அபுபக்கரோட வழியில் யார் குறுக்கிட்டாலும் சரி, அவங்களுக்கு அற்ப ஆயுள்தாங்கிறது எழுதப்படாத ஒரு விதி. அந்த விதிப்படிதான் இதுவரைக்கும் நடந்திருக்கு. ஒழுங்கு மரியாதையா உன்னோட குடும்பத்தை மட்டும் பாரு.... இந்த போலீஸ் இன்ஃபார்மர்ங்கிற மாறுவேஷமெல்லாம் உனக்கு வேண்டாம் "

மறுமுனையில் செல்போனின் இணைப்பு துண்டித்துப்போக, வளர்மதி எரிச்சலோடும், பெருமூச்சோடும் ஹரியை ஏறிட்டான்.

" கட் பண்ணிட்டான் "

" அந்த அபுபக்கர் எந்த செல்போன் நெம்பரிலிருந்து கூப்பிட்டிருக்கான் பாரு"

வளர்மதி அந்த எண்ணைப் பார்த்தாள். அவள் புருவங்கள் வியப்பில் உயர்ந்தன.

" என்னங்க.......... எல்லா செல்போன் நெம்பர்ஸூம் டென் டிஜிட்ஸ்தானே ? "

" ஆமா "

" இந்த நெம்பர்ல ஒன்பது டிஜிட்ஸ்தான் இருக்கு "

ஹரி வாங்கிப் பார்த்துவிட்டு ஆச்சர்யப்பட்டான்.

" இப்படியொரு செல்போன் நெம்பர் இருக்கவே முடியாதே ....... ? "

" இருங்க..... சைபர் க்ரைம் ப்ராஞ்ச்ல இருக்கிற கெளதம்கிட்டே இந்த நெம்பரைக் குடுத்து ட்ரேஸ் பண்ணச் சொல்லலாம் ....... " சொன்ன வளர்மதி தன்னுடைய செல்போனை எடுத்து அடுத்த சில விநாடிகளில் கெளதமை தொடர்பு கொண்டு எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள்.

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 39

மறுமுனையில் கெளதம் மெல்லச்சிரித்தான்.

" வளர்மதி .... இது ஏற்கனவே நான் உங்ககிட்ட சொன்ன விஷயம்தான். இப்ப நீங்க சொன்னது ஒரு இரிடியம் செல்போன் நெம்பர். ஒரு குறிப்பிட்ட க்ரூப் மட்டுமே உபயோகிக்கிற செல்போன் நெம்பர் இது. போன் பண்ணினது யார்ன்னு கண்டுபிடிக்க முடியாது.. "

" பேசினது எந்த லொகேஷன்னு ட்ரேஸ் பண்ண முடியுமா....... ? "

" அதையும் ட்ரேஸ் பண்ண முடியாது வளர்மதி. ஏன்னா இதுக்கான டவர் எந்த ஒரு சிக்னலுக்கும் கிடைக்காத இடத்துல நிர்மாணம் செய்யப்பட்டிருக்கும். எந்த ஒரு ஐ.டி.டெக்னாலஜியையும் சரியான முறையில் பயன்படுத்திக்கிறவங்க, சமூக விரோதிகள்தான். இந்த மாதிரியான இரிடியம் செல்போன்கள் உலகம் பூராவும் தீவிரவாதிகளின் பயன்பாட்டில் மட்டுமல்ல, பெரிய பணக்காரர்களின் பயன்பாட்டிலும் இருக்கு...... "

" கெளதம்.... எனக்கு ஒரு சந்தேகம் "

" என்ன ? "

"இந்த உலகத்துல எவ்வளவோ தொழில்நுட்ப விஞ்ஞானிகள் இருக்காங்க. அவங்களால இந்த இரிடியம் செல்போன் யூஸர்களை கண்டுபிடிக்க முடியாதா?"

" முடியாது "

" என்ன காரணம் ? "

இந்த இரிடியம் செல்போன்களை 24 மணி நேரமும் உயிர்ப்போடு வைத்திருக்க, விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் ஒரு ஸாட்லைட், திருட்டுத்தனமாய் மற்ற அதிகாரபூர்வமான ஸாட்லைட்களோடு கலந்து இந்த பூமி உருண்டையைச்சுற்றி வலம் வந்துகிட்டிருக்கு....... அது எதுன்னு கண்டுபிடிக்கணும்ன்னா மத்த ஸாட்லைட்ஸை சில மணி நேரங்களுக்கு அதனோட செயல்பாட்டை நிறுத்தி வைக்கணும். அப்படி நிறுத்தி வைக்க எந்த நாடும் சம்மதிக்காது. காரணம் ஸாட்லைட்கள் செயல்படாமே இருக்கும்போது தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுட்டா அதை சரி செய்ய முடியாத நிலைமை ஏற்படும்

" இதுல இப்படியொரு பிரச்சினை இருக்கா ..... ? "

" பிரச்சினை அதுதான் "

" இட்ஸ் ஒ.கே. கெளதம்....... தேங்க்ஸ் ஃபார் யுவர் க்ளாரிஃபிகேஷன் "

வளர்மதி செல்போனை அணைத்துவிட்டு கணவனை ஏறிட்டாள். தயக்கமான குரலில் கேட்டாள்.

" என்னங்க பயமா இருக்கா ..... ? "

" பயமா.... எனக்கென்ன பயம்..... ? "

" இந்த இரிடியம் செல்போன் அபுபக்கரோட மிரட்டல் இதெல்லாம் உங்களுக்கு பயத்தை தரலையான்னு கேட்டேன் "

" உண்மையைச் சொல்லட்டுமா வளர் ? "

" சொல்லுங்க "

" பயத்துக்குப் பதிலாய் கோபம்தான் வருது. இப்படி பயங்கரமாய் கொலை மிரட்டல் விடறவனை போலீஸ் விட்டு வைக்கக்கூடாது. நீ இப்ப உடனடியாய் கமிஷனர் திரிபுரசுந்தரிக்கு போன் பண்ணி அபுபக்கர் போன்ல பேசி உன்னை மிரட்டின விஷயத்தை கன்வே பண்ணிடு "

வளர்மதி தன்னுடைய செல்போனை மறுபடியும் உயிர்ப்பித்துக் கொண்டு கமிஷனரின் எண்ணை தொடர்பு கொண்டாள்.

********

செம்மேடு

ஈஸ்வரின் பண்ணை வீட்டின் உட்புறத்தில் இருந்த அறையொன்றில் ஈஸ்வர் உட்கார்ந்து ஃபைன் ஒயின் என்ற வாசகத்தை தன் உடம்பில் பச்சைக் குத்தியிருந்த விஸ்கி பாட்டிலை எடுத்து புனல் வடிவ டம்ளரில் கவனமாய் ஊற்றிக் கொண்டிருக்க மனோஜ் உள்ளே வந்தான்.

ஈஸ்வர் ஒரு சிறு சிரிப்போடு அவனை ஏறிட்டார். " மனோஜ்.... நீ மிமிக்ரி நல்லா பண்ணுவேன்னு அபுபக்கர் என்கிட்டே பல தடவை சொல்லியிருக்கான்.

ஆனா இன்னிக்குத் தான் உன்கிட்டே அந்தத் திறமையைப் பார்த்தேன். செத்துப்போன அபுபக்கர் மாதிரியே பேசறே. நானே ஒரு நிமிஷம் அதிர்ந்து போயிட்டேன். அபுபக்கர்தான் வந்துட்டானோன்னு அடி வயித்துல சின்னதாய் ஒரு பயம் எட்டிப் பார்த்தது "

மனோஜ் சிரித்துக்கொண்டே அவர்க்கு எதிரேயிருந்த நாற்காலியில் உட்கார்ந்தான்.

" ஸார் எனக்கு ஒருத்தரோட குரலை உள்வாங்கிகிட்டு ஒரு மணி நேரம் ப்ராக்டீஸ் பண்ணினா போதும். அந்த நபரோட குரலை அச்சடிச்ச மாதிரி என்னால பேச முடியும். நம்ம அபுபக்கரோடு நான் எத்துணை தடவை பேசியிருப்பேன். அவர் மாதிரியே பேசறதுல எனக்கு எந்த சிரமமும் தோணலை"

" எப்படியோ வளர்மதியையும், போலீஸ் கமிஷனரையையும் நம்ம பக்கம் வராதபடி அபுபக்கர் மேலே டைவர்ட் பண்ணிட்டோம். இனி ஒட்டு மொத்த போலீஸீம் செத்துப்போன அபுபக்கரைத் தேடிக்கிட்டு இந்த செம்மேடு ஏரியா பூராவும் அலையட்டும். நாம நம்ம வேலையை சத்தம் இல்லாமே இன்னொரு பக்கம் பண்ணிட்டு இருப்போம் "

விஸ்கியில் சோடாவைக் கலந்து கொண்டே மனோஜ் கேட்டான்.

" ஸார்..... அபுபக்கரோட காரை என்ன பண்ணீங்க...... ? "

ஈஸ்வர் சிரித்தார் " மாதவனும் ஜோன்ஸீம் எதுக்கு இருக்காங்க..... ? அபுபக்கரோட காரை நேத்து ராத்திரியே டிஸ்மேண்டில் பண்ணி எல்லா பார்ட்ஸையும் நூறடி ஆழ கிணத்துக்குள்ளே கொண்டு போயி போட்டாச்சு. கார் என்ஜினோடு இரும்புக் கம்பியால சேர்த்துக் கட்டப்பட்ட அபுபக்கரோட உடம்பை அந்த
கிணத்துக்குள்ளே நாம் வளர்த்துட்டு வர்ற கேன்டிரூ (CANDIRU) மீன்கள் இந்நேரம் சாப்பிட்டு முடிச்சிருக்கும் "

" ஸார் அந்த கிணத்துக்குள்ளே இப்போ எவ்வளவு கேன்டிரூ மீன்கள் இருக்கும் ...... ? "

போன வருஷம் நூறு மீன் குஞ்சுகளை வளர்த்து கிணத்துல விட்டோம். இப்போ ஆயிரக்கணக்குல பெருகியிருக்கும். ஒரு மனுசனோட சதை பாகங்களை 24 மணி நேரத்திலும், எலும்புகளை ஒரு வாரத்துக்குள்ளேயும் சுத்தமாய் சாப்பிட்டு முடிச்சிடும்..... நீ அந்த மீனைப் பார்த்திருக்கியா மனோஜ்....? "

" இல்ல ஸார் "

" ஒரு நாளைக்கு கூட்டிட்டு போய் காட்றேன். மீன் ஒரு அங்குல நீளம்தான் இருக்கும். ஆனா உடம்பு பூராவும் விஷம். காரணம் அது சாப்பிடறது மனுஷ மாமிசம். உடம்புல விஷம் ஏறாமே இருக்குமா ...... ? "

ஈஸ்வர் சொல்லிக்கொண்டிருக்கும் போது மனோஜின் செல்போன் ரிங்டோனை வெளியிட்டது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான்.
வளர்மதி கூப்பிட்டுக்கொண்டிருந்தாள்.

ஈஸ்வரை பார்த்தான்.

" ஸார்..... வளர்மதி கூப்பிடறா ...... ? "

" லொகேஷன் ஏரியாவை டர்ன் ஆஃப் பண்ணிட்டு பேசு. ஸ்பீக்கரை ஆன் பண்ணிடு "

மனோஜ் போனை எடுத்து ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு பேசினான்.

" சொல்லு வளர் "

" மனோஜ்...... கொஞ்ச நேரத்துக்கு முந்தி அந்த அபுபக்கர் என் ஹஸ்பெண்ட்டோட செல் நெம்பர்க்கு போன் பண்ணிப் பேசினான். நான் அவனோட விவகாரத்துல தலையிடக்கூடாதாம். மிரட்டறான். அவன் இன்னமும் செம்மேடு ஏரியாவுக்குள்ளேதான் இருக்கான். நாம நாளைக்கு மறுபடியும் செம்மேடு ஏரியாவுக்கு போவோம் "

" வளர்.... உங்க மாமனார்க்கு உடம்பு சரியில்லாதபோது..... நீ எப்படி... ? "

" அவரோட உடம்புக்கு இப்ப ஒண்ணும் இல்லை. ஹி ஈஸ் ஆல்ரைட்.. "

" உன்னோட ஹஸ்பெண்ட் என்ன சொல்றார் ...... ? "

" என்னை செம்மேடுக்கு போகச் சொல்றதே அவர்தான் "

(தொடரும்)

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X