• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீ என்ன சொல்றே வளர்.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (40)

|

- ராஜேஷ்குமார்

" நீ என்ன சொல்றே வளர்.... உன்னோட ஹஸ்பெண்டே செம்மேடு ஏரியாவுக்குப் போகச் சொல்றாரா ... ? " மனோஜ் வியப்பான குரலில் கேட்க, மறுமுனையில் வளர்மதி மெலிதாய் சிரித்தாள்.

" அவர் அப்படி சொன்னது எனக்கும் ஆச்சர்யம்தான் மனோஜ். அபுபக்கரோட மிரட்டலுக்கு அவர் கொஞ்சம் கூட பயப்படலை "

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 40

" ஹி ஈஸ் க்ரேட்..... "

" உண்மையிலேயே அவர் க்ரேட்தான் மனோஜ். அவரோட நிலைமையில் வேற யார் இருந்தாலும் சரி அபுபக்கரோட மிரட்டலுக்கு பயந்து போயிருப்பாங்க. எனக்குக்கூட உள்ளுர கொஞ்சம் உதறல்தான். இருந்தாலும் ஒத்துகிட்டேன் "

" கமிஷனர் மேடத்துகிட்டே அபுபக்கரோட மிரட்டல் விஷயத்தை சொன்னியா வளர் ... ? "

" ம்..... சொன்னேன்..... மேடம் மொதல்ல கொஞ்சம் பயப்பட்டாங்க.... அப்புறம் வேற ஒரு ஏற்பாட்டைச் சொன்னாங்க "

" வேற ஒரு ஏற்பாடா ... ? "

" ம் "

" என்ன அது ... ? "

நீங்களும் நானும் நாளைக்கு செம்மேடு ஏரியாவுக்குள்ளே போய் இன்வெஸ்டிகேஷனை கண்டினியூ செய்யும் போது நமக்கு அபுபக்கரால் எந்த ஒரு ஆபத்தும் ஏற்பட்டுவிடக்கூடாதேங்கிறதுக்காக மேடம் ஒரு இன்விஸிபிள் கமாண்டோ க்ரூப்பை ஃபார்ம் பண்ற ப்ளான்ல இருக்காங்க. அந்த கமாண்டோ க்ரூப் நமக்கே தெரியாமே நம்மை ஃபாலோ பண்ணிட்டிருப்பாங்க. க்ரூப்ல யாருமே யூனிஃபார்ம்ல இருக்கமாட்டாங்க. அந்த செம்மேடு ஏரியாவில் வசிக்கிற மக்களோடு மக்களாய் கலந்து நம்ம ரெண்டு பேரையும் கண்கொத்தி பாம்புகளாய் கண்காணிச்சுட்டு இருப்பாங்க..... அபுபக்கர் மூலமாகவோ, அவரோட ஆட்கள் மூலமாகவோ நமக்கு ஏதாவது ஆபத்து வர்ற மாதிரி இருந்தா உடனடியாய் உதவிக்கு வந்துடுவாங்க. மேடத்தோட திட்டம் இதுதான் "

மனோஜூக்குள் ஏமாற்றம் பரவினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒரு போலி சந்தோஷத்துடன் பேசினான்.

" ஃபென்டாஸ்டிக் வளர்...... நம்ம கமிஷனர் மேடத்தோட ப்ரிகாஷனரி ஸ்டெப்ஸ் எப்பவுமே ரொம்பவும் யூஸ்ஃபுல்லாய் இருக்கும். நாம நாளைக்கு எத்தனை மணிக்கு செம்மேடு கிளம்பிப்போறோம் ... ? "

" நாளைக்கு காலையில் பதினோரு மணிக்கு மேல் புறப்பட வேண்டியிருக்கும். சரியா எத்தனை மணிக்குன்னு நான் உனக்கு போன் பண்ணிச் சொல்றேன். நீ ரெடியா இரு மனோஜ் "

" நான் இந்த நிமிஷத்தில் இருந்தே ரெடி வளர். நாளைக்கு நீ புறப்படும் போது ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி எனக்கு போன் பண்ணிச் சொன்னா போதும். நான் உன் கூட வந்து ஜாய்ண் பண்ணிக்கறேன் "

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 40

" ஒ,கே. மனோஜ் " மறுமுனையில் வளர்மதி செல்போனை அணைத்துவிட, மனோஜூம் செல்போனை மெளனமாக்கிவிட்டு எதிரில் விஸ்கியை விழுங்கிக்கொண்டிருந்த ஈஸ்வரைப் பார்த்தான்.

" ஸார்..... வளர்மதி பேசினதைக் கேட்டீங்களா ? "

" ம்...... கேட்டேன் "

" நாளைக்கு வளர்மதியும் நானும் போலீஸோட கண்காணிப்பில் இருக்கும்போது அவளை இங்கே கூட்டிட்டு வர முடியாதே ஸார் ... ? "

" அந்த இன்விஸிபிள் கமாண்டோ க்ரூப்பை ஏமாத்த முடியாதா மனோஜ் ... ? "

" அது ரொம்பவும் கஷ்டம் ஸார்.... ஏன்னா அந்த க்ரூப்ல மொத்தம் எத்தனை பேர் எது மாதிரியான தோற்றங்களில் இருப்பாங்கன்னு எனக்கும் சரி, வளர்மதிக்கும் சரி தெரியாது "

ஈஸ்வர் யோசனையோடு மோவாயைத் தேய்த்தார். " செம்மேடு ஏரியாவை விட்டு அபுபக்கர் போகலை என்கிற விஷயத்துல போலீஸ் ரொம்ப உறுதியாய் இருக்காங்க. அந்த ஒரு விஷயம்தான் நமக்கு ஒரு பெரிய மைனஸ் பாய்ண்ட். போலீஸை மொதல்ல அந்த விஷயத்திலிருந்து டைவர்ட் பண்ணனும். அதுக்கு ஏதாவது வழியிருக்கா மனோஜ் ... ? "

ஈஸ்வர் கேட்டுக்கொண்டிருக்கும் போதே அவருடைய இரிடியம் செல்போன் மெலிதாய் முணுமுணுத்தது. சற்று முன் சாப்பிட்ட விஸ்கி மெலிதாய் தாலாட்ட செல்போனை எடுத்துப் பார்த்தார்.

அவருடைய மகன் தீபக் மறுமுனையில் இருந்தான்.

" அப்பா,.... "

" சொல்லு தீபக் "

" நானும் டாக்டர் ஜான் மில்லரும் இங்கே ஃப்ளைட் ஏறிட்டோம். நாளைக்கு சாயந்தரம் ஆறுமணிக்கு சென்னையில் இருப்போம். சென்னையிலிருந்து கோவைக்கு எட்டு மணிக்கு ஃப்ளைட். ஒரு மணி நேர ஜர்னி. ஒன்பது மணிக்கு கோயமுத்தூர் ஏர்போர்ட்ல இருப்போம். ஏர்போர்ட்டுக்கு காரை அனுப்பிடுங்க. மாதவன், ஜோன்ஸ் ரெண்டு பேர்ல யார் காரை நல்லா ஒட்டுவாங்க ... ? "

" ஜோன்ஸ் "

" அவனையே அனுப்பி வையுங்க "

" சரி "

" அப்பா "

" என்ன ... ? "

" உங்க குரல் சரியில்லை. ஏதாவது பிரச்சினையா அங்கே ... ? "

" அதெல்லாம் ஒண்ணுமில்லை "

" நோ.... சம்திங் ஈஸ் தேர்...... நீங்க இப்போ ஏதோ ஒரு யோசனையில் இருக்கீங்கன்னு நினைக்கிறேன் "

ஈஸ்வர் சிரித்தார். " இதோ பார் தீபக்....... இங்கே எந்த ஒரு பிரச்சினையும் இல்லை..... நீயும் டாக்டர் ஜான் மில்லரும் சந்தோஷமாய்ப் புறப்பட்டு வாங்க. அயாம் வெயிட்டிங் ஃபார் போத் ஆஃப் யூ "

ஈஸ்வர் பேசிவிட்டு செல்போனை வைத்தார். மனோஜ் பதட்டத்தோடு கேட்டான்.

" போன்ல யாரு...... உங்க சன்னா ... ? "

" ஆமா...... தீபக்கும், டாக்டர் ஜான் மில்லரும் இந்தியா புறப்பட்டு வர ஃப்ளைட் ஏறிட்டாங்க. நாளைக்கு ராத்திரி பத்து மணிக்கெல்லாம் ரெண்டு பேரும் இங்கே இருப்பாங்க ... ? "

" இந்த வளர்மதி விவகாரத்துல என்ன ஸார் பண்ணப்போறோம் ... ? "

" இன்னும் ஒரு ரெண்டு பெக் சாப்பிடுவோம். ஏதாவது ஒரு யோசனை தோணாமலா போயிடும் ... ? "

ஈஸ்வர் சொல்லிக்கொண்டே விஸ்கி பாட்டிலைக் கையில் எடுத்தார்

**********

ஹெல்த்தி டேஸ் ஹாஸ்பிடல்

நேரம் இரவு எட்டரை மணி. ஹாஸ்பிடலுக்கு முன்பாய் வந்து நின்ற போலீஸ்ஜீப்பினின்றும் இறங்கிக்கொண்ட போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரி படிகளில் ஏறி உள்ளே போக வளர்மதி எதிர்பட்டு வரவேற்றாள்.

" வாங்க மேடம் "

" வளர்..... உன்னோட ஃபாதர் இன் லா எப்படியிருக்கார் ? "

" அவர் நார்மலாயிட்டார் மேடம். நாளைக்குக் காலையில் டிஸ்சார்ஜ் ஆகி போயிடலாம்ன்னு டாக்டர் சொல்லிட்டார். நீங்க ஹாஸ்பிடலுக்கு வந்து இருக்க வேண்டியதேயில்லை மேடம் "

" நோ.... நோ.... உன்னோட ஃபேமிலி மெம்பர்ஸ் எனக்கும் ஃபேமிலி மெம்பர்ஸ்தான். உன்னோட மாமனாரைப் பார்த்து ரெண்டு வார்த்தை பேசினா எனக்கும் அது சந்தோஷமாய் இருக்கும் "

" ப்ளீஸ் கம் மேடம் "

இருவரும் லிஃப்ட்டில் பயணித்து ராமபத்ரனின் அறைக்குள் நுழைந்தார்கள். வார இதழ் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்த ராமபத்ரன் திரிபுரசுந்தரியைப் பார்த்ததும் சற்றே பதட்டப்பட்டார். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு கும்பிட்டார்.

" வணக்கம்மா ..... "

வளர்மதி எடுத்துப்போட்ட நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே திரிபுரசுந்தரி கேட்டாள்.

" எப்படியிருக்கீங்க ? "

" எனக்கு ஒண்ணும் இல்லீங்கம்மா..... இவங்கதான் பயந்துட்டாங்க... வயசானாலே எல்லார்க்கும் வர்ற பிரச்சினைதான். பி.பி.அடம் பிடிச்சது. ஹாஸ்பிடலுக்கு வந்து ஒரு இருபதாயிரம் செலவு பண்ணினதும் சரியாயிருச்சு. எனிவே நீங்க என்னைப் பார்க்க வந்தது ரொம்ப சந்தோஷம் "

" இதுல என்ன ஸார் இருக்கு ? உங்களுக்கு இப்ப மருமகளாயிருக்கிற வளர்மதியை காலேஜ் டேஸ்ல இருந்தே எனக்குத் தெரியும். சோசியல் சர்வீஸ் ஆக்டிவிடீஸில் ரொம்பவும் ஈடுபாடு காட்டற யாரையுமே எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனாலதான் நான் வளர்மதி - ஹரி கல்யாணத்துக்கு வந்தேன். அடிக்கடி வளர்மதிகிட்டே போன்ல பேசுவேன். அப்ப உங்க குடும்பத்துல இருக்கிற எல்லாரையும் விசாரிச்சுடுவேன் " என்று சொன்ன திரிபுரசுந்தரி அறையில் பார்வை சிதறவிட்டபடி கேட்டாள்.

" எங்கே..... ஹரி......? "

வளர்மதி சொன்னாள்.

" மேடம்.... அவரும் அத்தையும் சாயந்தரம் நாலு மணிக்கு மேல் கிளம்பி வீட்டுக்குப் போனாங்க. அத்தையை இப்ப ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வர்றதுக்காக அவர் புறப்பட்டுப் போயிருக்கார். இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க வந்துடுவாங்க. அத்தை ராத்திரியில் இங்கே ஸ்டே பண்ணிக்குவாங்க. நானும் அவரும் கிளம்பி வீட்டுக்குப் போயிடுவோம் "

" அவங்க வர நேரமாகுமா ......? "

" எப்படியும் ஒரு மணி நேரமாயிடும் மேடம் "

" இட்ஸ் ஒ.கே. வளர்... நான் கிளம்பறேன். நானும் வீட்டுக்கு போய் டின்னரை முடிச்சுகிட்டு மறுபடியும் ஆபீஸீக்குப் போகணும். டி.ஜி.பி.யோடு ஒரு கான் காலை அட்டெண்ட் பண்ணனும்" என்று சொன்னவள் ராமபத்ரனை ஏறிட்டாள்.

" நான் வர்றேன் ஸார்.... நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகி போனதும் வீட்ல ரெஸ்ட் எடுங்க..... அடுத்த வாரத்துல ஒரு நாள் வீட்ல வந்து பார்க்கிறேன் "

ராமபத்ரன் புன்னகையோடு கைகுவிக்க, திரிபுரசுந்தரி வளர்மதியோடு அந்த அறையினின்றும் வெளிப்பட்டாள். இருவரும் லிஃப்ட்டை நோக்கி நடந்தார்கள். நடக்க நடக்கவே வளர்மதி மெல்லிய குரலில் " மேடம் " என்றாள்.

" என்ன வளர் ......? "

" இந்நேரத்துக்கு ஹாஸ்பிடல் ரிசப்ஷன்ல யாரும் இருக்கமாட்டாங்க... அங்கே உட்கார்ந்து ஒரு அஞ்சு நிமிஷம் பேசலாமா ......? "

" என்ன ஏதாவது முக்கியமான விஷயமா ......? "

" ஆமா மேடம்..... உங்ககிட்டே பேசினாத்தான் அதுல தெளிவு கிடைக்கும்ன்னு எம்மனசுக்குத் தோணுது "

" ஒண்ணும் பிரச்சினையில்லை.... வா பேசிடலாம் "

இருவரும் லிஃப்ட்டில் கீழே இறங்கி வந்தார்கள். ஹாஸ்பிடல் நிசப்தமாய் இருந்தது ரிசப்ஷனின் சோபாவில் பக்கம் பக்கமாய் உட்கார்ந்தார்கள். சில விநாடிகள் மெளனத்திற்குப் பிறகு திரிபுரசுந்தரி கேட்டாள்.

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 40

" சொல்லு வளர்.... என்ன பேசணும் ......? "

" மேடம்.... என்னோட ஹஸ்பெண்ட்டுக்கு ஒரு மிரட்டல் போன் கால் வந்ததாய் உங்ககிட்டே சொன்னேன் இல்லையா ......? "

" ஆமா..... அபுபக்கர் போன் பண்ணி மிரட்டினதாய் சொன்னே ......? "

" அந்த போன் கால்ல ஒரு குழப்பம் மேடம் "

" அது ஒரு இரிடியம் செல்போன் அதுதானே ......? "

" அதில்லை மேடம் ......? "

" அப்புறம் ......? "

" அந்த போன் பண்ணினது அபுபக்கர் இல்லை மேடம் "

திரிபுரசுந்தரி திகைத்தாள்.

" வளர்.... நீ என்ன சொல்றே....... பேசினது அபுபக்கர்தான்னுதானே நீ சொன்னே ......? "

" நானும் அப்படித்தான் நினைச்சேன் மேடம். ஆனா பேசினது அபுபக்கர் இல்லை. அபுபக்கரோட வாய்ஸ்ல வேற ஒருத்தர் பேசியிருக்கார் "

" வளர்..... ஆர் யூ ஷ்யூர் ......? "

" ஷ்யூர் மேடம் "

" அபுபக்கர் பேசலைன்னா வேற யார் அந்த ஆளோட வாய்ஸ்ல பேசியிருப்பாங்கன்னு நினைக்கிறே......? "

" மனோஜ் மேடம் "

(தொடரும்)

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39]

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more