For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வளர்.... நீ என்ன சொல்றே.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (41)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

திரிபுரசுந்தரியின் விழிகள் ஸ்டில் போட்ட தினுசில் அப்படியே நிலைத்தது. வளர்மதியையே திகைப்புடன் பார்த்தாள்.

” வளர்.... நீ என்ன சொல்றே....... அபுபக்கரோட வாய்ஸ்ல பேசினது மனோஜா......? ”

” ஆமா மேடம் ”

” அது எப்படி உனக்குத் தெரியும் ......? ”

” மேடம் ....... என்னோட ஹஸ்பெண்ட்டுக்கு வந்த போன்காலை அவர் அட்டெண்ட் பண்ணி பேசிட்டிருக்கும் போதே நான் நடுவுல போனை வாங்கிப் பேசினேன். எனக்கு அபுபக்கரோட குரல் பரிச்சயம் இல்லாததினால செல்போனின் மறுமுனையில் அபுபக்கர்தான் பேசிட்டிருக்கார்ன்னு நினைச்சு நானும் கோபமாய் பேசினேன். நான் பேச ஆரம்பிச்ச அரை நிமிஷ நேரத்துக்குள்ளாகவே லைன் கட்டாயிருச்சு. அது என்னோட மனசுக்கு நெருடலாய் பட்டது. நல்லவேளையாய் என்னோட கணவர் அந்த செல்போனிக் கான்வர்சேஷனையெல்லாம் ரிக்கார்ட் பண்ணியிருந்தார். ஒரு மணி நேரத்துக்கு முன்னாடிதான் அந்த செல்போனிக் கான்வர்சேஷனை திரும்ப திரும்ப போட்டுக் கேட்டேன். அபுபக்கரோட குரலைக் கொஞ்சம் உன்னிப்பாய்க் கேட்டபோதுதான் எனக்கு ஒரு வித்தியாசம் தெரிஞ்சது மேடம்”

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 41

திரிபுரசுந்தரி இன்னமும் பிரமிப்பிலிருந்து விலகாமல் கேட்டாள்.

” என்ன வித்தியாசம்......? ”

வளர்மதி தன்னுடைய செல்போனை எடுத்தாள்.

” மேடம் ....... என்னோட கணவர் செல்போனில் ரெக்கார்டாகியிருந்த அந்த அபுபக்கரின் கான்வர்சேஷனை என்னோட செல்போனுக்கு ஃபார்வேர்ட் பண்ணிகிட்டேன். இப்ப அந்த கான்வர்சேஷனை உங்களுக்கு போட்டுக் காட்டறேன். அதைக் கொஞ்சம் கவனமாய் கேட்டுப் பாருங்க மேடம் ” சொன்ன வளர்மதி தன்னுடைய செல்போனின் ஆடியோ ஆப்ஷனுக்குப் போய் அதற்கு உயிர் கொடுத்தாள். செல்போனில் பதிவாகியிருந்த உரையாடல் ஒலிக்க ஆரம்பித்தது.

” ஹரி..... உங்க ஒய்ஃப் வளர்மதி இந்த அபுபக்கர் விவகாரத்துல மூக்கை நுழைச்சா நீங்க உங்க ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழக்க வேண்டியிருக்கும்”

இப்போது வளர்மதியின் குரல் கேட்டது.

” அபுபக்கர்........ நீ இப்போ எங்கே இருந்தாலும் அடுத்த பனிரெண்டு மணி நேரத்துக்குள்ளே நானும் மனோஜும் உன்னை நெருங்கிடுவோம் ”

” வணக்கம் மேடம்..... நீங்களே லைனுக்கு வந்துட்டீங்களா..... ரொம்பவும் வசதியாய் போச்சு. இந்த அபுபக்கரோட வழியில் யார் குறுக்கிட்டாலும் சரி, அவங்களுக்கு அற்ப ஆயுள்தாங்கிறது எழுதப்படாத ஒரு விதி. அந்த விதிப்படிதான் இதுவரைக்கும் நடந்திருக்கு. ஒழுங்கு மரியாதையா உன்னோட குடும்பத்தை மட்டும் பாரு.... இந்த போலீஸ் இன்ஃபார்மர்ங்கிற மாறுவேஷமெல்லாம் உனக்கு வேண்டாம் ”

வளர்மதி செல்போனின் ஆடியோ ஆப்ஷனை அணைத்துவிட்டு திரிபுரசுந்தரியை ஏறிட்டாள்.

” மேடம்..... இப்ப நீங்க கேட்ட இந்த செல்போனிக் கான்வர்சேஷன்ல எந்த ஒரு வார்த்தையாவது அப்நார்மலாய் இருந்ததை ஃபீல் பண்ணீங்களா?”

திரிபுரசுந்தரி யோசித்துப் பார்த்துவிட்டு தலையாட்டினாள்.

” இல்லையே...... ”

” முதல் தடவையாய் கேட்கும்போது அதை அப்சர்வ் பண்ணமுடியாது. இப்ப ரெண்டாவது தடவையாய் கேளுங்க மேடம். உங்களால அந்த வார்த்தையை ஐடென்ட்டிபை பண்ண முடியும் ”

” அது என்ன வார்த்தை ? ”

” அபுபக்கர் ”

திரிபுரசுந்தரி அதிர்ந்து போனவளாய் வளர்மதியைப் பார்த்தாள்.

” அந்த ” அபுபக்கர் ” வார்த்தை நார்மலாய்தானே இருந்தது ”

” மேடம்.... மறுபடியும் ஒரு தடவை ஆடியோவை ” ஆன் ”பண்றேன். அந்த அபுபக்கர் என்ற வார்த்தையை மட்டும் உன்னிப்பாய் ஒரு தடவை கேளுங்க ”

சொன்ன வளர்மதி செல்போனின் ஆடியோவை ஆன் செய்தாள்.

உரையாடல் ஒலிக்க ஆரம்பித்தது. அந்த ” அபுபக்கர் ” என்கிற வார்த்தை வரும்போது மட்டும் தன்னுடைய காதுகளுக்கு உன்னிப்பைக் கொடுத்த திரிபுரசுந்தரி உரையாடல் முடிந்ததும் ” எஸ் ” என்று சொல்லி தலையாட்டினாள்.

” யூ ஆர் கரெக்ட் வளர்மதி.... அந்த அபுபக்கர் வார்த்தை சரியா உச்சரிக்கப்படலை. ஒரு வித்தியாசம் தெரியுது ”

” என்ன வித்தியாசம் மேடம்? ”

” அபுபக்கர் என்கிற வார்த்தை அபூபுக்கர்ன்னு சொல்ற மாதிரி இருக்கு”

” அதேதான் மேடம்.... யாரும் தன்னோட பேரை தப்பாய் சொல்லமாட்டாங்க..... அந்த கோணத்துல பார்த்தா செல்போன்ல பேசினது அபுபக்கராய் இருக்க முடியாதுங்கிற முடிவுக்கு நாம வர வேண்டியிருக்கு மேடம் ”

” சரி..... மனோஜ்தான் அபுபக்கர் மாதிரி பேசியிருப்பான்னு எந்த ஆதாரத்தை அடிப்படையாய் வெச்சு சொல்றே வளர் ? ”

வளர்மதி உதடுகளில் ஒரு புன்னகை பரவியது.

” மேடம்.... ஜெனிக்டிஸ்ட் ஸ்டீபன்ராஜ் கொலை செய்யப்பட்ட தினத்தில் இருந்து நானும் மனோஜூம் அபுபக்கரை தேடற விஷயத்தில் ஒண்ணா சேர்ந்துதான் இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு இருக்கோம். அப்படி நாங்க ட்ராவல் பண்ணும்போது மனோஜ் அபுபக்கரோட பேரை ஸ்பெல் பண்ணும்போதெல்லாம் அபுபக்கர்ன்னு சொல்றதுக்குப் பதிலாக அபூபுக்கர்ன்னே சொல்லிட்டிருந்தார். நான் ஒரு தடவை சிரிச்சுகிட்டே அபூபக்கர் இல்லை மனோஜ் அபுபக்கர்ன்னு சொன்னேன். ஆனா அதுக்கப்புறமும் மனோஜ் அபுபக்கரோட பேரை சொல்லும் போதெல்லாம் அபூபுக்கர்ன்னே சொல்லிட்டிருந்தார். நானும் அதை பெரிசா பொருட்படுத்தலை. ஒருத்தரோட மனசுல பதிஞ்சுட்ட ஒரு பேரை அவ்வளவு சுலபத்துல மாத்த முடியாதுன்னு என்னோட மனசுக்கும் பட்டதால மனோஜை அதுக்கப்புறம் நான் திருத்தலை..... ”

திரிபுரசுந்தரி சில விநாடிகள் மெளனமாய் இருந்துவிட்டு மெல்ல பேச்சை ஆரம்பித்தாள்.

” இருந்தாலும் வளர்..... நீ சொல்ற அந்த ஒரு காரணத்தை மட்டும் வெச்சுகிட்டு மனோஜ் மேல சந்தேகப்படறது அவ்வளவு சரியா என்னோட மனசுக்குப்படலை ”

” நீங்க இப்படித்தான் சொல்வீங்கன்னு எனக்குத் தெரியும் மேடம். நான் மனோஜ் மேல அதிகப்படியாய் சந்தேகப்படறதுக்கு இன்னும் ரெண்டு காரணங்கள் இருக்கு ”

” என்ன......? ”

” மனோஜ் என்னோட கணவர்க்கு போன் பண்ணி அபுபக்கர் வாய்ஸ்ல பேசி மிரட்டிகிட்டு இருந்தார். அந்த சமயத்துல நான் போய் என் கணவரோட கையிலிருந்த செல்போனை வாங்கி பேச ஆரம்பிச்சேன். நான் பேசினதுமே மறுமுனையில் பேசிட்டிருந்தது உண்மையான அபுபக்கராய் இருந்திருந்தா பேசறது யார்ன்னு கேட்டிருப்பார். ஏன்னா அபுபக்கர்க்கு என்னோட வாய்ஸ் எப்படியிருக்கும்ன்னு தெரியாது. ஆனா மறுபக்கம் பேசிட்டிருந்தது மனோஜ். அதனால்தான் எடுத்த எடுப்பிலேயே ” வணக்கம் மேடம்..... நீங்களே லைனுக்கு வந்துட்டீங்களா” ன்னு பேச ஆரம்பிச்சுட்டார் ”

திரிபுரசுந்தரி தலையசைத்தாள்.

” இப்ப நீ சொன்னது சரியான காரணமாயிருக்கு. இன்னொரு காரணம் என்ன ? ”

” மேடம்.. நாலு நாளைக்கு முன்னாடி நர்மதாவை மடக்கறதுக்காக நாம போலீஸ் படையோடு அவ வீட்டுக்கு ஜீப்ல புறப்பட்டு போனோம். அப்போ மனோஜூம் நம்ம கூட இருந்தார். இப்ப நான் நினைச்சு பார்க்கிறேன். அவர் நம்ம கூட ட்ராவல் பண்ணும்போது டென்சஷனாவே காணப்பட்டார்.

பாதிவழியில் அவர்க்கு ஒரு இன்கம்மிங் கால் வந்தது. உங்களுக்கு ஞாபகமிருக்கா மேடம்? ”

” ம்.... ஞாபகம் இருக்கு...... ”

” அந்த இன்கம்மிங் கால் வந்ததுமே மனோஜ் இன்னமுமே டென்ஷன் ஆனார். முகத்துல அதிகப்படியான ஸ்வெட்டிங் இருந்தது. நான் உடனே மனோஜைப் பார்த்து ” மனோஜ் ஏன் என்னமோ மாதிரி ஆயிட்டே. யூ ஸீம்ஸ் டு பி வெரி டென்ஷன்” ன்னு நான் சொன்னேன். மனோஜ் செல்போனை எடுத்து பேசிட்டு ” ஃபாரன்ஸிக் ரிப்போர்ட்டுன்னா ஜவுளிக் கடையில் போடற பில்லு மாதிரி நினைச்சுட்டு உடனே வேணும்” ன்னு கேட்கிறாங்க.... ரிப்போர்ட்டோட ரெண்டு பாயிண்ட்ஸை மட்டும் அனுப்பணும்ன்னு உங்ககிட்ட சொன்னதாய் எனக்கு ஞாபகம் மேடம் ”

” ம்.... எனக்கும் நல்லாவே ஞாபகம் இருக்கு.... நானும் கூட மனோஜ்கிட்டே ”அவங்களுக்கு என்ன அவசரமோ..... வாட்ஸ் அப்ல ரிப்போர்ட்டோட ரெண்டு பாயிண்ட்ஸை மட்டும் அனுப்பிவிடுங்க மனோஜ்” சொன்னேன். மனோஜும் உடனடியாய் வாட்ஸ் அப் பண்ணினார்”

” அவர் அந்த இக்கட்டான நேரத்திலும் வாட்ஸ் அப் பண்ண வேண்டிய அவசியம் என்ன மேடம் ? நர்மதாவைத் தேடி போலீஸ் வந்துகிட்டு இருக்காங்கன்னு மனோஜ் யாருக்கோ மெஸேஜ் பண்ணப் போய்த்தான் நர்மதா அந்த வீட்டிலிருந்து தப்பிச்சுட்டு போயிக்கணும் ”

திரிபுரசுந்தரி தன்னுடைய நெற்றியை யோசனையோடு தேய்த்தாள். பிறகு தயக்கமான பார்வையோடு வளர்மதியை ஏறிட்டாள்.

” நீ சொல்ற பாயிண்ட்ஸை எல்லாம் வெச்சிப் பார்க்கும்போது எனக்கும் இப்போ மனோஜ் மேல லேசா சந்தேகம் வருது வளர். இருந்தாலும் மனோஜ் ஒரு பொறுப்பான போஸ்டில் இருக்கிற அதிகாரி. அவரை எப்படி கார்னர் பண்றது ? ”

” இது அவரை கார்னர் பண்ண வேண்டிய நேரம் இல்லை மேடம். அதிரடியாய் போய் மடக்க வேண்டிய நேரம். ஒரு ஏசிபியோட தலைமையில் போலீஸ் டீமை அனுப்பி சர்ச் வாரண்ட்டோட மனோஜ் வீட்டை சோதனை போடணும். அவரையும் தரோவா செக் பண்ணனும். அவர்கிட்டே இரிடியம் போன் இருந்தா உடனடியாய் கைது செய்து ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து விசாரிக்கிற விதத்தில் விசாரிச்சா எல்லா உண்மைகளையும் வரவழைச்சுடலாம் .....”

” மனோஜோட வீடு எங்கேயிருக்கு ? ”

” உக்கடம் பைபாஸ் ரோட்ல அன்பு நகர்ல இருக்கு மேடம். முழு அட்ரஸ் நான் தர்றேன். ஒரு நிமிஷம் கூட லேட் பண்ணாமே ஸ்டெப்ஸ் எடுத்தா மனோஜால தப்பிக்க முடியாது ”

” யூ.... ஆர் கரெக்ட்.... வளர் ! இப்ப நீ மனோஜுக்கு போன் பண்ணி அவர் எங்கே இருக்கார்ன்னு கேளு. போலீஸ் டீம் போகும்போது அவர் வீட்ல இருந்தாத்தான் நாம எதிர்பார்க்கிற பலன் கிடைக்கும். ஸ்பீக்கர் ஆன் பண்ணிடு ”

” எஸ் மேடம் ” என்று சொன்ன வளர்மதி தன்னுடைய செல்போன் மூலம் மனோஜின் செல்போனை தொடர்பு கொண்டாள். இரண்டாவது ரிங் போய்க்கொண்டிருக்கும்போதே மனோஜ் போனை எடுத்துப் பேசினான்.

” என்ன வளர்..... உன்னோட மாமனார் எப்படியிருக்கார் ? ”

” ஒண்ணும் பிரச்சினையில்லை மனோஜ். ஹி ஈஸ் ஆல்ரைட். நாளைக்குக் காலையில் டிஸ்சார்ஜ் ”

” கேட்கவே ரொம்ப சந்தோஷமாயிருக்கு.... நான் இன்னிக்கு சாயந்தரம் ஹாஸ்பிடலுக்கு வந்து பார்க்கலாம்ன்னு இருந்தேன் ”

” நோ ஃபார்மாலீடீஸ் மனோஜ் ”

” சரி.... நாளைக்கு நாம செம்மேடு போய் இன்வெஸ்டிகேஷனை கண்டினியூ பண்ணப்போறது கன்ஃபார்ம்தானே ......? ”

” கன்ஃபார்ம்தான். எத்தனை மணிக்குப் போறதுங்கிறதை போன் பண்ணிச் சொல்றேன். இப்ப நீ எங்கே இருக்கே மனோஜ்......? ”

” என்னோட வீட்லதான் ஏன் ......? ”

” இல்ல ஏதோ பேச்சு சத்தம் கேட்குது அதான் கேட்டேன் ”

” ப்ரைம்ல படம் பார்த்துட்டிருக்கேன் ”

” என்ன படம்......? ”

” சொன்னா நீ ஆச்சர்யப்படுவே..... ”

” சொல்லு .... ”

” அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ”

வளர்மதி சிரித்தாள். ” நல்ல படம். பழைய படமாய் இருந்தாலும் எண்டர்டெயின் பண்ணலாம். சரி..... நீ படம் பாரு. நாளைக்கு நான் போன் பண்றேன். குட்நைட் ”

” குட்நைட் ”

வளர்மதி செல்போனை அணைத்துவிட்டு திரிபுரசுந்தரியை ஏறிட்டாள்.

” மேடம்.... அந்த திருடன் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் பார்த்துட்டிருக்கான். படம் பார்த்து முடிக்க ரெண்டரை மணி நேரமாவது ஆகும். இப்ப நீங்க போலீஸ் டீமை அனுப்பினா மனோஜை மடக்கிடலாம் ”

திரிபுரசுந்தரி தன்னுடைய செல்போனை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து ஒரு எண்ணைத் தொடர்பு கொண்டு பேசினாள்.

” ஏசிபி அன்பரசன் ......? ”

மறுமுனை ” எஸ் மேடம் ” என்றது

” நான் சொல்றதைக் கொஞ்சம் கவனமாய் கேளுங்க. திஸ் ஈஸ் வெரி இம்பார்ட்டண்ட் இன் காமிரா ஆக்சன் ”

(தொடரும்)

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39], 40, 41]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X