For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனோஜ்..... லைன்ல இருக்கீங்களா.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (43)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

மனோஜ் செல்போனை அணைத்துவிட்டு பேரரை அழைத்து பில் கேட்டு, தொகையை செட்டில் செய்துவிட்டு வெளியே வந்தான். ரேஸ்கோர்ஸ் ரோடு கார்ப்பரேஷன் எல்.இ.டி.விளக்குகளின் வெளிச்சத்தில் சொற்ப போக்குவரத்தோடு தெரிய தன்னுடைய கார் பார்க் செய்யப்பட்டிருந்த இடத்தை நோக்கி வேக வேகமாய் நடைபோட்டான்.

மனசுக்குள் பிரேம்குமாரின் நினைப்பு தகித்தது. ரெண்டு மணி நேரத்துக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே வந்த போதுகூட வாசல் வரைக்கும் வந்து சந்தோஷமாய் " அண்ணா சீக்கிரமா வீட்டுக்கு வந்துடு..... லேட் பண்ணிட வேண்டாம்ன்னு சொன்னானே..... எப்படி திடீர்ன்னு காய்ச்சல் வந்தது...... ? ஒருவேளை ஃப்ரிஜ்ஜில் வைச்சிருந்த மொத்த ஜஸ்கீரிமையும் காலி பண்ணியிருப்பானோ.... ? "

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 42

" நாளை கழிச்சு மறுநாள் அவனுக்கு இண்டர்வியூ வேற இருக்கு.... ? "

மனோஜ் யோசித்துக்கொண்டே காரின் லாக்கை விடுவித்துக்கொண்டு உள்ளே போய் ட்ரைவிங் இருக்கையை ஆக்ரமித்தான். மணிக்கட்டில் நேரம் பார்த்தான். ரேடியம் வாட்ச் சரியாய் பத்து மணி என்றது.

" இந்த நேரத்துக்கு எந்த டாக்டர் அவெய்லபிளா இருப்பார் .... ? "

மனோஜ் யோசித்துக்கொண்டே காரை நகர்த்த, மூளைக்குள் ஒரு பொறி தட்டியது. அன்பு நகரில் குடியிருக்கும் தன்னுடைய வாக்கிங் மேட் ராஜவேலுவின் மாமா புலியகுளத்தில் ஒரு க்ளீனிக் வைத்திருக்கிறார் என்று அவர் ஒரு தடவை சொன்னது இப்போது அவனுடைய மூளைக்குள் மறுபடியும் எதிரொலித்தது.

" ராஜவேலுவுக்குப் போன் பண்ணி இந்நேரத்திற்கு புலியகுளத்தில் அவருடைய டாக்டர் மாமாவின் க்ளீனிக் திறந்து இருக்குமா என்று கேட்டுப் பார்த்தால் என்ன .... ? "

மனோஜ் உடனே காரின் வேகத்தைக் குறைத்து ரோட்டோரமாய் நிறுத்திவிட்டு தன்னுடைய செல்போனை எடுத்து தன்னுடைய வாக்கிங் மேட் ராஜவேலுவைத் தொடர்பு கொண்டான். முதல் ரிங் போய் முடிவதற்குள் மறுமுனையில் ராஜவேலுவின் உற்சாகமான குரல் கேட்டது.

" என்ன மனோஜ்.... ரெண்டு நாளா வாக்கிங்குக்கு மட்டம் போட்டுட்டீங்க போலிருக்கு "

" ஆமா.... ராஜவேலு...... சென்னையிலிருந்து என்னோட கஸின் பிரதர் ஒருத்தன் வந்திருக்கான். ராத்திரி பதினோரு மணி வரைக்கும் பேசிட்டு படுக்கறதால எர்லி மார்னிங் எந்திருக்க முடியறதில்லை.... பை...த....பை நான் இப்போ உங்களுக்கு போன் பண்ணினது ஒரு அவசர உதவிக்காக...... "

மறுமுனையில் ராஜவேலு பதட்டப்பட்டார்.

" என்ன உதவி சொல்லுங்க .... ? "

" உங்க மாமா ஒருத்தர் டாக்டராய் இருக்கிறதாகவும் அவர் புலியகுளத்தில் க்ளீனிக் வெச்சு இருக்கிறதாகவும் நீங்க ஒரு தடவை என்கிட்டே சொல்லியிருக்கீங்க .... ? "

" ஆமா "

" க்ளீனிக் இப்ப திறந்து இருக்குமா .... ? "

" விஷயம் என்னான்னு சொல்லுங்க மனோஜ் "

" என்னோட கஸின் பிரதருக்கு திடீர்ன்னு ஹைஃபீவர். ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடிதான் எனக்கு போன் பண்ணிச் சொன்னான். நான் இப்ப ரேஸ்கோர்ஸ் ரோட்ல இருக்கேன். இன்னும் ஒரு பத்து நிமிஷத்துக்குள்ளே என்னோட வீட்டுக்கு வந்துடுவேன். உடனடியாய் அவனை டாக்டர்கிட்டே கூட்டிட்டு போகணும். உங்க மாமாவுக்கு கொஞ்சம் இன்ஃபார்ம் பண்ணிடறீங்களா .... ? "

" ஒரு நிமிஷம் மனோஜ் "

" என்ன .... ? "

" உங்க கஸின் பிரதர் தனக்கு ஃபீவர்ன்னு எப்பச் சொன்னார் .... ? "

" இப்பத்தான்..... ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி "

" என்னான்னு சொன்னார் .... ? "

" தன்னோட உடம்புக்கு ரொம்பவும் முடியலைன்னும், மாத்திரையைச் சாப்பிட்டும் ஃபீவரை கண்ட்ரோல் பண்ண முடியலை. ஹாஸ்பிடலுக்குப் போகணும். தனியா தன்னால போக முடியாது. உடனே புறப்பட்டு வான்னு சொன்னான் "

" ஆச்சர்யமாயிருக்கு மனோஜ் "

" இதுல என்ன ஆச்சர்யம் ராஜவேலு .... ? "

" நான் இப்பத்தான் வெளியே போயிட்டு நம்ம நகர்க்குள்ளே வந்து உங்க வீட்டை க்ராஸ் பண்ணினேன். வீட்டுக்குள்ளே யாரோ ஆட்கள் இருக்கற மாதிரி தெரிஞ்சுது "

" எ....எ....என்னது...... வீட்டுக்குள்ளே ஆட்கள் இருக்காங்களா .... ? "

" ஆமா.... நாலைஞ்சு பேராவது இருந்தாங்கன்னு நினைக்கிறேன். பேச்சுக்குரல் கூட கேட்டது.

" யா....யாரவங்க ? "

" தெரியலை..... ஆனா எனக்கொரு சந்தேகம் ? "

" என்ன ? "

" வந்து இருக்கிறது போலீஸ் டிபார்ட்மெண்ட் ஆட்களாய் இருக்கலாமோன்னு நினைக்கிறேன். ஏன்னா நம்ம பார்க்குக்குப் பக்கத்துல போலீஸ்ஜீப் ஒண்ணு நின்னுட்டிருந்தது. ஜீப்புக்குள்ளேயும் ஆட்கள் இருந்தாங்க"

மனோஜின் நெற்றியும் பிடறியும் உடனடியாய் வியர்த்தது.

" ஜீப்புக்குள்ளே இருந்த ஆட்கள் போலீஸ் யூனிஃபார்ம்ல இருந்தாங்களா ? "

" ஸாரி மனோஜ்.... அந்த சமயத்துல நான் சரியா கவனிக்கலை. நான் என்னோட டூ வீலர்ல உன்னோட வீட்டை கிராஸ் பண்ணிட்டிருந்தேன்.
அதுவுமில்லாமே நீ ஃபரான்ஸிக் டிபார்ட்மெண்ட்ல ஒர்க் பண்றே. போலீஸ் உன்கிட்டயிருந்து ஏதாவது விபரம் கேட்டு வாங்க வந்திருப்பாங்கன்னு நினைச்சேன் "

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 42

மனோஜ் இப்போது ஒட்டு மொத்த உடம்பும் வியர்த்து வழிய சில விநாடிகள் அப்படியே உறைந்தான்.மூளைக்குள் யோசனை எறும்புகள் ஊர்ந்தன.

" திரிபுரசுந்தரியும், வளர்மதியும் எப்படியோ என்னை மோப்பம் பிடித்து விட்டார்கள் "

" எங்கே எந்த இடத்தில் எப்படி கோட்டை விட்டேன்.... "

" மேற்கொண்டு என்ன செய்யலாம் ? "

மனோஜ் யோசித்துக்கொண்டிருக்கும்போதே மறுமுனையிலிருந்து ராஜவேலு குரல் கொடுத்தார்.

" என்ன.... மனோஜ்..... லைன்ல இருக்கீங்களா.....ஏதாவது பிரச்சினையா.....? "

" நோ....நோ.... ஒரு பிரச்சினையும் இல்லை...... போலீஸீக்கு ஏதாவது தகவல் தேவைப்பட்டிருந்தா எனக்கு போலீஸ் கமிஷனர் போன் பண்ணியிருப்பார். நான் இப்ப வீட்டுக்கு கிளம்பிட்டேன். என்னான்னு போய்ப் பார்க்கிறேன் "

ராஜவேலு குறுக்கிட்டார்.

" நான் வேணும்ன்னா உங்க வீட்டுக்கு ஒரு நடை போய் விபரம் என்னான்னு கேட்டுட்டு உங்களுக்குப் போன் பண்ணட்டுமா மனோஜ்....? "

" வேண்டாம்..... ராஜவேலு...... நான் போய்ப் பார்த்துக்கிறேன். தேவைப்பட்டா நான் உங்களுக்கு போன் பண்றேன்.... "

மனோஜ் ராஜவேலுவுடனான இணைப்பைத் துண்டித்துவிட்டு, சில விநாடி யோசிப்புக்குப்பின் ஈஸ்வரை தன்னிடம் இருந்த இரிடியம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டான். மறுமுனையில் ஈஸ்வர் பேசினார். குரலில் உற்சாகம்.

" மனோஜ் இப்பத்தான் உன்னை நினைச்சேன். உடனே நீ போன் பண்றே...? "

" என்ன விஷயம் ஸார்....? "

" என்னோட சன் தீபக்கும் டாக்டர் ஜான் மில்லரும் இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ளே கோயமுத்தூர் ஏர்போர்ட் ரீச் ஆயிடுவாங்க. அதுக்கு அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளே செம்மேடு பங்களாவில் இருப்பாங்க. நீ நாளைக்கு காலையில் பத்து மணி சுமார்க்கு ஒரு நடை வந்து அவங்களைப் பார்த்துட்டு போயிடு "

" ஸ....ஸார் "

" என்ன மனோஜ் ..... ஏதாவது பிரச்சினையா.... குரல் டல்லடிக்குது..... "

" ஸார்.... போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரி என்னை ஸ்மெல் பண்ணிட்டாங்கன்னு நினைக்கிறேன் "

மறுமுனையில் ஈஸ்வர் அதிர்வதை மனோஜால் உணர முடிந்தது. அவரின் குரல் உயர்ந்தது.

" மனோஜ்...... நீ என்ன சொல்றே ....? "

மனோஜ் சற்றே ஆசுவாசப்படுத்திக்கொண்டு ஒரு இரண்டு நிமிட நேரத்தை செலவழித்து சற்று முன் நடந்த சம்பவங்களை சொல்லி முடித்தான்.

ஈஸ்வர் இன்னமும் அதிர்ச்சி விலகாத குரலில் கேட்டார்.

" அந்த திரிபுரசுந்தரியும், வளர்மதியும் எப்படி உன்னை ஸ்மெல் பண்ணியிருப்பாங்கன்னு நினைக்கிறே ....? "

" அதைத்தான் யோசனை பண்ணிட்டிருக்கேன் ஸார். எனக்கே தெரியாமே ஏதோ ஒரு இடத்துல எக்ஸ்போஸ் ஆயிட்டேன்னு நினைக்கிறேன்"

" சரி... நீ இப்போ எங்கே இருக்கே ....? "

" ரேஸ்கோர்ஸ் ரோட்டில் இருக்கிற "ஜாய்ஸ் Bar"க்குப் பக்கத்தில் ரோட்டோரமாய் காரை நிறுத்தி பேசிட்டிருக்கேன் "

" மனோஜ்...... நீ எதுக்கும் ஒரு தடவை உன்னோட வீட்டுக்குப் போய் போலீஸ் எதுக்காக வந்திருக்காங்கன்னு விசாரிச்சு பார்த்தா என்ன ....? "

" இல்ல லார்..... நான் வீட்டுக்குப் போறது ரிஸ்க்..... என்னோட கஸின் பிரதர் பிரேம்குமாரை தனக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லச் சொல்லி மிரட்டியிருக்காங்க. நான் வீட்ல உட்கார்ந்து டி.வியில் சினிமா பார்த்துட்டு இருப்பேன்ன்னு நினைச்சு போலீஸ் புறப்பட்டு வந்திருக்காங்க. ஏன்னா ரெண்டு மணி நேரத்துக்கு முந்தி நான் போன்ல வளர்மதிகிட்ட பேசிட்டு இருக்கும்போது அவகிட்டே நான் " அலிபாபாவும் நாற்பது திருடர்களும் " சினிமா பார்த்துட்டு இருக்கேன்ன்னு அவகிட்டே சொன்னது இப்ப ஞாபகம் வருது "

ஈஸ்வர் செல்போனின் மறுமுனையில் ஒரு பெருமூச்சை வெளியேற்றி விட்டு மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார்.

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 42

" ஒ.கே.... மனோஜ்.... இது பயப்பட வேண்டிய வேளையில்லை. புத்திசாலித்தனமாய் செயல்பட வேண்டிய நேரம். நம்ம ஆள் ஜோன்ஸ் இப்ப கார்ல செம்மேட்ல இருந்து புறப்பட்டு சிட்டிக்கு வந்துட்டிருக்கான். ஏர்போர்ட்டிலிருந்து தீபக்கையும், ஜான்மில்லரையும் கூட்டிகிட்டு மறுபடியும் அவன் செம்மேடு வரணும். உன்னோட கார்ல இனி நீ ட்ராவல் பண்றது சரியில்லை. ட்ராஃபிக் போலீஸீக்கு இந்நேரம் தகவல் போய் அவங்க கார் நெம்பரை மானிடரிங் பண்ண ஆரம்பிச்சிருக்கலாம். அதனால உன்னோட காரை அதே ரோட்ல இருட்டாய் இருக்கிற இடம் பார்த்து நிறுத்தி லாக் பண்ணிட்டு வெயிட் பண்ணு. ஜோன்ஸ் இன்னும் ஒரு பதினைஞ்சு நிமிஷத்துல வந்து உன்னை " பிக் அப்" பண்ணிக்குவான்...... ஜோன்ஸீம் நீயும் ஏர்போர்ட்டுக்கு போய் தீபக்கையும், ஜான்மில்லரையும் ரிஸீவ் பண்ணி செம்மேடு பங்களாவுக்கு வந்துடுங்க..... "

" ஸ....ஸார் "

" என்ன மனோஜ்....? "

" ஜோன்ஸ் கொஞ்சம் சீக்கிரமா வந்தா பரவாயில்லை. ஜோன்ஸ் வர்றதுக்குள்ளே போலீஸ் கையால் மாட்டிக்குவோமோன்னு பயமாயிருக்கு ஸார் "

" மனோஜ்...... நீ நம்ம க்ரூப்ல சேரும் போதே உன்கிட்டே சொன்ன ஒரு விஷயத்தை இப்ப நான் உனக்கு ஞாபகப்படுத்த வேண்டிய கட்டாயம். நான் என்ன சொன்னேன்னு ஞாபகம் இருக்கா உனக்கு ....? "

" நல்லாவே.... ஞாபகம் இருக்கு ஸார் "

" சொல்லு பார்ப்போம் "

" நமக்கு பிடிச்ச ஒரு வேலை சட்டத்துக்கு பிடிக்காத போது என்னிக்காவது ஒரு நாள் அது அடையாளம் கண்டு பிடிச்சுகிட்டு பக்கத்துல வரும். அந்த சமயத்துல அதை ஏமாத்தற திறமை யார்கிட்ட இருக்கோ அவன்தான் அதிபுத்திசாலின்னு நீங்க சொல்லியிருக்கீங்க ஸார் "

" யூ ஆர் கரெக்ட் " என்று சொல்லி ஈஸ்வர் மறுமுனையில் ஏதோ பேச முயற்சித்த விநாடி மனோஜின் சாதாரண ஆண்ட்ராய்ட் போன் திடீரென்று விழித்துக்கொண்ட ஒரு குழந்தையைப் போல் குரல் கொடுத்தது.

Rajesh kumar New Series “Vibareethangal Inge Virkappadum” part 42

மனோஜ் தன் கையில் வைத்து இருந்த இரிடியம் செல்போனிலிருந்து பார்வையை விலக்கி அந்தப் போனின் டிஸ்ப்ளேயைப் பார்த்தான். பிரேம்குமாரின் பெயர் ஒளிர்ந்தது.

ஈஸ்வர் கேட்டார்.

" அந்தப் போன்ல யார் கூப்பிடறாங்க "

" என்னோட கஸின் பிரதர் பிரேம்குமார் ஸார் "

" இரிடியம் போனை ஆஃப் பண்ணாமே ஆன்லயே வெச்சுட்டு அந்தப் போனை அட்டெண்ட் பண்ணு. ஸ்பீக்கர்ல போட்டுட்டு பேசு.... "

மனோஜ் ஈஸ்வர் சொன்னபடியே இரிடியம் போன் இணைப்பைத் துண்டித்துவிடாமல் தன்னுடைய செல்போனை எடுத்து ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு பேசினான்.

" பிரேம்குமார் "

மறுமுனையில் பிரேம்குமார் மூச்சு வாங்கிக்கொண்டே கேட்டான்.

" அண்ணா.... நீ இப்போ எங்கே இருக்கே. கொஞ்சம் சீக்கிரமா வாண்ணா "

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X