For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மே....மேடம்..... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (47)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

திரிபுரசுந்தரி தொடர்ந்து பேசினாள்.

" ஹரி...... இதுமாதிரியான நேரங்களில்தான் நீங்க தைரியமாய் இருக்கணும். வளர்மதியை நிச்சயமாய் நாம மீட்டுடலாம். ஆனா நீங்க குறிப்பிட்ட நேரத்துக்குள்ளே முடியுமான்னுதான் எனக்கு சந்தேகமாய் இருக்கு.... நீங்க இப்போதைக்கு வளர்மதி காணாமே போன விஷயத்தைப்பத்தி உங்க ஃபாதர் மதர்கிட்டே சொல்லவேண்டாம். அவங்க வளர்மதி எங்கேன்னு கேட்டா நம்பறமாதிரியான ஒரு காரணத்தை மட்டும் சொல்லி வையுங்க "

rajesh kumar new series vibareethangal inge virkappadum part 47

ஹரி பெருமூச்சுவிட்டான்.

" எதுமாதிரியான காரணத்தைச் சொல்றதுன்னு எனக்குத் தோணலை மேடம் "

" யோசனை பண்ணுங்க. இப்ப நீங்க வீட்டுக்குத்தானே போறீங்க .... ? "

" ஆமா மேடம்.... "

" வீடு போய்ச் சேர்ந்ததும் எனக்கு போன் பண்ணுங்க.... அதுக்குள்ளே நான் இங்கே வளர்மதியை மீட்க டிபார்டமெண்டிலிருந்து செய்ய வேண்டிய ஏற்பாடுகளைப்பற்றி என்னோட ஹை அஃபிஷியல்ஸ்கிட்டே பேசிடறேன் "

" மே....மேடம்..... " ஹரியின் குரல் அழுகையில் உடைந்தது.

" இதோ பாருங்க ஹரி..... வளர்மதியோட உயிர்க்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லாதபடி பத்திரமாய் கொண்டு வந்து சேர்க்க வேண்டிய பொறுப்பு என்னோடது. வளர்மதி ஒரு போலீஸ் இன்ஃபார்மராய் இருக்கிற விஷயம் உங்களுக்குத் தெரிஞ்சபோது அவளைக் கண்டிக்காமே மாரல் சப்போர்ட் பண்ணீங்க. அதை பாராட்டவும் செஞ்சீங்க. அதே மாதிரியான மன உறுதிதான் இதுமாதிரியான இக்கட்டான சமயங்களிலும் வேணும். வளர்மதி ஹைலி இன்டெலிஜென்ட் வுமன். எதிரிகளை எப்படி ஃபேஸ் பண்ணி ஜெயிக்கிறதுங்கிற ஆர்ட் நல்லாவே தெரியும்.... நாம இப்ப கவலைப்படற நேரம் கிடையாது. செயல்பட வேண்டிய நேரம் "

"எ....எ.....எனக்குப் புரியுது மேடம். ஆனா நாளைக்கு காலையில் அம்மாவும் அப்பாவும் வளர்மதி எங்கேன்னு கேட்டா அவங்களுக்கு என்ன பதிலைச் சொல்றதுன்னுதான் எனக்கு குழப்பமாய் இருக்கு. நான் சொல்ற பொய் நம்பற மாதிரியும் இருக்கணும்..... "

" நாளைக்குக் காலையில் வரைக்கும் டைம் இருக்கு. கொஞ்சம் யோசனை பண்ணுங்க ஹரி..... வீடு போய்ச் சேர்ந்ததும் எனக்கு போன் பண்ணுங்க "

" எஸ்.... மேடம் " ஹரி செல்போனை மனக்கலக்கத்தோடு அணைத்துவிட்டு காரில் ஏற முயன்ற விநாடி பின்பக்கம் குரல் கேட்டது.

" ஸார் "

ஹரி திரும்பிப் பார்க்க ஹாஸ்பிடலின் வாட்ச்மேன் நின்றிருந்தார்.

" என்ன ஸார்..... அம்மா எங்கே இருக்காங்கன்னு தெரிஞ்சுதா.... ? "

வாட்ச்மேன் கேட்ட கேள்விக்கு ஒரு விநாடி என்ன பதிலைச் சொல்வது என்று திணறிய ஹரி அடுத்த விநாடியே சரளமாய் அந்தப் பொய்யைச் சொன்னான்.
" அவங்க பக்கத்தில் இருக்கிற குமரன் பார்மஸிக்கு ஏதோ மருந்து வாங்கப் போயிருக்காங்க. என்கிட்டே ஏற்கனவே சொல்லியிருந்தாங்க. நான்தான் ஏதோ ஒரு ஞாபகத்துல மறந்துட்டேன் "

வாட்ச்மேன் சிரித்தார். " என்ன ஸார் நீங்க.... கொஞ்ச நேரத்துல வயித்தையே புரட்டற மாதிரி பண்ணிட்டீங்க .... ? "

" தப்புதான்.... நான் பார்மஸிக்கு போய் அப்படியே அம்மாவை கூட்டிகிட்டு போயிடறேன். இந்த விஷயத்தை வெளியே யார்கிட்டேயும் சொல்லிட்டிருக்க வேண்டாம் வாட்ச்மேன் "

" நான் எதுக்கு ஸார் சொல்றேன் "

வாட்ச்மேனின் கையில் ஐம்பது ரூபாய் நோட்டொன்றைக் கொடுத்துவிட்டு காரை நகர்த்தினான் ஹரி.

இரண்டு குறுக்குத் தெருக்களைக் கடந்து கார் மெயின் ரோட்டுக்கு வந்திருந்த போது அவனுடைய செல்போன் ரிங்டோனை வெளியிட்டது. காரின் வேகத்தைக் குறைத்துக்கொண்டே போனை எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான்.

அம்மா அழைத்துக் கொண்டிருந்தாள்.

காரின் வேகத்தை மேலும் குறைத்தவன் செல்போனை காதுக்கு ஒற்றினான்.

" சொல்லும்மா.... "

" என்ன வீட்டுக்குப் போய் சேரந்துட்டீங்களா .... ? "

" இல்லேம்மா.... போயிட்டிருக்கோம். ஏன் என்ன விஷயம் ? "

" வளரோட போனுக்கு என்னாச்சு ? போன் பண்ணினேன். ரிங்டோன் போகவேயில்லை. ஸ்விட்ச் ஆப்ல இருக்கா ? "

rajesh kumar new series vibareethangal inge virkappadum part 47

" அது வந்தும்மா.... வளரோட போன் கார்ல அவ ஏறும்போது கீழே விழுந்து லேசா கீறல் விட்டிருக்கு. போன் ஆக்டீவாய் இல்லை.... வீட்டுக்குப் போய்த்தான் என்னான்னு பார்க்கணும் "

" சரி.... போனை வளர்கிட்டே குடு... "

" என்ன விஷயம் சொல்லம்மா... ? "

" ஏன் வளர்க்கு என்ன ... ? "

" அம்மா.... வளர் காரோட பின்சீட்ல சாஞ்சுகிட்டு தூங்கறா "

" என்னடா சொல்றே.... இந்நேரத்துக்கு என்னடா தூக்கம் ... ? "

" தலைவலியாம்.... ஒரு மாத்திரைப் போட்டுகிட்டு பின்சீட்டுக்குப் போய் சாய்ஞ்சுட்டா....எழுப்பட்டுமா ... ? "

" வேண்டாம்..... வேண்டாம். தலைவலின்னு சொன்ன பிறகு தொந்தரவு படுத்த வேண்டாம். விஷயம் என்னான்னு சொல்லிடறேன். என்னோட ரூம் பீரோவுல வைரக்கம்மலை ஜீவல் பாக்ஸீக்குள்ளே வெச்சேனா இல்ல வெளியேவே வெச்சுட்டேனான்னு ஒரு சந்தேகம். வெளியே இருந்தா அதை பாக்ஸீக்குள்ளே வெக்கணும் "

" அவ்வளவுதானே.... நான் வெச்சுடறேன்... வேற விஷயம் ஒண்ணுமில்லையே ... ? "

" ஏண்டா.... இவ்வளவு டென்ஷன் படறே ... ? "

" இது டென்ஷன் இல்லேம்மா.... கார் ஒட்டும்போது செல்போன்ல பேசக்கூடாதுன்னு நீதானே சொல்லுவே ... ? "

" ஆமா.... ஆமா..... எல்லாம் நாளைக்குப் பேசிக்கலாம்.... நான் சொன்ன வேலையை மட்டும் பண்ணிடு "

" சரிம்மா " ஹரி செல்போனை அணைத்துவிட்டு காரை கனக்கிற இதயத்தோடு ஓட்ட ஆரம்பித்தான்.

****

டி.ஜி.பி பஞ்சாபகேஷனுக்கு முன்பாய் திரிபுரசுந்தரி சற்றே தலைகவிழ்ந்து உட்கார்ந்திருக்க, அவர் தன்னுடைய வார்த்தைகளை நெருப்பில் வாட்டி திரிபுரசுந்தரியின் மேல் வீசிக்கொண்டிருந்தார்,

" நான் உங்களுக்கு ஆரம்பத்திலிருந்தே சொல்லிட்டு வர்றேன். ஒரு போலீஸ் இன்ஃபார்மருக்கு எதுமாதிரியான் வேலையைக் கொடுக்கணுமோ அதுமாதிரியான வேலைகளை மட்டும்தான் தரணும். அதுவும் ஒரு குடும்பப் பெண்ணான வளர்மதியை இந்த கேஸ்ல இன்வால்வ் பண்ண வெச்சது ஹைலி இடியாட்டிக்....முட்டாள்தனம்......"

திரிபுரசுந்தரி தான் ஒரு போலீஸ் கமிஷனர் என்பதையும் மறந்து, கண்களில் நீர் கோர்த்துக்கொள்ள டி.ஜி.பி.யை ஏறிட்டாள்.

" வளர்மதிக்கு இப்படியொரு நிலைமை ஏற்படும்ன்னு நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை ஸார் "

" நான் எதிர்பார்த்தேன்..... இப்படியொரு அசம்பாவிதம் என்னிக்காவது ஒருநாள் நடக்கும்ன்னு நான் ஹண்ட்ரட் பர்சன்ட் எக்ஸ்பெக்ட் பண்ணினேன். அந்த நல்ல நாள் இன்னிக்குன்னு இப்பத்தான் எனக்குத் தெரிஞ்சுது. அயாம் வெரி ஹேப்பி வித் யுவர் பர்பாமென்ஸ் மிஸஸ் திரிபுரசுந்தரி "

திரிபுரசுந்தரி டி.ஜி.பி.யை கம்மிப்போன குரலோடு ஏறிட்டாள்.

" ஸார் நாளைக்கு சாயந்தரம் ஆறு மணிக்குள்ளே வளர்மதியை நாம மீட்டாகணும் "

டி.ஜி.பி. கேலியாய் சிரித்தார்.

" அதாவது வளர்மதியோட மாமனார் மாமியார்க்கு விஷயம் தெரியறதுக்கு முந்தி.... "

" ஆமா ஸார் "

" ஏதோ முகூர்த்ததிற்கு நேரம் குறிச்சுட்டு வந்த மாதிரி பேசிட்டு இருக்கீங்க. இது முடிகிற காரியமா .... ? "

" நீங்க மனசு வெச்சா முடியும் ஸார் "

" நான் என்ன பண்ணனும்ன்னு சொல்லுங்க "

" வளர்மதி காணாமே போய் இப்ப ஒரு மணி நேரமாச்சு ஸார். இந்த விவகாரத்தை சி.பி.சி.ஐ.டிக்கு கொண்டு போய் ஒரு ஸ்பெஷல் சர்ச் விங் ஸ்குவாடை ஃபார்ம் பண்ணனும்...... அதுவும் உடனடியாய் உருவாக்கணும் "

" உருவாக்கி.... ? "

" தலைமறைவாயிட்ட மனோஜைத் தேடி கண்டுபிடிக்கிற வேலையை அவங்ககிட்ட கொடுக்கணும். மனோஜ் கிடைச்சுட்டா அவரோட வாயிலிருந்து உண்மையை வரவழைச்சு வளர்மதி இருக்கிற இடத்தைக் கண்டுபிடிச்சுடலாம் "

" ஒரு கேஸை சி.பி.சி.ஐ.டிக்கு கொண்டு போகணும்ன்னா போலீஸ் டிபார்ட்மெண்ட்டை கையில் வெச்சுட்டு இருக்கிற மினிஸ்டர்கிட்டயிருந்து பர்மிஷன் வாங்கணும். அதுக்கு முன்னாடி நான் சி.எம்.யோட சீப் செக்கரட்டரிகிட்டே பேசணும். இந்த ஃபார்மாலிடி எல்லாம் உங்களுக்கே தெரியும். இருந்தாலும் ஏதோ பேப்பர் வெயிட்டை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர்த்தி வைக்கிற மாதிரி பேசிட்டிருக்கீங்க.... "

" ஸாரி... ஸார் நீங்க முயற்சி எடுத்துகிட்டா கண்டிப்பா இது நடக்கும் " திரிபுரசுந்தரி சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவளுடைய செல்போன் இன் கம்மிங் கால் வந்ததற்கு அறிகுறியாக ஒளிர்ந்தது. எடுத்து அழைப்பது யார் என்று எடுத்துப் பார்த்தாள்.

செல்போனின் டிஸ்ப்ளேயில் அன்பரசனின் பெயர் விட்டு விட்டு பளிச்சிட்டது. திரிபுரசுந்தரி டி.ஜி.பி.யை ஏறிட்டாள்.

" ஸார் ஏசிபி அன்பரசன் ஈஸ் காலிங் "

" ஸ்பீக்கரை ஆன் பண்ணிட்டு பேசுங்க "

திரிபுரசுந்தரி தன்னுடைய செல்போனின் ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு குரல் கொடுத்தாள்.

" சொல்லுங்க.... அன்பரசன் மனோஜ் பற்றிய ஏதாவது தகவல் கிடைச்சுதா........?"

" அது வந்து மேடம்..... ஒரு எதிர்பாராத ஷாக் நியூஸ். இப்பத்தான் தகவல் வந்து ஸ்பாட்டுக்கு போய்ட்டு இருக்கோம் "

" என்ன தகவல்........?"

" மனோஜ் உயிரோடு இல்லை மேடம் "

திரிபுரசுந்தரி அதிர்ந்து போனாள். குரலில் குளிர் பரவ கேட்டாள்.

" மை குட்னஸ்.... மனோஜ்க்கு என்னாச்சு........? "

" மேடம்..... மனோஜ் வீடு திரும்பாத காரணத்தால் அவர் தன்னோட கார்ல மூவ் ஆயிட்டிருந்தா அதை ட்ரான்ஸ்போர்ட் டிராபிக் செக்சன் மானிட்டர் பண்ணிட்டிருக்கும்போதே ரெட்ஃபீல்ட்ஸ் போலீஸ் கண்ட்ரோல் ரூமிலிருந்து ஒரு தகவல் வந்தது. அதாவது மானிட்டரிங் செய்யப்படுகிற மனோஜோட கார் ரேஸ்கோர்ஸ் ரோட்ல ஒதுக்குப்புறமான இருட்டுப் பகுதியில் நிறுத்தப்பட்டு இருக்கிறதாகவும், கார்க்குள்ளே மனோஜ் இறந்து கிடக்கிறதாகவும் தகவல். அந்த ஸ்பாட்டுக்குத்தான் நான் இப்போ போயிட்டிருக்கேன் மேடம் "

" மனோஜோட மரணம் எப்படி ........? "

" தெரியலை மேடம்.... ஸ்பாட்டுக்கு போய்ப் பார்த்தாத்தான் தெரியும் "

" ரேஸ்கோர்ஸ்ல எந்த இடம் ........? "

" ஜாய்ஸ் பார்க்கு பக்கத்துல "

" நீங்க ஸ்பாட்ல இருங்க.... நான் புறப்பட்டு வர்றேன் "

" எஸ் மேடம் "

திரிபுரசுந்தரி தன்னுடைய செல்போனை அணைத்துவிட்டு டி.ஜி.பி பஞ்சாபகேஷனை ஏறிட்டு பார்க்க அவருடைய உதட்டோரம் ஒரு கேலி புன்னகை அரும்பியிருந்தது.

" மனோஜூம் இப்போ உயிரோடு இல்லை...... என்ன பண்ணப்போறீங்க திரிபுரசுந்தரி........? "

அவரை இமைக்காமல் பார்த்தாள் திரிபுரசுந்தரி.

டி.ஜி.பியின் சிரிப்பு சற்றே அதிகமாயிற்று.

" என்ன அப்படி பார்க்கறீங்க ........? "

திரிபுரசுந்தரி தீர்க்கமாய் பார்த்துக்கொண்டே கேட்டாள்.

" ஸார் .... நான் ஒரு கேள்வி கேட்டா நீங்க தப்பாய் நினைச்சுக்க மாட்டீங்களே ? "

என்ன........? "

" இந்த டி.ஜி.பி போஸ்ட்டுக்கு நீங்க தகுதியானவர்தானா ........? "

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X