For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாட் டூ யூ மீன்.... ? விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (48)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

திரிபுரசுந்தரி அப்படியொரு கேள்வியைக் கேட்டதும் டி.ஜி.பி பஞ்சாபகேசனின் விழிகளில் கோபத்தின் சிவப்புச்சாயம் தெரிந்தது. நிமிர்ந்து உட்கார்ந்தவர் குரலை உயர்த்தினார்.

” வாட் டூ யூ மீன் .... ? ”

” உங்களுக்கு புரியலையா ஸார் ? நம்ம போலீஸ் டிபார்ட்மெண்டிலேயே டி.ஜி.பிங்கிறது ஒரு பவர்ஃபுல் போஸ்ட். அந்த போஸ்ட்ல இருக்கிறவங்களுக்கு அசாத்தியமான பொறுமையும் ஒரு பிரச்சினைக்குரிய குற்றவியல் சம்பவத்தை அறிவார்ந்த முறையில் தீர்க்கக்கூடிய பொறுமையும் வேணும். அந்த இரண்டுமே உங்ககிட்டே இல்லாதபோது இந்தப் போஸ்ட்டுக்கு நீங்க தகுதியானவர் இல்லைன்னு நான் சொன்னேன்.....”

பஞ்சாபகேசன் ஆத்திரம் மேலிட்டவராய் தான் உட்கார்ந்திருந்த நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு எழுந்தார். கோபமாய் ஒருமையில் பேச ஆரம்பித்தார்.

” திஸ்.... ஈஸ் டூ மச்..... நீ உன்னோட போஸ்டிங் டெஸிக்னேஷனை மறந்து ஒரு மேலதிகாரி கிட்டே பேசிகிட்டிருக்கே. மைண்ட் இட் ”

rajesh kumar new series vibareethangal inge virkappadum part 48

” ஐ டோண்ட் மைண்ட் இட் ஸார். இப்படியொரு அசைன்மென்ட்டைக் கொடுத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கச் சொன்னதே நீங்கதான். நீங்க அப்படிச் சொன்ன ஒரேயொரு காரணத்துக்காகத்தான் வளர்மதியையும் ஃபாரன்ஸிக் ஆபீஸர் மனோஜையும் களம் இறக்கினேன். மனோஜ் ஒரு கறுப்பு ஆடுன்னு சில மணி நேரங்களுக்கு முன்னாடிதான் தெரிஞ்சுது. மனோஜை மடக்க ஒரு கமேண்டோ படையை அனுப்பியும் பலன் கிடைக்கலை. மனோஜூம் இப்ப உயிரோடு இல்லை. மனோஜ் ஒரு கறுப்பு ஆடுன்னு கண்டுபிடிச்சு சொன்ன வளர்மதியும் மர்மமான முறையில் காணாமே போயிருக்கா. இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான நிலைமையில் எதுமாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம்ன்னு உங்க கிட்டே பேச வந்தா நீங்க என்னையே ப்ளேம் பண்றமாதிரி பேசறது எந்த விதத்துல நியாயம் ஸார் .... ? ”

” என்ன ஆர்க்யூமெண்ட் பண்றியா .... ? ”

” திஸ் ஈஸ் நாட் ஆர்க்யூமெண்ட் ஸார். திஸ் ஈஸ் மை ஒப்பன் ஹார்ட் ஸ்டேட்மெண்ட் ”

” ஐ டோண்ட் வாண்ட் யுவர் எனி ப்ளடி ஸ்டேட்மெண்ட். கெட் லாஸ்ட் ”

” ஒரு பெண் போலீஸ் கமிஷனரான எனக்கு நீங்க இன்னிக்கு கொடுத்த மரியாதையை என்னிக்குமே மறக்க மாட்டேன் ஸார். தேங்க்ஸ் ஃபார் யுவர் புரோட்டோ கால் ”

திரிபுரசுந்தரி அட்டென்ஷனுக்கு வந்து ஒரு சல்யூட்டை அடித்து விட்டு அறையினின்றும் வெளியேறினாள்.

****

ரெட்ஃபீல்ட்ஸ் அந்த முன்னிரவு நேரத்தில் நிசப்தம் காக்க ஜீப்பை ஜாய்ஸ் பார்க்கு அருகில் நிறுத்தச் சொல்லி இறங்கிக்கொண்டாள் திரிபுரசுந்தரி.

ஏசிபி அன்பரசன் ரோட்டைக் கிராஸ் செய்து வேகவேகமாய் வந்து சல்யூட் செய்துவிட்டு தளர்ந்தார்.

” உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன் மேடம் ”

” மனோஜோட கார் எங்கே நிக்குது .... ? ”

” கம் திஸ் ஸைட் மேடம்......” சொல்லி கூட்டிக்கொண்டு போனார் அன்பரசன். திரிபுரசுந்தரி கேட்டாள்.

” எஸ்.ஒ.ஸி. பார்த்துட்டீங்களா .... ? ”

” அட் ஃபர்ஸ்ட் சைட் பார்த்துட்டோம் மேடம் ”

” எனி க்ளூ ஃபார் மர்டர் .... ? ”

” மேடம் இது மர்டர் மாதிரி தெரியலை ? ”

” தென் ? ”

” காரோட ஏர்க்கண்டிஷனர் மெஷின்ல ஏதோ பிரச்சினை ஏற்பட்டு கேஸ் லீக்காகி மனோஜூக்கு மரணம் ஏற்பட்டிருக்கு..... ”

” இந்த முடிவுக்கு எப்படி வந்தீங்க .... ? ”

” ஃபாரன்ஸிக் டாக்டர் கெளரி சங்கர் மனோஜை டெஸ்ட் பண்ணிப் பார்த்துட்டு கொடுத்த முதல் ரிப்போர்ட்ல அவர் அப்படித்தான் மென்ஷன் பண்ணியிருக்கார் ”

” அதாவது இது மர்டராக இருக்க வாய்ப்பில்லைன்னு அவர் சொல்றார் ? ”

” எஸ்.... மேடம் ”

” கெளரி சங்கர் இன்னமும் ஸ்பார்ட்ல இருக்காரா ? ”

” இருக்கார் மேடம் ”

திரிபுரசுந்தரி ஏசிபியின் பின்னால் பேசிக்கொண்டே நடக்க இருட்டில் ஒரு கார் நின்றிருப்பதும், சற்றுத்தள்ளி ஒரு ஆம்புலன்ஸூம் தெரிந்தது. காரின் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருக்க அதன் சீலிங் விளக்கு ஒளியை உமிழ்ந்து காரின் உட்பகுதியைக் காட்டியது.

” மனோஜ் பாடி எங்கே ? ”

” அதோ மரத்துக்குப் பின்னாடி படுக்க வெச்சிருக்கோம் மேடம் ” அன்பரசன் கை காட்டிய பக்கம் திரிபுரசுந்தரி போனாள்.

நேற்று வரை சிரித்துப் பேசிப் பழகிக் கொண்டிருந்த மனோஜ் அந்த மரத்துக்குப் பின்னால் பெட்ஷீட்டால் போர்த்தப்பட்டு கிடந்தான். ஒரு கான்ஸ்டபிள் போர்வையை விலக்கி விட்டு டார்ச் ஒளியை மனோஜின் முகத்தில் அடித்தார்.

பாதிவிழிகள் செருகிய நிலையில், லேசாய் வாய் பிளந்து உயிரை விட்டிருந்தான் மனோஜ். நாசியின் வலது புற துவாரத்திலிருந்து வழிந்த ரத்தம் உறைந்து போய் ஒரு கருஞ்சிவப்புக் கோட்டைப்போல் தெரிந்தது.

ஃபாரன்ஸிக் டாக்டர் கெளரி சங்கர் பக்கவாட்டில் நின்றபடி தயக்கமாய் குரல் கொடுத்தார்.

” மேடம்..... இது ஒரு மர்டர் மாதிரி எனக்குத் தெரியலை. ஏ.ஸியில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டு கேஸ் லீக்காயிருக்கு. அந்த கேஸை மனோஜ் இன்ஹேல் பண்ணியிருக்கணும். மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் சம்பவித்திருக்கலாம் ”

” எப்படி அவ்வளவு உறுதியாய் சொல்றீங்க ........? ”

” மேடம் ...... மனோஜோட நாசி துவாரத்தில் ரத்தம் வரக்காரணம் அவரோட காரின் ஏ.ஸி. ப்ளோயரிலிருந்து ரெப்ரீஜாண்ட் லீக்காகி, காற்றில் கலந்து வெளிப்பட்ட கார்பன் மானோக்ஸைடை சுவாசிச்சிருக்கார். பொதுவாய் இப்படிப்பட்ட கார்களில் R134A- க்ரேடு ரெப்ரீஜாண்ட்தான் உபயோகத்தில் இருக்கு ”

” இவ்வளவு விலை உயர்ந்த காரில் ஏ.ஸி கேஸ் லீக்காக வாய்ப்பு இல்லையே ........? ”

” மேடம்.... இந்த கார் விலை உயர்ந்ததுதான். ஆனா ரெண்டு லட்சம் கிலோ மீட்டர் வரை ஒடியிருக்கு. இந்த ஏ.ஸி செட்டப்பில் பைப் ஜாயிண்ட்ஸ், ப்ரஸர் ரிலீஸ் வால்வ், ஃப்ரண்ட் சீல் ஆஃப் கம்ப்ரஸ்ஸர் எல்லாம் கொஞ்சம் வீக்காயிருக்கு. அதனால் கேஸ் கசிஞ்சு வெளியே வந்து கார்பன் மானோக்ஸைடாய் மாறி மனோஜோட மூச்சை நிறுத்தியிருக்கு ”

” மனோஜ் உடம்புல எந்த காயமும் இல்லையா ........? ”

” இல்ல மேடம் ”

” எனக்கென்னமோ மனோஜோட மரணத்தில் ஒரு சந்தேகம் இருக்கு. ஹி மே ஹேவ் பீன் மர்டர்ட் ”

” ஸாரி மேடம்.... ஐ டோண்ட் திங் ஸோ. என்னோட முதற்கட்ட விசாரணைப்படி காரோட ஏர்க்கண்டிஷன் சிஸ்டத்தில்தான் பிரச்சினை. இந்தக் கார் ரெண்டு லட்சம் கிலோ மீட்டர் தூரம் ஒடியிருக்கு. ஒரு காரோட ஏ.ஸி. சிஸ்டம் சரியான முறையில் பாரமரிக்கப்படாத பட்சத்தில் இதுமாதிரியான லீக்கேஜ்கள் ஏற்பட்டு மரணங்கள் நிகழ்வதை தடுக்க முடியாது. மனோஜோட உடலை ஒரு முழு போஸ்ட்மார்ட்டத்துக்கு உட்படுத்தினால் நான் சொன்னது உண்மைன்னு உங்களுக்குத் தெரிய வரும் ”

திரிபுரசுந்தரி சில விநாடிகள் மெளனமாய் இருந்துவிட்டு ஏசிபி அன்பரசனிடம் திரும்பினாள்.

” இந்த இடத்துல் சி.சி.டி.வி.காமிராக்கள் ஏதாவது இருக்கா ........? ”

” இல்லை மேடம்..... ஜாய்ஸ் பார்க்கு எதிரே ஒரு மரத்துல சி.சி.டி.வி. காமிராவை ஃபிக்ஸ் பண்ணியிருக்காங்க. ஆனா கவரேஜ் இதுவரைக்கும் வர்றது இல்லை.... ”

” மனோஜோட கஸின் பிரதர் பிரேம்குமார் எங்கே ........? ”

” அவனை வீட்ல விட்டுட்டுதான் வந்திருக்கோம். அவனை கண்காணிக்க கான்ஸ்டபிள் ஒருத்தர் அங்கு இருக்கார் ”

திரிபுரசுந்தரி மேற்கொண்டு பேசும் முன்பாக அவளுடைய செல்போன் வைபரேஷனில் உறுமியது.

மனசுக்குள் ஒரு பயம் பரவியது.

” அழைப்பது யார் ........? ”

” ஹரியா ? ”

” ஹரியாய் இருந்தால் என்ன பதிலைச் சொல்லி சமாளிப்பது ........? ”

தயக்கத்தோடு செல்போனை எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தாள்.

சி.எம்.செல்லிலிருந்து சீஃப் செக்ரட்டரி குருமூர்த்தி கூப்பிட்டுக் கொண்டிருந்தார். சற்றே நகர்ந்து போய் நின்று கொண்டு மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தாள்.

” ஸார்..... ”

குருமூர்த்தி கேட்டார். ” பேசறது யாரு..... கமிஷனர் திரிபுரசுந்தரியா....? ”

” எஸ்.... ஸார் ”

” உங்களுக்கும் டி.ஜி.பி பஞ்சாபகேசனுக்கும் என்னம்மா பிரச்சினை ........? ”

” ஒரு பிரச்சனையும் இல்லே ஸார் ”

” நீங்க பிரச்சனை இல்லைன்னு சொல்றீங்க. ஆனா அவர் உங்க மேல ஒரு பெரிய புகார் பட்டியலையே வாசிக்கிறாரேம்மா ”

” என்ன புகார் ஸார் ? ”

” அவர் உங்களுக்கு மேலதிகாரி என்கிற விஷயத்தையே மறந்துட்டு கண்டபடி பேசியிருக்கீங்க போலிருக்கு ? ”

” ஸாரி ஸார்..... நான் அவரை தரக்குறைவாய் பேசலை. நான் இப்ப விசாரணை பண்ணிட்டு இருக்கிற ஒரு கேஸ் விஷயமாய் சில யோசனைகளை அவர் முன்னாடி எடுத்து வெச்சேன். அவர் அதைத் தப்பா புரிஞ்சுகிட்டார் ”

” அவர்க்கு யோசனை சொல்ல நீங்க யாரம்மா. டி.ஜி.பி கொடுத்த புகார் பேர்ல உங்க மேல சி.எம். நடவடிக்கை எடுத்துட்டார் ”

” நடவடிக்கையா? ”

” ஆமாம்மா..... இந்த நிமிஷத்திலிருந்து நீங்க ஆறு மாசத்துக்கு சஸ்பெண்ட் பண்ணப்பட்டு இருக்கீங்க. சஸ்பெண்ட் ஆர்டர் இந்நேரம் உங்க இ-மெயிலுக்கு வந்திருக்கும். மெயிலை ஒப்பன் பண்ணிப் பார்த்துட்டு வீட்டுக்குப் போய் வேற ஏதாவது வேலையிருந்தா பாருங்க ”

” ஸார் இது அநியாயம் ” என்று திரிபுரசுந்தரி கத்திக்கொண்டிருக்கும் போதே செல்போனின் இணைப்பு அறுந்து போயிற்று.

****

செம்மேடு

இரவு பதினோரு மணி. ஈஸ்வரின் பங்களாவுக்குள் காரை நுழைத்த ஜோன்ஸ் அதை போர்டிகோவில் கொண்டு போய் நிறுத்த காரின் இரண்டு பக்கக் கதவுகளையும் திறந்தபடி தீபக்கும் டாக்டர் ஜான் மில்லரும் இறங்கினார்கள்.

இருவருமே ஆறடி உயரத்தில் விரிந்த தோள்களோடும் தேகாப்பியாச உடம்போடும் தெரிந்தார்கள்.

பங்களாவின் உள்ளேயிருந்து வந்த ஈஸ்வரின் கைகளைப் பற்றி ஜான் மில்லர் குலுக்க, தீபக் அப்பாவை இடது பக்கமாய் போய் ஒரு புன்னகையோடு அணைத்துக்கொண்டான்.

” எப்படிப்பா இருக்கீங்க........? ”

ஈஸ்வர் புன்னகைத்தார்.

” எனக்கென்னடா குறைச்சல் ? ”

” கொஞ்சம் இளைச்சுட்டீங்க ”

” நீ வந்துட்டியல்ல....... இனிமே தேறிடுவேன் ” என்று சொன்ன ஈஸ்வர் டாக்டர் ஜான் மில்லரை ஏறிட்டார். அழகான ஆங்கிலத்தில் பேசினார்.

” விமானம் இரண்டு மணி நேரம் தாமதமானதில் கொஞ்சம் களைப்பாய் தெரிகிறீர்கள் டாக்டர் ”

” இரண்டு பெக் ப்ளாக் ஹார்ஸ் ரம் அடித்தால் களைப்பெல்லாம் காணாமல் போய்விடும் மிஸ்டர் ஈஸ்வர் ” என்று சொல்லிச் சிரித்தார் டாக்டர் ஜான் மில்லர்.

ஜோன்ஸ் காரை நகர்த்திக்கொண்டு போய்விட மூன்று பேரும் உள்ளே போனார்கள். தீபக் நடந்து கொண்டே கேட்டான்.

” அப்பா.... மூணாவது மனித எலியான வளர்மதியையும் நம்ம மாதவன் மூலமாய் கடத்திகிட்டு வந்ததுல எந்த பிரச்சனையும் இல்லையே ? ”

ஈஸ்வர் மகனின் தோள் மீது கை போட்டார்.

” தீபக்.... நமக்கு என்னிக்குத்தான் பிரச்சினை வந்திருக்கு ? பிரச்சினைக்கு காரணமாய் இருந்தவங்க உயிரோடு இருந்தாத்தானே பிரச்சினைகள் வரும். ரெண்டு நாளைக்கு முன்னாடி அபுபக்கரை முடிச்சேன். ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி மனோஜை முடிச்சேன் ”

” மனோஜ் நல்ல திறமைசாலி. எல்லா ஃபாரன்ஸிக் விஷயங்களும் அவனுக்கு அத்துபடி. அவனை உயிரோடு விட்டிருக்கலாம் ”

” ஒருத்தன் எவ்வளவு புத்திசாலியாய் இருந்தாலும் நம்ம க்ரூப்ல இருக்கிறவங்களை போலீஸ் மோப்பம் பிடிச்சுட்டா அவங்க உயிரோடு இருக்கக்கூடாது. மனோஜ் போயிட்டா நமக்கு இன்னொரு பாரன்ஸிக் ஆபீஸர் கிடைக்காமலா போயிடுவான் ........? ”

ஈஸ்வர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சற்று தொலைவிலிருந்து மாதவன் வேகவேகமாய் வந்து கொண்டிருந்தான்.

நடந்து கொண்டிருந்த ஈஸ்வர் நின்றார். குழப்ப முகத்தோடு கேட்டார்.

” என்ன மாதவன் ....... ஏன் இப்படி ஒட்டமும் நடையுமாய் வர்றே........? ”

” ஸ.....ஸார்....அந்த வளர்மதிக்கு நாளைக்கு காலையில்தான் மயக்கம் தெளியும்ன்னு நினைச்சுட்டிருந்தேன். ஆனா இப்பவே அவளுக்கு நினைவு திரும்பிட்டிருக்கு...... எந்திரிச்சு உட்கார முயற்சி பண்றா.... வந்து பாருங்க ஸார் ” என்று சொன்னவனின் முகத்தில் அதிகப்படியான பதட்டம் தெரிந்தது.

(தொடரும்)

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X