For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ப்ளீஸ் மேடம்.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (50)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

திரிபுரசுந்தரியின் வீட்டை அஸிஸ்ட்ண்ட் போலீஸ் கமிஷனர் அன்பரசன் அடைந்த போது நள்ளிரவு சரியாய் பனிரெண்டு மணி.

அந்த மினி பங்களாவின் சிட்அவுட்டில் அரையும் குறையுமான மின் விளக்கு வெளிச்சத்தில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தபடி திரிபுரசுந்தரி காத்திருந்தாள்.
அன்பரசனைப் பார்த்ததும் சந்தோஷத்தோடு எழுந்தாள். அவர் சல்யூட் வைக்க விரக்தி கலந்த சிரிப்பொன்றை உதிர்த்தாள்.

rajesh kumar new series vibareethangal inge virkappadum part 49

" என்ன அன்பரசன் ..... நான் சன்பென்ஷன்ல இருக்கிறதை மறந்துட்டீங்களா... இந்த புரோட்டோ-கால் சல்யூட்டை இனிமே எனக்கு கொடுக்காதீங்க..... "

" ஸாரி மேடம் "

" உள்ளே வாங்க " திரிபுரசுந்தரி சொல்லிவிட்டு சிட்அவுட்டை ஒட்டியிருந்த பக்கத்து அறைக்குள் நுழைய அன்பரசனும் பின் தொடர்ந்தார். ஒரு எல்.இ.டி.யின் வெளிச்சத்தில் அந்த சிறிய அறை நீளமான சோபாவோடும், இரண்டு நாற்காலிகளோடும் தெரிந்தது.

" உட்கார்ங்க அன்பரசன்..... " சோபாவைக் காட்டிவிட்டு எதிரேயிருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள் திரிபுரசுந்தரி.

" ஏதாவது சாப்ட்றீங்களா அன்பரசன் ....ப்ளாஸ்க்ல டீ இருக்கு... தரட்டுமா? "

" வேண்டாம் மேடம்.... இந்நேரத்துக்கு டீ சாப்பிட்டா அப்புறம் தூக்கம் வராது "

" இட்ஸ் ஒ.கே.... " என்று தலையசைத்தவள் அன்பரசனைப் பார்த்து தயக்கமான குரலில் கேட்டாள்.

" மனோஜோட எக்ஸ்டர்னல் போஸ்ட்மார்ட்டம் என்ன சொல்லுது அன்பரசன்.... ? "

" காரோட ஏ.சி.மெஷினிலிருந்து வெளிப்பட்ட கேஸ் லீக்கேஜ்தான் மனோஜோட மரணத்துக்கு காரணம்ன்னு ரிப்போர்ட்ல மென்ஷன் பண்ணியிருக்காங்க மேடம். நாளைக்கு முழுமையான போஸ்ட்மார்ட்டம் நடந்தாத்தான் மரணத்துக்கான சரியான காரணம் தெரியும் "

திரிபுரசுந்தரி மெலிதான ஒரு புன்னகையோடு சொன்னாள். " அது நிச்சயமாய் ஒரு கொலையாய் இருக்கத்தான் வாய்ப்பு அதிகம் அன்பரசன். ஏன்னா மனோஜைப்பத்தி எனக்குத் தெரியும். எந்த ஒரு விஷயத்தையுமே முன் ஜாக்கிரதையோடு கையாள்பவர். காரோட ஏ.ஸி. கேஸ் லீக் ஆகிறவரைக்கும் காரை ஒரு மோசமான நிலைமையில் வைத்து இருக்கக் கூடியவர் அல்ல..... "

" எனக்கும் அந்த விஷயத்துல ஒரு நெருடல் இருக்கு மேடம். மனோஜ் ஒரு ஃபாரன்ஸிக் ஆபீஸர் ... கார்க்குள்ளே கேஸ் லீக்கேஜ் இருந்தா அவரால அதை ஸ்மெல் பண்ணியிருக்க முடியும்..... ஆனா எக்ஸ்டர்னல் போஸ்ட்மார்ட்டத்துல கிடைச்ச இன்னொரு தகவல் அந்த நினைப்புக்கு வலு சேர்க்கலை மேடம் "

" அது என்ன தகவல் .... ? "

" மனோஜ் இறக்கும்போது குடிபோதையில் இருந்திருக்கார். அவர் எந்த அளவுக்கு லிக்கரை கன்ஸ்யூம் பண்ணியிருக்கார்ன்னு முழு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கைக்கு வந்த பின்னாடிதான் தெரியும் "

" இட்ஸ் ஒ.கே..... உயிரோடு இல்லாத மனோஜைப் பத்திப்பேசி இனி பிரயோஜனமில்லை.... நான் எதுக்காக உங்களைக் கூப்பிட்டேன்னு சொல்லிடறேன் "

" ப்ளீஸ் மேடம்.... "

" ஏற்கெனவே நடந்த சம்பவங்களுக்கும், இப்ப நடந்துட்டிருக்கிற சம்பவங்களுக்கும் காரணம்.... ஈஸ்வர் என்கிற ஒரு முக்கியமான புள்ளிதான்ங்கிறது என்னோட கெஸ்வொர்க்.... இது...... எந்த அளவுக்கு உண்மைன்னு எனக்குத் தெரியாது. டெல்லி சி.பி.ஐ.தான் முதல் முதல்ல அந்த நபர் மீது சந்தேகப்பட்டு அவரோட நடவடிக்கைகளை ஃபாலோ அப் பண்ணச் சொல்லியிருந்தாங்க.... நானும் ஷேடோ ஸ்க்வாட் ஒரு போலீஸ் விங்கை ஃபாலோ பண்ண வெச்சு தகவல்களைத் திரட்ட முயற்சி பண்ணினேன். கிட்டதட்ட ஆறுமாத காலம் முயற்சி செஞ்சும் ஈஸ்வரோட நடவடிக்கைகளில் எந்த ஒரு தப்பையும், முரண்பாட்டையும் அந்த ஷேடோ ஸ்க்வாடால கண்டுபிடிக்க முடியலை... ஈஸ்வர் மேல எந்த ஒரு சந்தேகமும் இல்லாத நிலைமையில் ஷேடோ ஸ்க்வாட் தேவையில்லைன்னு டி.ஐ.ஜி. சொன்னதின் பேரில் அந்த ஸ்க்வாடை ரத்து பண்ணினேன். இருந்தாலும் என்னோட மனசுக்குள்ளே ஈஸ்வரோட செயல்பாடுகளில் ஒரு ! சந்தேகம் இருந்துட்டேயிருந்தது. முக்கியமா அவர் இலவசமாய் திருமணம் பண்ணி வெச்ச கல்யாண ஜோடிகளில் அஞ்சு ஜோடிகள் மர்மமான முறையில் தற்கொலை பண்ணிகிட்டு இறந்து போனது ஒரு பெரிய மர்மமாகவே எம் மனசுக்குப்பட்டது. அதிலும் அவங்க எல்லோருமே ரெசின் என்கிற விஷத்தைச் சாப்பிட்டு இறந்து போனது மிகப்பெரிய நெருடல். நம்ம போலீஸ் டிபார்ட்மெண்ட் இதுல போதுமான அளவு தீவிரம் காட்டாததினால நான் டிபார்ட்மெண்ட்டுக்கு சம்பந்தப்படாத வளர்மதியை இந்த கேஸ்ல இன்வால்வ் பண்ண வெச்சு பல உண்மைகளை வெளியே கொண்டு வந்தேன். அதுல ரெண்டு புதிரான மருத்துவ சோதனைகளான " தி ஷெல்ஃபிஷ் ஜீன்" "தி ப்ளைண்ட் வாட்ச் மேக்கர் ஜீன்" மிக மிக முக்கியம் "

அன்பரசன் குறுக்கிட்டு கேட்டார்.

" இது எது மாதிரியான சோதனைகள் மேடம் ? "

" அந்த உண்மைகள் தெரிஞ்ச ஒரே நபரான ஜெனிடிக்ஸ்ட் ஸ்டீபன்ராஜ் நாலைஞ்சு நாளைக்கு முன்னாடி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலைக்குப் பின்னணியில் அபுபக்கர் இருந்தது தெரிய வர, அவரைத் தேடிக் கண்டுபிடிக்கிற முயற்சியில் வளர்மதியும், மனோஜூம் ஈடுபட்டாங்க.... மனோஜ் ஒரு கறுப்பு ஆடுன்னு நாம ஸ்மெல் பண்ணிட்டதால அவரையும் கார் ஏ.ஸி. கேஸை கசிய வெச்சு உயிரை எடுத்துட்டாங்க.... இப்படி நாம இந்தக் கேஸில் குற்றவாளிகளை நோக்கி நகர நகர நமக்கு தெரிந்த நபர்கள் ஒண்ணு காணாமே போயிடறாங்க. இல்லேன்னா கொலை செய்யப்படறாங்க....." திரிபுரசுந்தரி சொல்ல அன்பரசன் கொதித்தார்.

" இதுக்கெல்லாம் காரணம் ஈஸ்வர்ன்னு தெரிஞ்சும் நம்ம டிபார்ட்மெண்ட் ஏன் மெளனமாய் இருக்காங்க மேடம் ? "

" காரணம் ஈஸ்வர் ஒரு சாதாரண நபர் கிடையாது. வெரி பவர்ஃபுல் பர்சன். பத்தாயிரம் கோடிக்கு அதிபதி. அவர் அரசியலில் நேரிடையாய் ஈடுபடாமே ஒதுங்கியிருந்தாலும் அவர்க்குப் பின்னாடி ஒரு பொலிடிகல் டீம் இருக்கு... நம்ம டிபார்ட்மெண்ட்ல இருக்கிற சில ஹை அஃபிஷியல்ஸும் அவர்க்கு ஆதரவாய் காய்களை மூவ் பண்ணிட்டு இருக்காங்க. அதுக்கு ஒரு நல்ல உதாரணம் என்னை ஏன் எதுக்குன்னு கேட்காமே தடாலடியாய் சஸ்பெண்ட் பண்ணினது.... "

அன்பரசன் ஒரு பெருமூச்சோடு திரிபுரசுந்தரியை ஏறிட்டார்.

" மேடம்..... நீங்க சொன்னதையெல்லாம் கேட்ட பிறகு எனக்கு இந்த காக்கி யூனிஃபார்மே ஒரு உறுத்தலாய் இருக்கு. நாம போலீஸ் ட்ரெயினிங் எடுத்துக்கறது குற்றச்செயல்களைத் தடுக்கத்தானே தவிர குற்றவாளிகளுக்கு ஆதரவாய் செயல்படறதுக்காக அல்ல.... நீங்க இப்ப பதவியில் இல்லாமே போனாலும் என்னைப் பொறுத்தவரை நீங்கதான் எனக்கு கமிஷனர். நான் என்ன செய்யணும்ன்னு சொல்லுங்க மேடம்.... "

" ஈஸ்வர் இப்போ எங்கே இருக்கார்ன்னு ட்ரேஸ் அவுட் பண்ணனும் "

" அவர் வீடு எங்கேயிருக்கு மேடம் ? "

" அவர்க்கு இந்த கோயமுத்தூர்ல பத்துக்கும் மேற்பட்ட பங்களாக்கள் இருக்கு. ஊட்டி, கொடைக்கானல்ல நிறைய ரெஸ்ட் ஹவுஸஸ். அது தவிர தமிழ்நாட்டோட அழகிய கிராமங்களில் ஏக்கர் கணக்கில் பரந்திருக்கிற ஃபார்ம் ஹவுஸ்கள் ஏகப்பட்டது இருக்கு. அவர் இப்ப எந்த ஊர்ல எந்த வீட்ல இருக்கார்ன்னு கண்டுபிடிச்சுட்டா வளர்மதியைக் கண்டுபிடிச்சுடலாம். வளர்மதியை மட்டுமல்ல கடத்தப்பட்ட சில்பா, காணாமல் போன நர்மதாவையும் மீட்டுடலாம் "

அன்பரசன் சில விநாடிகள் யோசித்துவிட்டு நிமிர்ந்தார்.

" மேடம் .. என்னோட மனசுக்குப்பட்ட ஒரு விஷயத்தைச் சொல்லட்டுமா? "

" என்ன சொல்லுங்க ? "

" செம்மேடு ஏரியாவுக்குள்ளே போன் அபுபக்கர் இன்னமும் அந்த ஏரியாவிலிருந்து திரும்பி வரலைன்னு சொன்னீங்க ? "

" ஆமா..... "

" அந்த செம்மேடு ஏரியாவில் ஈஸ்வர்க்கு பங்களா ஏதாவது இருக்கலாம். அபுபக்கர் அந்த பங்களாவுக்குப் போய் ஈஸ்வரை பார்த்து இருக்கலாம். அங்கே அவரோட உயிர்க்கு ஆபத்து கூட ஏற்பட்டிருக்கலாம் " அன்பரசன் சொல்லச் சொல்ல திரிபுரசுந்தரியின் முகம் ஒரு சின்ன மலர்ச்சிக்கு உட்பட்டது.

rajesh kumar new series vibareethangal inge virkappadum part 49

" ம்..... அப்படியும் இருக்கலாம்.... பட் அந்த செம்மேடு ஏரியா ஒரு காட்டுப் பகுதியோடு இணைந்த கிராமம். உள்ளே நிறைய ரிசார்ட்கள், பண்ணை வீடுகள் இருக்கு. ஈஸ்வர் எங்கே இருக்கார்ன்னு எப்படி கண்டுபிடிக்கப் போறோம்... ? "

" யூ டோண்ட் வொரி மேடம்.... நான் அந்தப் பொறுப்பை எடுத்துக்கிறேன் "

" அன்பரசன்...... இது வெறும் இன்வெஸ்டிகேஷன் மட்டும் இல்லை "

" தெரியும் மேடம்.... உயிரைப் பணயம் வைக்கணும்... இப்படிப்பட்ட சவாலான ஒரு கேஸைத்தான் ரொம்ப நாளா எதிர்பார்த்து காத்திட்டிருந்தேன் " சொன்ன அன்பரசன் எழுந்து நின்று அட்டென்ஷனுக்கு வந்து சல்யூட் வைத்தார்.

திரிபுரசுந்தரி புன்னகையோடு " அன்பரசன் மறுபடியும் தப்பு பண்றீங்க... நான் இப்போ உங்களுக்கு கமிஷனர் கிடையாது " என்றாள்.

" ஸாரி மேடம்.... தப்பான மேலதிகாரிகளுக்கு சல்யூட் பண்றதைவிட உங்களுக்கு பண்ணும்போதுதான் இந்த யூனிஃபார்ம்க்கு பெருமை. நாளைக்குக் காலையில் ஒரு நல்ல செய்தியோடு உங்களுக்கு போன் பண்றேன் மேடம்..... "

" அயாம் வெயிட்டிங் அன்பரசன் "

****

செம்மேடு கிராமமும் அதனோடு இணைந்த காட்டுப்பகுதியும் அந்த நள்ளிரவு வேளையில் அடர்த்தியான இருட்டிலும், கனமான நிசப்தத்திலும் உறைந்து போயிருந்தது. ஈஸ்வரின் பண்ணை பங்களா மட்டும் முன்புறம் எரிந்து கொண்டிருந்த ஒரு சிறிய எல்.இ.டி.பல்பின் வெளிச்சம் காரணமாய் மங்கலான வரைபடம் போல் தெரிய, சுற்றிலும் செழித்து வளர்ந்திருந்த மரங்கள் மெளனமாய் வீசிய காற்றுக்குத் தலையாட்டிக்கொண்டிருந்தது.

செக்யூரிட்டி செல்லுக்குள் உட்கார்ந்திருந்த ஜோன்ஸ் தன்னுடைய செல்போன் வைபரேஷனில் உதறுவதைப் பார்த்ததும் எடுத்தான். மறுமுனையில்
மாதவன் கூப்பிட்டுக் கொண்டிருந்தான். செல்போனை எடுத்து காதுக்குப் பொத்தினான்.

" என்ன மாதவன்.... ? "

"இப்ப மணி ஒண்ணு முப்பது. வர்றேன்னு சொன்னே? உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்......"

ஜோன்ஸ் மெளனமாய் இருக்க, மாதவன் மறுமுனையில் கிசுகிசுப்பான குரலில் கேட்டான்.

" என்ன பேச்சைக் காணோம் .... ? "

" அ....அ.....அது....வந்து..... "

" என்ன ஜோன்ஸ்..... குரலை இப்படி இழுக்கிறே .... ? "

" கொஞ்சம் பயமாயிருக்கு மாதவன் "

" என்னது..... உனக்கு பயமா..... ? இந்த நடுராத்திரியில் ஜோக்கெல்லாம் அடிக்காதே..... உடனே புறப்பட்டு வா..... "

" மாதவன்.... நான் என்ன சொல்ல வர்றேன்னா .... ? "

" சொல்லு.... "

" இப்ப இந்த ஃபார்ம் ஹவுஸில் பெரியவர் ஈஸ்வர் மட்டுமில்லை. அவரோட சன் தீபக்கும், ஃபாரினிலிருந்து வந்திருக்கிற டாக்டர் ஜான் மில்லரும் இருக்காங்க.... அவங்கள்ல யாராவது ஒருத்தர் பார்த்துட்டா கூட பெரிய பிரச்சினையாயிடும். பிரச்னை என்ன.... நீயும் நானும் அந்த நிமிஷமே உயிரோடு இருக்க மாட்டோம் "

" அந்த மூணு பேரும்..... ஷிவாஸ் ரீகலோடு ஹெவியா டின்னரைச் சாப்டுட்டு மட்டை மாதிரி படுத்து தூங்கிட்டு இருக்காங்க.... குறட்டைச் சத்தம் கூரையைத் தூக்குது. நிலைமையைப் பார்த்தா காலையில் பத்து மணிக்குத்தான் எத்திரிப்பாங்கன்னு நினைக்கிறேன் "

" மாதவன்.... எதுக்கும் ஒரு தடவை யோசனை பண்ணிக்க "

" பலதடவை யோசனை பண்ணிட்டேன். இந்த வாய்ப்பை தவறவிட்டா இன்னொரு வாய்ப்பு கிடைக்க வாய்ப்பேயில்லை. உடனடியாய் புறப்பட்டு வா.... "

" சரி.... ரெண்டு நிமிஷத்துல புறப்பட்டு வர்றேன் " சொன்ன ஜோன்ஸ் செல்போனை அணைத்து மேல்சட்டைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு செக்யூரிட்டி கூண்டிலிருந்து வெளியே வந்தான். அந்த பழக்கமான இருட்டில் ஒரு பென் டார்ச்சை உயிர்ப்பித்துக்கொண்டு மெல்ல நடை போட்டான்.
சில அடிதூரம் நடந்ததுமே அவிழ்த்து விடப்பட்டு இருந்த நாய்களில் ஒன்று குரைக்காமல் அவன் மேல் வந்து மோதி விளையாட ஆரம்பித்தது.

" டேய் ப்ளாக்கி.... விளையாட இது நேரமில்லை. உன்னோட ட்யூட்டியைப் போய் பாரு "

அவன் சொன்னதைப் புரிந்து கொண்ட ப்ளாக்கி அங்கிருந்து ஒடிவிட, ஜோன்ஸ் இருட்டில் கரைந்து வேகமாய் நடக்க ஆரம்பித்தான். இரண்டு நிமிட நடை.

சற்றுத் தொலைவில் மாதவன் சிகரெட்டின் சிவப்புக் கண்களோடு தெரிந்தான்.

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X