For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எ....எ....என்னாச்சு மாதவன்.... ?.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (53)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

” சரி..... உள்ளே வாங்க..... ” என்ற திரிபுரசுந்தரி இண்டர்காம் ரிஸீவரை வைத்துவிட்டு மாடியினின்றும் கீழே இறங்கி வந்தாள். முன்வாசல் ட்யூப் லைட்டிற்கு உயிர் கொடுத்துவிட்டு கதவைத் திறந்தாள்.

வெளியே ஹரியும், அவனுக்குப் பின்னால் திடகாத்ரமான உடம்புகளோடு உயரமாய் இரண்டு பேர் நின்றிருந்தார்கள்.

” ப்ளீஸ் கம் ” திரிபுரசுந்தரி சொல்லிவிட்டு வீட்டின் ஹாலுக்குள் நுழைய அவர்கள் மூன்றுபேரும் பின்தொடர்ந்து உள்ளே வந்தார்கள். சோபாவைக்காட்டி அவர்கள் உட்கார்ந்ததும் திரிபுரசுந்தரி எதிர்புற நாற்காலியில் போய் அமர்ந்தாள்.

” சொல்லுங்க ஹரி.... வளர்மதியை மீட்க ஏதோ திட்டம் இருக்கிறதாய் சொன்னீங்க..... என்ன அது......? ”

ஹரி சில விநாடிகள் வரை மெளனமாய் இருந்துவிட்டு ஒரு பெருமூச்சோடு நிமிர்ந்தான்.

rajesh kumar new series vibareethangal inge virkappadum part 53

” மேடம்.... அந்தத் திட்டத்தைப்பத்தி உங்ககிட்ட நான் சொல்றதுக்கு முந்தி இவங்க யார்ன்னு சொல்லிடறேன். ”செவன்த் சென்ஸ்” என்கிற பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்ஸி பற்றி நீங்க கேள்விப்பட்டு இருக்கீங்களா .....? ”

” ம்..... கேள்விப்பட்டு இருக்கேன் ”

” அந்த ஏஜென்ஸியைச் சேர்ந்தவங்கதான் இவங்க..... இவர் மிஸ்டர் சுனில், இவர் மிஸ்டர் பண்டரிநாத். ஆறு மாசத்துக்கு முன்னாடி ஒரு ஆங்கில நாளிதழில் இந்த ”செவன்த் சென்ஸ்” என்கிற பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்ஸி பற்றிய ஆர்ட்டிகள் ஒண்ணைப் படிச்சேன். தமிழ்நாட்டில் இருக்கிற சில முக்கியமான வி.ஐ.பி.களுக்கு நேரக்கூடிய குற்றவியல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை இவங்க காதும் காதும் வெச்ச மாதிரி முடிச்சு கொடுத்து இருக்காங்க என்கிற விபரமும் அதுல இருந்தது. நான் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி உங்ககிட்ட செல்போன்ல பேசும் போது ” நான் இப்ப கமிஷனர் போஸ்ட்ல இல்ல. அயாம் ஹெல்ப்லஸ்”ன்னு நீங்க சொன்னதுமே எனக்கு இந்த ”செவன்த் சென்ஸ்” பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்ஸி பற்றிய ஞாபகம் வந்தது. நான் உடனடியாய் கூகுள்ல பார்த்து ஏஜென்ஸியோட போன் நெம்பரைக் கண்டு பிடிச்சு காண்டாக்ட் பண்ணி பேசினேன். பிரச்சினையை எடுத்துச் சொன்னேன். அடுத்த அரை மணி நேரத்துக்குள்ளே என் வீட்டுக்கு வந்துட்டாங்க. எப்படியும் நாளைக்கு சாயந்தரம் ஆறுமணிக்குள்ளே வளர்மதியை மீட்டுத் தர்றோம்ன்னு உறுதியோடு சொல்றாங்க....... ”

திரிபுரசுந்தரி ஹரி சொன்னதைக் கேட்டு விட்டு விரக்தியாய் புன்னகைத்தாள்.

” ஹரி..... நீங்க சொல்றதைக் கேட்டும் போது மனசுக்கு ரொம்பவும் சந்தோஷமாயிருக்கு. ஆனா அவங்க வளர்மதியை எப்படி மீட்கப் போறாங்கன்னு சொன்னாப் பரவாயில்லை. ஏதாவது திட்டம் இருக்கா .... ? ”

அதுவரைக்கும் எதுவும் பேசாமல் மெளனமாய் இருந்த சுனில் என்கிற நபர் திரிபுரசுந்தரியை ஏறிட்டார்.

” மேடம்..... நாங்க செயல்படுத்தப் போகிற திட்டத்துக்கு நீங்க உதவி பண்ணினால்தான் அது வெற்றிகரமாய் முடியும்.... ”

” உங்களுக்கு எதுமாதிரியான உதவி வேணும் .... ? ”

” வளர்மதி உட்பட மொத்தம் மூணு பெண்கள் காணாமே போயிருக்காங்க... இதுக்குக் காரணம் பணபலமும், அதிகார பலமும் படைத்த அந்த ஈஸ்வர்தான் நீங்க நினைக்கிறீங்க இல்லையா .... ? ”

” ஆமா.....”

” அந்த ஈஸ்வர்க்கு தமிழ்நாட்ல நிறைய வீடுகள் இருக்கு.... இப்ப அவர் எங்கே எந்த வீட்ல இருப்பார்ன்னு உங்களுக்கு தெரியலைன்னு சொல்லியிருக்கீங்க.... இல்லையா மேடம்.... ? ”

” ஆமா..... ”

” அந்த வீடுகளோட முகவரிகள் உங்களுக்கு தெரியுமா.... ? ”

” தெரியாது ”

” யார்கிட்ட கேட்டா தெரியும்.... மேடம்.... ? ”

” நோ..... ஐடியா ”

” செம்மேடு ஏரியாவுக்குள்ளே காரை ஒட்டிகிட்டு போன அபுபக்கர் என்கிற நபர் மறுபடியும் தன் காரோடு திரும்பி வராததினால ஈஸ்வர் அந்த ஏரியாவில்தான் இருப்பார்ன்னு அஸிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனர் அன்பரசன் உங்ககிட்ட சொன்னதுல உண்மை இருக்கும்ன்னு நினைக்கிறீங்களா .... ? ”

” இருக்கலாம்..... ”

” அந்த ஏரியா பீட் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் கிட்டே நீங்க ஈஸ்வரைப்பத்தி விசாரிச்சா.... ஏதாவது தகவல் கிடைக்கலாம் மேடம்.... ஏன்னா அந்த ஏரியாவில் இருக்கிற முக்கியமான வி.ஐ.பி.க்களைப்பத்தி அவர்க்கோ போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிற மற்றவர்களுக்கோ தெரிஞ்சிருக்க வாய்ப்பு அதிகம்..... ”

திரிபுரசுந்தரி பதில் சொல்லாமல் அமைதி காக்க, ”செவன்த் சென்ஸ்” இன்வெஸ்டிகேஷனைச் சேர்ந்த இன்னொரு நபரான பண்டரிநாத் கேலியான புன்னகையோடு கேட்டார்.

” என்ன மேடம் சைலண்ட் ஆயிட்டீங்க..... போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் கிட்டே உங்களால பேச முடியாதா .... ? ”

” நான் இப்போ சஸ்பென்ஷன்ல இருக்கேன்.... இப்படியொரு நிலைமையில் இருக்கும்போது நான் எந்த ஒரு என்கொய்ரியையும் செய்யக்கூடாது..... லீகலி இட்ஸ் அன் அஃபென்ஸ் ”

” போலீஸ் டிபார்ட்மெண்ட்ல எல்லாமே சட்டப்படித்தான் நடக்குதா மேடம்.... ? வளர்மதியைக் காப்பாத்தற விஷயத்துல நீங்க சட்டத்தை மீறினாலும் தப்பில்லைன்னு நான் நினைக்கிறேன் ”

திரிபுரசுந்தரி மேலும் சில விநாடிகள் மெளனிக்க ஹரி மெல்ல தன் குரலை உயர்த்தினாள்.

” என்ன மேடம்..... ரொம்பவும் யோசிக்கிறீங்க போலிருக்கு..... வளர்மதி தன்னோட உயிரையும் பொருட்படுத்தாமல் நீங்க கொடுத்த ஒரு அசைன்மெண்ட்டுக்காக தன்னோட பல மணி நேரங்களை செலவு பண்ணியிருக்கா. ப்ளீஸ் மைண்ட் இட்..... ”

திரிபுரசுந்தரி ஒரு பெருமூச்சோடு தலையசைத்தாள். ” இட்ஸ்.... ஒ.கே....ஹரி... நான் பேசறேன் ” சொன்னவள் தன்னுடைய செல்போனை எடுத்து ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் குணசேகரனை தொடர்பு கொண்டாள். செல்போனின் ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு பேச ஆரம்பித்தாள்.

” குணசேகரன்..... ”

” மேடம்... நீங்களா..... என்ன மேடம் இந்த நேரத்துல .... ? ”

” சொல்றேன்..... நீங்க இப்போ எங்கே இருக்கீங்க.... ? ”

” வீட்லதான் மேடம்..... இப்பத்தான் பெட்ரோலிங் போய்ட்டு வீட்டுக்கு வந்தேன். ட்ரஸ்ஸை மாத்திவிட்டு படுக்கைக்குப் போகும்போதுதான் உங்க போன் வந்தது ”

” ஒரு நிமிஷம் பேசலாமா குணசேகரன்? ”

” பேசலாம் மேடம்.... ”

” நான் சஸ்பென்ஷன்ல இருக்கேன்.... அந்த விஷயம் உங்களுக்குத் தெரியுமா? ”

” கேள்விப்பட்டேன் மேடம்.... எனி பாலிடிக்ஸ் இன் த டிபார்ட்மெண்ட் ? ”

” எஸ்.... அதைப்பத்தி இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம். இப்ப உங்களால எனக்கு ஒரு உதவியாகணும். கேன் யூ..... ? ”

” பை ஆல் மீன்ஸ்..... சொல்லுங்க மேடம்..... ”

” உங்களுக்கு தொழிலதிபர் ஈஸ்வரைத் தெரியுமா ..... ? ”

” தெரியும் மேடம்..... வருஷா வருஷம் இலவசத் திருமணங்களை நூற்றுக்கணக்கில் நடத்தி வெப்பார். அவர்தானே ..... ? ”

” அவரேதான்.... நீங்க அவரை நேர்ல பார்த்திருக்கீங்களா ..... ? ”

” இல்ல மேடம்...... பேப்பர்லேயும் டி.வி.யிலேயும் அவரோட முகத்தைப் பார்த்திருக்கேன். நேர்ல பார்த்தது இல்லை ”

” நீங்க ஆலாந்துறை ஸ்டேஷன்ல எப்ப சார்ஜ் எடுத்தீங்க ..... ? ”

” போன வருஷம் ஜனவரி ”

” ஸோ.... ஒன்றரை வருஷம் அந்த ஸ்டேஷன்லதான் இருக்கீங்க ..... ? ”

” ஆமா..... மேடம் ”

” அப்படீன்னா...... ஆலாந்துறை செம்மேடு ஏரியாவில் உள்ள வி.ஐ.பி.க்களோட பங்களாக்கள் எங்கே இருக்கு என்கிற விபரம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன் ”

” தெரியும் மேடம்..... ”

” அந்த வி.ஐ.பி.க்கள் யார் யார்ன்னு சொல்ல முடியுமா குணசேகரன்? ”

” தாரளமாய் ” என்று சொன்ன குணசேகரன் நான்கைந்து சினிமா பிரபலங்கள் பெயர்களையும், இரண்டு பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பெயர்களையும், சில தொழிலதிபர்களின் பெயர்களையும் குறிப்பிட்டார்.

அந்தப் பெயர்களையெல்லாம் கவனமாய்க் கேட்டுக்கொண்ட திரிபுரசுந்தரி சில விநாடிகள் மெளனித்துவிட்டு கேட்டாள்.

” தொழிலதிபர் ஈஸ்வர்க்கு சொந்தமான ஃபார்ம் ஹவுஸ், ரிசார்ட்ஸ் எதுவும் அந்த ஏரியாவில் இல்லையா ? ”

” அப்படி எதுவும் இருக்கிற மாதிரி தெரியலை மேடம். இருந்திருந்தா கண்டிப்பாய் எனக்குத் தெரிஞ்சிருக்குமே. நான் வேணும்ன்னா நாளைக்குக் காலையில் விசாரிச்சு சொல்லட்டுமா ? ”

” யார்கிட்ட போய் விசாரிப்பீங்க ? ”

” செம்மேடு கிராமத்துல வயசான வி.ஓ. ஒருத்தர் இருக்கார். நாளைக்கு அவர்கிட்டே கேட்டுச் சொல்றேன் ”

” இந்த நேரத்துல அவரை காண்டாக்ட் பண்ணி விசாரிக்க முடியாதா ? ”

” இந்த நேரத்துல எப்படி மேடம்..... செம்மேடு கிராமத்துக்கு போன மாசம் ஒரு கேஸ் விஷயமாய் விசாரிக்க போனபோது அவரைப் பார்த்து போயிருக்கேன். அவரோட காண்டாக்ட் நெம்பரோ அவரோட வீடு கிராமத்துல எங்கே இருக்கோன்னா எனக்குத் தெரியாது. நாளைக்குப் போய்தான் விசாரிக்கணும் ”

” அவரோட பேர் என்ன ? ”

” ஞானமூர்த்தி. நாளைக்குக் காலையில் ஒரு ஏழு மணி சுமார்க்கு அவரைப் போய்ப் பார்த்து ஈஸ்வர்க்கு அந்த ஏரியாவில் ஏதாவது ஃபார்ம் ஹவுஸ் இருக்கான்னு கேட்டுச்சொல்றேன் மேடம் ”

” உங்க போனுக்காக வெயிட் பண்ணிட்டிருப்பேன் குணசேகரன்... மேட்டர் ஈஸ வெரி அர்ஜண்ட் ”

” எனக்குப் புரியுது மேடம்.... நான் நாளைக்குக் காலையில் எட்டு மணிக்குள்ளே போன் பண்ணி விபரம் சொல்றேன் ”

” தேங்க்யூ ”

திரிபுரசுந்தரி செல்போனை அணைத்துவிட்டு ஹரியை ஏறிட்டாள்.

” நாம நாளைக்கு காலையில எட்டு மணி வரைக்கும் பொறுமையாய் இருக்கிறதைத் தவிர வேறு வழியில்லை ”

” ஒ.கே.மேடம்.... நாங்க புறப்படறோம். நாளைக்குக் காலையில் எட்டு மணிக்கு உங்ககிட்டயிருந்து ஒரு நல்ல தகவலை எதிர்பார்க்கிறேன் ”

மூவரும் எழுந்தார்கள்.

****

செம்மேடு

இருட்டின் பின்னணியில் மாதவன் கையில் ஆயுதத்தோடு தெரிய, ஜோன்ஸ் மிரண்டு போன விழிகளோடு அவனை உற்றுப் பார்த்தான். மரத்தின் பெரிய கிளைகளை வெட்டக்கூடிய இரண்டடி நீள அரிவாள் அது. செல்போனின் டார்ச் வெளிச்சத்தை தெளித்துக்கொண்டே மூச்சு வாங்கியபடி, மாதவனை நோக்கி வேகமாய் போனான் ஜோன்ஸ். மாதவனின் தோள் மேல் மேல் கை வைக்க முயன்றவன் திடுக்கிட்டான். மாதவனின் வலது மார்புச்சட்டை ரத்தத்தில் நனைத்திருக்க அவன் தடுமாற்றமாய் நடை போட்டபடி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தான். பார்வையில் கோபம், ஆத்திரம் கனல் பொறிகளாய் தெறித்தன.

ஜோன்ஸ் நடுக்கமாய் மாதவனின் மணிக்கட்டைப் பற்றினான்.

எ....எ....என்னாச்சு மாதவன்.... ? ”

” அவ..... அவ..... தப்பிச்சுட்டா...... ”

” யா.....யாரு .... ? ”

” வ....வ.....வளர்மதி..... ”

” எ.....எ.....எப்படி .... ? ”

” ஜோன்ஸ்..... நான் ஒரு விஷயத்தை சொன்னா நீ நம்ப மாட்டே.... ”

” எ....எ...என்ன சொல்லு ”

மாதவன் மூச்சிரைத்தபடி ஏதோ சொல்ல ஆரம்பித்தான். முடியவில்லை. மண்டியிட்டு அப்படியே உட்கார்ந்தான்.

அதே நேரம்....

ஃபார்ம் ஹவுஸின் எல்லாத் திசைகளிலிருந்தும் நாய்கள் ஒரே நேரத்தில் குரைக்க ஆரம்பித்தன.

(தொடரும்)

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X