For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உனக்கு என்னாச்சு... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (54)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

ஜோன்ஸ் மிரண்டான்.

நாய்கள் ஒரு பக்கம் விடாமல் குரைத்துக்கொண்டிருக்க, கீழே மண்டியிட்டு உட்கார்ந்திருந்த மாதவன் திணறும் குரலில் பேச ஆரம்பித்தான். வார்த்தைகள் உடைந்து வெளியே வந்தது.

" ஜோ.... ஜோன்ஸ்.....அ.... அந்த வளர்மதியை விடக்கூடாது..... அவளை.... அவளை.... " கோபமாய் சொன்னவன் ஒரு பக்கமாய் சாய சட்டென்று மாதவனை ஒரு கையில் தாங்கிப் பிடித்துக்கொண்ட ஜோன்ஸ் கேட்டான்.

rajesh kumar new series vibareethangal inge virkappadum part 53

" மாதவன்...... உனக்கு என்னாச்சு..... வளர்மதி உன்கிட்டயிருந்து எப்படி தப்பிச்சா .... ? "

மாதவன் சோர்ந்து போன கண்களால் ஜோன்ஸைப் பார்த்தபடி மூச்சிரைக்கப் பேசினான்.

" நான் உன்கூட செல்போன்ல பே....பே....பேசிட்டு ரூமோட கதவைப் பூட்டப் போனேன். அ....அ....அதே நேரத்துல வளர்மதி நான் எதிர்பாராத நேரத்துல டாய்லட் கதவைத் திறந்துகிட்டு வே...வேகமா வெளியே வந்தா..... அவ ....அவ கையில ஒரு துப்பாக்கி இருந்தது "

ஜோன்ஸின் விழிகள் கலவரத்துக்குட்பட்டன.

" மாதவன்...... நீ எ....என்ன சொல்றே.... ? வளர்மதியோட கையில துப்பாக்கி இருந்ததா .... ? "

" ஆ....ஆமா "

" எ....எ....எப்படி .... ? "

" தெ.....தெரியலை....நா....நான் அவ கையில் இருந்த துப்பாக்கியைப் பார்த்ததும் தப்பிச்சு ஒட நினைச்சேன். ஆனா கண்ணிமைக்கிற நேரத்துக்குள்ளே அவ.....எ....எ....என்னைச் சுட்டுட்டா. டப்ன்னு ஒரு சத்தம். வலது..... மார்பு பக்கம்..... ஒரு..... தோட்டா பாயறதுக்கு....பதிலாய்.... " மாதவனுக்குப் பேசப் பேச வெகுவாய் மூச்சு வாங்கியது. சுவாசிக்க வாயைத் திறந்து திறந்து மூடினான். ஜோன்ஸ் தவிப்போடு கேட்டான். " பதிலாய் .... ? "

" என்னோட மார்புக்குள்ள ஒரு..... ஊசியை சொருகி எடுத்த மாதிரி வலி.... அப்படியே நிலை குலைஞ்சு போய் விழுந்துட்டேன். நான் கீழே விழுந்ததும் அவ ரூமைப் பூட்டிட்டு சாவியையும் எடுத்துட்டு அந்தப் பக்கமா ஒடினா.... நானும் துரத்த ஆரம்பிச்சேன்.... அந்த இருட்டுல எங்கே போய் அவ ஒளிச்சுகிட்டான்னு தெரியலை. அவளைத் தேடி அலையும் போதுதான் என் மார்பிலிருந்து துளித்துளியாய் வெளிப்பட்ட ரத்தம் என்னோட சட்டையை நனைக்க ஆரம்பிச்சது. மேற்கொண்டு என்னால வேகமாய் ஒட முடியலை... எப்படியோ டூல்ஸ் ரூமுக்குப்போய் இந்த அரிவாளை எடுத்துகிட்டேன். அவ பார்வைக்குத் தட்டுப்பட்டா அரிவாளை வீசியே ரெண்டு துண்டாக்கிடலாம்ன்னு தேடிகிட்டு இருந்தேன். இனி என்னால அது முடியாது. நீதான் அவளைத் தேடிக் கண்டுபிடிக்கணும் ஜோன்ஸ். போ....போய் தேடு...... "

" மாதவன்...... உன்னை இந்த நிலைமையில் எப்படி விட்டுட்டு....?" ஜோன்ஸ் தயக்கமாய் குரலை இழுக்க, மாதவன் அந்த நிலைமையிலும் கோபப்பட்டான். வேகமாய் பேச ஆரம்பித்தான்.

" நீ என்னைப்பத்தி கவலைப்படாதே..... அந்த வளர்மதி எந்தக் காரணத்தை முன்னிட்டும் தப்பிச்சுப் போயிடக்கூடாது. நாய்கள் குரைச்சிட்டிருக்கு.... என்னான்னு போய்ப்பாரு. நாய்களை ஃபாலோ பண்ணிட்டு போனாலே வளர்மதி எந்த இடத்துல ஒளிஞ்சிட்டிருக்கான்னு கண்டு பிடிச்சுட முடியும். எனக்கு ஒண்ணும் ஆயிடாது. நீ போ..... " சொன்ன மாதவன் மேற்கொண்டு பேச முடியாமல் அந்த அடி மரத்துக்கு சாய்ந்து உட்கார்ந்து கண்களை மூடிக் கொண்டான்.

சில விநாடிகள் வரை யோசித்த ஜோன்ஸ் தன் இடுப்பில் இருந்த துப்பாக்கியை உருவிக்கொண்டு நாய்கள் குரைத்துக்கொண்டிருந்த திசையை நோக்கி ஒடினான்.

நாய்கள் குரைக்கும் சத்தம் இப்போது அதிகமாக கேட்க ஆரம்பித்திருந்தது.

ஜோன்ஸ் தன் ஒட்டத்தை விரைவுபடுத்திய விநாடி அவனிடம் இருந்த இரிடியம் செல்போன் ரிங்டோனை வெளியிட்டது.

போனை எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான். தீபக் கூப்பிட்டுக் கொண்டிருந்தான். ஒடிக்கொண்டே பேசினான்.

" ஸார் "

" முட்டாள்.... நாய்கள் மறுபடியும் ஏன் குரைக்குது .... ? "

" அது.... வந்து..... வந்து..... "

" என்ன மறுபடியும் காட்டுப்பன்றிகள் வருதா .... ? "

" இல்ல ஸார் "

" பின்னே ஏன் குரைக்குது .... ? "

ஜோன்ஸ் ஒரு விநாடி வளர்மதி தப்பித்துவிட்ட விஷயத்தை சொல்லலாமா? என்று யோசித்துவிட்டு அடுத்த விநாடியே அந்த யோசனையை அழித்தான்.
" வேண்டாம்.... தீபக்கிற்கு விஷயம் தெரிந்தால் அடுத்த சில நிமிஷங்களுக்குள் அவரோட துப்பாக்கி தோட்டாவுக்கு என்னோட உயிரைக் கொடுக்க வேண்டியிருக்கும். வளர்மதியைத் தேடிக் கண்டுபிடித்த பிறகு நடந்த சம்பவத்தை சொல்லிவிடலாம் "

தீபக் செல்போனின் மறுமுனையில் எரிந்து விழுந்தான். " என்ன பேச்சையே காணோம்.... தூங்கி வழியறியா .... ? "

" இல்ல ஸார்..... இப்ப நாய்கள் குரைக்கிற பக்கமாத்தான் போயிட்டிருக்கேன்.... என்ன ஏதுன்னு பார்த்துட்டு உங்களுக்கு போன் பண்றேன் "

" நீ ஒண்ணும் எனக்கு போன் பண்ண வேண்டாம்.... நான் சொல்றபடி செய்"

" சொல்லுங்க ஸார் "

" இப்படியே நாய்கள் குரைச்சிட்டேயிருந்தா டாக்டர் ஜான்மில்லரால சரியா தூங்க முடியாது. ஏற்கெனவே அவரும் நானும் ஜெட்லாக்ல இருக்கோம். அவரும் நானும் குறைந்தபட்சம் ஒரு ஆறு மணிநேரத்துக்காவது தூங்கி எந்திரிச்சாத்தான் மறுநாள் காலையில் ரிசர்ச் சம்பந்தமான வேலைகளைக் கவனிக்க முடியும். நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியுதா ஜோன்ஸ்......? "

" புரியுது ஸார் "

" என்ன புரியுது ......? "

" நாய்கள் குரைக்காமே இருக்கணும் "

" குரைக்காமே இருக்கணும்ன்னா என்ன பண்ணனும் ......? "

" பகல் நேரத்துல அதை கட்டிப்போடறதுக்காக மறைவாய் கட்டியிருக்கிற ஷெல்டர்க்கு கொண்டு போயிடணும் ஸார் "

" அதை மொதல்ல பண்ணு..... "

" ஸார்.... அது.... வந்து...... "

" என்ன மென்னு முழுங்கறே ......? "

" ராத்திரி நேரத்துல நாய்களைக் கட்டிப் போடறதை அப்பா விரும்ப மாட்டார் ஸார் "

" அதைப்பத்தி நீ கவலைப்படாதே.... நாளைக்கு அப்பா ஏதாவது பேசினார்ன்னா நான் அவர்க்கு பதில் சொல்லிக்கறேன். நீ மொதல்ல நாய்களை ஷெல்டர்க்கு கொண்டு போய் கட்டிப்போடு..... "

" சரி ஸார் "

" இன்னும் அஞ்சு நிமிஷத்துக்குள்ளே நாய்களோட குரைப்பு நின்னுடனும்" தீபக் மறுமுனையில் கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டு செல்போனின் இணைப்பைத் துண்டித்துவிட ஜோன்ஸ் அதிர்ந்து போனவனாய் ஒடவும் மறந்து அப்படியே நின்றான்.

நாய்களின் குரைப்புச்சத்தம் இப்போது அதிகமாகியிருந்தது.

" தீபக் மறுபடியும் போன் செய்து திட்டுவதற்கு முன்பாக இந்த நாய்களின் வாயைச் சாத்த வேண்டும். அதற்குப்பிறகு தான் வளர்மதியைத் தேட வேண்டும்" யோசித்து ஒரு முடிவுக்கு வந்த ஜோன்ஸ் மறுபடியும் ஒட ஆரம்பித்தான். அந்த நள்ளிரவுக் குளிரிலும் அவனுக்கு உடம்பு வியர்த்து ஊற்ற, மனசுக்குள் யோசனை ஒடியது. " வளர்மதியை நாய்கள் பார்த்திருக்க வேண்டும். அதுதான் இப்படி இடைவிடாமல் குரைக்கிறது. அவளும் நாய்களுக்கு பயந்து கொண்டு இந்த ஃபார்ம் ஹவுஸின் ஏதாவது ஒரு இடத்தில் பதுங்கியிருக்க வேண்டும். வளர்மதி என்னதான் முயற்சி செய்தாலும் இந்த ஃபார்ம் ஹவுஸிலிருந்து அவளால் தப்பிக்கவே முடியாது. சுற்றிலும் பத்தடி உயரத்திற்கு முன்வேலி. அந்த இரும்பு முள்வேலிகளோடு சேர்த்துக் கட்டப்பட்ட கண்ணாடித்துண்டுகள். தெரியாத்தனமாய் ஒரு கண்ணாடித்துண்டு கீறினாலும் உடம்பிலிருந்து ஒரு லிட்டர் ரத்! ம் வெளியே வந்துவிடும். பத்தடி ஒடுவதற்குள் மயக்கம் வந்துவிடும்"

ஜோன்ஸ் யோசித்துக்கொண்டே நாய்கள் குரைத்துக் கொண்டிருந்த திசையை நோக்கி ஒடினான். மரங்களுக்கு நடுவில் நூறுமீட்டர் தூரம் ஒடி முடித்தபோது ஒரு பாறையின் அருகில் நின்றபடி எட்டு நாய்களும் ஒரே திசையைப் பார்த்தபடி குரைத்துக்கொண்டிருந்தன. நாய்களை நெருங்கினான் ஜோன்ஸ்.

****

தீபக் தன்னுடைய அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு அரைகுறை தூக்கத்திலிருந்து விடுபட்டு சட்டென்று எழுந்து உட்கார்ந்தான். சுவர் கடிகாரத்தில் நேரம் பார்த்தான்.

மணி 2.15.

" இந்த நேரத்திற்கு கதவைத் தட்டுவது யார் .... ? " போர்வையை உதறிவிட்டு வேகவேகமாய் கதவை நோக்கிப் போனான். கதவின் உட்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த சீறிய த்ரீ டி லென்ஸில் தன்னுடைய ஒரு கண்ணை வைத்துப் பார்த்தான்.

வெளியே அவனுடைய அப்பா ஈஸ்வர் நைட் கவுனில் தவிப்போடு நின்றிருந்தார். தீபக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான்.

" அப்பா..... என்ன இந்த நேரத்துல .... ? "

ஈஸ்வர் கலவரப் பார்வையோடு தீபக்கை ஏறிட்டார்.

" நாய்கள் குரைக்கிற சத்தம் உனக்கு கேட்டதா .... ? "

" ம்.... கேட்டது..... அதுபற்றி ஜோன்ஸ்க்கு போன் பண்ணி கேட்டேன் "

" அவன் என்ன சொன்னான் .... ? "

" நம்ம ஃபார்ம் ஹவுஸீக்கு ஒட்டியிருக்கிற காட்டுப்பகுதியிலிருந்து பன்றிகள் உள்ளே வர முயற்சி பண்ணியிருக்கு. அதைப் பார்த்துட்டு நாய்கள் குரைக்கிறதாய் ஜோன்ஸ் சொன்னான் "

" தீபக்..... முதல் தடவை ஒரு நாயோட குரைப்பு சத்தம்தான் கேட்டது. ஆனா ரெண்டாவது தடவை எல்லா நாய்களும் குரைச்சது. அது ஒரு சாதாரண விஷயம் கிடையாது "

" ஒரு நாய் குரைச்சா அதைக் கேட்டுட்டு எல்லா நாய்களும் குரைக்கத்தான் செய்யும்... இப்படி நாய்கள் குரைச்சு தூக்கத்தைக் கெடுக்கறதால ஜோன்ஸீக்கு போன் பண்ணி எல்லா நாய்களையும் ஷெல்டரில் அடைக்கச் சொல்லிட்டேன் "

ஈஸ்வர் கோபமாய் தீபக்கைப் பார்த்தார்.

" உனக்கு உன்னோட தூக்கம் முக்கியமா... இல்லை நம்ம பாதுகாப்பு முக்கியமா .... ? "

தீபக் குரலைச் சற்றே தாழ்த்தினான்.

" அப்பா..... இந்த ஃபார்ம் ஹவுஸை நாம கட்டி பத்து வருஷத்துக்கு மேல இருக்கும். இதுவரைக்கும் அந்நிய ஆட்கள் யாருமே உள்ளே நுழைஞ்சது இல்லை. நுழையவும் முடியாது. அதைப் பத்தின கவலையே வேண்டாம். என்னோட கவலையெல்லாம் டாக்டர் ஜான் மில்லர் நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்தாத்தான் அவர் பண்ணப் போகிற ரிசர்ச் ப்ராஸஸ் எல்லா நல்லாயிருக்கும். ஒரு வாரம் பத்து நாளைக்கு நாய்களை வெளியே விடாமே இருக்கிறது பெட்டர் " தீபக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவனுடைய இரிடியம் செல்போன் உயிர் பெற்று அழைத்தது. போய் எடுத்தான். மறுமுனையில் ஜோன்ஸ் பேசினான்.

" ஸார்.... எல்லா நாய்களையும் ஷெல்டரில் கட்டிப்போட்டுட்டேன். இனிமே அது குரைக்காது "

" சரி.... நீ ஏன் இவ்வளவு டென்ஷனாய் இருக்கே .... ? "

" டென்ஷனா..... இல்லையே ஸார் .... ? "

" இதோ பார்.... உன்னைப்பத்தி எனக்குத் தெரியும்.... நீ இவ்வளவு வேகமாய் பேசி நான் பார்த்தது இல்லை.... ஏதாவது பிரச்சினையா ? "

" அதெல்லாம் ஒண்ணுமில்லை.... ஸார் "

" சரி.... நீ ஒரு வேலை பண்ணு "

" சொல்லுங்க ஸார் "

" மாதவனோட ரூமுக்குப்போய் அவன் தூங்கிட்டிருந்தா அவனை எழுப்பி கூப்பிட்டு ரெண்டுபேரும் விடியறவரைக்கும் ஃபாரம் ஹவுஸை சுத்திவாங்க.... நாய்கள் குரைச்சதால அந்நிய ஆட்கள் யாராவது உள்ளே வந்துட்டாங்களோன்னு சந்தேகப்படறார் அப்பா.... ஒருவேளை வளர்மதியே மயக்கம் தெளிஞ்சு ரூமை விட்டு வெளியே வந்திருக்கலாம் "

" அ....அ....அப்படியெல்லாம் அவ வரமுடியாது ஸார் "

" எதுக்கும் ஒரு தடவை வளர்மதி இருக்கிற ரூமுக்குப் போய் அவ மயக்கத்துல இருக்காளா இல்லையான்னு பார்த்துடலாம். நான் இப்ப புறப்பட்டு வர்றேன். மாதவனை அங்கே வரச் சொல்லிடு "

(தொடரும்)

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X