• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நான் சொன்னது காதுல விழுந்ததா .... ? விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (55)

|

- ராஜேஷ்குமார்

தீபக் சொன்னதைக்கேட்டு ஜோன்ஸ் சில விநாடிகள் வரை செல்போனில் பேச்சிழந்தான்.

" என்ன ஜோன்ஸ்........ நான் சொன்னது காதுல விழுந்ததா .... ? "

" வி....வி....விழுந்தது ஸார் "

" சரின்னு பதில் வரலையே .... ? "

" ஸாரி ஸார் யோசனை பண்ணிட்டிருந்தேன் "

" ஜோன்ஸ் இன்னிக்கு நீ ஏதோ குழப்பத்தில் இருக்கேன்னு நினைக்கிறேன். லிக்கர் கன்ஸ்யூம் பண்ணியிருக்கியா .... ? "

rajesh kumar new series vibareethangal inge virkappadum part 55

" ஆமா ஸார்..... கொஞ்சம்.... "

" இது கொஞ்சம் மாதிரி தெரியலையே. இதோ பார் ஜோன்ஸ்.... மாசா மாசம் ஒரு பெரிய தொகையை உனக்கு சம்பளமா தர்றோம். எதுக்காகத் தெரியுமா ? நாங்க தூங்கும்போது நீ விழிப்போடு இருந்து இந்த ஃபார்ம் ஹவுஸை பார்த்துக்கணுங்கிறதுக்காகத்தான்..... லிக்கர் கன்ஸ்யூம் பண்ணிட்டு ஜாலியாய் இருக்கிறதுக்காக இல்லை "

" புரியுது ஸார்.... இனிமே சாப்பிடமாட்டேன் "

" சரி.... இன்னும் ஒரு பத்து நிமிஷ நேரத்துக்குள்ளே மாதவனை கூட்டிகிட்டு வளர்மதியை அடைச்சு வெச்சிருக்கிற ரூமுக்குப் பக்கத்துல வந்து நில்லு.... நானும் அப்பாவும் புறப்பட்டு வர்றோம் "

" ச....ச....சரி ஸார் "

தீபக் செல்போனை அணைத்துவிட்டு ஈஸ்வரை ஏறிட்டான்.

" அப்பா..... "

" என்ன தீபக் .... ? "

" ஜோன்ஸ் இன்னிக்கு நார்மலாய் இல்லை. அவன் கிட்டே ஏதோ தப்பு இருக்கு "

" தப்பா..... என்ன தப்பு .... ? "

" எதையோ மறைக்கிறான் "

" மறைக்கிறான்னா..... எதை மறைக்கிறான் "

" எனக்கு சரியாய் சொல்ல தெரியலை அப்பா. நேரிடையாய்ப் போய் அவனைப் பார்த்து பேசினா அந்தத் தப்பு என்னான்னு தெரிஞ்சுடும் "

" சரி.... வா..... போலாம் " ஈஸ்வர் சொல்லிக்கொண்டே நடக்க ஆரம்பித்துவிட தீபக் அவரைப் பின் தொடர்ந்தான்.

ஒரு நிமிட நடைக்குப்பின் டாக்டர் ஜான் மில்லர் தங்கியிருந்த அந்த ரெஸ்ட் ஹவுஸைக் கடந்த போது ஈஸ்வர் சட்டென்று நடையின் வேகத்தைக் குறைத்தபடி நின்றார். தீபக்கும் நின்று குழப்பமான குரலில் கேட்டான்.

" அப்பா..... ஏன்.... நின்னுட்டீங்க .... ? "

ஈஸ்வர் குரலைத் தாழ்த்தினார்.

" ஏதோ சத்தம் கேட்கலை .... ? "

" சத்தமா..... என்ன சத்தம்.... ? "

" டாக்டர் ஜான் மில்லர் தங்கியிருந்த இந்த ரெஸ்ட் ஹவுஸூக்குள்ளே ஏதோ ஒரு பொருள் கீழே விழுந்து உடையற மாதிரியான சத்தம் "

" எனக்கு கேட்கலையே ? "

" எனக்கு கேட்டது தீபக்.... எதுக்கும் போய் என்னான்னு பார்த்துடலாமா ? "

" சந்தேகம்ன்னு ஒண்ணு வந்துட்டா பார்த்துட வேண்டியதுதான் " சொன்ன தீபக் ஐம்பதடி தொலைவில் மரங்களுக்கு நடுவில் கரைந்து மறைந்திருந்த
டாக்டர் ஜான் மில்லர் தங்கியிருந்த ரெஸ்ட் ஹவுஸை நோக்கி சற்றே வேகமான நடையில் போனான். ஈஸ்வர் தொடர்ந்தார்.

முன்புற போர்டிகோவில் ஒரு சிறிய மஞ்சள் குண்டுபல்பு சிக்கனமாய் மின்சாரத்தைச் சாப்பிட்டு, அழுக்கு படிந்த மாதிரியான வெளிச்சத்தை சில அடி தூரத்துக்கு மட்டும் தெளித்து வைத்திருந்தது.

ஈஸ்வரும், தீபக்கும் போர்டிகோ படிகளில் ஏறினார்கள்.

" அப்பா..... நிஜமாவே உங்களுக்கு சத்தம் கேட்டதா ? "

ஈஸ்வர் மகனை கோபமாய்ப் பார்த்தார்.

" இதுல பொய் சொல்ல என்ன இருக்கு தீபக் ? ஏதோ ஒரு பொருள் கீழே விழுந்து உடையற சத்தம் நல்லாவே கேட்டது. ஜான் மில்லர் எதையாவது கீழே தவறுதலாய் போட்டு இருக்கலாம். என்ன ஏதுன்னு பார்த்துடறது நல்லதில்லையா ? "

" சரி....சரி " தீபக் தலையசைத்துக் கொண்டே கதவின் பக்கவாட்டு சுவரில் இருந்த அழைப்புமணிக்கான ஸ்விட்ச்சில் விரலை வைத்த விநாடி ஈஸ்வர் சற்றே பதட்டமாய் குரல் கொடுத்தார்.

" தீபக்..... ஒரு நிமிஷம் "

" என்ன " என்பது போல் ஈஸ்வரைத் திரும்பிப் பார்த்தான் தீபக்.

" கதவு திறந்திருக்கு "

தீபக் பார்த்தான். ஈஸ்வர் சொன்னது உண்மைதான். வீசிக்கொண்டிருந்த காற்றுக்கு கதவு லேசாய் அசைந்து கொண்டிருந்தது.

rajesh kumar new series vibareethangal inge virkappadum part 55

" ஜான் மில்லர் இவ்வளவு அஜாக்கிரதையாக கதவை திறந்து வைத்துக் கொண்டு தூங்க மாட்டாரே .... ? "

தீபக் மெல்ல நடந்து போய் கதவின் மேல் கையை வைக்க, அது உள் வாங்கிக்கொண்டு அரையிருட்டில் இருந்த அந்த சிறிய ஹாலைக் காட்டியது. உள்ளே
போகலாமா வேண்டாமா என்று சில விநாடிகள் தயங்கிய தீபக் எட்டிப் பார்த்து குரல் கொடுத்தான்.

" டாக்டர் "

ஈஸ்வர் தீபக்கின் தோளைத் தொட்டார்.

" குரல் கொடுத்துவிட்டு இருக்க இது நேரமில்லை தீபக். உள்ளே போய்ப் பார்த்துடலாம் "

இருவரும் உள்ளே நுழைந்தார்கள். ஈஸ்வர் சுவரில் இருந்த சுவிட்ச்சைத் தொட, சீலிங்கில் ஒளிந்திருந்த எல்.இ.டி. பல்பு ஒன்று குட்டி சூரியனாய் பிரகாசித்து அந்தச் சிறிய ஹாலை வெளிச்சத்தில் நிரப்பி வைத்தது. ஹாலில் இருந்த பொருள்கள் எல்லாம் தெளிவாய்த் தெரிய மேற்கொண்டு நடக்க முயன்ற ஈஸ்வரும், தீபக்கும் ஆணியடித்தாற் போன்ற பார்வையுடன் அப்படியே நின்றார்கள். இருவரின் முகங்களும் நிறம் மாறின.

ஹாலில் போடப்பட்டிருந்த சோபாவை ஒட்டிய தரை பரப்பில் டாக்டர் ஜான் மில்லர் மல்லாந்து விழுந்திருந்தார். நடு மார்பில் ரத்தம் பரவியிருக்க விழிகள் லேசான அசைவில் இருந்தன. தீபக் மொத்த உடலும் அதிர்ந்து போன குரலில்

" டாக்டர் " என்று கத்திக்கொண்டே வேகமாய்ப் போய் அவரருகே குனிந்தான். உயிரை விடப் போகும் கடைசி நிமிடங்களில் இருந்தார் ஜான் மில்லர். அவர்க்குப் பக்கத்திலேயே கண்ணாடியாலான ஃப்ளவர் வாஷ் ஒன்று தரையில் விழுந்து சில்லுச்சில்லாய் சிதறியிருந்தது. தண்ணீர் பாட்டில் உருண்டு கிடந்தது.

" டா....டாக்டர்....." தீபக் கூப்பிட்டுக்கொண்டே குனிந்து அவரைத் தூக்கி உட்கார வைக்க முயன்றான். அவருடைய உடல் ஒத்துழைக்க மறுத்து சரிந்தது. ரத்தம் மார்பினின்றும் கொப்பளித்து வழிந்தது. " டாக்டர்...... டாக்டர் "

ஜான் மில்லரின் சிறிய விழிகள் சிரமப்பட்டு திறக்க மெலிதாய் முனகினார். " ம்....ம்..... "

" டாக்டர்...... உங்களை சுட்டது யார் .... ? "

ஜான் மில்லரின் விழிகள் ஜன்னல் பக்கமாய் போயிற்று. தீபக் ஈஸ்வரைப் பார்த்து கத்தினான்.

" அப்பா...... சம்பவம் இப்பத்தான் நடந்து இருக்கும்ன்னு நினைக்கிறேன். அந்த ஜன்னல் பக்கமாய்ப் போய் பாருங்க "

ஈஸ்வர் ஜன்னலை நோக்கி வேகமாய்ப் போனார். திறந்திருந்த ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தார். வெளியே இருட்டு ஒரு கார்பன்பேப்பர் போல் தெரிய, காற்றுக்கு மரங்கள் அசைவதை மட்டும் பார்க்க முடிந்தது. பதட்டமாய் குரல் கொடுத்தார்.

" தீபக்.... இங்கே யாருமில்லை.... வெளியே போய் பார்க்கட்டுமா .... ? "

" வேண்டாம்பா...... நீங்க மட்டும் தனியா போகாதீங்க.... நானும் வர்றேன் " என்று சொன்னவன் கீழே விழுந்து கிடந்த ஜான் மில்லரைப் பார்த்தான்.
அவருடைய உடம்பிலிருந்து உயிர் பிரிந்து விட்டதற்கு அடையாளமாய் விழிகள் நிலைத்துப் போயிருந்தது.

தீபக் திகிலடித்துப் போனவனாய் ஜான் மில்லரின் உடம்பை அசைத்தான்.

" டா....டா....டாக்டர் "

உடம்பில் துளி சலனமில்லை.

பயம் அப்பிய விழிகளோடு ஈஸ்வரை ஏறிட்டான் தீபக்.

" அப்பா..... நீங்க சந்தேகப்பட்டது சரிதான். நாய்கள் குரைச்சதுக்குக் காரணம் காட்டுப்பன்றிகள் இல்லை. நம்ம ஃபார்ம் ஹவுஸூக்குள்ளே அந்நிய நபர் யாரோ இருக்காங்க. ஜான் மில்லரை கொலை செய்தது அந்த நபராகத்தான் இருக்கணும். ஜோன்ஸை உடனே மடக்கணும்.... அவன்கிட்டே ஏதோ தப்பு இருக்கு. போன்ல பேசும்போதே அவன் சரியில்லை... "

சொன்ன தீபக் தன்னுடைய இடுப்புப் பக்கமாய் கையைக்கொண்டு போய் அங்கே இடம் பிடித்திருந்த பிஸ்டலை உருவிக்கொண்டான்.

" அப்பா...... எம் பின்னாடியே வாங்க "

ஈஸ்வர் தீபக்கின் கையைப் பற்றினார். கைகளில் நடுக்கம்.

" ஒரு நிமிஷம் தீபக்....இப்ப நாம வெளியே போறது அவ்வளவு புத்திசாலித்தனமாய் எனக்குப் படலை..... நீ சொல்ற அந்த அந்நிய நபரால நம்ம ரெண்டு பேரோட உயிர்க்கும் ஆபத்து வர வாய்ப்பு இருக்கே .... ? "

தீபக் இரண்டு விநாடிகள் யோசித்துவிட்டு ஈஸ்வரைப் பார்த்தான்.

" சரி.... இப்ப என்ன பண்ணலாம் சொல்லுங்க அப்பா....... "

" ஜோன்ஸ்க்கு போன் போட்டு கொடு. அவன்கிட்ட நான் பேசறேன் "

" என்ன பேசப் போறீங்க .... ? "

" நீ போன் போட்டு கொடு...... சொல்றேன் "

தீபக் தன்னுடைய இரிடியம் செல்போனை எடுத்து ஜோன்ஸை தொடர்பு கொண்டு பேசிவிட்டு ஈஸ்வரிடம் போனைக்கொடுத்தான். ஈஸ்வர் வாங்கி ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு பேசினார்.

" ஜோன்ஸ் "

" ஸார் "

" இப்ப நீ எங்கே இருக்கே .... ? "

" வளர்மதியை அடைச்சு வெச்சிருக்கிற ரூமுக்கு முன்னாடி உங்களுக்காக வெயிட் பண்ணிட்டிருக்கேன் ஸார் "

" மாதவன் பக்கத்துல இருக்கானா ? "

" இ.....இல்லை..... "

அவனுக்கு போன் பண்ணி வரச் சொல்லலையா ? "

" அது....அது...... வந்து....... "

" என்னடா...... மென்னு மென்னு பேசிட்டிருக்கே ? தீபக் சொன்ன மாதிரி உன்கிட்டே ஏதோ தப்பு இருக்குன்னு நினைக்கிறேன். இந்த ஃபார்ம் ஹவுஸூக்குள்ளே இப்ப என்ன நடந்துட்டிருக்குன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்.... உனக்கும் மாதவனுக்கும் தெரியாமே உள்ளே எவனாவது பூந்துட்டானா .... ? "

ஜோன்ஸ் மறுமுனையில் நடுங்கினான்.

" உ.....உ.....உண்மையைச் சொல்லிடறேன் ஸார் "

" சொல்லுடா பரதேசி "

" வெளியேயிருந்து யாரும் உள்ளே வரலை ஸார் "

" அப்புறம் ? "

" நாம அடைச்சு வெச்சிருந்த வளர்மதி மயக்கத்திலிருந்து மீண்டு சுய உணர்வுக்கு வந்து தப்பிச்சுட்டா ஸார். இப்ப..... அவ ரூமுக்குள்ளே இல்லை. நம்ம ஃபார்ம் ஹவுஸூக்குள்ளே ஏதோ ஒரு இடத்துல மறைஞ்சிருக்கா. தப்பிச்சுட்டு போக அவளுக்கு வழி தெரியலை "

ஜோன்ஸ் பேச்சை முடிக்கவில்லை. ஈஸ்வர் தன்னுடைய தொண்டையே தெறிக்கும் அளவுக்கு கத்தினார் "அறிவு கெட்ட நாயே..... என்னடா சொல்லிட்டிருக்கே. வளர்மதி தப்பிச்சுட்டாளா.... ? பூட்டின ரூமுக்குள்ளேயிருந்து அவளால எப்படி தப்பிக்க முடிஞ்சுது ? "

" அது.... அது..... வந்து ..... ஸார்..... நானும் மாதவனும் வளர்மதி மேல சபலப்பட்டு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி அவளை அடைச்சு வெச்சிருந்த ரூமுக்குப் போனோம்.... அப்ப...... " என்று சொல்ல ஆரம்பித்தவன், அடுத்த ரெண்டு நிமிஷ நேரத்திற்குளே நடந்த சம்பவங்கள் எல்லாவற்றையும் திக்கலும் திணறலுமாய் சொல்லி முடித்தான். ஈஸ்வரும், தீபக்கும் வெகுவாய் முகம் இருண்டு போனவர்களாய் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தீபக் ஈஸ்வரிடம் இருந்த செல்போனை பறித்து காதில் வைத்தான். பதட்டமான குரலில் கேட்டான்.

" ஜோன்ஸ் ..... நீ இப்ப சொன்னதெல்லாம் நிஜமா ? "

" நான் எதுக்கு ஸார்.... பொய் சொல்றேன் ? "

" சரி.... வளர்மதிகிட்டே துப்பாக்கி இருந்ததா சொன்னே. அவளுக்கு எப்படி துப்பாக்கி கிடைச்சுது ? "

" தெரியலை ஸார் "

(தொடரும்)

பகுதி 1</a>, <a class= 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54]" title="பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54]" />பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X