For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீ பார்த்தியா ஜோன்ஸ்.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (56)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

தீபக் சில விநாடிகள் மெளனமாய் இருந்துவிட்டு கேட்டான்.

" வளர்மதியோட கையில் துப்பாக்கி இருந்ததை நீ பார்த்தியா ஜோன்ஸ்..? "

" நான் பார்க்கலை ஸார்..... மாதவன் என்கிட்டே சொன்னதைத்தான் உங்ககிட்டே சொன்னேன். வளர்மதி அறையோட டாய்லெட் பகுதியிலிருந்து வெளியே வரும்போதே அவ கையில் துப்பாக்கி இருந்ததாகவும், மாதவன் அதிர்ச்சியடைஞ்சு தப்பிச்சு ஒடறதுக்குள்ளே அவ அவனைச் சுட்டுட்டதாகவும் சொன்னான். ஆனா வளர்மதி மாதவனை துப்பாக்கியில் சுட்டது வித்தியாசமான முறையில் இருந்ததாகவும் சொன்னான் "

rajesh kumar new series vibareethangal inge virkappadum part 56

" என்ன வித்தியாசம் ..? "

" மாதவனோட வலது மார்புப் பக்கம் ஒரு தோட்டா பாயறதுக்கு பதிலா ஊசியை சொருகி எடுத்த மாதிரி வலி ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து கொஞ்ச நேரத்துக்குள்ளே மார்பிலிருந்து துளித்துளியாய் வெளிப்பட்ட ரத்தம் சட்டை முழுவதையும் நனைக்க ஆரம்பிச்சதாகவும் சொன்னான் "

" மாதவன் இப்ப உயிரோடு இருக்கானா இல்லையா .... ? "

" தெரியலை ஸார்..... நான் வளர்மதியைத் தேடிகிட்டு போகும்போது மாதவனோட நிலைமை ரொம்பவும் மோசமாய் இருந்தது. திணறித்திணறி பேசிட்டிருந்தான். இந்த நிமிஷம் மாதவன் உயிரோடு இருப்பானா மாட்டானான்னு எனக்குத் தெரியாது "

" மாதவன் விழுந்து கிடக்கிற இடம் எங்கேன்னு தெரியுமா .... ? "

" தெரியும் ஸார் "

"முதல்ல அவனைப் போய்ப் பாரு..... அவனோட நிலைமை எப்படியிருக்குன்னு அங்கிருந்த போன் பண்ணிச் சொல்லு "

" ஸார்.... நீங்க இங்கே வர்றதா சொன்னீங்க.... ? நான் வெயிட் பண்ண வேண்டாமா ? "

" வேண்டாம்.....இப்ப நாம் எச்சரிக்கையாய் செயல்படவேண்டிய நேரம். வளர்மதி இப்போ துப்பாக்கியும் கையுமாய் நம்ம ஃபார்ம் ஹவுஸூக்குள்ளேயே ஏதோ ஒரு இடத்துல பதுங்கியிருக்கா. அது எந்த இடம்ன்னு நமக்குத் தெரியாது. அவ நம்ம நடமாட்டத்தை கண்காணிச்சுட்டும் இருக்கலாம். அவ நம்ம பார்வைக்கு தட்டுப்படுகிற வரை நாம எக்ஸ்போஸ் ஆகாமே இருக்கிறது நல்லது. உன் கையில துப்பாக்கி இருக்கா ? "

" இருக்கு ஸார் "

" வளர்மதி உன்னோட பார்வையில் படற அடுத்த விநாடியே யோசனை பண்ணாமே சுட்டுரு... அவளை உயிரோடு மடக்க நினைக்க வேண்டாம் "

" சரி.... ஸார் "

" மொதல்ல மாதவனைப் போய்ப் பாரு...... அவன் உயிர்க்கு போராடிகிட்டு இருந்தா காப்பாத்த முயற்சி பண்ணு இல்லேன்னா அப்படியே விட்டுடு" தீபக் பேசிவிட்டு செல்போனை அணைத்தான். திகில் உறைந்துபோன முகத்தோடு நின்றிருந்த ஈஸ்வரை ஏறிட்டான்.

ஈஸ்வர் கேட்டார்.

" டாக்டர் ஜான் மில்லர் கொல்லப்பட்ட சம்பவத்தை ஜோன்ஸ்கிட்டே நீ ஏன் சொல்லலை..... "

" சொல்லியிருந்தா அவன் பயந்து போய் இருக்கிற இடத்தை விட்டு அசைய மாட்டான் "

" தீபக்.... வளர்மதி விஷயத்துல நாம ஏமாந்துட்டோம்.... "

" ரொம்பவே ஏமாந்துட்டோம் அப்பா... அவளுக்கு இன்னொரு ஆம்பியூல் ரோப்கினால் மயக்க மருந்தை இஞ்செக்ட் பண்ணியிருக்கணும் "

" டாக்டர் ஜான் மில்லர் வளர்மதியை சோதிச்சுப் பார்த்துட்டு ரோப்கினால் இன்செக்சன் போட வேண்டிய அவசியமில்லைன்னு சொன்னாரே .... ? "

" வளர்மதி அந்த அளவுக்கு மயக்கம் வந்த மாதிரி நடிச்சு எல்லாரையும் ஏமாத்தியிருக்கா "

ஈஸ்வர் அனலாய் பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு தீபக்கை ஏறிட்டார்.

" இனிமே அதைப் பத்திப் பேசி பிரயோஜனமில்லை தீபக். வளர்மதியை விடியறதுக்கு முன்னாடி ட்ரேஸ் அவுட் பண்ணியாகணும். துப்பாக்கியால் சுடப்பட்ட மாதவன் இப்போ எந்த நிலைமையில் இருக்கான்னு ஜோன்ஸ் போன் பண்ணிச் சொல்லட்டும். அதுக்கப்புறம் மேற்கொண்டு என்ன செய்யலாம்ன்னு யோசிப்போம் "

ஈஸ்வர் சொல்லிவிட்டு அருகிலிருந்த நாற்காலிக்கு சாய்ந்து உட்கார்ந்தார்.

rajesh kumar new series vibareethangal inge virkappadum part 56

******

அந்த நள்ளிரவு இருட்டு அடர்த்தியாய் தெரிய, ஜோன்ஸ் பழக்கமான பாதையில் சிரமம் இல்லாமல் நடை போட்டு மாதவன் விழுந்து கிடந்த இடத்தை நோக்கி போனான். வலது கையில் அவன் பிடித்து இருந்த துப்பாக்கி தன்னுடைய ஒற்றைக் கண்ணால் எல்லாப் பக்கமும் ஜாக்கிரதை பார்வை பார்த்தது.
ஒரு சிறிய சத்தம் கேட்டாலும் ஜோன்ஸ் எச்சரிக்கையாகி அருகில் இருந்த மரத்துக்குப் பின்னால் ஓளிந்து நின்று சுற்றுப்புறம் முழுவதையும் உன்னிப்பாய் கவனித்துவிட்டு பிறகு மேற்கொண்டு நடந்தான்.

ஜோன்ஸின் மனம் பதட்டப்பட்டு யோசித்தது.

" மாதவன் உயிரோடு இருப்பானா .... ? "

" மாதவனைச் சுட்டது போல் என்னையும் வளர்மதி எந்த நிமிஷமும் சுடலாம் " யோசிப்போடு வேகவேகமாய் அதே நேரத்தில் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு நடந்தான் ஜோன்ஸ்.

ஒரு ஐந்து நிமிட நடையில் மாதவன் உட்கார்ந்திருந்த மரத்தடிக்கு வந்து சேர்ந்தான்.

மாதவன் இப்போது மரத்தடிக்குக் கீழே ஒருக்களித்து படுத்த நிலையில் தெரிய, ஜோன்ஸ் வேகமாய் அவனை நெருங்கி மெல்லப் புரட்டினான்.
உடம்பில் எந்த சலனமும் இல்லை.

மாதவனின் தோள்பட்டையைப் பிடித்து உடம்பை உலுக்கி மெல்ல கூப்பிட்டான். " மாதவன் "

அவனிடமிருந்து சிறிய முனகல் சத்தம் கூட எழாமல் போகவே நாசியருகே கை வைத்துப் பார்த்தான்.

சுவாசம் அறவேயில்லை.

சில விநாடிகள் வரை மெளனமாய் இருந்த ஜோன்ஸ் பிறகு தன்னிடம் இருந்த செல்போனை எடுத்து தீபக்கைத் தொடர்பு கொண்டான். குரல் நடுங்கப் பேசினான்.

" ஸார்.... மாதவன் உயிரோடு இல்லை "

" சரி..... இனி மாதவனை மறந்துட்டு அந்த வளர்மதியை தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதுதான் நம்ம வேலை "

" ஸார்.... இந்த இருட்டுல இவ்வளவு பெரிய ஏரியாவில் அந்த வளர்மதி எந்த இடத்துல ஒளிஞ்சுட்டிருக்கான்னு எப்படி கண்டுபிடிக்கப் போறோம் .... ? "

மொதல்ல நீ டாக் ஷெல்டர்க்கு போய் மறுபடியும் எல்லா நாய்களையும் அவுத்துவிடு..... நாய்கள் வெளியே சுத்திட்டு இருந்தாத்தான் வளர்மதி தான் ஒளிஞ்சுட்டு இருக்கிற ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு மூவ் பண்ண முடியாது "

" ஸ....ஸ....ஸார் "

" என்ன...... குரல் உதறுது .... ? "

" டாக் ஷெல்டர்க்கு போகிற வழியில் புதர்கள் மண்டி கிடக்குது ஸார்..... வளர்மதி அந்த இடத்தில் பதுங்கியிருக்க வாய்ப்பு அதிகம்..... "

" அவ உன்னை சுட்டுடுவான்னு பயப்படறியா .... ? "

" ஆ....ஆமா... ஸார் "

" ஜோன்ஸ்... நீ ரொம்பவும் தைரியசாலின்னு இத்தனை நாளும் நான் நினைச்சுட்டு இருந்தது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்பத்தான் தெரியுது...."

" ஸாரி ஸார்...... வளர்மதியோட கையில் துப்பாக்கி இருக்கப் போய்த்தான் பயம். ஏற்கனவே நாம மாதவனை இழந்துட்டோம்.... நாம கொஞ்சம் யோசித்து செயல்படணும் ஸார் "

" சரி..... நீ அங்கேயே இரு ஜோன்ஸ். நான் புறப்பட்டு வர்றேன். ரெண்டு பேருமா சேர்ந்து டாக் ஷெல்டர்க்கு போய் நாய்களை வெளியே அவிழ்த்து விட்டுடலாம். நாய்கள் எப்படியும் வளர்மதி பதுங்கியிருக்கிற இடத்தைக் காட்டிக் கொடுத்துடும்..... உன் கையிலும் துப்பாக்கி இருக்கு. என் கையிலும் துப்பாக்கியிருக்கு. அவ நம்ம பார்வைக்கு கிடைச்ச அடுத்த விநாடியே சுட்டுத்தள்ளி உடம்பை சல்லடை ஆக்குவோம். நான் ஒரு பத்து நிமிஷத்துல புறப்பட்டு வர்றேன். நீ அங்கேயே இரு... "

தீபக் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட ஜோன்ஸூம் செல்போனை அணைத்துவிட்டு துப்பாக்கியும் கையுமாய் மெல்ல நடந்து போய் மாதவனின் உடல் கிடந்த மரத்துக்குப் பின்னால் போய் மறைவாய் உட்கார்ந்து தீபக்கை எதிர்பார்த்து காத்திருந்தான்.

******

தீபக் செல்போனில் பேசி முடித்ததும் ஈஸ்வர் கலவரமாய் அவனை ஏறிட்டார். " தீபக்..... ஜோன்ஸ் பயப்படறதுல நியாயம் இருக்கு. வளர்மதியோட கையில் துப்பாக்கி இருக்கும்போது அவளைத் தேடிட்டுப் போறது முட்டாள்தனம். அவ இருக்கிற இடம் நமக்கு தெரியாது. ஆனா நாம வெளியே போனா அவளுக்குத் தெரியும். அவ சுட ஆரம்பிச்சுட்டா நம்மாளாலே எதுவும் பண்ண முடியாது. அதைப் பத்தின பயமே உனக்கு வரலையா அளவுக்கு மீறின துணிச்சல் ஆபத்துலதான் போய் முடியும் "

" அப்பா... பயப்படறதுக்கான நேரம் இதில்லை. துணிஞ்சு இறங்கணும். நீங்க வேணும்ன்னா இங்கேயே இருங்க நான் ஜோன்ஸ்கிட்டே போறேன்..... நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வளர்மதி இந்த ஃபார்ம் ஹவுஸ்ல எங்கே பதுங்கியிருந்தாலும் சரி அவனை மடக்கி டெட்பாடியாய் கொண்டு வந்து ஜான் மில்லரோட உடம்புக்கு பக்கத்துல போடறோம் " சொல்லிக்கொண்டே நகர முயன்ற தீபக்கின் கையைப் பிடித்தார் ஈஸ்வர்.

" என்னைத் தனியா விட்டுட்டுப் போகாதே தீபக்...நானும் உன்கூட வர்றேன்"

" என்ன இப்படி பயப்படறீங்க அப்பா .... ? "

" பயப்படறதுக்கு பயப்பட்டுத்தான் ஆகணும்.... நேத்து ராத்திரி நம்ம கூட உட்கார்ந்து டின்னர் சாப்பிட்ட டாக்டர் ஜான் மில்லர் இப்ப உயிரோடு இல்லை. கடந்த அஞ்சு வருஷமாய் நம்மகிட்டே விசுவாசமாய் வேலை பார்த்த மாதவனும் உயிரோடு இல்லை. இனிமேலாவது நீயும், நானும் ஜோன்ஸும் உயிர்க்குப் பயப்படாமே இருக்க முடியுமா .... ? "

" அப்பா..... உங்க மனசுக்குள்ளே இவ்வளவு பயம் இருக்கும்போது உங்களை இங்கே விட்டுட்டுப் போறது சரியில்லை. வாங்க.... எம் பின்னாடி..... துப்பாக்கியை அலர்ட்ல வெச்சுக்குங்க. நடக்கும்போது பக்கவாட்டில் இருக்கிற செடி கொடிகளோட அசைவை உன்னிப்பாய் கவனிங்க. சாதாரணமாய் வீசற காத்துக்கு ஒரு செடியோட இலைகள் அசையறதுக்கும் ஒரு நபர் நகர்ந்து போகும்போது இலைகள் அசையறதுக்கும் வித்தியாசம் இருக்கும். இடது பக்கம் பார்த்துட்டு வாங்க. நான் வலது பக்கம் பார்த்துட்டு வர்றேன் "

விழிகள் நிலைத்து ரத்தத்தில் நனைந்திருந்த டாக்டர் ஜான் மில்லரின் உடலை சோபாவுக்கு பின்புறமாய் இழுத்துப் போட்டுவிட்டு ஈஸ்வரும், தீபக்கும் வெளியே வந்தார்கள். காத்திருந்த குளிர்காற்று இருவரின் முகங்களிலும் மோதியது.

நட்சத்திரங்களின் வெளிச்சத்தில் இருட்டின் சாயம் சற்றே கரைந்து போயிருக்க, அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள். இருவரின் கைகளிலும் இருந்த துப்பாக்கிகள் எந்த விநாடியும் சுடுவதற்கு ஏற்றபடி உயர்த்தி பிடிக்கப்பட்டு இருந்தன.

" அப்பா...... "

" ம்..... சொல்லு "

" வளர்மதியை நாம சாதாரணமா எடை போட்டுட்டோம். அவ என்னிக்கு உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வந்தாளோ அன்னிக்கே அவ கதையை முடிச்சிருக்கணும்..... அவளால என்ன பண்ண முடியும்ன்னு நீங்க அலட்சியமாய் இருந்ததின் விளைவு இன்னிக்கு அவளைப் பார்த்து நாம நடுங்க வேண்டியிருக்கு..... உயிரை கையில் பிடிச்சுட்டு நடக்க வேண்டியிருக்கு "

ஈஸ்வர் பெருமூச்சுவிட்டார்.

" உண்மைதான் தீபக்.... வளர்மதி ஒரு புல் மாதிரி முளைச்சு காணாமே போயிடுவான்னு நினைச்சேன். இப்படி ஒரு முள் மரமா வளர்ந்து நிப்பான்னு தெரியலை...... அவளை........ " என்று பேசிக்கொண்டே போன ஈஸ்வர் சட்டென்று நின்றார்.

தீபக் திகைப்போடு கேட்டான்.

" ஏம்பா நின்னுட்டீங்க .... ? "

" ஏதோ சத்தம் கேட்கலை .... ? "

(தொடரும்)

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X