• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் பேசுவது எனக்கு புரியவில்லை .. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (58)

|

- ராஜேஷ்குமார்

டாக்டர் ஜான் மில்லரைப் பார்த்ததும் ஈஸ்வரும் தீபக்கும் அதிர்ந்து போனவர்களாய் உடம்பைச் சிறிதும் அசைக்கத் தோன்றாமல் அப்படியே ஆணியடித்தாற்போல் நின்றார்கள்.

ஜான் மில்லரின் அகலமான சதைப்பிடிப்பான முகம் பாறையாய் இறுகிப் போயிருக்க, உதட்டில் மட்டும் சின்னதாய் ஒரு புன்னகை தொற்றியிருந்தது. அமெரிக்கன் ஆங்கிலத்தில் நிறுத்தி நிதானமாய் பேசினார்.

rajesh kumar new series vibareethangal inge virkappadum part 58

"அப்பாவுக்கும் மகனுக்கும் நான் உயிரோடு உங்களுக்கு முன்பாய் வந்து நிற்பது வியப்பாய் இருக்கும். என்ன செய்வது ? சிலருடைய சுய உருவத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் எப்படியெல்லாம் நடிக்க வேண்டியிருக்கிறது..... ? "

ஈஸ்வர் உடம்பு நடுங்க இரண்டடிகள் முன்னால் வந்தார்.

" டாக்டர்...... நீங்கள் பேசுவது எனக்கு புரியவில்லை "

ஜான் மில்லரின் புன்னகை பெரிதாயிற்று.

" மிஸ்டர் ஈஸ்வர்..... நான் பேசுவது உங்களுக்கு வேண்டுமானால் புரியாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் மகனுக்கு நன்றாகப் புரியும்...... "

இப்போது தீபக் வியர்த்து வழியும் முகத்தோடும் கலவரம் பரவிய விழிகளோடும் மெல்ல முன்னோக்கி வந்தான்.

" டாக்டர்...... நீங்கள் சொல்வது எனக்கும் புரியவில்லை...... எதற்காக இறந்தவர் போல் நடித்தீர்கள் ? "

" நான் இறந்து போக வேண்டும் என்பதுதானே உன்னுடைய விருப்பம் தீபக்... ? "

" என்ன சொல்கிறீர்கள் ... ? "

ஜான் மில்லர் இப்போது விஷமமாய் புன்முறுவல் பூத்தார்.

" இதோ பார் தீபக்..... நீ யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம். ஆனால் என்னை ஏமாற்ற முடியாது. இந்த செல்ஃபிஷ் ஜீன், தி ப்ளைண்ட் வாட்ச்மேக்கர் ஜீன் ரிசர்ச் ப்ராசஸ் எல்லாம் முடிந்து பாஸிட்டீவ் ரிப்போர்ட் தயாரானதும் நான் உயிரோடு இந்த பண்ணை வீட்டை விட்டு போகக் கூடாது என்பது உன்னுடைய திட்டம். நான் சொன்னது சரியா இல்லையா என்பது உன் மனச்சாட்சிக்கே தெரியும் "

ஜான் மில்லர் பேசிகொண்டிருக்கும்போதே தீபக் சட்டென்று தன் இடுப்பின் மறைவுக்கு கையைக்கொண்டு போய் துப்பாக்கியை எடுக்க முயற்சித்த அதே விநாடி ஜான் மில்லரின் உள்ளங்கைக்குள் பதுங்கியிருந்து பிஸ்டல் ஒன்று விருட்டென்று உயர்ந்து தோட்டாவை உமிழ்ந்தது. தோட்டா தீபக்கின் வலது முழங்காலுக்குக் கீழே இருந்த கணுக்கால் சதையை ரத்தம் தெறிக்க சிதைத்தது.

" ம்.....மா......ஆ...... " என்று பெரிதாய் வீறிட்டு அலறி இடதுகாலால் மண்டியிட முயன்று முடியாமல் ஒருக்களித்து விழுந்து மல்லாந்தான் தீபக். பெருகி வழிந்த ரத்தம் ஒரு கோடாய் மாறி ஒடியது.

ஈஸ்வர் பதறியபடி தீபக்கை நோக்கி ஒட முயல ஜான் மில்லரின் குரல் உயர்ந்தது.

" ஈஸ்வர்..... நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு ஒர் அடி கூட அசையக் கூடாது. மீறி அசைந்தால் உங்களுடைய முழங்காலுக்கும் ஒரு தோட்டாவை அனுப்ப வேண்டியிருக்கும் "

ஈஸ்வர் அப்படியே நின்றார். பயத்தில் நடுங்கி இரண்டு கைகளையும் குவித்து ஆங்கிலத்தில் கெஞ்சினார்.

" டாக்டர்..... எங்களை ஒன்றும் செய்து விடாதீர்கள். உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை நானும் என் மகன் தீபக்கும் தரத் தயாராக இருக்கிறோம். என் மகன் உங்களைக் கொலை செய்வதற்காக திட்டம் போட்டது எனக்குத் தெரியாது. அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவன் அப்படி நினைத்தது மிகப் பெரிய தவறு "

" மன்னிப்பு கேட்க வேண்டியது உங்கள் மகன்தான். நீங்கள் அல்ல ஈஸ்வர்"

" அவனை உங்களிடம் மன்னிப்பு கேட்க வைக்கிறேன் டாக்டர் "

" ம்..... பேசுங்கள்.... ஆனால் ..... நீங்கள் இருவரும் தமிழ் மொழியில் பேசக் கூடாது. ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும். என்னை ஏதாவது ஒரு வகையில் ஏமாற்ற நினைத்தாலோ, அல்லது இங்கிருந்து தப்பிக்க நினைத்தாலோ இப்போது முழங்காலுக்குக் கீழே பாய்ந்த தோட்டாக்கள் உங்களுடைய இருவரின் நடு மார்புகளில் பாயும் "

திகில் உறைந்த பார்வையோடு ஈஸ்வர் தலையாட்டிவிட்டு கீழே மண்டியிட்டு மகனிடம் குனிந்தார். ரத்தம் தோய்ந்த முழங்காலை இரண்டு கைகளாலும் பற்றிக்கொண்டு வலியால் அரற்றிக்கொண்டிருந்த தீபக்கின் தோளைத் தொட்டார். நடுங்கும் குரலில் பேசினார்.

" தீபக்..... உன்னோட கோபத்தையும் பிடிவாதத்தையும் காட்ட இது நேரமில்லை. டாக்டர் ஜான் மில்லர் இங்கேயிருந்து உயிரோடு திரும்பக் கூடாதுன்னு நீ திட்டம் போட்டு வெச்சிருந்தது உண்மையா ... ? "

தீபக் தலைகுனிந்தபடி மெளனம் சாதித்தான். ஈஸ்வர் அவனை உசுப்பினார்.

" சொல்லு தீபக்..... இனிமே எந்த ஒரு உண்மையையும் மறைக்க பிரயோஜனமில்லை. எதுவாயிருந்தாலும் பேசிடு"

தீபக் தனக்கு முன்னால் துப்பாக்கியும் கையுமாய் நின்றிருந்த ஜான் மில்லரை சற்றே கலக்கத்தோடு நிமிர்ந்து பார்த்து பேசினான்.

" டாக்டர்..... இந்த பண்ணை வீட்டில் ரிசர்ச் ப்ராஸஸ் எல்லாம் முடிந்த பிறகு உங்களை உயிரோடு விட்டு வைக்கக்கூடாது என்று நான் திட்டம் போட்டு வைத்திருந்தது உண்மை. ஆனால் நீங்கள் எனக்கு எதுமாதிரியான துரோகத்தை செய்ய இருந்தீர்கள் என்பதை உங்கள் மனச்சாட்சியிடம் கேட்டுப்பாருங்கள். அப்போதுதான் நான் எடுத்த முடிவு சரியானது என்பது உங்களுக்கு தெரியும் "

ஜான் மில்லர் சிரித்தார்.

" இதோ பார் தீபக்..... நீ ஒரு பிஸினஸ்மேன். நான் ஒரு டாக்டர். ஆக்ஸ்போர்ட் யூனிவர்ஸிடியில் படித்து ஜெனிடிக் தியரியில் பட்டம் வாங்கிய ஒரு ரிசர்ச் ஸ்காலர். இந்த செல்ஃபிஷ் ஜீன், தி ப்ளைண்ட் வாட்ச்மேக்கர் ஜீன் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டு இருப்பதால் உன்னுடைய உதவியை நாடினேன். ஆரம்பக்கட்ட ஆராய்ச்சிகள் எல்லாம் முடிந்த நிலையில் பெண் மனித எலிகள் வேண்டும் என்கிற ஒரு கட்டம் வந்த நேரத்தில் அதற்கு நான் இந்தியாவில் ஏற்பாடு செய்கிறேன் என்று நீ என்னிடம் சொன்னாய். சொன்னதோடு மட்டுமல்லாமல் நீ உன்னுடைய அப்பாவுக்கு தகவல் கொடுத்து அவர் மூலம் இலவச திருமணங்களை நடத்தி பெண் மனித எலிகளை என்னுடைய ஆராய்ச்சிக்கு கொடுத்து உதவினாய். ஆனால் அந்த ஆரம்ப கால ஆராய்ச்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்து சம்பந்தப்பட்ட பெண்களுக்கு பக்க விளைவுகள் உண்டாகவே அ! வர்கள் எல்லோரையும் தற்கொலை என்ற போர்வையில் தீர்த்துக்கட்ட வேண்டியதாயிற்று. அந்த நிலைமையில்தான் க்யூபா நாட்டு பயோ மெடிக்கல் சென்டர் என்னை அணுகி என்னிடம் இருந்த ரிசர்ச் ப்ராஜ்க்ட்களுக்கு விலை பேசினார்கள். ஆனால் அந்த ப்ராஜ்க்ட்களில் செல்ஃபிஷ் ஜீன், தி ப்ளைண்ட் வாட்ச்மேக்கர் ஜீன் இரண்டும் இடம் பெறவில்லை. என்னுடைய முந்தைய ப்ராஜ்க்ட்களுக்குத்தான் விலை பேசினார்கள். நான் கேட்ட தொகைக்கு அவர்கள் ஒத்துக்கொள்ளாததால் பேரம் படியாமல் நாட்கள் தள்ளிப் போய் கொண்டிருந்தது. இந்த விபரம் எல்லாம் தெரியாமல் நீ என்னை தப்பாக புரிந்து கொண்டு ரிசர்ச் எல்லாம் முடிந்தபிறகு என்னைத் தீர்த்துக் கட்ட திட்டம் போட்டாய் "

ஜான் மில்லர் பேசப் பேச தீபக் அவரையே இமைக்காமல் பார்த்தான். அவர் புன்னகையோடு தொடர்ந்தார்.

" என்ன தீபக் அப்படி பார்க்கிறாய் ? நீ உன்னுடைய மனதுக்குள் போட்டு வைத்திருந்த திட்டம் எல்லாம் எனக்கு எப்படி தெரிந்தது என்று நீ ஆச்சர்யப்படலாம். உனக்கு விசுவாசமானவர்கள் எல்லாம் உனக்கு மட்டும்தான் விசுவாசமாய் இருப்பார்கள் என்று நீ நினைத்ததுதான் பெரிய தப்பு..... எந்த நாய்க்கும் பிஸ்கெட் போட்டால் அது தன்னுடைய வாலை ஆட்டத்தான் செய்யும். அப்படி வாலாட்டியவர்களில் ஒருவன்தான் ஜோன்ஸ்.... உன்னுடைய அப்பாவுக்குக்கூட தெரியாமல் நீ ஜோன்ஸோடு இரிடியம் போனில் பேசிய எல்லா விபரங்களும் அடுத்த நிமிஷமே எனக்கு வந்துவிடும்.... ஜோன்ஸூக்கு மாதாமாதம் சம்பளம் கொடுத்தது நீ. ஆனால் அவன் வேலை பார்த்தது எனக்கு.."

டாக்டர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அறையின் கதவுத் தட்டப்பட்டது.

சரியாய் மூன்று தட்டல்கள்.

ஜான் மில்லர் ஒரு புன்னகையோடு ஈஸ்வரை பார்த்தார்.

" ஈஸ்வர்.... சிறிது சிரமம் பார்க்காமல் போய் சாத்தியிருக்கும் தாழ்ப்பாளை விலக்கி கதவைத் திறந்து விடுங்கள். அது ஜோன்ஸ் "

ஈஸ்வர் தயக்க நடை போட்டு கதவை நெருங்கி தாழ்ப்பாளை விலக்கினார்.

ஜோன்ஸ் உள்ளே வந்தான். ஈஸ்வரையும், கீழே விழுந்து கிடக்கும் தீபக்கையும் சிறிது கூட பொருட்படுத்தாமல் ஜான் மில்லருக்கு முன்னால் போய் நின்றான்.

rajesh kumar new series vibareethangal inge virkappadum part 58

" டாக்டர்.... எட்டு நாய்களையும் அவிழ்த்து விட்டாயிற்று. அந்த வளர்மதி இந்த ஃபார்ம் ஹவுஸில் எந்த இடத்தில் பதுங்கியிருந்தாலும் அவளால் வெளியே வர முடியாது. இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் அவள் இருக்கும் இடத்தை ஏதாவது ஒரு நாய் கண்டுபிடித்து குரைக்க ஆரம்பித்து விடும்..... அவளையும் இந்த வீட்டுக்கு கொண்டு வந்துவிட்டால் நாம் நிம்மதியாய் மூச்சு விடலாம் "

" ஜோன்ஸ்.....நீ உடனடியாய் செய்ய வேண்டிய காரியம் இன்னொன்று இருக்கிறது"

" என்ன டாக்டர்.....? "

" தீபக்கை முழங்காலுக்கு கீழே சுட வேண்டியதாகிவிட்டது. முதலுதவி செய்து கட்டுப்போட வேண்டும் "

" போட்டு விடுகிறேன் டாக்டர் "

" நாளையிலிருந்து நான் மேற்கொள்ளப் போகும் ஆய்வு பணிகளுக்கு இவர்கள் எனக்கு எந்த விதத்திலும் இடையூறாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் "

" டோண்ட் வொரி டாக்டர்.... இந்த நிமிஷம் அவர்களுடைய நிலைமை என்னவென்று அவர்களுக்கே புரிந்து இருக்கும்.... அப்பாவும் மகனும் உங்களுடைய ரிசர்ச் வேலைகள் முடிகிறவரை பலமாகக் கூட மூச்சு விட மாட்டார்கள். மூன்று வேளையும் சாப்பிட்டுக்கொண்டு இதே அவுட் ஹவுஸில்தான் முடங்கிக் கிடப்பார்கள் "

" என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த இரண்டு பேருமே விஷக்கிருமிகள். நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது முக்கியம். நாளைக்கு ஒருநாள் முழுவதும் இவர்கள் மயக்கத்தில் இருக்க வேண்டும். ரோப்கினால் இஞ்செக்சனைப் போட்டுவிடு..... ஜோன்ஸ்"

" நானும் அதைத்தான் நினைத்தேன் டாக்டர்"

" சரி... மாதவனை என்ன செய்யப் போகிறாய் .....? "

" மாதவன் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை டாக்டர். அவன் உயிரோடு இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி, உடலை காண்ட்ரூ மீன்கள் இருக்கும் கிணற்றில் போட்டு டிஸ்போஸ் செய்து விடுகிறேன் "

" ஜோன்ஸ் "

" டாக்டர்...... "

" நாம் திட்டம் போட்டபடி எல்லாம் நடந்துகொண்டு வருகிறது. இதில் நாம் எதிர்பார்க்காத ஒரே ஒரு விஷயம் வளர்மதி நம் பிடியிலிருந்து நழுவியதுதான்"

" விடிவதற்குள் மடக்கிவிடலாம் டாக்டர்...... "

" அவளிடம் துப்பாக்கி இருக்கிறது ஜோன்ஸ். ஒரு விநாடி ஏமாந்தாலும் தோட்டாவை நாம் வாங்கிக்கொள்ள வேண்டி வரலாம் "

ஜோன்ஸ் மெல்லச் சிரித்தான்.

" டாக்டர்...... உங்களுக்கு ஒரு விஷயம் தெரிய நியாயமில்லை "

" என்ன .....? "

" இப்போது வெளியே சுற்றிக்கொண்டிருக்கும் எட்டு நாய்களும் விதவிதமான மோப்ப சக்திகளை உணரும் திறன் படைத்தவை. இந்த ஃபார்ம் ஹவுஸின் எங்கோ இருக்கும் ஒரு பூ மலர்ந்தால் கூட அதன் வாசத்தை மோப்பம் பிடித்துக்கொண்டு அந்த இடத்துக்குப் போய்விடும் ஆற்றல் கொண்டவை. வளர்மதியின் உடம்பு மேல் பட்ட காற்றை ஏதாவது ஒரு நாய் ஸ்மெல் செய்தாலே போதும். அந்நிய மனிதர் யாரோ உள்ளே இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டு குரைக்க ஆரம்பித்துவிடும். அதற்குப்பிறகு வளர்மதி எந்த இடத்தில் பதுங்கி இருந்தாலும் சரி, அந்த இடத்தை எப்படியும் மோப்ப சக்தியால் கண்டுபிடித்துவிடும். அதன் பிறகு அந்த நாய் வித்தியாசமாய் குரைத்து மற்ற நாய்களை அந்த இடத்துக்கு வரவழைக்கும். வளர்மதியோட கையில் துப்பாக்கி இருந்தாலும் ஒரே நேரத்துல எட்டு நாய்களை அவளால எப்படி சமாளிக்க முடியும் .....? "

ஜோன்ஸ் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வெளியே ஒரு நாயின் குரைப்புச்சத்தம் கேட்க ஆரம்பித்தது.

(தொடரும்)

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X