• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அந்த வேலையை முதலில் செய்.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (59)

|

- ராஜேஷ்குமார்

நாயின் குரைப்புச் சத்தம் கேட்டதுமே லேசாய் பதட்டப்பட்டான் ஜோன்ஸ். ஜான் மில்லரிடம் திரும்பினான்.

" டாக்டர்....... எட்டு நாய்களில் ஒரு நாய் குரைக்க ஆரம்பித்துவிட்டது. இன்னும் சிறிது நேரத்தில் அந்த நாயின் குரைப்புச் சத்தம் வித்தியாசமாக மாறும்போதுதான் நம்மால் வளர்மதி இருக்கிற இடத்தைக் கண்டுபிடிக்க முடியும். அதற்குள் தீபக்கின் முழங்காலில் பட்டிருக்கிற குண்டடி காயத்திற்கு முதலுதவி செய்துவிட்டு அப்பா மகன் இரண்டு பேர்களுக்கும் ரோகிப்னால் இஞ்செக்சனைப் போட்டு ஒரு நாள் முழுவதும் மயக்க நிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்வோம் "

rajesh kumar new series vibareethangal inge virkappadum part 59

ஜோன்ஸ் சொன்னதைக் கேட்டு மையமாய் தலையாட்டினார் ஜான் மில்லர்.

" அந்த வேலையை முதலில் செய். வளர்மதியை நாம் மடக்கும்வரை இவர்கள் சுயநினைவு இல்லாமல் இருப்பது மிகவும் முக்கியம். புலியின் கால்கள்
நடக்க முடியாத நிலையில் இருந்தாலும் அதன் மூர்க்ககுணம் போகாது என்று சொல்வார்கள். முதல் உதவி மெடிக்கல் கிட்டை எடுத்து வந்து சிகிச்சையை முடித்து ரோகிப்னால் ஊசியையும் போட்டுவிடு ஜோன்ஸ்"

ஜோன்ஸ் உள்ளறைக்கு சென்று அடுத்த இரண்டு நிமிடங்களில் ஒரு மெடிக்கல் கிட்டோடு வந்தான்.

ஜான் மில்லர் உயர்த்திப் பிடித்துக்கொண்ட துப்பாக்கியோடு சொன்னார்.

" ஈஸ்வர், தீபக்.... நான் யார் என்பதும் எப்படிப்பட்டவன் என்பதும் உங்களுக்கு இந்நேரம் புரிந்து இருக்கும். நீங்கள் இருவரும் உயிரோடு இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். ஜோன்ஸ் உங்களுக்குப் பக்கத்தில் வரும்போது அவனைத் தாக்க முயன்றாலோ, அவன் முதலுதவி செய்து ரோகிப்னால் இஞ்செக்சன் போடும்போது ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தாலோ நான் தயவு தாட்சண்யம் பார்க்காமல் சுட்டுவிடுவேன். உங்களுக்கு உயிர் மீது ஆசையிருந்தால் கட்டுப்பட்டு நடங்கள். என்னை கொலையாளியாக மாற்றிவிட வேண்டாம் "

ஜான் மில்லர் சொல்லச் சொல்ல ஈஸ்வர் பதறிப்போனவராய் கைகளை ஆட்டி மறுத்தார்.

" டாக்டர்...... நானும் என்னுடைய மகன் தீபக்கும் எந்த வகையிலும் உங்களுக்கு தொந்தரவாக இருக்க மாட்டோம். நீங்கள் விரும்பிய ஜீன் ஆராய்ச்சிப் பணிகளை உங்கள் விருப்பம் போல் முடித்துக்கொண்டு உங்கள் நாட்டுக்கு சென்று விடுங்கள். எங்களுக்கு அது சம்பந்தமான எந்த விபரங்களும் வேண்டாம். நாங்கள் உயிரோடு இருந்தால் அதுவே எங்களுக்கு போதும். ஆனால் ஒரே ஒரு கோரிக்கை "

" என்ன ..... ? "

" சில்பா, நர்மதா, வளர்மதி இந்த மூன்று பேர்களையும் உங்களுடைய ஜீன் ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்திக்கொண்ட பிறகு அவர்களை கொன்று காண்ட்ரூ மீன்கள் இருக்கும் கிணற்றில் போட்டுவிடுங்கள். அவர்களைப் பற்றின எந்த ஒரு தடயமும் இந்த பண்ணை வீட்டில் இருக்கக்கூடாது "
ஜான் மில்லர் சிரித்தார்.

" உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம் ஈஸ்வர். ஜோன்ஸ் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வான். ஜோன்ஸ் பலசாலி மட்டுமில்லை. கொஞ்சம் விஞ்ஞானமும் படித்தவன். எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்று தெரிந்தும் வைத்து இருப்பவன் "

ஜான் மில்லர் பேசிக்கொண்டிருக்கும்போதே ஜோன்ஸ் மெடிக்கல் கிட்டோடு தீபக் அருகே போய் உட்கார்ந்து முதல் உதவியை ஆரம்பித்தான்.
தீபக் வலி தாளாமல் துடிக்க ஜோன்ஸ் அதைப் பொருட்படுத்தாமல் ரத்தக்காயத்தைத் துடைத்து பஞ்சில் மருந்தை வைத்துக்கட்டி பெரிதாய் பாண்டேஜ் ஒன்றைப் போட்டான்.

ஜான் மில்லரின் கையில் இருந்த துப்பாக்கி உச்சபட்ச எச்சரிக்கையோடு உயர்ந்து தன்னுடைய ஒற்றைக்கண்ணால் ஈஸ்வரையும் தீபக்கையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தது.

ஜோன்ஸ் முதல் உதவி சிகிச்சையை முடித்துக்கொண்டு ரோகிப்னால் மருந்து குப்பியையும் இஞ்செக்சன் ஊசியையும் எடுத்தான்.

" இனி ஒரு பனிரெண்டு மணி நேரத்துக்கு அப்பாவுக்கும் மகனுக்கும் நிம்மதியான தூக்கம்" சொல்லிக்கொண்டே இருவர்க்கும் ரோகிப்னால் மருந்தை இஞ்செக்ட் செய்ய சரியாய் முப்பதாவது விநாடி ஈஸ்வரும் தீபக்கும் சரிந்து மடங்கி இரண்டு அடைப்புக்குறிகளாய் மாறினார்கள்.

ஜோன்ஸ் எழுந்து ஜான் மில்லரிடம் வந்தான்.

" டாக்டர்...... இனி நாளை இரவு வரை இவர்களைப்பற்றி நாம் கவலைப்படவேண்டியதில்லை..... நமக்கு முன்னால் இப்போது இருக்கக்கூடிய ஒரே ஒரு விஷயம் வளர்மதிதான். அவளையும் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் நாய்கள் கண்டுபிடித்து அவள் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்துவிடும் "

ஜான் மில்லர் கையமர்த்தினார்.

" ஜோன்ஸ்..... அதற்கு முன்பாய் நான் சில்பாவையும் நர்மதாவையும் பார்த்து அவர்கள் நான் மேற்கொள்ளப்போகும் ஆராய்ச்சியைத் தாங்கக்கூடிய வகையில் இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்கள் இருக்கும் இடத்திற்கு என்னை கூட்டிக்கொண்டு போ "

" அவர்கள் இரண்டு பேரும் ஆரோக்கியமாய் இருக்கிறார்கள் டாக்டர். அதைப்பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம் "

" இதோ பார் ஜோன்ஸ்..... நான் மேற்கொள்ளப்போகும் ஆராய்ச்சி எதுமாதிரியானது என்று உனக்குத் தெரியாது. நான் உடனடியாய் அவர்களைப் பார்க்க வேண்டும் கூட்டிக்கொண்டு போ "

" டாக்டர் "

" என்ன ..... ? "

" வளர்மதி வெளியே எந்த இடத்தில் பதுங்கியிருக்கிறாள் என்பது தெரியாத நிலைமையில் நாம் வெளியே செல்வது அவ்வளவு உசிதமில்லை..... நாய்கள் குரைத்த பிறகு...... " ஜோன்ஸ் பேச்சை முடிக்கும்முன் ஜான் மில்லர் சீறினார். " முட்டாள்.... நாய்கள் குரைப்பதற்காக நாம் காத்துக்கொண்டு இருக்க முடியாது. நாம் வெளியே போனால்தான வளர்மதி தான் ஒளிந்திருக்கும் இடத்தைவிட்டு வெளியே வந்து நம்மைத் தாக்கவோ சுடவோ முயற்சிப்பாள் "

" அது ரிஸ்க் இல்லையா டாக்டர்..... ? "

" ரிஸ்க்தான்.... இந்த இருட்டில் குறி பார்த்து சுடுவது என்பது அவ்வளவு சுலபமில்லை. அந்த அளவுக்கு வளர்மதியிடம் துப்பாக்கியை கையாள்வதில் புத்திசாலித்தனம் இருக்காது என்றே நினைக்கிறேன் "

ஜோன்ஸ் சில விநாடிகள் அமைதியாய் இருந்துவிட்டு நிதானமான குரலில் பேசினான்.

" டாக்டர்...... நான் உங்களை எதிர்த்து பேசுவதாகவோ அல்லது புத்திமதி சொல்வதாகவோ நினைக்க வேண்டாம். நான் ஈஸ்வரிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு உங்களுக்கு விசுவாசமாக இருந்தேன். இப்போதும் இருந்து கொண்டு இருக்கிறேன். என்னை இங்கே இருப்பவர்கள் நம்புவதற்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்க வேண்டியிருந்தது என்று உங்களுக்குத் தெரியாது. நான் ஏமாந்தது வளர்மதியிடம் மட்டும்தான். மாதவன் அவளைக் கடத்திக்கொண்டு வந்த போது அவள் முழுமையான மயக்க நிலையில் இருந்தாள். நாங்கள் இருவரும்தான் அவளைத் தூக்கிக்கொண்டு போய் அறைக்குள் படுக்க வைத்தோம். அப்போது அவளிடம் துப்பாக்கி இருந்ததற்கான அடையாளமே இல்லை. அவள் தன் இடுப்பில் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தால் கண்டிப்பாக எங்களுடைய கைகளுக்கு நிச்சயம் தட்டுப்பட்டிருக்கும் "

" பழைய கதையைப் பேசிக்கொண்டிருக்க வேண்டாம் ஜோன்ஸ். இனிமேல் நடக்க வேண்டிய விஷயங்கள் இரண்டே இரண்டுதான். வளர்மதி இந்தப் பண்ணை வீட்டை விட்டு தப்பித்துப் போய்விடக்கூடாது. இரண்டாவது வரும் ஒரு வார காலத்திற்குள் என்னுடைய ஜீன் எக்ஸ்பரிமெண்ட்ஸ் இந்த மூன்று பெண் மனித எலிகள் மீது நடத்தப்பட்டு ஒரு ஆரோக்கியமான அறிக்கையோடு நான் என்னுடைய நாட்டுக்குத் திரும்ப வேண்டும் "

" நீங்கள் விருப்பப்பட்ட இந்த இரண்டுமே நடக்கும் டாக்டர் "

" அப்புறம் என்ன புறப்படு..... மணி மூன்றாகப் போகிறது "

" ஒரு நிமிஷம் டாக்டர் "

" என்ன ..... ? "

" சில்பா, நர்மதா இருக்கும் இடத்திற்கு நூறு மீட்டர் தூரமாவது நடக்க வேண்டும். நான் போய் பேட்டரியால் இயங்கும் மினி காரைக்கொண்டு வந்து விடுகிறேன். நாம் பேட்டரி காரில் போவது இன்னொரு வகையிலும் பாதுகாப்பானது வெளியே சுற்றிக்கொண்டிருக்கும் நாய்கள் என்னைப் பார்த்தால் குரைக்காது. ஆனால் உங்களைப் பார்த்து விட்டால் குரைத்துக்கொண்டே வந்து மேலே பாய்ந்து குதறிவிடும். காரில் சென்றால் அந்த ஆபத்து இல்லை "

ஜான் மில்லர் மெல்லச் சிரித்தார்.

" இன்னொரு வகையிலும் பாதுகாப்பு இருக்கிறது ஜோன்ஸ். நாம் பேட்டரி காரில் சென்றால் வளர்மதியால் ஏற்படும் ஆபத்தும் இருக்காது..... நீ போய் பேட்டரி காரைக் கொண்டு வந்து விடு. நான் காத்திருக்கிறேன். காரைக்கொண்டு வர எவ்வளவு நேரமாகும் ..... ? "

" பதினைந்து நிமிடமாகும் "

" புறப்படு.... துப்பாக்கி அலர்ட்டில் இருக்கட்டும்..... "

ஜோன்ஸ் தலையாட்டிவிட்டு அந்த அவுட் ஹவுஸை விட்டு வெளியேற ஜான் மில்லர் கதவைச் சாத்தி தாழிட்டுக்கொண்டு சுவரோரமாய் போடப்பட்டிருந்த சோபாவுக்கு சாய்ந்தார்.

****

செல்போனின் டயல்டோன் சத்தம் கேட்டு சட்டென்று கண் விழித்தாள் திரிபுரசுந்தரி. சுவர் கடிகாரம் மணி 3.05 காட்டியது.

" இந்நேரத்திற்கு அழைப்பது யார் ? " செல்போனின் டிஸ்ப்ளேயை உற்றுப் பார்த்தாள்.

செம்மேடு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் குணசேகரன் அழைத்துக் கொண்டிருந்தார். செல்போனை காதுக்கு ஒற்றினாள்.

" சொல்லுங்க குணசேகரன் "

" ஸாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ் மேடம். இந்த நேரத்துக்கு உங்களை நான் கூப்பிட்டு இருக்கக்கூடாது. பட் நோ அதர் வே "

" நோ ப்ராப்ளம்..... என்ன விஷயம் சொல்லுங்க "

" மேடம்..... செம்மேடு ஏரியாவில் ஈஸ்வர்க்கு சொந்தமான ஃபார்ம் ஹவுஸ், ரிசார்ட்ஸ் ஏதாவது இருக்கான்னு விசாரிக்கச் சொல்லியிருந்தீங்க.... நானும் அந்த கிராமத்துல இருக்கிற ஞானமூர்த்தி என்கிற வயசான வி.ஒ. ஒருத்தரை விசாரிச்சு சொல்றதா சொல்லியிருந்தேன் "

" ஆமா...... "

" செம்மேடு கிராமத்துக்கு போன மாசம் ஒரு கேஸ் விஷயமாய் விசாரிக்கப் போன போது அந்த ஞானமூர்த்தியைப் பார்த்து பேசினதாகவும், ஆனா அவரோட காண்டாக்ட் போன் நெம்பர் இல்லைன்னும் சொன்னேன் "

" ஆமா...... சொன்னீங்க "

" தப்பா சொல்லிட்டேன் மேடம்...... பத்து நிமிஷத்துக்கு முந்தி தூக்கம் கலைஞ்சு கண் முழிச்ச போது சட்டுன்னு ஒரு விஷயம் எனக்கு ஞாபகம் வந்தது. அந்த வி.ஒ.வை ஒரு கேஸ் சம்பந்தப்பட்ட விஷயத்துல சாட்சியாக போட்டபோது அவர்கிட்டே விட்னஸ் கையெழுத்து கேட்டேன். அவரும் ஸ்டேஷனுக்கு வந்து சில ஃபார்ம்ஸ்ல கையெழுத்து போட்டார். அப்படி கையெழுத்து போடும்போது, கீழே அவரோட செல்போன் நெம்பரையும் எழுதச் சொன்னேன். அவர் போன் நெம்பரை எழுதியது ஒரு பத்து நிமிஷத்துக்கு முந்திதான் ஞாபகத்துக்கு வந்தது. உடனே நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணி எஸ்.ஐ.கிட்டே விபரம் சொல்லி அந்தப் ஃபைலை எடுத்துப் பார்த்து வி.ஒ. ஞானமூர்த்தியோட செல்போன் நெம்பரை எனக்கு அனுப்பச் சொன்னேன். அவரும் அடுத்த அஞ்சு நிமிஷத்துக்குள்ளே அனுப்பி வெச்சார் "

rajesh kumar new series vibareethangal inge virkappadum part 59

திரிபுரசுந்தரி உடம்பு முழுவதும் பரவிக்கொண்ட பதட்டத்தோடு கேட்டார்.

" அந்த வி.ஒ. ஞானமூர்த்திக்கு போன் பண்ணீங்களா ? "

" உடனே போன் பண்ணினேன். லாங் ரிங் போன பிறகு வி.ஒ. பேசினார். நான் தொழில் அதிபர் ஈஸ்வரைப் பற்றி சொல்லிட்டு அவரோட ஃபார்ம் ஹவுஸோ, ரிசார்ட்களோ அந்த செம்மேடு ஏரியாவில் இருக்கான்னு கேட்டேன். அவர் இல்லைன்னு சொன்னார் "

" நீங்க எந்த ஈஸ்வர்ன்னு விபரமா சொன்னீங்களா குணசேகரன் ? "

" சொன்னேன் மேடம்... அப்படி யாரையும் எனக்குத் தெரியாது. ஈஸ்வர் என்கிற பேர்ல எந்த பிராப்பர்ட்டியும் செம்மேடு ஏரியாவில் கிடையாதுன்னு சொல்றார் "

திரிபுரசுந்தரி பெருமூச்சுவிட்டாள்.

" மேற்கொண்டு என்ன செய்யலாம் குணசேகரன் ? "

" வி.ஒ. ஞானமூர்த்தியை அரஸ்ட் பண்ணி ஸ்டேஷனுக்கு கொண்டு வரணும் மேடம் "

" அ....அ.....அவரை அரஸ்ட் பண்ணனுமா ? "

" எஸ்.... மேடம் "

" எதுக்கு ? "

" ஈஸ்வரை தெரியாதுன்னு அவர்.... பொய் சொல்றார் மேடம்

(தொடரும்)

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X