• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அந்தப் பெண் என்ன சொன்னா ?.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (60)

|

- ராஜேஷ்குமார்

திரிபுரசுந்தரி திடுக்கிட்டுப் போனவளாய் கேட்டாள்.

" என்ன சொல்றீங்க குணசேகரன்...... வி.ஒ. ஞானமூர்த்தி ஈஸ்வரை தெரியாதுன்னு பொய் சொல்றாரா ? "

" ஆமா மேடம் "

" அவர் பொய் சொல்றார்ன்னு உங்களுக்கு எப்படித் தெரியும் ? "

" மேடம்..... நான் அவர்க்கு போன் பண்ணின போது வி.ஒ. ஞானமூர்த்தி ஒரு லாங் ரிங் போன பின்னாடிதான் போன் காலை அட்டெணட்ட பண்ணினார். பேசறது யார்ன்னு கேட்டார். நான் செம்மேடு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்ன்னு சொன்னதும் அவர் சில விநாடி மெளனமாய் இருந்துட்டு என்ன விஷயம்ன்னு கேட்டார். நான் ஈஸ்வரைப்பற்றி பேச ஆரம்பிச்சு அந்தப் பேர்ல உங்களுக்கு யாரையாவது தெரியுமான்னு கேட்டுகிட்டு இருக்கும்போதே குறுக்கே ஒரு பெண்ணோட குரல் லோ டெஸிபிலில் கேட்டது "

rajesh kumar new series vibareethangal inge virkappadum part 60

" பெண்ணோட குரலா ? "

" ஆமா மேடம்..... "

" அந்தப் பெண் என்ன சொன்னா ? "

" யாராவது ஈஸ்வரைப்பத்தி கேட்டா.... அப்படி ஒருத்தரை தெரியாதுன்னு சொல்லிடுங்கன்னு சொன்னா"

" நீங்க சொல்றதைப் பார்த்தா அந்த வி.ஒ. ஞானமூர்த்தி உங்ககிட்ட செல்போன்ல பேசும்போது ஸ்பீக்கரை ஆன் பண்ணிட்டு பேசியிருக்கணும் இல்லையா குணசேகரன்? "

" எஸ்.... மேடம்..... "

" அந்தப் பெண் அவரோட மனைவியாய் கூட இருக்கலாம்ன்னு நினைக்கிறேன் "

" மே....பி.......மேடம்..... "

" ஸோ..... அவங்ககிட்டே ஏதோ தப்பு இருக்கு "

" கண்டிப்பா மேடம்..... "

" அவரை எப்ப அரஸ்ட் பண்றீங்க ? "

" நான் இப்ப ஸ்டேஷனுக்கு கிளம்பிப் போயிட்டிருக்கேன் மேடம். அங்கிருந்து ஒரு அரை மணி நேரத்துல கிளம்பி வி.ஒ.வீட்டுக்கு போயிடுவேன். போன்ல பேசும்போது அட்ரஸ் கேட்டு வெச்சுகிட்டேன் "

" குணசேகரன்....... இந்த விஷயத்துல நான் என்னோட ஒபினியனைச் சொல்லட்டுமா ? "

" சொல்லுங்க மேடம் "

"வி.ஒ. ஞானமூர்த்தியை அரஸ்ட் பண்ணாதீங்க.... வீட்டுக்குப்போய் அவரை விசாரணை பண்ணுங்க.... நீங்க அவரை அரஸ்ட் பண்ணி ஸ்டேஷனுக்கு கூட்டிட்டுப் போனா அது ஒரு பெரிய இஷ்யூவா மாறி மீடியாக்களுக்கு நியூஸா மாறிடும்..... நாம என்ன தகவலை எதிர்பார்க்கிறோமோ அந்தத் தகவல் நமக்குக் கிடைக்காது. வி.ஒ. ஞானமூர்த்தியை வீட்ல வெச்சு விசாரிக்கும்போது போன் போட்டு எனக்குக் கொடுங்க. நான் பேசறேன் "

" மேடம்..... சில விஷயங்களை நாம கையாளும்போது அதிரடியான நடவடிக்கைகள் தேவை. ஞானமூர்த்தி சாதாரண நபர் கிடையாது. வி.ஒ.வாக அதாவது வில்லேஜ் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபீஸராய் பல வருஷமாய் அந்த செம்மேடு கிராமத்தில் பணிபுரிந்தவர். அவர் சாதாரணமான விசாரணைக்கெல்லாம் பயப்படமாட்டார். அரஸ்ட் பண்ணி ஸ்டேஷனுக்கு கூட்டிப்போய் அவரை பயமுறுத்தற மாதிரி என்கொயர் செஞ்சாத்தான் ஒரளவுக்காவது உண்மை பேசுவார் "

" ப்ளீஸ்...... வேண்டாம் குணசேகரன்....... ஈஸ்வரை தனக்குத் தெரியாதுன்னு வி.ஒ. ஞானமூர்த்தி சொல்றதுக்கு நிச்சயமாய் ஏதாவது காரணம் இருக்கும். அவரை ஸ்மூத்தா ஹேண்டில் பண்ணினா நமக்குத் தேவையான பதில் கிடைக்கும். அந்தப் பதிலை வெச்சுத்தான் நாம வளர்மதியைக் கண்டுபிடிக்க முடியும். இப்போதைக்கு சிவியரான எந்த ஒரு நடவடிக்கையும் ஞானமூர்த்திக்கு எதிராய் எடுக்காமே இருக்கிறதுதான் நல்லதுன்னு நினைக்கிறேன் "

" ஒ.கே. மேடம்..... நீங்க இவ்வளவு தூரம் ஒரு விஷயத்தை வற்புறுத்திச் சொல்லும்போது நான் இந்த விஷயத்தை ஸ்மூத்தாவே ஹேண்டில் பண்றேன். நான் இப்பவே அவர் வீட்டுக்கு கிளம்பிப் போறேன். எப்படி விசாரிக்கணுமோ அப்படி விசாரிச்சு அவர்கிட்டயிருந்து உண்மையை வரவழைக்கிறேன் "

" தேங்க்யூ குணசேகரன்..... இனிமேல் என்னால தூங்க முடியாது. உங்க போன்காலை எதிர்பார்த்து காத்திட்டிருப்பேன் " பேசி விட்டு செல்போனை அணைத்தாள் திரிபுரசுந்தரி.

****

செம்மேடு

மூன்று தடவை கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு சோபாவுக்கு சாய்ந்து உட்கார்ந்திருந்த ஜான் மில்லர் எழுந்து போய் தாழ்ப்பாளை விலக்கினார்.
வெளியே ஜோன்ஸ் நின்றிருந்தான். டாக்டர் லேசாய் கோபப்பட்டார்.

" பதினைந்து நிமிடத்துக்குள் வருவதாய் சொன்னாய். அரைமணி நேரமாகிறது. ஏன் லேட்..... ? "

" ஸாரி டாக்டர்..... பேட்டரி கார் ஸ்டார்ட் ஆவதில் ஒரு சிறிய பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. அதை சரி செய்து ஒட்டிக்கொண்டு வர லேட்டாகிவிட்டது "

" இப்போது நேரம் என்ன தெரியுமா......மூன்று மணி பத்து நிமிஷம். அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் விடிய ஆரம்பித்துவிடும். அதற்குள் நான் சில முக்கியமான வேலைகளை முடிக்க வேண்டும். மாதவனின் உடலை டிஸ்போஸ் செய்ய வேண்டிய வேலையும் உனக்கு இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக வளர்மதியைக் கண்டுபிடித்து மடக்க வேண்டும். நாம எப்பேர்ப்பட்ட நிலைமையில் இருக்கிறோம் என்பது உனக்கு புரிகிறதா .... ? "

" எனக்கும் நிலைமை புரிகிறது டாக்டர். ஆனால் நாம் பதட்டப்படாமல் அவசரப்படாமல் செயல்பட்டால் மட்டுமே வெற்றிகரமாய் ஒவ்வொரு செயலாய் முடிக்க முடியும் "

" சரி.....சரி.... இனியும் லேட் செய்ய வேண்டாம் புறப்படு..... நான் முதலில் அந்த சில்பாவையும், நர்மதாவையும் பார்த்து அவர்கள் என்னுடைய ரிசர்ச் ப்ராசஸஸிற்கு ஈடு கொடுக்கும் வகையில் ஆரோக்கியமாய் இருக்கிறார்களா என்று சோதனை செய்ய வேண்டும். பேட்டரி கார் எங்கே இருக்கிறது.... ? "

" என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள் டாக்டர் "

ஜான் மில்லர் வெளியே வந்ததும் ஜோன்ஸ் அந்த அறையின் கதவைச் சத்தம் எழாமல் பூட்டிவிட்டு இருபதடி தூரத்தில் நின்றிருந்த அந்தச் சிறிய பேட்டரி காரை நோக்கிப் போனான். டாக்டர் சுற்றும் முற்றும் பார்த்தபடி ஜோன்ஸைப் பின் தொடர்ந்தார்.

rajesh kumar new series vibareethangal inge virkappadum part 60

எச்சரிக்கையான பார்வைகளோடு இருவரும் கார்க்குள் ஏறி உட்கார்ந்தார்கள்.

ஜோன்ஸ் காரை மெதுவாய் ஒட்டிக்கொண்டே சொன்னான்.

" டாக்டர்.......இந்த நிமிஷம் முதல் உங்களை மட்டுமே நான் முழுமையாய் நம்பியிருக்கிறேன். உங்களுடைய ஆராய்ச்சிகள் வெற்றிகரமாய் முடிந்த பிறகு எனக்கு தருவதாக சொன்ன இரண்டு லட்ச டாலர் பணத்தை தருவதில் நீங்கள் எந்த தாமதமும் செய்ய மாட்டீர்களே .... ? "

ஜான் மில்லர் சிரித்தார். " நீ பேசுகிற பேச்சைப் பார்த்தால் என்னை நீ முழுமையாய் நம்பவில்லை போலிருக்கிறதே.... ? "

" நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை டாக்டர்.... நீங்கள் செய்யப் போகும் இந்த செல்ஃபிஷ் ஜீன், தி ப்ளைண்ட் வாட்ச்மேக்கர் ஜீன் ஆராய்ச்சிகளுக்குப் பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. உங்களுக்கு அவர்களால் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அந்தப் பிரச்சினை என்னையும் பாதிக்குமே என்கிற பயம் என்னுடைய மனசுக்குள் லேசாய் இருக்கிறது "

" அந்த பயமே உனக்கு வேண்டாம் ஜோன்ஸ். நான் இப்போது மேற்கொள்ளப்போகும் ஆராய்ச்சிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட ஒன்று. பாஸிட்டீவ் ரிப்போர்ட்ஸ் வர 99 சதவீதம் வாய்ப்பு இருக்கிறது. ரிப்போர்ட் தயாரானதும் எனக்குப் பேசப்பட்ட பணம் என்னுடைய ரகசிய வங்கிக் கணக்குக்குப் போய்விடும். அந்த கணக்கிலிருந்து உன்னுடைய வெளிநாட்டு வங்கிக்கணக்குக்கு அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளாக நான் உனக்குப் பேசப்பட்ட பணத்தை அனுப்பிவிடுவேன். அதற்குப்பிறகு நீ யாரோ நான் யாரோ..? "

ஜான் மில்லர் பேசிக்கொண்டிருக்கும்போதே பேட்டரி காரின் வேகம் குறைந்து, இருட்டில் ஒரு வரைபடம் போல் தெரிந்த அந்த கட்டிடத்திற்கு முன்பாய் போய் தன்னுடைய இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. ஜோன்ஸ் சொன்னான்.

" இதுதான் டாக்டர் அந்த ரிசர்ச் லாப்...... "

" இந்த லாப்புக்குள்தானே சில்பாவும், நர்மதாவும் இருக்கிறார்கள் .... ? "

" ஆமாம் டாக்டர் "

ஜோன்ஸ் காரினின்றும் இறங்கினான். டேஷ்போர்டில் இருந்த மேக்னடிக் லாக் சிஸ்டத்தோடு கூடிய டிவைஸ் ஒன்றை எடுத்துக்கொண்டான். இருட்டில் இருவரும் கற்கள் பதித்த பாதையில் நடந்து கட்டிடத்திற்கு முன்பாய் வந்து நின்றார்கள், ஜோன்ஸ் மேக்னடிக் லாக் சிஸ்டத்தை பயன்படுத்தி கதவைத் திறந்தான்.

இதமான நீலநிற வெளிச்சத்தில் அந்த ஒட்டுமொத்த லாப்பும் ஏ.ஸியின் மிதமான குளிரில் அசாத்தியமான நிசப்தத்தோடு பார்வைக்குப் புலப்பட்டது. பெரும்பாலும் கண்ணாடி கதவோடு கூடிய சிறிய அறைகள். அந்த அறைகளில் இருந்த பாலிமர் மேஜைகளின் மேல் செல்லுலார் ஜீன் தெரபி சம்பந்தப்பட்ட அதிநவீன கருவிகள் நிறம் நிறமாய் தெரிந்தன. பல ஜாதிகளில் கம்ப்யூட்டர்கள் மானிட்டரிங் செய்தபடி வெளிச்சப் புள்ளிகளோடு கண் சிமிட்டிக்கொண்டிருந்தன.

ஜான் மில்லர் கேட்டார்.

" சில்பா, நர்மதா அந்த இரண்டு பேரும் எங்கே ..... ? "

" உள்ளே இருக்கிறார்கள் "

" இப்போது நினைவோடு இருப்பார்களா ..... ? "

" வாய்ப்பில்லை டாக்டர்..... நான் உங்களை ரிஸீவ் செய்ய ஏர்போர்ட் வருவதற்கு முன்பே இரண்டு பேர்க்கும் சப் க்யூடேனியஸ் இஞ்செக்சன் போட்டுவிட்டுதான் வந்தேன். இனி நாளை மதியம்தான் கண் விழிப்பார்கள் "

" அவர்களுடைய ஹெல்த் சார்ட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லையே ...? "

" இல்லை டாக்டர்..... சில்பா மட்டும் இரண்டு கிலோ எடை குறைந்து பிறகு வந்த நாட்களில் தேறிவிட்டாள். நர்மதாவுக்கு எந்த எடை குறைவும் ஏற்படவில்லை. நீங்கள் இருவரையும் சோதித்துக்கொள்ளலாம் "

" ஜெனிடிக் டெஸ்டிங் க்யூப்" என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த அந்த கனமான கண்ணாடி கதவுக்கு முன்னாடி நின்ற ஜோன்ஸ் கதவைச் சிரமப்பட்டு தள்ளி உள்ளே போக ஜான் மில்லர் தொடர்ந்தார்.

அறையின் நடுவே இரண்டு சாய்வான கட்டில்கள் போடப்பட்டிருக்க அவைகளில் நர்மதாவும், சில்பாவும் மல்லாக்க படுக்க வைக்கப்பட்டிருந்தார்கள். சிறிது கூட சலனமில்லாத உடல்கள். அவர்களோடு இணைக்கப்பட்டிருந்த பயோ கம்ப்யூட்டர்கள் தத்தம் திரைகளில் இருவருடைய ஆரோக்கியத்தையும் அளந்து பச்சை நிறத்தில் சதவீத எண்களைக் காட்டி நெட் ரிசல்ட்டில் நார்மல் என்கிற வார்த்தையை காட்டின.

ஜான் மில்லர் அங்கேயிருந்த ஒரு கம்ப்யூட்டர்க்கு முன்பாய் போய் உட்கார்ந்து க்யூபாவில் இருக்கும் டாக்டர் ஒருவரோடு சாட்டிங் செய்ய ஆரம்பித்தார்.

" டாக்டர் பெம்பே "

மறுமுனையில் டாக்டர் பெம்பே சாட்டிங்கைத் தொடர்ந்தார்.

" உங்களுக்காகத்தான் காத்து கொண்டிருக்கிறேன் மில்லர் "

" அங்கே நிலைமை எப்படி .... சாதகமா ...? "

" மிக மிக சாதகமாப் போய்க் கொண்டிருக்கிறது. எனக்கு முன்னால் இப்போது எந்த ஒரு தடைகல்லும் இல்லை. நாளை காலை முதல் என்னுடைய ஆய்வுப் பணியை ஆரம்பித்துவிடுவேன் "

" அற்புதத்தை நிகழ்த்த என் வாழ்த்துக்கள் "

ஜான் மில்லர் மேற்கொண்டு சாட்டிங்கைத் தொடங்கும் முன்பு லாப்ரட்ரிக்கு வெளியே நாய் குரைக்கும் சத்தம் கேட்டது.

ஜோன்ஸ் பதட்டமானான்.

" டாக்டர்.... நாய் குரைக்கிறது....."

ஜான் மில்லர் கோபமாய் நிமிர்ந்தார். " நான் இப்போது முக்கியமான வேலையில் இருக்கிறேன். நாய் குரைத்தால் குரைத்துவிட்டு போகட்டும் "

" ஸாரி டாக்டர்.... குரைக்கிற இந்த நாயின் பெயர் ரோஜர். அபார மோப்ப சக்தி திறன் கொண்டது. அந்நிய ஆட்கள் யாரையாவது பார்த்திருந்தால்தான் இப்படி குரைக்கும். ரோஜர் நிச்சயமாய் வளர்மதியைப் பார்த்து இருக்க வேண்டும். வாருங்கள் போய்ப் பார்த்துவிடலாம் "

" அந்த நம்பிக்கை உனக்கு இருந்தால் போய்ப் பார். நான் டாக்டர் பெம்பேயுடன் சில விஷயங்களை சாட்டிங்கின் மூலம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த டாக்டரை நான் மறுபடியும் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் அடுத்த வாரம் வரை காத்திருக்க வேண்டும் "

" ஒ.கே. டாக்டர்..... நீங்கள் உங்கள் வேலையை கவனியுங்கள். நான் வெளியே போய் ரோஜரை கவனிக்கிறேன் " சொன்ன ஜோன்ஸ் இடுப்பில் இருந்த துப்பாக்கியை உருவிக்கொண்டபடி நடக்க முயன்றான்.

ஜான் மில்லர் குரல் கொடுத்தார்.

" ஒரு நிமிஷம் ஜோன்ஸ் "

" சொல்லுங்க டாக்டர்.... "

" வளர்மதி உன்னுடைய பார்வைக்குத் தட்டுப்பட்டால் ஒரு விநாடி கூட தாமதம் செய்யாமல் சுட்டு வீழ்த்திவிடு. அவள் உயிரோடு இருக்கக்கூடாது. என்னுடைய ரிசர்ச்சிற்கு இந்த இரண்டு பெண் மனித எலிகளே போதுமானது "

டாக்டர் ஜான் மில்லர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே நாய் ரோஜரின் குரைப்புச்சத்தம் படிப்படியாய் அதிகரித்துக்கொண்டே போனது.

(தொடரும்)

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X