For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ப்ளீஸ் டாக்டர்... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (61)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

நாய் ரோஜரின் குரைப்புச் சத்தம் அதிகமானதும் ஜோன்ஸின் பதட்டம் உச்சகட்டத்துக்குப் போனது. நடுக்கக் குரலில் கூப்பிட்டான்.

” டா.....டா....டாக்டர் ........ ”

” என்ன ? ”

” நாய் ரோஜர் நிச்சயமாய் வளர்மதியை மோப்பம் பிடித்துவிட்டதென்று நினைக்கிறேன். இப்போது நான் மட்டும் வெளியே போவதென்பது அவ்வளவு புத்திசாலித்தனம் கிடையாது. நீங்களும் வந்தால் நிச்சயமாய் வளர்மதியை மடக்கிவிடலாம் டாக்டர் ”

Rajesh kumar new series vibareethangal inge virkappadum part 61

ஜான்மில்லர் கம்ப்யூட்டரினின்றும் பார்வையை நகர்த்தி ஜோன்ஸை ஒரு உக்கிரப் பார்வை பார்க்க அவன் இரு கைகளையும் கூப்பினான்.

” ப்ளீஸ் டாக்டர்...... என் மீது கோபப்படாதீர்கள். நாம் இரண்டு பேரும் வெளியே சென்றால்தான் வளர்மதிக்கு பயம் வரும். அவள் சுடுவதாக இருந்தாலும் ஒரே நேரத்தில் இரண்டு பேரையும் குறி பார்த்து சுட முடியாது. இது அவளுக்கு பெரிய மைனஸ் பாயிண்ட். இந்த வீக்னஸை நாம் உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும். நான் உங்களுக்கு உத்தரவு போடுவதாக நினைக்க வேண்டாம் டாக்டர் ”

ஜான்மில்லர் சில விநாடிகள் மெளனமாய் இருந்துவிட்டு கம்ப்யூட்டர் பக்கம் திரும்பினார். சாட்டிங்கில் காத்திருந்த க்யூபா டாக்டர் பெம்பேவுக்கு ” வில் கால் யூ சூன் ” என்று ” சாட் ” செய்துவிட்டு நாற்காலியினின்றும் எழுந்தார்.

” வா..... போகலாம் ”

” தேங்க்யூ டாக்டர் ”

” நாய் என்னை தாக்காதபடி பார்த்துக்கொள்... ”

” கவலைப்படாதீர்கள் டாக்டர். ரோஜர் என் வார்த்தைக்குக் கட்டுப்படுவான். நீங்கள் என்னையொட்டி பின்புறமாக வாருங்கள். வெளியே என்ன நடந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் ”

சொல்லிவிட்டு ஜோன்ஸ் க்யூப்பை விட்டு வெளியேற ஜான்மில்லர் ஒரு பெருமூச்சோடு அவனைத் தொடர்ந்தார்.

ரோஜர் சற்றும் சளைக்காமல் அதே வீரியத்தோடு குரைத்துக்கொண்டிருக்க, இருவரும் லாப்பின் நீண்ட ஹாலில் நடந்து பிரதான கதவருகே வந்தார்கள்.

ஜோன்ஸ் தன் கையில வைத்திருந்து மேக்னடிக் லாக் சிஸ்டத்தைப் பயன்படுத்தி கதவைத் திறந்தான். உடனே வெளியே வந்துவிடாமல் மெல்ல எட்டிப் பார்த்தான்.

வெளியே கொட்டிக்கிடந்த இருட்டு, ஒரு கருப்பு நிற வார்னிஷ் பேப்பர் போல் தெரிய, நாயின் குரைப்புச்சத்தம் மட்டும் காதுகளின் ஜவ்வை அதிர வைக்கிற தினுசில் கேட்டது.

” என்ன ஜோன்ஸ்..... பார்வைக்கு ஏதாவது தட்டுப்படுதா ? ”

” இல்லை டாக்டர்...... இன்னும் கொஞ்சம் முன்னால் போனால்தான் ரோஜர் இருக்கிற இடம் தெரியும். நான் மட்டும் போகட்டுமா ? ”

ஜோன்ஸ் ஜான்மில்லரிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ரோஜரின் குரைப்புச்சத்தம் சட்டென்று நின்றது.

இருவரும் ஒருவரையொருவர் திகைப்புடன் பார்த்துக்கொண்டார்கள்.

” நாய் ஏன் குரைப்பதை நிறுத்திவிட்டது ஜோன்ஸ்..... ? ”

” தெரியவில்லை டாக்டர் ”

” தனக்கு தெரிந்த நபர் யாரையாவது அது பார்த்து இருக்குமோ ..... ? ”

” இப்போதைக்கு ரோஜர்க்கு தெரிந்த நபர் நான் மட்டும்தான் டாக்டர். வேறு யாரும் இங்கே வர வாய்ப்பில்லை ”

” இப்போது என்ன செய்யலாம் சொல் ..... ? ”

” நான் முன்னால் போகிறேன் டாக்டர். நீங்கள் எச்சரிக்கையோடு என்னைத் தொடருங்கள் ” சொன்ன ஜோன்ஸ் தன்னிடமிருந்த ரிவால்வரை உயர்த்திப் பிடித்துக்கொண்டு எச்சரிக்கையான பார்வையோடு மெல்ல நடக்க ஆரம்பித்தான்.

******

செம்மேடு கிராமம்

நேரம் விடியற்காலை 3.15 மணி.

கிராமம் சொற்ப தெருவிளக்குகளோடு இருட்டை வெல்ல முடியாமல் போராடிக்கொண்டிருக்க, போலீஸ் ஜீப் அந்த மீடியம் ரக டெரஸ் வீட்டுக்கு முன்பாய் போய் நின்றது. ஒட்டுமொத்த தெருவும் அசாத்தியமான நிசப்தத்தில் உறைந்து போயிருக்க இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஜீப் ட்ரைவரிடம் கேட்டார். ” இந்த வீடுதானே ? ”

” ஆமா ஸார்..... காம்பெளண்ட் கேட்ல நெம்பர் 59ன்னு போட்டிருக்கு ”

” நீ ஜீப்லயே இரு.... நான் போய் பேசிட்டு வர்றேன் ”

குணசேகரன் ஜீப்பை விட்டு இறங்கி காம்பெளண்ட் கேட்டை நெருங்கி பக்கவாட்டுச் சுவரில் பொருத்தியிருந்த அழைப்பு மணியின் பொத்தானின் மேல் கையை வைத்தார். வீட்டுக்குள்ளே ஒரு ஒலிச்சிதறல் கேட்டது.

அடுத்த சில விநாடிகளில் முன்பக்கம் இருந்த ஒரு ட்யூப் லைட் இரண்டு தடவை கண் சிமிட்டிவிட்டு பளீரென்று எரிந்து முன்புறம் இருந்த இருட்டை விரட்டியது. தொடர்ந்து வாசலின் கதவு தயக்கத்தோடு திறக்க தாடி வைத்த முகம் ஒன்று எட்டிப் பார்த்தது. அது வி.ஒ. ஞானமூர்த்திதான் என்பது குணசேகரனுக்கு உடனே பிடிபட்டது. குரல் கொடுத்தார்.

”கேட்டைத் திறங்க ஞானமூர்த்தி.... நான் இன்ஸ்பெக்டர் குணசேகரன்...”

அந்த நேரத்தில் இன்ஸ்பெக்டரை எதிர்பாராததால் அதிர்ந்து போன ஞானமூர்த்தி முழுவதுமாய் கதவைத்திறந்து கொண்டு எரிச்சலான குரலோடு வெளிப்பட்டார். பயம் கலந்த குரலில் கேட்டார்.

” இப்ப எதுக்காக என் வீட்டுக்கு வந்திருக்கீங்க ? ”

” உங்க கூட பேசணும் ”

” என்ன பேசணும்..... அதுதான் பேச வேண்டியதை போன்லயே பேசிட்டோமே ? ”

” இன்னும் கொஞ்சம் பேச வேண்டியிருக்கு ” குணசேகரன் சொல்ல அவிழும் நிலையில் இருந்த வேஷ்டியை இறுகக் கட்டிக்கொண்டு கேட் அருகே வந்து கோபமாய் பேச ஆரம்பித்தார் ஞானமூர்த்தி.

” இன்ஸ்பெக்டர்...... திஸ் ஈஸ் டூ மச்.... நான் வி.ஒ.வாய் இருந்து ரிடையரானவன். அரசு அதிகாரி. எல்லாவற்றுக்கும் மேலாய் ஒரு சீனியர் சிட்டிசன்.... இப்படித்தான் நேரம் கெட்ட நேரத்துல வந்து விசாரணை என்கிற பேர்ல டார்ச்சர் பண்றதா ? ”

” ஸாரி.....மிஸ்டர் ஞானமூர்த்தி....... இது ஒரு சாதாரண என்கொயரியாய் இருந்தா நானும் என்னோட தூக்கத்தைக் கெடுத்துகிட்டு உங்க வீட்டுக்கு வந்திருக்க மாட்டேன். ப்ளீஸ் ஒப்பன் த காம்பெளண்ட் கேட்...... நீங்க விசாரணைக்கு ஒத்துழைப்பு தரலைன்னா நான் உங்களை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டுப் போக வேண்டியிருக்கும்.... லா அண்ட் ஆர்டர், சட்டம் இதெல்லாம் உங்களுக்கும் தெரிஞ்சிருக்குன்னு நினைக்கிறேன் ”

அதிர்ச்சி விலகாமல் சில விநாடிகள் வரை குணசேகரனை முறைத்துப் பார்த்த ஞானமூர்த்தி பிறகு காம்பெளண்ட் கேட்டைத் திறந்துவிட்டார்.

குணசேகரன் உள்ளே நுழைந்தார்.

ஞானமூர்த்தி வீட்டின் முன்னறைக்கு கூட்டிப்போய் நாற்காலியைக் காட்டினார்.

” உட்கார்ங்க ” என்று சொல்லிவிட்டு தானும் எதிரில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தார்.

” என்ன பேசணும்..... ? ”

” அந்த ஈஸ்வரைப் பற்றித்தான் ”

” அவர் யார்ன்னு தெரியாதுன்னு நான்தான் சொல்லிட்டேனே ..... ? ”

” அவர் யார்ன்னு உங்களுக்கு தெரியாமே இருக்கலாம். ஆனா உங்க மனைவிக்கு அவர் யார்ன்னு தெரியும் ”

” என்ன சொல்றீங்க இன்ஸ்பெக்டர் ? ”

” இதோ பாருங்க..... மிஸ்டர் ஞானமூர்த்தி.... நான் உபயோகிக்கிற இந்த செல்போன் ஹைலி சென்ஸிபிள்..... இந்த போன் மூலமா நான் யார்கிட்டே பேசினாலும் சரி, அவங்களுக்குப் பக்கத்துல இருக்கிறவங்க எவ்வளவு மெதுவா கிசுகிசுப்பாய் பேசினாலும் எனக்குத் தெளிவாய் கேட்கும். அரைமணி நேரத்துக்கு முன்னாடி நான் உங்களுக்கு போன் பண்ணிப் பேசும் போது உங்க குரல் எனக்கு கேட்டுகிட்டு இருக்கும்போதே ஒரு பெண்ணோட குரல் கேட்டது ”

ஞானமூர்த்தி முகம் மாறினார்.

” பெண்ணோட குரலா ? ”

” எஸ்..... யாராவது ஈஸ்வரைப் பத்தி கேட்டா அப்படிப்பட்ட ஒருத்தரை தெரியாதுன்னு சொல்லிடுங்கன்னு அந்தக்குரல் கிசுகிசுப்பாய் பேசினது எனக்கு கேட்டது. அது உங்க மனைவியோட குரலாய் இருக்கலாம்ன்னு நான் நினைக்கிறேன் ..... ” என்று சொன்ன குணசேகரன் தன் கையில் இருந்த செல்போனை ஆன் செய்து அவர்க்கும் தனக்கும் நடந்த செல்போனிக் கான்வர்சேஷனை ஒலிபரப்பினார்.

அதைக்கேட்டு முடித்த ஞானமூர்த்தியின் முகம் வெகுவாய் இருண்டு போயிருந்தது. அவரையே கவனித்துக்கொண்டிருந்த குணசேகரன் மெல்லிய குரலில் கேட்டார்.

” இப்ப என்ன சொல்றீங்க ? ”

ஞானமூர்த்தி மெளனம் சாதித்தார். குணசேகரன் ஒரு புன்னகையுடன் பேச்சைத் தொடர்ந்தார்.

” ரொம்ப நேரத்துக்கு நீங்க பேசாமே இருக்க முடியாது ஞானமூர்த்தி. இந்த விசாரணைக்கு சரியான முறையில் ஒத்துழைப்பு கிடைக்காத பட்சத்தில் நாளைக்குக் காலையில் நீங்களும் உங்க மனைவியும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர வேண்டியிருக்கும். ஒருநாள் பூராவும் ஸ்டேஷனிலேயே இருக்க வேண்டியும் வரலாம்....இப்ப வாயைத் திறந்து பேசறீங்களா இல்லை நாளைக்கு இந்த கிராமமே பார்க்க ஜீப்ல ஏறி போலீஸ் ஸ்டேஷனுக்கு வரப் போறீங்களா ? ”

இன்ஸ்பெக்டர் குணசேகரன் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே வீட்டின் உள்ளேயிருந்து அந்த அம்மாள் வெளிறிப்போன முகத்தோடு வெளிப்பட்டு ஞானமூர்த்தியின் அருகே நின்று அவருடைய தோளைத் தொட்டாள். நடுக்கமான குரலில் சொன்னாள்.

” உண்மையைச் சொல்லிடுங்க. இனிமேலும் மறைக்க என்ன இருக்கு?”

ஞானமூர்த்தி பெருமூச்சொன்றை வெளியேற்றியபடி குணசேகரனை ஏறிட்டார். வார்த்தைகளை நிறுத்தி நிதானமாய் பேசினார்.

” இன்ஸ்பெக்டர் ..... இந்த செம்மேடு கிராமத்தில் நான் வில்லேஜ் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபீஸராய் இருபது வருஷமாய் ஒர்க் பண்ணி ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் ரிடையர்ட் ஆனேன். நான் சர்வீஸ்ல இருந்த போது ஈஸ்வர் ஒரு தடவை அவரோட வீட்டுக்கு என்னை வரவழைச்சுப் பேசினார். ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்ட்டுக்கு சொந்தமான ஒரு பத்து ஏக்கர் நிலம் ரிக்கார்ட்ஸ்படி இல்லாமே ஒரு பொதுப்படையான சொத்தாக இருப்பதாலும், அந்த பத்து ஏக்கர் நிலத்தை அவரோட பினாமியான ஒருத்தர்க்கு பட்டா செய்து கொடுக்கும்படி சொன்னார். நான் முதலில் முடியாதுன்னு சொன்னேன். ஆனா அவர் மேலிடத்து அதிகாரிகளோட செல்வாக்கைப் பயன்படுத்தி என்னை மிரட்டி அந்த பத்து ஏக்கர் நிலத்தை பினாமி பேர்ல எழுதி வாங்கிட்டார். ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்ட்டும் இந்த பிரச்சினையை கண்டு கொள்ளவில்லை. அந்த பத்து ஏக்கர் நிலத்துலதான் ஈஸ்வர் ஒரு ஃபார்ம் ஹவுஸைக் கட்டியிருக்கார். வருஷத்துக்கு ஒரு தடவையோ ரெண்டு தடவையோ வருவார். வாரம் பத்துநாள் தங்கியிருந்து விட்டு போயிடுவார் ”

குணசேகரன் குறுக்கிட்டு கேட்டார்.

” செம்மேட்ல அந்த ஃபாரஸ்ட் ஹவுஸ் எங்கே இருக்கு? ”

” வெள்ளியங்கிரி மலைக்குப் போகிற வழியில் பொன்னருவின்னு ஒரு இடம் வரும், அதையொட்டியிருக்கிற மண் ரோட்டில் ரெண்டு நிமிஷம் நடந்தா அந்த ஃபார்ம் ஹவுஸ் வரும். ஒரு பெரிய இரும்புக் கதவும் பத்தடி உயரத்துக்கு எழுப்பப்பட்ட காம்பெளண்ட் சுவரும் பார்வைக்குத் தட்டுப்படும். அதுதான் ஈஸ்வரோட ஃபார்ம் ஹவுஸ்.... ஆனா இந்த செம்மேடு கிராமத்து ஜனங்களுக்கு அது ஈஸ்வரோட ஃபார்ம் ஹவுஸ்ன்னு தெரியாது. ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்ட்டுக்கு சொந்தமான குவார்ட்டர்ஸ் உள்ளே இருக்குன்னு நினைச்சிட்டிருக்காங்க. நானும் யார்கிட்டேயும் ஈஸ்வரோட பேரைச் சொல்றதில்லை. ஏன்னா அவர் பண்ணின நில மோசடிக்கு நானும் ஏதோ ஒரு வகையில் தெரிந்தோ தெரியாமலோ காரணமாய் இருந்திருக்கிறேன்”

இன்ஸ்பெக்டர் குணசேகரன் நாற்காலியினின்றும் எழுந்து கொண்டார்.

” எனக்கு இந்தத் தகவல் போதும் மிஸ்டர் ஞானமூர்த்தி. ஏதாவது விபரம் தேவைப்பட்டா மறுபடியும் உங்களுக்கு போன் பண்றேன் ”

வீட்டைவிட்டு வெளியே வந்தவர் ஜீப் அருகே போய் நின்றுகொண்டு தன்னுடைய செல்போனை எடுத்து திரிபுரசுந்தரியின் எண்ணைத் தொடர்பு கொண்டார்.

முதல் தடவை லாங் ரிங் போய் லைன் அறுந்து போக இரண்டாவது தடவை அதே எண்ணை க்ளிக் செய்தார்.

உடனே ஒரு பெண்ணின் ரிக்கார்டட் வாய்ஸ் கேட்டது.

” நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபர் தற்போது தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார் ”

குணசேகரன் பதட்டமான மூன்றாவது தடவை அதே எண்ணைத் தொட்டார்.

அடுத்த விநாடியே ரிக்கார்டட் வாய்ஸ் காற்றில் சிதறியது.

தாங்கள் டயல் செய்த நபரின் செல்போன் எண்ணானது தற்போது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.

(தொடரும்)

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60,61]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X