• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

என்ன செய்யலாம்?.... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (62)

|

- ராஜேஷ்குமார்

மேலும் ஒரு தடவை திரிபுரசுந்தரிக்கு போன் செய்து அதற்கும் ஸ்விட்ச் ஆஃப் என்று ரிக்கார்டட் வாய்ஸ் வரவே, இன்ஸ்பெக்டர் குணசேகரன் பெருமூச்சொன்றை வெளியேற்றியபடி, தன்னுடைய செல்போனை அணைத்துவிட்டு, யோசனையாய் நெற்றியைத் தேய்த்தார். மொத்த உடம்பும் ஒரு பதட்டத்துக்குட்பட்டு அந்தக் குளிரான அதிகாலை வேளையிலும் வியர்த்தது.

" என்ன செய்யலாம் ? "

ஜீப்புக்கு சாய்ந்தபடி யோசித்தவரின் மூளைக்குள் ஒரு பொறி தட்டவே தன் செல்போனை மறுபடியும் உயிர்ப்பித்து ஒரு எண்ணைத் தொடர்பு கொண்டார். ரிங் போய் உடனே மறுமுனையில் கரகரப்பான ஹலோ குரல் கேட்டது. குணசேகரன் கேட்டார்.

Rajesh Kumar new series vibareethangal inge virkappadum part 62

" பொன்னையராஜபுரம் போலீஸ் ஸ்டேஷன் ? "

" ஆமா..... "

" இன்ஸ்பெக்டர் நமச்சிவாயம் இருக்காரா ? "

" நீங்க ? "

" நான் ஆலாந்துறை இன்ஸ்பெக்டர் குணசேகரன் பேசறேன் "

மறுமுனையில் பேசிக்கொண்டிருந்த நபரின் குரல் வெகு பவ்யமாயிற்று.

" ஸார்..... நான் ஸ்டேஷன் ரைட்டர் வேல்முருகன் பேசறேன். ஒரு நிமிஷம் லைன்ல இருங்க ஸார்..... பேட்ரோலிங் போய்ட்டு இப்பத்தான் எஸ்.ஐ.யும், ஸாரும் வந்தாங்க.. போனை அவர்கிட்ட தர்றேன் "

குணசேகரன் லைன்ல காத்திருக்க, அடுத்த முப்பது விநாடிகளில் மறுமுனையில் இன்ஸ்பெக்டர் நமச்சிவாயத்தின் குரல் கேட்டது.

" என்ன குணசேகரன் இந்த நேரத்துல உங்ககிட்டயிருந்து ஒரு அன்யூஸ்வல் போன். எனி அர்ஜென்ஸி ? "

" வெரி மோஸ்ட் "

" விஷயம் என்னான்னு சொல்லுங்க குணசேகரன் ? "

" கமிஷனர் மேடம் திரிபுரசுந்தரியோட வீடு உங்க ஸ்டேஷனுக்குப் பக்கத்துத் தெருவில்தானே இருக்கு ? "

" ஆமா "

" கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மேடம் எனக்கு ஒரு அவசர அசைன்மெண்ட் கொடுத்து இருந்தாங்க. அது சம்பந்தமாய் அவங்ககிட்டே பேசணும். அவங்க செல்போனுக்கு ட்ரை பண்ணினேன். ஃபர்ஸ்ட் டைம் லாங் ரிங் போய் ரெண்டாவது தடவை நாட் ரீச்சபிள்ன்னு வந்தது. மூணாவது தடவை போன் பண்ணின போது ஸ்விட்ச் ஆஃப். என்ன நடந்ததுன்னு தெரியலை. மேடத்துகிட்ட நான் ஒரு முக்கியமான விஷயத்தை கன்வே பண்ணனும். இஃப் யூ டோன்ட் மைண்ட் நீங்க சிரமம் பார்க்காமே மேடத்தோட வீட்டுக்குப் போய் அவங்களை என்கூட பேச வைக்க முடியுமா ? "

மறுமுனையில் ஒரு சில விநாடிகள் இன்ஸ்பெக்டர் நமச்சிவாயம் மெளனம் காத்துவிட்டு கேட்டார்.

" மேடம் திரிபுரசுந்தரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட விஷயம் உங்களுக்குத் தெரியுமா குணசேகரன்? "

" தெரியும்.... "

" ஏஸ் பெர் ரூல்ஸ் சஸ்பெண்ட்டான ஒரு போலீஸ் ஆபீஸர்க்கு ட்யூட்டியில் இருக்கிற யார்க்கும் அசைன்மெண்ட் தர ரூல்ஸ் இல்லையே ? "

" அது எனக்கும் தெரியும் நமச்சிவாயம். ஆனா இது கொஞ்சம் வேற மாதிரியான பிரச்சினை.... அது என்னான்னு பின்னாடி சொல்றேன். இப்ப இந்த உதவியை மட்டும் பண்ணுங்க "

" இட்ஸ் ஒகே....... குணசேகரன்.... நீங்க சரியான காரணம் இல்லாமே உதவி கேட்க மாட்டீங்க..... நான் இப்பவே மேடம் வீட்டுக்குக் கிளம்பிப் போய்ப் பார்க்கிறேன். எப்படியும் பதினைஞ்சு நிமிஷம் ஆயிடும் "

" நோ ப்ராப்ளம்.... நான் வெயிட் பண்றேன் " சொன்ன குணசேகரன் செல்போனை அணைத்துவிட்டு ஜீப்பில் ஏறி உட்கார்ந்தார்.

.....

ஜோன்ஸ் துப்பாக்கியை உயர்த்திப் பிடித்தபடி அந்த கெட்டியான இருட்டில் துணிச்சலாய் நடந்து போக, ஜான்மில்லர் தடுமாற்ற நடையோடு அவனைப்
பின் தொடர்ந்தார். பத்தடி நடப்பதற்குள் இரண்டு தடவை கீழே விழப் பார்த்தார். கிசுகிசுப்பான குரலில் கூப்பிட்டார் " ஜோன்ஸ் "

" என்ன டாக்டர் ? " ஜோன்ஸூம் குரலைத் தாழ்த்தினான்.

" இந்த இருட்டில் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. நீ எப்படி தடுமாறாமல் நடக்கிறாய் ? "

" எனக்கும் ஒன்றும் தெரியவில்லை டாக்டர். எனக்கு இது பழக்கமான இடம் என்பதால் என்னால் தடுமாறாமல் நடக்க முடிகிறது. என் தோளின் மீது கையை வைத்துக்கொண்டு வாருங்கள். உங்களால் சரளமாய் நடக்க முடியும் "

ஜான்மில்லர் தனக்கு முன்னாடி இரண்டடி தூரத்தில் சென்று கொண்டிருந்த நடந்துகொண்டிருந்த ஜோன்ஸின் தோள் மீது கையை வைத்தபடி அவன் அடியொற்றி நடந்தார். நடந்தபடியே கேட்டார்.

" நாய் ரோஜர் ஏன் குரைப்பதை நிறுத்திவிட்டது..... ? "

" தெரியவில்லை டாக்டர் ... அநேகமாய் அது தன்னுடைய மோப்ப சக்தியால் வளர்மதி ஒளிந்திருக்கும் இடத்தைத் தேடிக் கொண்டிருக்கலாம். ரோஜர் மோப்ப சக்தியை பயன்படுத்தும்போது குரைக்காமல் சமர்த்தியமாய் செயல்படும்....."

" ஆச்சர்யமான நாய்தான் "

" நாயை தீபக் குட்டியாக வாங்கியபோது அதனுடைய விலை ஒரு லட்ச ரூபாய் " சொல்லிக் கொண்டே நடந்த ஜோன்ஸ் சட்டென்று நின்றான். காலில் எதுவோ மெத்தென்று மோதியது.
என்ன ஜோன்ஸ் ? "
" டாக்டர்.... காலுக்கு ஏதோ தட்டுப்படுகிறது. நீங்கள் அப்படியே நின்று கொண்டிருங்கள். நான் மட்டும் குனிந்து பார்க்கிறேன் "

ஜோன்ஸ் அந்த அடர்த்தியான இருட்டில் அப்படியே மண்டியிட்டு உட்கார்ந்து, தன்னுடைய செல்போனின் டார்ச் வெளிச்சத்தை கீழே கவிழ்த்து கால்களுக்குத் தட்டுப்பட்ட அது எதுவென்று பார்த்தான். தண்டுவடம் உறைந்து போயிற்று.

நாய் ரோஜர் ரத்தத்தில் நனைந்து சலனமில்லாமல் ஒருக்களித்து விழுந்திருந்தது.

ஜான்மில்லர் நடுக்கத்துடன் ஜோன்ஸின் தோள்பட்டையைப் பிடித்துக்கொண்டு கிசுகிசுப்பான குரலில் சொன்னார்.

" ஜோன்ஸ்..... முதலில் செல்போனின் டார்ச் லைட்டை அணை. வளர்மதி இந்தப் பகுதியில்தான் எங்கோ ஒளிந்துகொண்டு இருக்கிறாள் என்று நினைக்கிறேன். ரோஜரை சுட்டுக்கொன்றதும் அவளாகத்தான் இருக்க வேண்டும்"

ஜான்மில்லர் சொன்ன அடுத்த விநாடியே ஜோன்ஸ் செல்போனின் டார்ச் லைட்டை அணைத்து விட்டு சுற்றும் முற்றும் பார்த்தான்.

எதுவும் புலப்படாத அளவுக்கு மை பூசிய தினுசில் இருட்டு எல்லாப் பக்கமும் தெரிய மெல்ல எழுந்து நின்றான். குரல் உதறப் பேசினான்.

" டா....டாக்டர் நாம் இப்போது என்ன செய்வது ? "

" மறுபடியும் லாப்ரட்ரிக்குள் போய் விடுவோம். விடிந்ததும் வெளியே வருவோம். இந்த இருட்டில் வளர்மதியைத் தேடுவது என்பது நாம் தற்கொலை செய்துக் கொள்வதற்கு சமம் "

" விடிவதற்குள் அவள் தப்பித்துப் போய்விட்டால்..... ? "

" அவள் தப்பித்துப்போக வாய்ப்பில்லை டாக்டர். பண்ணை வீட்டின் முன்பக்கக் கதவு மிகவும் பெரியது. இரும்பாலானது. உட்பக்கமாய் பூட்டப்பட்டு இருக்கும் பத்தடி உயர காம்பவுண்ட் சுவர். அந்த திசையில் இரண்டு நாய்கள் வேறு மோப்பம் பிடித்துக்கொண்டு திரியும். அதுவும் இல்லாமல்....... " என்று பேசிக்கொண்டு போன ஜோன்ஸ் சட்டென்று பேச்சை நிறுத்தினான்.

ஜான்மில்லர் குழப்பத்தோடு ஜோன்ஸின் தோளைப் பிடித்து அழுத்தினார்.

" என்ன.... பேச்சை நிறுத்திவிட்டாய்..... ? "

ஜோன்ஸ் கிசுகிசுத்தான். " டாக்டர்.... வளர்மதி ஒளிந்து கொண்டிருக்கிற இடம் எதுவென்று எனக்குத் தெரிந்துவிட்டது "

" எ.....எ.....எங்கே ..... ? " ஜான்மில்லர் பரபரத்தார்.

" எனக்கு இடது பக்கம்..... ஒரு ஐம்பதடி தொலைவில் ஒரு பெரிய ட்ரம் இருப்பது உங்களுக்குத் தெரிகிறதா? அது செடிகளுக்காக உரம் போட்டு வைத்திருக்கும் ட்ரம்".

ஜான்மில்லர் பார்த்துவிட்டு " இ....இ.....இல்லையே எ....எ....எனக்குத் தெரியவில்லையே...... " என்றார்.

" உங்களுக்கு இந்த இடம் பழக்கம் இல்லாத காரணத்தால் அந்த ட்ரம் இருப்பது தெரியவில்லை.... அந்த ட்ரம்முக்கு பின்புறம் அவள் இருப்பதற்கு அடையாளமாக அந்த இடத்தில் அசைவுகள் தெரிகிறது "

ஜான்மில்லர் மிரண்டு போன விழிகளோடு ஜோன்ஸ் சுட்டிக்காட்டிய இடத்தைப் பார்த்தார். பார்வையை உன்னிப்பாக்கிய போது சற்றுத் தொலைவில் ஒரு மங்கலான அவுட் லைன் போல் ட்ரம் ஒன்று தெரிவதும் அது லேசாய் அசைவதும் புலப்பட்டது.

" ஜோன்ஸ்.... இப்போது எனக்கு அந்த ட்ரம் தெரிகிறது. அதற்குப் பின்னால்தான் அவள் இருக்கிறாள் என்று நினைக்கிறேன். அந்த இடத்தை நோக்கி நாம் ஒரே நேரத்தில் சுட ஆரம்பித்தால் அவளால் தப்பிக்கவே முடியாது"

" யூ ஆர் கரெக்ட் டாக்டர் " என்று சொன்ன ஜோன்ஸ் துப்பாக்கியை உயர்த்திப் பிடித்துக்கொண்டு மெல்ல அந்த ட்ரமை நோக்கி நகர, ஜான்மில்லரும் கையில் ரிவால்வரோடு அவனைப் பின்தொடர்ந்தார்.

******
இன்ஸ்பெக்டர் குணசேகரன் தவிப்போடு இருபது நிமிஷத்தைக் கரைத்திருந்த போது செல்போன் ஒலித்தது.

மறுமுனையில் நமச்சிவாயம் கூப்பிட்டுக்கொண்டிருந்தார். செல்போனை எடுத்துப் பேசினார் குணசேகரன்.

" சொல்லுங்க நமச்சிவாயம்.... மேடத்தைப் பார்த்து பேசினீங்களா? "

" ஸாரி குணசேகரன்..... மேடம் திரிபுரசுந்தரி இப்ப வீட்ல இல்லை "

" தென் ? "

" ஹாஸ்பிடல்ல அட்மிட்டாகியிருக்காங்க "

குணசேகரன் அதிர்ந்து போனவராய் நிமிர்ந்தார்.

" என்னாச்சு மேடத்துக்கு ? "

" ஹைபர் டென்ஷன்..... பி.பி. "சூட் அப்"பாகி மயக்கம் போட்டு விழுந்திருக்காங்க. வாட்ச்மேன் சத்தம் கேட்டு போய்ப் பார்த்திருக்கார். மேடம் சுய நினைவு இல்லாமே இருக்கவும் பக்கத்து வீட்டுக்கு தகவல் கொடுத்திருக்கார். பக்கத்து வீட்ல இருந்த லாயர் ஒருத்தர் ஆம்புலன்ஸீக்கு போன் பண்ணி வரவழைச்சு..... "

" மேடம்.... இப்ப எந்த ஹாஸ்பிடல்ல இருக்காங்க? "

" ஆர்.எஸ்.புரத்தில் இருக்கிற பாலாஜி நர்ஸிங் ஹோம். மேடத்தோட செல்போன் வீட்லதான் இருந்தது. ஆனா மேஜைக்கு கீழே விழுந்து கிடந்தது. நீங்க மேடத்துக்கு போன் பண்ணின நேரத்துலதான் அவங்களுக்கு பி.பி. "சூட் அப்" பாகியிருக்கும்ன்னு நினைக்கிறேன். லாங் ரிங் போன போது அவங்க செல்போனை அட்டெண்ட் பண்ண முயற்சி செஞ்சிருக்கலாம். முடியாமல் போகவே போன் கீழே விழுந்து டி ஆக்டிவேட் ஸ்டேஜூக்குப் போயிருக்கலாம். அதான் உங்களுக்கு நாட் ரீச்சபிள், ஸ்விட்ச் ஆப் ன்னு ரெக்கார்டட் வாய்ஸ் கேட்டிருக்கும்ன்னு நான் நினைக்கிறேன் "

" மே.....பி..... நமச்சிவாயம் " என்று சொன்ன குணசேகரன் மெல்லிய குரலில் கேட்டார்.

" பாலாஜி நர்ஸிங் ஹோமில் அட்மிட்டாகியிருக்கிற மேடம் திரிபுரசுந்தரி இப்ப பேசக்கூடிய நிலைமையில் சுயஉணர்வோடு இருக்காங்களா ? "

"சூட் அப்" பான பி.பி. இன்னமும் கண்ட்ரோலுக்கு வரலைன்னு டாக்டர் சொல்லியிருக்கார். எதுக்கும் விடிகிற வரைக்கும் வெயிட் பண்ணுங்க குணசேகரன். மேடம் சஸ்பென்ஷன்ல இருக்கும்போது நீங்க அவங்க குடுத்த அசைன்மெண்ட்டுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். பின்னாடி ஏதாவது பிரச்சினைகள் வந்தா யூ ஹேவ் டூ ஆன்ஸர் ஃபார் அன்னெசஸரி கொஸ்டியன்ஸ். நம்ம டிபார்ட்மெண்ட்ல கறுப்பு ஆடுகளுக்கா பஞ்சம் "

" நீங்க சொல்றதும் சரிதான்..... மேடத்துக்கு சுயஉணர்வு வந்து அவங்க எதுமாதிரியான இன்ஸ்ட்ரக்சன்ஸ் கொடுக்கறாங்கன்னு பார்த்துட்டு செயல்படறதுதான் உத்தமம். நான் வெயிட் பண்றேன்" சொன்ன குணசேகரன் செல்போனை அணைத்துவிட்டு ஒரு பெருமூச்சோடு ஜீப்பின் இருக்கைக்குச் சாய்ந்தார்.

******

டாக்டர் ஜான்மில்லரும், ஜோன்ஸீம் இருட்டில் கரைந்து அடிமேல் அடி எடுத்து வைத்து சற்றுத் தொலைவில் தெரிந்த ட்ரம்மை உன்னிப்பாக பார்த்தபடி நடந்தார்கள்.

ஜோன்ஸின் காதருகே மெல்ல கிசுகிசுத்தார் டாக்டர்.

" ஜோன்ஸ்..... எனக்கு இப்போது அந்த ட்ரம் சரியாய் தெரியவில்லை... "

" எனக்கு ஒரளவுக்கு தெரிகிறது டாக்டர்..... நீங்கள் எனக்குப் பின்னாடியே என் தோள் மீது கை வைத்தபடியே வாருங்கள். நான் சுடு என்று சொல்லும்போது சுடுங்கள் "

ஜோன்ஸ் சொல்லிக்கொண்டே அங்குலம் அங்குலமாய் நடந்து கொண்டிருக்க ஜான்மில்லர் மேலும் சில அடிகள் நடப்பதற்குள் சட்டென்று நின்றார்.

ஜோன்ஸின் தோள்பட்டையை இறுக்கிப் பிடித்தார். குரல் பிசிறடித்தது.

" ஜோ....ஜோ....ஜோன்ஸ் "

" என்ன டாக்டர் ? "

" எ....எ....எனக்குப் பின்னால் காலடிச் சத்தம் கேட்கிறது. யாரோ நம்மை ஃபாலோ செய்கிறார்கள் "

" அது பிரமையாய் இருக்கும் டாக்டர் "

" இல்லை ஜோன்ஸ்.... உண்மை. எனக்கு சத்தம் கேட்கிறது "

நம்பிக்கையில்லாமல் ஜோன்ஸ் நின்று திரும்பிப் பார்த்தான். ஒரே ஒரு விநாடி பார்வைக்குப் புலப்பட்ட அந்த உருவம் அடுத்த விநாடியே இருட்டில் கரைந்து மறைந்தது.

(தொடரும்)

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X