• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

நீங்கள் சொன்னது உண்மைதான்.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (63)

|

- ராஜேஷ்குமார்

ஜோன்ஸ் டாக்டர் ஜான்மில்லரிடம் திரும்பினான். பயம் தடவப்பட்ட வார்த்தைகள் அவனுடைய வாயிலிருந்து கிசுகிசுப்பாய் உதிர்ந்தன.

" டா.....டா..... டாக்டர்......... நீங்கள் சொன்னது உண்மைதான். யாரோ நம்மைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். பின்தொடர்ந்து வந்து கொண்டும் இருக்கிறார்கள். மரங்களின் அடர்த்தி காரணமாய் இந்தப் பகுதியில் இருட்டு அதிகமாய் இருப்பதால் நம்மால் அந்த உருவத்தைப் பார்க்க முடியவில்லையென்று நினைக்கிறேன் "

ஜான்மில்லரும் குரலைத் தாழ்த்தினார். " அது ஏன் வளர்மதியாய் இருக்கக் கூடாது...... ? "

Rajesh Kumar new series vibareethangal inge virkappadum part 63

" நான் அப்படி நினைக்கவில்லை டாக்டர். ஒரு பெண்ணுக்கு அவ்வளவு தைரியம் இருக்க வாய்ப்பில்லை.... அது தவிர.... "

ஜோன்ஸ் மேற்கொண்டு பேசும் முன்பு பின்பக்க இருட்டிலிருந்து அந்தப் பெண் குரல் கேட்டது.

" நான் வளர்மதிதான் ஜோன்ஸ்..... டாக்டர் சொல்வது சரிதான் "

ஜோன்ஸூம், ஜான்மில்லரும் திடுக்கிட்டுப் போனவர்களாய் திரும்பிப் பார்த்தார்கள்.

இருட்டில் எதுவும் புலப்படவில்லை. குரல் மட்டும் தொடர்ந்து கேட்டது.

" ஜோன்ஸ்..... இந்த இருட்டு உனக்கும் டாக்டருக்கும் பாதகம். எனக்கு சாதகம் எப்படீன்னு கேட்கறியா.... ? உங்க ரெண்டு பேரையும் இந்த கெட்டியான இருட்டிலும் தெளிவாய்ப் பார்க்க முடியுது. நான் இப்படி சொன்னதுமே என்கிட்டே ஏதோ விசேஷமான நைட் பைனாக்குலர் இருக்குன்னு நினைச்சுடாதே..... வெறும் கண்ணாலத்தான் பார்த்துட்டிருக்கேன் "

வளர்மதி பேசிக்கொண்டிருக்கும்போதே ஜோன்ஸ் குரல் வந்த திசையை நோக்கி துப்பாக்கியை எச்சரிக்கையாய் பிடித்தபடி முன்னால் இரண்டடி எடுத்து வைத்தான்.

வளர்மதி உடனே டாக்டர் ஜான்மில்லர்க்கும் தான் பேசுவது புரிய வேண்டுமென்பதற்காக ஆங்கிலத்தில் பேசினாள்.

" ஜோன்ஸ்.....நீயும் சரி உன்னோடு இருக்கின்ற டாக்டரும் சரி இப்போது நின்று கொண்டிருக்கிற இடத்தை விட்டு ஒரு அடி அசைந்தாலும் அடுத்த விநாடியே உங்கள் ரெண்டு பேர்க்கும் நாய் ரோஜர், மாதவனுக்கு என்ன நிலைமை ஏற்பட்டதோ அதே நிலைமைதான் ஏற்படும். அதாவது உயிரோடு இருக்க மாட்டீர்கள். ஏனென்றால் இந்த அடர்த்தியான இருட்டிலேயும் தெளிவாய் குறி பார்த்து என்னால் சுட முடியும். இதை நான் ஏதோ உங்களைப் பயமுறுத்துவதற்காக சொல்கிற பொய் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். என்னுடைய பார்வைத்திறன் இந்த நிமிடம் எப்படியிருக்கிறது என்று சொல்லட்டுமா? எனக்கும் உங்களுக்கும் இடையே இருக்கிற தூரம் இப்போது ஐம்பது அடி. ஒரு பகல் நேரத்தில் பார்த்துக்கொண்டு இருப்பது போல் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் "
வளர்மதி சொல்வதைக் கேட்டு ஜோன்ஸூம், ஜான்மில்லரும் மூச்சைக்கூட பலமாய் விடாமல் அப்படியே நின்று கொண்டிருக்க வளர்மதி பேச்சைத் தொடர்ந்தாள்.

" ஜோன்ஸ்..... நீ இப்போது அணிந்திருக்கும் சட்டை வெளிர் சிவப்பில் கோடுகள் போட்ட மஞ்சள் நிறம். நீல நிறத்தில் பேண்ட். உன் வலது கையில் உயர்த்திப் பிடிக்கப்பட்ட துப்பாக்கி தெரிகிறது. டாக்டர் அணிந்திருக்கும் ஒவர் கோட்டின் நிறம் பிரவுன். உள்ளே இருக்கும் சட்டையின் நிறம் பச்சை. அவருடைய வலது கை மணிக்கட்டில் வாட்ச்சும் இடது கையில் துப்பாக்கியும் தெரிகிறது. நான் சொல்வது சரியா இல்லையா ? "

வளர்மதி கேட்க ஜோன்ஸூம், டாக்டரும் அதிர்ந்து போனவர்களாய் மெளனம் சாதித்தார்கள்.

குரலை உயர்த்தினாள் வளர்மதி.

" என்ன பேச்சையே காணோம்..... நான் சொன்னது சரியா தப்பா..... ? "

" ச.....ச......சரி..... "

" இப்போது நீங்கள் எப்படிப்பட்ட ஆபத்தில் இருக்கிறீர்கள் என்பது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இனிமேல் நான் என்ன சொன்னாலும் நீங்கள் கேட்டேயாக வேண்டிய கட்டாயம். என்னுடைய முதல் கட்டளை இது. உங்களிடம் இருக்கும் துப்பாக்கிகளை பக்கத்தில் இருக்கும் அந்தப் பாறைத்திட்டுக்குப் போய் அதன் மேல் வைத்துவிடுங்கள் "

இருவரும் அசையாமல் அப்படியே நின்றார்கள். சில விநாடி மெளனத்துக்குப் பிறகு வளர்மதி சற்றே கோபமாய் குரல் கொடுத்தாள்.

" என்ன நான் சொன்னது உங்களின் காதுகளில் விழவில்லையா...... ? இன்னும் இரண்டு நிமிஷம் அவகாசம் தருகிறேன். அதற்குள் உங்கள் கைகளில் இருக்கும் துப்பாக்கிகள் அந்தப் பாறைத்திட்டின் மேல் வைக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் என் கையில் இருக்கும் இந்த ஜெல் புல்லட் பிஸ்டலுக்கு வேலையைத் தரவேண்டியிருக்கும். இந்த ஜெல் புல்லட் பிஸ்டல் பற்றி உங்கள் இரண்டு பேர்க்கும் தெரிய நியாயமில்லை. அதைப்பற்றியும் இப்போது சொல்லிவிடுகிறேன். இந்த ஜெல் புல்லட் பிஸ்டலின் பெயர் லிட்டில் ஸ்பேரோ. நமது உள்ளங்கையின் பரப்புக்குள் அடங்கிவிடக்கூடிய அளவுக்கு மிகவும் சிறிதான ஃபோல்டபிள் பிஸ்டல் இது. தனியாக இருக்கும் பெண்களின் பாதுகாப்புக்காகவே ஜெர்மனி நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு அதி நவீன பிஸ்டல். இந்த லிட்டில் ஸ்பேரோ பிஸ்டல் எனக்கு எப்படி கிடைத்தது என்று நீங்கள் யோசிக்கலாம். நீங்! ள் நினைப்பது போல் எனக்கு இந்த பிஸ்டல் இந்த ஃபார்ம் ஹவுஸில் கிடைத்தது இல்லை. இது எப்போதுமே என்னிடம் இருக்கும் பிஸ்டல். நான் என்னுடைய வீட்டைவிட்டு வெளியே வரும்பொழுதெல்லாம் என் தலையின் அடர்த்தியான தலைமுடி கொண்டைக்குள் இந்த ஜெல் புல்லட் பிஸ்டல் தன்னுடைய உலோக உறுப்புகளையெல்லாம் ஒரு ஆமையைப்போல் உள்ளடக்கிக்கொண்டு சம்மணம் போட்டு உட்கார்ந்திருக்கும். எனக்கு ஏதாவது ஆபத்து என்று வந்துவிட்டால் அடுத்த இரண்டே விநாடிகளில் அதை என் தலைமுடியின் கொண்டையிலிருந்து எடுத்து எதிரியை சுட்டுவிட முடியும் "

வளர்மதி சொன்னதைக்கேட்டு ஜான்மில்லரும், ஜோன்ஸும் இரு சிலைகளாய் இருட்டில் அப்படியே நின்றிருக்க, அவள் தொடர்ந்தாள்.

" இப்போது உங்களுக்கு இன்னொரு சந்தேகமும் இருக்கலாம். மயக்க மருந்தால் சுவாசிக்கப்பட்ட நான் எப்படி அந்த உணர்வற்ற மயக்க நிலையிலிருந்து அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் மீண்டேன். எப்படி இப்போது இவ்வளவு தெளிவாய் பேசிக்கொண்டிருக்கிறேன் என்கிற இந்த இரண்டு கேள்விகள் உங்களுடைய மனசுக்குள் எழுந்து ஆச்சர்யப்படுத்திக் கொண்டு இருக்கலாம். நான் கடந்த ஐந்து வருஷ காலமாய் பிரக்ஞை யோகா செய்து வருகிறேன். இது ஒரு உளவியல் ரீதியான யோகா. இதற்கு இன்னொரு பெயர் தந்திரா மூச்சு விபாசனா தியானா என்றும் சொல்லலாம். இதன் அடிப்படை நம் மூச்சை நாமே கவனித்து நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது. மாதவன் மயக்க மருந்தைப் பயன்படுத்தி துணியால் என்னுடைய முகத்தைப் மூடியபோதே நான் எச்சரிக்கையாகி பிரக்ஞை யோகா மூலம் என்னுடைய உள்ளிழுக்கும் மூச்சுத்திறனைக் கட்டுப்படுத்தினேன். ஆன! ால் அதையும் மீறி சிறது மயக்க மருந்து உள்ளே போய்விட்டது. குறைவான மயக்க மருந்து ரத்தத்தில் கலந்ததின் காரணமாய் நான் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் சுய உணர்வுக்கு வந்துவிட்டேன். இருந்தாலும் நான் கற்றிருந்த விபாசா தியானம் காரணமாய் மூச்சை என் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு சுய உணர்வு இல்லாததுபோல் ஒரு மரக்கட்டைபோல் கிடந்தேன். உங்களையெல்லாம் மடக்குவதற்கு ஒரு சரியான நேரத்தையும் எதிர்பார்த்து காத்திருந்தேன். இப்போது அந்த நேரம் வந்துவிட்டது. இதே விநாடி உங்கள் இரண்டு பேரையும் இந்த ஜெல் புல்லட் பிஸ்டலால் அந்த நாயைச் சுட்டுத்தள்ளியது போல் என்னால் சுட்டுத் தள்ள முடியும். ஆனால் சில்பாவும் நர்மதாவும் எங்கே இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரிய வேண்டும். அதற்கு முன்னால் நீங்கள் இருவரும் உங்களிடம் உள்ள துப்பாக்கிகளையும், செல்போனைகளையும் அந்தப் பாறை! ின் திட்டின் மேல் வைக்க வேண்டும். உங்களுக்கு இனி முப்பது விநாடிகள் மட்டுமே அவகாசம். முப்பதாவது விநாடி முடியும்போது செல்போன்களும், துப்பாக்கிகளும் அந்தப் பாறைத்திட்டில் இருக்க வேண்டும் "

வளர்மதி சொல்லிவிட்டு நிதானமான குரலில் ஒன்று, இரண்டு என்று விநாடிகளை எண்ண ஆரம்பித்தாள்.

ஜோன்ஸ் ஜான்மில்லரிடம் மெதுவான குரலில் பேசினான்.

" டாக்டர்.... இப்போது என்ன செய்யலாம் ? "

" உன் பார்வைக்கு அவள் தட்டுப்படுகிறாளா ? "

" இல்லை..... "

" அவள் எந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறாள் என்பதையாவது உன்னால் அனுமானிக்க முடிகிறதா ? "

" ஒரளவுக்கு "

" அந்த இடத்தைப் பார்த்து சரமாரியாய் சுடு. ஒரு தோட்டாவது அவள் உடம்புக்குள் பாய வாய்ப்பு இருக்கிறது "

ஜோன்ஸ் வளர்மதியின் குரல் வந்த திசையை உற்றுப்பார்த்தபடி துப்பாக்கியை திருப்பினான்.

வளர்மதி விநாடிகளை எண்ணிக்கொண்டிருந்தாள். " பதினாறு, பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது, இருபது "

" இனியும் தாமதிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் ஜோன்ஸ் வளர்மதி இந்த இடத்தில்தான் இருப்பாள் என்பதை குத்துமதிப்பாய் கணக்கிட்டு துப்பாக்கியின் டிரிக்கரை சுண்டினான்.

தோட்டாக்கள் அடர்த்தியான இருட்டையும் கனத்த நிசப்தத்தையும் அறுத்துக் கொண்டு பாய்ந்தன. எங்கோ போய் எதையோ துளைத்துவிட்டு மெளனமாயின.

வளர்மதி சிரித்தாள்.

" முட்டாள்..... குறி பார்த்து சுடுவது என்றால் இப்படி சுட வேண்டும் "

அடுத்த விநாடியே ஏதோ ஒரு கதவைச் சாத்தியது போல் டப் என்று ஒரு சத்தம். ஜோன்ஸின் நடுமார்பில் ஏதோ ஒன்று வலியோடு ஊடுருவிக்கொண்டு போக, அவன் நிற்க முடியாமல் மண்டியிட்டு உட்கார்ந்து பின் ஒரு பக்கமாய் சரிந்தான். ரத்த நாளங்கள் நெருப்பு ஆறுகளாய் மாறிவிட்ட தினுசில் உடம்பு முழுவதும் தீப்பற்றிக்கொண்டு எரிவதைப் போன்ற உணர்ச்சி கண்கள் இருட்டிக் கொண்டு போக, தோட்டா பாய்ந்த இடத்தில் இடது கையை வைத்தான் ஜோன்ஸ். வெதுவெதுப்பான ரத்தம் உள்ளங்கையில் நிரம்பி துளித்துளியாய் கீழே சொட்டியது.

ஜான்மில்லர் அரண்டு போனவராய் கீழே குனிந்து ஜோன்ஸை தூக்க முயல வளர்மதியின் குரல் இருட்டிலிருந்து கேட்டது.

" அவனை விட்டுவிடுங்கள் டாக்டர்..... இறந்து போகப் போகிறவனைக் காப்பாற்ற முயற்சி செய்யாதீர்கள். நீங்களாவது இனிமேல் உயிர் பிழைக்க வேண்டுமென்று ஆசைப்பட்டால் நான் சொல்லும் கட்டளை வார்த்தைகளுக்கு கீழ்ப்படியுங்கள். இல்லாவிட்டால் ஜோன்ஸீக்கு துணையாய் நீங்களும் மரண யாத்திரை மேற்கொள்ள வேண்டியிருக்கும் "

" நோ..... நோ....... டோண்ட் ஷீட் மீ..... நீ சொன்னபடி நான் நடந்து கொள்கிறேன் " ஜான்மில்லர் எதிரே கொட்டிக்கிடந்த இருட்டைப் பார்த்து பயத்துடன் கத்தினார்.

வளர்மதி சிரித்தாள்.

" இது புத்திசாலித்தனம். முதலில் உங்களிடம் இருக்கும் துப்பாக்கியையும், செல்போனையும் அந்தப் பாறைத்திட்டின் மீது கொண்டு போய் வையுங்கள் "

" எ....எ.....என்னிடம் செல்போன் இல்லை..... துப்பாக்கி மட்டுமே... அதை வைத்து விடுகிறேன் "

" உங்கள் சட்டையின் பாக்கெட்டில் ஏதோ கறுப்பு நிறத்தில் நீட்டியபடி தெரிகிறதே அது என்ன ? "

" அ....அ......அது என்னுடைய மூக்குக்கண்ணாடி "

" அதையும் எடுத்து வையுங்கள் "

" இதோ,..... "

" ஒரு நிமிஷம்.... டாக்டர் "

" எ...எ....என்ன ? "

" ஜோன்ஸிடம் இருக்கும் அவனுடைய செல்போனையும், துப்பாக்கியையும் சேர்த்து எடுத்து வையுங்கள் "

டாக்டர் ஜான்மில்லர் பதட்டத்தோடு செயல்பட ஆரம்பித்தார். ஜோன்ஸிடம் இருந்த செல்போன், துப்பாக்கியையும் தன்னிடம் இருந்த உறையுடன் கூடிய மூக்குக்கண்ணாடியையும், பிஸ்டலையும் எடுத்துக்கொண்டு இருட்டில் தடுமாற்றமாய் நடந்து ஒரு அவுட்லைன் போல் தெரிந்த அந்தப் பாறைத்திட்டின் மேல் கொண்டு போய் வைத்தார்.
மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் ஜான்மில்லர் நின்று கொண்டிருக்கும்போதே அவர்க்குப் பின்னாலிருந்து வளர்மதியின் குரல் கேட்டது.

" இந்த வேலையை ஜோன்ஸ் செய்திருந்தால் அவன் உயிரை விட்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. ஒரு டாக்டருக்குத்தான் உயிரின் மதிப்பு தெரியும். ஒ.கே. டாக்டர் இனி நாம அடுத்த கட்டத்துக்குப் போவோம்.

ஈஸ்வரால் கடத்தப்பட்ட சில்பாவும், நர்மதாவும் இப்போது எங்கே இருக்கிறார்கள் ? "

" லேப்பில்...... "

" உங்களுக்கு இடதுகைப் பக்கம் நூறடி தூரத்தில் செவ்வகமாய் ஒரு கட்டிடம் என் பார்வைக்குத் தெரிகிறது. அதுதானே நீங்கள் சொல்லும் லேப் ? "

" ஆமாம்..... "

" நீங்கள் முன்னால் போங்கள்.... நான் உங்கள் பின்னாலேயே வருகிறேன் "

" இருட்டில் எனக்கு எதுவும் சரியாய் தெரியவில்லை "

" இடதுபுறம் திரும்பி நேராய் நடங்கள். பாதை மேடு பள்ளம் இல்லாமல் சீராய் இருக்கிறது. நீங்கள் கீழே விழுந்து விடமாட்டீர்கள் "

ஜான்மில்லர் இருட்டில் கைகளை நீட்டியபடி மெதுவாய் நடக்க ஆரம்பிக்க, வளர்மதி பாறைத்திட்டை வேகமாய் நெருங்கி அதன் மீது வைக்கப்பட்டிருக்க துப்பாக்கிகளையும், செல்போன், மூக்குக்கண்ணாடியையும், எடுத்துகொண்டு சற்றுத்தொலைவில் தடுமாற்றமாய் போய்க்கொண்டிருந்த டாக்டரை நோக்கிப் போனாள். எச்சரிக்கையாய் பின்தொடர்ந்தாள். அதே விநாடி -

அவள் கையில் இருந்த ஜோன்ஸின் செல்போன் டயல்டோனை காற்றில் சிதறவிட்டது.

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X