• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எனக்கு ஒரு உண்மை தெரிய வேண்டும்.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (65)

|

- ராஜேஷ்குமார்

வளர்மதி கண்ணிமைக்கிற நேரத்திற்குள் நிலைமையைப் புரிந்து கொண்டு, நாயின் அசுரத்தனமான பாய்ச்சலுக்கு தன்னுடைய உடம்பு கிடைத்துவிடாமல் இருக்க மின்னல் வேகத்தில் கீழே உருண்டாள். அருகேயிருந்த அடர்த்தியான புதரின் மறைவுக்குள் நுழைந்து அடுத்த விநாடியே காணாமல் போனாள்.
வளர்மதியைத் தவறவிட்ட நாயின் கோபமான பார்வை இப்போது ஜான்மில்லரின் மேல் பதிந்தது.

ஜான்மில்லர் அரண்டு போனவராய் சற்றே பின்வாங்கி உட்கார்ந்த நிலையில் நகர, அவருடைய இடதுகையின் விரல்களுக்கு வளர்மதி தவறவிட்ட அந்தத் துப்பாக்கி கிடைத்தது. அந்த ஒரு இக்கட்டான வேளையிலும் " தேங்க் காட் " என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டவர் அந்தத் துப்பாக்கியை நாயை நோக்கித் திருப்பினார்.
தரையை விட்டு நான்கடி உயரத்தில் எம்பி தன்னை நோக்கிப் பாய்ந்த நாயை இருட்டில் உன்னிப்பாய் குறி பார்த்து டிரிக்கரை அழுத்தினார்.

Rajesh Kumar new series vibareethangal inge virkappadum part 65

" க்ளிக் " என்று ஒரு சத்தம் கேட்டதே தவிர தோட்டாவை பிரசவிக்காமல் துப்பாக்கி மெளனம் சாதித்தது.
ஜான்மில்லர் உடம்பு முழுவதும் நடுங்கிப்போனவராய் தன்மீது வந்து விழுந்த நாயை எட்டி உதைத்தார். தள்ளிப் போய் விழுந்த நாய் மறுபடியும் பாய்ந்து வர துப்பாக்கியின் டிரிக்கரை மீண்டும் சுண்டினார். தோட்டாக்கள் இல்லாத அந்தத் துப்பாக்கி கனத்த நிசப்தத்தை அனுஷ்டிக்க, நாயிடம் இருந்து தப்பிப்பதற்காக ஜான்மில்லர் எழுந்து அந்த இருட்டில் இலக்கில்லாமல ஒட ஆரம்பித்தார்.

அசுரத்தனமான ஒட்டம்.

பத்து விநாடி ஒடியிருப்பார்.

" டப் " என்று ஒரு சத்தம்.

நாய் விநோதமாய் கத்திக்கொண்டே ஒரு மூட்டை மாதிரி " பொத் " என்று விழுந்து ஒரு ஈனக்குரலை எழுப்பிவிட்டு அப்படியே சுருண்டு ஒரு பக்கமாய் சரிந்தது.

வெகுவாய் மூச்சிரைத்து ஒடிக்கொண்டிருந்த ஜான்மில்லர் நின்று திரும்பிப் பார்த்தார். நாய் சலனமில்லாமல் கிடந்தது. வியர்த்தபடி யோசித்தார்.

" நாய்க்கு என்னவாயிற்று ...... ? "

குழப்பமாய் நின்று ஜான்மில்லர் யோசித்துக்கொண்டிருக்கும்போதே அவர்க்கு இடது பக்கமிருந்து வளர்மதியின் குரல் கேட்டது.

" இனி..... அந்த நாயைப்பற்றி கவலைப்படாதீரகள் டாக்டர்..... அது கொஞ்சம் கொஞ்சமாய் உயிரை விட்டுக்கொண்டு இருக்கிறது. இந்த ஜெல் புல்லட் பிஸ்டலுக்கு இது இரண்டாவது பலி. இன்னொரு நாய் நம்மை மோப்பம் பிடிப்பதற்குள் நாம் லேப்ரட்ரிக்குள் உள்ளே போய்விடுவது நல்லது. சீக்கிரம் லேப்பின் மேக்னடிக் லாக்கை ஒப்பன் செய்யுங்கள் "

ஜான்மில்லர் சற்றுத் தொலைவில் துடித்துக்கொண்டிருந்த நாயின் உடம்பைப் பார்த்துக்கொண்டே வளர்மதியை நெருங்கினார்.

" எ...எ....எனக்கு ஒரு உண்மை தெரிய வேண்டும் "

" என்ன உண்மை..... ? நீங்கள் என்னிடம் எதைக் கேட்பதாக இருந்தாலும் ஐந்தடி தள்ளி நின்று கேளுங்கள் "

ஜான்மில்லர் சற்றே பின்னுக்கு நகர்ந்து நின்று கொண்டு தன் கையில் வைத்து இருந்த துப்பாக்கியைக் காட்டியபடி பதட்டமான குரலில் கேட்டார்.

" இது என்னுடைய துப்பாக்கி. இதில் ஆறு தோட்டாக்களை நிரப்பி வைத்திருந்தேன். நாய் உன் மீது பாய்ந்தபோது என்னிடமிருந்து நீ பறிமுதல் செய்யப்பட்ட இந்த துப்பாக்கி எதிர்பாராதவிதமாய் நழுவி எனக்குப் பக்கத்தில் வந்து விழுந்தது. நான் நாயைச் சுட்டுத்தள்ளுவதற்காக ட்ரிக்கரை அழுத்தினேன். ஆனால் புல்லட் பேரலில் தோட்டாக்கள் இல்லை. துப்பாக்கியில் இருந்த அந்த தோட்டாக்கள் என்னவாயிற்று ...... ? "

வளர்மதி மெல்லச் சிரித்தாள்.

" ஸாரி டாக்டர்...... உங்களுடைய துப்பாக்கியும் சரி, ஜோன்ஸின் துப்பாக்கியும் என்னுடைய கைக்கு வந்த அடுத்த நிமிஷமே இரண்டு துப்பாக்கிகளின் புல்லட் நிரம்பிய வயிறுகளை சுத்தம் வைத்துவிட்டேன். நான் எப்போதுமே தற்காப்பு விஷயத்தில் ஜாக்கிரதையாய் இருப்பவள். போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரி எனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்களில் இது ஒரு முக்கியமான பாடம்...... இப்போது என் கையில் இருக்கும் இந்த ஜெல் புல்லட் பிஸ்டலுக்கு மட்டுமே உயிர் இருக்கிறது "

Rajesh Kumar new series vibareethangal inge virkappadum part 65

ஜான்மில்லர் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை இருட்டின் அடர்த்தியில் வீசிவிட்டு இறுகிப்போன குரலில் சொன்னார்.

" யூ ஆர் வெரி ப்ரில்லியண்ட் "

" ஸாரி..... டாக்டர்...... எனக்கு வேண்டியது உங்களுடைய பாராட்டல்ல. எனக்கு லேப்ரட்ரி அன்லாக் செய்யப்பட வேண்டும். நீங்கள் முடியாது என்று சொல்லியோ, தெரியாது என்று சொல்லியோ தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் ரோந்து சுற்றிக்கொண்டிருக்கும் மற்ற நாய்கள் எந்த விநாடியும் இங்கே வந்து விடலாம். என் கையில் ஜெல் தோட்டாக்களோடு கூடிய துப்பாக்கி இருப்பதால் என்னால் நாய்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். ஆனால் உங்களால் தப்பிக்க முடியாது. நான் உங்களைக் காப்பாற்றவும் முயற்சி எடுத்துக் கொள்ள மாட்டேன் "

வளர்மதியின் பேச்சைக் கேட்டு அதிர்ந்துபோன ஜான்மில்லர் பதில் ஒன்றும் பேசாமல் அப்படியே நின்றிருக்க வளர்மதி சற்றே குரலை உயர்த்தினாள்.

" யோசிப்பதற்கான நேரம் இதுவல்ல டாக்டர். சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாருங்கள். இரண்டு மூன்று நாய்கள் ஒரே நேரத்தில் வந்துவிட்டால் உங்களால் அவைகளை சமாளிக்க முடியாது. நான் ஏற்கனவே சொன்னது போல் இந்த இருட்டில் என்னால் எல்லாவற்றையும் பார்க்க முடியும். ஆனால் உங்களால் பார்க்க முடியாது "

ஜான்மில்லர் பெருமூச்சுவிட்டார். " நீ என்ன கார்னர் செய்துவிட்டாய். இனிமேலும் நான் எதுவும் தெரியாதது போல் நடிக்க முடியாது. லாப்ரட்ரியை அன்லாக் செய்கிறேன். எல்லா உண்மைகளையும் சொல்லி விடுகிறேன் "

" இப்போதுதான் புத்திசாலித்தனமான வார்த்தைகளை பேசியிருக்கிறீர்கள். லேப் இருக்கும் திசைப்பக்கமாய் நடங்கள். நான் உங்களுக்குப் பின்னாலேயே வருகிறேன் "

ஜான்மில்லர் இருட்டில் தட்டுத்தடுமாறி நடக்க ஆரம்பித்துவிட வளர்மதி துப்பாக்கியை எச்சரிக்கையோடு வைத்தபடி பின் தொடர்ந்தாள்.

******

விடியற்காலை 3.20 மணி.

ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷன்.

ஸ்டேஷனின் உட்புறம் இருந்த கண்ட்ரோல் க்யூப்பிலிருந்து வெளிப்பட்ட இன்ஸ்பெக்டர் குணசேகரனை செவன்த் சென்ஸ் டிடெக்டிவ் ஏஜென்சியைச் சேர்ந்த பண்டரிநாத்தும் சுனிலும் ஆவலாய் ஏறிட்டார்கள்.

" இன்ஸ்பெக்டர்......டிட் யூ கெட் எனி யூஸ்ஃபுல் இன்ஃபர்மேஷன் ...... ? "

" ஸாரி..... நாட் யெட்.... "

" வளர்மதியைக் கண்டுபிடிக்க நாம் அந்த ஈஸ்வரோட ஃபார்ம் ஹவுஸூக்குப் போறதைத் தவிர வேறு வழியில்லை இன்ஸ்பெக்டர் "

" நான் ஏற்கனவே உங்ககிட்டே சொல்லிட்டேன் ஈஸ்வர் சாதாரண நபர் கிடையாது, அரசியல் பலம் வாய்ந்த மிகப் பெரிய புள்ளி. முறையான சர்ச் வாரண்ட் இல்லாமே அந்த ஃபார்ம் ஹவுஸோட கேட்டுக்கு முன்னாடி கூட நிக்க முடியாது. என்னுடைய மேலதிகாரியான அஸிஸ்ட்ண்ட் கமிஷனர்க்கு நாலைஞ்சு தடவை போன் பண்ணிப் பார்த்துட்டேன். நோ.... ரெஸ்பான்ஸ். மேடம் திரிபுரசுந்தரி சுய உணர்வோடு இருந்தாலாவது....... " என்று தொடர்ந்து பேச முற்பட்ட குணசேகரனை அவருடைய செல்போன் தன் ரிங்டோனை வெளியிட்டு அவருடைய பேச்சை நிறுத்தியது.

செல்போனை எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தார். ட்ரூ காலரில் பாலாஜி நர்சிங்ஹோம் என்ற பெயர் தெரிந்தது.

Rajesh Kumar new series vibareethangal inge virkappadum part 65

குணசேகரன் குரல் கொடுத்தார்.

" எஸ் "

" இன்ஸ்பெக்டர் குணசேகரன்...... ? "

" ஸ்பீக்கிங் "

" நான் பாலாஜி நர்சிங்ஹோமின் ட்யூட்டி டாக்டர் சீனிவாசன்........ "

" சொல்லுங்க டாக்டர் "

" இன்ஸ்பெக்டர்...... மேடம் திரிபுரசுந்தரி சுய உணர்வுக்குத் திரும்பிட்டாங்க. உடனடியாய் உங்க கூட பேசணும்ன்னு சொன்னாங்க "

" அவங்க இப்போ பேசக்கூடிய நிலைமையில் இருக்காங்களா டாக்டர்.... எந்தப் பிரச்சினையும் இல்லையே ...... ? "

" நவ் ஷி ஈஸ் ஃபைன். பி.பி.யும் பல்ஸ் ரேட்டும் நார்மலுக்கு வந்து இப்போ பெட்டிலிருந்து எந்திரிச்சு உட்கார்ந்துட்டாங்க.... நான் போனை அவங்க கிட்டே தர்றேன் நீங்க பேசுங்க..... "

" ம்..... குடுங்க " சொல்லிவிட்டு குணசேகரன் காத்திருக்க, மறுமுனையில் திரிபுரசுந்தரியின் குரல் கேட்டது.

" குணசேகரன் "

" சொல்லுங்க மேடம்..... ஆர் யூ ஆல்ரைட் ...... ? "

" நோ..... ப்ராப்ளம்.... வளர்மதி பற்றி ஏதாவது தகவல் கிடைச்சுதா ...... ? "

" மேடம்..... இப்ப இருக்கிற நிலவரப்படி ஈஸ்வர் மேலத்தான் நாம சந்தேகப்பட வேண்டியிருக்கு..... ஈஸ்வர்க்கு சொந்தமான ஃபார்ம் ஹவுஸ் செம்மேடு ஃபாரஸ்ட்டுக்குப் பக்கத்துலதான் இருக்குங்கிற உண்மையும் கன்ஃபார்ம் ஆயிடுச்சு.....ஆனா கையில சர்ச் வாரண்ட் இல்லாமே ஈஸ்வரோட ஃபார்ம் ஹவுஸூக்குள்ளே நுழைய முடியாது. இது சம்பந்தமாய் பேசறதுக்கு அஸிஸ்டண்ட் கமிஷனரை செல்போன்ல காண்டாக்ட் பண்ணிப் பார்த்தேன். அவர் என்னோட போனை அட்டெண்ட் பண்ணலை. என்னோட நிலைமையைப் புரிஞ்சுக்காம ஹரி ஏற்பாடு பண்ணியிருக்கிற பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்ஸியை சேர்ந்த பண்டரிநாத்தும் சுனிலும் ரொம்பவும் அவசரப்படறாங்க எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை மேடம்........ "

" உங்க நிலைமை எனக்குப் புரியது குணசேகரன். இப்ப நான் ஒரு யோசனை சொல்றேன்..... கேட்கறீங்களா ...... ? "

" சொல்லுங்க மேடம்...... "

" பக்கத்துல யாராவது இருந்தா கொஞ்சம் தள்ளி வந்து பேசுங்க "

" ஒ.கே.மேடம் " என்று சொன்னவர் போலீஸ் ஸ்டேஷனின் பின்புறம் நோக்கிப் போனார்.

*******

டாக்டர் ஜான்மில்லர் லேப்ரட்ரியின் இரும்புக் கதவோடு ஒரு நிமிஷம் போராடிவிட்டு அதை அன்லாக் செய்துவிட்டு பக்கத்துச் சுவரில் இருந்த ஒரு பொத்தானை அழுத்த கதவு விலகி உள்ளே மெலிதான வெளிச்சத்தில் பரவியிருந்த லேப்பின் பரப்பளவைக் காட்டியது.

வளர்மதி ஜான்மில்லரின் நடு முதுகில் தன் கையில் இருந்த துப்பாக்கியின் வாயைப் பதித்தாள்.

" ம்.... உள்ளே நடங்கள்..... டாக்டர்.... இது எனக்கு பழக்கம் இல்லாத இடம் என்பதால் என்னை எப்படி ஏமாற்றலாம் என்கிற எண்ணம் உங்களுடைய மூளையின் ஏதாவது ஒரு பாகத்தில் ஒடிக்கொண்டு இருக்கலாம். நீங்கள் எந்த நிமிஷம் என்னை ஏமாற்ற நினைக்கிறீர்களோ அந்த நிமிஷமே இந்த ஜெல் புல்லட் பிஸ்டலுக்கு தெரிந்துவிடும். நான் மன்னிக்க விரும்பினாலும் இந்த பிஸ்டல் விரும்பாது "

ஜான்மில்லர் ஒன்றும் பேசாமல் மெளனமாக நடக்க வளர்மதி துப்பாக்கியை அழுத்தினாள்.

" என்ன.... டாக்டர் பேச்சையே காணோம். நிறைய யோசிக்கிறீர்கள் போலிருக்கிறது "

" நான் உன்னை ஏமாற்ற மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். நீதான் இன்னமும் நம்பவில்லை "

" ஈஸ்வரையும், அவருடைய மகன் தீபக்கையுமே ஏமாற்றியவர் நீங்கள் என்பதால்தான் இவ்வளவு எச்சரிக்கை.......கடைசி விநாடி வரை உங்களை நம்பமாட்டேன் டாக்டர். நீங்கள் முன்னால் போங்கள். சில்பாவும், நர்மதாவும் எங்கேயிருக்கிறார்கள் என்பதை எனக்கு முதலில் காட்டுங்கள். நான் சொன்னாலொழிய நீங்கள் திரும்பி என்னைப் பார்க்கக் கூடாது. போகிற வழியில் எதையும் தொடக்கூடாது "

ஜான்மில்லர் தலையசைத்துவிட்டு மெளனமாய் கண்ணாடி தடுப்புகளால் உருவான அறைகளுக்கு நடுவில் நடக்க ஆரம்பித்தார். அறைகளுக்குள்ளே கம்ப்யூட்டர்கள் நிறம் நிறமாய் திரைகளில் பேசிக் கொண்டிருந்தன.
வளர்மதி நடந்துகொண்டே யோசித்தாள். " இனியும் நேரத்தை வீணாக்கக் கூடாது. ஜோன்ஸின் செல்போனை பயன்படுத்தி கமிஷனர் திரிபுரசுந்தரிக்கு உடனடியாய் தகவல் கொடுத்து போலீஸ் படையை வரவழைத்துவிடவேண்டும். இனியும் நான் தனியாளாய் டாக்டரை சமாளிப்பது கஷ்டம்...... "

ஒரு கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டே இன்னொரு கையில் ஜோன்ஸின் ஆன்ட்ராய்ட் செல்போனை எடுத்து போனின் ஆன் பட்டனை அழுத்தினாள். செல்போனின் டிஸ்ப்ளே திரை வெளிச்சம் பிடித்துக்கொண்டு அந்த ஆங்கில வாசகத்தை சிவப்பு நிற எழுத்துகளில் காட்டியது.

ஸ்வைப் ஸ்க்ரீன் டூ அன்லாக் (SWIPE SCREEN TO UNLOCK)

வளர்மதி செல்போனின் ஸ்க்ரீனைத் தேய்த்தாள். அடுத்த விநாடியே செல்போன் கட்டளையிட்டது. பின் நெம்பர் கேட்டது.

" ENTER PIN "

முதன்முதலாய் வளர்மதியின் அடிவயிற்றில் ஒரு பயம் பரவியது.

" செல்போனை ஆக்டிவேட் செய்ய வேண்டுமென்றால் ஜோன்ஸ் பயன்படுத்தும் ரகசிய பின் நெம்பர் வேண்டுமே ...... ? "

வளர்மதி நடுக்கமாய் நடந்துகொண்டே யோசித்தாள்.

" ஏதாவது எண்களை மாற்றிப்போட்டு மூன்று தடவை முயற்சி செய்து பார்க்கலாம். அந்த மூன்று முயற்சிகளும் தோற்றுவிட்டால் செல்போன் நிரந்தரமாய் லாக் ஆகிவிடும் அபாயம் இருக்கிறது "

" ஜோன்ஸ் செல்போனின் பின் நெம்பர் டாக்டர் ஜான்மில்லர்க்குத் தெரிய வாய்ப்பில்லை...... "

" எனக்கு பின் நெம்பர் தெரியாது என்கிற உண்மையும் ஜான்மில்லர்க்குத் தெரிந்துவிடக்கூடாது. தெரிந்தால் அவரிடம் இப்போது இருக்கும் பயம் காணாமல் போய்விடும். யோசிக்க....... யோசிக்க....... " வளர்மதியின் உடம்பில் சுரந்த பய வியர்வை அவளை நனைக்க ஆரம்பித்தது.

(தொடரும்)

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X