For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"இந்த அறைக்குள்தான்"... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (66)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

வளர்மதி பயத்தை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாமல் ஜான்மில்லரை பின்தொடர்ந்தாள்.
ஜான்மில்லர் நேர்பார்வை பார்த்தபடி நடந்து கொண்டிருக்க, வளர்மதியின் பார்வை 180 டிகிரி கோணத்தில் சுழன்றது.

மெலிதான நீலவண்ண எல்.இ.டி. விளக்குகளின் வெளிச்சத்தில் சுமார் ஆயிரம் சதுரடி பரப்புள்ள அந்த லாப் சென்ட்ரலைஸ்ட் செய்யப்பட்ட ஏ.சியின் மிதமான குளிரில் உறைந்து போயிருந்தது. கண்ணாடிக்கதவுகளோடு கூடிய சிறிய அறைகளின் நெற்றிப்பரப்பில் ஜீன் சம்பந்தப்பட்ட பெயர்களோடு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்க, உள்ளே போட்டப்பட்டிருந்த க்ரே நிற பாலிமர் மேஜைகளின் மேல் செல்லுலார் ஜீன்தெரபி சம்பந்தப்பட்ட பயோ கம்ப்யூட்டர்கள் பார்வைக்குத் தட்டுப்பட்டன. அவைகளில் சில எதையோ மானிட்டரிங் செய்தபடி நிறம் நிறமாய் வெளிச்சப்புள்ளிகளைக் காட்டிக் கொண்டிருந்தன.

வளர்மதியின் இருதயத்துடிப்பு உச்சத்தில் இருக்கும்போதே முன்னால் நடந்து கொண்டிருந்த ஜான்மில்லர் வேகத்தைக் குறைத்துக்கொண்டு ஜெனிடிக் டெஸ்டிங் க்யூப் என்று ஸ்டிக்கர் சொன்ன அறைக்கு முன்பாய் நின்றார். திரும்பிப் பார்க்காமல் வளர்மதியிடம் பேசினார்.

Rajesh Kumar new series vibareethangal inge virkappadum part 66

" இந்த அறைக்குள்தான் சில்பாவும் நர்மதாவும் இருக்கிறார்கள் "

" உள்ளே செல்லுங்கள் "

ஜான்மில்லர் அந்தக் கனமான கண்ணாடிக்கதவைத் தள்ளிக்கொண்டு நுழைய வளர்மதியும் பின்தொடர்ந்தாள். அறையின் நடுவே இரண்டு சாய்வான படுக்கைகள் போடப்பட்டிருக்க, அதில் சில்பாவும் நர்மதாவும் கண்மூடிய நிலையில் மல்லாந்து தெரிந்தார்கள்.

அவர்களின் உடம்போடு சேர்த்துக் கட்டப்பட்டிருந்த மெல்லிய வயர்கள் பக்கத்தில் இருந்த கம்ப்யூட்டர்களோடு இணைக்கப்பட்டிருந்தன. கம்ப்யூட்டர் திரைகளில் அவர்களின் உடல் ஆரோக்கியம் குறித்த பதிவுகள் விநாடிக்கு விநாடி மாறி " நெட் ரிசல்ட் " என்கிற வார்த்தைக்கு நேராக " நார்மல் " என்கிற ஆங்கில எழுத்துகள் பச்சை நிறத்தில் ஒளிர்ந்தன.

வளர்மதி பார்வை நடுங்க, சில்பாவையும் நர்மதாவையும் பார்த்துவிட்டு தன் கையில் இருந்த துப்பாக்கியை அசைத்து ஜான்மில்லரை சுவரோரமாய் போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார வைத்தாள்.

" டாக்டர்..... இனி நீங்கள் அந்த நாற்காலியை விட்டு எழக்கூடாது. அப்படியே உட்கார்ந்துகொண்டு நான் கேட்கும் கேள்விகளுக்கு பொய் கலப்பில்லாமல் பதில் சொல்லவேண்டும் "

ஜான்மில்லர் பயம் பரவிய விழிகளோடு மெல்ல தலையாட்டினார். வளர்மதிக்கு உள்ளூர இருதயம் உதைத்துக்கொண்டாலும் சலனமில்லாத முகத்தோடு அவரை ஏறிட்டாள்.

" சில்பா, நர்மதா இவர்கள் இருவரும் இப்போது சுய உணர்வோடு இருக்கிறார்களா ...... ? "

" இ...இ.....இல்லை "

" ஏதாவது ஊசி போட்டு இருக்கிறீர்களா ...... ? "

" ஆமாம் "

" எதுமாதிரியான ஊசி...... ? "

" சப் க்யூடேனியஸ் இஞ்செக்சன் "

" மயக்கம் எவ்வளவு நேரத்திற்கு நீடிக்கும் ? "

" நாளை மதியம்தான் சுயஉணர்வுக்குத் திரும்புவார்கள் "

"இவர்களை உடனடியாய் இந்த மயக்க நிலையிலிருந்து மீட்க முடியாதா ?"

" முடியாது...... "

" இவர்களின் மேல் எதுமாதிரியான சோதனைகளை நடத்தப் போகிறீர்கள்...... ? "

ஜான்மில்லர் மெளனமாக இருந்தார்.

" நீங்கள் இப்படி மெளன விரதம் இருப்பது என் கையில் இருக்கும் ஜெல் புல்லட் பிஸ்டலுக்குப் பிடிக்காது டாக்டர் "
அவர் மெல்ல முனகினார்.

" ஜீன் சம்பந்தப்பட்ட சில சோதனைகளை நடத்துவதுதான் என் நோக்கம் "

" குறிப்பாக பெண்களை தேர்ந்தெடுக்க என்ன காரணம் ...... ? "

" அது....அது.....வந்து...... "

Rajesh Kumar new series vibareethangal inge virkappadum part 66

" முழுக்க நனைந்துவிட்டீர்கள். இனி முக்காடு வேண்டாம். சரியான பதில் வேண்டும் எனக்கு "

" நல்லதொரு நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஜீன்தெரபி சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி, தீபக், ஈஸ்வரின் விபரீதமான பேராசைக்கு பலியாகி விட்டது. ஆரம்பத்தில் நான் அவர்கள் இருவர்க்கும் புத்திமதி சொல்லிப் பார்த்தேன். அவர்கள் அதை காதில் போட்டுக்கொள்வதாகவே இல்லை. நான் அவர்களுடைய திட்டத்திற்கு ஒத்துழைக்க மறுத்தால் அவர்கள் வேறு ஒரு ஜெனிடிக்ஸ்ட் விஞ்ஞானியோடு கை கோர்க்கவும் தயாராக இருந்தார்கள். அவர்களின் அந்த முயற்சி எனக்கு இன்னமும் ஆபத்தாக தோன்றவே வேறு வழியில்லாமல் அவர்களோடு பார்டனர்ஷிஃப் போட வேண்டியதாகிவிட்டது "

வளர்மதி குறுக்கிட்டு கேட்டாள்.

" அதாவது தப்பு என்று தெரிந்தே அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தீர்கள் "

" ஆமாம்...... ஐநூறு மில்லியன் டாலர்களுக்கு அந்த ஜீன்தெரபி ப்ராஜக்ட் விலை பேசப்பட்டால் யார்க்குத்தான் ஆசை வராது? துணிந்து நானும் இறங்கிவிட்டேன். ஆனால் என்னுடைய மனதின் ஒரு மூலையில் ஈஸ்வர், தீபக் இருவர் மேலும் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது "

" என்ன சந்தேகம் ...... ? "

" ப்ராஜக்ட் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியின் கடைசி கட்டம் முடிவடைந்து பாஸிட்டீவ் ரிசல்ட் கிடைத்ததும் என்னுடைய உயிர்க்கு ஆபத்து ஏற்படலாம் என்கிற ஒரு உறுத்தல் எனக்குள்ளே இருந்து கொண்டேயிருந்தது. அதனால் ஈஸ்வர், தீபக் இருவரின் நடவடிக்கைகளை வாசனைப் பிடித்து எனக்கு உடனுக்குடன் தெரிவிக்க அவர்களிடம் வேலை பார்க்கும் ஜோன்ஸை பணத்தாசை காட்டி என்னுடைய மறைமுக பார்ட்னராய் ஆக்கிக்கொண்டேன் "

" முள்ளை முள்ளாலேயே எடுக்க தீர்மானித்துவிட்டீர்கள் "

" ஆமாம்.... "

" சரி.... இது எதுமாதிரியான ப்ராஜக்ட் என்பதை சொல்ல முடியுமா ...... ? "

ஜான்மில்லர் சில விநாடிகள் தயங்கிவிட்டு சொன்னார்.

" எம்.டி.ஸி. வெர்சஸ் என்.டி.என்.ஏ "

" எனக்குப் புரியும்படியாய் சொல்லுங்கள் "

" எம்.டி.ஸி. என்பதின் விரிவாக்கம் மைட்டோகாண்ட்ரியா (MITOCHONDRIA) என்.டி.என்.ஏ என்பதின் விரிவாக்கம் நியூக்ளியர் டிஆக்சி ரிபோ நியூக்ளிக் ஆசிட் (NUCLEAR DEOXYRIBO NUCLEIC ACID) அதாவது மைட்டோகாண்ட்ரியா எனப்படும் ஒரு செல்லுக்கும், நியூக்ளியர் டி.என்.ஏ. எனப்படும் மரப்பணுக்கும் இடையே ஒரு மோதலை உண்டாக்கி அதன் மூலம் ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்கி மருத்துவ உலகத்துக்கு அளிப்பதுதான் நாங்கள் மேற்கொண்ட ஒர் ஆராய்ச்சி. நான் ஏற்கனவே சொன்னதுபோல் மருத்துவ உலகின் நன்மைக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆராய்ச்சி இப்போது ஒரு வியாபார பொருளாக மாறி உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கில் ஃபார்மசூடிகல் கம்பெனிகளை வைத்திருக்கும் கார்பரேட் பணமுதலைகளின் கைகளுக்கு போய்விட்டது "
வளர்மதி குறுக்கிட்டாள்.

" மருத்துவ உலகின் நன்மைக்காக ஆரம்பிக்கப்பட்டது இந்த ஆராய்ச்சி என்று சொன்னீர்கள். அது எதுமாதிரியான நன்மை என்று சொல்ல முடியுமா...? "

" அதைச் சொல்வதாக இருந்தால் நான் சற்று விரிவாக கல்லூரியில் வகுப்பு எடுப்பது போல் பேச வேண்டியிருக்கும் "

" பரவாயில்லை...... உண்மை விரிவாக இருந்தால்தான் அந்த உண்மைக்கே ஒரு மதிப்பு இருக்கும்..... நீங்கள் விரிவாகப் பேசலாம்..... பொழுது விடிவதற்குள் எனக்கு எல்லா உண்மைகளும் உங்களிடம் இருந்து எனக்கு வந்துவிட வேண்டும் "

ஜான்மில்லர் சிலவிநாடிகள் தலைகுனிந்தபடி யோசனையாய் இருந்துவிட்டு பேச ஆரம்பித்தார்.

" நமது உடலின் 50 சதவீதம் நமக்கு சொந்தமானதல்ல. அதில் பாதிக்கும் மேற்பட்ட உடல் பாக்டீரியாக்களுக்கும், வைரஸ்களுக்கும் சொந்தமானது என்கிற விபரம் உனக்குத் தெரியுமா ...... ? "

வளர்மதி சற்றே திகைப்போடு தலையாட்டினாள்.

" தெரியாது "

" முதலில் நீ அந்த உண்மையைப் புரிந்து கொண்டால்தான் பின்னால் நான் சொல்லப்போகும் விஷயங்கள் உனக்கு விளங்கும். நாம் எவ்வளவுதான் சத்தான உணவுகளைச் சாப்பிட்டு, தினமும் குளித்து சுத்தமாக இருந்தாலும் கூட நமது உடலின் 50 சதவீத பரப்பளவு வைரஸ், பாக்டீரியாக்கள், ஆர்க்கியா போன்ற நுண்ணுயிர்களால் நிரம்பியிருக்கும். மீதமுள்ள 50 சதவீத பரப்பளவுதான் மனித செல்களால் நிரம்பி நம்மை உருவமாக காட்டிக்கொண்டிருக்கிறது. அதாவது ஒவ்வொரு மனிதனும் மரபு அணுக்களாலும், நுண்ணுயிர்களாலும் இணைக்கப்பட்டு பல்வேறு முகங்களால் மட்டுமே வேறுபட்டு இருக்கிறார்கள் "

வளர்மதி வியப்போடு கேட்டுக்கொண்டிருக்க ஜான்மில்லர் தொடர்ந்து நிதானமான குரலில் பேச ஆரம்பித்தார்.

" உடம்பில் இருக்கும் வைரஸ், பாக்டீரியாக்களால் மனிதனின் ஆரோக்கியத்திற்கு தீமை ஏற்படாதா நோய்கள் உண்டாகாதா என்று நீ கேட்கலாம். உண்மையில் ஒவ்வொரு மனிதனின் உடம்புக்குள்ளும் மனித செல்களுக்கும், நுண்ணுயிர்களுக்கும் 24 மணி நேரமும் ஒரு உயிரியல் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நமது உடலில் நம்முடைய மரபு அணுக்களை விட நுண்ணுயிர்களின் மரபணு எண்ணிக்கை உயரும்போதுதான் ஆரோக்கிய குறைவு ஏற்பட்டு பலவித நோய்கள் உண்டாகின்றன. அப்படி நோய் உண்டாகும் போது நோயை உண்டாக்கும் நுண்ணுயிர்களை வைத்தே மருத்தை தயாரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பி அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் நான் மட்டுமே மனித உடலில் உள்ள மைட்டோகாண்ட்ரியா செல்லை வைத்து மனிதனுக்கு நோய்களை வராத அளவுக்கு ஒரு மருந்தைக் கண்டுபிடிக்க முடியும் என்கிற மகத்தான உண்மைக்கு அஸ்திவாரம் போட்டேன். அதையும் மீறி நோய் வந்தால் சாதாரண காய்ச்சலில் தொடங்கி மூளையையும் நரம்பு மண்டலத்தையும் தாக்கி அல்ஸீமர், பார்கின்சன் நோய்வரையுள்ள அத்துணை நோய்களையும் குணப்படுத்தும் மாமருந்தாக அது அமைய ஒரு ஆராய்ச்சியையும் மேற்கொண்டேன். இந்த ஆராய்ச்சிக்காக செல்ஃபிஷ் ஜீன் என்ற ஒரு மரபணுவையும், தி ப்ளைண்ட் வாட்ச்மேக்கர் என்ற ஒரு வைரஸின் மரபணுவையும் இணைத்து எலி, முயல், நாய், குரங்கு போன்ற பாலூட்டி பிராணிகளின் கர்ப்பப்பைகளில் செலுத்தி வீரியமுள்ள புதிய நல்ல வைரஸ்களையும், பாக்டீரியாக்களையும் வளர்ந்தெடுக்கிற ஒரு விபரீதமான முயற்சியில் ஈடுபட்டேன் "

வளர்மதி ஜான்மில்லரின் பேச்சில் குறுக்கிட்டு கேட்டாள்.

"சரி, தீபக், ஈஸ்வர் இருவரும் உங்களுக்கு எப்படி எப்போது பழக்கமானார்கள்? "

" அமெரிக்காவில் பிராணிகள் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் எல்லாம் முடிந்த பிறகு பெண் மனித எலிகள் வேண்டும் என்கிற நிலை வந்தபோதுதான் பார்மசூடிகல் சம்பந்தப்பட்ட ஒரு செமினாரில் தீபக்கை சந்தித்தேன். தீபக்கிற்கும் புதிய மருந்துகள் தயாரிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்ததால் நான் என்னுடைய ஆராய்ச்சியைப்பற்றிச் சொன்னேன். அமெரிக்காவில் இது மாதிரியான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியாத அளவுக்கு கடுமையான சட்டங்கள் இருந்ததால், இந்தியாவில் தேவையான பெண் மனித எலிகளுக்கு தான் ஏற்பாடு செய்து தருவதாக தீபக் சொன்னார். சொன்னதோடு மட்டுமல்லாமல் அவருடைய அப்பா ஈஸ்வர்க்கு தகவல் கொடுத்து அவர் மூலம் அநாதைப் பெண்களுக்கும், ஏழைப் பெண்களுக்கும் இலவச திருமணங்களை நடத்தி, பெண் மனித எலிகளை என்னுடைய ஆராய்ச்சிக்கு கொடுத்து உதவ ஆரம்பித்தார், நானும் அவ்வப்போது இந்தியா வந்து அந்தப் பெண்களின் மேல் சோதனைகளை மேற்கொண்டேன். ஆனால் பிராணிகளிடம் கிடைத்த வெற்றி பெண்களிடம் கிடைக்கவில்லை. பெண்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படவே, இங்கே இருக்கும் டாக்டர்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக, கல்யாண ஜோடிகள் சிலரை தற்கொலை என்ற போர்வையில் ஈஸ்வர் தீர்த்துக்கட்ட வேண்டியதாயிற்று "

வளர்மதி கோபமாய் ஜான்மில்லரைப் பார்த்தபடி கையமர்த்தினாள்.

" ஈஸ்வரால் கொலை செய்யப்பட்ட பெண்கள் எல்லோரும் மூன்று மாதம் கர்ப்பமாய் இருந்தார்கள். அப்படிப்பட்ட கர்ப்பமான பெண்களை மட்டும் தேர்ந்து எடுக்க ஏதாவது காரணம் இருக்கிறதா ...... ? "

" இ....இ....இருக்கிறது "

" என்ன காரணம் ...... ? "

" மூன்று மாத கர்ப்பமாய் இருக்கும் பெண்களின் கருவில் உள்ள மைட்டோகாண்ட்ரியா செல்கள் மின்சாரத்தை தயாரிக்கும் பவர் ஸ்டேஷன் போல் வீரியமும், சக்தியும் கொண்டதாக இருக்கும். அதற்காகத்தான் அப்படிப்பட்ட பெண்களை தேர்ந்தெடுத்து....... "

" மைகுட்னஸ்....... " என்று ஒரு விநாடி அதிர்ந்து போன வளர்மதி நெஞ்சம் நெகிழ்ந்து, கண்களில் பீறிட்ட நீரை துடைக்க தலையைத் தாழ்த்திய அதே விநாடி -

ஜான்மில்லர் மூர்க்கமான வேகத்தோடு அவள் மேல் வீசப்பட்ட ஒரு கத்தியைப்போல் பாய்ந்தார்.

(தொடரும்)

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X