• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடவுளே..... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (67)

|

- ராஜேஷ்குமார்

வளர்மதி அந்தப் பாய்ச்சலை ஜான்மில்லரிடமிருந்து எதிர் பார்க்கவில்லை.

தன் மீது வந்து விழுந்த எண்பது கிலோ எடை கொண்ட ஜான்மில்லரின் உடம்பால் மோதப்பட்ட வளர்மதி அந்தக் கண்ணாடி அறையின் கனமான கதவின் மேல் போய் எசகுபிசகாய் இடித்துக்கொண்டு சாய்ந்தாள்.

அவளுடைய கையிலிருந்த ஜெல் புல்லட் பிஸ்டலும் ஜோன்ஸின் இரிடியம், ஆண்ட்ராய்ட் போன்களும் தெறித்து திசைக்கொன்றாய் விழ, ஜான்மில்லர் விநாடிக்கும் குறைவான நேரத்தில் பிஸ்டலை மட்டும் பொறுக்கிக் கொண்டு வளர்மதியை கூர்மையாய் குறி பார்த்தபடி நிதானமான குரலில் பேசினார்.

Rajesh Kumar new series vibareethangal inge virkappadum part 66

” ஒரு குடும்பப் பெண் போலீஸ் இன்ஃபார்மராய் மாறிவிட்டால் இப்படித்தான் ஒரு செண்டிமெண்டான விஷயத்தில் மாட்டிக்கொள்ள நேரிடும். நீ நிலை தடுமாறுகிற இந்த ஒரு விநாடிக்காகத்தான் நான் உன்னிப்பாய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன். மூன்று மாத கர்ப்பமாய் இருக்கும் பெண்களை நான் ஆராய்ச்சிக்காக உபயோகப்படுத்திக்கொண்டதைப் பற்றி உன்னிடம் சொல்ல ஆரம்பித்ததுமே உன்னிடம் ஒரு தடுமாற்றம். கண்களில் நீரின் பளபளப்பு. நீ கண்ணீரைத் துடைக்க முயன்ற விநாடியை நான் பயன்படுத்திக்கொண்டேன் ”

வளர்மதி அந்தக் கண்ணாடிக் கதவுக்குச் சாய்ந்துகொண்டே ஜான்மில்லரை கலவரமாய் பார்க்க அவர் வெள்ளைக்கோடு போன்ற தன்னுடைய பல்வரிசையைக் காட்டி சிரித்தார்.

” இது என்னுடைய நேரம் இனி நான் சொல்லப்போகிற ஒவ்வொரு வார்த்தையும் ராணுவக்கட்டளை. இந்த விநாடியே உன்னை என்னால் சுட்டுத்தள்ள முடியும். ஆனால் சில்பாவைப் போல், நர்மதாவைப்போல் நீ எனக்கு வேண்டும். முதலில் நீ எழுந்து நில் ”

ஜான்மில்லரின் கையில் இருந்த துப்பாக்கியும், அவருடைய சிறிய கண்களும் வளர்மதியை உன்னிப்பாய் கவனித்து அளவெடுத்தன.

வளர்மதி தட்டுத்தடுமாறியபடி எழுந்து நின்றாள். ஜான்மில்லரின் எஃகுத்தனமான உடம்பு தன் தோள்பட்டையின் மீது மோதியதில் அந்த இடம் மட்டும் வலியால் விண்விண்னென்று துடித்தது.

” அப்படியே திரும்பி எனக்கு உன் முதுகுப்பக்கம் தெரியும்படியாய் நில் ”

வளர்மதி திரும்பி நின்றாள்.

” குட்..... நிலைமையைப் புரிந்துகொண்டு செயல்படுகிறாய். இப்போது இடதுபக்கம் தலையைத் திரும்பிப் பார். கண்ணாடிச் சுவரோரமாய் சாய்வான கோணத்தில் படுக்கை தெரிகிறதா ? அதில் போய் படு......”

வளர்மதி தலையைத் திருப்பி அந்தப்படுக்கையை பார்க்க முயன்ற அதே விநாடி அவளுடைய பார்வைக்கு 25 சதவீத இடைவெளியோடு அறையின் கண்ணாடிக்கதவு தெரிந்தது. அடுத்த விநாடியே அவளுடைய மூளைக்குள் இருந்த அத்தனை நியூரான்களும் வெளிச்சமாய் எரிந்தன.

கண்ணிமைக்கிற நேரம் கூட இல்லை. கதவின் குமிழைப் பற்றி சட்டென்று இழுத்து, கதவின் இடைவெளியை 50 சதவீத அளவுக்கு மட்டும் விரித்து அந்த இடைவெளியில் உடம்பை நுழைத்து வெளியே பாய்ந்தாள் வளர்மதி. பாய்ந்த வேகத்திலேயே கண்ணாடிக்கதவையும் சாத்தினாள்.

அதிர்ந்து போன ஜான்மில்லர் கோபத்தின் உச்சத்துக்குப் போய் வளர்மதியைப் பார்த்து சுட்டார்.

துப்பாக்கியினின்றும் பாய்ந்த அந்த ஜெல் தோட்டா கண்ணாடிக்கதவை சிதறடிப்பதற்குப் பதிலாக அதில் ஒரு சின்ன கோலிக்குண்டு சைஸில் பசை போல் ஒட்டிக்கொண்டு மஞ்சள் நிறத்தில் வழிய ஆரம்பித்தது.

ஜான்மில்லர் வெறி பிடித்தவர் போல் ” ஏய் யூ ப்ளடி பிட்ச் ” என்று குரலை உயர்த்திக் கத்திக்கொண்டே கதவைத் திறந்து கொண்டு வெளியே புயல் வேகத்தில் பாய்ந்து துரத்த ஆரம்பித்தார்.

வளர்மதி சற்றுத் தொலைவில் கண்ணாடி தடுப்புகளுக்கு இடையே முட்டி மோதிக்கொண்டு தடுமாற்றமாய் ஒடுவது தெரிய, குறி பார்த்து சுட முயன்று தோற்றார். ஜெல் தோட்டாக்கள் இலக்குத்தவறி வெவ்வேறு இடங்களில் பாய்ந்தன.

வளர்மதி வாயில் மூச்சிறைத்தபடி குனிந்தவாக்கில் ஒடி லேப்ரட்ரியின் பிரதானக் கதவை நெருங்கினாள். இதயம் பயத்தில் தெறித்துவிடுவதைப்போல் துடித்தது.

” கடவுளே..... மேக்னடிக் கதவு லாக் ஆகாமல் இருக்க வேண்டும்..... ” ஒட்டுமொத்த கடவுள்களையும் வேண்டிக்கொண்டு வியர்த்த உடம்போடு கதவின் மேல் போய் விழுந்தாள்.

கதவின் ஃபைபர் ஹோல்டிங்கைப் பிடித்து பலம் கொண்ட மட்டும் இழுத்தாள். கதவு சரியாக லாக் செய்யப்பட்டவில்லை என்பது முதல் இழுப்பிலேயே தெரிய இருதயத்துடிப்பின் வேகம் குறைந்தது. ” தேங்க் காட் ”

உடம்பின் மொத்த வலுவையும் வளர்மதி தன்னுடைய கைகளுக்குக் கொடுத்து ஹோல்டிங்கைப் பிடித்து இழுக்க கதவு சிறிதுசிறிதாய் நகர்ந்து இடைவெளி ஏற்படுத்திக் கொடுத்தது. வியர்த்து ஊற்றிய தன்னுடைய உடம்பை அதற்குள் சிரமப்பட்டு நுழைத்து அங்குலம் அங்குலமாய் நகர்ந்து வெளியே வந்தாள்.

இருட்டில் காத்திருந்த குளிர்காற்று முகத்தில் மோதியது. பார்வை சில விநாடிகளுக்கு கண்ணைக் கட்டியது. எந்தப்பக்கம் எது இருக்கிறது என்று தெரியாமல் ஒட ஆரம்பித்தாள் வளர்மதி. இதயத்தின் மையத்தில் பயம் கீறியது. ” ஜான்மில்லரின் கையில் இனி மாட்டினால் நிச்சயமாய் உயிரோடு இருக்க முடியாது ”

சிறு சிறு கற்களையும், செடிகளையும் மிதித்துக்கொண்டு ஒடியவளுக்கு ஒரு பெரிய மரத்தின் அடிப்பாகம் பார்வைக்குத் தட்டுப்பட, அதற்குப் பின்னால் போய் மறைவாய் உட்கார்ந்தாள். பெரிது பெரிதாய் மூச்சு வாங்கிக்கொண்டு மெல்ல எட்டிப்பார்த்தாள்.

Rajesh Kumar new series vibareethangal inge virkappadum part 66

ஜான்மில்லர் லேப்ரட்ரி கட்டிடத்துக்கு வெளியே கையில் துப்பாக்கியோடு இருட்டில் கரைந்து ஒரு நிழல் உருவமாய் நிற்பது தெரிந்தது. வளர்மதி மூச்சையடக்கிக்கொண்டு அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

*******

விநாடிகள் வேகமாய் விழுந்து நிமிஷங்களாக மாறிக்கொண்டிருக்க, ஜான்மில்லர் கையில் துப்பாக்கியோடு புதர் மண்டிக்கிடந்த இடங்களுக்குப் போய் குனிந்து, வளர்மதி உள்ளே ஒளிந்திருக்கிறாளாவென்று உற்றுப் பார்த்தார். பக்கத்தில் இருந்த பாறைகள் மீது ஏறி நின்று அசாதாரணமான அசைவுகள் ஏதேனும் பார்வைக்குத் தட்டுப்படுகிறதா என்று கவனித்துவிட்டு, அப்படி எதுவும் கிடைக்காமல் போகவே கோபமாய் இறங்கினார்.

ஜான்மில்லர் உடம்பின் ஒவ்வொரு அசைவிலும் உச்சபட்ச பதட்டம் தெரிந்தது. அவருடைய உதடுகளிலிருந்து ஆத்திரம் கொப்பளிக்கும் வார்த்தைகள் ஆங்கிலத்தில் வெடித்து காற்றில் கலந்தன.

” அந்தப் பெட்டை நாயை எந்த விநாடி பார்த்தாலும் சரி, அந்த விநாடியே சுட்டுத்தள்ளி வீழ்த்த வேண்டும்...... ”

” அவள் உயிரை விட்டுக்கொண்டிருக்கும்போதே என் பூட்ஸ் காலால் அவளுடைய கழுத்தை நசுக்க வேண்டும்..... ”

” அந்த திமிர் பிடித்தவள் அதிக தூரம் போயிருக்க மாட்டாள். நூறடி சுற்றளவுக்குள்தான் ஏதாவது ஒரு இடத்தில் பதுங்கியிருப்பாள். அவளை விடக்கூடாது ” ஜான்மில்லர் வாய்விட்டு புலம்பிக்கொண்டே வேகவேகமாய் நடைபோட்டு ஒவ்வொரு மரத்திற்குப் பின்னாலும் போய் எட்டிப் பார்த்தார். கூடவே மனசுக்குள் ஒரு பயமும் நெருடியது.

” நாய்கள் என்னை மோப்பம் பிடிப்பதற்கு முன் வளர்மதியைக் கண்டு பிடித்தாக வேண்டும்...... ”

ஜான்மில்லர் கோபப் பார்வையோடும் பதட்டம் பரவிக்கொண்ட உடம்போடும் ஒவ்வொரு மரத்திற்கும் பின்னால் போய் எட்டிப் பார்க்க அந்தப் பெரிய மரத்திற்குப் பின்னால் உடம்பைக் குறுக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்த வளர்மதியின் இருதயம் ஒற்றையடி ட்ரம்மாய் மாறியது. ஒட்டுமொத்த உடம்பும் வியர்வையில் ஊறிக்கொண்டிருந்தது.

” ஜான்மில்லர் எந்த நிமிஷத்திலும் இந்த மரத்திற்குப் பின்னால் வந்து எட்டிப் பார்க்கலாம். பார்த்த அந்த விநாடியே சுடவும் கூட செய்யலாம். உடனடியாய் இந்த இடத்தை விட்டு வேறு ஒரு பாதுகாப்பான இடத்துக்கு நகர்ந்து விடுவது நல்லது...... ”

வளர்மதியின் தலைக்குள் யோசனைகள் ஒரு எறும்பு வரிசையைப் போல் ஒடிக்கொண்டிருக்க அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். ஒளிவதற்கு ஏற்ற இடம் எதுவும் பார்வைக்குத் தட்டுப்படாமல் போகவே மரத்தின் அடித்தண்டோடு சேர்ந்து அப்படியே ஒட்டிக்கொண்டாள். பயத்தில் மார்பு தூக்கி தூக்கிப் போட்டது.

ஜான்மில்லர் எச்சரிக்கை நடையில் எல்லா மரங்களின் மறைவுகளையும் பார்த்து விட்டு வளர்மதி ஒளிந்திருந்த மரத்தை நோக்கி மெதுவாய் வந்து கொண்டிருந்தார்.

சில அடிகள் நடந்திருப்பார்.

அவர்க்கு இடதுகைப்பக்கம் ஏதோ சத்தம் கேட்ட உணர்வு. உடம்பில் நெருப்பு பட்ட தினுசில் சட்டென்று திரும்பிப் பார்த்தார் ஜான்மில்லர்.

” அது என்ன சத்தம் ...... ? ”

மறுபடியும் அந்தச் சத்தம் கேட்பதற்காக காத்திருந்தார். அதே இடத்தில் அசையாமல் நின்றிருந்தார்.

சில விநாடிகளின் நிசப்தத்திற்கு பிறகு அந்தச் சத்தம் மறுபடியும் கேட்டது.

யாரோ முனகுகிற சத்தம்.

உள்ளுக்குள் திடுக்கிட்டுப்போன ஜான்மில்லர் சர்வ ஜாக்கிரதையாய் கையில் இருந்த துப்பாக்கியை உடனே சுடுவதற்கு ஏற்ற தயார் நிலையில் வைத்துக்கொண்டு முனகல் வந்த திசையை நோக்கி மெல்ல நடை போட்டார். ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பதற்கு முன்னால் சில விநாடிகள் யோசித்தார். இருட்டு இப்போது சற்றே சாயம் வெளுத்துப் போயிருந்ததால் பார்வைக்கு சட்டென்று எல்லாமே புலப்பட்டது.

மேலும் சில அடிகள் நடந்திருப்பார்.

கோரைப் புற்களுக்கு நடுவே அந்த உருவம் உட்கார்ந்திருப்பது தெரிந்தது.

” யாரது ...... ? ” மனதுக்குள் எழுந்த கேள்வியோடு சற்று மறைவாய் நின்று கொண்டு கண்களுக்கு தன் உன்னிப்பான பார்வைக் கொடுத்தார். அது யார் என்பது அடுத்த சில விநாடிகளிலேயே புரிந்தது.

” மாதவன் ”

ஜான்மில்லர் அவசர நடையில் அவனருகே போனார். மண்டியிட்டு உட்கார்ந்து அவனுடைய தோளைத் தொட்டு ” மாதவன் ” என்று மெல்லக் கூப்பிட்டார். அவன் தன்னுடைய தலையை மெல்ல உயர்த்தினான். பெரிது பெரிதாய் மூச்சு வாங்கிக்கொண்டு எழுந்து நிற்க முற்பட்டான். வியப்பான குரலில் தடுமாற்றத்தோடு கேட்டான்.

” டா.....டா.....டாக்டர்....... நீ..... நீங்கள்..... இங்கே எப்படி...... இந்த நேரத்தில் ...? ”

ஜான்மில்லர் குரலைத் தாழ்த்தினார்.

” எல்லாம் சொல்கிறேன்..... நான் கேட்கிற கேள்விக்கு முதலில் நீ பதில் சொல். வளர்மதி உன்னைத் துப்பாக்கியால் சுட்டு நீ இறந்துவிட்டதாக ஜோன்ஸ் சொன்னானே..... அது உண்மையா ...? ”

மாதவன் சில விநாடிகள் மெளனமாய் இருந்துவிட்டு கம்மிப்போன குரலில் பேச ஆரம்பித்தான்.

” உண்மைதான் டாக்டர்..... வளர்மதி என்னை சுட்டது உண்மை. ஆனால் மார்பில் தோட்டா பாய்ந்த உணர்வு இல்லை. ஏதோ ஊசியை சொருகி எடுத்த மாதிரியான வலி. கொஞ்சம் ரத்த சேதம். கீழே விழுந்த என்னால் எழ முடியவில்லை. அப்படியே மயக்க நிலைக்குப் போய்விட்டேன். சிறிது நேரத்திற்கு முன்புதான் எனக்கு மயக்க நிலை தெளிந்து, உணர்வு வந்தது. எழுந்து மெல்ல நடக்க ஆரம்பித்தேன். இந்த இடத்துக்கு வந்ததும் மேற்கொண்டு நடக்க முடியாமல் அப்படியே உட்கார்ந்து விட்டேன். அந்த வளர்மதி உங்களிடம் பிடிபட்டு விட்டாளா டாக்டர்...? ”

” இல்லை..... இந்த ஃபார்ம் ஹவுஸீக்குள்தான் எங்கேயோ ஒளிந்து கொண்டு இருக்கிறாள். நான் அவளைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்..... இப்போது என் கையில் இருக்கும் இந்த பிஸ்டல் அவளிடமிருந்து பறித்ததுதான். இது உயிரை எடுக்கும் பிஸ்டல் இல்லை..... மயக்க மருந்தை செலுத்தும் ட்ராங்க்லைஸர் போன்ற பிஸ்டல். ஜோன்ஸையும் இந்த துப்பாக்கியால்தான் சுட்டிருக்கிறாள் ”

ஜான்மில்லர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே மாதவன் கத்தினான்.

” டாக்டர்... உங்களுக்குப் பின்னாடி திரும்பிப் பாருங்கள் ”

ஜான்மில்லர் சட்டென்று திரும்பிப் பார்த்தார்.

மரத்தின் மறைவினின்றும் வெளிப்பட்ட வளர்மதி எய்யப்பட்ட ஒரு அம்பைப் போல் வேகமாய் ஒடிக்கொண்டிருந்தாள்.


(தொடரும்)

பகுதி 1</a>, <a class= 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66" title="பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66" />பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X