• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்ன டாக்டர்... பதிலையே காணோம்...?.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (68)

|

- ராஜேஷ்குமார்

வளர்மதி ஒடிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் ஜான்மில்லரும், மாதவனும் பதட்டத்தோடு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.

" மாதவன்..... அவள் நம் கண்ணில் பட்டுவிட்டாள். இனியும் அவளை விட்டு வைக்கக்கூடாது. உன்னால் என்னோடு
ஒடி வர முடியுமா ...... ? "

Rajesh Kumar new series vibareethangal inge virkappadum part 68

" முடியும் டாக்டர்...... உங்களைப் பார்த்ததுமே என்னுடைய உடம்புக்குள் ஒரு யானை புகுந்து கொண்ட மாதிரியான பலம். இந்த இடம் எனக்குப் பழகிப் போன ஒன்று. அவள் ஒடிய திசையில் ஒளிந்து கொள்ள வசதியாக ஒரு இடம் கூட இல்லை. நூறு மீட்டர் தூரம் ஒடுவதற்குள் கண்ணாடித் துண்டுகளோடு சேர்த்துக் கட்டப்பட்ட முள்வேலி வந்துவிடும். வடக்குப் பக்கமாக ஒடினால் நாய்களின் மோப்ப சக்திக்கும், பார்வைக்கும் தப்ப முடியாது "

மாதவன் சொல்லிக்கொண்டே ஒட ஆரம்பித்து விட, ஜான்மில்லர் அவனோடு இணைந்து கொண்டார். ஒரு நிமிட ஒட்டத்திற்குப் பிறகு வளர்மதி ஒரு புதரின் வளைவில் ஒடுவது ஜான்மில்லரின் பார்வையில் பட, தன் கையில் வைத்திருந்த ஜெல் புல்லட் பிஸ்டலால் சுட்டார். வளர்மதி அதற்குள் மறைந்துவிட புல்லட் இலக்கின்றி பாய்ந்தது,
மாதவன் ஒடிக்கொண்டே கேட்டான்.

" டாக்டர்..... வளர்மதி தப்பித்துவிட்ட விஷயம் ஈஸ்வர்க்கும் தீபக்கிற்கும் தெரியுமா ...... ? "

" தெரியாது "

" அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டாமா ...... ? "

மாதவன் கேட்ட கேள்விக்கு ஜான்மில்லர் பதில் சொல்லாமல் ஒடிக்கொண்டிருக்க அவன் மறுபடியும் கேட்டான்.

" என்ன டாக்டர்..... பதிலையே காணோம் ...... ? "

" இதோ பார் மாதவன்..... ஈஸ்வரும் தீபக்கும் ராத்திரி நன்றாக குடித்துவிட்டு போதையிலிருந்து மீள முடியாமல் மரக்கட்டைகளைப் போல் விழுந்து கிடக்கிறார்கள் "

" சரி..... ஜோன்ஸ் எங்கே ...... ? "

" இதே ஜெல் பிஸ்டலால்தான் வளர்மதி ஜோன்ஸையும் சுட்டாள். ஜோன்ஸ் லேப் கட்டிடத்துக்கு பக்கத்தில் விழுந்து கிடக்கிறான். உனக்கு மயக்கம் தெளிந்த மாதிரி அவனுக்கும் ஒரு மணி நேரம் கழித்து மயக்கம் தெளிய வாய்ப்பு இருக்கிறது "

பேசிக்கொண்டே ஒடியதில் ஜான்மில்லருக்கு மூச்சிரைத்தது. லேசாய் தள்ளாடினார்.

" டாக்டர்..... நீங்கள் இனி பேச வேண்டாம். அந்த வளர்மதியை முதலில் வீழ்த்துவோம் " மாதவன் சொல்லிவிட்டு தன்னுடைய ஒட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்தினான். மண்டிக்கிடந்த புதர் வளைவைக் கடந்தான். வளர்மதி கண்ணில் படாமல் போகவே சில விநாடிகள் நின்று சுற்றும் முற்றும் பார்த்தான்.

ஜான்மில்லர் மூச்சு வாங்கிக்கொண்டு பக்கத்தில் வந்தார்.

" என்ன மாதவன் ...... ? "

" எங்கேயோ ஒளிந்து கொண்டு விட்டாள் "

" அவள் ஒளிந்து கொள்வதற்கு இந்தப் பகுதியில் இடமே இல்லையென்று நீ சொன்னாயே ...... ? "

" இப்போதும் எனக்கு அதுதான் ஆச்சர்யம்"

" இந்தப் புதர்க்குள்ளே மறைந்து இருக்கலாமே ...... ? "

" இது விஷ முட்கள் நிரம்பிய அடர்த்தியான புதர். உள்ளே யாரும் நுழைய முடியாது டாக்டர்..... "

சொல்லிக்கொண்டே போன மாதவன் சட்டென்று பேச்சை நிறுத்தி இருட்டை உன்னிப்பாய் பார்த்தான்.

" என்ன பார்க்கிறாய் ...... ? "

" லேப் கட்டிடத்துக்குப் பக்கத்தில் ஏதோ நிற்பது போல் தெரிகிறது "

ஜான்மில்லர் மாதவன் சொன்ன இடத்தை உற்றுப் பார்த்துவிட்டு ஏதோ பேச முயன்ற விநாடி பக்கவாட்டில் அந்த சத்தம் கேட்டது.

இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்.

அந்த இருட்டிலும் புழுதி பறக்க மோப்ப நாய்கள் ஒரு சிறிய கூட்டமாய் ஒடி வருவது தெரிய, ஜான்மில்லர் மிரண்டு போனவராய் மாதவனுக்குப் பின்னால் போய் நின்று கொண்டு அவனுடைய தோள்களைக் கெட்டியாகப்
பற்றிக்கொண்டார். உதடுகளில் வார்த்தைகள் நடுங்கியது.

" மா....மாதவன்...... நாய்களிடமிருந்து என்னைக் காப்பாற்று "

" பயப்படாதீர்கள் டாக்டர்..... நான் இருக்கும் போது நாய்கள் உங்களை ஒன்றும் செய்யாது. என்னுடைய
கட்டளைகளுக்கு அவை கீழ்ப்படிந்து விடும் தைரியமாய் இருங்கள் "

மாதவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வேகமாய் ஒடிவந்த அந்த ஆறு நாய்களும் அவன் மீது தாவி சில விநாடிகள் விளையாடிவிட்டு, அவனுக்குப் பின்னால் மறைவாய் நின்றிருந்த ஜான்மில்லரைப் பார்த்துவிட்டு உறும ஆரம்பித்தது. அவரை நோக்கி நகர்ந்தது.

Rajesh Kumar new series vibareethangal inge virkappadum part 68

மாதவன் சத்தமாய் குரல் கொடுத்தான்.

" கெட் பேக் "

நாய்கள் அவனுடைய கட்டளையைப் பொருட்படுத்தாமல் ஜான்மில்லரை நோக்கி " வர்ர்ர்ர்ர் " என்று சன்னமாய், உறுமியபடி இன்னமும் முன்னோக்கி நகர மாதவன் நாய்களுக்கு குறுக்கே வந்தான். குரலை உயர்த்தினான்.

" ஸ்டே "

நாய்களின் உறுமல் நிற்கவில்லை. கட்டளைகள் தொடர்ந்தன.

" சிட் "

" டவுன் "

" அவே "

மாதவன் விதவிதமாய் நாய்களுக்கான கட்டளை வார்த்தைகளை பிரயோகம் செய்ய, நாய்கள் அதைப் பொருட்படுத்தாமல் ஜான்மில்லரின் மேல் பாய்ந்தது. தடுமாறி கீழே விழுந்த ஜான்மில்லர் சுதாரித்து எழுந்து ஒடத் துவங்க நாய்கள் துரத்த ஆரம்பித்தன.

மாதவன் கத்தினான்.

" டாக்டர்.... ஒடாதீர்கள்..... நீங்கள் ஒடினால் நாய்களின் கோபமும் மூர்க்கமும் அதிகமாகும் "

அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஒடிக்கொண்டிருந்த, ஜான்மில்லர் தடுமாற்றத்தோடு கீழே விழ, நாய்கள் ஆக்ரோஷத்தோடு அவர் மீது பாய்ந்தன.

மாதவன் தன் தொண்டை நாண்கள் தெறிக்கக் கத்தினான்.

" கெட் பேக் "

நாய்கள் அந்தக் கட்டளையைப் பொருட்படுத்தாமல் ஜான்மில்லரை கவ்வி இழுத்தன. அவருடைய அலறல் இருட்டைக் கிழித்தது.

மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் மாதவன் உறைந்து போய் நின்ற விநாடி -

ஜான்மில்லரின் மேல் மொய்த்திருந்த நாய்களில் ஒன்று எகிறிப்போய் விழுந்தது. சின்ன முனகலோடு கத்தியபடி துடித்து நிசப்தமானது.

" என்ன நடக்கிறது ...... ? "

மாதவன் திகைத்துப்போய் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இரண்டாவது நாயும் எகிறிப்போய் விழுந்தது. மெல்ல துடித்து அடங்கியது. தொடர்ந்து முன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது என்று ஒவ்வொன்றாய் சின்னச் சின்ன முனகல்களோடு எம்பி விழுந்து ஸ்லோமோஷனில் துடித்து மெளனமாயின.
ஜான்மில்லர் நாய்களிடம் இருந்து தப்பித்து விட்ட மகிழ்ச்சி கலந்த நிம்மதியோடு எழுந்த மாதவனிடம் ஒடி வந்தார். குழப்பமும் பதட்டமுமாகக் கேட்டார்.

" மாதவன்...... நாய்களை நீ என்ன செய்தாய் ...... ? "

" நான் ஒன்றும் செய்யவில்லை டாக்டர் "

" பின் எப்படி துப்பாக்கியால் சுட்ட மாதிரி ஒவ்வொரு நாயும் துள்ளி விழுந்து அடங்கியது ...... ? "

" தெரியவில்லை..... " என்று மாதவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவனுக்கு இடது பக்கமாய் சற்றுத் தொலைவில் வேலியோரமாய் ஒரு டார்ச்லைட் உயிர்பிடித்துக்கொண்டு ஒரு வெளிச்ச வட்டத்தைக் காட்டியது.
ஜான்மில்லரும், மாதவனும் பதற்றமானார்கள். குரல்கள் நடுங்கப் பேசிக்கொண்டார்கள்.

" மா....மா......மாதவன்......யாரது ? "

" தெ...தெ....தெரியவில்லை டாக்டர் ..... "

" நான் என் கையில் வைத்திருந்த ஜெல் புல்லட் பிஸ்டல் எங்கே? " என்று தனக்குள் கேட்டுக்கொண்டே ஜான்மில்லர் இருட்டில் குனிந்து இரண்டு கைகளாலும் தரையைத் துழாவித் தேட ஆரம்பிக்க தொலைவில் தெரிந்த அந்த ஒரு டார்ச்லைட் வெளிச்ச வட்டத்திற்குப் பக்கத்தில் இன்னொரு வெளிச்ச வட்டம் உற்பத்தியாயிற்று. அதைத் தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட டார்ச்சுகள் கண்விழித்துப் பார்க்க, காற்றில் பூட்ஸ் சத்தங்கள்.

மாதவனுக்குப் புரிந்துவிட்டது. குரலில் பயக்குளிர்.

" டா...டா.....டாக்டர்.... இ.....இது போலீஸ் ..... "

ஜான்மில்லர் அதிர்ந்தார். " எ....எ.....எப்படி.... வந்தார்கள் ? "

" தெ...தெ....தெரியவில்லையே..... "

" எ...எ....என்ன செய்யலாம்.... ஒடலாமா ? "

" வேண்டாம்.... அவர்களிடம் துப்பாக்கி இருக்கிறது. ஒடினால் நாய்களுக்கு நேர்ந்த கதிதான் நமக்கு ஏற்படும்... அப்படியே நில்லுங்கள்..... ஒரு போலீஸ் படையே வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்...... எப்படியோ தகவல் போய்விட்டது "

மாதவன் பயத்தில் வாய் உலர்ந்து சொல்லிக்கொண்டிருக்கும்போதே டார்ச்சின் வெளிச்ச வட்டங்கள் ஒரு பிறை வடிவமாய் மாறி இருவரையும் சூழ்ந்தது.

உறைந்து போய் நின்றிருந்த, இருவருடைய முகங்களின் மேலும் டார்ச் வெளிச்சம் விழ, இன்ஸ்பெக்டர் குணசேகரன் உயர்த்திப்பிடித்த துப்பாக்கியோடு முன்னால் வந்தார்.

ஜான்மில்லர்க்கும், மாதவனுக்கும் முன்பாய் நின்றபடி கேட்டார்.

" ஈஸ்வர்.... எங்கே ? "

இருவரும் பதில் பேசாமல் நிற்க, குணசேகரன் தனது வலது பூட்ஸ் காலை உயர்த்தி மாதவனின் அடி வயிற்றில் உள்ள உறுப்புகள் எல்லாம் கலங்கிப் போகிற அளவுக்கு ஒர் உதை விட்டார். காற்று அதை " ஹக்க் " என்ற சத்தத்தோடு எதிரொலிக்க, மாதவன் பெரிதாய் அலறிக்கொண்டே போய் ஒரு குப்பைக் காகிதம் போல் விழுந்து மடங்கினான்.

குணசேகரனின் பார்வை இப்போது ஜான்மில்லரின் மேல் இடம் பெயர்ந்தது. அவர் வெளிநாட்டு ஜாதி என்று தெரிந்ததும் ஆங்கிலத்தில் குரலை உயர்த்தினார்.

" யார்..... நீங்கள்.....? இங்கே இந்த ஈஸ்வரின் பண்ணை வீட்டில் உங்களுக்கு என்ன வேலை ? "

ஜான்மில்லர் குணசேகரனின் கையிலிருந்த துப்பாக்கியை தன்னுடைய மிரண்டு போன பழுப்பு விழிகளால் பார்த்துக் கொண்டே மெல்லிய குரலில் பேசினார்.

" நான் ஜான்மில்லர். அமெரிக்காவில் இருக்கும் மின்னிசோட்டாவிலிருந்து வருகிறேன். நான் ஒரு ரிசர்ச் அனாலிஸ்ட் அண்ட் டாக்டர்...."

" இங்கே உங்களுக்கு என்ன வேலை ? "

ஜான்மில்லர் மெளனம் சாதிக்க குணசேகரன் தன் கையில் இருந்த துப்பாக்கியையும் குரலையும் உயர்த்தினார். "
நீங்கள் இனி எதையும் மறைக்க முடியாது. ஈஸ்வர்க்கு சொந்தமான இந்த பண்ணை வீட்டில் ஏதோ ஒரு சட்ட விரோதமான ஆராய்ச்சி நடப்பதாக எங்களுக்குத் தெரியும். அது எதுமாதிரியான ஆராய்ச்சி என்பதுதான் தெரியாது. அது என்ன என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும் "

ஜான்மில்லர் தொடர்ந்து மெளனம் காக்க, குணசேகரன் தன் கையிலிருந்த துப்பாக்கியை கீழே விழுந்து கிடந்த மாதவனை நோக்கி திருப்பினார்.

" உம்.... பேர் என்ன ? "

" மா.....மா......மாதவன் ஸார் "

" வளர்மதி எங்கே ? "

" வ....வ.....வளர்மதியா..... யார் ஸார் அது ? "

" வளர்மதியை உனக்குத் தெரியாதா ? "

" தெரியாது ஸார் "

" சரி,,,,,,, ஜோன்ஸ் யாரு ? "

" தெ....தெ......தெரியலை ஸார் "

குணசேகரன் மாதவனையே சில விநாடிகள் உற்று பார்த்துக்கொண்டிருந்து விட்டு பின்பக்கம் திரும்பிப் பார்க்காமல் குரல் கொடுத்தார்.

" சசிகுமார் "

" ஸார் " இடது கையில் டார்ச் லைட்டும் வலது கையில் துப்பாக்கியுமாய் நின்றிருந்த சப்- இன்ஸ்பெக்டர் சசிகுமார் இரண்டடி முன்னால் வந்தார்.

" சொல்லுங்க ஸார்"

" நாம கூட்டிட்டு வந்த அந்த ஆளை இழுத்துட்டு வந்து இவனுக்கு முன்னாடி நிறுத்துங்க"

" எஸ் ஸார் " என்று சொல்லி டார்ச் வெளிச்சத்தில் சிறிது தூரம் நடந்து அங்கே நின்றிருந்த ஒரு நபரின் தோள்பட்டையைப்பிடித்து இழுத்து வந்து மாதவனுக்கு முன்பாய் நிறுத்தினார் சப்- இன்ஸ்பெக்டர் சசிகுமார்.
குணசேகரன் அந்த நபரின் முகத்தை டார்ச் வெளிச்சத்தில் நனைத்தபடி மாதவனிடம் கேட்டார். " இவர் யார்ன்னு உனக்குத் தெரியுதா பாரு? "

மாதவன் பார்த்தான்.

இதயத்தின் முக்கிய பாகத்தில் உடைந்தான்.

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X