• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

” தெ..........தெரியாது ஸார் ”.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (69)

|

- ராஜேஷ்குமார்

டார்ச் வெளிச்சத்தில் தெரிந்த அந்த நபரின் முகத்தைப் பார்த்தபடியே மாதவன் இருக்க இன்ஸ்பெக்டர் குணசேகரன் மறுபடியும் கேட்டார்.

” சொல்லு........ இவரை உனக்குத் தெரியுமா...... தெரியாதா ...... ? ”

Rajesh Kumar new series vibareethangal inge virkappadum part 69

” தெ..........தெரியாது ஸார் ”

குணசேகரனின் கனமான பூட்ஸ் கால் மாதவனின் தாடைப் பகுதியை

” நெக் ” கென்று இடிக்க, வாய்க்குள் ரத்தம் கொப்பளித்து உப்பு கரித்தது. மீண்டும் அவருடைய பூட்ஸ் கால் உயர்ந்தபோது மாதவன் அலறியபடி குரல் கொடுத்தான்.

” தெ..........தெரியும் ஸார் ”

” இவர் யார்ன்னு உன்னோட வாயாலேயே சொல்லு...... ”

” இ....இ....இவர் ஞானமூர்த்தி ஸார். செம்மேடு கிராமத்து வி.ஓ.வாய் இருந்தவர் ”

” தெரியாதுன்னு ஏன் பொய் சொன்னே ...... ? ”

” அது.....அது.... வந்து.......... ” என்று பேசத்திணறிய மாதவனின் முகத்தை நோக்கி துப்பாக்கியை உயர்த்தினார் குணசேகரன்.

” இனி உன்னோட வாயிலிருந்த ஒரு பொய் வந்தாலும் சரி உன்னை சுட்டுத்தள்ள வேண்டியிருக்கும். இந்த ரிடையர்ட் வி.ஓ. ஞானமூர்த்தி பாதி விஷயங்களை சொல்லிட்டார். அதுல ஒரு விஷயம் இந்த ஃபார்ம் ஹவுஸீக்குள்ளே மூர்க்கமான மோப்ப நாய்கள் இருக்குற விஷயம். அதுதான் முன்னெச்சரிக்கையோடு ட்ராங்குலைஸர் துப்பாக்கிகளோடு வந்தோம். மயக்க மருந்து ஊசிகளோடு கூடிய அந்த துப்பாக்கிகளோடு நாங்க சரியான நேரத்துக்கு வந்ததாலத்தான் இந்த ஜான்மில்லரை காப்பாத்த முடிஞ்சுது. இன்னும் ஆறு மணி நேரம் கழிச்சுதான் நாய்களுக்கு சுய உணர்வு திரும்பும். ஆனா இப்ப என் கையில் இருக்கிற இந்த துப்பாக்கியால உன்னை சுட்டா நீ அடுத்த ஜென்மத்தில்தான் கண்ணைத் திறந்து பார்ப்பே....... ”

உடம்பு நடுங்கிப்போனவனாய் மாதவன் அப்படியே மண்டியிட்டு உட்கார்ந்தான்.

” எ...எ.....என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்க ஸார்...... நான் எல்லா உண்மைகளையும் சொல்லிடறேன் ஸார் ”

கைகளைக் கூப்பினான்.

” சரி.... மொதல்ல வளர்மதி எங்கேன்னு சொல்லு ”

மாதவன் பயத்திலும் படபடப்பிலும் வேகவேகமாய் பேச ஆரம்பித்தான்.

” ஸா......ஸார்........ வளர்மதியைக் கடத்தினது நான்தான். இந்த ஃபார்ம் ஹவுஸீக்குத்தான் கொண்டு வந்தேன். மயக்கமாய் இருந்த வளர்மதி நாங்க எதிர்பார்த்த நேரத்துக்கு முன்னாடியே மயக்கம் தெளிஞ்சு எந்திரிச்சு தன்கிட்டயிருந்த ஜெல் புல்லட் பிஸ்டலால் என்னை சுட்டுட்டு ”

மாதவன் பேசப் பேச இடைமறித்தார் குணசேகரன்.

” என்ன சொன்னே..... ஜெல் புல்லட் பிஸ்டலா...... ? ”

” ஆமா...... ஸார் ”

” பார்த்தியா..... மறுபடியும் பொய் பேச ஆரம்பிச்சுட்டே ...... ? ”

” மாதவன் பொய் பேசலை...... இன்ஸ்பெக்டர் அவன் உண்மையைத்தான் சொல்லிட்டிருக்கான் ”

தனக்குப் பின்பக்கம் எழுந்த பெண் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தார் குணசேகரன். கண்களில் திகைப்பு பரவியது.

அடர்த்தியான இருட்டிலிருந்து மெல்ல வெளிப்பட்ட வளர்மதி இன்ஸ்பெக்டர் குணசேகரனை நோக்கி வந்தாள். அவளை நோக்கி வேகமாய்ப் போனார் குணசேகரன்.

” மேடம்..... உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையே..... ஆர்....யூ....ஆல்ரைட் ...... ? ”

” நோ ப்ராப்ளம் இன்ஸ்பெக்டர். அயாம் ஆல்ரைட். இங்கே இந்த ஃபார்ம் ஹவுஸில் என்ன நடந்துட்டிருக்குன்னு நான் சொல்றேன். என்கிட்ட ஜெல் புல்லட் பிஸ்டல் இருந்தது உண்மை. அதை வெச்சுத்தான் மாதவன், ஜோன்ஸை சுட்டுட்டு ஜான்மில்லரை மடக்கினேன். உயிர் மேலிருந்த பயத்தின் காரணமாய் ஜான்மில்லர் சில உண்மைகளை மட்டும் சொல்லியிருக்கார். மீதியை அவர்கிட்டயிருந்து வாங்கணும். அதையும் இன்னும் கொஞ்ச நேரத்துல வாங்கிடலாம். இப்ப எனக்கு இருக்கிற சந்தேகம் இதுதான். இந்த இந்த ஃபார்ம் ஹவுஸிக்குள்ளேதான் நான் இருப்பேன்ன்னு எப்படி கண்டுபிடிச்சு வந்தீங்க இன்ஸ்பெக்டர்...... ? ”

” இந்த விஷயத்துல சைபர் க்ரைம் ப்ராஞ்ச்தான் உதவி பண்ணினாங்க மேடம். செம்மேடு கிராமத்தின் ரிடையர்ட் வி.ஓ. ஞானமூர்த்தியை அவரோட வீட்டுக்குப் போய் பார்த்து பேசிட்டு வந்ததிலிருந்து எனக்கு அவர் மேல ஒரு சந்தேகம் இருந்துட்டேயிருந்தது. அதனால அவரோட போன் நெம்பரை சைபர் க்ரைம் ப்ராஞ்சுக்குக் கொடுத்து அந்த நெம்பரிலிருந்து யார்க்காவது கால் போகுதான்னு மானிட்டரிங் பண்ணச் சொன்னேன். அவங்களும் மானிட்டரிங் பண்ணினாங்க. அந்த சமயத்துலதான் வி.ஓ. ஞானமூர்த்தி ஜோன்ஸீக்கு போன் பண்ணி போலீஸ் ஈஸ்வரை ஸ்மெல் பண்ணிட்டாங்க. போலீஸ்கிட்டே என்னைக் காட்டி கொடுத்துடாதீங்கன்னு கெஞ்சியிருக்கிறார். அந்த கால் ஹிஸ்டரியை பதிவு பண்ணிகிட்ட சைபர் க்ரைம் ப்ராஞ்ச் போலீஸ் ஜோன்ஸோட செல்போன் நெம்பரை ட்ரேஸ் பண்ணின போது அந்தப் போன் இந்த பண்ணை வீட்டில் இருக்கிறது தெரிய வந்தது. நான் உடனடியாய் திரிபுரசுந்தரி மேடத்துக்கு இந்த விஷயத்தை கன்வே பண்ணினேன். ஈஸ்வரோட பண்ணை வீட்டை சர்ச் பண்ண போலீஸ் ஹை அதாரிட்டி பர்மிஷன் கொடுக்க மாட்டாங்கன்னு திரிபுரசுந்தரி மேடம் நினைச்சு டிஸ்ட்ரிக்ட் கலெக்டர் காயத்ரிகிட்டே ஸ்பெஷல் பர்மிஷன் கேட்டு ஆர்டர் வாங்கி, அந்த ஆர்டர் மெஸேஜை எனக்கு ஃபார்வார்ட் பண்ணினாங்க. கலெக்டர் காயத்ரி மேடம் ஒரு போலீஸ் ஸ்குவாடையும் எனக்கு உதவியாய் அனுப்பி வெச்சாங்க.... பை காட்ஸ் கிரேஸ்.... நாங்களும் சரியான நேரத்துக்கு வந்தோம். பண்ணை வீட்டோட முன்பக்கக் கதவு உட்பக்கமாய் பூட்டியிருந்ததால பின்பக்கமாய் வந்து முள்வேலியை கவனமாய் தாண்டினோம். இருட்டில் ஒடிட்டிருந்த ஜான்மில்லரும் மாதவனும் பார்வைக்கு தட்டுப்பட்டாங்க. அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னுதானே உங்களுக்குத் தெரியுமே மேடம் ...... ? ”

இன்ஸ்பெக்டர் குணசேகரன் சொல்லிவிட்டு இருட்டில் அசையாமல் ஒரு சிலையைப் போல் நின்றிருந்த ஜான்மில்லரிடம் வந்து ஆங்கிலத்தில் பேசினார்.

” நாங்கள் மட்டும் சரியான நேரத்திற்கு வந்து உங்களை நாய்களிடமிருந்து காப்பாற்றியிருக்கவிட்டால் இந்நேரம் உங்களுடைய உடம்பு உயிரற்ற சதைக் குவியலாய் மாறியிருக்கும். அந்த நன்றி உணர்ச்சி உங்களுக்கு இருந்தால் நீங்கள் செய்த பயலாஜிகல் சம்பந்தப்பட்ட குற்றங்களையெல்லாம் ஒப்புக் கொண்டு வாக்குமூலம் கொடுங்கள். நவ் ஈஸ் த டைம் டு கன்ஃபெஸ் யுவர் க்ரைம்ஸ் ”

ஜான்மில்லர் பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு, இரண்டு தோள்களையும் குலுக்கியபடி கம்மிப்போன குரலில் சொன்னார்.

” நவ் ஐ ஃபீல் கில்டி. இனிமேல் நான் எதையும் மறைக்க முடியாது. எல்லாவற்றையும் ஒப்புக்கொள்கிறேன் ”

******

மறுநாள் காலை ஏழுமணியிலிருந்தே எல்லா சேனல்களிலும் “பிரேக்கிங் நியூஸ்கள்“ விதவிதமான பின்னணி இசையோடு ஒளிபரப்பாக்கிக் கொண்டிருந்தன.

“ தவறான மரபணு ஆராய்ச்சியில் கர்ப்பிணி பெண்கள் பலி. பகீர் தகவல்கள் “

“ வெளிநாட்டு டாக்டருடன் பிரபல தொழில் அதிபர் ஈஸ்வர், தீபக் இணைந்து கூட்டுச்சதி“

“ மரபணுச் சோதனை மோசடியில் போலீஸ் மற்றும் சி.பி.ஐ. உயர் அதிகாரிகள் பங்கு “

“ சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்பும் துணிந்து பணியாற்றிய போலீஸ் கமிஷனர் திரிபுரசுந்தரி “

“ போலீஸ் இன்ஃபார்மராக பணியாற்றி குற்றவாளிகளை மடக்கிய வளர்மதிக்கு பிரதமர் பாராட்டு “

வீட்டு சோபாவில் உட்கார்ந்து டி.வியைப் பார்த்துக்கொண்டிருந்த ஹரி தன்னருகே இருந்த வளர்மதியை புன்னகை தவழ இமைக்காமல் பார்த்தான்.

வளர்மதி அவனுடைய கன்னத்தைத் தட்டினாள்.

” என்ன அப்படிப் பார்க்கிறீங்க ...... ? ”

” பொறாமையா இருக்கு ”

” எதுக்கு பொறாமை ...... ? ”

” ஒவர் நைட்ல இந்தியா பூராவும் பிரபலமாயிட்டியே அதை நினைச்சுத்தான்..... ”

” அப்புறமா பொறாமைப்படலாம். என்.டி.டி.விக்கு சேனலை மாத்துங்க.... டாக்டர் ஜான்மில்லர்கிட்டே சேனல்காரங்க ஒரு பிரத்யேக பேட்டி எடுத்திருக்காங்களாம். இப்போ டெலிகாஸ்ட் பண்ற நேரம். அவர் என்ன சொல்றார்ன்னு கேட்போம் ”

ஹரி தன் கையிலிருந்த ரிமோட் கண்ட்ரோலால் சேனலை மாற்ற என்.டி.டி.வி சானலில் ஜான்மில்லர் போலீஸ் காவலுடன் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். தொலைக்காட்சியின் நெறியாளர் கேள்விகளை அப்போதுதான் ஆரம்பித்திருந்தார். சுற்றிலும் நிருபர் கூட்டம்.

” இந்த மைட்டோகாண்ட்ரியா செல் பற்றிய மரபணு ஆராய்ச்சிக்கு எல்லா நாடுகளும் தடைவிதித்து இருக்கும்போது இந்தியாவுக்கு வந்து இந்த ஆராய்ச்சியை அப்பாவி பெண்கள் மீது மேற்கொண்டது எந்த வகையில் நியாயம்..?” டி.வி.சேனலின் நெறியாளர் முதல் கேள்வியைக் கேட்க ஜான்மில்லர் இறுகிப்போன முகத்தோடு தாடையைத் தேய்த்துக்கொண்டே பேசினார்.

” தவறுதான்..... அப்பாவி பெண்களை ஆராய்ச்சிக்கு பயன்படுத்தி இருக்கக்கூடாதுதான். ஆனால் இந்த ஆராய்ச்சி மனித குலத்துக்கு நன்மை செய்யக்கூடிய ஒரு உன்னதமான ஆராய்ச்சி என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் ”

” எந்த வகையில் இதை உன்னதமான ஆராய்ச்சி என்று சொல்ல வருகிறீர்களா..?” நெறியாளர் கேட்க ஜான்மில்லர் மெதுவான குரலில் கேட்டார். ” ஸ்டில் பர்த்” என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா

..?”

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X