• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்லாமே உங்களாலதான்... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (70)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

” ஸ்டில் பர்த்தா.... அப்படியென்றால் என்ன ..?” என்.டி.டி.வி சேனலின் நெறியாளர் கேட்டார்.

ஜான்மில்லர் மெளனமாய் சில விநாடிகள் இருந்துவிட்டு தன்னைச் சுற்றிலும் நின்றிருந்த நிருபர்களைப் பார்த்தார்.

பிறகு ஒரு கேலியான புன்னகையோடு பேச ஆரம்பித்தார்.

” என்னைப் பேட்டி எடுப்பதற்காக இங்கே பலதரப்பட்ட சேனல்களைச் சேர்ந்தவர்கள் வந்திருக்கிறீர்கள்.

ஒருத்தர்க்கு கூடவா ” ஸ்டில் பர்த்” என்ற வார்த்தை பரிச்சயமில்லை ..?”

Rajesh Kumar new series vibareethangal inge virkappadum part 70

என்.டி.டி.வி சேனலின் நெறியாளர் கேலியான குரலில் சிரித்தபடி கேட்டார்.

” தெரியாத ஒரு விஷயத்தை தெரியும் என்று எங்களால் எப்படி சொல்ல முடியும்..?”

” அது சரி, உங்களுக்கெல்லாம் கிரிக்கெட் வீரர்களைப்பற்றியும், சினிமா நட்சத்திரங்களைப்பற்றியும் தானே தெரியும் ? ”ஸ்டில் பர்த்” போன்ற மனித நலன் சார்ந்த விஷயங்கள் எல்லாம் தெரிய நியாயமில்லைதான். மருத்துவ அறிவியல் விஷயங்களுக்கு உங்களைப் போன்ற ஊடகங்கள் என்றைக்கும் முக்கியத்துவம் தரப்போவதில்லை” என்று ஜான்மில்லர் சொல்ல, சேனல் நெறியாளர் கோபமாய் குரலை உயர்த்தினார்.

”ஸ்டில் பர்த்” மனித நலன் சார்ந்த உன்னதமான விஷயம் என்று சொன்னீர்கள். மனிதர்களின் மேல் ஆய்வு செய்யக்கூடிய அளவுக்கு முக்கியமான ஒன்றா அது ..?”

” ஆமாம்.... அதை நாம் கண்டு கொள்ளாமல் இருந்தால் இந்த உலகத்தின் ஜனத்தொகை படிப்படியாக குறைய ஆரம்பித்து ஏதாவது ஒரு நூற்றாண்டில் இந்த பூமியில் மனித இனமே இல்லாமல் போய்விடும் ”

என்.டி.டி.வி சேனலின் நிருபர்களும், நெறியாளரும் அதிர்ந்து போனவர்களாய் ஜான்மில்லரை ஒரு பயப் பார்வை பார்க்க, அவர் சலனமற்ற முகத்தோடு பேச ஆரம்பித்தார்.

” இந்த உலகத்தில் 15 விநாடிக்கு ஒரு குழந்தை பெண்ணின் கருப்பையில் இருக்கும்போதே இறந்து போய்விடுகிறது. அதற்கு பெயர்தான் ”ஸ்டில் பர்த்” இந்த விஷயம் உங்களுக்குத் தெரியுமா..?”

” தெரியாது ”

” ஒரு வருடத்திற்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தாயின் கருப்பையை விட்டு வெளிவரும் முன்பே இறந்து போய்விடுகின்றன. இதற்கு காரணம் மைட்டோகாண்ட்ரியா செல்லில் உள்ள மரபணு பிழைகள்தான். அந்த பிழைகளை சரி செய்ய வேண்டுமென்றால் எம்.டி.ஸி.வெர்சஸ் என்.டி.என்.ஏ. கோண்ட்ரோஸோம் எனப்படும் ஜீன் தெரபி ஆய்வை கர்ப்பிணி பெண்களின் மேல் பிரயோகம் செய்து பார்த்தால் மட்டுமே முடியும் ”

” அதற்கு எங்கள் நாட்டுப்பெண்கள்தான் உங்களுக்கு கிடைத்தார்களா ..?”

” இந்தக் குற்றச்சாட்டுக்கு நான் பொறுப்பு ஏற்க முடியாது. இதற்கு பொறுப்பு ஏற்கவேண்டியவர்கள் ஈஸ்வரும், தீபக்கும்தான். வறுமையின் பிடியில் சிக்கியிருக்கும் ஏழைப் பெண்களுக்கு இலவசத் திருமணங்கள் செய்து வைத்து அவர்களை கண்காணித்து மூன்று மாதம் கர்ப்பம் ஆகும்வரை காத்திருந்து சமயம் பார்த்து, அவர்களை ஆய்வுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று யோசனை சொன்னவர்களும் அந்த யோசனையை செயல்படுத்தியவர்களும் அவர்கள்தான். நான் முதலில் வேண்டாமென்றுதான் சொன்னேன். ஆனால் இந்த ஆய்வு வெற்றியில் முடிந்தால் பார்மசூடிகல் இண்டஸ்ரியை கையில் வைத்து இருக்கும் கார்ப்பரேட் கம்பெனிகள் கோடிக்கணக்கில் டாலர்களை தருவதாக சொன்னதும் எனக்கும் சபலம் தட்டியது. நான் ஒரு நல்ல ஆராய்ச்சியாளனாக, மருத்துவனாக இருந்திருக்கலாம். விதி யாரை விட்டது ? ஈஸ்வர், தீபக்கோடு சேர்ந்து நானும் பல அப்பாவி பெண்களின் மரணங்களுக்கு காரணமாய் இருந்துவிட்டேன். உங்கள் நாட்டின் சட்டம் எனக்கு எதுமாதிரியான தண்டனையைக் கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன் ”

சொன்ன ஜான்மில்லர் மேற்கொண்டு டி.வியின் நெறியாளர் கேட்கப்போகும் கேள்விகளுக்கு பதில் சொல்ல விருப்பப்படாமல் போலீஸ் அதிகாரிகளோடு எழுந்து போய்விட நெறியாளர் மைக்கில் டி.வி.வ்யூவர்ஸைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.

” தமிழகத்தில் நடந்திருக்கும் இந்த பயலாஜிகல் க்ரைம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த அக்கிரமத்திற்கு காரணமான பிரபல தொழிலதிபர் ஈஸ்வரும், அவருடைய மகன் தீபக்கும் மயக்கத்திலிருந்து மீள்வதற்காக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சுய உணர்வுக்கு வந்ததும் மேலும் பல உண்மைகள் வெளியே வரலாம். இந்த மரபணு ஆராய்ச்சிக்கு மறைமுகமாய் ஆதரவு அளித்த அதிகாரிகள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சகம் உறுதிபடச் சொல்லியுள்ளது”

டி.வி.நெறியாளரின் பேச்சை உன்னிப்பாய் கேட்டுக்கொண்டிருந்த வளர்மதி தன் செல்போனின் டயல்டோனை செவிமடுத்திவிட்டு ” அழைப்பது யார் ” என்று எடுத்துப் பார்த்தாள்.

மறுமுனையில் திரிபுரசுந்தரி. ஸ்பீக்கரை ஆன் செய்த வளர்மதி உற்சாகமாய் குரல் கொடுத்தாள்.

” ரெண்டாவது குட்மார்னிங் மேடம் ”

திரிபுரசுந்தரி சிரித்துவிட்டு சொன்னாள்.

” குட்மார்னிங்...... இன்னிக்கு எல்லா டி.வி.சானல்களிலும் உன்னோட பேரும் போட்டோவும்தான்.... வளர் ”

” எல்லாமே உங்களாலதான் மேடம்..... நீங்க கலெக்டரோட உதவியைக் கேட்டது சரியான டிஷிசன் ”

” உண்மைதான்..... இப்ப நான் உனக்கு எதுக்காக போன் பண்ணியிருக்கேன் தெரியுமா ...... ? ”

” சொல்லுங்க மேடம் ”

” என்னோட சஸ்பெண்ட் ஆர்டர் ரத்தாகி இப்போ டி.ஜி.பி.பஞ்சாபகேசனுக்கு சஸ்பெண்ட் ஆர்டர் கொடுத்திருக்காங்க ”

” மே.....மே.....மேடம் என்ன சொல்றீங்க ...... ? ”

” இன்னிக்குக் காலைல பத்து மணிக்கு நான் ட்யூட்டியில் ஜாயின் பண்ணனும் ”

” கடவுள் இருக்கார் மேடம்....... ”

” அதுல என்ன சந்தேகம் வளர்..... அப்புறம் உனக்கு இன்னொரு சந்தோஷமான விஷயம்”

” சொல்லுங்க மேடம் ”

” ஒரு குடும்பப் பெண்ணான நீ ரிஸ்க் எடுத்து ஒரு போலீஸ் இன்ஃபார்மரா எனக்காக வேலை பார்த்தே. நானும் உன்னை அண்டர் எஸ்டிமேட் பண்ணி ஒரு இன்ஃபார்மராத்தான் நினைச்சேன். ஆனா நீ அரிதான யோகா சம்பந்தப்பட்ட கலையையெல்லாம் கத்துகிட்டு, நானே கேள்விப்படாத ஜெல் புல்லட் என்கிற ஒரு ஸ்பேரோ பிஸ்டலை மறைச்சு வெச்சுகிட்டு நேற்றைக்கு ராத்திரி பூராவும் அந்த இருட்டான ஃபார்ம் ஹவுஸீக்குள்ளே ஜான்மில்லர், ஜோன்ஸ், மாதவன் மூணு பேரையும் கதறடிச்சு துவம்சம் பண்ணியிருக்கே..... இந்த ப்ரேவரி அட்வென்ச்சர்க்காக உனக்குக் கிடைக்கப் போகிற பரிசு என்ன தெரியுமா ...... ? ”

” பரிசா...... ? ”

” ஆமா... வளர்... உன்னை போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கிற இண்டலிஜென்ஸ் விங்கில் ஒரு ஷேடோ ஸ்குவாட் ஆபீஸராய் நியமனம் பண்ணியிருக்காங்க. சீஃப் மினிஸ்ட்ரோட நேரிடையான சிபாரிசு இது. இன்னும் ரெண்டு நாளைக்குள்ளே நீ இந்த போஸ்ட்ல ஜாய்ன் பண்ண வேண்டியிருக்கும். உன்னோட மாமியார் மாமனார் என்ன சொல்வாங்களோன்னு மனசைப் போட்டு குழப்பிக்காதே. ஹாஸ்பிடல்ல இருக்கிற அவங்க கூட கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேசிட்டேன். அவங்களுக்கும் இந்த விஷயத்துல ரொம்பவும் சந்தோஷம் ”

” மே...மே.....மேடம்........ ”

” ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு இதுக்கெல்லாம் காரணம் நீங்கதான் மேடம்ன்னு சொல்லி புராணம் பாட ஆரம்பிச்சுடாதே. வாசல்ல ப்ரஸ் ரிப்போர்ட்டர்ஸ் வந்து இருக்காங்க. நான் சாயந்தரம் மறுபடியும் உன்கிட்டே பேசறேன். ஹரிகிட்டேயும் பேசணும்”

” மேடம் ”

” என்ன ...... ? ”

” இந்த ஈஸ்வர் கேஸ்ல என்னோட மனசுக்குள்ளே இன்னமும் ஒரு குழப்பம் இருக்கு ”

” என்ன ...... ? ”

” ரெசின் விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்ட பூங்கோதையின் கணவன் கோலப்பன் வீட்டுக்கு நாம் போனபோது கோலப்பனின் அண்ணன் ராஜப்பன் தன்னோட தம்பி கோலப்பனைப்பற்றி ஒரு அதிர்ச்சியான தகவல் சொன்னார். உங்களுக்கு ஞாபகம் இருக்கா மேடம் ...... ? ”

” நல்லாவே ஞாபகம் இருக்கு. பள்ளிக்கூடத்துக்கு போகாத எழுதப் படிக்கத் தெரியாத கோலப்பன் செல்போன்ல யாரிடமோ ஆங்கிலத்தில் பேசினதாகவும், அவனோட ரூம்ல செல்ஃபிஷ் ஜீன், நைட் ப்ளைண்ட் வாட்ச்மேக்கர் ஜீன் என்கிற தலைப்புகளோடு ரெண்டு ஆங்கிலப் புத்தகங்கள் இருந்ததாகவும் சொன்னான். அதைத்தானே நீ இப்போ மென்ஷன் பண்றே ...... ? ”

” ஆமா மேடம்..... ”

” ராஜப்பன் அப்படி பொய் சொல்லியிருக்கான் ”

” அவன் ஏன் பொய் சொல்லணும் ...... ? ”

” நீ இப்ப கேட்ட இந்த கேள்விக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடிதான் எனக்கு பதில் கிடைச்சுது.... அதுவும் மாதவனை போலீஸ் லாக்கப்பில் வெச்சு விசாரிக்கும்போதுதான் உண்மை வெளியே வந்தது”

” என்ன உண்மை மேடம்...... ? ”

” ராஜப்பன் மாதவனோட ஃப்ரண்ட். கோலப்பனுக்கும், பூங்கோதைக்கும் கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு செஞ்சதே ராஜப்பன்தான். கோலப்பனும், பூங்கோதையும் இறந்தது தற்கொலையால் அல்ல, அவங்க கொலை செய்யப்பட்டு இருக்கலாம்ன்னு போலீஸ் விசாரிக்க ஆரம்பிச்சதும் கேஸை திசை திருப்பறதுக்காகவும், கோலப்பன்கிட்டே ஏதோ தப்பு இருக்குன்னு போலீஸை நம்ப வைக்கிறதுக்காகவும் ராஜப்பன் சொன்ன பொய்தான் அது. அந்த பொய்யை மேலும் பலப்படுத்தறதுக்காக கோலப்பனோட ரூம்ல வைக்கப்பட்ட அந்த ரெண்டு புத்தகங்கள்தான் செல்ஃபிஷ் ஜீன், நைட் ப்ளைண்ட் வாட்ச்மேக்கர் ஜீன்”

” ரொம்பவும் சாமார்த்தியமா செயல்பட்டிருக்காங்க மேடம்...... ”

” என்ன சாமார்த்தியமா செயல்பட்டு என்ன பிரயோஜனம் வளர்..... ? உண்மைங்கிறது ஒரு நெருப்பு மாதிரி. அதை எந்த இடத்திலும் ஒளிச்சு வைக்க முடியாது. அப்படி ஒளிக்க வைக்க நினைச்சா அந்த இடமே இருக்காது. இந்த அடிப்படை அறிவு தப்பு பண்றவங்களுக்கு தெரியாமே போனதுதான் ஆச்சர்யம். ஈஸ்வர், தீபக், ஜான்மில்லர், ஜோன்ஸ், மாதவன் இந்த அஞ்சு பேர்க்கும் இனி வரப்போகிற நாட்கள் எல்லாம் சிறைச்சாலையின் நிழல்படிந்த நாட்கள்தான். சுப்ரீம் கோர்ட்ல ” டெத் சென்டன்ஸ்” கிடைக்கவும் வாய்ப்பிருக்கு...... ஏன்னா கொலை செய்யப்பட்டதில் பாதி பேர் பெண்கள்”

” உண்மைதான் மேடம். சி.பி.ஐ. ஆபீஸர் சில்பாவும், நர்மதாவும் அந்த லிஸ்ட்ல சேரலை. இப்ப அவங்க எப்படி இருக்காங்க மேடம்...... ? ”

” ஜி.கே.ஹாஸ்பிடல்ல அட்மிட்டாகி ட்ரீட்மெண்ட்ல இருக்காங்க. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் டாக்டர் மிருதுபாஷிணிக்கு போன் பண்ணி விசாரிச்சேன். ரெண்டு பேரும் மயக்க நிலையிலிருந்து மீண்டு சுய உணர்வுக்கு வர எப்படியும் மத்தியானம் ரெண்டு மணியாயிரும்ன்னு சொன்னாங்க. சாயந்தரம் நாலு மணிக்கு மேல் நீயும் நானும் ஹாஸ்பிடலுக்குப் போய் பார்த்து பேசிட்டு வரலாம் ”

” கண்டிப்பா மேடம் ”

செல்போன்கள் மெளனமாக, வளர்மதி தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஹரியைப் பார்த்தாள்.

” திரிபுரசுந்தரி மேடம் சொன்னதைக் கேட்டீங்களா ...... ? ”

” ம்.....ம்....... ”

” என்ன பேச்சையே காணோம் ...... ? ”

” மறுபடியும் பொறாமையா இருக்கு வளர் ”

” எதுக்குப் பொறாமை ? போலீஸ் டிபார்ட்மெண்ட்டோட இண்டலிஜென்ஸ் விங்க்ல ஷேடோ ஸ்க்வாட் ஆபீஸர் வேலை எனக்கு கிடைச்சதுக்காகவா ...... ? ”

” இல்லை ”

” அப்புறம் ...... ? ”

” தமிழ்நாடு கவர்னர் தன்னோட ட்விட்டர் பக்கத்துல உன்னை புகழ்ந்து ஒரு பத்து வரி எழுதியிருக்கார். அதுல ஒரு வார்த்தை நீ மஹிளா ரத்னாவாம். மனசு திறந்து பாராட்டியிருக்கார் ”

” மஹிளா ரத்னாவா.....அப்படீன்னா ...... ? ”

” பெண்குலத்துக்கே நீ ரத்தினமாம் ”

” அப்ப நீங்க பொறாமைப்படறது சரிதான் ” சொல்லிவிட்டு வளர்மதி சிரிக்க, அந்தச் சிரிப்பில் ஹரியும் இணைந்து கொண்டான்.

(நிறைந்தது)

கடந்த 70 அத்தியாயங்களாக எங்களுடன் உடன் பயணித்து, ஊக்குவித்து, கதையின் போக்கு குறித்து தொடர்ந்து ஆர்வத்துடன் கவனித்து வந்து, பேராதரவு கொடுத்த வாசகர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த அன்பு வணக்கங்கள், நன்றிகள்.


Rajesh Kumar Signature

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70]

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X