For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நல்லா செக் பண்ணி பார்த்தீங்களா.. பைவ் ஸ்டார் துரோகம் (44)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

போலீஸ் கமிஷனர் ஆதிமுலத்தையும், க்யூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் வேல்முருகனையும் வருமானவரித்துறையைச் சேர்ந்த நித்திலனையும் ஒரு சேர பார்த்த ஹரிஹரன் வெகுவாய் முகம் மாறினார். நெற்றி வியர்வையில் மின்னியது. குரல் குழறியது.

“ஸ.....ஸார்“

போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் மெல்ல நடை போட்டு அவரை நெருங்கினார்.

“என்ன மிஸ்டர் ஹரிஹரன்.... சி.எம்மோட வோரல் ஆர்டரை ராணுவ கட்டளை மாதிரி நினைச்சுட்டு இந்த வீட்டை ரெய்ட் பண்ணி பணத்தை அள்ளிட்டு போக வந்துட்டீங்க போலிருக்கு.......! “

Rajesh Kumars Five Star Droham serial episode 44

“அது.... வந்து.......! “

“நீங்க பேச சிரமப்பட வேண்டாம். எனக்கு உங்க நிலைமை புரியுது. நம்மை மாதிரி அரசு அதிகாரிகள் எல்லாருமே வஜ்ரவேலு மாதிரியான அரசியல்வாதிகளுக்கு அடிமைதான். நானும் அவர்கிட்டே ஒரு அடிமை மாதிரி இருந்து ஒரு கட்டத்துல ஞானோதயம் ஏற்பட்டு திருந்திட்டேன். மக்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்யறதுக்காக ஒதுக்கப்படற கோடிக்கணக்கான பணத்தை இந்த அரசியல் முதலைகள் விழுங்கி ஏப்பம் விடறதை என்னால ஜீரணிக்க முடியலை. அதான் நியாயம், நேர்மை இருக்கிற சீப் கமிஷனர் ஆஃப் இன்கம்டாக்ஸ் ஆபீஸர் மிஸ்டர் அருள் பக்கம் வந்துட்டேன். முகில்வண்ணன் மன அமைதிக்காகவும், இடமாற்றத்துக்காகவும் தன்னோட சொந்த கிராமத்துக்கு புறப்பட்டு போயிருக்கார். அவர் அந்த கிராமத்திலிருந்து திரும்பி வர்றதுக்குள்ளே இந்த பண்ணை வீட்டில் இருக்கிற ஊழல் பணம் 500 கோடி ரூபாயையும் எடுத்து அரசு கஜானாவில் சேர்க்க முயற்சிகளை எடுத்துகிட்டோம். ஆனா முகில்வண்ணன் இந்த வீட்ல இருந்த பணத்தை வேற எங்கேயோ கொண்டு போயிட்டார். நம்ம நாட்டில் இருக்கிற அரசியல்வாதிகளுக்கு ஆறாம் அறிவு வேலை செய்யற மாதிரி வேற யார்க்கும் வேலை செய்யறதில்லை. இதுக்கு முகில்வண்ணன் நல்ல உதாரணம்“

ஹரிஹரன் தயக்கமாய் குறுக்கிட்டார்.

“நான் இப்ப என்ன ஸார் பண்ணனும் ? “

“உங்க போனை எடுத்து சி.எம். வஜ்ரவேலுவை காண்டாக்ட் பண்ணி முகில்வண்ணனோட பண்ணை வீட்டில ஒரு பத்து ரூபாய் நோட்டு கூட கிடைக்கலை. அறைகளுக்கு கீழே இருந்த செல்லர்களில் நெல் மூட்டைகள்தான் அடுக்கப்பட்டு இருந்தது. மேற்கொண்டு என்ன செய்யறதுன்னு தெரியலைன்னு சொல்லிப்பாருங்க. அவர்கிட்டேயிருந்து எது மாதிரியான ரிப்ளை வருதுன்னு பார்ப்போம். ஸ்பீக்கரை ஆன் பண்ணிட்டு பேசுங்க. நாங்க இங்கே இருக்கிறது அவர்க்கு தெரிய வேண்டாம்“

ஹரிஹரன் சில விநாடிகள் தயக்கமாய் இருந்து விட்டு தன்னுடைய செல்போனை எடுத்து ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு வஜ்ரவேலுவை தொடர்பு கொண்டார்.

அடுத்த பத்து விநாடிகளில் சி.எம். வஜ்ரவேலின் குரல் உப்புத்தாளில் ஆணியை வைத்து கிழித்தாற்போல் கேட்டது.

“என்ன ஹரிஹரன் காரியம் பழமா ? “

“இ....இ.....இல்லை ஸார் “

“என்ன சொல்றீங்க ? “

“ஸார்....... இங்கே எல்லா செல்லர் அறைகளையும் செக் பண்ணி பார்த்துட்டோம். நெல் மூட்டைகளாய் அடுக்கி வெச்சிருக்கு... அந்த 500 கோடி பணம் இங்கே இல்லை ஸார்“

மறுமுனையில் வஜ்ரவேலின் குரல் உச்சபட்ச டெஸிபிளில் எகிறியது.

“நல்லா செக் பண்ணி பார்த்தீங்களா ? “

“ஒரு இடம் விடாமே துருவிப் பார்த்துட்டோம் ஸார். ஹண்ட்ரண்ட் பர்ஸன்ட் பணம் இங்கே இல்லை ஸார். முகில்வண்ணன் பணத்தை வேற எங்கேயோ கொண்டு போயிட்டார். அநேகமாய் இப்ப அவர் போயிருக்கிற செந்தட்டி கிராமத்து வீட்ல கூட பதுக்கியிருக்கலாம்“

“அதுக்கு வாய்ப்பு இல்லை ஹரிஹரன். ஏன்னா அந்த கிராமத்து வீட்டுக்கு நான் போயிருக்கேன். ஓடு வேயப்பட்ட பழங்கால வீடு. ரெண்டு ஏக்கர் தென்னந்தோப்புக்கு நடுவில் கட்டப்பட்ட ஒரு சின்ன வீடு அது. அந்த வீட்டுக்குள்ளேயெல்லாம் பணத்தைப் பதுக்கி வைக்க முடியாது“

“ஸார்.... இந்த வீட்லேயும் பணம் இல்லை. அந்த கிராமத்து வீட்டிலேயும் பணத்தைப் பதுக்கி வைக்க வாய்ப்பு இல்லைன்னு சொல்றீங்க. முகில்வண்ணனுக்கு சென்னையிலோ வேறு ஊர்களிலோ வீடு கிடையாது. அப்படீன்னா அந்தப் பணம் எங்கே இருக்குன்னு எப்படி ஸார் கண்டுபிடிக்கிறது...... ? “

“ஹரிஹரன்... ! எனக்கு ஒரு ரெண்டு நாள் டயம் கொடுங்க...... முகில்வண்ணன் அந்தப் பணம் 500 கோடியை எங்கே பதுக்கி வைக்க வாய்ப்பு இருக்குன்னு நான் கண்டுபிடிச்சு சொல்றேன்“

“இப்ப நாங்க என்ன பண்றது ஸார் ...... ? “

“அந்த இடத்தை விட்டு உடனடியாய் கிளம்பிடுங்க..... மீடியாக்களுக்கு நியூஸ் போகாதபடி நான் பார்த்துக்கிறேன்“

“எஸ்....ஸார்.....“ ஹரிஹரன் செல்போனை அணைத்துவிட்டு வியர்வை மின்னும் முகத்தோடு கமிஷனர் ஆதிமுலத்தை ஏறிட்டுப் பார்க்க அவர் மெலிதாய்ப் புன்னகைத்தார்.

“இனியும் சி.எம்.க்கு விசுவாசமாய் இருக்கப் போறீங்களா...... இல்லை.... எங்க பக்கம் வர்றீங்களா ? “

“உங்க பக்கத்துக்கு வந்துட்டோம் ஸார்..... மினிஸ்ட்டரி ஆஃப் ஃபைனான்ஸ் இந்த 500 கோடி ரூபாய் விவகாரத்துல இன்வால்வ் ஆகியிருக்கும்போது நாங்க எப்படி ஸார் சி.எம். பண்ற அநியாயத்துக்கு துணை போக முடியும் ...... ? “

“தட்ஸ்குட்..... நிலைமையை சரியாய்ப் புரிஞ்சுகிட்டீங்க,... ஆனா இன்னும் ஒரு ரெண்டு நாளைக்கு சி.எம்.க்கு விசுவாசமாய் இருக்கிறமாதிரியான நடிப்பைக் கன்டின்யூ பண்ணுங்க. அதுக்குள்ளே முகில்வண்ணன் அந்த 500 கோடி ரூபாயை எங்கே யார்கிட்டே கொடுத்து எப்படி பதுக்கி வெச்சிருக்கார் என்கிற உண்மையை சி.எம். கண்டுபிடிச்சு சொல்லிடுவார். நீங்க அந்த விஷயத்தை எங்களுக்கு கன்வே பண்ணினா போதும். அதுக்குப்பிறகு நடக்க வேண்டியது நாங்க பார்த்துக்குவோம்“

“எஸ்......ஸார்“

“இப்போதைக்கு என்கிட்டே “எஸ் ஸார்“ன்னு சொல்லிட்டு மறுபடியும் சி.எம்.க்கு விசுவாசமாய் மாறிட மாட்டீங்களே ஹரிஹரன்? “

“நோ... ஸார்.......இனிமேலும் நாங்க சி.எம்.க்கு ஆதரவாய் இருந்தா பிரச்சினைகளை ஃபேஸ் பண்ண வேண்டியது நாங்கதான். இனிமேல் நீங்க சொல்றபடிதான் எங்களோட நடவடிக்கைகள் இருக்கும். நவ் வீ ஆர் இன் த சேம் போட் ஸார்... ! “

“தேங்க்யூ ... ! சி.எம் இந்த விஷயத்துல மேற்கொண்டு என்ன செய்யப்போறார்ன்னு பார்ப்போம். அந்த 500 கோடி ரூபாய் பணம் முகில்வண்ணனால எந்த இடத்துல மறைச்சு வைக்கப்பட்டிருக்கு என்கிற உண்மையை முதல்ல உங்ககிட்டதான் சொல்லுவார். அவர் அப்படிச் சொன்ன அடுத்த நிமிஷமே அந்த விஷயம் எனக்கு வந்துடணும்“

“நிச்சயமாய் வரும் ஸார்“

செந்தட்டி கிராமம்

இரவு ஒன்பது மணி. ஒட்டு மொத்த கிராமமும் இருட்டிலும் நிசப்தத்திலும் உறைந்து போயிருந்தது.

இரண்டு ஏக்கர் பரப்புள்ள தென்னந்தோப்புக்கு நடுவில் அந்த பழைய வீடு மங்கிப்போன ட்யூப் லைட் வெளிச்சத்தோடு தெரிய, வீட்டின் உட்புற அறையில் போடப்பட்டிருந்த கட்டிலின் மேல் கண்மூடிப்படுத்து இருந்தார் முகில்வண்ணன். தாடை முழுவதும் நரை ரோமம்.

“மாமா “ குரல் கேட்டு கண்களை மலர்த்தினார்.

மருமகள் மலர்க்கொடி தன்னுடைய இடது கையில் மாத்திரையும் வலது கையில் பால் நிரம்பிய டம்ளருமாய் நின்றிருந்தாள். அருகே மகள் கயல்விழி கனத்த கவலை முகமாய் தெரிந்தாள்.

“எ..எ...என்னம்மா! “ என்று கேட்டுக்கொண்டே தளர்வாய் எழுந்து உட்கார்ந்தார் முகில்வண்ணன்.

“மாத்திரையைப் போட்டுகிட்டு பாலை குடிச்சுடுங்க மாமா.....“

“இதெல்லாம் எதுக்கம்மா....? திடீர்ன்னு ஒரு ஹார்ட் அட்டாக் வந்து போயிட்டாக்கூட பரவாயில்லைன்னு தோணுது “

கயல்விழி முகில்வண்ணனின் கையைப் பற்றினாள். “அப்பா....... நீங்க எவ்வளவு தைரியசாலின்னு எனக்குத் தெரியும். நீங்களே இப்படி மனசு உடைஞ்சு பேசினா நானும் அண்ணியும் எப்படி தைரியமாய் இருப்போம் ....? “

“செந்தமிழ் எப்படி இருக்கானோ தெரியலை. டாக்டருக்கு போன் பண்ணினா அவர் போனை அட்டெண்ட் செய்யாமே அவாய்ட் பண்றார்...... “

“நானும் போன் பண்ணினேன் மாமா. டாக்டர் போனை ஸ்விட்சு ஆஃப் பண்ணி வெச்சிருந்தார். நீங்க சி.எம்.கிட்டே பேசிப்பாருங்க மாமா......! “

“நாளைக்கு காலையில் போன் பண்றேம்மா“ என்று சொன்னவர் மலர்க்கொடி கொடுத்த மாத்திரையை விழுங்கி விட்டு பால் டம்ளரை வாங்கிக்கொண்டார்.

“அப்பா “ கயல்விழி குரல் கொடுத்தாள்.

“என்னம்மா ? “

“இந்த ரூம்ல உங்களுக்கு துணையாய் நம்ம கார் ட்ரைவர் சாமுவேல் படுத்துக்கட்டும் “

“வேண்டியதில்லம்மா...... நானே தனியாய் படுத்துக்குவேன்... “

“அப்பா ...... டாக்டர் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.... உங்களுக்கு மறுபடியும் ஹார்ட் அட்டாக் வந்தா உடனடியாய் ஒரு மாத்திரை போட்டுக்கச் சொல்லியிருக்கார். அந்த மாத்திரையை எடுத்து கொடுக்கவாவது உடனடியாய் ஒருத்தர் வேண்டாமா? சாமுவேலுவும் அய்யா ரூம்ல நான் படுத்துக்கறேன்னு சொல்றான். ஒரு வார்த்தை சொன்னா கேளுங்கப்பா. சின்னக்குழந்தை மாதிரி முரண்டு பிடிக்காதீங்க........ ! “

“சரி.... அவனை அனுப்பி வையம்மா..... உடம்புக்கும், மனசுக்கும் ஏதாவது ஒண்ணு வந்துட்டா ஒருத்தரோட உதவியை எதிர்பார்க்க வேண்டியிருக்கு.... “

கயல்விழி அறைக்கு வெளியே பார்த்து குரல் கொடுத்தாள்.

“சாமுவேல்“

அடுத்த சில விநாடிகளில் அந்த ஆறடி உயர முப்பது வயது இளைஞன் பவ்யமாய் அறைக்குள் நுழைந்தான்.

“அம்மா “

“அப்பா ரூம்ல படுத்துக்கோ...... “

“சரிங்கம்மா “

“அசந்து தூங்கிடாதே...... அப்பா ஏதாவது குரல் கொடுத்தா உடனே எந்திரிச்சு பார்க்கணும்“

“நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்கம்மா. நான் பார்த்துக்கிறேன்“

மலர்க்கொடியும், கயல்விழியும் அறையினின்றும் வெளியேறிப்போக, சாமுவேல் சுவரோரமாய் பாய் விரித்து விட்டு தலையணையையும் போர்வையையும் எடுத்துக்கொண்டான்.

பாலைக்குடித்து முடித்துவிட்டு டம்ளரை கீழே வைத்த முகில்வண்ணன் குரல் கொடுத்தார்.

“சாமுவேல்“

“அய்யா“

“எம் பொண்ணும் மருமகளும் போயிட்டாங்களா ? “

அவன் வெளியே எட்டிப்பார்த்துவிட்டு சொன்னான். “போயிட்டாங்கய்யா“

“கதவைச்சாத்தி தாழ்ப்பாள் போட்டுவிட்டு இப்படி பக்கத்துல வந்து உட்கார்“

அவன் கதவைச் சாத்தி தாழிட்டு விட்டு முகில்வண்ணனின் அருகே போட்டப்பட்டிருந்த ஸ்டூலில் உட்கார்ந்தான். “சொல்லுங்கய்யா“

முகில்வண்ணன் குரலை தாழ்த்தினார். “திரிசூலம் ஹாஸ்பிடலுக்குப்போய் நீ செந்தமிழோட கதையை முடிச்சியா இல்லையா? “

“முடிச்சுட்டேன்யா..... ! “

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
Rajesh Kumar's Five Star Droham serial episode 44
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X