For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ம்...... வேலையை ஆரம்பி..... பைவ் ஸ்டார் துரோகம் (48)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

அந்த நிழல் மண்டிய தென்னந்தோப்பில் மரங்களுக்கு இடையே உருவாகியிருந்த ஒற்றையடிப் பாதையில் நடந்தார்கள் நான்கு பேரும்.

தூரத்து வயலில் பெண்கள் சீராய் அணிவகுத்து குனிந்த வாக்கில் நாற்றுக்களை நட்டுக்கொண்டிருக்க அதற்கு அப்பால் இருந்த நிலத்தை ட்ராக்டர் ஒன்று சிரத்தையாய் உழுது கொண்டிருந்தது.

முகில்வண்ணன் தனக்கு முன்பாய் போய்க் கொண்டிருந்த சாமுவேலைக் கூப்பிட்டார்.

“ சாமுவேல் “

Rajesh Kumars Five Star Droham serial episode 48

“ அய்யா “

“ எதுக்கும் ஒரு தடவை எல்லாப்பக்கமும் பார்த்துக்க நாம நாலு பேரும் சமாதி மண்டபத்துக்குள்ளே போறதை யாரும் பார்த்துடக்கூடாது “

“ நாம யாரோட பார்வைக்கும் படாமேதான் போய்கிட்டு இருக்கோம்ய்யா....... கிராமத்தோட ஒட்டுமொத்த ஜனமும் இப்போ வயற்காட்டுலதான் வேலையைப் பார்த்துட்டு இருப்பாங்க..... “

கயல்விழி குறுக்கிட்டுக் கேட்டாள். “ அப்படியே யாராவது பார்த்தாலும் அவங்களால் என்ன செய்ய முடியும் ? அப்பாவை நிமிர்ந்து பார்க்கக்கூட யார்க்கும் தைரியமில்லை “

“ அப்படி சொல்லாதீங்கம்மா...... ஜனங்க முந்தி மாதிரி இல்ல... தெளிவாய் இருக்காங்க....நாம அவங்களைக் காட்டிலும் தெளிவாய் இருந்தாத்தான் வரக்கூடிய பிரச்சினைகளை சந்திச்சு ஜெயிக்க முடியும் “

நான்கு பேரும் தென்னந்தோப்பில் இருந்த ஒற்றையடிப் பாதையை நிதானமான நடையில் நடந்து சமாதி மண்டபத்தை நெருங்கினார்கள். மண்டபத்தின் உயரமான வாசற்பக்கக் கதவில் கனமான எஃகு பூட்டு ஒன்று தொங்கிக் கொண்டிருக்க முகில்வண்ணன் தன் கையில் வைத்திருந்த அந்த மேக்னடிக் சாவியை நீட்டினார். சாமுவேல் அதை வாங்கிக் கொண்டு போய் பூட்டின் வாய்க்குக் கொடுத்து சூட்சும முறையில் இடதுபக்கம் மூன்று முறை திருக பூட்டு விடுபட்டது.

சாமுவேல் சிரமமாய் கதவைத் தள்ளி ஒரு ஆள் நுழையக்கூடிய அளவுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்க, முகில்வண்ணன், கயல்விழி, மலர்க்கொடி முன்றுபேரும் உள்ளே போனார்கள். சாமுவேலும் கடைசியாய் நுழைந்து கொண்டு கதவை சாத்தினான்.

கதவை சாத்தியதுமே அந்த மண்டபம் அரையிருட்டோடு ஒருவித பயம் கலந்த நிசப்தத்தோடு தெரிந்தது. சற்றே உயரமான படிகளில் சலவைக்கல் வேலைப்பாடுகளோடு இரண்டு சமாதிகள் பக்கம் பக்கமாய் வாடிப்போன பூக்களோடு பார்வைக்குக் கிடைத்தன.

முகில்வண்ணன் தளர்வாய் நடந்துபோய் இரண்டு சமாதிகளுக்கு முன்பாய் போய் நின்று கண்களை மூடி கை கூப்பினார். உள்ளுக்குள் மனம் பேசியது.

“ அம்மா, அப்பா ரெண்டு பேருமே என்னை மன்னிக்கணும். என்னோட உயிரைக் காப்பாத்திக்க எனக்கு வேற வழி தெரியலை. மாப்பிள்ளை மணிமார்பனையும், உன்னோட பேரன் செந்தமிழையும் அவசர அவசரமாய் உங்கிட்டே அனுப்பி வைக்க வேண்டியதாயிருச்சு. ரெண்டுமே விஷப்பாம்புகள்ன்னு தெரிஞ்ச பின்னாடி பால் வார்க்க நான் தயாராக இல்லை... அதான் சாமுவேல் மூலமாய் முடிச்சுட்டேன். நான் என்னைக் காப்பாத்திக்க எடுத்த அந்த முடிவு சரின்னு என்னோட மனசுக்குப்பட்டதால என் மனசுக்குள்ளே எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லை. எனக்கு இப்போ அறுபது வயது. இன்னும் எத்தனை வருஷம் நான் உயிரோடு இருப்பேன்னு எனக்குத் தெரியாது. ஆனா உன்னோட வாரிசுகள் ஏழு தலைமுறைகளுக்கு சந்தோஷமாய் வாழக்கூடிய அளவுக்கு பணம் சேர்த்து வெச்சிருக்கேன்... அந்தப் பணம் இருக்கக்கூடிய இந்த இடத்துல உன்னோட பேத்தியையும், என்னோட மருமகளையும் கூட்டிட்டு வந்திருக்கேன். இனிமே அந்தப் பணத்தைப் பாதுகாத்து அனுபவிக்கப் போறவங்களும் அவங்கதான்..... நீங்க ரெண்டுபேரும் அவங்களுக்கு துணையாய் இருக்கணும் “

Rajesh Kumars Five Star Droham serial episode 48

மனசுக்குள் வேண்டுதலை முடித்துக் கொண்ட முகில்வண்ணன் தன்னுடைய செல்போனை எடுத்து சாமுவேலிடம் நீட்டினார்.

“ ம்...... வேலையை ஆரம்பி..... “

சாமுவேல் அந்த செல்போனை பவ்யமாய் வாங்கிக்கொண்டு சமாதிகளின் கால்மாட்டுப் பகுதிக்கு வந்தான். தரைமட்டத்திலிருந்து மூன்றடி உயரத்தில் பதிக்கப்பட்டிருந்த அந்த சதுரமான பெரிய சலவைக்கல்லுக்கு முன்பாய் மண்டியிட்டு உட்கார்ந்தான். சலவைக்கல்லின் சதுரத்தில் கோல்டன் நிற பெயிண்டால் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் அந்த அரைகுறையான வெளிச்சத்திலும் மின்னின.

என்னை ஈன்ற தெய்வங்கள்

இங்கே இளைப்பாறுகின்றன

தாய் – வேலம்மாள் தந்தை – மருதப்பன்

இங்கே வாழ்கிறார்கள்

அந்த சதுரமான சலவையின் நான்கு பக்கம் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலினால் ஆன மெல்லிய தகடுகள் ஒரு பார்டர் லைன் போல் பதிக்கப்பட்டு இருக்க, சாமுவேல் செல்போனின் டார்ச் லைட் ஆப்ஷனின் மேல் விரலைப் பதிக்க வெளிச்சம் ஒரு நேர்கோடாய் வெளிப்பட்டு லேசர் கதிர்போல் பளபளப்பு காட்டியது.

சாமுவேல் அந்த வெளிச்சக் கதிரை சலவைக்கல்லுக்கு மேலே உயர்த்தி அந்த ஸ்டெய்ன்லெஸ் தகட்டாலான பார்டரின் மேல் மெதுவாய் பாய்ச்சிக் கொண்டே வந்தான்.

கயல்விழி வியப்பை அடக்கமுடியாமல் முகில்வண்ணனை ஏறிட்டாள்.

“ என்னப்பா இது..... ? “

முகில்வண்ணன் தன்னுடைய வறண்ட உதடுகளில் விரக்தியான புன்னகையொன்றை தவழவிட்டார்.


“அம்மா..... இந்த சலவைக்கல் மத்தவங்க பார்வைக்கு ஒரு நினைவுக்கல். ஆனா இது ஒரு ஹிட்டன் கேஸ் மார்பிள் டோர் வித் மேக்னடிக் லேசர் லாக். (HIDDEN CASE MARBLE DOOR WITH MAGNETIC LASER LOCK) இந்த விஷயம் எனக்கும் சாமுவேல், மாப்பிள்ளை மணிமார்பன், உன் அண்ணனுக்கு மட்டும்தான் தெரியும். என்னோட செல்போனில் இருக்கிற டார்ச் லைட்டோட வெளிச்சத்தை மேக்னடிக் லேசராய் மாற்றக்கூடிய ஆப்ஷன் அந்த செல்போனிலேயே இருக்கு..... ஒரு பத்து நிமிஷம் அந்த லேசரால் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் தகடுகளை நனையவிட்டா போதும், இந்த சலவைக்கல்லான நினைவுக்கல் ஒரு கதவு மாதிரி திறந்து உள்ளே ஒரு வழியைக் காட்டும்.... “

“ வழியா..... ? “

“ ஒரு பத்து நிமிஷம் பொறும்மா..... உனக்கும், மலர்க்கொடிக்கும் அந்த சமாதி எப்படி ஸேஃப்டி லாக்கராய் மாறி அந்த 500 கோடி ரூபாயையும் பாதுகாப்பாய் வெச்சிருக்கு என்கிற உண்மை தெரியும் “

சாமுவேல் செல்போனின்றும் பீறிட்ட அந்த லேசர் கதிரை தொடர்ந்து பத்து நிமிஷங்கள் வரை ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் தகடுகளின் மேல் பாய்ச்ச அந்த மார்பிள் நினைவுக்கல் லேசாய் அதிர்ந்தது. அதன்பிறகு வந்த சில விநாடிகளில் கல்லின் ஒரு பக்கம் மட்டும் கழன்று கொள்ள, முகில்வண்ணன் குனிந்து அதை இழுத்தார். அது சுலபமாய் ஒரு கதவு போல் திறந்து கொண்டு அகலமான கறுப்பு துவாரத்தைக் காட்டியது.

முகில்வண்ணன் சொன்னார்.

“ சாமுவேல்...... நீ மொதல்ல உள்ளே இறங்கிப்போய் யூ.பி.எஸ். பாட்டரியை ஆன் பண்ணு “

“ சரிங்கய்யா “சாமுவேல் தலையை ஆட்டிவிட்டு முட்டிபோட்டு குனிந்து அந்த துவாரத்திற்குள் போனான். மறைந்தான்.

கயல்விழியும், மலர்க்கொடியும் பிரமித்துப் போய் பார்த்துக் கொண்டிருக்க முகில்வண்ணன் மெல்ல சிரித்தார்.

“ இந்த சமாதி ஸேஃப்டி லாக்கராய் மாற்றினது இதே சாமுவேல்தான். அவன் பேர்க்குத்தான் கார் ட்ரைவர். ஆனா எல்லா விஷயங்களையும் தெரிஞ்சு வெச்சிருக்கிற அதிபுத்திசாலி. எனக்குப் பின்னாடி நீங்க ரெண்டு பேரும் அவனைத்தான் முழுசாய் நம்பணும். கட்சிக்காரன் எவனையும் நம்பாதீங்க.... சாமுவேல் நம்ம குடும்பத்துக்காக உயிரையும் கொடுக்கக் கூடியவன் “

முகில்வண்ணன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அந்த கறுப்புத் துவாரத்துக்குள் மெலிதாய் வெளிச்சம் தெரிந்தது. தொடர்ந்து சாமுவேல் குரல் கேட்டது.

“அய்யா..... உள்ளே வாங்கய்யா.. யூ.பி.எஸ்ஸை ஆன் பண்ணிட்டேன் “

முகில்வண்ணன் மண்டி போட்டு தவழ்ந்து முதல் ஆளாய் உள்ளே போக, அவரைத் தொடர்ந்து கயல்விழியும், மலர்க்கொடியும் போனார்கள். மரத்தாலான மாடிப்படிகள் பார்வைக்குக் கிடைக்க, ஜாக்கிரதை உணர்வோடு கால் பதித்து கீழே இறங்கினார்கள். இப்போது வெளிச்சம் அதிகமாய் பரவித் தெரிந்தது. பத்தடி ஆழத்தில் அந்த உலோகச்சுவர்களாலான அறை ஒரு கண்டெய்னர் போல் காட்சியளிக்க, கயல்விழியும், மலர்க்கொடியும் அதிர்ச்சியில் உறைந்து போய் சுற்றும் முற்றும் பார்த்தார்கள்.

உலோகச்சுவர்களின் ஒரங்களில் ஒரே மாதிரியான நிறத்தில் சூட்கேஸ்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, முகில்வண்ணன் சாமுவேலுக்குக் கண்ணைக் காட்டினார். அவன் மெதுவாய் நடந்து போய் ஒரு சூட்கேஸை எடுத்து வந்து அதனுடைய லாக்கர்களை மேக்னடிக் சாவியால் திறந்து மேல்மூடியைத் தூக்கினான்.

சூட்கேஸில் உள்ள கரன்ஸி நோட்டுக்கள் பிளாஸ்டிக் உறைகளில் அடைபட்டு சீராய் பார்வைக்குத் தட்டுப்பட்டன.

முகில்வண்ணன் கூப்பிட்டார்.

“ அம்மா ! கயல்விழி, மலர்க்கொடி ரெண்டு பேரும் இப்படி வந்து எம் முன்னாடி நில்லுங்கம்மா.... இந்த ஒரு சூட்கேஸ்ல மட்டும் 10 கோடி ரூபாய் இருக்கு....... இது மாதிரி இந்த ரூம்ல 50 சூட்கேஸ் இருக்கு.......மொத்தம் 500 கோடி...... ஒவ்வொரு சூட்கேஸுக்கும் ஒவ்வொரு மேக்னடிக் சாவி இருக்கு. சாவியோட நெம்பர் அந்தந்த சூட்கேஸுக்குப் பின்னாடி ஒரு கோட்வேர்ட்ல எழுதப்பட்டிருக்கும். அதைப் பற்றின விவரங்களையெல்லாம் இப்போ சாமுவேல் உங்களுக்கு எடுத்துச்சொல்வான். ரெண்டு பேரும் அதைக் கவனமாய்க் கேட்டு....... ! “

முகில்வண்ணன் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே கயல்விழி குறுக்கிட்டுச் சொன்னாள்.

“ வேண்டாம்பா “

“ வேண்டாமா..... என்ன வேண்டாம் ? “

“ அந்த 500 கோடி ரூபாய் எனக்கு வேண்டாம்ன்னு சொல்றேன்பா “

முகில்வண்ணன் ஒரு கோபப்பார்வையுடன் மருமகள் மலர்க்கொடியிடம் திரும்பினார்.

“ என்னமா..... கயல்விழி இப்படி சொல்றா ? “

மலர்க்கொடி தலையைக் குனிந்தபடி சொன்னாள். “ கயல்விழி சொல்றது சரிதான் மாமா...... எனக்கும் கூட இந்தப்பணம் வேண்டாம்“

முகில்வண்ணன் கோபத்தின் உச்சிக்குப் போனார்.

“ என்னமா..... ரெண்டு பேரும் ஒரே மாதிரி பேசிகிட்டு இருக்கீங்க.... நான் இவ்வளவு பணத்தை சம்பாதிச்சது உங்களுக்குத்தாம்மா..... நம்ம பரம்பரை என்னிக்குமே செல்வச்செழிப்போடு இருக்கணும்ன்னு கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம் இது....... ! “

கயல்விழி இடைமறித்துச் பேசினாள்.

“அப்பா ! இந்த 500 கோடி ரூபாயும் நீங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம் கிடையாது “

“ ஊழல் பணம்ன்னு சொல்ல வர்றியா..... சரி அப்படியே வெச்சுக்க....... ! “

“ஊழல் பணமாய் இருந்தாக்கூட பரவாயில்லேப்பா. இது ரத்தக்கறை படிஞ்ச பணம். உங்க மாப்பிள்ளையோட ரத்தமும், அண்ணன் செந்தமிழோட ரத்தமும் இந்த 500 கோடி ரூபாய் மேல தெளிக்கப்பட்டிருக்குன்னு எனக்கும் அண்ணிக்கும் நல்லாவே தெரியும் “

முகில்வண்ணனும், சாமுவேலும் திகில் உறைந்து போன பார்வைகளை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டார்கள்.

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
Rajesh Kumar's Five Star Droham serial episode 48
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X