For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 16

Google Oneindia Tamil News

- ராஜேஷ் குமார்

அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் தமிழ்நாட்டில் இருந்த அத்துணை ஒட்டு மொத்த டி.வி.சானல்களும் வயிற்றைக் கலக்கும் பின்னணி இசையோடு பிரேக்கிங் நியூஸ் போட ஆரம்பித்துவிட்டன.

'முன்னாள் முதலமைச்சர் முகில்வண்ணனின் மருமகன் மணிமார்பன் மாயம்’

Rajesh Kumar Series Five Star Dhrogam

'அமைச்சரின் சஷ்டியப்த பூர்த்தி விழா நடந்து கொண்டு இருக்கும் போதே காணாமல் போன மர்மம்’

ஒரு பிரதான டி.வியில் மட்டும் நேரடி ஒளிபரப்பு ஆரம்பமாகி வர்ணனையாளர் ஒருவர் கையில் மைக்கை வைத்து பேசிக் கொண்டிருந்தார்.

“நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் இடம் கிழக்குக் கடற்கரை சாலையில் இருக்கும் முன்னாள் முதலமைச்சர் முகில்வண்ணன் அவர்களின் பண்ணை பங்களா. ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் விஸ்தாரமாய்க் கட்டப்பட்ட பங்களா இது. இந்த பங்களாவில்தான் அமைச்சரின் அறுபதாவது பிறந்தநாள் விழா அதிவிமரிசையாக நடைபெற்றுக் கொண்டு இருந்தது. தற்போதைய முதலமைச்சரும் விழாவில் கலந்து கொண்டார். விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே முகில்வண்ணன் அவர்களின் மாப்பிள்ளையான மணிமார்பன் மாயமாகிவிட்டார். அவர் எங்கே போனார் என்று தெரியாமல் எல்லோரும் தேடிக் கொண்டிருந்த வேளையில் போலீஸ் கமிஷனர் ஆதிமூலம் அவர்களுக்கு ஒரு மர்ம நபரிடமிருந்து அநாமதேய செல்போன் அழைப்பு ஒன்று வந்தது. செல்போனில் மறுமுனையில் பேசிய நபர் 'மணிமார்பன் கொலை செய்யப்பட்டுவிட்டதாகவும், அவருடைய உடல் பண்ணை பங்களாவுக்குள்ளேயே ஏதோ ஒரு இடத்தில் இருப்பதாகவும், சஷ்டியப்தபூர்த்திக் கொண்டாட்டத்தை நிறுத்திவிட்டு மணிமார்பனுக்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்யுங்கள் என்றும் செல்போனில் பேசிய நபர் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியுற்ற போலீஸ் கமிஷனர் ஆதிமூலம் உடனடியாய் முகில்வண்ணன் மகன் செந்தமிழை வரவழைத்து விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். இந்த விழாவின் பாதுகாப்புக்காக வந்து இருந்த ஒட்டு மொத்த போலீஸும் இரண்டாக பிரிந்து பண்ணை வீட்டின் மூலை முடுக்கெல்லாம் புகுந்து மணிமார்பனின் உடலைத் தேடியிருக்கிறார்கள். உடல் கிடைக்கவில்லை. மணிமார்பன் என்ன ஆனார் என்பதும் தெரியவில்லை. இது குறித்து போலீஸ் கமிஷனரிடம் சில கேள்விகளை இப்பொழுது கேட்கப் போகிறோம்.

டெலிவிஷன் திரையில் காட்சி மாற போலீஸ் கமிஷனர் ஆதிமூலம் இறுகிய முகத்தோடு பார்வைக்கு கிடைத்தார். அவருடைய முகத்துக்கு நேரே மைக்கை நீட்டியபடி வர்ணனையாளர் கேட்டார்.

“ஸார்… முன்னாள் முதலமைச்சர் முகில்வண்ணனின் மாப்பிள்ளை மணிமார்பனுக்கு என்ன நேர்ந்து இருக்கும் என்று நினைக்கிறீர்கள் ?

“எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை”

“அவர் உயிரோடு இருப்பாரா …. ?…

“தெரியவில்லை…. அவர் கொலை செய்யப்பட்டிருந்தால் அவருடைய உடல் பண்ணை பங்களாவில் எங்களுக்கு கிடைத்து இருக்கும்”

“அப்படியென்றால் உங்களுக்கு செல்போனில் வந்த தகவலில் உண்மை இல்லையென்று எடுத்துக் கொள்ளலாமா …. ?

“ஆமாம் அது தவறான தகவலாய்தான் இருக்க வேண்டும்”

“முன்னாள் முதலமைச்சர் முகில்வண்ணன் மணிமார்பன் மாயமானதை பற்றி என்ன சொல்கிறார்?”

அவருடைய ஒட்டுமொத்த குடும்பமும் இடிந்து போன மனநிலையில் உள்ளார்கள். முகில்வண்ணனுக்கு அரசியலில் எத்தனையோ எதிரிகள். அவர்களில் யாராவது சந்தோஷமான இந்த சஷ்டியப்தபூர்த்தி விழாவை மேற்கொண்டு நடத்த விடாமல் செய்ய வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட ஒரு குளறுபடியைச் செய்து இருக்கலாம்”

மேற்கொண்டு வர்ணனையாளர் கேள்வி கேட்கும் முன்பாக அஸிஸ்டண்ட் போலீஸ் கமிஷனர் சந்திரன் கமிஷனர்க்கு பக்கத்தில் வந்து நின்றார்.

Rajesh Kumar Series Five Star Dhrogam

“ஸார்… ஒரு ரெண்டு நிமிஷம் தனியாய் பேசணும்”. கமிஷனர் டி.வியை விட்டு விலகி சந்தினுடன் தனியாயப் பேசினார்.

“என்ன விஷயம் ?,,

சந்திரன் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு குரலைத் தாழ்த்தினார்.

“ஸார்..* மணிமார்பன் உயிரோடு இருக்க வாய்ப்பு இல்லை”

“எப்படி சொல்றீங்க ?,,

'பண்ணை பங்காவுக்கு பின்புறம் இருக்கிற காலியான இடத்தில் ஒரு குழிவானப் பகுதியின் அருகே மோப்ப நாயைக் கொண்டு போன போது நாய் அந்த இடத்தை விட்டு நகராமல் அப்படியே படுத்துக் கொண்டது. அந்த இடத்தை சீன் ஆப் கிரைம் பார்த்தோம். மணலில் திட்டுத் திட்டாய் ரத்தம்”

-------

நேரம் நள்ளிரவை நோக்கிப் போய்க்கொண்டிருக்க, சென்னையில் வருமானத்துறை அலுவலகத்தின் பின் வாசலில் இருட்டில் அந்த கார் வந்து நின்று என்ஜினை அணைத்துக் கொண்டு ஊமையானது.

காரின் டிரைவிங் ஸீட்டில் இருந்து நித்திலன் இறங்க, பின் சீட்டிலிருந்து கஜபதியும், சாதுர்யாவும் கதவை திறந்துகொண்டு வெளிப்பட்டார்கள். அலுவலகத்தின் பின்பக்கக் கதவு லேசாய் திறந்திருக்க மூன்று பேரும் பூனை நடை போட்டுக்கொண்டு உள்ளே போனார்கள். வாகனங்கள் நிறுத்தும் இடத்திலிருந்து சற்றுத்தள்ளி மாடிப்படிகள் ஆரம்பமாக அதனுடைய அரையிருட்டில் ஏறினார்கள். முதல் நபராய் முன்னால் போய்க் கொண்டிருந்த நித்திலனின் செல்போன் வைபரேஷனில் அதிர்ந்தது.

எடுத்து அழைப்பது யார் என்று பார்த்துவிட்டு காதுக்கு கொடுத்தான்.

“ஸார்”

“என்ன நித்தி…வந்துட்டீங்களா …. மூணு பேரும்?…

“வந்துட்டோம் ஸார்… பின்பக்க வாசல் வழியாய் வந்து மாடிப்படிகள் ஏறிட்டு இருக்கோம்…

“யார் கண்ணிலேயும் படலையே ?….

“இல்ல ஸார்”

“சரி வாங்க…. வெயிட் பண்ணிட்டிருக்கேன்”

Rajesh Kumar Series Five Star Dhrogam

நித்திலன் செல்போனை அணைத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு கஜபதியைப் பார்த்துச் சொன்னான்.

“பேசினது எங்க பாஸ்தான்..*

“தம்பி … இந்த விவகாரத்துல எனக்கு எந்த ஒரு பிரச்சினையும் வராதே ?” கஜபதி சொல்ல சாதுர்யா சிரித்தாள்.

“பயப்படாமே வாங்க ஸார்…. வருமானவரிதுறைக்கு யார் உதவி பண்ணினாலும் சரி, அவங்க எங்களுக்கு ஆருயிர் நண்பர்கள்”

மூன்று பேரும் மாடி வராந்தாவில் நடந்து கடைசியில் இருந்த அந்த அறைக்கு முன்பாய் போய் நின்றாகள். கதவு லேசாய் சாத்தியிருந்தது. நித்திலன் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போக, சாதுர்யாவும், கஜபதியும் பின் தொடர்ந்தார்கள்.

ஏர்க்கண்டிஷனர் லேசாய் உறுமிக் கொண்டிருந்த அந்த அறையில் மேஜைக்குப் பின்னால் சீ்ப் கமிஷனர் ஆ்ப் இன்கம்டாக்ஸ் அருள் சற்று பதட்டத்தோடு காணப்பட்டார். மூன்று பேரைப் பார்த்ததும் எதிரி இருந்த காலியான நாற்காலிகளைக் காட்டியபடி ”ப்ளீஸ்” என்றார்.

உட்கார்ந்தார்கள்.

நித்திலன் அருளை ஏறிட்டபடி சொன்னான்.

“ஸார்… இவர்தான் கஜபதி. முகில்வண்ணனுக்கு ரொம்பவும் வேண்டியவர். அந்த குடும்பத்தோடு நெருங்கி பழகுபவர். இவர் மட்டும் எங்களுக்கு சரியான நேரத்தில் ஒரு பொருத்தமான பொய்யைச் சொல்லி உதவி செய்யாமே இருந்திருந்தா நானும் சாதுர்யாவும் உங்க முன்னாடி இப்படி உட்கார்ந்து இருக்கமாட்டோம்”

அருள் சிறு சிரிப்போடு கஜபதியின் கையைப் பற்றி குலுக்கினார். “பொதுவா எனக்கு அரசியல்வாதிகள் மேல் தனிப்பட்ட முறையில் எந்தவிதமான மதிப்போ, மரியாதையோ கிடையாது. ஆங்கிலேயர் இந்த நாட்டை ஆண்டவரை நம் நாடு ஒரு நாடாய் இருந்தது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டம் அவர்களை கடுமையாக பார்த்தது. அரசு அதிகாரிகளும் லஞ்சம் கேட்கமாட்டார்கள். ஆனால் இன்றைக்கு எல்லாமே தலைகீழாய் மாறிவிட்டது”

கஜபதி விரக்தியான புன்னகை ஒன்றை உதட்டில் காட்டிவிட்டு நிதானமான குரலில் பேச ஆரம்பித்தார்.

“ஸார்.. * சில மாதங்களுக்கு முன்பு வரை நானும் ஒரு மோசமான அரசியல்வாதிதான். கட்சியில் எனக்கு பெரிய பதவி எல்லாம் கிடையாது. மாவட்ட கிளைச் செயலாளர் போஸ்ட் மட்டும் கிடைச்சது. அந்த போஸ்;ட்ல இருந்துகிட்டே நான் முறைகேடாய் பணம் சம்பாதிச்சேன். நான் சம்பாதிச்ச பணம் ஒரு அம்பது கோடி தாண்டும். எந்த ஒரு அதிகாரம் இல்லாத பதவியில் இருக்கிற என்னாலேயே இவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும்போது ரெண்டு தடவை முதலமைச்சராய் இருந்த முகில்வண்ணன் எவ்வளவு கோடி ரூபாய் சம்பாதிச்சிருப்பார்ன்னு சின்னதா கெஸ் ஒர்க் பண்ணிப்பாருங்க “

“500 கோடி இருக்குமா ?….

Rajesh Kumar Series Five Star Dhrogam

“5000 கோடி கோடி ஸார்…. அந்தப் பணம் எல்லாம் எந்த இடத்துல பத்திரமாய் பதுக்கி வைக்கப்பட்டிருக்குன்னு எனக்குத் தெரியும் ஸார்”

“எந்த இடத்துல?,,,

“சொன்னா நம்பணும் ஸார்”

“சொல்லுங்க”

கஜபதி சொன்னார்.

அருள், நித்திலன், சாதுர்யா மூன்று பேர்களின் முகங்களிலும் அதிர்ச்சி அலைகள் பரவ ஒருவரையொருவர் கலவரமாய் பார்த்துக் கொண்டார்கள்.

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
The 16th episode of Rajeshkumars new political thriller Five Star Dhrogam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X