For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸார்.... வாசல்ல ஒரு வேன் வந்து நிக்குது.. பைவ் ஸ்டார் துரோகம் (37)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

வேல்முருகன் வியப்பின் விளிம்பிற்குச் சென்று கமிஷனர் ஆதிமுலத்தை ஏறிட்டார்.

"ஸார் ...... இதை என்னால் நம்ப முடியலை. ஒரு மாநில கவர்னரோட பி.ஏ. மும்பை தாதா இஷ்மி பர்மான் என்கிற நபரோடு சர்வ சாதாரணமாய் தொடர்பு வெச்சுட்டு மர்டர் மாதிரியான கொலைச்சம்பவங்களில் ஈடுபட முடியுமா என்ன? "

ஆதிமுலத்தின் உதடுகளில் ஒரு கசப்பான புன்னகை உதித்து அப்படியே உறைந்து போயிருக்க அவர் மெதுவாய் குரலைத்தாழ்த்தினார்.

"வேல்முருகன்....... உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா..... இன்னிக்கு தமிழ்நாட்ல கொலை கொள்ளைகளை நடத்திவிட்டு வர்ற கூலிப்படை ஆட்கள் ஆயிரத்து ஐநூறு பேர் இருக்காங்க. இத்தனை பேரும் பல குழுக்களாக பிரிஞ்சு இருந்தாலும் அரசாங்கத்தில இருக்கிற சில பெரிய தலைகளின் கண்ணசைவுக்கு கட்டுப்பட்டவர்களாக, அவங்களோட விசுவாச ஊழியர்களாய் இருக்காங்க. இந்த இஷ்மி பர்மான் போன்ற ஆட்கள் எல்லாம் வெறும் அம்புகள்தான். இவனால கொலை செய்யப்படப்போகிற ஆள் யார்ன்னு இவனுக்கு முன்னே பின்னே தெரியாது. போட்டுத்தள்ள வேண்டியது மட்டும்தான் இவன் மாதிரியான ஆட்களோட வேலை"

rajesh kumar series five star dhrogam

"ஸார்... நீங்க சொல்ற விஷயத்தை வெச்சுப்பார்க்கும்போது இந்த இஷ்மி பர்மான்தான் முகில்வண்ணனின் மாப்பிள்ளை மணிமார்பனின் கொலைக்கு காரணகர்த்தாவாய் இருக்கணும்........ ! "

"மே....பி..... "

"அப்போ..... அந்த வாட்டர் டாங்க் லாரி நீலகண்டன்...? "

"அவன் இஷ்மி பர்மானோட கூலிப்படை ஆட்களில் ஒருத்தனாய் இருந்து இருக்கலாம்"

"ஸார்.... இந்த கேஸ்ல யாரை நம்பறது யாரை நம்பகூடாதுன்னு தெரியலை"

கமிஷனர் ஆதிமுலம் மெல்லச்சிரித்தார்

"உங்களுக்கு என் பேர்ல கூட சந்தேகம் இருக்குன்னு எனக்கு தெரியும். நான் மாஜி சி.எம். முகில்வண்ணனுக்கு விசுவாசமாகவும், கிட்டத்தட்ட ஒரு அடியாள் மாதிரியும் இருக்கிறதாய் நீங்க நினைக்கலாம். ஆனா உண்மையான நிலவரம் என்னன்னு உங்களுக்குத் தெரியுமா ...? "

"ஸார்....இப்ப நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குத் தெரியலை"

"உங்களுக்குப் புரியும்படியாவே சொல்றேன். நான் எக்ஸ் சீப் மினிஸ்டர் முகில்வண்ணனுக்கு விசுவாசமானவன் கிடையாது. இப்போ பதவியில் இருக்கிற சி.எம்.வஜ்ரவேலுக்கு ஆதரவாய் செயல்பட்டுக்கொண்டு இருக்கிற அரசு அதிகாரி... இன்னும் சொல்லப்போனா முகில்வண்ணனுக்கு ஆதரவாய் இருக்கிற மாதிரி நடிச்சுகிட்டே உளவு வேலைப் பார்த்துட்டு இருக்கேன்"

"ஸா...ஸார்........ ! "

rajesh kumar series five star dhrogam

"முதல் முதலாய் உங்ககிட்டதான் இந்த உண்மையைச் சொல்லிட்டிருக்கேன். இப்போதைக்கு இந்த உண்மை வெளியே யார்க்கும் தெரிய வேண்டாம்"

"நான் சொல்லமாட்டேன். ஆனா எனக்கு ஒரு சந்தேகம். கேட்கலாமா ஸார் ...? "

"ப்ளீஸ்....... "

"எதுக்காக இந்த உளவு வேலை...? "

"முகில்வண்ணன் ரெண்டு தடவை முதல் அமைச்சராய் இருந்தவர். மூன்றாவது தடவையும் முதலமைச்சராக விரும்பினார். ஆனால் கட்சித் தலைமை அவர் மேல் ஊழல் வழக்கு இருப்பதைச் சுட்டிக் காட்டி முதலமைச்சராக்க விரும்பலை....... வஜ்ரவேலுக்கு ஆதரவாய் நிறைய எம்.எல்.ஏக்கள் இருந்ததால முகில்வண்ணன் தன்னோட எதிர்ப்பைக் காட்டாமல் பதுங்கி கிட்டார். அப்படி பதுங்கி கிட்டவர் சும்மா இருக்கலை...... தன்கிட்டே கொட்டிக்கிடக்கிற கோடிக்கணக்கான ஊழல் பணத்தை வெச்சு கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கற முயற்சியில் ஈடுபட்டார். இதை எப்படியோ ஸ்மெல் பண்ணிட்ட சி.எம்.வஜ்ரவேல் அந்த முயற்சியைத்தடுக்க சில ஏற்பாடுகளைப் பண்ணினார். அந்த ஏற்பாடுகளில் ஒன்றுதான் நான் முகில்வண்ணனுக்கு விசுவாசமாய் இருக்கிற மாதிரி நடிக்க ஆரம்பிச்சது........ ! "

வேல்முருகன் பிரமிப்போடு கேட்டுக்கொண்டு இருக்க கமிஷனர் ஆதிமுலம் தொடர்ந்தார்.

"முகில்வண்ணனோட அன்றாட நடவடிக்கைகளை கண்காணிச்சு அவர் யார் யாரை மீட் பண்றார்..... எந்தெந்த எம்.எல்.ஏக்களுக்கு வலை வீசுகிறார்ன்னு கண்டுபிடிச்சு ரிப்போர்ட் அனுப்பறதுதான் என்னோட வேலை. இதைப்புரிஞ்சுக்காத பத்திரிக்கை ஊடகங்களும், தொலைக்காட்சி ஊடகங்களும் என்னை முகில்வண்ணனோட அடியாள் மாதிரி சித்தரிச்சு மீம்ஸ் போட்டுகிட்டு இருக்காங்க"

"ஸார்....இதுநாள்வரைக்கும் நானும் அப்படித்தான் நினைச்சுட்டிருந்தேன்"

கமிஷனர் ஆதிமுலம் சிரித்தார்.

"இந்த கேஸ் ஒரு முடிவுக்கு வர்ற வரைக்கும் அந்த நினைப்பை அப்படியே கண்டின்யூ பண்ணிட்டிருங்க வேல்முருகன் "

"ஒரு மேலதிகாரியான நீங்க இப்படிப்பட்ட ஒரு உண்மையை ஷேர் பண்ணிகிட்டதுக்காக நன்றி ஸார். ஆனா ஒரு விஷயத்தை உங்க்கிட்டயிருந்து தெளிவுபடுத்திக்க விரும்பறேன். மே.... ஐ...? "

என்ன சொல்லுங்க...? "

"சி.எம்.வஜ்ரவேல் சந்தேகப்படற மாதிரி எக்ஸ் சி.எம். முகில்வண்ணன் தன்னோட கட்சி எம்.எல்.ஏக்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க முயற்சி பண்ணியிருக்காரா ...? "

"அவர் பண்ணாமே இருப்பாரா......பண்ணினார். ஆனா நேரிடையாய் இல்லை. எம்.எல்.ஏக்களை வளைக்கிற பொறுப்பை தன்னோட மாப்பிள்ளை மணிமார்பன்கிட்டேயும், மகன் செந்தமிழ்கிட்டேயும் கொடுத்து இருந்தார். அவங்களும் அதற்கான முயற்சிகளை பண்ணிட்டு இருந்தாங்க. ஆனா பலன் கிடைக்கலை"

"அதுக்கு என்ன காரணம் ஸார்...? "

"ஆட்சியில் இருக்கிற எம்.எல்.ஏக்களுக்கு பதவியில் இருக்கும்போதுதான் சம்பாதிக்க வாய்ப்பு அதிகம் அதுவும் இல்லாமே முகில்வண்ணன் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் நிர்ணயம் பண்ணின தொகை ஒரு கோடி. ஆனா டிமாண்ட் பண்ணினது பத்து கோடி. ஆனாலும் 5 கோடி ரூபாய் வரைக்கும் பேரம் போயிட்டு இருந்தது. இந்த எம்.எல்.ஏக்களை இழுக்கற வேலை கடந்த ஆறுமாத காலமாகவே ரொம்பவும் ரகசியமான முறையில் திரை மறைவில் நடந்துகிட்டு இருந்தது"

கமிஷனர் ஆதிமுலம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கான்ஸ்டபிள் மார்டின் பக்கத்தில் வந்து நின்று நிதானமான குரலில் சொன்னார்.

rajesh kumar series five star dhrogam

"ஸார்..... ஜி.ஹெச்சிலிருந்து ஆம்புலன்ஸ் வேன் வந்தாச்சு. இஷ்மி பர்மானை ட்ரீட்மெண்டுக்கு அனுப்பிடலாமா ...? "

நீயும் கூடவே போய்யா......! "

"எஸ் ஸார்"

வாசலில் நின்றிருந்த வெள்ளை நிற ஆம்புலன்ஸ் வேனில் இஷ்மி பர்மான் ஸ்ட்ரெச்சர் மூலமாக உள்ளே போக, கான்ஸ்டபிள் மார்டினும், இன்னொரு செக்யூரிட்டி கான்ஸ்டபிளும் ஏறிக்கொண்டார்கள்.

ஆம்புலன்ஸ் வேன் புறப்பட்டுப்போனதும் கமிஷனர் ஆதிமுலம் வேல்முருகனிடம் திரும்பினார்.

"கவர்னரோட பி.ஏ. ஷிவ்ராம் தத்தாத்ரேயா ஒரு ஐ.ஏ.எஸ்.ஆபீஸர். வடநாட்டில் ஒரு மாவட்டத்துக்கு கலெக்டராய் இருந்த ஒரு நல்ல அட்மின்ஸ்ட்ரேட்டர். ஆனா இன்னிக்கு இருக்கிற சாக்கடை அரசியல் அவரை ஒரு சராசரி மனுஷனாக்கி இஷ்மி பர்மான் மாதிரியான ஆட்களோடு சேர்ந்து சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட வெச்சிருக்கு........ ! "

வேல்முருகன் கவலையான குரலில் கேட்டார். "ஸார் இந்தப் பிரச்சினையை எப்படி ஹேண்டில் பண்ணப்போறோம்...? ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு வார்டு கவுன்சிலர்க்குக்கூட நம்ம போலீஸ் பயப்பட வேண்டியிருக்கு. ஷிவ்ராம் தத்தாத்ரேயா கவர்னரோட பி.ஏ. தாதா இஷ்மி பர்மான் அவரோட பேரைச் சொன்னாங்கிற ஒரே ஒரு காரணத்துக்காக அவரை நம்மால விசாரிக்க முடியுமா ...? "

" முடியும்...... "

"எப்படி ஸார் ...? "

"விசாரிக்கப்போறது நாம கிடையாது.... "

"அப்புறம் யார் ஸார் ...? "

"டெல்லி சி.பி.ஐ.யில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அதிகாரி இருக்கார். பேரு நரசிம்மஹரி. வெரி ஹானஸ்ட் ஆபீஸர். ட்யூட்டி கான்ஷியஸ் ரொம்பவும் அதிகம். அவர்க்கு டிபார்ட்மெண்ட்ல இன்னொரு பேர் என்ன தெரியுமா...? மிஸ்டர் டெரர். ரெண்டு வருஷங்களுக்கு முன்னாடி பிரைம் மினிஸ்டரோட ரிலேட்டீவ் ஒருத்தரை வீட்டுக்கே போய் மிட்நைட்ல கைது பண்ணியவர். ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே அவர்க்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லிட்டேன். இஷ்மி பர்மானோட முழு வாக்குமூலமும் கிடைச்சபிறகு அதை டைப் பண்ணி அவரோட இ.மெயில் ஐ.டிக்கு அனுப்பச் சொன்னார். இனி அடுத்தபடியாய் நாம செய்யப்போற வேலை அதுதான்"

கமிஷனர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கட்டிடத்தின் வாசலில் சின்னதாய் ஒரு இரைச்சல் கேட்டது. வேல்முருகன் எட்டிப்பார்த்துவிட்டு சொன்னார்.

"ஸார்.... வாசல்ல ஒரு வேன் வந்து நிக்குது"

"வேனா...? "

கமிஷனர் அறையின்றும் வெளிப்பட்டு வாசலை நோக்கி நடக்க, வேல்முருகன் பின் தொடர்ந்தார். சொன்னார்.

"ஆம்புலன்ஸ் வேன் மாதிரி தெரியுது ஸார்"

வேனில் முன்பக்கத்தில் இருந்து ட்ரைவரும், பின்பக்கத்தில் இருந்து ஆர்டர்லி இரண்டு பேர்களும் இறங்கி நிழல் உருவங்களாய் உள்ளே வந்தார்கள்.

கமிஷனர் கேட்டார்.

"யாரு...? "

"ஜி.ஹெச்சிலிருந்து வர்றோம் ஸார். ஒரு விசாரணை கைதியை ஹாஸ்பிடலில் உடனடியாய் அட்மிட் பண்ணனும். புறப்பட்டு வாங்கன்னு கான்ஸ்டபிள் மார்டின் போன் பண்ணியிருந்தார். போன் பண்ணினபோது வேன் அவெய்லபிளா இல்லை. இப்பதான் கிடைச்சுது. புறப்பட்டு வந்தோம். ஸாரி ஃபார் த டிலே ஸார்"

அவர்களில் ஒருவர் பேசப் பேச -

கமிஷனர் ஆதிமுலமும், வேல்முருகனும் கலக்கம் அடைந்து ஒருவரௌ ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
Rajesh Kumar's Five Star Droham serial episode 37
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X