For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கஜபதி! நீ இப்போ எங்க இருக்கே.. ? ராஜேஷ்குமாரின் ஃபைவ் ஸ்டார் துரோகம் - (17)

Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

சீப் கமிஷனர் ஆஃப் இன்கம்டாக்ஸ் அருள் தன்னுடைய வியப்பைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் கஜபதியை பார்த்தார்.

“நீங்க சொல்றது உண்மையா.......?”

கஜபதி 'உச்’ கொட்டினார்.

என்ன ஸார் நீங்க....? நான் இப்ப சொன்னது வடிகட்டின உண்மை ஸார். நான் யார்கிட்டே பொய் பேசணும் யார்கிட்டே உண்மை பேசணும்னு எனக்கு தெரியும். இப்ப உங்கிட்ட பேசிட்டிக்கிறது நான் இல்லை ஸார் ....... என்னோட மனசாட்சி ....

அருள் தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த நித்திலனையும், சாதுர்யாவையும் பார்வையால் ந்னைத்துவிட்டு கஜபதியிடம் குரலைத் தாழ்த்தினார்.

rajesh kumar series five star dhrogam part 17

“நீங்க தப்பா நினைக்கலைன்னா நான் ஓரு விஷயம் சொல்லலாமா ?....

“சொல்லுங்க ஸார்……”

எக்ஸ் சீப்மினிஸ்டர் முகில்வண்ணன் தன்னுடைய ஆட்சிகாலத்தில் முறைகேடாய் சம்பாதித்த 5000 கோடி ரூபாயை எங்கே பதுக்கி வெச்சிருக்கார்ன்னு கேட்டப்ப நீங்க ஓரு விஷயம் சொன்னீங்க இல்லையா

“ஆமா…….”

“அதை ஒரு வாக்குமூலம் மாதிரி தர முடியுமா ?......

“இப்ப நான் சொன்னதே வாக்குமூலம் மாதிரிதானே ஸார்……?”

அருள் நித்திலனை பார்த்தார்.

“நித்தி ! நீ கஜபதிக்கு புரியற மாதிரி சொல்லு”

நித்திலன் கஜபதியை ஏறிட்டான்.

கஜபதி ஸார் ........... ஐ.டி. டிபார்ட்மெண்ட்டில் ஒரு புரொசீட்ஜர் இருக்கு..... அதாவது முகில்வண்ணன் மாதிரியான பெரிய ஆட்களின் வீடுகளுக்கு ரெய்டு போகும் போது எங்களுடைய மேலதிகாரிகளுக்கு நாங்க ஒரு வலுவான ஆதாரத்தைத் தரணும். அந்த ஆதாரத்தின் அடிப்படையில்தான் வீட்டை ரெய்டு பண்ண அனுமதி கொடுப்பாங்க ......... ஆனா அந்த ஆதாரம் எந்தக் காரணத்தை முன்னிட்டும் வெளியே வராது. அதாவது நீங்கதான் வாக்குமுலம் கொடுத்தீங்கன்னு வெளியுலகத்துக்குத் தெரியாது. அந்த ரகசியம் கடைசி வரைக்கும் பாதுகாக்கப்படும்.

“அப்படீன்னா சரி........... !... “

“உங்க ஒத்துழைப்புக்கு ரொம்பவும் நன்றி கஜபதி“ சொன்ன அருள் அந்த அறையில் இருந்த ஒரு சி.சி.டி.வி. காமிராவின் யூனிட்டை ஆன் செய்து விட்டு பேசினார்.

“இப்ப நான் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டே வாங்க...... அது ஆடியோ வீடியோவாய் பதிவாயிடும்“.

“ கேளுங்க ஸார் “

“ உங்க பேர் கஜபதிதானே...... ?.....

“ ஆமா ஸார் “

“ எக்ஸ் சீப்மினிஸ்டர் முகில்வண்ணனை உங்களுக்கு எவ்வளவு வருஷமாய் தெரியும்………..?“

“ முப்பது வருஷமாய் தெரியும்“

“ உங்க ரெண்டு பேரோட நட்பு எப்படிப்பட்டது ? “

“ ரொம்பவும் உணர்வுப்பூர்வமான நட்புதான். ஆரம்பத்துல அவர் பண்ணின ஊழல்களுக்கெல்லாம் நான்தான் மீடியேட்டராய் இருந்தேன். பணம் எட்டுதிசையிலிருந்தும் வந்து கொட்டோ கொட்டுன்னு கொட்டிச்சு. எல்லாமே கோடிக் கணக்குலதான்........ தன்னோட அதிகாரத்தை முறைகேடாய் பயன்படுத்தி அவர் முதல் அமைச்சராய் இருந்த காலத்தில் சம்பாதிச்ச பணம் மட்டும் 5000 கோடி இருக்கும். ...... ஸார் “

“இந்த 5000 கோடி பணத்தை முகில்வண்ணன் எந்த இடத்துல பதுக்கி வெச்சிருக்கார்ன்னு உங்களுக்குத் தெரியுமா......?”

“நல்லாவே தெரியும் ஸார் “

“எங்கேன்னு சொல்லுங்க....... “

“ஸார் ........ ஈ.சி.ஆர்ல இருக்கிற அந்தப் பண்ணை வீட்ல அம்பதுக்கும் மேற்பட்ட அறைகள் இருக்கு. அந்த அறைகளுக்குக் கீழே பத்தடி ஆழத்துல செல்லர்கள் இருக்கு. பொதுவாக இது மாதிரியான பாதாள அறை போன்ற செல்லர்களில் அரிசி மூட்டைகளையும், தானிய வகைகளையும் பாதுகாப்பாய் அடுக்கி வைப்பாங்க. ஆனா முகில்வண்ணன் அதுக்கு பதிலாய் 5000 கோடி ரூபாயையும் அந்த செல்லர்களில் அடுக்கி வெச்சு அந்த கரன்சிகளுக்கு மேல் அரிசி மூட்டைகளை பரப்பினார். அந்த வேலையெல்லாம் நடந்த போது நானும் இருந்தேன். ஆனா ஒரு மாசத்துக்கு முந்தி நான் கேள்விபட்ட விஷயம் வேற மாதிரி இருந்தது.

“என்ன....... ?“

“முகில்வண்ணன் அந்த 5000 கோடி ரூபாயையும் வேற இடத்துக்கு கொண்டு போயிட்டார்“

“வேற இடம்ன்னா..... எந்த இடம்........? “

“ஸார் ........ சென்னையிலிருந்து காஞ்சிபுரம் போற வழியில் செந்தட்டின்னு ஒரு கிராமம் வரும். கேள்விபட்டிருங்களா.....

“இல்லை... “

“சென்னைக்கும் காஞ்சிபுரத்திற்கும் நடுவில் அந்த செந்தட்டி கிராமம் இருக்கு ஸார். ரொம்பவும் வளமான கிராமம். வயல்வெளிகளும், தென்னந்தோப்புகளுமாய் பார்க்கவே குளிர்ச்சியாய் இருக்கும். அந்த கிராமத்தில் மட்டும் முகில்வண்ணனுக்கு நூறு ஏக்கர் நிலம் இருக்கு. அவர் அங்கே நிலம் வாங்க காரணம் முகில்வண்ணனோட குலதெய்வமான குடல் வாங்கி மாரியம்மன் கோயில் அந்த கிராமத்தில் இருந்ததுதான். ஓவ்வொரு அமாவாசையன்னிக்கும் அவரோட ஒட்டு மொத்த குடும்பமும் அந்த கோயிலுக்குப் போயிடும். முகில்வண்ணன் முதல் தடவை முதலமைச்சராய் இருந்த கால கட்டத்தில் அவரோட அப்பாவும், அம்மாவும் ஒரு வருஷ வித்தியாசத்துல அடுத்தடுத்து இறந்து போனாங்க. அந்த ரெண்டு பேரையும் முகில்வண்ணன் செந்தட்டி கிராமத்துக்கு கொண்டு போய் அவரோட சொந்த நிலத்துல அடக்கம் பண்ணி ரெண்டு பெரிய மணி மண்டபங்களை கட்டி, அதைச் சுற்றி ஒரு பெரிய நந்தவனத்தையே உருவாக்கியிருக்கார். நான் கூட மொதல்ல முகில்வண்ணனுக்கு அப்பா, அம்மா மேல் இவ்வளவு பாசமான்னு நினைச்சேன். கடைசியில் நான் கேள்விப்பட்ட விஷயம் வேற மாதிரி இருந்தது”

“வேற மாதிரின்னா…….?”

“அப்பா, அம்மாவுக்கு கட்டின மணி மண்டபங்களுக்குக் கீழே ஒரு சுரங்கப் பாதை உருவாக்கி மொத்தப் பணத்தையும் அங்கே கொண்டு போயிட்டார்”

“இந்த விஷயத்தை உங்களுக்கு சொன்னது யாரு?”

“ஒரு நம்பிக்கைக்கு உரிய நபர். அவர் பேச்சில் பொய் இருக்காது. ஆனா அவரோட பேரை நான் சொல்ல மாட்டேன்”

“நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு உண்மையான தகவல்தானா…..?”

“ஒரு பர்சண்ட் கூட பொய்யாக இருக்க வாய்ப்பு இல்லை ஸார். முகில்வண்ணன் தன்னுடைய அப்பாவுக்கும், அம்மாவுக்கும் கட்டினது மணி மண்டபம் இல்லை ஸார். Money மண்டபம் ……. அந்த சமாதிகளுக்குக் கீழே இருக்கிற சுரங்கப் பாதையைக் கண்டு பிடிச்சுட்டா ரெண்டு கண்டெய்னர் அளவுக்கு பணம் கிடைக்கும் ஸார்……..”

கஜபதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவருடைய செல்போன் சைலன்ஸ் மோடில் இருந்தபடி யாரோ அழைப்பதற்கு அடையாளமாய் விட்டு விட்டு வெளிச்சம் அடித்தது.

எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தார். கஜபதியின் முதுகுத் தண்டுவடத்தில் லேசாய் மின்சாரம் பாய்ந்த உணர்வு

முகில்வண்ணனின் பெயர் டிஸ்ப்ளேயில் தெரிந்தது.

கஜபதி அருளை ஏறிட்டார்.

“ஸார் முகில்வண்ணன் கூப்பிடறார்”

“ஸ்பீக்கரை ஆன் பண்ணி பேசுங்க....!

கஜபதி ஸ்பீக்கரை ஆன் செய்து விட்டு பேசினார்.

“அண்ணே !”

கஜபதி! நீ இப்போ எங்க இருக்கே ?”

“வீட்ல தூங்கிட்டிருக்கேண்ணே !”

“சரி ....! உடனே புறப்பட்டு நம்ம பண்ணை வீட்டுக்கு வா”

“எதுக்கண்ணே ..... இந்த ராத்திரியில.....?”

“காரணம் சொன்னாத்தான் வருவியா...!”

“இதோ புறப்பட்டேண்ணே….!”

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
The 17th episode of Rajeshkumars new political thriller Five Star Dhrogam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X