For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"விபரீதங்கள் இங்கே விற்கப்படும்!”.. (1)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

கிழக்குத்திசை சூரியனை பிரசவிக்கும் முயற்சியில் இருக்க, அந்த புதன்கிழமை ஸ்லோமோஷனில் விடிந்து கொண்டிருந்தது.

பூஜையறையிலிருந்து வெளிப்பட்டாள் வளர்மதி. இயற்கையான சிவப்பு நிறம் உறைந்து போயிருந்த சதைப்பிடிப்பான உதடுகளில் அஷ்டலட்சுமி ஸ்தோத்ரம் உதிர்ந்து கொண்டிருந்தது.

" யாதேவீ சர்வபூதேஷீ லட்சுமி ரூபேணா சமஸ்திதா நமஸ்தஸ்யை..... நமஸ்தஸ்யை..... நமஸ் .......!"

"அம்மா வளர்மதி....... " ஹால் சோபாவுக்கு சாய்ந்து உட்கார்ந்திருந்த மாமியார் குரல் கொடுத்தாள். மந்திரத்தை அப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு வளர்மதி திரும்பினாள்.

Rajeshkumar new series Vibareethangal Inge Virkappadum

"சொல்லுங்க அத்தே....... ! "

" என்னமோ தெரியலையடி.... "வெட வெட"ன்னு வருது. சர்க்கரை நிறைய போட்டு, டிக்காஷனை திக்கா கலந்து ஒரு அரை டம்ளர் காப்பி குடேன்....சாயந்தரம் டாக்டர் பாலாஜியைப் போய் பார்க்கணும் "

" இதோ கொண்டு வர்றேன் அத்தே....... ! " வளர்மதி சொல்லிக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தாள். காப்பி ஃபில்டரில் டிகாஷன் இறங்கியிருக்கிறதா என்று பார்த்துக்கொண்டு இருக்கும் போதே அவளுடைய இடது தோளின் மேல் மெத்தென்று ஒரு கை படிந்தது.

திரும்பினாள்.

அவளுடைய கணவன் _ஹரி தலைக்குக் குளித்துவிட்டு டர்க்கி டவலால் அடர்த்தியான தன் தலைக்கேசத்தை துடைத்தபடி நின்றிருந்தான். கணவனை ஒரு சின்னப்புன்னகையோடு ஏறிட்டாள்.

" என்ன _......... ரொமான்ஸா...... தலையை துடைச்சுகிட்டே கிச்சனுக்குள்ளே வந்துட்டே ? "

வளர்மதி சந்தோஷமான மூடில் இருக்கிறாள் என்றால் கணவன் _ஹரியை " _ " என்று கூப்பிடுவது கடந்த இரண்டு வருட திருமண வாழ்க்கையில் எழுதப்படாத ஒரு சட்டம். அந்தச்சட்டத்தில் கணவன் மனைவி என்ற உறவுகள் காணாமல் போயிருக்கும்.

_ஹரி குரலைத் தாழ்த்தினான். " என்ன வளர்....... ! அம்மா ஹால்ல இருக்கும்போது எனக்கு ரொமான்ஸ் வருமா என்ன ? "

" அப்புறம் எதுக்கு இந்த ரகசிய விஜயம் ? "

" நாளைக்கு நம்ம வெட்டிங் டே.... தேர்ட் அனிவர்ஸரி. அதை எப்படி செலிபரேட் பண்ணலாம்ன்னு நேத்து ராத்திரி நான் உன்கிட்டே யோசனை கேட்டபோது நீ என்ன சொன்னே ? "

"சிட்டியில் இருக்கிற ஒரு அநாதை விடுதிக்குப்போய் அங்கே இருக்கிற குழந்தைகளுக்கு ஒரு ராயல் லஞ்ச் ஏற்பாடு பண்ணலாம்ன்னு சொன்னேன்..... நீதான் வேண்டாம்ன்னு சொல்லிட்டியே ? "

"ஆனா இப்ப..... அதுக்கான ஏற்பாட்டை பண்ணிட்டேன். தடாகம் கிராமத்துக்குப் போகிற வழியில் ஈரம் என்கிற பெயரில் ஒரு சிறுவர் காப்பகம் இருக்கு. போன் பண்ணி விசாரிச்சுட்டேன்... மொத்தம் 149 பேரு..... "ஹோட்டல் செவன்த் டேஸ்ட்"க்கு போன் பண்ணி ஆர்டரும் கொடுத்துட்டேன்"

வளர்மதியின் விழிகள் வியப்பில் தத்தளித்தன. கணவனை ஏறிட்டாள்.

" _ கண்ணா..... என்னடா சொல்றே... ? "

" நாளைக்கு நடக்கப்போறதைப்பத்தி சொல்லிட்டிருக்கேன் ! "

"ஹோட்டல் செவன்த் டேஸ்ட்" ரொம்பவும் காஸ்டலியாச்சேயடா... ? "

" காஸ்டலிதான்...... பெர் ஹெட் ஃபைவ் ஹண்ட்ரட் ரூபீஸ். இருக்கட்டுமே....... அதனால் என்ன ... ? "

" உங்க அம்மாகிட்டே சொன்னியா ... ? "

" இல்ல வளர்...... நான் அம்மாகிட்டே சொன்னா அம்மா ஒரு வார்த்தையில் அதெல்லாம் எதுக்கு..... கோயிலுக்குப் போய்ட்டு வந்தா போதும்ன்னு சொல்லி என்னை மேற்கொண்டு பேச விடாமே அடக்கிடுவா.... நீ சொன்னாத்தான் இந்த ராயல் லஞ்ச் ஈவண்ட்டுக்கு அம்மாகிட்டயிருந்து க்ரீன் சிக்னல் கிடைக்கும். போய் பேசிடறியா ? "

Rajeshkumar new series Vibareethangal Inge Virkappadum

" இப்ப வேண்டாம் _... நான் இன்னிக்கு ஒன்பது மணிக்கெல்லாம் ஆபீஸ்ல இருக்கணும். சீஃப் டைரக்டர் வர்றார்..... நான்தான் அவர்க்கு பொக்கே கொடுக்கணும்ன்னு டைரக்டர் சொல்லிட்டார். நான் சாயந்தரம் நாலு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துடுவேன்... அப்ப... அத்தைகிட்டே பேசிக்கிறேன்... இப்ப நீ ட்ரஸ் பண்ணிட்டு டைனிங் டேபிளுக்கு வா.... பிரேக்ஃபாஸ்ட் ரெடியாய் இருக்கு"

" இன்னிக்கு பிரேக்ஃபாஸ்ட் மெனு என்ன ? "

" ரவா இட்லி, வெண்பொங்கல், தக்காளி சட்னி "

" சூப்பர் காம்பினேஷன் ........ கேட்கும்போதே பசியோட பர்சன்டேஜ் எகிறுது. அஞ்சே நிமிஷம்..... டைனிங் டேபிள்ல இருப்பேன்..... "

_ஹரி சமையலறையை விட்டு வெளியேறிப் போக வளர்மதி மாமியாருக்காக காப்பி தயாரிக்க ஆரம்பித்தாள்.

---
சரியாய் எட்டு மணி

கணவனின் கையில் லஞ்ச் பாக்ஸை திணித்துவிட்டு மாமியாரிடம் வந்தாள் வளர்மதி.

" அத்தே.... நான் கிளம்பறேன்.....ஆபீஸூக்கு முக்கியமான ஒருத்தர் வர்றார். நான் ஒன்பது மணிக்கெல்லாம் அங்கே இருக்கணும். சாயந்தரம் சீக்கிரமா வந்துடறேன் "

" நாளைக்கு உன்னோட கல்யாண நாளு. லீவு போட்டுடு..... மருதமலைக்கோ, பேரூர் கோயிலுக்கோ போயிட்டு வரலாம் "

" சாயந்தரம் வந்து பேசறேன் அத்தே.... ! " மாமியாரிடம் சொல்லிக்கொண்டு, கணவன் _ஹரியைப்பார்த்து கண்சிமிட்டி விட்டு தன் ஊதா நிற ஸ்கூட்டியை நோக்கிப் போனாள் வளர்மதி. தன்னுடைய லஞ்ச் பாக்ஸையும், வாணிடி பேக்கையும் கிட்டில் திணித்துவிட்டு ஸ்கூட்டியை கிளப்பினாள். அது வேகம் பிடித்து ஒரு நிமிட நேரத்திற்குள் அந்தத் தெருவைக் கடந்து பிரதான சாலைக்கு வந்தது, போக்குவரத்தற்ற பரந்த சாலையில் ஸ்கூட்டியின் வேகத்தை அதிகரித்த வளர்மதி இரண்டு கிலோமீட்டர் தூரத்தைக் கடந்ததும் எதிர்ப்பட்ட அந்தப் பெரிய புளியமரத்தின் கீழே மண்டியிருந்த நிழலில் ஸ்கூட்டரைப் போய் நிறுத்திக் கொண்டாள். வாணிடி பேக்கைப் பிரித்து அதற்குள் இருந்த செல்போனை எடுத்துக் கொண்டு காண்டாக்ட்ஸ் ஆப்ஷனுக்குப் போய் ஒரு எண்ணைத் தொட்டாள்.

மறுமுனையில் ரிங் போய் பத்தாவது விநாடி ஒரு ஆண்குரல் கேட்டது.

" என்னம்மா.... வளர்மதி..... இந்த நேரத்துக்குப் போன்......? "

" ஸார்.... இன்னிக்கு எனக்கு அரை நாள் லீவு வேணும்.... மத்தியானம் ஒரு மணிக்குள்ளே ஆபீஸூக்கு வந்துடறேன் "

" எதுக்கு அரை நாள் லீவு......? "

" என்னோட மாமியாருக்கு உடம்பு கொஞ்சம் முடியலை ஸார்.... டாக்டர்கிட்டே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருக்கேன். பத்து மணிக்கு போகணும்.... எப்படியும் டாக்டரைப் பார்த்துட்டு வீடு திரும்ப பணிரெண்டு மணியாயிரும். அதுக்கப்புறம் நான் புறப்பட்டு ஆபீஸூக்கு வந்துடறேன் ஸார்"

மறுமுனையில் மெளனம்

வளர்மதி கேட்டாள்.

" என்ன ஸார் பேச்சையே காணோம் ......? "

" நான் பேசறதுக்கு என்னம்மா இருக்கு..... கடந்த ஒரு வருஷத்துல மட்டும் பத்து தடவை இப்படி அரைநாள் லீவு போட்டிருக்கே. ஒவ்வொரு தடவையும் ஏதாவது ஒரு காரணம் சொல்றே ......? "

" அப்படீன்னா நான் சொல்றதை நீங்க நம்பலையா ஸார்......? "

" நான் நம்பறேன்மா..... ஆனா எனக்கும் மேலே இருக்கிற சீஃப் மானேஜர் சந்தேகப்படற மாதிரி தெரியுது. லீவ் கேட்டா சாங்ஷன் பண்ண வேண்டாம்ன்னு போன தடவையே சொன்னார்"

" ஸார்...... இந்த ஒரு தடவை மட்டும் எப்படியாவது லீவ் சாங்ஷன் பண்ணிடுங்க ஸார். மாமியாருக்கு உடம்பு ரொம்பவும் முடியலை..... அந்த டாக்டர்கிட்டே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கறதே கஷ்டம். எப்படியே தெரிஞ்ச நர்ஸ் மூலமாய் சொல்லி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினேன் ஸார் "

" சரி....சரி..... ஆபீஸூக்கு மத்தியானம் ஒரு மணிக்குள்ளே வந்துடுவியா......? "

" வந்துடுவேன் ஸார்....... ! "

" நீ கேட்ட லீவை நான் சாங்ஷன் பண்ணலை. இது ஆஃப் த ரெகார்ட் லீவு...... ஆபீஸ்ல யார்க்கும் தெரிய வேண்டாம். ஆன் ட்யூட்டின்னு நான் போட்டுக்கிறேன் "

" தேங்க்யூ ஸார்....... ! "

" இப்படி நீ அரைநாள் லீவு போடறது இதுவே கடைசி தடவையாய் இருக்கட்டும்....... ! "

" முயற்சி பண்றேன் ஸார் "

செல்போனை அணைத்து வாணிடி பேக்கில் போட்டுக்கொண்ட வளர்மதி ஸ்கூட்டியை உயிர்ப்பித்துக் கொண்டு சாலையில் பறந்தாள்.

பத்து நிமிஷப் பயணத்திற்கு பிறகு ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஆள் நடமாட்டம் அற்ற ரோஸ்வில்லா அவென்யூ சாலையில் இருந்த அந்த ஸ்நோசெம் க்ரீம் நிற பெயிண்டில் குளித்திருந்த பங்களாவின் காம்பெளண்ட் கேட்டுக்கு முன்பு ஸ்கூட்டியை நிறுத்த செக்யூர்ட்டி கூண்டில் இருந்த செக்யூர்ட்டி எழுந்து வந்தார்.

நெற்றி நிறைய குழப்பத்தோடு கேட்டார்.

" என்னம்மா ......? "

" ஈஸ்வர் அய்யாவைப் பார்க்கணும் "

" நீங்க யார்ன்னு தெரியலையேம்மா "

" என் பேர் வளர்மதி.... அய்யாவைப் பார்த்து ஒரு ரெண்டு நிமிஷம் பேசணும் "

" அப்பாயிண்ட்மெண்ட் இருக்கா ? "

" திடீர்ன்னு புறப்பட்டு வரவேண்டியதாயிருச்சு. அப்பாயிண்ட்மெண்ட் வாங்க முடியலை..... நேர்ல சொல்ல வேண்டிய ஒரு முக்கியமான விஷயம்....... ! "

" ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்கம்மா..... நான் அய்யாகிட்டே போன்ல கேட்கிறேன். அவர் வரச் சொன்னா நான் அனுப்பறேன்..... " வாட்ச்மேன் சொல்லிக்கொண்டே உள்ளே போய் இண்டர்காம் செல்போனில் பேசிவிட்டு சற்றே பதட்டம் தொற்றிக் கொண்டே நடையோடு வந்தார்.

" அய்யா வரச் சொல்லிட்டார்..... உள்ளே போங்கம்மா. லானை ஒட்டியிருக்கிற மாடிப்படி வழியாய் போனா முதல் மாடி. ரெண்டாவது ரூம் "

கேட் திறக்கப்பட ஸ்கூட்டியுடன் உள்ளே போனாள் வளர்மதி. வைட்டமின் "ப" உபயத்தால் ஒட்டு மொத்த பங்களாவும் போஷாக்கோடு தெரிந்தது. லானில் வளர்ந்திருந்த கொரியன் க்ராஸ் கூட புதுவிதமான பச்சை நிறத்தைக் காட்டியது. ஸ்கூட்டியை அட்லாண்டிக் ப்ளூ நிறத்தில் குளித்திருந்த உயர்ந்த ஜாதி கார்க்குப் பக்கத்தில் நிறுத்திவிட்டு மாடிப்படியேறி மேலே போனாள். பங்களாவின் எந்த திசையிலும் ஆட்கள் இல்லை. முதல் மாடியின் இரண்டாவது அறைக்கு முன்பாய் வந்து பாதி திறந்திருந்த கதவை மெல்லத் தள்ளினாள்.

அது சத்தம் இல்லாமல் உள்ளே போக, பளீர் வெள்ளையில் பைஜாமா மாதிரியான உடையணிந்து மடியில் லாப்டாப்பை வைத்துக் கொண்டு அந்த மனிதர் சோபாவில் சாய்ந்திருந்தார். வயது ஐம்பதுக்கு மேல் ஏதோ ஒரு வயது.

வளர்மதி தயக்கமாய் உள்ளே நுழைந்தாள்.

" குட்மார்னிங் ஸார் "

" குட்மார்னிங் உள்ளே வாம்மா "

" ஸாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ் ஸார் "

" பரவாயில்ல..... உட்கார்ம்மா...... " அவர் தனக்கு எதிரில் இருந்த நாற்காலியைக் காட்ட வளர்மதி அதன் நுனியில் உட்கார்ந்தாள்.

" உம் பேர் என்னம்மா ? "

" வளர்மதி "

" நல்ல பேர்...... என்கிட்டே ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தைப்பத்தி பேசணும்ன்னு வாட்ச்மேன்கிட்டே சொன்னியாமே? "

" ஆமா ஸார் "

" என்ன விஷயம்மா ? "

" ஸார்.... இன்னிக்கு 20075 நாள் "

அந்த ஈஸ்வர் திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்த லாப்டாப்பை அணைத்துக் கொண்டே கேட்டார்.

" 20075வது நாளா ? "

" ஆமா ஸார்.... இன்னிக்கு நீங்க பிறந்து 20075 நாளாகுது... உங்களுக்கு இப்ப வயசு 55. இதை 365ல் பெருக்கிப் பாருங்க. 20075 நாள் வரும்... "

" சரி..... அதுக்கு இப்ப என்னம்மா ? "

" உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வேண்டாமா ஸார் " சொன்ன வளர்மதி தனது இடுப்பின் மறைவுக்கு கையைக் கொண்டு போய் அந்த வெளிநாட்டு ஜாதி பிஸ்டலை எடுத்தாள்.

(தொடரும்)

English summary
Writer Rajeshkumar's new series Vibareethangal Inge Virkappadum, a suspense thriller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X