For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 31

By Shankar
Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

கதை, இதுவரை...

வேளச்சேரி ரயில் நிலையத்தில் கோரமாய் வெட்டிக் கொல்லப்பட்ட பத்திரிகை நிருபர் சுடர்கொடி வழக்கில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் வட சென்னை போகிறார்கள். ஜெபமாலையைச் சந்திக்கிறார்கள். ஆனால் திடீரென அவளைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அவளை மருத்துவனையில் விஷ்ணு சேர்த்துவிட்டு, அவள் தந்த குறிப்புடன் கொலையாளியைத் தேடிப் புறப்படுகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். கொலையாளி தரப்பிலிருந்து எச்சரிக்கை வருகிறது. சுடர்கொடி வழக்கை அவசரஅவசரமாக முடிக்க ஜெயவேல் என்ற ஒரு அப்பாவியைக் கைது செய்து கேஸை முடிக்கும் திட்டம் தெரிய வருகிறது. உண்மை குற்றவாளியைப் பிடிக்க வளையோசை ஆசிரியர் மீனலோசனியைச் சந்திக்கப் போகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அப்போது வானதி என்ற பெண் ஒரு முக்கியத் தடயம் தருகிறாள். அந்தத் தடயம் அவர்களை நொளம்பூர் நோக்கிச் செல்ல வைக்கிறது. அங்கே அரசின் இளம் சிறார் குற்றவாளிகள் இல்லத்தில் விசாரணையைத் தொடர்கிறான் விவேக்.

இனி...

சச்சிதானந்தம் வியப்பை அடக்கிக் கொள்ள முடியாமல் மறுபடியும் கேட்டார்.

"அது எப்படி ஸார்.... இன்னும் பத்தே நிமிஷத்தில் கல் கடிதத்தை வீசியது யார் என்று உங்களால் கண்டுபிடிக்க முடியும்? இத்தனை நாட்களாய் இங்கே இருக்கிற என்னாலேயே அது யார்ன்னு கண்டு பிடிக்க முடியலையே ..?"

விவேக் எழுந்தான்.

"அது எப்படின்னு இப்ப பார்த்துடலாம் வாங்க..?"

Rajeshkumars crime thriller One + One = Zero - 31

அறையை விட்டு வெளியே வந்தான் விவேக். விஷ்ணு அவனைப் பின் தொடர்ந்தபடியே கேட்டான். "எப்படி பாஸ் கானாடுகாத்தான் குட்டிச் சாத்தான் கோயிலுக்கு போய் ஏதாவது நடுராத்திரி பூஜை பண்ணி தாயத்து கீயத்து கயிறுன்னு கட்டிட்டு வந்து இருக்கீங்களா..?ட

"பேசாம வந்து வேடிக்கையை பாரு ?"

"பாஸ் மொத்தம் 57 பசங்க.... இந்த இடத்துக்கு இப்பத்தான் வர்றோம். அந்தப் பசங்களையும் முதல் தடவையாய் இப்பத்தான் பார்க்கப் போறோம். எவன் கல்லை வீசினான்னு எப்படி கண்டு பிடிக்கப் போறோம்...?"

"உன்னோட மூளைக்கு எதுவுமே தோனலையா ?"

"என் கழுத்துக்குக் கீழே இருக்கிற எந்த உறுப்பும் கொஞ்ச நாளா சரியாய் வேலை செய்யறதில்லை பாஸ். ஒரு நல்ல மல்டி ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடலுக்குப் போய்..."

விஷ்ணு சொல்லிக் கொண்டிருக்கும் போதே சச்சிதானந்தம் விவேக்கிடம் திரும்பி, "ஸார்... பசங்க இருக்கிற கட்டிடம் இந்தப் பக்கம்.. நீங்க அந்த பக்கமாய் போய்ட்டு இருக்கீங்க...," என்றார்.

விவேக் புன்னகைத்தான்.

"நான் சரியான வழியில்தான் போயிட்டிருக்கேன். என் பின்னாடி வாங்க...!"

சச்சிதானந்தமும் விஷ்ணுவும் ஆச்சர்யப்பட்டுக் கொண்டே விவேக்கின் இருபுறமும் நடந்தார்கள்.

அடுத்த இரண்டு நிமிட நடையில் விவேக் விடுதியின் நுழைவு வாயில் அருகே இருந்தான். மர நிழலின் கீழே ஸ்டூலில் உட்கார்ந்து கேட்டுக்குள் நுழைய முயன்ற ஒரு நாயை விரட்டிக் கொண்டிருந்த வாட்ச்மேன் அய்யப்பன் மூன்று பேரையும் பார்த்ததும் தயக்கமாய் எழுந்து நின்றான்.

விவேக் அவனை ஒரு புன்னகையில் நனைத்தபடி கேட்டான். "என்ன அய்யப்பன்... நாய் உள்ளே வரப் பார்க்குதா ?"

"ஆமாங்க ஸார்...."

வாட்ச்மேன் அய்யப்பன் அவ்வளவு இயல்பாய் இல்லை என்பது அவனுடைய மிரட்சியான பார்வையிலேயே தெரிந்தது.

"உனக்கு ரிடையர்மெண்ட் எப்போ...?"

"இன்னும் ஆறுமாசம் இருக்கு ஸார்..."

"இங்கே எத்தனை வருஷமா வேலை பார்க்கிற?"

"இருபது வருஷமாய்"

"உனக்கு இங்கே என்ன பிரச்சனை?"

"ஒரு பிரச்சனையும் இல்ல ஸார்"

"அப்புறம் எதுக்காக இந்த கல் கடிதம் ?" விவேக் தன் கையில் இருந்த கசங்கிய அந்த தாளைக் காட்டினான்.

"க.... க... கல் கடிதமா...?"

"ம்.... இது நீ எழுதினதுதானே....? ஒரு கல்லில் இதைச் சுற்றி எங்களுக்கு முன்னாடி விழும்படியாய் வீசினது நீதானே?"

அய்யப்பனின் முகம் அடியோடு மாறியது.

"ஸ... ஸ.... ஸார்! நான் எதுக்காக அப்படி பண்ணனும். அதோ.... அந்த கட்டிடத்தில் தங்கியிருக்கிற பசங்கள்ல யாரோ ஒருத்தன்தான் வீசியிருக்கணும்..."

"பசங்க யாரும் வீசின மாதிரி தெரியலையே. ஏன்னா இந்த காகிதத்துல இருக்கிற கையெழுத்து ஒத்துப் போகலைன்னு உங்க ஆபீஸர் சொல்றாரே ?"

"ஸார்.... எனக்கு எழுதப் படிக்கவே தெரியாதப்ப நான் எப்படி ஸார் இந்த கடிதத்தை எழுதியிருக்க முடியும் ?"

விவேக் அப்ஸர்வேடிவ் ஆபீஸரிடம் திரும்பினான்.

"என்ன மிஸ்டர் சச்சிதானந்தம் வாட்ச்மேன் அய்யப்பனுக்கு எழுதப் படிக்க தெரியாதா ?"

"அவன் சொல்றது உண்மைதான் ஸார். மாசா மாசம் ரெஜிஸ்டர்ல கைநாட்டு போட்டுத்தான் சம்பளம் வாங்குவான்."

"அப்படீன்னா அய்யப்பன் கடிதம் எழுத வாய்ப்பு இல்லை... ஆனா வேற யாராவது ஒருத்தர் எழுதி கொடுத்து இருக்கலாமே. அதை அய்யப்பன் வாங்கிட்டு வந்து ரெடிமேடா வெச்சுகிட்டு வெளியில் இருந்து முக்கியமான நபர்கள் யாராவது இந்த விடுதிக்குள்ளே வந்தா அவங்க கைகளுக்கு சிக்கும்படியாய் ஒரு கல்லில் காகிதத்தைச் சுற்றி வீசியிருக்கலாமே ?"

அய்யப்பன் இப்போது பயத்தை உதறிவிட்டு லேசாய் வெகுண்டான். "ஸார்... எதுக்காக என் மேல இப்படியொரு பழியைப் போடறீங்க. பசங்கள்ல எவனாவது ஒருத்தன் வீசியிருப்பான். அங்கே போய் விசாரிங்க."

விவேக் அய்யப்பனையே சில விநாடிகள் உற்றுப் பார்த்துவிட்டு ஏற்ற இறக்கமான குரலில் கேட்டான்.

"அப்ப... நீ... வீசலை ?"

"இல்லை.... ஸார்"

"சரி... உன்னோட செல்போனைக் குடு"

"செ...செல்போனா... என்கிட்டே செல்போன் இல்ல ஸார்... நான் போன் பண்ணி பேசற அளவுக்கு சொந்த பந்தமோ, சிநேகிதமோ எனக்குக் கிடையாது ஸார். நான் ஒண்டிக்கட்டை....!"

விவேக் திரும்பினான்.

"விஷ்ணு..."

"பாஸ்"

"அதோ அந்த காம்பெளண்ட் கேட் ஓரமாய் ஒரு அடர்த்தியான மஞ்சள் நிற க்ரோட்டன்ஸ் செடி தெரியுதா ?"

"தெரியுது பாஸ் ..."

"அதுக்குப் பின்னாடி போய் என்ன இருக்குன்னு பாரு"

விஷ்ணு நகர முயல அய்யப்பன் பதட்டமானான். இரண்டு கைகளாலும் வழி மறித்தான். "அ... அ... அங்கே ஒண்ணும் இல்ல ஸார்"

தன்னுடைய சுட்டு விரலை உயர்த்தினான் விஷ்ணு.

"இதோ பார்... உன்னோட வயசுக்கு மரியாதை வேணும்ன்னா தள்ளி நில்லு...."

அய்யப்பன் அரண்டு போனவனாய் தள்ளி நின்றான். விஷ்ணு காம்பெளண்ட் சுவரோரமாய் போய் அந்த க்ரோட்டன்ஸ் செடிக்கு பின்னால் எட்டிப் பார்த்தான்.

"பாஸ் ! ஒரு மஞ்சள் பை இருக்கு!"

"அந்த பைக்குள்ளே என்ன இருக்குன்னு பாரு"

விஷ்ணு அந்த பையைப் பிரித்து உள்ளே பார்த்தான். ஒரு ஸ்மார்ட் செல்போன் பார்வைக்குக் கிடைத்தது.

"பாஸ்! செல்போன் இருக்கு"

"அதைக் கொண்டா"

விஷ்ணு செல்போனோடு வந்தான். விவேக் அந்த செல்போனை அய்யப்பனின் முகத்துக்கு நேராய் நீட்டினான்.

"இது செல்போனா இல்லை சோப்பு டப்பாவா ?"

அய்யப்பன் இப்போது வியர்வையில் இருந்தான். முகம் வெகுவாய் மாறி கண்களில் நீர் பளபளத்தது.

விவேக் செல்போனை இரண்டு பக்கமும் திரும்பிப் பார்த்துவிட்டு மெல்லச் சிரித்தான்.

"லேட்டஸ்ட் செல்போன். மைக்ரோமேக்ஸ் ப்ளாக் 64 ஜி.பி. விலை பதினஞ்சாயிரம் ரூபாய். அது என்னோட செல்போன் இல்லேன்னு சொல்லிடாதே அய்யப்பன். ஏன்னா இந்த போன்ல நீ மறைவா நின்னு திருட்டுத்தனமாய் சுத்தும் முத்தும் பார்த்துட்டு பேசிட்டு இருந்ததை நான் பார்த்துட்டேன். பார்த்தது மட்டும் இல்லை, அதை என்னோட சூப்பர் மேக் செல்போன் வழியாய் வீடியோவும் எடுத்துட்டேன், நீ கொஞ்சம் ஜாக்கிரதையாய் இருந்து இருக்கலாம். ஏன்னா அப்சர்வேடிவ் ஆபீஸ் ரூமிலிருந்து பார்த்தா நீ உட்கார்ந்து இருக்கிற இடம் தெரியுது. வீடியோ ரேஞ்ச் சரியான தூரத்தில் இருந்தது. படம் துல்லியம்."

அய்யப்பன் முகம் வெளிறிப் போனவனாய் குரல் குழறினான்.

"ஸ....ஸ.....ஸார்... அது வந்து ....!"

"இனி உன்னோட வாயிலிருந்து ஒரு பொய் கூட வரக்கூடாது அய்யப்பன். கல் கடிதம் உன்னோட வேலைதானே ?"

"ஆ....ஆ.... ஆமா ஸார்.."

"எதுக்காக இப்படி....?"

"மனசு பொறுக்கலை ஸார்"

"எதனால..?"

சந்தர்ப்ப வசத்தால் பல்வேறு வகையான குற்றங்களைப் பண்ணிட்டு இங்கே வர்ற பசங்களை திருத்தி நல்வழிப் படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு மட்டுமில்லை பொது மக்களுக்கும் இருக்குன்னு நான் நினைச்சதால என்னோட பங்குக்கு நான் இதை பண்ணினேன்...!"

விவேக் அந்தக் கல் கடிதத்தை எடுத்து ஒரு தடவை படித்தான். 'எங்களுக்குத் தேவை நீதி விசாரணை மூன்று மாதத்திற்கு ஒரு முறை நான்கைந்து பேர் தப்பித்துப் போய்விடுகிறார்கள். ஆனால், யாரும் பிடிபட்டு மீண்டும் இங்கு வருவது இல்லை. இந்தச் சிறை என்ன செய்கிறது என்கிற இந்த வாசகங்களை உனக்கு எழுதிக் கொடுத்தது யாரு..?'

"அது... அது.... வந்து..."

"இந்த இழுத்துப் பேசற வேலையெல்லாம் வேண்டாம். உண்மையிலேயே உன்னோட நோக்கம் நல்லதாய் இருந்தா நீ யார்க்கும் பயப்பட வேண்டியதில்லை... உண்மையைச் சொல்...!"

அய்யப்பன் கண்களில் மின்னும் நீரோடு பேசினான்.

"ஸார்... இந்த விடுதியில் பல வருடமாய் நான் வாட்ச்மேனாய் இருந்துட்டு வர்றேன். இளம் குற்றவாளிகளாய் இங்கே வர்ற சிறுவர்கள் தண்டனைக் காலம் முடிஞ்சு வெளியே போகும்போது மனம் திருந்தி இருப்பாங்க. ஆனா சமீப காலமாய் நடக்கிற சில விஷயங்கள் என்னோட மனசை ரணமாக்கியிருக்கு. இப்ப இருக்கிற அப்சர்வேடிவ் ஆபீஸர் ரொம்பவும் நல்லவர். அவர்க்கும் தெரியாமே வெளியே இருக்கிற யாரோ சிலர் இங்கே இருக்கிற இளம் குற்றவாளிகளை இனம் பிரிச்சு அதில் இருந்து நாலைஞ்சு பேரை தப்ப வெச்சு வேற சில தப்பான வேலைகளுக்குப் பயன்படுத்திக்கிறாங்க. அதைக் கண்டு பிடிக்க இங்கே இதுக்கு முன்னாடி அப்சர்வேடிவ் ஆபீஸராய் இருந்த ரஹீம் கஸாலி அவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்தார். அவரால் முடியலை. அதுக்குள்ளே அவர் ரிடையர்ட் ஆயிட்டார். ரிடையர்ட் ஆகி ஒரு மாசமானதும் என்னை ஒருநாள் வந்து இங்கே பார்த்து ரஹீம் கஸாலி சொன்ன விஷயம் 'பகீர்'ன்னு இருந்துச்சு.'

[First Part, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 ,21, 22, 23, 24, 25, 26, 27,28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, Last Part]

English summary
31st Chapter of Rajeshkumar's crime series One + One = Zero.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X