For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் முகம் பார்த்த கண்ணாடிகள் - 10: நானும் என் வாசகர்களும்

By Shankar
Google Oneindia Tamil News

என்னுடைய 41 வருட எழுத்துல வாழ்க்கையில் நான் எத்தனையோ விஐபிக்களையும் விவிஐபிக்களையும் சந்தித்து இருந்தாலும், நான் நேரிலும், தபால் மூலமாகவும், அப்போதைய ட்ரங்க்கால், எஸ்டிடி மூலமாகவும், இப்போதைய செல்போன் மூலமாகவும், இமெயில் மூலமாகவும் சம்பாதித்த வாசகர்கள்தான் என்னை இன்னும் பிரமிப்பில் ஆழ்த்தி மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

1980களில் நான் நாவல்களையும் தொடர்கதைகளையும் எழுதிக் கொண்டிருந்தபோது, அப்போது மாணவர்களாய் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்தவர்கள், இன்றைக்கு புகழ்மிக்க டாக்டர்களாகவும், பொறியாளர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், போலீஸ் அதிகாரிகளாகவும், தொழில் அதிபர்களாகவும் உருவாகியுள்ளார்கள்.

Rajeshkumar's Naan Mugam Paarththa Kannadigal - 10

என் வீட்டில் யாருக்கேனும் ஆரோக்கிய குறைபாடு ஏற்படும்போது, கோவையில் உள்ள எந்த ஒரு மருத்துவமனைக்குச் சென்றாலும் அங்கே உள்ள டாக்டர்கள் என்னை அடையாளம் தெரிந்து கொண்டு சொல்லும் முதல் வாசகம்: "ஸார்...! காலேஜ் டேஸ்ல நான் உங்க வெரோசியஸ் ரீடர். உங்க நாவல் எந்தப் புத்தகத்தில் வந்தாலும் வாங்கிப் படிச்சிருவேன்," என்று சொல்வதோடு கன்சல்டேஷன் ஃபீஸ் கொடுத்தாலும் வாங்க மறுத்துவிடுவார்கள். நான் எவ்வளவோ வற்புறுத்தி ஃபீஸைக் கொடுத்தாலும் வாங்க மறுத்துவிடுவார்கள். நிரம்பவும் வற்புறுத்தினால், "ஸார்! உங்க நாவல்கள் மூலமாக எத்தனையோ பேர்களைச் சந்தோஷப்படுத்தறீங்க... நாங்க இந்த ஒரு உதவியைக் கூட செய்யலைன்னா எப்படி...?" என்று சொல்லி என்னை மேற்கொண்டு பேச விடாமல் செய்து விடுவார்கள். நான் எந்தக் கல்லூரியில் பேசச் சென்றாலும் சரி, அங்கே பணியாற்றும் பேராசிரியர்கள் சில பேர்களாவது என்னுடைய ஆரம்ப கால வாசகர்களாய் இருந்து இருப்பதைப் பார்த்து ஆச்சர்யம் அடைந்துள்ளேன்.

இப்படியெல்லாம் நான் சொல்வதும் எழுதுவதும் சிலர்க்கு நான் தற்பெருமை அடித்துக் கொள்வதாகத் தோன்றலாம். ஆனால் நிச்சயம் இது தற்பெருமை அல்ல. நான் ஆரம்ப காலத்தில் இந்த எழுத்துத் துறையில் பட்ட கஷ்டங்களுக்கும், அடைந்த அவமானங்களுக்கும் கிடைத்த வெகுமதியாகவே அந்த பாராட்டுக்களையெல்லாம் நினைத்துக் கொள்கிறேன். என்னைப் பொருத்தவரைக்கும் என் புண்பட்ட மனதின் மேல் தடவப்பட்ட மருந்துதான் என்னுடைய வாசகர்கள் பாராட்டும் வார்த்தைகள்.

'நீ எழுதி என்ன சாதித்துவிட்டாய்?' என்று கேள்வி கேட்பவர்களுக்கு நான் பதில் சொல்வதற்கு முன்பாகவே என்னுடைய வாசகர்கள் அனைத்துத் துறைகளிலும் இருந்து கொண்டு நான் என்ன சாதித்தேன் என்பதை விளக்கமாகச் சொல்லிவிடுகிறார்கள். சென்ற மாதம் ஒரு மதிய நேரம். என் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. கூப்பிடுவது யார் என்று செல்போனை எடுத்துப் பார்த்தேன்.

ஒரு புது எண்.

யாராயிருக்கும் என்று குழப்பத்தோடு மெல்ல "ஹலோ" என்று குரல் கொடுத்தேன். மறு முனையில் ஒரு புதிய குரல் கேட்டது.

"பேசறது யாரு ராஜேஷ்குமார் சாரா?"

"ஆமா... நீங்க...?"

"ஸார்... என் பேர் செந்தில் குமார். டெப்டி போலீஸ் கமிஷனராய் இருக்கிறேன்"

நான் ஒரு சில விநாடிகள் ஆடிப் போய்விட்டேன். மறுமுனையில் டெப்டி போலீஸ் கமிஷனர் பேசுகிறாரே... ஏதாவது பிரச்சினையோ என்று யோசித்தபடி, "சொல்லுங்க ஸார்.... என்ன விஷயம்?"

"விஷயம் ஒண்ணுமில்லை சார்... நான் உங்க கிரேட் ஃபேன். சென்னை பாரீஸ் கார்னர் பூக்கடை போலீஸ் ஸ்டேஷனுக்குப் பக்கத்திலிருக்கிற கமிஷனர் ஆபீஸ்ல டெப்டி கமிஷனரா இருக்கிறேன். நான் ஒரு பர்சனல் வேலை விஷயமா கோவை வந்திருக்கிறேன். உங்களை நேர்ல பார்க்கணும், ஒரு பத்து நிமிஷம் பேசணும். நீங்க ஒரு நேரத்தைக் குறிப்பிட்டுச் சொன்னால் உடனே புறப்பட்டு வர்றேன்."

அவர் போன் செய்த நேரம் அப்போதுதான் சென்னையிலிருந்து வந்து இருந்த ஒரு சினிமா டைரக்டரோடு ஸ்டோரி டிஸ்கஷனுக்காக வெளியே கிளம்பிக் கொண்டிருந்தேன். செந்தில்குமார் அவர்களுக்கு என்ன பதிலைச் சொல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, என்னுடைய தயக்கத்தைப் புரிந்து கொண்டு அவரே கேட்டார்.

"என்ன சார்... உங்களுக்கு ஏதாவது முக்கியமான வேலை இருக்கா?"

"சென்னையிலிருந்து ஸ்டோரி டிஸ்கஷனுக்காக ஒரு சினிமா டைரக்டர் வந்திருக்கார். அவரோடு இப்ப நான் வெளியே கிளம்பிட்டிருக்கேன். போய்ட்டு எத்தனை மணிக்கு வீடு திரும்புவேன்னு எனக்கே தெரியல. ஏன்னா அந்த சினி பீப்பிள் எனக்காகவே சென்னையிலிருந்து வந்திருக்கிறார்கள்...!"

"நோ.. ப்ராப்ளம் ஸார்...! நான் அடுத்த மாசமும் கோவை வரவேண்டிய வேலை இருக்கு... அப்ப வந்து பாத்துக்கறேன். உங்க செல்போன் நம்பரையும் வீட்டு அட்ரஸையும் பூம்புகார் பதிப்பகத்திலிருந்து வாங்கினேன். இந்த தடவை உங்களை நேர்ல பார்க்காமல் போனாலும், போன்ல பேச முடிஞ்சதுல ரொம்பவும் சந்தோஷம். ஒரு ரெண்டு நிமிஷம் உங்ககிட்ட தொடர்ந்து பேசலாமா?"

"தாராளமாய் பேசலாம் ஸார்..."

"நானும் என்னோட அண்ணனும் ஸ்கூல் ஃபைனல் படிச்சிட்டிருக்கும்போதே உங்க நாவல்களைப் படிக்க ஆரம்பிச்சிட்டோம். உங்களுடைய ஒவ்வொரு கதையும் படிக்கத் த்ரில்லிங்கா இருக்கும். அதுமட்டுமில்லாமல், போலீஸ் துறை சம்பந்தப்பட்ட விவரங்கள், ஒரு கொலையாளியைக் கண்டுபிடிக்க போலீஸார் எடுத்துக் கொள்கிற முயற்சிகள், ஃபாரன்ஸிக் துறை சம்பந்தப்பட்ட வியப்பான உண்மைகள் இதெல்லாம் எங்க ரெண்டு பேருக்கும் பிரமிப்பாய் இருக்கும். உங்க நாவல்களில் வர்ற க்ரைம் பிராஞ்ச் போலீஸ் ஆபீஸர் விவேக் சாதுர்யமாய் துப்பறிந்து கொலையாளிகளைக் கண்டுபிடிக்கும் பாணி என்னுள் ஒரு ஆர்வத்தை வளர்த்ததால் நான் காவல் துறையில் பணியாற்ற விரும்பி, அதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டேன். அதன் காரணமாய் நான் இன்று டெப்டி கமிஷனர் என்ற டெஸிக்னேஷனில் ஒரு அதிகாரியாய் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய அண்ணன் இப்போது ஒரு பிரபல வழக்கறிஞராக இருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் நாங்கள் படித்த உங்கள் நாவல்களின் பாதிப்புதான்!"

"உங்க பாராட்டுக்கு நன்றி ஸார்... அடுத்த முறை நீங்கள் கோவை வரும்போது கண்டிப்பாய் சந்திப்போம்!"

"உங்கள் நாவல்கள் வெறும் பொழுதுபோக்கு நாவல்கள் அல்ல. அதில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட அறிவுப்பூர்வமான விஷயங்கள் இருப்பதால் அந்த நாவல்கள் என்னைப் பொறுத்தவரைக்கும் இளைஞர்களுக்கான பாடப் புத்தகங்கள். என்னைப் பொறுத்தவரைக்கும் உண்மையான இலக்கியம் என்பது உங்களுடைய எழுத்துதான். இந்த எழுத்துப் பணி மென்மேலும் வாழ்க, வளர்க...!" என்று சொல்லி தன் செல்போன் பேச்சை முடித்துக் கொண்டார் டெப்டி கமிஷனர் செந்தில்குமார் அவர்கள்.

என் மீது கொண்ட அளவுக்கு அதிகமான அன்பின் காரணமாகத்தான் அவர் அப்படிச் சொல்கிறார் என்று நான் எண்ணிக் கொண்டேன். ஆனால் அவர் அப்படிச் சொன்னது நூற்றுக்கு நூறு சரி என்பதுபோல், அந்த வாரத்தின் இறுதியிலேயே அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து 'அரசு' என்கிற 34 வயது இளைஞர் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்..

அரசு என்பவர் யார் என்பதை உங்களுக்கு நான் அறிமுகப்படுத்தியே ஆக வேண்டும். அரசு என்பது வேறு யாருமல்லை. திரு லேனா தமிழ்வாணன் அவர்களின் மூத்த மகன். மறைந்த திரு தமிழ்வாணன் அவர்களின் பேரன். சான் பிரான்சிஸ்கோ நகரில் இருக்கும் ஒரு பிரபலமான ஐடி கம்பெனியின் வைஸ் சேர்மன். இந்த இளம் வயதிலேயே 250 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்யும் ஒரு வெளிநாட்டுக் கம்பெனிக்கு மூளையாய் இருந்து செயல்படுபவர். நான் அவரை ஒரே ஒருமுறைதான் அதுவும் அவர் திருமணத்தின்போது சந்தித்ததுதான். அதன் பிறகு அவரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. ஆனால் அவர் தமிழில் வெளியாகும் எல்லா வகையான படித்துவிடுவார் என்ற உண்மை எனக்குத் தெரியும்.

அப்படிப்பட்ட ஒருவரிடம் இருந்து எனக்கு வந்த கடிதத்தைப் படித்துப் பார்த்தபோது எனக்குள் உற்பத்தியான உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் திணறினேன்.

அவர் எனக்கு எழுதிய அந்தக் கடித்ததை நீங்களும் படித்துப் பாருங்கள். இதோ அந்தக் கடிதம்!

"பெருமதிப்புக்குரிய க்ரைம் கதை மன்னர் ராஜேஷ்குமார்
அவர்களுக்கு,
என் பணிவான வணக்கங்கள்.

கோவிலில் அர்ச்சகர் தெய்வச் சிலைக்கு தீபாராதனை செய்த
பிறகு வரிசையில் நின்று இருப்பவர்கள் எவ்வாறு
பயபக்தியோடு தீபத்தைக் கண்ணில் ஒற்றிக் கொள்வார்களோ
அதுபோலவே தங்களின் கரங்களை இக்கடிதத்தின் மூலம் ஒற்றிக் கொள்கிறேன்.

1500-க்கும் மேற்பட்ட நாவல்களையும், 2000-க்கும் மேற்பட்ட
சிறுகதைகளையும் எழுதிய கரங்கள் அல்லவா அவை. ஒரு சிறிய
கணக்குப் போட்டுப் பார்க்கிறேன். 1500 நாவல்கள் ப்ளஸ் 2000
சிறுகதைகள் என்றால் எத்தனை லட்சம் பக்கங்கள்? எத்தனை கோடி
வார்த்தைகள்? எத்தனை நூறு கோடி தமிழ் எழுத்துகள்?
தமிழ் எழுத்துக்களையே மூச்சாக, தவமாக அல்லவா வாழ்க்கையை
வாழ்ந்து இருக்கிறீர்கள். நினைக்கும்போதே கண்கள் பணிக்க
மட்டும் செய்யாமல் கழுத்துவரை கண்ணீர் வழிந்து ஓடுகிறது.

நான் இப்போது வாரம் தவறாமல் 'tamil.oneindia.com'-ல்
தாங்கள் எழுதி வரும் 'நான் முகம் பார்த்த கண்ணாடிகள்'
தொடரைப் படித்து வருகிறேன். மிகவும் எளிமையாகவும், நேராகவும்
மனதைச் சென்றடைகிறது. அதில் 'inspire' ஆகி இணையத்தில்
உங்களைப் பற்றி தேடித் தேடிப் படிக்கிறேன்.

The Hindu-ல் 2010 மற்றும் 2015-ல் வெளிவந்த கட்டுரை, Live Mint-ல்
வெளிவந்த கட்டுரை, WIKIPEDIA கட்டுரை மற்றும் SUN TV
யில் வந்த விருந்தினர் பக்கம் நிகழ்ச்சி என பலவற்றைப்
படிக்கிறேன், பார்க்கிறேன்.

1980களில் வாரம் ஒரு நாவல் எழுதியது, ஒரே நேரத்தில்
எட்டு வாரப் பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதியது, சினிமாவின்
லட்சங்களுக்கு Compromise செய்து கொள்ளாமல் இருப்பதும்,
சென்னைக்குப் போகாமல் பிறந்த மண்ணான கோவையிலேயே இருப்பதும்,
இந்த 68 வயதிலும் தொடர்ந்து மார்க்கெட்டுடன்
எழுதிக் கொண்டிருப்பது என்று மனதுக்குள் விஸ்வரூபம்
எடுக்கிறீர்கள். சன் டிவி விருந்தினர் பக்கம் நிகழ்ச்சியில்
தாத்தா தமிழ்வாணனை Great Crime Novelist என்று
அவரைப் பற்றி 'Inspiration' ஆகக் கூறினீர்கள். தங்களது
வேகமும் உழைப்பும், ஆற்றலும், எளிமையும் எனக்கு இப்போது
'Inspiration' ஆக உள்ளது.

இலக்கிய உலகில் தங்களை எப்படிப் பார்க்கிறார்கல் என்கிற
கேள்விக்கு காலிக்கோ பைண்டிங் செய்து கண்ணாடிப்
பேழைக்குள் வைப்பதல்ல இலக்கியம், ஒரு பாமரனையும்
போர்ட்டரையும் படிக்க வைப்புதான் இலக்கியம் என்கிற பதில்
காலத்தால் மற்கக முடியாது. இதுதான் உலக இலக்கியம்,
இதுதான் பேரிலக்கியம்.

என்னைப் பொறுத்தவரை கவியரசர் கண்ணதாசனின் காவிய
வரிகள் தங்களுக்கு அப்படியே பொருந்தும்.

நான் நிரந்தரமானவன்
எந்த நிலையிலும்
எனக்கு அழிவில்லை.

அன்புடன் அரசு.'

இந்தக் கடிதத்தைப் படித்து முடித்ததும் எனக்குள் தோன்றிய எண்ணம் இதுதான்!

இந்தக் கடிதம் அரசு என்கிற ஒரு தனிப்பட்ட இளைஞனின் கடிதம் அல்ல, என் எழுத்துக்களைப் புரிந்து கொண்ட ஒட்டு மொத்த வாசகர்களின் ஓங்கி ஒலிக்கும் குரல்,

அந்தக் குரல் என் செவிக்குள் கேட்டுக் கொண்டு இருக்கும் வரை என்னுடைய பேனாவுக்கு களைப்பு இல்லை. சலிப்பில்லை. இந்த உலகில் வெள்ளைப் பேப்பர் என்று ஒன்று இருக்கும் வரை என் பேனா எழுதிக் கொண்டேயிருக்கும்.

-மீண்டும் அடுத்த வாரம்...

English summary
This is the 10th episode of Writer Rajeshkumar's Naan Mugam Paartha Kannadigal series.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X