For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் முகம் பார்த்த கண்ணாடிகள்- 8 குமுதம் ஆசிரியர் எஸ்ஏபியும் நானும் (தொடர்ச்சி...)

By Shankar
Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

"நீங்க அனுப்பி வெச்ச தொடர்கதையோட சுருக்கத்தைப் பத்திப் பேச ஆரம்பிக்கலாமா...?"

"பேசலாம் ஸார்" நான் உதறிக் கொள்ளும் இதயத்தோடு தலையாட்டினேன்.

எஸ்ஏபி அவர்கள் பேச ஆரம்பித்தார்கள். "முதல்ல உங்களுக்கு என்னோட பாராட்டுதல்களையும் வாழ்த்துகளையும் தெரிவிக்க விரும்பறேன். ஏன்னா குமுதத்துக்கு ஏற்ற மாதிரியான ஒரு தொடர்கதைக்குரிய சினாப்ஸிஸை குடுத்து இருக்கீங்க. நல்ல முயற்சி.

சௌகார்த்திகா என்ற பரத நாட்டிய டான்சரை மையமாக வெச்சு நல்லதொரு க்ரைம் த்ரில்லர் கதையைக் கொடுத்து இருக்கீங்க. எப்பவுமே ஒரு பெண்ணை மையப்படுத்தி எழுதற கதைகள்தான் ஜெயிக்கும். ஒரு நல்ல குடும்பப் பெண் எதிர்பாராதவிதமாய் க்ரைம் சூழலில் மாட்டிக்கும்போது, அவள் பிரச்சினைகளை எதிர்கொண்டு எப்படி ஜெயிக்கிறாங்கிற சுவாரஸ்யம் ஒண்ணே போதும். பெண் வாசகிகளுக்கு இதுமாதிரி கதைகள் நிறையவே பிடிக்கும். எனவே என்னைப் பொறுத்தவரை இது ஒரு நல்ல கதைச் சுருக்கம்.

கதையில் ஒரு குழந்தையோட கேரக்டரும் வர்றதால தொடர் சிறப்பாய் அமையும்".

"உங்க பாராட்டுக்கு ரொம்பவும் நன்றி ஸார்"

"நான்தானே உங்களுக்கு நன்றி சொல்லணும். குமுதத்துக்கு ஒரு நல்ல தொடர் எழுதப் போறீங்க.. எங்க ஆசிரியர் குழுவில் இந்தத் தொடரைப் பற்றிப் பேசும்போது சக ஆசிரியர்கள் சில மாறுதல்களைச் சொன்னாங்க. அதை நான்
உங்ககிட்ட சொல்லலாமா?"

"தாராளமாய் சொல்லுங்க ஸார்.."

"இந்த தொடர்கதையோட முடிவு சோகமா இருக்கு. இதை ஏன் ஒரு சந்தோஷமான முடிவாய் மாத்தக் கூடாது?"

Rajeshkumar's Naan Mugam Paarththa Kannadigal - 8

"அது சாத்தியம் கிடையாது ஸார்"

"ஏன்?"

"கதைக்கு ஒரு ஹேப்பி எண்ட் கொடுத்தா கதை நாயகியோட கேரக்டர் அடிபடும் ஸார்... இந்தக் கதைக்கு 'டிராஜிடி எண்ட்' கொடுத்தாத்தான் படிக்கிற வாசகர்களுக்கு ஒரு பிரமிப்பும், கதையின் மேல பிடிப்பும் ஏற்படும் ஸார்..."

"அது எப்படி அவ்வளவு உறுதியாய் சொல்றீங்க?"

"ஸார்! இந்தத் தொடர்கதையின் சுருக்கத்தை நான் எழுதி முடிச்சவுடன், மூணு பெண்கள்கிட்ட படிக்கக் கொடுத்தேன். முதல் பெண் என்னுடைய மனைவி. இரண்டாவது பெண் ஒரு பெண் எழுத்தாளர். மூன்றாவது பெண் என் வாசகி. இந்த மூணுபேருமே படிச்சிட்டு கதையோட 'எண்ட்' ரொம்ப நல்லாருக்குன்னு பாராட்டினாங்க.

முணுபேர்ல யாராவது ஒருத்தர் 'எண்ட்' சரியில்லைன்னு சொல்லியிருந்தாலும் நான் கதையோட முடிவை மாத்தியிருப்பேன். ஆனா மூணு பேருக்குமே எண்ட் பிடிச்சிருக்கே சார்!"

எஸ்ஏபி அவர்கள் என்னையே சில விநாடிகள் ஒரு புன்னகையோடு பார்த்தார்.

"ஒரு கதைச் சுருக்கத்தை குமுதத்துக்கு அனுப்புறதுக்கு முன்னாடி இவ்வளவு ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க. அதனால அந்த ஆராய்ச்சியோட முடிவை நான் மாத்த விரும்பல. கதையோட தலைப்பை கொஞ்சம் மாத்தலாமா...?"

"அதை மாத்தலாம் ஸார்..."

"ஜனவரியில் ஒரு நாள்-ன்னு தலைப்பை வச்சிருக்கீங்க... அதைக் கொஞ்சம் மாத்தி 'ஒரு ஜனவரி ஞாயிற்றுக்கிழமை'-ன்னு வெச்சுக்கலாமா..?"

"வெச்சுக்கலாம்... ஸார்.. நீங்க சொன்ன தலைப்புல ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கு "

"சரி.. தொடரை எழுத ஆரம்பிச்சிடுங்க. வர்ற குமுதம் இஷ்யூவில் விளம்பரம் வரும். தொடரின் முதல் அத்தியாயத்தை எப்ப தர்றீங்க?"

"இப்பவே தர்றேன் ஸார்..."

நான் இப்படிச் சொன்னதும் எஸ்ஏபி அவர்கள் தான் அணிந்திருந்த கண்ணாடியைக் கழற்றிக் கொண்டு, பிரமிப்பாய் என்னைப் பார்த்தார்.

"என்னது...! இப்பவே தர்றீங்களா..?"

"ஆமா... ஸார்.. நான் கோயமுத்தூரிலிருந்து கிளம்பும்போதே தொடரின் ஒரு அத்தியாயத்தை எழுதிட்டு வந்துட்டேன்."

"நீங்க கொடுத்த கதைச் சுருக்கம் ஒருவேளை 'சரியில்லை'ன்னு நிராகரிக்கப்பட்டு இருந்தா...?"

"நிராகரிக்கப்படாது என்ற நம்பிக்கை இருந்தது ஸார். காரணம், இந்தத் தொடர்கதைச் சுருக்கத்தை எழுதறதுக்கு முந்தி, நீங்களும் ரா கி ரங்கராஜன் ஸாரும் குமுதத்தில் எழுதின தொடர்கதைகளை எல்லாம் படிச்சுப் பார்த்தேன் ஸார்.

அந்தத் தொடர் கதைகளில் எது மாதிரியான சம்பவங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது என்பதையும், ஒரு கதையில் எது மாதிரியான மெஸேஜ் சொல்லப்படணுங்கிறதையும் நல்லா புரிஞ்சிக்கிட்டு அதுக்கு ஏற்ற மாதிரி கதைச் சுருக்கம் ஒண்ணைத் தயார் பண்ணினேன். அந்தக் கதைச் சுருக்கம் எனக்கே திருப்தியாகவும் நிறைவாகவும் இருந்ததால, முதல் அத்தியாயத்தையும் எழுதிட்டேன். இந்தாங்க ஸார் என்னோட முதல் அத்தியாயம்."

நான் எழுந்து நின்று என் கையோடு கொண்டு போயிருந்த முதல் அத்தியாயக் கவரை நீட்ட, எஸ்ஏபி அவர்களும் எழுந்து நின்று வாங்கிக் கொண்டார். அப்படியே சிலிர்த்துப் போனேன்.

எவ்வளவு பெரிய மனிதர்!

தமிழ்நாட்டில் அதிகப் பிரதிகள் விற்கும் ஒரு பத்திரிகைக்கு ஆசிரியரான எஸ்ஏபி அவர்கள், வயதில் சிறியவனும் எழுத்துலகில் ஆரம்பக் கட்டத்தில் இருப்பவனுமாகிய எனக்குக் கொடுத்த மரியாதையும் மதிப்பும் என்னை பிரமிக்க வைத்தது. 'நிலை உயரும்போது பணிவு கொண்டால் மனித வடிவில் தெய்வம்!' என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் எனக்குள் ஓடியது.

1987-ல் அந்தத் தொடர்கதை 'ஒரு ஜனவரியின் ஞாயிற்றுக் கிழமை' குமுதத்தில் வெளியாயிற்று. தொடரின் முதல் அத்தியாயமே வாசகர்களை அதிர வைத்ததால், தொடருக்கு வரவேற்பு அதிகமாயிற்று. பால்யூ அவர்கள் வாராவாரம் எனக்கு போன் செய்து தொடருக்கு கிடைத்து வரும் ரெஸ்பான்ஸை நேரடி ஒளிபரப்பு செய்தார். ராகிர அவர்களும் ஜாராசு அவர்களும் அவ்வப்போது சில மாற்றங்களைச் சொல்ல நான் அந்தப் போக்கிலேயே கதையை எழுத, தொடர் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

அதற்குப் பிறகு வந்த இரண்டு வருட காலத்தில் குமுதம் இதழில் மேலும் இரண்டு தொடர்கள், 'ஆகஸ்ட் அதிர்ச்சி', 'எடு ஆயுதம்' தலைப்புகளில் எழுதினேன். இதன் மூலமாக குமுதத்துக்கும் எனக்கும் இருந்த உறவு பலப்பட்டது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்தது.

1991-ம் வருடம் குமுதம் இதழ் ஒரு புதுமையைச் செய்தது. அதாவது தமிழ்நாட்டு விஐபிக்கள் வாரம் ஒருவர் வீதம் குமுதம் இதழ் தயாரிக்க ஆரம்பித்தார்கள். அந்த விஐபிக்களில் தமிழ்நாட்டு விஐபிக்களில் பிரபலமான அரசியல் தலைவர்கள், நடிகர் நடிகைகள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், எழுத்தாளர்கள் அடக்கம்.

எழுத்தாளர்களில் சுஜாதா, சிவசங்கரி, லஷ்மி, ஜெயகாந்தன் போன்ற புகழ்மிக்கவர்கள் குமுதம் இதழைத் தயாரித்தார்கள்.

அது மே மாதம் என்று நினைக்கிறேன். சென்னையிலிருந்து பால்யூ அவர்கள் போன் செய்து பேசினார்.

"ராஜேஷ்குமார்..! வரப் போகிற குமுதத்தை நடிகை விஜயசாந்தி தயாரிக்கிறாங்க. அதுக்கு அடுத்த குமுதத்தை தயாரிக்கப் போறது நீங்க. ஆசிரியர் சொல்லிட்டார். தயாராய் இருங்க...!"

நான் பேச்சிழந்து நின்றேன்.

"எ..எ.. என்னது! குமுதத்தை நான் தயாரிக்கிறதா.. என்ன... ஸார் சொல்றீங்க?"

"ஒண்ணும் பயப்படாதீங்க...! நாளைக்கு காலையில் குமுதத்தின் துணை ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் உங்களை வந்து பார்ப்பார். மூணு நாள் உங்க கூடவே இருப்பார். குமுதத்தோட 96 பக்கங்களில் 60 பக்கங்கள் உங்களுக்கு. அந்தப் பக்கங்களில் உங்களோட க்ரியேட்டிவிட்டியைக் காட்டுங்க. ஆசிரியருக்கு உங்க பேர்ல அபார நம்பிக்கை. அதான் ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கார். நல்லாப் பண்ணுங்க...!" படபடவென்று பேசிவிட்டு ரிஸீவரை வைத்துவிட்டார். என்னால் டென்ஷனைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

'நானாவது குமுதம் இதழ் தயாரிப்பதாவது?"

"என்னால் முடியுமா?"

அன்று இரவு என்னால் தூங்க முடியவில்லை.

**** **** ****

மறு நாள் காலை பத்துமணியளவில் அப்போது குமுதத்தின் துணையாசிரியராய் இருந்த ப்ரியா கல்யாணராமன் அவர்கள் என்னை வீட்டில் வந்து சந்தித்தார். நான் டென்ஷனாய் இருப்பதைப் பார்த்ததும் அவர் உதட்டில் ஒரு குறுஞ்சிரிப்பு தோன்றியது.

"ஸார்! இதுல டென்ஷன்பட ஒண்ணுமே இல்லை. குமுதத்துல எதுமாதிரியான விஷயங்கள் இடம்பெற்றால் படிக்க சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும்ன்னு யோசனை பண்ணுங்க. உங்களுக்கு நான் எதுவுமே சொல்ல வேண்டியது இல்லை. உங்க விருப்பத்துக்கு வேலை செய்யுங்க," என்றார்.

அதற்குப் பிறகு நான் யோசித்து குமுதம் இதழை சிறப்பாகக் கொண்டுவர என்னென்ன செய்யலாம் என்று பேப்பரையும் பேனாவையும் வைத்துக் கொண்டு செயல்பட்டேன். அந்த குமுதம் இதழில் கீழ்கண்ட விஷயங்களைச் சேர்த்தேன்.

* 'பணம் சம்பாதிப்பது எப்படி?' என்ற தலைப்பில் கோவையில் இருந்த பிரபல தொழில் அதிபர்களைப் பேட்டி எடுத்தேன்.

* ஒரே பக்கத்தில் 'ஒரு க்ரைம் நாவல்' எழுதினேன்.

* குற்றங்களைத் தடுப்பது எப்படி? - ஒரு கட்டுரை

* க்ரைம் க்விஸ் - ஃபாரன்ஸிக் துறை எப்படி செயல்படுகிறது - வெளியே தெரியாத உண்மைகள்.

* கமலும் நானும் 'புன்னகை மன்னன்' ஷூட்டிங்கில் சந்தித்தபோது எடுத்த பேட்டி.

* சிறு வயதில் நான் செய்த சின்னச் சின்ன க்ரைம் சம்பவங்கள்.

* ராஜேஷ்குமாரிடம் கேளுங்கள் - பகுதியில் வாசகர்களின் கேள்விகளுக்கு நான் சொன்ன பதில்கள்.

எனக்குக் கொடுத்த அறுபது பக்கங்கள் போதவில்லை. வழிய வழிய நிறைய விஷயங்களோடு நான் தயாரித்த குமுதம் இதழ் வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. அதைவிட பெருமைக்குரிய விஷயம், நான் தயாரித்த குமுதம் இதழைப் பாராட்டி எஸ்ஏபி அவர்கள் கைப்பட எனக்கு தனிப்பட்ட முறையில் தமிழில் டைப் செய்து ஒரு கடிதம் அனுப்பினார்.

அந்தக் கடிதத்தை 10 ஆண்டுகள் ஒரு பொக்கிஷம்போல் பாதுகாத்து வைத்திருந்தேன். வீடு மாறும்போது கடிதம் எப்படியோ தவறிவிட்டது.

அந்தக் கடிதத்தில் அவர் என்னைப் பற்றி எழுதியிருந்த ஒரு வரி:

"ராஜேஷ்குமார்! உங்களுடைய கையில் இருக்கும் பேனாவுக்கு இனிமேல்தான் வேலை அதிகம். என் வாழ்த்துகளும், ஆசிகளும் உங்களைப் பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்!"

-மீதி அடுத்த வாரம்...

English summary
The 8th episode of Rajeshkumar's Naan Mugam Paartha Kannadigal series for Tamil Oneindia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X