For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எத்தனை காலமும் ஏமாற்றலாம்!

By Shankar
Google Oneindia Tamil News

- சுப வீரபாண்டியன்

"இராசீவ் காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் பேரறிவாளன் ஆகியோரை, ஏனைய குற்றவாளிகளான நளினி உள்ளிட்ட நால்வரோடு சேர்த்து விடுதலை செய்வதெனத் தமிழக அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இம்முடிவு மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்படும். இன்னும் மூன்று நாள்களுக்குள் மத்திய அரசிடமிருந்து எந்த விடையும் வரவில்லையென்றால், தமிழக அரசே தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை விடுதலை செய்யும்" என்று 2014 பிப்.19 அன்று சட்டமன்றத்திலேயே அறிவித்தார், அன்றும் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா.

இப்போது சில நாள்களுக்கு முன் (ஜூன் 25), சென்னை உயர்நீதிமன்றத்தில், விடுதலை கோரி நளினி அளித்திருந்த மனுவிற்குப் பதில் மனு (counter) அளித்த தமிழக அரசு, அவர் மனுவைத் தள்ளுபடி செய்யுமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இப்போதும் தமிழகத்தின் முதலமைச்சர் அதே ஜெயலலிதாதான். பிறகு ஏன் இந்த மாற்றம்? மலையிலிருந்து மடுவில் குதித்திருப்பதன் நோக்கம் என்ன? இந்தப் 'பச்சை இரட்டை வேடத்தை' எவரும் கண்டிக்கவில்லையே என்? இவ்வாறு பல வினாக்கள் எழுகின்றன.

விடுதலை செய்யப்போவதாக அவர் அறிவித்த நேரம், இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருந்த கால கட்டம். தமிழ்த் தேசியவாதிகள் அந்த அறிவிப்பில் மகிழ்ந்து அறிக்கை விட்டனர். 25 ஆண்டுகளாகத் தான் பிள்ளையைப் பிரிந்து வாடும் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மா, ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, நெகிழ்ந்துபோய் நன்றி சொன்னார். அந்த நிழற்படம் ஊடகங்களுக்குச் சென்றது. சுவரொட்டியாகவும் மாறி, அ.தி.மு.க.விற்கு ஆதரவைப் பெருக்கியது.

Jayalalithaa's double standard in Rajiv murder convicts

ஆனால் விடுதலை மட்டும் வரவே இல்லை. என்ன காரணம்?

மத்திய அரசுக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தில், இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் (Cr.P.C) 435(1) ஆம் பிரிவின் கீழ் விடுதலை செய்யவுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். அந்தச் சட்டப் பிரிவில், "மத்திய அரசுடன் கலந்துரையாடி (in consultation with...)என்று ஒரு தொடர் உள்ளது. கலந்துரையாடல் என்றால் மத்திய அரசுக்கு அறிவித்தல்தான் என்றனர் வழக்கறிஞர்கள் சிலர். ஆனால் அதனை மத்திய அரசு ஏற்கவில்லை. உச்சநீதி மன்றத்திற்குச் சென்று, எங்களைக் கேட்காமல் விடுதலை செய்ய மாநில அரசுக்கு உரிமை இல்லை என்று மனு அளித்தது.

அந்த மனுவை ஏற்று விசாரித்த உச்ச நீதி மன்றம், 2015 டிசம்பர் 2 அன்று, கலந்துரையாடல் என்றால் மத்திய அரசின் ஒப்புதல் பெறுவதுதான் (in consultation means getting concurrence) என்று தீர்ப்பளித்தனர்.

அதனையொட்டி ஊடகங்களில் நடைபெற்ற விவாதங்களில், நளினியின் வழக்குரைஞர் ராதாகிருஷ்ணன், தோழர் தியாகு போன்றவர்கள், சட்டப் பிரிவு 435 குறித்து நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை. இந்திய அரசமைப்புச் சட்டம் 161ஆவது பிரிவின்படி தமிழக அரசு தானே அவர்களை விடுதலை செய்ய முடியும். அதனை மத்திய அரசோ, நீதி மன்றங்களோ தடுக்க முடியாது என்றனர். அந்தப் பிரிவு மாநில ஆளுநரின் அதிகாரம் (Governor's power) பற்றி பேசுகிறது. "பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது....(The Government of State shall have the power to grant pardons....)" என்றுதான் அந்த விதி தொடங்குகிறது. யாரும் தடுக்க முடியும் என்பது போன்ற குறிப்புகள் ஏதும் அதில் காணப்படவில்லை. அவர்கள் சொன்னது சரியாகத்தான் இருந்தது.

Jayalalithaa's double standard in Rajiv murder convicts

ஆனால் அதற்கும் ஒருபடி மேலே போய், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், "அந்த அம்மாவுக்கு அந்தத் துணிச்சல் உண்டு. பாருங்கள் இன்னும் இரண்டு நாள்களில் அவர்களை அவர் விடுதலை செய்து விடுவார்" என்று பாராட்டுப் பத்திரம் படித்தார். அற்புதம் அம்மாவும், அந்த அம்மா தன் பிள்ளையை விடுதலை செய்து விடுவார் என்று நம்பினார்.

இந்தப் பாராட்டு, நம்பிக்கை எல்லாம் 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு, ஜெயலலிதாவுக்குப் பயன்பட்டதே அன்றி, பாதிக்கப் பட்டவர்களின் விடுதலைக்கு உதவவில்லை.

அண்மையில் கூட, அவர்களை விடுதலை செய்யக் கோரி, ஒரு கோரிக்கைப் பேரணி நடைபெற்றது. வேலூரிலிருந்து தொடங்குவதாக இருந்த அந்தப் பேரணிக்கு அனுமதி மறுத்த தமிழக அரசு, சென்னையில் மட்டும் நடத்த அனுமதித்தது. பேரணி நடத்தக் கூட அனுமதியில்லையா என்று யாரும் பொங்கி எழவில்லை. "அம்மா" சொன்னதை அப்படியே கேட்டு நடந்தார்கள். சரி, வீரியத்தை விடக் காரியம்தான் முக்கியம், நல்லது நடக்கட்டும் என்று நாடு காத்திருந்தது. ஆனால் இறுதியில் எதுவுமே நடக்கவில்லை. இப்போது நளினியின் மனுவையும் தள்ளுபடி செய்யக் கோருகிறது தமிழக அரசு.

இந்தச் சூழலிலும் அந்தத் "துணிச்சல்கார அம்மாவின்" பிம்பத்தை யாரும் குலைக்க விரும்பவில்லை. அவருடைய இரட்டை வேடத்தை கண்டித்து எந்த அறிக்கையும், எந்தத் தமிழ்த் தேசியத் தலைவரிடமிருந்தும் வரவில்லை. இதுவே தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றிருந்தால், நாடே அல்லோல கல்லோலப் பட்டிருக்கும்!

மூன்று செய்திகளை உள்வாங்கி இந்தக் கட்டுரையை நாம் நிறைவு செய்யலாம்.

1. உண்மையாகவே அவர்களின் விடுதலையில் ஜெயலலிதாவிற்கு விருப்பம் இருந்திருந்தால் அவர் இந்திய அரசமைப்புச் சட்டம் 161 ஆவது பிரிவைத்தான் பயன்படுத்தி இருப்பார். அப்படி அவர் செய்யவில்லை.

2. இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் 435(1) பிரிவின் கீழ் விடுதலை செய்ய முடிவெடுத்திருப்பதாகக் கூறியது, மத்திய அரசின் மேல் பழி போட்டுத் தான் தப்பித்துக் கொள்ள மட்டுமே!

3. கோரிக்கைப் பேரணி நடத்துவதற்கும், நீதிமன்றத்தில் மனு அளிப்பதற்கும் கூட ஒப்புதல் தர மறுக்கும் ஜெயலலிதா அவர்களுக்கு விடுதலை வழங்குவார் என்று இன்னும் சிலர் நம்புகின்றனர். சரி, இன்னும் எத்தனை காலம் வேண்டுமானாலும் அவர் நம்மை ஏமாற்றலாம்!

http://subavee-blog.blogspot.com

English summary
Suba Veerapandian criticised CM Jayalalithaa for her double standard in releasing Rajiv murder convicts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X