• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கறுப்பும் காவியும் - இந்து தர்மம் (12)

|

-சுப. வீரபாண்டியன்

1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி நாடெங்கும் ஒரு பெரிய பரபரப்பு ஏற்பட்டது. 'பிள்ளையார் பால் குடிக்கிறார்' என்பதே எங்கு பார்த்தாலும் பேச்சாக இருந்தது. 1970களில் இந்தியாவிற்குத் தொலைகாட்சி வந்துவிட்டது. 1990களில் தனியார் தொலைக்காட்சிகளும் வரத் தொடங்கிவிட்டன. எனவே பிள்ளையார் பால் குடிப்பது காட்சியாகவே மக்களுக்குக் காட்டப்பட்ட்டது.

ஒரே நாளில் செய்தி உலகம் முழுவதும் பரவிவிட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் 'ஈழவயல்' என்னும் ஏடு, இங்கும் மக்கள் கையில் பால் எடுத்துக் கொண்டு பிள்ளையார் கோயில்களுக்கு ஓடுகின்றனர். எல்லா இடங்களிலும் பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று ஒரு கட்டுரை வெளியிட்டது. இவ்வளவுக்கும் அப்போது அங்கே போர் நடந்து கொண்டிருந்தது. அந்தப் போரில் தமிழர்களைக் காக்காத பிள்ளையார், பால் குடிக்க மட்டும் தவறவில்லை.

Subavees new series Karuppum Kaaviyum Part-12

பிறகு 2006இல், வடநாட்டில் துர்க்கை, சிவன் எல்லோரும் பால் குடிக்கிறார்கள் என்னும் வதந்தி பரப்பப்பட்டது. ஆனால் அனைத்துமே உண்மையல்ல என்பது அறிவியல்பூர்வமாக நிறுவப்பட்டுவிட்டது. திடீர்ப் பிள்ளையார் வழக்காவது ஓரிரு மாதங்கள் நடைபெற்றது. ஆனால் பால் குடித்த செய்தி, சில நாள்களிலேயே மறுக்கப்பட்டது. மேற்பரப்பு இழுவிசை (Surface Tension) காரணமாகவே, அப்படி ஒரு தோற்றம் நமக்குத் தெரிந்தது என்று இயற்பியல் விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தினர்.

இது போன்ற 'அற்புதங்கள்' எல்லா மதத்தினருக்கும் தேவைப்படுகின்றன. எனினும் சிலை வணக்கம் இல்லாத இஸ்லாம் போன்ற மாதங்களில் திடீர் விக்கிரகங்கள் வருவதில்லை.

இவை போன்ற அற்புதங்களால், மக்களைத் திகைக்க வைத்து, அறிவை மயக்கி, தாங்கள் சொல்வதை எல்லாம் மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்வதுதான் இவற்றின் நோக்கம். இந்து மதத்தைப் பொறுத்தமட்டில், கடவுள் வழிபாடோ, கடவுள் நம்பிக்கையோ கூட முதன்மையானதில்லை. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை மற்ற மதங்கள் ஏற்பதில்லை. எடுத்துக்காட்டாக, அல்லாஹ்வை நம்பாதவர்களும், குரானை ஏற்காதவர்களும் இஸ்லாம் மதத்தில் இருக்க முடியாது. அல்லாஹ்வை நம்பாதவர்கள் எவ்விதத்திலும் முஸல்மான் ஆகமாட்டார்கள். அதே நிலைதான், கிறித்துவம் உள்ளிட்ட பல மதங்களிலும் உள்ளது. ஆனால் கடவுளை நம்பாதவர்கள், கோயிலுக்கே செல்லாதவர்கள் எல்லோரும் இந்துக்களாக இருக்க முடியும்.

இந்துமதத்தின் ஜனநாயகம் மற்றும் தாராளத் தன்மையை இது காட்டுகின்றது என்று 'வியாக்கியானம்' செய்வார்கள். இந்தப் பொய்மையை அண்ணல் அம்பேத்கர் இந்துமதம் பற்றிய தன் நூலில் தகர்த்து எறிந்துள்ளார். இந்து மதத்தைப் பொறுத்தமட்டில், வருண அடுக்கை ஏற்றுக்கொள்வது மட்டுமே அடிப்படையானது. கடவுள் நம்பிக்கை எல்லாம் கடைசி இடத்தில் கூட இல்லை என்பார். இதற்கு வேத, உபநிடதங்களிலிருந்தும், புராண, இதிகாசங்களிலிருந்தும் பல சான்றுகளை நாம் காட்ட முடியும்.

இராமாயணத்தில் ஜாபாலி என்று ஒரு முனிவர் வருவார். இவர் தயரதன் அவையில் இருந்த குருநாதர்களில் ஒருவர். மார்க்கண்டேயர், மவுத்கல்யர், வாமதேவர், காஷ்யபர், ஜாபாலி ஆகியோர், தயரதனால் மதித்து ஏற்கப்பட்ட, அவருக்கு அறிவுரை கூறும் குருநாதர்கள் என்பார் வான்மீகி. ஜாபாலி ஒரு நாத்திகர். சடங்குகளை எல்லாம் கடுமையாக விமர்சனம் செய்பவர்.

இராமன் காட்டில் இருக்கும்போது, மீண்டும் நாட்டை ஆள வரும்படி வேண்டிக் கொள்வதற்காகப் பரதன் காட்டிற்குச் செல்கிறான். அப்போது, வசிஷ்டர், ஜாபாலி ஆகிய முனிவர்களையும் அழைத்துச் செல்கிறான். அப்போது தந்தைக்குக் கொடுத்த உறுதிமொழியைக் காப்பாற்றுவது, ஈமக்கடன் செய்வது என்பவை குறித்தெல்லாம் ஜாபாலி மிகக் கடுமையாக விமர்சனம் செய்கின்றார்.

"இறந்து போனவர்களுக்குப் படைக்கின்றீர்களே, இறந்தவர்கள் எப்படி வந்து உணவு ஏற்பார்கள்?" என்று கேட்கிறார். ஜாபாலியின் உரை கேட்ட இராமன் திகைத்துப்போய் "என்ன, நீங்கள் இப்படிப் பேசுகின்றீர்கள், உங்களை எப்படி எங்கள் தந்தை அறிவுரை தரும் குழுவில் வைத்திருந்தார்?" என்று நேரடியாகவே கேட்க, வசிஷ்டர் சமாதானம் செய்கிறார். "அப்படியெல்லாம் பேசக்கூடாது ராமா, ஜாபாலி மிகப் பெரும் அறிஞர், உன் தந்தையால் பெரிதும் மதிக்கப்பட்டவர்" என்கிறார்.

எனவே கடவுள் மறுப்பாளர்களை இந்துமதம் ஒதுக்கி வைப்பதில்லை. வருண தர்மமத்தை ஏற்காதவர்கள் மட்டுமே இந்து மதத்தின் எதிரிகள். அற்புதங்களைக் கண்டு மயங்கும் மக்களிடம், இத்தகு ஆற்றல் மிகுந்த கடவுளே படைத்ததுதான் வருண தர்மம் என்று கூறி, வருண-சாதி அடுக்குகளை ஏற்க வைக்கிறது இந்துமதச் சித்தாந்தம்.

இவற்றிற்கெல்லாம் சான்றுகள் இருக்கின்றனவா என்று கேட்கத் தோன்றும். கறுப்புச் சட்டைக்காரர்களின் நூல்களிலிருந்தன்று, தத்துவப் பேராசிரியர் என்று, காவிகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் நூல்களிலிருந்தே பல செய்திகளை இனி நாம் பார்க்கலாம்.

(தொடரும்)

(இத் தொடரில் இடம்பெற்றுள்ளவை அனைத்தும் எழுத்தாளரின் கருத்துகள் மட்டுமே. ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தின் கருத்து அல்ல.)

பகுதி [1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12]

விருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,
இன்றே பதிவு செய்யுங்கள்
- பதிவு இலவசம்!

 
 
 
English summary
Professor Subavee's new series Karuppum Kaaviyum in Oneindia Tamil.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more